நெடுஞ்சாலையில் ஓர் இடம்

மார்ச் 21, 1977, காப்பிடல் செண்டர், லார்கோ, மேரி லாண்ட் , அமெரிக்கா. பித்துநிலையில் இருக்கும் இசைரசிகர்கள் முன்னிலையில் ’ஈகிள்ஸ்’ பாண்ட் முதல் ஆல்பத்தின் ’ஹோட்டல் காலிஃபோர்னியா’ இசைக்கப் பட்டது. அக்காற்றில் இசையின் அதிர்வுகள், கிடாரின் மீட்டல்கள், பித்தாக்கும் ட்ரம்ஸ் இசையுடன் குரல் ஒலிக்க மக்கள் திரள் கட்டுண்டு வயப் பட்டது. ஃபெப்ரவரி, 1977 ல் வெளியிடப்பட்ட அந்த ஆல்பம் அந்த வருடத்திற்குள் ஒரு மில்லியன் கிராமஃபோன் ரெக்கார்டுகள் விற்கப்பட்டு அதுவரையிலான இசை வரலாற்றில் சாதனை படைத்தது. கப்பல்களில் அவை ஏற்றப்பட்டு இதர நாடுகளுக்கும் சென்ற சாதனை வரலாற்றை பலர் அறிந்திருக்கலாம். அவர்களுக்கு இணையான புகழுடன் ’பீட்டில்ஸ்’ இசைக் குழுவினரும் அறியப்பட்டனர்.
இன்று ’ஹோட்டல் காலிஃபோர்னியா’ ஒரு துணைவரலாறு. பலர் அதை நிறைய தடவை கேட்டிருக்கலாம். நான் அப்பாடலை முதன்முதலில் கேட்டது 2009 ல். ஜெயனுக்கு ஒரு ஐபாட்[I pod] அமெரிக்காவிலிருந்து பரிசாகக் கிடைத்தது. அதில் அதிகமும் சினிமா பாடல்கள், ஒன்றிரண்டு ஆங்கில ஆல்பம் பாடல்களும் இருந்தன. அதில் ஓரிரவில் இப்பாடலை நான், அஜி, சைதன்யா மூவரும் கேட்டோம். முதலில் பாடலின் துடியான தாளமும், கிடாரின் இன்னிசையும் ,பாடலின் டுயூனும், பாடுபவரின் குரலும் மிகவும் ஈர்த்தன.
இதில் மிகவும் விரும்பப்பட்டு அத்தனை ஜனத்திரளையும் பித்தாக்கியது பாடல் முழுவதும் இழையோடும் கிடார் இசையும் அதன் துடிப்பான தாளமும். கடைசி மூன்று நிமிடங்கள் ஜோ வால்ஷின் டபுள் ஸ்ட்ரிங் கிடாரும், டான் ஃபெல்டர், க்ளென் ஃப்ரே, ஆகியோரின் கிடாரும் இணைந்து செய்யும் மாயம் ஒரு துர்க்கனவின் சுழல்தன்மையை நமக்கு நினைவுறுத்தியபடி இருப்பதுதான். அந்த நேரடி இசை நிகழ்ச்சியில் அவர்கள் வாசிப்பது எலெக்ட்ரிக் கிடார் தான். பிற்பாடு அக்கொஸ்டிக் கிடார் இசையுடன் அது மீண்டும் வெளியிடப்பட்டது. ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டே டான் ஹென்லே பாடுகிறார். அது அசாத்திய முயற்சி என எனக்குப் பட்டது.
திரும்பத் திரும்ப கேட்கையில் பாடலின் வரிகள் மேல் என் கவனம் சென்றது. அதை உன்னிப்பாக கேட்கத் தொடங்கியதும் அதன் அர்த்தம் என்னை ஈர்த்தது. அவை மிகுந்த உருவகத்தன்மையுடன் கூடிய வரிகள். பெரிய கவித்துவம் இல்லையெனினும் துர்க்கனவொன்றின் காட்சி சித்தரிப்பின் மொழி அதிலுள்ளது . அதன் புதிர்த்தன்மையே என்னை சுழற்றியடிக்கும் ஒரு மாயத்தைக் கொண்டுள்ளது என அறிந்தேன்.
இருட்டான பாலைவனச் சாலை.
குளிர்ந்த காற்று என் தலைமயிரைக் கோதியது.
கோலீட்டாஸ்* அரும்புகளின் வெப்பமான மணம்
காற்றில் எழுந்து படர்ந்தது.
அங்கே, தூரத்தில், மினுமினுக்கும் ஒரு வெளிச்சம்.
என் தலை கனத்தது, கண் மங்கியது
இரவுக்கு நிற்க வேண்டி வந்தது.
அங்கே அவள் நின்றாள், கதவருகே.
மிஷன் சர்ச்சின் மணி ஒலித்தது.
“இது சொர்க்கமாகவும் இருக்கலாம், நரகமாகவும் இருக்கலாம்”
என்று நான் நினைத்தேன்.
அவள் மெழுகுவர்த்தி ஏற்றி, உள்ளே வழி காட்டினாள்.
பாதை நெடுகக் குரல்கள் அழைப்பதுபோல் ஒலித்தன…
“ஹோட்டல் காலிஃபோர்னியாவுக்கு வருக!
அருமையான இடம் இது (அருமையான இடம்!)
அருமையான முகம்!
இங்கே எப்போதும் இடமிருக்கும்
எந்த பருவத்திலும் (எந்த பருவத்திலும்!)
அறைகள் திறந்தே இருக்கும்”
செல்வச் செழிப்பின் அத்தனை கோணல்களையும்
கொண்ட மனம் அவளுக்கு,
மெர்சிடீஸ் பென்ஸ் வைத்திருக்கிறாள்.
அவள் பின்னால் அழகழகான பையன்கள்,
அவர்களை ‘நண்பர்கள்’ என்று அழைக்கிறாள்.
எல்லோரும் முற்றத்தில் கூடி ஆடுகிறார்கள்
இனிய வேனில் வேர்வை நனைக்க –
சிலர் எதையோ நினைவுகூர ஆடுகிறார்கள்,
சிலர் மறக்க.
நான் காப்டனை அழைத்தேன்.
“என் ஒயினை கொண்டுவாருங்கள்” என்றேன்.
“1969 முதல் அந்த ஸ்பிரிட்** இங்கே இல்லை,”
என்று அவர் சொன்னார்.
இப்போதும் அந்தக்குரல்கள் தூரத்திலிருந்து அழைக்கின்றன.
நடு இரவிலும் நம்மை எழுப்புகின்றன…
“ஹோட்டல் காலிஃபோர்னியாவுக்கு வருக
அருமையான இடம்! (அருமையான இடம்!)
அருமையான முகம்!
ஹோட்டல் காலிஃபோர்னியாவில்
கொண்டாடித் தீர்க்கிறார்கள்.
என்ன ஆச்சரியம்! (என்ன ஆச்சரியம்)
இங்கே நீங்கள் இல்லை என்பதற்கான
சான்றுடன் வரவும்…”
கூரையில் பதிக்கப்பட்ட கண்ணாடிகள்
ஐசில் வைக்கப்பட்ட பிங்க் நிற ஷாம்பேன் புட்டிகள்
“இங்கே நாம் எல்லாரும் கைதிகள், நம் சந்தர்ப்பங்களின் கைதிகள்,”
என்று அவள் சொன்னாள்.
தலைவரின் தனியறையில்
அவர்கள் விருந்துக்காக கூடினார்கள். ஆனால்,
கூர்கத்திகள் மின்ன எவ்வளவுதான் குத்தினாலும்
அந்த வன்மிருகத்தை அவர்களால் கொல்லவே முடியவில்லை.
என் கடைசி நினைவு. நான்
கதவை நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன்
தொடங்கிய இடத்துக்கே.
திரும்பும் பாதையை கண்டு பிடிக்கவேண்டும்.
“ரிலாக்ஸ்” என்றான் இரவு கண்காணிப்பாளன்.
“நாங்கள் வரவேற்க மட்டுமே பணிக்கப்பட்டவர்கள்.
எப்போது வேண்டுமென்றாலும் நீ வெளியேற முடிவெடுக்கலாம்.
ஆனால் ஒருபோதும் உன்னால் வெளியேபோக மட்டும் முடியாது” என்றான்.
* கோலீட்டாஸ் – கஞ்சா செடியின் அரும்புகளை குறிக்கும் ஸ்பானிஷ் மொழிச்சொல். ‘குட்டி வால்’ என்பது நேரடியான அர்த்தம். பாலியல் சார்ந்த கொச்சை வார்த்தையாகவும் பயன்படுத்தப்படுகிறது.
** 1969-ன் வியட்நாம் போர் எதிர்ப்பு சார்ந்த ஹிப்பி கலாச்சாரத்தின் ‘ஸ்பிரிட்’ (உணர்வு) இங்கே சிலேடையாக குறிப்பிடப் படுகிறது.
இப்பாடலில் ஒரு உருவகமோ அல்லது ஒரு படிமமோ அதன்மேல் ஏற்றப்படும் அனைத்து அர்த்தங்களையும் மீறி நின்று கொண்டு நம்மை சவாலுக்கு அழைக்கிறது. சீண்டுகிறது. என்னை முடிந்தால் புரிந்துகொள் என்கிறது. எனக்கு மிகப் பிடித்தமான விளையாட்டு இது. நான் எனக்கு தெரிந்தவற்றை வைத்து அதை உணர முயன்று ஆடை அணிவித்து அழகுபார்க்கிறேன்.
அது அமெரிக்காவில் ஹிப்பி கலாச்சாரம் அதன் உச்சத்தில் இருந்த காலகட்டம். மாபெரும் நுகர்வு கலாச்சாரத்தில் அமெரிக்கா அடியெடுத்து வைத்ததும் அப்போதுதான். ஹெடோனிசம் ஹிப்பிகளின் தாரக மந்திரம். எல்.எஸ்.டி , கோகெய்ன் போன்ற போதை வஸ்துக்களின் பெருக்கம், ராக் இசை போன்ற பல்வேறு இசைக்குழுக்களின் பிடியில் அமெரிக்க மக்கள் இருந்த காலம். கூடவே அப்போது முளைவிட்ட தனிமனித சுதந்திரம், இருத்தல் பற்றிய கேள்விகள் எல்லாமாக சேர்ந்து அமெரிக்காவை ஆட்டிப் படைத்தன. வியட்நாம் போரை ஒட்டிய மக்களின் மனநிலையையும் இது பிரதிபலிக்கிறது. பல வருடங்கள் நீண்ட அப்போரில் 1969 ல் முழுமூச்சாக ஐந்து லட்சம் வீரர்களை அமெரிக்கா களமிறக்கியது. அந்த வருடம் இப்பாடலில் ஒரு குறிப்பாக இடம்பெறுகிறது.
இசைக்குழுவின் டான் ஹென்லேயும், க்ளென் ஃப்ரேயும் சேர்ந்து எழுதிய பாடல். வெளிவந்தவுடன் ஹோட்டல் காலிஃபோர்னியா என்ற உருவகம்[ metaphor ] அப்போதைய சாத்தான் வழிபாடு நடந்ததாகக் கூறப்படும் ஒரு தேவாலயத்தை குறிப்பிடுகிறது என்றும், மனநல விடுதி ஒன்றைக் குறிப்பதாகவும், போதையின் பிடிக்குள் செல்பர்களை சுட்டுகிறது என்றும் பரவலாக பேசப்பட்டது.
ஆனால் இதை எழுதியவர்களில் ஒருவரான டான் ஹென்லே ’’நாங்கள் அமெரிக்காவின் மிட் வெஸ்ட் பகுதியின் சிறு நகரத்திலிருந்து வந்தவர்கள். எங்கள் பார்வையில் லாஸ் ஏஞ்சல்ஸின் பகட்டும், மின்னும் ஒளிவெள்ளத்தில் அதன் அழகும், மேல்தட்டு நாகரிகத்தின் வசீகரமும் எங்களை ஈர்த்தன. அது ஒரு அழகிய வசீகரப் பொறி. இப்பாடல் ஒன்றுமறியா கபடமின்மையை எப்போதைக்குமாக இழப்பதை சுட்டுகிறது. அமெரிக்கா என்ற கனவிற்கும் அமெரிக்கா என்ற துர்க்கனவிற்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டை உணர்த்துகிறது. மரபார்ந்து சொல்லப்பட்டுவரும் முரணைக் குறிக்கிறது… நன்மை, தீமை, ஒளி, இருள், இளமை, வயதடைதல், ஆன்மீகம், மதங்களைக் கடத்தல் இன்னபிற.
ஆனால் உள்ளே புக மட்டுமே முடியும். ஒருபோதும் வெளியேற முடியா ஒரு இடம் என்பது நாம் அனைவருமே அறிந்தது. நம் கனவுகளில் மீண்டும் மீண்டும் வருவது.
சில பாடல்களை நினைக்க விரும்புவோம், இதை மறக்க விரும்புகிறேன். ஆனாலும் இது நினைவில் நீடிக்கிறது. உடைந்த துண்டுகளாக. துண்டுகள் ஒவ்வொன்றும் முளைப்பதாக.
ஆடுகிறார்கள் சிலர் நினைவுகூர, சிலர் மறக்க,
”1969 முதல் அந்த ஸ்பிரிட் இங்கே இல்லை”.
”எத்தனை கூர் கொண்ட கத்தியால் குத்தினாலும் நமக்குள் இருக்கும் மிருகத்தை நம்மால் கொல்லமுடிவதில்லை”
எத்தனை வீசியெறிந்தாலும் திரும்ப வரும் வரி
எப்போது வேண்டுமானாலும் நீ வெளியேற முடிவெடுக்கலாம்
ஆனால் ஒருபோதும் போக மட்டும் முடியாது.
***
பின் இணைப்பு:
ஆங்கில வரிகளில் பார்க்க:
***
அருண்மொழி நங்கை's Blog
- அருண்மொழி நங்கை's profile
- 4 followers

