நான்கு பூங்கொத்துகள்

ஸ்கார்பரோ சந்தைக்கு போகிறீர்களா?
பார்ஸ்லி, சேஜ், ரோஸ்மேரி ,தைம் பூங்கொத்துகள்.
அங்கே வசிக்கும் ஒருத்திக்கு என்னை ஞாபகப்படுத்துங்கள்.
என் உயிரினும் மேலான காதலியாக இருந்தவள்.

(வனத்தின் அடர்பச்சை நிறத்தில்)
மெருகுடைய ஒரு காம்பிரிக் சட்டையை
எனக்காக தைக்கச் சொல்லுங்கள்.
பார்ஸ்லி, சேஜ், ரோஸ்மேரி ,தைம் பூங்கொத்துகள்,
(பனி போர்த்திய நிலத்தில் சிட்டுக்குருவியின் தடங்களை)
மடிப்புகளும், தையல் வேலைப்பாடுகளும் இல்லாத ஓர் ஆடையை
(மலைக் குழந்தைக்கு இரவாடைகள்…)
பிறகு எனது உண்மைக் காதலியாக ஆவாள்.
(போருக்கான அழைப்புமணியை உணராமல் உறங்கிக் கொண்டிருக்க…)
எனக்காக ஒரு ஏக்கர் நிலத்தை கண்டு வைக்க அவளிடம் சொல்லுங்கள்.
(இலை உதிர்ந்து மூடிய….)
பார்ஸ்லி, சேஜ், ரோஸ்மேரி ,தைம் பூங்கொத்துகள் ,
(அந்த கல்லறையை கழுவும் வெள்ளிக் கண்ணீர் இழைகள்… )
உப்பு நீருக்கும் கடலால் சூழப்பட்ட நிலத்துக்கும் நடுவிலே

(துப்பாக்கியை பளபளப்பாக துடைக்கின்றன…)
பிறகு எனது உண்மைக் காதலியாக ஆவாள்.
தோல் அரிவாளால் அறுவடை செய்யச் சொல்லுங்கள்.
(பளீர் சிவப்பு ராணுவங்கள் ஒளிகொண்டு மின்ன…)
பார்ஸ்லி, சேஜ், ரோஸ்மேரி ,தைம் பூங்கொத்துகள் ,
(தலைவர்கள் சிப்பாய்களை கொலைபுரிய ஆணையிட…)
அதை காட்டுப்பூவின் நாணல்களால் கட்டிவரச் சொல்லுங்கள்.
(காரணமெல்லாம் எப்போதோ மறந்துபோய் விட்டது…)
பிறகு எனது உண்மைக்காதலியாக ஆவாள்.
ஸ்கார்பரோ சந்தைக்கு போகிறீர்களா?
பார்ஸ்லி, சேஜ், ரோஸ்மேரி ,தைம் பூங்கொத்துகள் ,
அங்கே வசிக்கும் ஒருத்திக்கு என்னை ஞாபகப்படுத்துங்கள்.
என் உயிரினும் மேலான காதலியாக இருந்தவள்.

ஐரோப்பிய மத்திய காலகட்டத்தில், ஸ்காட்லாந்த். அயர்லாந்த் பகுதிகளில் ஸ்கார்பரோ என்னும் கடலால் சூழப்பட்ட சிறு நகரத்தில் நடைபெறும் ஒரு புகழ்பெற்ற சந்தையை பின்புலமாகக் கொண்ட ஒரு நாடோடிப் பாடலின் சாயலைக் கொண்டது இந்தப் பாடல். தன் இழந்த காதலை அல்லது ஒருபோதும் அடைய இயலாத காதலை, அதன் இனிமையை ஒருவன் உயிர்ப்புடன் மீட்டிக் கொள்வதை பற்றியது.

இப்பாடல் உண்மையில் ஒரு நாடோடிப் பாடலின் வரிகளிலிருந்து பெறப்பட்டதாகவும், பதினாறாம் நூற்றாண்டில் அங்கு வாழ்ந்த நாட்டுப்புற இசைக் கலைஞர்களால் [bards] பாடப் பட்டதாகவும் அறியப்படுகிறது. அங்கு பயணம் சென்ற சைமன் , கார்ஃபென்கல் என்னும் இசை இரட்டையர்கள் அங்கிருந்த புகழ்பெற்ற நாடோடிப் பாடகரான மார்ட்டின் கார்தி என்பவரிடம் இப்பாடலை கேட்டு, கற்று வந்து மேலும் அதை செறிவாக்கி புகழ்பெற்ற ’ஸ்கார்பரோ ஃபேர்’ பாடலாக்கினார்கள் என்றும் கூறப்படுகிறது.

பிற்பாடு1968 ல் வெளியிடப்பட்ட இப்பாடலால் அவர்கள் ஈட்டிய புகழையும், செல்வத்தையும் கண்டு அவர்கள் மீது மார்ட்டின் வழக்கு தொடுத்ததாகவும் பின்னர் அதை பேச்சு வார்த்தை மூலம் அவர்கள் சமரசம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது.

நாடோடிப் பாடல் வடிவமாக அங்கு நிலவிய இப்பாடல் (ballad) ஸ்காட்டிஷ் நாடோடிக் கதையைத் தழுவி எழுதப்பட்டது. எல்ஃபின் நைட் எனும் அதிமானுட இயல்புகளை உடைய இளைஞன் ஓர் அழகிய பெண்ணை கவர்ந்து செல்லமுயல்கிறான். அதற்கு அவள் உடன்படவில்லை.அவள் சில பணிகளை செய்தால் அவளைக் கவர்ந்து செல்ல மாட்டேன் என்கிறான் எல்ஃபின் நைட். பின்னவே முடியாத மெல்லிய இழைகளால் ஒரு சட்டை தைக்குமாறும், நடுக்கடலில் ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு, அதை தோலால் செய்யப்பட்ட அரிவாளை வைத்து அறுவடை செய்து, நாணல் போன்ற இழைகளால் கட்டி எடுத்துவருமாறும் பணிக்கிறான்.அதற்கு பதிலாக அவள் அவனிடம் சில செய்யவே முடியாத வேலைகளைச் செய்யுமாறு சொல்கிறாள்.

இது நம் ஊரின் தெம்மாங்கு அல்லது கண்ணி என்று சொல்லப்படும் வடிவத்தை ஒத்தது. கேள்வியாகவும் பதிலாகவும் மாறி மாறி பாடப்படுவது. நாமும் இது போல இளவரசியைக் கவர வரும் மந்திரவாதிக்கு அவன் ஒருபோதும் செய்யவே முடியாத சவால்களை அவள் அளிப்பது போன்ற கதைகளை நம் பாட்டிகளிடமிருந்து கேட்டிருப்போம்.

ஆனால் ’ஸ்கார்பரோ ஃபேரில்’ சைமன் அப்பாடலை மேலும் சிக்கலானதாக, நவீன மனம் கொள்ளும் சலனங்களை, அலைக்கழிப்புகளை வெளிக்காட்ட பயன்படுத்திக் கொள்வதே என்னை மிகவும் ஈர்க்கிறது. குறிப்பாக இதில் ஊடாடும் இரு இழைகள். ஒரு இழை கனவு, மற்றது நிஜம். போர் நிஜம், காதல் கைகூடாத கனவு. ஆனால் போருக்கு செல்லும் முன் உறக்கத்தில் இருக்கிறான் அவ்வீரன். இன்னும் போருக்கான அழைப்பு மணி ஒலிக்கவில்லை. அதற்குமுன் அவனுடைய உறக்கமும் விழிப்புமற்ற மயங்கிய சில கணங்களின் காட்சித் துணுக்குகள், நினைவுகள் என நான் விரித்துக் கொண்டேன்.

அவன் தன் உயிரினும் மேலான காதலியை நினைக்கும்போதே எப்போதோ அவன் கேட்டு தன்னுடைய நனவிலியில் பதிவான அந்த நாட்டுப் புறப் பாடலின் சாயலில் தன் உணர்வுகளைச் சொல்கிறான்.

ஒரு கணத்தில் அக்கால விழுமியமென அவர்கள் சொல்லும் போர், வீரம், வெற்றி எல்லாமே அபத்தக் கனவாக அவனுக்குத் தெரிகிறது. எப்படியோ தன் மரணத்தை அவன் முன்னுணர்கிறான். போர், மரணம் எனும் வெளிறிய நிஜத்தில் காதல் என்ற அடர்பச்சைக் கனவு மேலும் துலக்கமாகிறது அவனுக்கு.

அக்காதல் உணர்வாலேயே அவன் அத்தனை மென்மையான இழையில் அடர் வண்ணப் பச்சையில் சட்டை தைத்து தன் கல்லறையில் போர்த்த சொல்கிறான். காட்டின் பசுமையில் மூழ்கி இறக்கும் ஒரு ஆன்மாவின் கடைசிவிருப்பம் அதுவாகவே இருக்கும். இலைகள் உதிர்ந்து மட்கும் ஒரு கல்லறை. பனியின் வெண்பரப்பில் ஒரு சிட்டுக்குருவியின் காலடித்தடம் போன்ற காதலியின் நினைவு. மரணத்தின் அருகாமையில் அருமணியென ஒளிரும் காதல்.

ஒரு மென் திரையை விலக்கி ஊடுருவுவது போல ஒற்றை கிடாரின் வருடும் இசை முதலில் ஒலிக்கிறது. அதைத் தொடர்ந்து சைமன்-கார்ஃபன்கல் இரட்டையர்களின் தணிந்த அழகிய குரல்கள் மிக அழகிய மெட்டில், பாவ வெளிப்பாட்டுடன் ஒலிக்கிறது. போதமனமும், அபோத மனமும் மயங்கும் வரிகளும், அதற்கு பின்னணியாக ஒலிக்கும் கனவுத் தன்மை வாய்ந்த, நம்மோடு அந்தரங்கமாக உரையாடும் மென்மையான கிடார் இசையும் ஒத்திசைவோடு இயைகின்றன. நம்மால் சரியாக பற்ற முடியாத ஒரு உணர்வை அது இசை வழியே கடத்தி விடுகிறது.

பதினாறாம் நூற்றாண்டிலிருந்து மாறி, மாறி பல வடிவங்களில் இந்தப்பாடல் கைமாறி வந்தபோதும் இப்போதும் கொண்டுள்ள அந்த காதலுணர்வின் எளிமை, தூய்மை, சமர்ப்பணத்தன்மை ஆகியவை ஒரு துடிக்கும் இதயத்தின் ஒருபக்க காதலின் வெளிப்பாடாக உள்ளன.

போரும், காதலும். இவை இரண்டும் அக்கால சமூகத்தின் இன்றியமையாத நிகழ்வுகள். இதிலுள்ள கதைத்தன்மையும் ,ஒருவகை உரையாடல்தன்மையும் இப்பாடல் அதன் ஆதிரூபமான நாடோடிப் பாடலின் ஆன்மாவைக் கொண்டிருப்பதற்கான சான்றுகள். உரத்த இசைக்கோவைகள் அதிகமாக வந்து கொண்டிருந்த அக்காலகட்டத்தில் இப்பாடல் ஒரு புதுமையான மாற்று. இவ்வகைமைக்கும் அங்கு முன்னோடிகள் இருக்கலாம்.

ஐரோப்பிய மரபில் ஒவ்வொரு பூவுக்கும் ஒரு உணர்வை ஏற்றும் சொல்முறை உண்டு. ஒரு உணர்வின் குறியீடாக ஒரு பூ. நம் மரபில் ஒவ்வொரு திணைக்கும் ஒரு பூவினை குறிப்பது போல. இதில் வரும் நான்கு பூக்களுக்குமே அவ்வாறான உணர்வுத் தொடர்பு உள்ளது. ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டில் வரும் ஒஃபீலியா ஒரு கள்ளமற்ற பெண்.  அவள் தந்தையை ஹாம்லெட் கொன்றுவிடுவான். அப்போது  மனப் பிறழ்வு அடைந்த நிலையில் அவள் ஒரு மன்றத்தின் முன் வந்து  சொல்லும் வரிகளில் பல பூக்கள் இடம்பெறும். புலம்பலாக வரும் ஓலம் அது. ஏன் அதைச் சொல்கிறாள் என்று படிப்பவர்கள் பலரும் வியக்கும் ஒரு இடம். ஆனால் அவர்கள் நனவிலியில் அது அப்படி பதிவாகியிருக்கிறது. இது நான் கேட்ட ஒரு தகவல் தான். 

பார்ஸ்லி சுகத்தையும், சேஜ் வலிமையையும், ரோஸ்மேரி காதலையும், தைம் தைரியத்தையும் குறிப்பதற்கான பூங்கொத்துகள். இந்நான்குமே கல்லறையில் வைப்பதற்கான பூக்கள் எனும்போது இவ்வரிகள் துணுக்குறச் செய்கின்றன. மானுடனின் எக்காலத்திற்குமான காதலெனும் விழைவும், போரின் அபத்தமும் மரணமும் அருகருகே வைக்கப்பட்ட இப்பாடல் என்றும் என் மனதிற்கினியது. காட்டின் ஆன்மாவிலிருந்து வந்த ஒரு மெல்லிய முணுமுணுப்பு இது.

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2022 11:31
No comments have been added yet.


அருண்மொழி நங்கை's Blog

அருண்மொழி நங்கை
அருண்மொழி நங்கை isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அருண்மொழி நங்கை's blog with rss.