விதை.
“ஏய் என்னடி அது பாட்டு படிக்கிற ? வரப்போறவன அவன் இவன்னு சொல்லிக்கிட்டு. பாட்டா எழுதுறானுங்க”. இந்த அதட்டல் வந்ததற்கு காரணம்.
“யாரோ யாரோடி உன்னோட புருஷன்….” அலை பாயுதே பாடலை முணு முணுத்தபடி பிரியா ஊஞ்சலண்டை ஆடிக்கொண்டிருந்ததால் தான்.
எங்கள் ஆச்சியின் கோபம்தான் அது. அவள் கோபப்படுவாள். அதில் நியாயம் எப்பவும் இருக்கும். யாரையும் தொந்தரவு செய்யாத கோபம்.
அவள் சுபாவம் அப்படி.
அவள், மாமனாரைப் பார்த்ததில்லை. ஆனால் அவருடைய பெயரைக்கூட உச்சரித்ததில்லை. மாமியாருக்கு, கணவனுக்கு, மாப்பிள்ளைகளுக்கு, மருமகள்களுக்கு பிற்காலத்தில் பேரன்கள், பேத்திகள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் என்று அவள் யாவருக்கும் கொடுத்த மரியாதையும் விருந்தோம்பலும், தென் தமிழகத்தின் கோடி மூலையில் அமைந்துள்ள சிறிய ஊரான கல்லூரணியில் இருந்து கொண்டு வந்ததுதான். கல்லூரணி என்ற ஊர் இருப்பதே நிறைய பேருக்கு இன்னமும் தெரியாது.
காலத்துக்கு ஏற்றவாறு தன்னை அப்டேட் செய்துகொண்டே வந்தவள்.
“அதுவா அது ஒரு பழைய பஞ்சாங்கம்” என்ற பெயரை தற்கால வெகுஜனத்திடம் எடுக்காதவள்.
பழமை வேறு பழசு வேறு என்ற வேறுபாட்டை உணர்ந்து நாளுக்கு நாள் இயங்கிக்கொண்டிருந்தவள்.
அவள் வாழ்ந்த காலத்தில் தான் ஒரு மாபெரும் ஆளுமை என்ற எண்ணத்தை யாரிடமும் வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை, நாங்களும் கூட ஒரு நாளும் அதை உணர்ந்ததே இல்லை. சாதாரணம். அவ்வளவுதான். பெரியதாக ஒன்றுமில்லை சொல்லிக்கொள்ளவும். ஆனால், அவள் ஒரு மாபெரும் ஆளுமை. அவள் சென்றபிறகுதான் அதை யாவரும் உணர்ந்தனர்.
இருந்தவரை எங்களுக்கெல்லாம் எதோ ஒரு நாதியிருக்கிறது என்று எண்ணித்தான், ஒவ்வொரு விடுமுறையும் கழியும்.
வீட்டில் பெரியவர்களின் ப்ரசன்ஸ் என்பது இதுதான். எல்லோரும்தான் இருக்கிறார்கள். அதே கூட்டம்தான். துளி கூட மாற்றமில்லைதான்.
ஆனால், ஒரு வெறுமை இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு சாக்கு சொல்லிக்கொண்டு போக கூட இப்போது யோசனையாய் இருக்கிறது. அவள் இருந்த போது சாக்கு சொல்லத்தேவையில்லை. டெஸ்டினேஷனே அவள்தானே. ஆதலால் எங்களுக்கு சாக்குத் தேவைப்படவில்லை.
டெஸ்டினேஷனே அவள்தானே. ஆதலால் எங்களுக்கு சாக்குத் தேவைப்படவில்லை.
அவள் அவ்வப்போது சொன்ன கை வைத்திய குறிப்புகளை மட்டும் யாரேனும் பதிவு செய்திருந்தால், ஒரு புத்தகம் போடும் அளவிற்கு அதில் அவ்வளவு விஷயம் இருந்திருக்கும்.
உறை விழுந்த குழந்தைகளுக்கு உறை எடுக்கும் அழகே தனிதான். உறை எடுக்கும்போது வலியால் வீல் என்று குழந்தைகள் சில நிமிடம் தான் அழும். அடுத்த அரை மணி நேரத்தில் குழந்தைகள் முகத்தில் பூரிப்பை பார்க்கலாம்.
வயிறு சூட்டிற்காக அவள் கடைசியாக எனக்கு அரைத்துக்கொடுத்த மாங்கொட்டைத் தூள் இன்னும் ஒரு பிடி என்னிடம் இருக்கிறது. எங்கள் எல்லோருக்கும் மருத்துவச்சியும் அவள்தான்.
எங்கள் எல்லோருக்கும் மருத்துவச்சியும் அவள்தான்.
டாக்டர் என்ன செய்வார்? ஸ்டெத்தை எடுத்து வைத்துப் பார்ப்பார். பிறகு மருந்து எழுதி கொடுப்பார்.
இவள் திருநீறை எடுத்துப் பூசிவிட்டு நெஞ்சை கொஞ்சம் தடவிவிட்டு தலையில் கைவைத்துப் பார்ப்பாள் அவ்வளவுதான். கூடவே கொஞ்சம் நாட்டு வைத்தியம்.
தன்னுடைய கொள்கைகளை யார் மீதும் அவள் திணித்துப் பார்த்ததில்லை.
ஆனால், அவள் கொள்கைகளை பின்பற்றாத அவளுடைய பிள்ளைகளே இல்லை. தெரிந்தோ தெரியாமலோ அவள் பெற்ற அனைத்து பிள்ளைகளும் சரி அவள் வழிதான் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மூலம் எங்களுக்கு.
பெரிய அட்வைஸ்கள் எல்லாம் ஏதும் இல்லை.
அவர்கள் மூலம் எங்களுக்கு.
பெரிய அட்வைஸ்கள் எல்லாம் ஏதும் இல்லை.
யாரிடமும் எதிர்ப்பு இல்லாத மனோபாவம். விட்டுக்கொடுக்கும் எண்ணம். விரோதியாக யாரையும் பார்க்காத பார்வை. அதே சமயம் நேர்மை.
மேற்கண்ட இந்த அடிப்படையைத்தான் அவள் எல்லோரிடமும் விதைத்தாள். நான் உட்பட.
இந்த விதைகளுக்கு அதிகம் நீர் பாய்ச்சியவர்களின் முகத்தில் அவள் சாயல் நன்றாகவே தெரியும்.
இப்பொழுதும் வீட்டிற்குள் நுழையும் போது திண்ணையில் அவள் அமர்ந்திருப்பதை போல் ஒரு பிரம்மை வரும்.
இதற்கு முடிவே இல்லை….
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.
பேரன்புடன்
ஜ.பாரத்
Grandson of Mrs.Thiruvannamalai