Anitha > Anitha's Quotes

Showing 1-21 of 21
sort by

  • #1
    Jeyamohan
    “உணர்வுகளை வெளிப்படுத்துதல், சூழல்களை காட்சியாகச் சித்தரித்தல், மானுடநடவடிக்கைகளின் நுண்மைகளை கூறுதல், உரையாடல்களை இயல்பான ஒழுக்குடனும் நுட்பத்துடனும் அமைத்தல் ஆகியவையே நடையின் சவால்கள். அவை தன்னைத்தானே நோக்கி மீளமீள முயல்வதனூடாகவே அமையும்.”
    ஜெயமோகன் [Jeyamohan]

  • #2
    “உன் பேருக்கு ஏத்த மாதிரி உன் முடியும் அருவி மாதிரி ஆர்ப்பரிக்குது, உன் கண்கள் ரெண்டும் மீன் போலத் துள்ளிட்டே இருக்கு…” என்று தொடர்ந்தவனை வலது கையை உயர்த்தி நிறுத்தினாள்.

    “கண்ணு மீன் மாதிரி இருக்கு, புருவம் வில்லு மாதிரி இருக்கு, உதடு ரோஜா மாதிரி இருக்குன்னு இன்னும் பழைய இத்து போன வசனங்களைச் சொல்லி ரொம்பத் தவறான முகவரியில் புலம்பற…வேற ஆளை பாரு மேன்” என்றுவிட்டு இருக்கையில் இருந்து எழுந்தவளின் கையை இறுக பற்றினான் அஜயன்.

    “நினைப்பு தான் புருவம் வில்லு, உதடு ரோஜான்னு…” என்று நக்கலாகச் சிரித்தவன்… “அவ்வளவு எல்லாம் என்னால பொய் சொல்ல முடியாது. ரெண்டு பொய் சொன்னதுக்கே நாக்கு தள்ளிடுச்சு” என்றவனின் கையை அலட்சியமாக உதறிவிட்டு சென்றாள்.”
    அனிதா சரவணன் (Anitha Saravanan)

  • #3
    “பேர்ரட்(parrot) மீன் ஒன்று கிளியின் நிறக் கலவையில் ஒரு அடி நீளத்தில் அத்தீவின் ராணி போல் கம்பீரமாக நீந்திக் கொண்டிருந்தது.

    பச்சையும் சிகப்பும் நீளமும் கலந்த அந்தக் கடல் ராணியைத் துல்லியமாகப் பிரதிபலித்தது நீர். பச்சை கச்சை கட்டி நீல நிற முழுக் கால் சராய் அணிந்த சிகப்பு முடி உள்ள கடற்கன்னி நீரின் பளபளப்பை நகையாக அணிந்து கொண்டு மினுங்கி மினுங்கி சென்றாள்.

    கரு கருவென்று கெண்டை மீன்கள் கூட்டமாக வளைந்து வளைந்து சுழன்று சென்றன.கொழுத்த மீன்களை அவளைப் போலவே நாவூர கொக்கும் பார்த்துக்கொண்டு நடுவில் இருந்த பாறை மேட்டில் தவத்தில் நின்றிருந்தது.”
    அனிதா சரவணன் (Anitha Saravanan)

  • #4
    “கருநீல டீ ஷர்ட், டெனிம் ஷார்ட்ஸ், கருநீலமும் சிகப்பும் பிரிண்ட் செய்த கேன்வாஸ் ஷூ, அப்படியே அருவியின் கண்கள் அவள் பாதங்களில் படிய, சாதாரண ஹவாய் செருப்பு அவளைப் பார்த்துச் சிரித்தது.


    அவனுக்கும் அவளுக்குமான ரசனை வேற்றுமையைக் கவனித்ததும், ‘வாய்ப்பே இல்லை... இவன் முன்னால் எப்படி என்னால் அமர்ந்திருக்க முடியுது’ என நினைத்தவளுக்குச் சட்டென்று மூண்ட சிரிப்பில் குடித்துக் கொண்டிருந்த தேநீரால் லேசாகப் புரையேறியது. இருந்தும், அவளின் முகம் புன்னகையை மிச்சம் வைத்திருந்தது...

    -இரு தேநீர் கோப்பைகள் இருவருக்குமிடையில்”
    அனிதா சரவணன் (Anitha Saravanan)

  • #5
    “இன்னைக்கு இந்தச் சூழல்ல அப்பா யாருங்குறதோ இல்லை அம்மா யாருங்குறதோ பெரிய விஷயமே இல்லை. ஏன்னா பெரியவங்க காலக்கட்டத்துல இதெல்லாம் பெரிய விஷயமா இருந்திருக்கலாம். ஏன் நமக்குக் கூட அம்மா என்பது உண்மை; அப்பா என்பது நம்பிக்கை தான். அம்மா கை காட்டுற நபர் நமக்கு அப்பா. ஆனா, இப்போ அப்படியா? அம்மா என்பது கூட உண்மை இல்லை. யாருடைய கருவையோ யாரோ சுமந்து பெற்றுக் கொடுக்குறாங்க. எத்தனையோ விந்து தானங்கள் நடக்குது. அம்மாவும், அப்பாவும் சாசுவதமில்லை. பிறக்கின்ற குழந்தை யாரிடம் இருக்கு. அதுக்கு அம்மா, அப்பாவென யாரை அடையாளப்படுத்துகிறார்கள். இது மட்டுமே நிச்சயம்னு நான் நினைக்கிறேன்.

    - காத்திருத்தலின் கடைசித் தருணம்”
    சித்ரா.ஜி(Chitra.G)

  • #6
    “நகைகளின் ஒவ்வொரு புடைப்பும் வளைவும் ஓர் அழகுணர்ச்சியின் பரு வடிவம். மலைச்சிகரங்களின் வளைவும் புடைப்பும் ஆயிரமாயிரம் இயற்கை நிகழ்வுகள் மூலம் பிரபஞ்ச சக்திகள் உருவாக்கியவை. நாவல் என்பது மலை. நகையின் நுட்பமல்ல, மலையின் மாண்பே அதற்கு உரியது.”
    ஜெயமோகன்,நாவல் கோட்பாடு

  • #7
    “புத்திமேல உள்ள இறுக்கமான கட்டுப்பாடு கலைஞ்சு ஒருவிதமான பித்துநிலைக்கிப் போகணும்..... அப்பத்தான் காட்சிகள் மேலெயும் சப்தங்கள் மேலெயும் உள்ள பிடிப்பு தளர்ந்து சம்பவத்தைப் பெரிசாக்கியும் குறுக்கியும் வேறவேற விதமாக கலைச்சும் நடத்திப் பாத்துக்க முடியும்.அப்பிடிச் செய்யும் போது சம்பவத்துக்குள்ளெ இருக்கிற கால அடுக்கு குலைஞ்சு இனம்புரியாத திகைப்புநிலைக்குப் போயிரும்.இதெல்லாம் நடக்காம எழுதுறது வெறும் கதை.”
    யுவன் சந்திரசேகர்,பயணக் கதை

  • #8
    “கதைப்புலம் வெற்றிகரமாகச் சித்தரிக்கப்பட்டுவிட்டதனால் மட்டும் ஒரு படைப்பு வெற்றி பெற்றதாகிவிடுமா..? அது எழுப்பும் ஒருவித ‘ ஆர்வம் ’ இலக்கிய ரசனையின்பாற்பட்டதாக ஆகிவிடுமா..? நிச்சயமாக இல்லை. படைப்பு முன்வைக்கும் பார்வை முக்கியமானது.”
    ஜெயமோகன்,நாவல் கோட்பாடு

  • #9
    “புத்தகம் அது வாசிக்கப்படும் காலத்திற்காகவும் அதற்கான வாசகனுக்காகவும் எப்பொழுதும் காத்துக்கொண்டிருக்க கூடும்."

    "அதைத் தவிர எழுத்தாளன் மேற்கொள்ளும் தந்திரங்கள்,சுயபுகழ்ச்சிகள், ஊதிப்பெருக்கிய பாராட்டுகள் எதனாலும் ஒரு நாவலை வெற்றி அடையச் செய்துவிட முடியாது.அவை புகைமயக்கம் மட்டுமே.”
    எஸ்.ராமகிருஷ்ணன்,எனதருமை டால்ஸ்டாய்

  • #10
    “நாவல் வடிவத்தின் அப்பழுக்கற்ற உதாரணம் ஒன்றைத் தனது மொழியில் சாத்தியப்படுத்துவது என்பது ஒருபோதும் கலைஞனின் உத்தேசமாக இருக்க இயலாது. அதன் பூரண விளைவைத் தன் சூழலில் உண்டு பண்ணுவது மட்டுமே அவனுடைய இலக்கு. சூழலில் விசேஷ இயல்புகள், அவனுடைய வடிவ கற்பனையை மாற்றி அமைக்கின்றன. கையில் இருக்கும் வடிவத்துக்கும், வெளிப்பாட்டின் தேவைக்குமான இடைவெளி, ஒரு நாவலாசிரியனை எப்போதும் படுத்தியபடியே தான் இருக்கும். அத்துடன் மரபான வடிவ உருவத்துடன் தன் ஆளுமையின் தனித்தன்மை மோதும் கட்டங்களையும் அவன் அடைவான். இப்போராட்டத்தில் இருந்து தான் வடிவ மீறல்கள் நிகழ்கின்றன.”
    ஜெயமோகன்,நாவல் கோட்பாடு

  • #11
    “கவிதை எப்போதும் பிரிவின் ஜாடையைத்தான் கொண்டிருக்கிறது.ஞாபகத்தின் குடுவையைத் திறந்ததும் கவிதையின் விசித்திர வாசனை கசிகிறது. கவிதை சொற்களின் வழியே சொற்களால் அடைய முடியாத ஆழத்தை, நுண்மையை, உவப்பை கைப்பற்ற எத்தனிக்கின்றன."

    "காதல் கவிதைகளைக் கண்டுகொள்ள எளியவழி, அது அதிகம் திருடப்படும் பொருளாக இருப்பதுதான்.ஒரு வசீகரமான விலை மதிப்பற்றச் சொல்லைத் திருடிச் சென்று காதலியின் முன் சமர்ப்பிக்கவே எல்லா காதலனும் விரும்புகிறான். காதல் வரிகள் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.அது ஒரு சமிக்ஞைபோல ரகசியங்களைப் பரிமாறிக் கொள்கிறது.ஒரு நல்ல கவிதையை அடையாளம் காண எனக்கிருக்கும் ஒரே வழி, அதை வாசித்து முடித்ததும் இதை நான் சொந்தம் கொண்டு தன் வசமாக்கிவிட வேண்டும் என மனம் எத்தனிப்பதுதான்.”
    எஸ்.ராமகிருஷ்ணன்,நம் காலத்து நாவல்கள்

  • #12
    “நாவலின் புதிய சாத்தியங்கள் பற்றிய ஆர்வத்தை கலாச்சாரத்தின் பின் இழுப்பு சமன் செய்தபடியே இருக்க வேண்டும். இல்லாத போது தான், முற்றிலும் அன்னியமான குறைபிறவியாக இலக்கிய வடிவங்கள் உருவாகின்றன. தன்னுடைய அனுபவ உலகுக்கும், வெளிப்பாட்டு முறைக்கும் தேவையான வடிவத்தை மட்டுமே படைப்பாளி தேர்வு செய்ய வேண்டும். அதைத் தனக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். அத்துடன் அவன் உத்தேசிக்கும் வாசகர்களின் இயல்பும் வடிவத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். படைப்பு செயல்பாடு என்பது ஓர் உரையாடல். அதை எதிர்முனையிலிருந்து தீர்மானிப்பவன் அதன் உத்தேச வாசகன். இவ்விரு தடைகளுக்கும் படைப்பாளியின் தேடலுக்கும் இடையேயான சமரசப் புள்ளிகளாகவே ‘ புதிய வடிவங்கள் ‘ இருக்க வேண்டும்."

    "நிச்சயமாக எந்த இலக்கிய வடிவத்தை விடவும் வாழ்க்கை மிகவும் பிரமாண்டமானது. முழு வீச்சுடன் அதை எதிர்கொள்ளும் படைப்பாளி, வரையறைகளை சகஜமாக மீறிச் செல்வான். சென்றாக வேண்டும். ஆனால், சாத்தியங்கள் பற்றிய அறியாமை நம்மை முன்னதாகவே நின்று விடச் செய்யலாகாது. நாம் வந்த தூரமே அதிகம் என்ற சுயதிருப்தி இருக்கக் கூடாது.”
    ஜெயமோகன்,நாவல் கோட்பாடு

  • #13
    “வன்முறையை ரசிக்கும் மனிதர்கள் பெருகிவிட்டார்கள். இவர்களை வைத்துக்கொண்டு அடிப்படை மனித அறங்களையும் நேசத்தையும் எப்படி கைக்கொள்வது என்று தஸ்தாயெவ்ஸ்கி ஆதங்கப்படுவது இன்றும் உண்மையாகவே இருக்கிறது."

    "மனிதனுக்குள் உள்ள கீழ்மைகளை அவன் அடையாளம் கண்டு கொள்வதேயில்லை.அதை உணரும் தருணங்களில் கூட பெருமிதமே கொள்கிறான். குற்றவுணர்ச்சி கொள்ளாதவரை கீழ்மைகளில் இருந்து விடுபட முடியாது என்பதையும் தஸ்தாயெவ்ஸ்கி சுட்டிக்காட்டுகிறார்.”
    எஸ்.ராமகிருஷ்ணன்,எனதருமை டால்ஸ்டாய்

  • #14
    “எளிமையை ஒரு வாழ்வியல் நெறியாகக் கொண்ட மனசு, ‘எதுவுமே வேண்டாம்’ என்ற நிலைக்கு எளிதில் நகர்கிறது.”
    Bharathi Baskar, Siragai Viri, Para

  • #15
    “புதுசுபுதுசுண்ணு தேடிப் போற எல்லாமே பழசாத்தான் போகப்போகுது. இந்த இடத்திலேயே பழசாப் போகத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. மனுஷன் ஒரு தடவைதான் இந்த உலகத்துக்குப் புதுசா வாரான். வந்த பிறகு அவன் பழசுதான். சாகிறவரைக்கும் பழசுதான்.”
    வண்ணதாசன், கலைக்க முடியாத ஒப்பனைகள்

  • #16
    “வெயிலுக்கு ஒரு கெட்டிக்காரத்தனம். மழைக்கு ஒரு கெட்டிக்காரத்தனம். நல்லது தான். இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக இத்தனை வருஷமாக நிற்கிற மரத்தை இடம் பெயர்த்து விட முடியுமா? சில மரத்துக்குப் பூ. சில மரத்துக்குக் காய். சில மரத்துக்குக் கனி. ஆனால் எல்லா மரத்துக்கும் நிழல்.”
    வண்ணதாசன், ஒளியிலே தெரிவது

  • #17
    “கவிதை வாசகன் ஜென் கவிதைகளின் முன்பாகத் தன் வயதை இழக்கிறான். தன்னைப் பற்றிய பொது பிம்பங்களை, கருத்தாக்கங்களை நழுவ விடுகிறான். இப்போது அவனுக்கும் அவன் அருகில் ஊர்ந்து கொண்டிருக்கும் சிறு எறும்பிற்கும் பேதமில்லை. இரண்டும் உயிர்நிலையோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன. இரண்டிற்கும் உலகம் பிரம்மாண்டமானதாகயிருக்கின்றது. இரண்டும் உலகின் தீராத அன்றாட இயக்கத்தில் அலைந்தபடியே இருக்கின்றன.”
    எஸ்.ராமகிருஷ்ணன் , கூழாங்கற்கள் பாடுகின்றன

  • #18
    “கவிதை என்பது நீர்நிலையை நாடி வரும் பறவைகளை வேடிக்கை பார்ப்பதைப் போன்றது. எந்தப் பறவை எப்போது சிறகடித்து மேலே போகும், எது தரைஇறங்கும் என்று தெரியாது. எவ்வழியே இப்பறவைகள் வந்தன. எதையெல்லாம் தாண்டி வந்திருக்கின்றன என்று புரியாது. எல்லாப் பறவைகளும் ஒரே வானில் பறக்கின்றன என்றாலும் எந்த இரண்டும் ஒன்று போலிருப்பதில்லை. பறவைகள் வானில் பறக்கையில் அதன் நிழல் நீரில் மிதந்து செல்கிறது என்பது போல அறிந்த, அறியாத விந்தைகள் கொண்டவை கவிதை.”
    எஸ்.ராமகிருஷ்ணன் , கூழாங்கற்கள் பாடுகின்றன

  • #19
    “நல்ல எழுத்துங்கிறது படிக்கிறவனை IMPRESS பண்றதுக்காக எழுதப்பட்டது இல்லே,தன்னை EXPRESS பண்றதுக்காக ஒருத்தன் எழுதுறது.”
    யுவன் சந்திரசேகர்.பயணக் கதை

  • #20
    “ஒரு எழுத்தாளன் மீது வைக்கப்படும் விமர்சனம் அவனை ஒன்றும் செய்துவிடாது.நல்ல படைப்பு அவனை என்றும் வாழ வைத்திருக்கும்.”
    எஸ்.ராமகிருஷ்ணன்,எனதருமை டால்ஸ்டாய்

  • #21
    “உரைநடை எழுத்து என்பது சந்தையை வேடிக்கை பார்ப்பது போன்றது. அங்கே காண் உலகம் மிக யதார்த்தமாகத் தெரியும். வாழ்வின் நெருக்கடியும் பண்டமாற்றும் நேரடியாகக் காணமுடியும். மேலும் ஒரே இரைச்சல், இடைவிடாத பேச்சு நிரம்பியிருக்கும். ஒரே இடத்தினுள் நூறுவிதமான நிகழ்வுகள். அன்றாட தேவைகளுக்கான அலைமோதல்கள் நடைபெறும். சந்தைக்கான பொருளின் விலை பணம், ஏமாற்றம், பிழைப்பிற்கான முட்டி மோதல்கள் என காலில் மண்ணும் நுரையீரலில் புழுதியும் படியும்படியான இயல்பு வாழ்வு கொண்டதாகயிருக்கும்.”
    எஸ்.ராமகிருஷ்ணன் , கூழாங்கற்கள் பாடுகின்றன



Rss
All Quotes



Tags From Anitha’s Quotes