பொருளடக்கமில்லாத புத்தகம்
குறுங்கதை என்றொரு வகைமை உள்ளதைப் போலக் குறுங்கட்டுரை என்ற ஒன்று உள்ளதாவெனத் தெரியவில்லை. இருக்குமானால், கடந்த சில ஆண்டுகளாக நான் எழுதுவதில் பெரும்பாலானவை இந்த வகைமையைச் சாரும்.
நாவல்கள், திட்டமிட்டு எழுதும் நூல்கள் தவிர அன்றாடம் இத்தகைய குறுங்கட்டுரைகளை எழுதுகிறேன். சுமார் ஐம்பது முதல் ஐந்நூறு சொற்களுக்குள் இவை அடங்கிவிடுகின்றன.
இந்தக் கட்டுரைகளின் பொதுவான அம்சம் என்று எது ஒன்றையும் குறிப்பிட இயலாதென்பதே இதன் அடையாளமாக இருக்குமென்று தோன்றுகிறது. அப்படி ஒன்றைச் சொல்லித்தான் தீரவேண்டுமென்றால், சற்றே ஒழுங்கு செய்யப்பட்ட டைரிக் குறிப்புகள் எனலாம். ஆரம்ப வாசகர்களுக்கு அவர்கள் விரும்பும் எழுத்தாளர்களைக் குறித்த ரகசியத் தகவல்களைத் தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். ஒரு நேர்மையான எழுத்தாளன் தனது புனைவுகளிலும் பொய் உரைப்பதில்லை. தனக்கு நிகழாத, தன்னைத் தொட்டுக் கடக்காத ஒன்றனைக் குறித்து எழுதுவதில்லை. இத்தொகுப்பில் உள்ள குறுங்கட்டுரைகள் என்னைத் தொட்டுக் கடந்தவற்றின் தொகுப்பன்றி இன்னொன்றில்லை.
நான் நண்பர்களற்றவன். எனவே என் வாழ்வில் அரட்டை இல்லை. ஊர் சுற்றுவதை நிறுத்திவிட்டவன். எனவே என் எழுத்தில் பெரும்பாலும் பயணக் குறிப்புகள் இராது. சினிமா பார்ப்பதில்லை. எனவே திரை விமரிசனங்கள் செய்வதில்லை. தேர்ந்தெடுத்த மிகச் சில எழுத்தாளர்களை மட்டுமே படிக்கிறேன். புத்தக மதிப்புரைகள் எழுதுவதில்லை. தத்துவங்களின்மீது நம்பிக்கையற்றவன். அவற்றை விசாரிப்பதில்லை. எனது ஆன்மிகத்தில் கடவுள்களுக்கு இடமில்லை. எனவே திருத்தல யாத்திரைகள் இராது. இவை எதுவுமற்ற கடலோரத்தில், தனித்துக் கிடக்கும் சிறியதொரு கிளிஞ்சலுக்குள் வந்து நிறைந்து மீளும் பெருங்கடலின் சில துளிகளைச் சேமித்து வைக்கிறேன். அவ்வளவுதான்.
வரையறுக்கப்பட்ட வாழ்வனுபவங்களுக்கு வண்ணமில்லை என்று யார் சொல்ல முடியும்? வண்ணமயமான வாழ்க்கை எல்லோருக்கும் அமைவதில்லை என்றாலும் வண்ணமற்ற வாழ்வும் யாருக்குமில்லை. கறுப்பும் வெண்மையும்கூட வண்ணங்களன்றி வேறில்லை.
தோற்றத்தில் நான் நல்ல கறுப்பு. எனக்கு அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் எனக்குத் திருமணமான புதிதில் என் அம்மாவுக்கு அது குறித்த சிறிய பதற்றம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் என் மனைவி வெள்ளையாக இருப்பாள். அவளுக்குமே தனது தோலின் நிறம் குறித்த பெருமிதமோ கர்வமோ கிடையாது. அதை நானறிவேன். ஆயினும் அம்மா ஒருநாள் அவளிடம் சொன்னாள்:
அவன் கறுப்பும் இல்லை, நீ வெள்ளையும் இல்லை.
கறுப்புக்கும் வெண்மைக்கும் அப்பால் இக்கட்டுரைகளுக்குள் பெயரற்ற ஒரு ரகசிய நிறம் தன்னைத்தானே தீட்டிக்கொண்டிருப்பதை மொத்தமாகப் படித்துப் பார்க்கும்போது கண்டுகொண்டேன். ஒரு நொடி சிரிப்பு வந்துவிட்டது.
சந்தேகமில்லை. அதுதான் என் இருப்புக்கும் செயல்பாட்டுக்கும் உள்ள ரகசிய அடையாளம்.
( பொருளடக்கமில்லாத புத்தகம் – எழுத்து பிரசுரம் வெளியீடாக வரவுள்ள கட்டுரைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை)
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .


