லேபில்

Pa Raghavan

ஆரணி சுதாகர் என்பவரை நானறியேன். ஒருமுறைகூட நேரில் கண்டதில்லை, பேசியதில்லை, பழகியதில்லை. ஆரணியில் அவர் ஆண்டுதோறும் புத்தகக் காட்சி நடத்துகிறார் என்பது தெரியும். ஃபேஸ்புக்கில் விவரம் பார்த்திருக்கிறேன். தவிர, அன்னதான முன்னெடுப்புகள், இதர சமூகச் செயல்பாடுகளைச் செய்தியாக மட்டுமே அறிவேன்.

பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் புத்தக லேபில்களில் எழுத்தாளர்களின் புகைப்படங்களை அச்சடித்து இலவசமாகத் தரும் அவரது முயற்சியையும் ஃபேஸ்புக்கில்தான் முதலில் கண்டேன். பிறகொரு நாள் சொக்கன் என்னை அழைத்து, அந்த லேபில்களில் என்னுடைய புகைப்படமும் இடம்பெறுவதைச் சொல்லி, சுதாகர் அனுப்பியிருந்த செய்தியையும் படத்தையும் வாட்சப்பில் அனுப்பினான்.

சிறிய, எளிய, அழகிய தருணம்தான். இக்காலத்தில் இப்படியும் ஒரு மனிதர் இருக்கிறாரே என்று நினைத்துக்கொண்டேன். இன்று சுதாகர் அவர் அச்சடித்த லேபில்களில் சிலவற்றை அனுப்பியிருந்தார். திறந்து பார்த்தபோது பல பழைய நினைவுகள் திரண்டெழுந்து வந்தன.

அட்டை போட்டு லேபில் ஒட்டிய புத்தகங்களைச் சுமந்து திரிந்த நாள்களில் நான் ஒழுங்காகப் படிக்கவில்லை. என் பெற்றோருக்குத் தீராப் பெருங்கவலையாகவே எனது இருப்பும் செயல்பாடுகளும் இருந்தன. பிறகு எங்கெங்கோ அலைந்து திரிந்து, எதிலெதிலோ சிந்தையைச் செலுத்தி மீட்டு இறுதியாக எழுத்தொன்றே என் வழியெனக் கண்டு தெளிந்து அமர்ந்தது வரை பட்ட பாடுகளும் பெற்ற அவமானங்களும் கொஞ்சமல்ல.

எண்ணிப் பார்த்தால், சொற்களையன்றி வேறெதையும் நான் நம்பியதில்லை. நான் நம்பிய சொல் அன்றி வேறெதுவும் எனக்கு உதவியதும் இல்லை. நான் ஓர் எழுத்தாளன் மட்டுமே என்று என் தந்தையிடம் உறுதிபட அறிவித்த நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது, ஒரு கதைகூடப் பிரசுரமாகியிராத காலம். வெறும் நம்பிக்கையை மட்டும் முன்னிறுத்தி அவ்வாறு அறிவித்தேன். இன்னொரு தகப்பனென்றால் என்ன சொல்லியிருப்பார், பிறகு என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் என் தந்தை சொன்னது மூன்று சொற்கள் மட்டுமே.

சரி, பிடித்ததைச் செய்.

இன்றுவரை அதுதான். இனியும் அதுதான். எப்படியாவது நான் படித்துப் பட்டதாரியாகிவிட வேண்டுமென்று அவர் ஆசைப்பட்டார். எனக்குத் திருமணமான பிறகு என் மனைவி மூலமாகவும் அழுத்தம் கொடுத்து அதை மட்டும் எப்படியாவது நடத்திவிட நினைத்தார். எதனாலோ இறுதிவரை என்னால் அவருக்கு அம்மகிழ்ச்சியைத் தர இயலாமலே போய்விட்டது.

ஆரணி சுதாகர்

புத்தகங்கள், ஆட்டோகிராஃப்கள், போஸ்டர்கள், விருதுகள், என்னைப் படித்து ஆய்வு செய்து யாரோ முகம் தெரியாத மாணவர்கள் பெற்ற எம்.ஃபில் பட்டங்கள், முனைவர் பட்டம், ஒரு பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் ஒருமுறை என் புத்தகமொன்று இணைந்த தருணம் – இதெல்லாம்தான் என் தந்தைக்கு நானளித்த மகிழ்ச்சிகள்.

மேற்சொன்ன அனைத்தோடும் ஒப்பிட, அவருக்கு இந்த லேபில் புகைப்படம்தான் மிகப் பெரிதாகத் தோன்றியிருக்கும். வாழ்நாளெல்லாம் மாணவர்களோடு மட்டுமே வாழ்ந்து முடித்த ஆசிரியர் அவர். இதனினும் பெரும்பீடம் இன்னொன்றில்லை என்றுதான் நினைத்திருப்பார்.

எல்லா மகிழ்ச்சிகளின்போதும் என்னால் அவரை எண்ணாதிருக்க முடியாது. இப்போதும் அவரைத்தான் நினைத்துக்கொள்கிறேன்.

அவர் இருந்திருக்கலாம்.

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 16, 2026 08:53
No comments have been added yet.