100th Dosa: மான் கலவி – பார்த்த தலைவி!
[image error]dosa365 = இஃது ஆய்வுத் தளமோ (அ) சிறப்புத் தளமோ அன்று!
அத்தகு பெருமையோ/ வல்லமையோ இதற்கு இல்லை!
இது ஒரு தமிழ்ப் பூங்கா மட்டுமே; பூங்காவுக்கென்று பெருமை ஒன்னுமில்லை; செடி கொடிப் பூக்களுக்கே மணமும் பெருமையும்!
தமிழ் வாசிக்கும் வண்டுகள் = நீங்கள்;
இந்த 100 ஆம் பதிவிலே, உங்களுக்கு என் பல்லாண்டு வாழ்த்தும் நன்றியும்!
என்னவன் முருகவனின் கைப்பிடித்து…
இந்தத் தமிழ்ப் பயணத்தை மேலும் தொடர்கின்றேன்… பயணங்கள் முடிவதில்லை!
முன் கதை:
உங்களில் எத்தனை பேரு = அடுத்தவர் காமத்தை விரும்புவீங்க?:)
என்னடா வெவகாரமாக் கேக்குறேன் -ன்னு பார்க்காதீங்க; வாழைப்பந்தல் To வேலூர் & To திருப்பதி; பேருந்தில் ஒரு இளம் தம்பதி; கொஞ்சம் public display of affection:) பேருந்தில் பலரும் முகம் சுளிப்பு:)
எல்லாம் அடங்கி, இப்போ, ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து தூக்கம்!
அப்பப்போ முழிச்சி, திடீர்-ன்னு ஒருத்தர் கண்ணை இன்னொருத்தர் பாத்துக்குறாங்க;
பாக்கவேணாம் -ன்னு என் மனசு சொன்னாலும், அவர்கள் “பார்த்துக் கொள்வதைப் பார்த்துக் கொள்வதும்” ஒரு சுகம் தான்:) – அவர்கட்கு இடையூறு இல்லாமல்;
Parallel Seat அல்லவா; எனக்கும் ஏதேதோ யோசனைகள் – டேய் முருகவா, you spoiled me:)
[image error]அந்தப் பொண்ணு சன்னல் பக்கம்; அவன் அணைப்பில் அவள் = இன்பத் தூக்கம்!
திடீர்-ன்னு மாம்பாக்கம் தாண்டி…
ரோடு நெடுக்க வேல முள்ளு; சன்னல் வழியாவும் உரசுது;
இவர்களோ = ஏகாந்தத் தூக்கம்!
படேர்-ன்னு எழுந்து, அவங்க பக்கம் போயிட்டேன்;
குளிரில் நான் போட்டிருந்த Fleece Jacket ஐ அவங்க மேல் போட்டுட்டு, பேருந்துச் சன்னல் கதவை மூட, அவன் விழித்துக் கொண்டான்; புரிந்தும் கொண்டான்!
நான், இந்தப் புறம், என் இருக்கைக்குத் திரும்பி விட…
அவன் கை நீட்டி, என் கையைப் பற்றிக் கொண்டான்; விடவும் மாட்டேங்குறான்;
கண்ணில் அந்தக் காதல்-நன்றி உணர்ச்சி;
அதிகாலைக் குளிரில் நான் லேசா நடுங்குவதைப் பார்த்து…
அவள் மேல் சிக்கிக் கொண்ட என் Fleece Jacket ஐ எடுக்கணும்-ன்னு, அவளை எழுப்பியும் விட்டான்;
வேணாம்-ன்னாலும் கேட்கலை; அவள் காதில், இவன் ஏதோ சொல்ல…
அவள் புன்னகையிலேயே நன்றி சொன்னாள்; Jacket என் கைக்கு வந்துவிட்டது..
இப்போ இருவரும் சோடியா, என்னைப் பாத்துக்கிட்டு வராங்க:) எனக்கு வெட்கம்:)
அப்போ, மனசுக்குள் ஓடிய ஒரு சங்கத் தமிழ்ப் பாட்டு = அதுவே இது!
பாடல்: புறநானூறு
கவிஞர்: வீரை வெளியனார்
திணை: வாகை
துறை: வல்லாண் முல்லை
[image error]சூழல்:
வேடன்-வேடிச்சி குடும்ப வாழ்க்கை;
முன் மண்டபத்தில் இருவரும் தூங்க, பக்கத்திலே… மான்-மான் இன்பம்!
பசிக்குது; பழம் உண்ண எழுந்த அவ, இந்த மான்-மான் கலவியைப் பாத்துட்டா;
* உதறி எழுந்தா, கணவன் விழிச்சிக்குவான்; வேடனால் மான்களுக்கு ஆபத்து!
* இருந்த இடத்தில் எக்கியே எடுத்தா, அரவம் கேட்டு, மான்கள் விலகி விடும்; புணர்ச்சிக்கு ஆபத்து!
என்ன பண்ணுவா?
= பசியோடு, அந்த மூலையில்… குறுகியே கிடந்தாளாம் தலைவி!
= மான் கலவி – பார்த்த தலைவி!
முன்றில், முஞ்ஞையொடு முசுண்டை பம்பி,
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென,
பார்வை மடப் பிணை தழீஇ, பிறிது ஓர்
தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட,
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சி, கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்,
இல் வழங்காமையின், கல்லென ஒலித்து,
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி
கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென,
ஆர நெருப்பின், ஆரல் நாற,
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி,
தங்கினை சென்மோ, பாண! தங்காது,
வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே!
காபி உறிஞ்சல்:
[image error]முன்றில், முஞ்ஞையொடு முசுண்டை பம்பி,
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல்
முன்னைக் கொடி & முசுண்டைக் கொடி;
முன்றிலில், பலா மரங்களின் மேல், கொடிகள் படர்ந்துள்ளன;
பந்தலே போட வேணாம்; அப்படி ஒரு நிழல்! பலாப்பழங்கள் தொங்கும்/தூங்கும் நீழல்!
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென,
பார்வை மடப் பிணை தழீஇ, பிறிது ஓர்
கையாள் மாளும்/ கொல்லும் வேடன்; அவன் ஒய்யாரமாத் தூக்கம் தூங்குறான்;
பார்வையாலே தழுவ முடியுமா?
= தழுவியும் தழுவாமலும்…
அப்படியான மடப் பிணை மான்கள், இணை மான்கள்!
[image error]தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட,
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கலை = ஆண் மான்; பிணை = பெண் மான்
மேய்ச்சல் என்னும் தொழிலை விட்டுருச்சி அந்த ஆண்! = தீர் தொழில்;
ஆனா, இன்னொரு தொழிலைப் புடிச்சிக்கிச்சி = திளைத்து விளையாடும் “இன்புறு புணர்ச்சி”
புணர்ச்சியே இன்பம் தான்! அப்பறம் என்ன “இன்புறு” புணர்ச்சி?
சில சமயம், லேசா வலிக்கலாம்; துன்பம்;
அது கூட இல்லாமப் பாத்துக்குதாம் அந்த ஆண்மான்! அதனால் இன்பு உறு புணர்ச்சி;
புணர்ச்சிக்கே, புணர்ச்சி விதி சொல்லுவோமா?:)
உறு புணர்ச்சி = உற்ற புணர்ச்சி, உறுகின்ற புணர்ச்சி, உறும் புணர்ச்சி = முக்காலமும் புணர்ச்சி:)
வினைத் தொகை இன்பம்… உடல் தொகை இன்பம்!
[image error]கணவன் எழுதலும் அஞ்சி, கலையே
பிணை வயின் தீர்தலும் அஞ்சி, யாவதும், இல் வழங்காமையின்
அந்த இன்புறு புணர் நிலையைக் கண்ட வேடனின் வேடிச்சி…
எங்கே தன் கணவன் எழுந்து விடுவானோ? அந்த மான்களுக்கு என்ன ஆகுமோ? -ன்னு அஞ்சி
தான் எழுந்தால், அந்தச் சத்தத்தால், கலை (ஆண்), பிணை (பெண்ணை) விட்டு நீங்கிருமோ? -ன்னு அஞ்சி…
அந்தப் புணர்ச்சி இன்பம் தடைபடலாமா? = அந்த இல்லிலே (மண்டபத்திலே), நகராமல், ஒடுங்கியே கிடந்தாள்!
கல்லென ஒலித்து, மான் அதள் பெய்த, உணங்கு தினை வல்சி
கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென
இதனால், கானக் கோழி, முன்றிலில் காயப் போட்டிருக்கும் தினையைத், தைரியமாக் கொத்திக் கொத்திச் சாப்புடுது; கூடவே இதல் என்னும் புறாவும் கூட்டுத் கொத்தல்:)
ஐயோ -ன்னு பொம்பளைங்க பதறி அடிச்சிக், கோழியை வெரட்டுவாங்களே? ஆனா, இந்தப் பொண்ணு அப்படி விரட்டலை;
மான்-கலவிக்கு மதிப்பு குடுக்குறா;
அந்த இன்புறு புணர்ச்சியைப், பார்த்தும் பாராமலும்… தன்னகத்தே இன்பம் கொள்ளுறா;
[image error]ஆர நெருப்பின், ஆரல் நாற,
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி,
தங்கினை சென்மோ, பாண!
சந்தனக் கட்டையின் அருமை தெரியாமல், நெருப்புக்கு எரிக்கும் வேடர்களின் காடு;
அதில் ஆரல் மீன் நாற்றம்;
துண்டுத் துண்டா அரிஞ்ச கறி – இறைச்சி; சுற்றத்தோடு அதைக் கூடி உண்டு..
எலே பாணனே; அந்தக் காட்டு ஊரிலே தங்கி விட்டுச் செல்!
தங்காது, வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு, என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே!
தனக்கு-ன்னு வச்சிக்காது, பல வேந்தர்கள் தரும் பரிசில்/திறை எல்லாத்தையும், பரிசில் வேண்டிச் சொல்வோர்க்குக் குடுக்கும் அரசன்; அங்கே போ; பரிசில் வாங்கிக்கோ; ஆனா…
அந்த அரசனைக் காட்டிலும், பெருமை உள்ளவ இந்தப் பொண்ணு; வேடிச்சிப் பொண்ணு;
* அரசன் குடுப்பானே தவிர, தன் செல்வத்தில் யாரேனும் கை வச்சி விளையாடினாப், பாத்துக்கிட்டு இருக்க மாட்டான்!
* ஆனா, இவ பாத்துக் கிட்டு இருந்தா… கோழியும் புறாவும் கொத்தக் கொத்தப் பாத்துக்கிட்டு இருந்தா;
அவள் ஊரிலே தங்கி விட்டு, அப்பறம் அரசன் ஊருக்குச் செல்!
அப்படியான மனப் பான்மை; அப்படியான தலைவி;
மான் கலவி – பார்த்த தலைவி!
(முருகா, இவ உள்ளத்தையே எனக்கும் கொடு; சங்கத் தமிழையே எனக்கும் கொடு)
dosa (எ) தினம் ஒரு சங்கத் தமிழின் முக்கிய நோக்கம்:
1) சங்கத் தமிழை இன்றைய கோணத்தில் படம் பிடிப்பது
= உதட்டுப் பேச்சாய் இல்லாது, உள்ளத்து உறவாய்!
2) திணை – துறை – இலக்கணம் என்று = அசை பிரிக்காமல்,
காதல் – உள்ளம் – உணர்ச்சி என்று = அசை போடுவது!
3) இன்றைய கால கட்டம் வேறு; ஆனா, தமிழ்த் தொன்மம் எப்படி?
இதைத் தொல் பூங்காவில் எட்டிப் பார்த்து மகிழ்வது;
4) எட்டிப் பாக்கணும்-ன்னா = மதம்-சமயம்/ அரசியல்/ சுயப் பிடித்தங்கள் என்னும் சுவரைத் தாண்டினால் தான் உண்டு!
தமிழைத் தமிழாய் அணுகும் மனப் போக்கு = இதை விதைப்பதும் ஒரு நோக்கம்!
5) இப்படித் தொல்தமிழை எட்டிப் பார்ப்பதால் வரும் பயன் என்ன?
இதுக்குப் பதில், இன்னொரு கேள்வியே = காதலால் வரும் பயன் என்ன? அது ஒரு மனத்தை மேம்படுத்தும் “உணர்வு”;
2000+ ஆண்டுகளாய் காதல் அதே தான்; மாறவே இல்லை;
வெளியே உடுப்பு தான் மாறுகிறது; உள்ளே உணர்ச்சி அல்ல! அதுவே = தினமொரு சங்கத்தமிழ்!
dosa 100/365
Kannabiran Ravishankar's Blog
- Kannabiran Ravishankar's profile
- 16 followers
