கடவுள்களுடன் தேநீர் – அணிந்துரை

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் திரு.சு.மாதவன் அவர்கள் கடவுள்களுடன் தேநீர் புத்தகத்திற்கு கொடுத்த அணிந்துரையை கடைசி நேரத்தில் புத்தகத்துடன் அச்சில் கொண்டு வர இயலா நிலை. கிண்டில் பதிப்பிலும் கோர்க்க முடியாமல் போய்விட்டது. அடுத்த பதிப்பில் புத்தகத்தில் இவை இடம்பெறும்.


ஐயாவின் அணிந்துரையை இன்று இதில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். 


 “கடவுள்களுடன் தேநீர்நூலுக்கான அணிந்துரை













உங்களை நீங்கள் மீட்டெடுக்க விரும்புகிறீர்களா?!

உங்களை நீங்களே மீட்டிக்கொள்ள விரும்புகிறீர்களா?!


ஆம் என்றால் நீங்கள் படிக்க வேண்டிய நூலைத்தான் இப்போது உங்கள் கைகளில் வைத்திருக்கிறீர்கள்…!வாழ்வை ரசித்து ரசிக்கவைக்கும் ஒரு பொறுப்புள்ள இளைஞனின் சொற்சித்திரங்கள் இவை….! இவற்றை நான் சொற்சித்திரங்கள் என்று சொல்லக் காரணம் இவை தம்முள் தம்மை வரைவதோடு நம்முள் நம்மையும் வரைகின்றன. இந்தச் சித்திரத்தில் உங்களை நீங்கள் உயிர்ப்பித்தெழக் காண்பீர்கள்! நான் கண்டேன் என்னை! அதனால் நீங்களும் காண்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.


இந்த நூல் ஒரு அனுபவத்தேடல்இந்த நூல் ஒரு ஞானத்தேடல்….இந்த நூல் ஒரு மானுடத்தேடல்….இந்த நூல் ஒரு சமூகத்தேடல்….இந்த நூல் ஒரு மரபுத்தேடல்….


இந்தச் சமூகம் தன்னைத்தானே படைத்துக் கொள்கின்றது – ஒரு படைப்பாளன் மூலமாக! அப்படி ஒரு படைப்புதான் இந்த நூல்…..!


இதுவரையில் மனிதன் உடன்வாழும் மனிதர்களோடு பேச எத்தனையோ எதத்தனையோ ஊடக வடிவங்களையும் உத்திகளையும் கண்டுபிடித்துக் கையாண்டு வந்துள்ளான். மொழிதான் அத்தனை மாற்றங்களையும் விளைவிக்கிறது.  சமூகத்தில் இத்தனை மாற்றங்களை விளைவிக்கும் மொழி ஒரு மனிதனுக்குள் எத்தனை உணர்வுகளை …. சிந்தனைகளை.. நடவடிக்கைகளை உண்டாக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?!


மனிதனின் வாழ்க்கைக்குள் ஏற்படும் மாற்றங்கள் அவனின் வார்த்தைக்குள்தான் முளைவிடுகின்றன; அவனின் வார்த்தைகள் அவனின் வாழ்க்கைக்குள் இருந்துதான் கிளைவிடுகின்றன. இப்படி முளைத்ததும் கிளைத்ததுமாக நம் கைககளில் நளினமுகம் காட்டும் வார்த்தைச் சித்திரங்கள்தான் இந்த நூல்….!


சிறுகதைப் பாங்கு, கவித்துவப்பாங்கு உரையாடல் பாங்கு என்ற மூன்று பாங்குகளோடு இதோ ஒரு பாகு….!இது காய்ச்சிவந்த பாகு அல்ல….! காய்த்துவந்த பாகு!


ஆம்அனுபவப் பாகு…!  பாகு என்றாலே அதிரசம்தானே…?!


இந்த நூலும் ‘அதி’ ‘ரசம்’தான் …! என்று படிக்கும்போது நீங்களும் உணர்வீர்கள்…! இந்த ஞானத் தேடல் நூல் 40 எண்ணப் பதிவுகளின் சொற்சித்திரத் தொகுப்பு…!


இந்த நூலைப் படித்துமுடித்தபோது இப்படியான அனுபவப் பகிர்வுகளை இன்னும் சில பல இளைஞர்கள் எழுதினால் எத்தனை அனுபவப் பிழிவுகள் கிடைக்கும் என்ற எண்ணம் எனக்கு வந்தது.


குடும்பஅட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, படித்திருந்தாலோ பணியிருந்தாலோ வருகைப்பதிவேடு…. இவற்றில் மட்டுமே இடம்பெறும் பல மனிதர்களின் பெயர்களையும் அவர்தம் நடவடிக்கைகளையும் உணர்வுகளையும சிந்தனையையும் காலத்தால் அழியாத எழுத்தில் வடித்து வரலாற்று வாழ்வு தந்துள்ளார் ஜ.பாரத்….!


.பாரத் வடித்திருப்பது எழுத்து           ! வருகிறார்கள் மக்கள் எழுந்து


ஆம்…! ஆத்தா, ஆச்சி, அப்பா, அம்மா, நண்பர்கள், ஆசிரியர், கடைக்காரர்கள், தூய்மைப்பணியாளர்கள்,..இப்படி எத்தனையோ பேர் எழுந்து நடமாடுகிறார்கள் ஜ.பாரத்தின் எழுத்தில்…!


40 பதிவுகள் பற்றியும் எழுதத் தொடங்கினால் என் அனுபவமும் இணைந்து அது ஒரு தனி நூலாகிவிடும். அதனால் சிலவற்றைக் குறிப்பிட்டு நிறைவுசெய்கிறேன்.


40 பதிவுகளையும் வகைப்படு்த்தினால் சொந்தபந்த அக்கறை, சமூக அக்கறை, நட்பு அக்கறை, கலை அக்கறை, இயற்கை ரசனை, ஞானத் தேடல்….என வகைமைப்படுத்தலாம்.


சமூக அக்கறையும் சொந்தபந்த அக்கறையும் யார்யாரை மிஞ்சுவது எனப் போட்டி போடுகின்றன இவர் எழுத்துக்களில் ….


இடையில் நான் மட்டும் குறைச்சலானவனா என்று நட்பு முன்வந்து நிற்கிறது. இந்த மூன்றுக்குமிடையே இயற்கை ரசனையும் ஞானத் தேடலும் வந்துவந்து தலையாட்டுகின்றன. எப்போதேனும் பள்ளி, கல்லூரி நினைவுகள் கையசைக்கின்றன.


இந்த 40 பதிவுகளில் ஆங்காங்கே அனுபவப் பிழிவு மொழிகள் (பொன்மொழிகள் என்போமே.. அப்படியானவை) ஒளிவீசி ஜொலிக்கின்றன. அத்தகைய மொழிகளுள் சில இதோ:


“காலம்தான் யாரிடமும் ஏற்றத்தாழ்வ பார்ப்பதில்லையே”        (உரிமை)


“நினைவுகளின் குவியல் அந்த வீடு”                       (உரிமை)


“நம் உடம்புக்குத்தான் வயசாகுதே தவிர, நமக்குள்ள இருக்கிற குழந்தைக்கு என்னைக்கும் வயசாகுறதில்லை”    (போளி தாத்தா)


“ஆத்தா மற்றும் பாட்டியிடம் வளர கொடுத்துவைத்திருக்க வேண்டும் (கடவுள்முன்)


“சுத்தியுள்ள மனுஷங்களை பத்தி தெரிஞ்சிக்க ஆரம்பிச்சோடன்ன, பேய்ங்க மேல் சுத்தமா பயம் போய்டுச்சுடா”                         (பிசாசு)


“படிப்பு ரீதியான காரணத்திற்கு என்றுமே சுதந்திரம் உண்டு வீட்டில்”


(பிராயச்சித்தம்)


“முடியாதவர்களை மேலே கொண்டுவருவது தானே ஆசிரியர் பணி?”


(அடையாளம்)


இதேபோல் படித்துக்கொண்டே போனபோது காவியப் பண்புள்ள பகுதிகள் என நான் எண்ணிக் குறித்து வைத்தவற்றில் சில இதோ:



வெயில் எனக்கு இன்னொரு அம்மா. வெயில் என்னுடைய நண்பன், அது ஒரு டவுசர் காலம்….

மீசை முளைக்கும் முன்பே, மீசைக்கான உரமாக வியர்வையாய், மேல் உதட்டின் மேல் முத்துக்களாய் நீர், வெயில்”


‘அடுத்த நாளும் விடியும் அதே வெயிலிலே’               (வெயில்)


வெயில் பற்றிய ஜ.பாரத்தின் இந்த எழுத்துச் சித்திரத்தைப் படித்ததும் பாரதியின் வசன கவிதைகளின் பண்புகள் இவரின் எழுத்தில் மிளர்வதைக் கண்ணுற்றேன்.


இந்த நூலின் ஆகச்சிறந்த எழுத்துச் சித்திரங்களில் இந்த வெயிலும் ஒன்று.



“தாய்மாமன்கள் நம்மூலமாக அவர்கள் தங்கையையோ அக்காவையோ பார்ப்பதும் நாம் தம் அம்மாக்களை மாமன்களிடத்தில் பார்ப்பதும்….”

“நம் அ்பபாக்களையும் முந்திக்கொண்டு நமக்கு ஏதாவது முதன்முதலில் செய்துவிடுவார்கள் இ்ந்த மாமன்கள்”              (தாய்மாமன்)



“முகத்தைப் பார்க்க இன்னும் ஆவல் கூடியது எங்கோ ரத்தமும் சதையுமாகப் பார்த்தவை இவை. அதற்குத்தான் இவ்வளவு விளக்கங்கள்” (கண்டதைச் சொல்லுகிறேன்)

ஆத்தா! அம்மாவைப் பெற்ற தில்லையம்மாளையும் அப்பாவைப் பெற்ற தர்மாம்பாள் அம்மாவையும் நினைவுகூரும் அழகிய பதிவு இது.



ரோக்காவில் இல்லாத ஒன்றைக் கடைசியாகப் பையில் போட்டு அனுப்புவாராம் கடைகாரப் பெரியப்பா:

“அன்பளிப்பாய்க் கல்கண்டு – 100 கிராம்”           (கல்கண்டு)


இப்போது கானாமல் போனது கல்கண்டு மட்டுமா?!



“இத்தனைக்கும் அது காஸ்ட்லியான வாட்ச்செல்லாம் இல்ல அப்பா கட்டுனதுனால அது காஸ்ட்லி” (கைக்கடிகாரம்)

இதேபோல், இன்றைய வாழ்க்கைக்கு மட்டுமல்ல; என்றைக்கும் மனதில் பதியத்தக்க வாழ்க்கை விழுமியங்களை சொல்லும் பதிவுகளில் சில இதோ:



“எங்கள் பள்ளிக் காலங்களில் ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் விருந்திற்கு அவர்கள் வீட்டில் கொடுக்கும் விருந்தோம்பலுக்கு ஈடேயில்லை. அவனுடைய அண்ணன், அம்மா, அப்பா அனைவரும் பாசக்காரர்கள்”

எப்போதுமே, ரம்ஜான் என்றால் பிரியாணி இரண்டாம் பட்சம்தான். இர்ஷாத் இப்போது எங்கே என்ன செய்து கொண்டிருப்பான் என்பதே என் பிரதான கேள்வியாக இருக்கும். இந்த ரம்ஜானுடன் அவனைப் பார்த்து 23 வருடங்கள் ஆகின்றன.


என்வாழ்த்து அவனைக் கண்டிப்பாகச் சென்றடையும். நான் இப்படித்தான் பிதற்றிக் கொண்டிருப்பேன் என்பதையும் அவன் அறிவான்.”                                          (நட்பு)


எழுத்தாளர் ஜ.பாரத்தின் 10 வயதில் துளிர்த்த இந்த மத நல்லிணக்க நட்பு இன்றைய இந்தியாவில் ஒவ்வொருவர் நெஞ்சிலும் தூவத்தக்க வார்த்தை விதைகள் எனப் பதியம் போடத் தக்கதாகும்.


நம் பாரத் நெஞ்சில் முளைத்த இந்த மதநல்லிணக்க நட்பு நம் பாரதத்தில் முளைக்க வேண்டும்! இது ஒரு இந்தியக் கனவு…!


இந்த நூலின் ஆகச் சிறந்த எழுத்தோவியங்களுள் இதுவும் ஒன்று.



“மஞ்சள் அப்பிய உள்ளங் கைகள்…. மேனுவல் ஸ்கேவன்ஜர்ஸ் என்று அழைக்கப்படும் மனித தெய்வங்கள் அவர்கள் என்பதை உணர்ந்தேன்”

‘அவர்கள் பெரும்பாலும் சாப்பிடும் பொருளைப் பார்க்காமலேயே சாப்பிட்டார்கள்’                         (கடவுள்களுடன் தேநீர்)


இன்றைய கொரோனாக் கொடுங்காலத்தில் எல்லோரும் தூய்மைப் பணியாளர்களை மனித தெய்வங்கள் என்று பயன்கருதிப் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எழுத்தாளர் ஜ.பாரத்தோ முன்பே பல்லாண்டுகளுக்கு முன்பே எண்ணி எழுதியுள்ளார் என்பது வலியும் குமுறலுமான பதிவாகும்.


இதேபோல சில இடங்களில் சில பதிவுகளில் தேநீர்க்கடை வந்து கொண்டே இருக்கிறது.  அந்த வகையில்,


தேநீர்க்கடை வெறும் தேநீர்க்கடையல்ல     எழுத்தாளர் பாரத்துக்கு


     அதுபோதி ஞானக் கடை’…!


நமக்கும்தானே?!


இந்த நூலின் ஆகச் சிறந்த சிந்தனைச் சித்திரங்களுள் இதுவும் ஒன்று.



“இதெல்லாம் விட்டுட்டு நகரத்துக்கும் அசலூருக்கும் என்னைக்குக் குடிபோனோமோ அன்றே தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம்.

“ஒரு வைரசுக்கு இருக்கும் தன்மை ஒட்டிக்கொள்ளும் தன்மைகூட மனிதர்களாகிய நம்மிடமில்லையே”                 (கொரோனா)


இதைவிட எப்படிச்சொல்லமுடியும்?!


நம் சொந்தபந்தங்களோடு ஒட்டிக்கொள்ள வேண்டுமென்பதை…


நம் சமூகத்தோடு ஒட்டிக்கொள்ள வேண்டும் என்பதை…


நம் நட்புக்களோடு ஒட்டிக்கொள்ள வேண்டும் என்பதை…


நாமும் வைரஸைவிடக் கொடுமையானவர்களாக இருக்கப் போகிறோமா? மனிதநேயம் ஒட்டிக்கொள்ளத் தழைக்கப்போகிறோமா?


காலம் நம்முன் வைக்கும் கேள்வியைக் காலம் தவறாமல் – ஒரு எழுத்தாளனுக்குரிய சமூகப் பொறுப்புணர்வு தவறாமல் நம்முன்


எழுப்புகிறார் எழுத்தாளர் ஜ.பாரத்.



“கும்பகோணத்தின் வாசனையை வண்டி ஊர் எல்லையைக் கடக்கும் முன்னரே அனுபவிக்க வேண்டி. மூச்சை நன்றாக உள்ளே … வாங்கி வாங்கி… உள்ளே மட்டுமே வாங்கிவிட்டு மறுபடியும் இருக்கைக்கு வந்தேன். ஓர் ஆழ்ந்த பெருமூச்சு புஷ்…ஷ்….

“தூக்கம் தொலைந்தது அது நிம்மதிப் பெருமூச்சு என்று யார் சொன்னது?”                                   (தூக்கம்)


அது பூர்வீக மண்ணின் உயிர்மூச்சல்லவா பாரத்?!


இப்படித்தான் நானும் நான் பிறந்த ஊரான கள்ளக்காத்தான் சென்றதும் வெற்றுக்காலுடனேயே நடப்பது வழக்கம், பழக்கம் பிறந்த மண்பாசமது…!


இப்படி…. படிக்கப்படிக்க கண்ணும்கருத்தும் நாசியும்வாசமும் செவியும்புவியுமாக மெய்யும்உணர்வுமாக வாயும்வாய்மையுமாக … உற்றறியும் ஐம்புலனும் மன ஓர்மை (தியானம்) துலங்க ஈர்த்துச்செல்கின்றன இவரின் எழுத்துக்கள்!


தமிழரின் தாவரமான பனையோலை நினைவுகளில் தொடங்கி உலகக் கொடுநோயான ‘கொரோனா’ கொடுமைவரை சிந்தனைப் பந்தி வைத்திருக்கிறது இந்த நூல்.  தொடக்கத்திலிருந்து முடிவுவரை இந்த நூல் பேசும் கொடுமைகளெல்லாம் முடிய வேண்டுமே! மானுடம் தழைக்க வேண்டுமே!! என்று சொல்கிறது படித்துமுடித்த என் மனசு… உங்கள் மனசு…?!


படித்து முடியுங்கள் இதையே சொல்லும் உங்கள் மனசும்…


இப்படியொரு நூலை என் அறிவார்ந்த அன்பு நண்பர் தமிழ் பௌத்த ஆய்வறிஞர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் திருமகனார் ஜ.பாரத்தான் இந்நூலாசிரியர் என்பது நட்பீன்ற பொழுதினும் பெரிதுவக்குமன்றோ…?


நான் பார்த்து துளிர்த்த ஒரு விதை ஏராளம் சிந்தனைப் பூக்களை விதைகளாய்த் தூவுவதைக் காணும் இந்தப் பேருவகை இன்னும் பல நூலாக்கங்களின்மூலம் தொடர வேண்டுமென்று வாஞ்சையுடன் வாழ்த்துகிறேன்.


நிறையன்புடன் (சு.மாதவன்)                     


 


[image error]

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 14, 2020 09:33
No comments have been added yet.