யதி Quotes

Rate this book
Clear rating
யதி: தத்துவத்தில் கனிதல் யதி: தத்துவத்தில் கனிதல் by Nitya Chaitanya Yati
4 ratings, 4.25 average rating, 0 reviews
யதி Quotes Showing 1-27 of 27
“பெர்க்ஸனின் ஓர் உருவகக் கதை உண்டு. நதி ஒரே திசையில்தான் நகரமுடியும். நதிப்படகு இரு திசைகளிலும் நகரும். நதி மீன் நான்கு திசைகளில் நகரமுடியும். அதைப் பிடிக்கும் பறவை ஐந்து திசைகளில் நகரலாம். ஆனால் கரையோரமாக அமர்ந்து இவையெல்லாவற்றையும் பார்க்கும் ஒருவனின் மனம் எல்லா திசைகளிலும் நகரக்கூடும். நமது மனம், அதன் அன்றாட தளத்தில் உடலின் தருக்கங்களுக்கு கட்டுப்பட்டது. ஆகவே அனைத்துத் தருக்கங்களும் உடலின் தருக்கங்களே. உடலோ கால இடத்தில் உள்ளது. ஆகவே மனதின் ஆழத்தை நாம் உற்றுப் பார்க்கிறோம். அதுவே தியானம்.

எப்போது நாம் தத்தளிப்பின் எல்லையில் இனியென்ன என்று தவிக்கிறோமோ அப்போது நமது அந்தரங்கத்திலிருந்து அதுவரை நாமறிந்திராத ஓர் உள்ளொளி உதயமாகி நம்மை புதிய சாத்தியங்களின் வாசல்களை நோக்கி இட்டுச் செல்கிறது. அது தரும் தன்னம்பிக்கையும் துணிவும் என்றும் நமது வழித்துணையாக இருக்கும்.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“சமஸ்கிருதத்தில் மதம் என்றால் ‘உறுதியான தரப்பு’ என்று பொருள். தேடல் இருக்குமிடத்தில் ஏது உறுதி?”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“மார்க்ஸியம் என்பது மதமன்றி வேறு என்ன? மூல நூல்களிலும் ஸ்தாபகர்களிலும் மிதமிஞ்சிய நம்பிக்கை, அவற்றுக்கு உரைகள்… அவர்களுக்குச் சிலைகள்… குழுச் சண்டைகள்… சமஸ்கிருதத்தில் மதம் என்றால் ‘உறுதியான தரப்பு’ என்று பொருள். தேடல் இருக்குமிடத்தில் ஏது உறுதி?”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“அங்கே சூஃபிக்கள் சிலருடன் நட்பு ஏற்பட்டது. அக்காலத்தில் மௌல்வி மொஹம்மத் எடசேரி என்றொரு கேரள முஸ்லீம் இருந்தார். அவர் குரானை மலையாளத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். தமிழ், கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி வேர்கள் கொண்ட சூஃபிக்கள் சிலருடன் அவர் வாழ்ந்து வந்தார். அவர்களால் எனக்கு ஜலாலுத்தீன் ரூமி, ஹஃபீஸ், அத்தர், காலிப் ஆகியோரிடம் ஈர்ப்பு ஏற்பட்டது. அதிலும் ரூமி என்னை பெரிதும் கவர்ந்தார். ரூமியைப் போலவே நானும் என் ஏழ்மையை பெருமையாகக் கருதினேன்; மறைவாழ்வே என் புகலிடம் என்றெண்ணினேன்.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“வால்மீகி சீதையை எந்தத் தருணத்திலும் தன் தெய்வீக இயல்பை இழக்காதவளாகத்தான் எப்போதும் காட்டுகிறார். ராமாயண கதாபாத்திரங்களில் கணிசமானவை துல்லியமான மாதிரி குணசித்திரங்கள். மாறாக மகாபாரதத்தில் குணசித்திரங்கள் தங்கள் நிலைபெயர்வு மூலமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.(குணசித்திர மயக்கம்) இதன்மூலம் மனித குணத்தில் எத்தனை சாத்தியங்கள் உண்டோ எத்தனை பேதங்கள் உண்டோ கிட்டத்தட்ட அனைத்தையும் நாம் மகாபாரதக் கதைகளினூடாகக் காண முடிகிறது. இத்தனை மகத்தான பேரிலக்கியம் இன்றும் இந்திய வாசக மனதுக்கு, நாய் பெற்ற தெங்கம்பழமாகவே உள்ளது. சனாதனமாகிய அனைத்து தர்மங்களும் பேசப்படும் இக்கதையிலிருந்து ‘சனாதனதர்மம்’ என்ற பெயரை மட்டும் உருவியெடுக்கும் முயற்சிகளே நடக்கின்றன.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“சாதாரண இந்தியனுக்கு ஒன்றை சமஸ்கிருதத்தில் சொன்னால் மாறாத உண்மை ஆகிவிடுகிறது. அதை மாற்ற வேண்டுமென்றால் ஆங்கிலத்தில் சொல்லியாக வேண்டும். வியாசனும் யாஸ்கனும் சொன்னது சரியா என்று சாம் கோல்ப்ரூக்கிடமோ, வின்டர்னிட்ஸிடமோ, கீத்திடமோ, மாக்ஸ்முல்லரிடமோ கேட்டுக் கொண்டிருக்கிறோம்.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“விடுதலை நம் ஒவ்வொருவருடைய கையிலும்தான் இருக்கிறது. குறுகிய, ஆழமான கிணற்றில் பிறந்து மாட்டிக்கொள்ளும் தவளையைப் பொறுத்தமட்டில், முதலில் அதனுடைய வால் உதிர்ந்து போகிறது. ஒரு படியிலிருந்து மற்றொரு படிக்குத் தாவி, இறுதியில் கிணற்றுக்கு வெளியே பரந்த உலகில் தன்னுடைய விடுதலையை கண்டடைகிறது.

ஒற்றை உடலாக தனித்துவமின்றி வாழ்ந்த கடந்த கால நினைவுகளின் சேமிப்புக் கிடங்குதான் அதனுடைய வால். தவறான நினைவுகள், கருத்தாக்கங்கள், கோட்பாடுகள் மற்றும் சித்தாந்தங்களால் நாம் கட்டுண்டிருக்கிறோம். தவளையைப் போல நாமும் அந்த வாலை விட்டு விடும்போது ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தாவிச் செல்லும் சுதந்திரமான தவளைகளாக ஆகிவிடலாம்.

விடுதலை பெற்றவர்களாக நாம் ஆக வேண்டும் என்றால், நம் குடும்பங்கள், நம் மரபுகள், நம் பள்ளிக்கூடங்கள், நம் நாடுகள் என்ற குறுகிய சிறைகளை விட்டு வெளியேற வேண்டும். அதுதான் உண்மையான மோட்சம். அதை விளம்பரப்படுத்தவோ, காப்புரிமைக்குள்ளாக்கவோ, வியாபாரம் செய்யவோ முடியாது. அடுத்தவனை விடுதலை செய்வது நம்முடைய கையில் இல்லை. ஒவ்வொரு நபரின் விடுதலையும் எப்போதும் அவன் கையில்தான் உள்ளது.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“அண்மையில் ஓர் இளம் பாதிரி என்னிடம் வந்தார்; சுதந்திரமும், வெளிப்படை உணர்வும், அன்பும் உடையவராயிருந்தார். புனித திருச்சபையின் பதின்மூன்று ஆண்டுகால மூளைச் சலவையையும் மீறி அவரால் இன்னும் உண்மையைப் பேச முடிந்தது. “பாவமன்னிப்பு கோருபவர்களை கேட்பவராக எப்போதாவது இருந்திருக்கிறீர்களா?” என்று அவரைக் கேட்டேன். “இருந்திருக்கிறேன்” என்றார் அவர். “எதற்கெல்லாம் மக்கள் உங்களிடம் பாவமன்னிப்பு கேட்பார்கள்?” “கொடிய பாவங்களுக்காக” “உதாரணமாக…?” “இன்னொருவனின் உயிரைப் பறிக்க சதி செய்தல், பிறன்மனை நயத்தல், தடை விதிக்கப்பட்ட உறவினரிடையே புணர்ச்சி, அநேகமாக அன்றாடம் இழைக்கும் நம்பிக்கை துரோகம் போன்றவற்றிற்காக..” “அவர்கள் பாவங்களை ஒப்புக்கொண்ட பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” “அவர்களுடைய பாவங்களிலிருந்து அவர்களை விடுவிக்கிறேன்.” “எப்படி?” “அவர்களுக்காக இப்படி பிரார்த்திப்பேன். புனிதத் திருச்சபை எனக்குக் கொடுத்துள்ள அதிகாரத்தால் பாவம் நிரம்பிய உங்களுடைய தீய நோக்கத்திலிருந்து உங்களை விடுவிக்கிறேன்.” “உங்களுக்குக் கொடுப்பதற்காக அந்த அதிகாரத்தை திருச்சபை எங்கிருந்து பெறுகிறது?” “ஏசு அந்த அதிகாரத்தை திருச்சபைக்குக் கொடுத்தார்.” “ஏசு கிறிஸ்துவின் காலத்தில் திருச்சபை இருந்ததா?” “இல்லை. ஆனால், அதன்பிறகு அது நிறுவப்பட்டது.” “எனவே நீங்கள் விடுவித்த பிறகு பாவி என்பவன் பாவி இல்லை, அப்படித்தானே?” “ஆமாம். அவன் திரும்பிப் போய் அதே பாவத்தை செய்துவிட்டு வந்து பாவமன்னிப்பு கேட்பான். நான் அவனை மீண்டும் பாவத்திலிருந்து விடுவிக்கிறேன்.” “இதற்காக அவன் உங்களுக்கு பணம் எதுவும் கொடுக்க வேண்டி உள்ளதா?” அவர் கொஞ்சம் தயங்கினார். பிறகு சொன்னார், “எனக்கில்லை, திருச்சபைக்கு.” “ஆக நீங்கள் கடவுளை வணிகப்பொருளாக்கி, மூலதனத்திற்கு மாற்றாக பாவத்தை முதலீடு செய்து திருச்சபையின் செயல்பாடுகளை நடத்துகிறீர்கள்.” அவரால் பேச முடியவில்லை. அவருடைய திருச்சபைக்கு எதிராக பாவம் செய்ய அவர் பயந்தார்.

இந்த வகையான மோசடி ஒரு மதத்துக்கு மட்டும் உரித்தானதல்ல. நமக்கு மிக அண்மையிலுள்ள ஓர் இந்துக் கோயிலுக்குள் நுழைந்து பார்த்தால் வாழ்க்கையின் கொடிய சிக்கல்களிலிருந்து விடுதலை பெற இந்தக் கடவுளுக்கோ அல்லது அந்தக் கடவுளுக்கோ லஞ்சம் கொடுப்பதற்காக நிகழ்த்தப்படும் சடங்குகள் மற்றும் பூஜைகளின் நீண்ட பட்டியலைக் காணலாம்.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“மத நம்பிக்கை உள்ள ஒரு நபரின் குடும்பத்தில் பிறப்பது வேதனைக்குரியது.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“என்னுடைய மரணத்தின்போது நான் வலியுறுத்திச் சொல்லும் முதல் விஷயம், எந்தவித மந்திர உச்சாடனமோ அல்லது வேறு வகையான சூழலுக்குக் கேடு விளைவிக்கும் கூச்சலோ இருக்கக்கூடாது என்பதுதான். மக்கள் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். சடலத்தை அப்படியே கிடக்கவிட்டால் கொஞ்ச நேரத்தில் நாற்றமடிக்க ஆரம்பித்துவிடும். எனவே, அதை உரிய வகையில் அப்புறப்படுத்த வேண்டும்.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“வாழ்க்கைக்கு குறிப்பிட்ட எந்த அர்த்தமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. வாழ்க்கை என்ற வகுப்பறைக்குள், எந்தத் தலைமை ஆசிரியரும் வந்து ஒவ்வொரு வாழ்க்கைக்கும் நிறைவேற்றுவதற்காக ஒரு பிரத்யேக செயல் திட்டத்தைத் தருவதில்லை. அப்படி ஒரு செயல்திட்டம் இருப்பதாக கிறிஸ்துவர்கள் சொல்கிறார்கள்; ஆனால், அவர்கள் அப்படிச் சொல்வது தேவாலயத்தை நிலைநிறுத்தத்தான். அதற்காக இந்த மாதிரி நிறைய பொய்கள் சொல்லப்பட வேண்டும். மதத்துக்குள் இருக்கும் பல சிக்கல்கள், மரணத்தை பகுத்தறிவோடு பார்ப்பதைத் தடுக்கின்றன. நான் ஒரு கிறிஸ்தவனாகவோ, இந்துவாகவோ இல்லாமலிருப்பதால் அக்கறை கொள்ளவேண்டிய பெரிய விஷயமாக மரணம் எனக்குப்படுவதில்லை. மரணத்தை தெளிவாகப் பார்ப்பதற்கான தகுதியை அது எனக்குத் தருகிறது.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“நான் ஒரு தீக்குச்சியை உரசும்போது ஒரு பிரத்யேக சத்தத்துடன் அது கொழுந்துவிட்டு எரிகிறது. பிறகு நான் ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தும்போது, அதுபோன்ற சத்தத்தை அது உண்டாக்குவதில்லை. மெழுகுவர்த்தி ஒரு யோகியைப் போல எரிகிறது. தீக்குச்சி ஒரு ரெளடியைப் போல எரிகிறது.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“அம்மா தட்டு நிறைய சூடாக சோறு போட்டு எடுத்துவந்தார். அதில் குழம்பூற்றிப் பிசைந்து சின்னச்சின்ன உருண்டைகளாக உருட்டினார். ஒவ்வொரு உருண்டையையும் பிசைந்து உருட்டி என் வாயில் ஊட்டும்போதெல்லாம், அவரும் தன் வாயை கனிவோடு திறந்து மூடினார். அவர் வாயை திறக்காத போதெல்லாம் நானும் வாயை மூடிக்கொண்டிருந்தேன்.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“ஆசிரமத்தில் மகரிஷிக்குப் பதிலாக நின்று துறவு வழங்கும்படி சுவாமி ராமதேவானந்தாவிடம் கேட்டுக்கொண்டேன். நான் மகரிஷியையே குருவாக நினைப்பதாகவும் ஹோமத்துக்குப் பிறகு காவியுடைகளை எனக்கு எடுத்துக் கொடுத்து, ஏற்கனவே தீர்மானித்திருந்த நித்ய சைதன்ய யதி என்னும் பெயரால் அழைத்து துறவு வழங்கவேண்டும் என்றும் சொல்லி வைத்தேன். பிரம்மசாரிகளுக்கே சைதன்யர் என்னும் பெயர் பொருத்தமென்றும் துறவிக்கு மிகவும் பொருத்தமான பெயர் சுவாமி நித்யானந்தா என்றுதான் இருக்க வேண்டும் என்றும் சொன்னார் அவர். சுவாமி என்கிற சொல்லின்மீது ஏனோ இனம்புரியாத வெறுப்பு எனக்கு ஏற்படுவதாகவும் ஒரு துறவியின் பெயருடன் ஆனந்தம் என்கிற சொல் இணைந்திருப்பது ஒருவித அகம்பாவத்தின் வெளிப்பாடாக இருக்கிறது என்றும் அவரிடம் எடுத்துச் சொன்னேன்.

சுவாமி என்கிற சொல்லுக்கு பதிலாக நான் யதி என்னும் சொல்லைத் தேர்ந்தெடுத்தேன். ஹோமச் சடங்குகளுக்குப் பிறகு அவர் என்னை யதி நித்ய சைதன்ய என்று அழைத்தார். ஆனால் மக்கள் என்னை சுவாமி என்கிற ஒட்டுச் சொல் இல்லாமல் அழைக்கத் தயங்கினார்கள். அதனால் பெயருக்கு இறுதியில் சுவாமி என்கிற சொல்லைச் சேர்த்து யதி நித்ய சைதன்ய சுவாமி என்று அழைக்கத் தொடங்கினார்கள். உடனே நான் யதி என்கிற ஒட்டுச்சொல்லை பெயருக்கு இறுதியில் கொண்டுவந்து நித்ய சைதன்ய யதி என்று அழைத்துக்கொண்டேன். அதிருஷ்டவசமாகவோ துரதிருஷ்டவசமாகவோ, நடராஜ குருவின் மறைவுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பேற்க வேண்டியிருந்ததால் என் பெயருடன் குரு என்கிற சொல் முன்னொட்டாக ஒட்டிக் கொண்டது. நான் யாரையும் சீடராக வரித்துக் கொள்ளவில்லை. என்றாலும் குரு என்கிற சொல் தலைக்குப் பொருந்தாத மகுடம்போல் என் பெயருடன் ஒட்டிக்கொண்டுள்ளது.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“அப்போது சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி என்று பரவலாக அழைக்கப்படும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி இருந்தார். காந்திக்கு அடுத்து அவர்தான் இந்தியாவில் இரண்டாவது பெரிய ஆன்மீகத் தலைவர் என அறியப்பட்டவர். எங்கள் கல்லூரிக்கு வந்த அவர், பேராசிரியர்கள் தங்களுடைய ஆடம்பரமான இருப்பிடங்களை விட்டு நீங்கி கீழ்நிலையில் வாழும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் குடிசைகளுக்குச் சென்று சேவை செய்யவேண்டும் என்று தூண்டும் விதமாகப் பேசினார்.

கல்லூரி விடுதியை விட்டு நீங்குவதற்கு அதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டேன். அடையாறுக்கு அருகில் சென்னையில் மிக மோசமான சேரிகளில் ஒன்றில் இரண்டு ரூபாய் வாடகைக்கு ஒரு குடிசையை அமர்த்திக்கொண்டேன். அது ஒரு தாழ்வான, சகதி நிரம்பிய, மலேரியாவை உண்டுபண்ணும் கொசுக்கள் மொய்த்துக்கொண்டிருந்த இடம். நிறையக் குடிசைகள் நெருக்கமாக இருந்தன. சேரியின் நடுவில் என்னுடைய குடிசை இருந்தது. அந்தச் சூழலுக்கு ஈடுகொடுத்து வாழ்வது ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஒவ்வொரு நாள் இரவும் யாராவது ஒருவர் காலராவால் இறந்துகொண்டிருந்தார்கள். டாக்டர் ஒருவரை அழைத்துவர நான் முயன்றேன். ஆனால் பறையர்களின் சேரிக்கு எந்த டாக்டரும் வரத் தயாராக இல்லை. இறந்துகொண்டிருந்தவர்களின் அருகில் இப்படியாக கையாலாகாதவனாக நிற்க வேண்டியிருந்தது.

நல்ல குடிநீரை அவர்களுக்கு வழங்கினாலொழிய காலராவை முற்றிலுமாக நிறுத்தமுடியாது என்பதைத் தெரிந்துகொண்டேன். அதைச் செய்ய நகராட்சியின் குடிநீர்க்குழாய் கோயில் நிலத்தின் குறுக்காக வரவேண்டியிருந்தது. பறைச்சேரி மக்களின் உபயோகத்திற்காக குடிநீர்க் குழாய் தங்கள் நிலத்தின் வழியாகப் போவதை அனுமதிக்க கோயில் நிர்வாகிகள் மறுத்துவிட்டார்கள்.

புனிதராக மதிக்கப்பட்ட முதலமைச்சர் ராஜாஜியிடம் போனேன். அவருடைய உணர்வுகளை மதிக்கத்தான் கல்லூரி விடுதியை விட்டு நீங்கி சேவை செய்வதற்காக நான் சேரிக்குப் போனதாக அவரிடம் சொன்னேன். ஒரு பிரஜை என்ற முறையிலும் முதல் அமைச்சர் என்ற முறையிலும் ஏழை மக்களுக்கு நல்ல தண்ணீர் வழங்குவது அவருடைய பொறுப்பு என்பதைத்தான் நான் வேறுவிதமாக அப்படி வலியுறுத்திச் சொன்னேன். என்னை முகத்துக்கு நேராகப் பார்த்துவிட்டு மழுப்பாமல் நேரிடையாகச் சொன்னார், “மேடையில் ஒரு அரசியல்வாதி ஆவேசமாகப் பேசுவதை ஒரு முட்டாள்தான் நம்புவான். இன்றைக்கே சேரியைவிட்டு விடுதிக்குத் திரும்பிப் போய்விடு. இல்லையென்றால் காலராவுக்கு அடுத்த இரையாக நீதான் இருப்பாய்.” ராஜாஜியின் ஆளுமையில் ஒரு புனிதரும் ஒரு அரசியல்வாதியும் ஒன்றிணைந்து இருக்கமுடியும் என்று நான் நம்பியது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை உணர்ந்துகொண்டேன்.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“உலகம் துக்கமயம் என்று புத்தர் சொன்னார். காணிக்கை கொடுங்கள், துக்கத்தைத் தீர்க்கிறோம் என்றனர் பிட்சுக்கள். யேசு உலகம் பாவமயம் என்றார். பாவமன்னிப்பு அட்டை வாங்குங்கள் என்று கூறியது வாடிகன். எல்லாம் மாயை என்றது ‘இந்து மதம்’. குருவாயூரப்பனுக்கு எடைக்கு எடை வாழைப்பழம் தரச்சொன்னார்கள் பட்டர்கள்.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“நான் ரமண மகரிஷியுடன் சில வருடங்கள் இருந்தேன். சற்றும் மதவுணர்வற்ற மனிதர் அவர் (the most irreligious man). அவரை எவ்வகையிலும் அடையாளப்படுத்த முடியாது. அவரைத்தேடி மக்கள் வர ஆரம்பித்ததும் அவருடைய தம்பி அவர் இருந்த பகுதியைச் சுற்றி வேலி கட்டி அதை ஓர் ஆசிரமமாக மாற்ற முயன்றார். ரமணர் வேலியைத் தாண்டி வெளியே போய் அமர்ந்தார். வேலி அங்கும் தொடர்ந்தது. ரமணர் இறந்ததும் அவருக்கு சிலை வைத்து, ஆசிரமம் கட்டி, நிர்வாகிகளைத் தேர்வு செய்து, நிதி சேர்த்து பெரிய அமைப்பாக மாற்றிவிட்டார்கள்.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“இப்புராதன நூல்களை மத நூல்கள் என்று யார் சொன்னது? எந்த உபநிடதம் நம்பிக்கையை ஸ்தாபிக்கிறது? கீதை மத நூல் அல்ல, தத்துவ நூல் என்பதே நானும் நடராஜ குருவும் எழுதிய கீதை உரைகளின் சாரம். வேதம் என்பது ஓர் எல்லை வரை மத நூல். நம்பிக்கையை அது வலியுறுத்துகிறது. கீதை என்ன சொல்கிறது? மூன்று குணங்களுடன் நிற்கும் வேதங்களை நீ வேரோடு வெட்டித்தள்ளு என்கிறது.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“மதத்தை நான் நம்பவுமில்லை. ஏற்கவுமில்லை. மதம் மனிதனை நம்பிக்கையுள்ளவன், நம்பிக்கையற்றவன் என்று இரு பெரும் பகுதிகளாக முற்றாகப் பிரித்து அதனடிப்படையில் இயங்குகிறது. அப்பிரிவினை அத்தனை எளிதல்ல. நேற்றைய ஆன்மீக அடிப்படைகள் சிலவற்றைக் குறியீடுகளாகப் பயன்படுத்தி இன்று அதிகார மையங்களை உருவாக்குவதே மதம். பெரியார் மதமெனும் நிறுவனத்தை எதிர்த்தது எனக்கு உடன்பாடான விஷயமே. இங்கு மத நிறுவனங்களின் பிடியிலிருந்து மனிதர்களை விடுவிப்பது மிக அவசியமான ஒரு பணியாகும்.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“ஒருமுறை பஞ்சாபில் இருந்து ஒரு தோட்டக்கலை நிபுணர் இங்கு வந்தார்.  மிக அபூர்வமான சில மலர்ச் செடிகளின் விதைகளை எனக்குத் தந்தார்.  அன்றே அவருடன் நான் கோவை போக வேண்டியிருந்தது.  எனவே அவற்றைத் தொட்டியில் விதைத்து நீரூற்றிவிட்டு, அப்போது தோட்டத்தை கவனித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, கோவை போனேன்.  பத்துநாள் கழித்து திரும்பி வந்தால் தொட்டிகளில் வெண்டைச் செடிகள்தான் இருந்தன.  என்ன நடந்தது என்று விசாரித்தேன்.  தோட்டக்காரர் நீரூற்றப்பட்டு தயாராக இருந்த தொட்டிகளைப் பார்த்தாராம்.  எதற்கு காலியாக இருக்க வேண்டும் என்று வெண்டை விதைகளை அதில் போட்டிருக்கிறார்.  மூன்றாம் நாள் முளைத்த ‘களைகளை’யெல்லாம் பிடுங்கி வீசிவிட்டார்; அவ்வளவுதான்.  நமது கல்விமுறைக்கு இதை நான் உதாரணமாகக் காட்டுவதுண்டு.  காளிதாசனும் கம்பனும் ஆக வேண்டிய குழந்தைகளை நாம் டாக்டரும் எஞ்சினியருமாக மாற்றிக்கொண்டிருக்கிறோம்.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“ஒருநாள் ஒரு அமீபா பசி தாங்காமல் அலைந்தது.  இன்னொரு அமீபாவை விழுங்கியது.  அதற்கும் பயங்கரப் பசி.  வாயும் வயிறும் இல்லாத அவ்விரு உடல்களும் பரஸ்பரம் ஒன்றாயின.  முடிவற்று ஒன்றையொன்று தின்ன ஆரம்பித்தன.  இன்றும் தின்கின்றன.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“உண்மை என்று அகம் எதை அறிகிறதோ அதில் எவ்வித சமரசமும் இல்லாமலிருப்பவனே பெரிய படைப்பாளி. முன்தீர்மானங்களும், சூழல் சார்ந்த மன மயக்கங்களும், நிர்பந்தங்களும், அச்சமும், சுயநலமும் படைப்பாளியை தன் அக உண்மையை நீர்த்துப்போக விடும்படி வற்புறுத்துகின்றன. கோட்பாடுகள், தத்துவச் சட்டகங்கள் அவனுக்குத் தடைகளாகின்றன. தன் சொந்த அனுபவங்களின் விளைவான முன் தீர்மானங்களும், தன் முந்தைய படைப்பு வழியாக அடைந்த அறிவின் பாரமும் பெரிய படைப்பாளிகளைக்கூட வழி தவறச் செய்துள்ளன.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“டாக்டர் ராதாகிருஷ்ணன் கவனக்குறைவாக எழுதவில்லை என்பது இன்று உறுதியாகத் தெரிகிறது. பழைய நூல்களின் உள் முரண்களைத் தவிர்த்து பொது அம்சங்களை மட்டும் தொகுத்து அவற்றின் அடிப்படையில் (இந்து) மதத் தத்துவம் ஒன்றை உருவாக்கவே அவர் முயன்றார். நேரடி விவாதங்களுக்குப் பதிலாக நழுவும் உத்திகளே அவருடைய வழிமுறைகளாக இருந்தன. அவை பெருமளவு வெற்றியும் பெற்றுள்ளன. இன்று அவருடைய எதிர்தரப்பினர்கூட இந்தியச் சிந்தனை என்பது (இந்து) மதச் சிந்தனையே என்று நம்புகிறார்கள்.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“அங்கு அவருடன் நடந்த உரையாடலில் கீதையை அவர் மத நூல் என்று குறிப்பிட்டது ஏன் என்று கேட்டேன். ராதாகிருஷ்ணன் சிரித்தபடி “பிரசுரகர்த்தர் மிகவும் அவசரப்படுத்தினார். அவசரமாக எழுதிய நூல் அது. அதை நான் மீண்டும் சரிபார்க்க வேண்டும்” என்றார். பிறகு என் மாணவர்களிடம் திரும்பி, “உங்கள் ஆசிரியரிடம் இதைக் கற்றுக்கொள்ளுங்கள். யார் கூறினாலும் ஆராயாமல் அதை ஏற்கலாகாது” என்றார். மேற்கொண்டு ஏதும் பேச முற்படவில்லை. அப்போது உடனிருந்த பி.கே.ராவ் என்பவர் பெங்களூரிலிருந்து வெளிவந்த தத்துவ இதழொன்றில் இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் நழுவாமல் பதிலளிக்கவேண்டும் என்று கண்டித்திருந்தார். இந்தச் சம்பவம் சென்னையிலுள்ள பிராமணப் பிரமுகர்களைக் கோபமடையச் செய்தது. அக்கோபத்திற்குக் காரணம் இதற்கு ஒரு வருடம் முன்பு பெரியார் கூட்டிய மாநாடு ஒன்றில் நான் கலந்துகொண்டதும், எங்களுக்குள் பரஸ்பரம் இருந்த நல்லெண்ணமும்தான்.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய, ஒரு பிரிட்டிஷ் பதிப்பகத்தார் வெளியிட்டிருந்த பகவத்கீதை உரை அன்று மிகவும் பிரசித்தம். அதை ஒரு பந்தாவிற்காக என் கையில் வைத்திருந்தேன். நடராஜ குரு நிகழ்ச்சி முடிந்து காரில் போகும்போது அந்த நூலை வாங்கிப் புரட்டிப் பார்த்தார். பிறகு சன்னல் வழியாகத் தூக்கி வீசி எறிந்துவிட்டார். நான் பதறியவாறு காரை நிறுத்தும்படி கத்தினேன். ஓடிப்போய் நூலை எடுத்துக்கொண்டு குருவிடம் கோபப்பட்டேன். தத்துவ மேதையொருவரின் நூலைத் தூக்கிவீச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டேன். குரு அதில் குறிப்பிட்ட ஒரு பக்கத்தைப் புரட்டிப் படிக்கும்படி கூறினார். அதில் ராதாகிருஷ்ணன் கீதை ஒரு மத நூல் என்று கூறியிருந்தார். குரு என்னிடம் “மூன்று பேரமைப்புகள் எவை?” என்று கேட்டார். “உபநிடதம், கீதை, பிரம்மசூத்திரம்” என்று நான் பதில் கூறினேன். “இப்போது நீயே கூறினாய் கீதை மூன்று பெரும் தத்துவ அமைப்புகளில் ஒன்று என்று. எப்படி இவர் அதை மத நூல் என்று கூறலாம்?” என்று கேட்டார் குரு. தொடர்ந்து மதம் என்றால் என்ன, தத்துவத்திற்கும் மதத்திற்கும் உள்ள இணக்கமும் பிணக்கமும் எவையெவை என்று விளக்கமாகச் சொன்னார். அந்த அணுகுமுறை என்னைப் பெரிதும் கவர்ந்தது. ஆயினும் வீறாப்பாக “ராதாகிருஷ்ணன் சும்மா அப்படி எழுதமாட்டார். தகுந்த காரணங்கள் இருக்கும்” என்றேன். குரு சிரித்தார். என் கோபம் அவருக்குத் திருப்தி தந்ததாகச் சொன்னார். அவருடைய படிப்போ துறவி என்னும் கெளரவமோ அவருடன் மாறுபட்டு விவாதிப்பதற்கு எனக்குத் தடையாக இருக்கவில்லை என்பது மிக முக்கியமான விஷயம் என்றார். சிந்தனைத் துறையில் தாழ்வுணர்ச்சியே மிக அபாயகரமானது என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணனை அவருடைய புகழையும் பதவியையும் பொருட்படுத்தாமல் நான் ஆராயவேண்டும் என்றும் கூறினார். அவர் நூலை விட்டெறிந்தது என் மனதைப் புண்படுத்தியதைச் சொன்னேன். தானும் புத்தகங்களை நேசிப்பவன் என்றும் ஆனால் புத்தகங்கள் மீது பக்தி கொள்வதில்லை என்றும் சொன்னார். உள்நோக்கத்துடனும், கவனமின்றியும் எழுதப்படும் நூல்கள் மிக ஆபத்தானவை; அச்சேற்றப்பட்டதனாலேயே அவற்றை மதிப்பது தவறு என்று விளக்கினார்.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“Dostoyevsky flirted with pain”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்
“ஃப்ராய்ட் மனதை ஒரு டிபன் கேரியராக எண்ணினார். மேலே அப்பளம், நடுவே குழம்பு, கடைசியில் சாதம். பருப்பொருட்கள் எல்லாம் தத்துவமாக உருவகப்படுத்தத்தக்கவை என்று சார்த்தர் கண்டார். அதுவே அவரது முக்கிய கண்டுபிடிப்பு. அதன் பிறகு அவர் உண்டதும் கழித்ததும் வாந்தி எடுத்ததும் எல்லாமே தத்துவமாயிற்று.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்