முதல் பெண்ணியக் கவிஞன்
உலக இலக்கியக் கவிஞர்களிலேயே பாத்திரப் படைபில் கம்பனுக்கும் ஷேக்ஸ்பியருக்கும் இணையானவர்கள் என்று யாரையும் குறிப்பிடமுடியாது என்பது என் அசைக்கமுடியாத அபிப்பிராயம். , இருவரும், யாரையும் ஒற்றைப் பரிமாணமான கதாப் பாத்திரமாக உருவாக்கவில்லை. இருவர் படைப்புகளையும் ஆழ்ந்து படித்தால் இது புலப்படும்.
குறிப்பாகக் கம்ப ராமாயண அநுமன். கம்ப சிருஷ்டியிலே அவன் இராமனின் மனச்சாட்சிக் காவலனாக உருவெடுக்கிறான். இதைப் பல இடங்களில் கம்பன் அற்புதமாகக் காட்டுகிறான்.
அதே அநுமன் இராமத் தொண்டனாக இலங்கைக்குச் சீதையைத் தேடிச் சென்று அவளை அசோகவனத்தில் கண்ட பிறகு, அவள், அவன் இதயத்தில், இராமனைக் காட்டிலும் உயர்வான புதியதொரு தெய்வமாகக் குடியேறுகிறாள். அவன் திரும்பி வந்ததும் இதை உள்ளபடியே இராமனிடம் எந்த விதமானத் தயக்கமின்றிக் கூறுவதுதான் சிறப்பு!
‘விற்பெரும் தடந்தோள் வீர” என்று அவன் இராமனை விளித்துக் கூறும்போது, நீ கையில் வில்லைத் தாங்கிய வீரனாக இருக்கலாம், ஆனால் எந்தவிதமான ஆய்தமுமில்லாமல், நற்பெரும் தவத்தளாகிய ஓர் அபலைப் பெண் ஆயுதம் ஏதுமில்லாமல், நல் லொழுக்கம், பொறுமை ஆகியவற்றையே தன் வலிமையாகக் கொண்டு, இராவண சாம்ராஜத்தையே தனித்து எதிர்த்துப் போராடுவதைப் பார்க்கும்போது நான் புதியதொரு மகத்தான தெய்வத்தை தரிசித்தது போள் உவகைக் கடலில் ஆழ்கிறேன். அவள்தான் இனி என் தெய்வம். இப்பேர்ப்பட்ட போராட்டத்தினால், சீதை உனக்குப் பெருமையைத் த் தேடித் தந்தது போல், நான் அவளை இந்நிலையில் காணும் பேறு பெற்றத்தினால் அவள் எனக்கும் ஏற்றம் தந்தாள். பெண்ணினமே அவள் தனித்துப் போராடும் இணையற்ற வீரத்தினால் உயர்வு பெறுகின்றது. அவள் போராடத்தைக் கண்டு வியந்து திருமலும், சிவனும், பிரும்மாவும் தங்கள் தங்கள் மனைவியரைத் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர். என்கிறான் அநுமன்.
வால்மீகி ராமாயணத்தில் அநுமன் சீதையைக் கண்ட செய்தியைத் தெரிவிக்கின்றானே தவிர, பெண்ணினத்துக்கு ஏற்றம் தரும் விதமாகப் பேசவில்லை. கம்ப ராமாயண அநுமனோ இராமனைக் காட்டிலும் சீதை உயர்ந்தவள் என்ற தொனி தோன்ற நயம்பட உரைக்கின்றான். இதனால்தான், கம்ப ராமாயணத்தை ஒட்டி வைணவப் பிரபந்தங்களுக்கு வியாக்கியானம் எழுதியவர்கள், ‘இராமாயணம். சிறையிருந்தாள் ஏற்றம் கூறும்’ என்கிறார்கள். இரான, திருமாலின் அவதாரம் என்பதால்,,திருமாலை ‘திருமகள் கேள்வன்’ ( Mr. Lakasmi’s husband) என்று குறிப்பிடும் மரபும் ஏற்பட்டிருக்க வேண்டும்.
Indira Parthasarathy's Blog
- Indira Parthasarathy's profile
- 74 followers

