எரிக் க்ளாப்டன்: அத்தனை மேலே அத்தனை கீழே

எரிக் பாட்ரிக் க்ளாப்டன் [Eric Patrick Clapton]

காதலி ஒரு விருந்துக்கு செல்ல தயாராகிறாள். காதலன் காத்திருக்கிறான்.  குறுகிய அக்கால அவகாசத்தில் அவன் எழுதிய பாடல் பெரும் புகழ்பெறுகிறது. மிக, மிக எளிமையான வரிகள். கணவன் தன் மனைவியிடம் ஆத்மார்த்தமாக பேசும் வரிகள் போன்றவை. அப்பாடல்தான்  ’வொண்டர்ஃபுல் டுநைட்”. மென் ராக் இசை வகைமையை சார்ந்தது. அதை எழுதி பாடியவர் எரிக் பாட்ரிக் க்ளாப்டன் [Eric Patrick Clapton]. உலகின் புகழ்பெற்ற ராக்-ப்ளூஸ் இசை நட்சத்திரங்களில் ஒருவர். அவருடைய கிடார் இசைக்காகவும், குரலுக்காகவும் அறியப்பட்டவர்.

ஒரு பின்மாலை,

அவள் எந்த ஆடையை அணிவது என்ற குழப்பத்திலிருக்கிறாள்.

தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள்..

தன் பொன்னிறக் கூந்தலை அழகுபடுத்துகிறாள்.

’’நான் நன்றாக இருக்கிறேனா?’’ அவள் கேட்கிறாள்.

’’மிக அழகாக இருக்கிறாய் ,என் அன்பே’’ என்கிறேன்.

நாங்கள் விருந்துக்கு செல்கிறோம்.

அனைவரின் பார்வையும் என் இனியவளை மையம் கொண்டிருக்கின்றன.

அவள் கேட்கிறாள்.’’ நீ நன்றாக இருக்கிறாய்தானே?’’

’’மிகவும் மகிழ்வோடு இருக்கிறேன்’’ என்கிறேன் நான்.

அதற்கு காரணம் ’உன் கண்களில் நான் காணும் காதலின் ஒளி’

’இதைவிட அதிசயம் என்னவென்றால் நான் உன்னை எந்த அளவிற்கு காதலிக்கிறேன் என்பதை நீ உணர்வதில்லை’.

வீடு திரும்பும் நேரமாகிவிட்டது. தலை கனத்து வலிக்கிறது எனக்கு.

கார் சாவியை உன்னிடம் தருகிறேன். வீடு திரும்பி என்னை படுக்க வைக்கிறாய்.

படுக்கைவிளக்கை அணைக்கும் முன் உன்னிடம் சொல்கிறேன்.

என் அன்பே, நீ இன்றிரவு அவ்வளவு அழகாக இருந்தாய்.

என் கண்ணே, நீ இன்றிரவு அவ்வளவு அழகாக இருந்தாய்.

எரிக் க்ளாப்டன் பாடிய இப்பாடலின் அழகிய மெட்டும், இசையும் , இலகுவான வரிகளும் கேட்கும் போது நம் மெல்லுணர்வைத் தூண்டுகின்றன.  கணவனோ, காதலனோ ஆண்  என்பவன் சொல்லிக் கொண்டே இருக்கிறான் இடைவிடாமல் அவள் அழகை, அவள் மேலுள்ள காதலை. ஒரு கட்டத்தில் அவள் அதை பொருட்படுத்தவில்லையெனினும், அதன் உண்மையான மதிப்பை உணரவில்லையென்றாலும் சொல்லிக்கொண்டே இருப்பான். தனக்குத் தானே. கடவுள் தன் பக்தியை ஏற்கிறாரா, இல்லையா என்று அறியாமல் தன்னிச்சையாக சரணடையும் பக்தன் போல.

இப்பாடலில் ஒற்றை இழைபோல் வரும் கிடார் இசை முதலில் நம்மிடம் உரையாடுகிறது. வரிகளும் இசையும் மிகவும் ஒத்திசையும் இப்பாடலின் கிடார் பகுதி எப்பொழுதும் என்னை வசீகரிக்கும் ஒன்று.

பாடலின் கடைசியில் வரும் ஹார்மனீஸ் எனப்படும் ஹம்மிங் பாடியவரின் குரலும், பாடும் முறையும் இப்பாடலுக்கு கூடுதல் அழகை சேர்க்கின்றன.

இந்தப் பாடலில் மிக எளிமையான, மிகமிக இனிமையான உன்னதம் ஒன்று உள்ளது. அன்றாட வாழ்க்கையின் உன்னதம் என்று அதைச் சொல்லலாம். சிறிய வெள்ளைப்பூக்களுக்கு ஓர் அழகு உண்டல்லவா, அந்த அழகு.

ஆனால் அந்த உச்சத்திற்குச் சென்ற எரிக் க்லாப்டன் அதேவிசையில் இருண்ட பாதாளங்களுக்குச் சரிவதையும் நாம் காண்கிறோம். இரண்டும் ஒருவரா என்றே நமக்கு தோன்றுமளவுக்கு அந்த முரண்பாடு இருக்கிறது.எரிக் லாப்டன் இந்த அழகிய வாழ்வுத்தருணத்தின் உச்சத்திற்கு இளமையில் அவர் அடைந்த ஆழ்ந்த மனச்சோர்வில் இருந்து ஏறி வந்து சேர்ந்திருக்கலாம்.

அவர் 1945 ல் இங்கிலாந்தில் சர்ரே என்னும் இடத்தில் பிறந்தார். பதிமூன்று வயது முதல் அவர் பாட்டி, தாத்தாவிடம் வளர்ந்தார். அவர் அன்னை வேறொருவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதால் இளமையிலேயே தாயுடன் வாழும் வாய்ப்பு அமையவில்லை.

பதிமூன்று வயதில் எரிக்குக்கு ஒரு அக்கொஸ்டிக் கிடார் பரிசாக கிடைத்தது.  அதில் மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். ப்ளூஸ் இசை அவரை மிகவும் ஈர்த்தது. சிறிய சிறிய நிகழ்ச்சிகளை நடத்தி பின்னர் தன் பத்தொன்பதாவது வயதிலேயே லண்டன் ராயல் ஆல்பெர்ட் ஹாலில் தன் இசைநிகழ்வை நடத்தினார்.

லண்டன் ராயல் ஹாலில் நடத்துவது என்பது பெரிய அங்கீகாரம். இருநூறு முறை அவர் தன் இசை நிகழ்ச்ச்சிகளை அந்த ஹாலில் நடத்தியுள்ளார். பல இசைக்குழுக்களில் மாறி மாறி இசை நிகழ்ச்சிகள் நிகழ்த்தினார். முதலில் யார்ட் பேர்ட்ஸ், ப்ளுஸ்பிரேக்கர்ஸ், கிரீம், ராக் ப்ளூஸ், இப்படி.. பதினெட்டு  முறை கிராமி அவார்ட் பெற்றுள்ளார். உலகின் தலைசிறந்த நூறு கிடார் இசைக்கலைஞர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பெறுபவர் என்று ரோலிங் ஸ்டோன் இவரை பெருமைப் படுத்தியுள்ளது. டைம் பத்திரிகை உலகின் தலைசிறந்த பத்து எலெக்ட்ரிக் கிடார் கலைஞர்களின் வரிசையில் இவரைக் குறிப்பிடுகிறது. இதுவரை இவருடைய 280 மில்லியன் ரெக்கார்டுகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன.

அந்த உச்சத்தில் இருந்து எரிக் பாதாளத்தை நோக்கி விழுந்தார். அவரே குப்புறப் பாய்ந்தார் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். தீவிர ஹெராயின் போதை அடிமையாக மாறினார். அதீத குடிப் பழக்கமும் ஆட்கொண்டது. 2017 வரை இசை நிகழ்ச்சிகள் செய்து கொண்டுதான் இருந்தார். இப்போது நரம்பு சம்பந்தமான நோய் தாக்கி அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த இருண்ட ஆழங்களில் அவர் முந்தைய உன்னதங்களுக்காக துழாவிக்கொண்டே இருந்தார். சில பாடல்களில் அந்த தவிப்பும் கண்டடைதலும் உள்ளது.

1970 ல் வெளிவந்து மிகப் பெரும் வெற்றியடைந்த ஒரு ஆல்பம் லைலா [layla] . பதினெட்டு பாடல்கள் அடங்கிய அந்த தொகுப்பு இங்கிலாந்து- அமெரிக்க டெரிக்- டொமினோஸ் பாண்ட்டின் பாடலாக எரிக் லாப்டனின் பெரும் சாதனையாக  கருதப்பட்டது. 

ஏழாம் நூற்றாண்டின் அரேபியக் கதைகளில் ஒன்றான லைலா- மஜ்னு கதையை பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் நிசாமி கஞ்சாவி என்ற கவிஞர் நூலாக எழுதினார். அதன் ஒரு வடிவம் எரிக் லாப்டனுக்கு படிக்கக் கிடைத்தது. மஜ்னு, லைலா என்ற அழகியிடம் மனதைப் பறிகொடுத்து அவளை அடைய முடியாமல் பித்தனாகும் அக்கதை அவர் மனதை உருக்கியது.

அக்கதையால் தூண்டப்பட்டு அந்த ஆல்பத்துக்கு லைலா[Layla] என்ற பெயரை சூட்டினார். ஒருதலைக்காதலால் ஒரு ஆண் தன் காதலியிடம்  இறைஞ்சுவது போன்ற அப்பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதில் பனிரெண்டு ட்ராக்கில் கிட்டார் இசைக்கப் படுகிறது. அதை லைவ் எனப்படும் நேரடி ஒலிபரப்பில் இசைப்பது கடினம் என்கிறார் எரிக். ஏழு ட்ராக்கை டூயூவன் ஆல்மன் என்ற புகழ்பெற்ற கிடார் கலைஞர் இசைக்க , மீதி ட்ராக்கை எரிக் இசைக்கிறார். பியானோ பகுதியை கார்டன் வாசிக்கிறார். அப்பாடல் பிற்பாடு மார்ட்டின் ஸ்கார்சேசியின் குட் ஃபெல்லாஸ் [Good Fellas] என்ற படத்தில் இடம் பெற்றது.

பேட்டி பாய்ட், ஜார்ஜ் ஹாரிசன்

அச்சமயம் எரிக், பேட்டி பாய்ட் [Pattie Boyd] என்னும் மாடல் அழகியிடம் ஒரு தலையாக காதல் கொண்டிருந்தார். இளம் வயது பேட்டிய் பார்ப்பதற்கு பார்பி டால் போல மிக அழகாக இருந்தார். ஆனால் துரதிருஷ்ட வசமாக பேட்டி எரிக்கின் நண்பரும், சிஷ்யனுமான பீட்டில்ஸ் குழுவின் ஜார்ஜ் ஹாரிசனின் மனைவி. எரிக் அவள் மீது காதல் பித்தின் உச்சத்தில் இருந்தார். நண்பனிடமே ’உன் மனைவியை நான் காதலிக்கிறேன்’ என்றும் தெரிவிக்கிறார். அதற்கு ஜார்ஜ் ஹாரிசன் “உன் விருப்பம்போல் செய். எனக்கு கவலையில்லை” என்கிறார்.

1977 ல் ஜார்ஜ் ஹாரிசன், பேட்டி இருவரும் மணமுறிவு பெறுகின்றனர். 1977 ல் இருந்து பேட்டி, எரிக் க்ளாப்டன் இருவரும் இணைந்து வாழ்ந்தனர். 1979 ல் மணம் புரிந்து கொண்டு பத்து வருடம் சேர்ந்து வாழ்ந்தனர். ஒரு சிறு விலக்கத்துக்குப் பிறகு ஜார்ஜ் ஹாரிசன் எரிக்கின் நண்பராக கடைசிவரை நீடித்தார். அவர்களின் திருமணத்தில் ஜார்ஜ் கலந்து கொண்டார். பேட்டியை மணம் புரிந்தவுடன் போதைமருந்து பழக்கத்திலிருந்து விடுபட்டார் எரிக். ஆனால் குடியை கடைசிவரை விடவில்லை. 1989 ல் விவாகரத்து. இருவருக்கும் குழந்தையில்லை. குடித்துவிட்டு வந்து, போதையில் தான் செய்த தவறுகளை பிறகு ஒரு பத்திரிகை பேட்டியில் பட்டியலிட்டார் எரிக்.

பேட்டி மீதுள்ள காதலின் கொந்தளிப்பில் அவர் 1970 ல் ஜிம் கார்டனுடன் சேர்ந்து எழுதிய பாடல்தான் லைலா.  எரிக் தன் சுயசரிதையில் “நான் பேட்டியின் மேல் பித்தாக இருந்தேன். ஆனால் அவள் ஜார்ஜை  விட்டு என்னுடன் வருவதற்கு எந்த நியாயமும் இல்லை. நான் எப்படியெல்லாம் இருக்க விழைந்தோனோ அதுபோல் எல்லா விதத்திலும் அவன் சிறந்தவனாக இருந்தான்’’ என்று எழுதுகிறார்.

எரிக், பேட்டி பாய்ட்

பேட்டி பிற்பாடு தன் நினைவுக் குறிப்புகளில் “எரிக்கின் என் மீதான காதலை நான் அறிந்திருந்தேன். அதைப் பொருட்படுத்தாது இருந்தேன். ஒரு சந்திப்பில் நான், எரிக், ஜார்ஜ் ஹாரிசன் மூவரும் இருந்தபோது அப்போதுதான் பதிவு செய்யப்பட்ட புதிய பாடலான ’லைலா’ வை ரெகார்டரில் இட்டு எரிக் எங்களை கேட்க செய்தான். பாடலை மூன்றுமுறை ஒலிக்கவிட்டு என் முகத்தை கூர்ந்து நோக்கியவாறு இருந்தான். அது நிபந்தனையற்ற காதலைத் தெரிவிக்கும் ஒரு மன்றாட்டு.’’

’’எனக்கு முதலில் வந்த எண்ணம் ’கடவுளே, இது என்னைப் பற்றியதென்று உலகமே அறியும் என்பதுதான். ஆனால் நான் அதில் உள்ள பெருங்காதலினாலும், அப்பாடலின் வல்லமையாலும் கவரப்பட்டேன். பிறகு என் மனதை என்னால் பற்றி நிறுத்த முடியவில்லை’’ என்று எழுதுகிறார்.

’லைலா’ வுக்கு பிறகு வந்த ’வொண்டர்ஃபுல் டுநைட்’  தான் கடைசி காதல் பாடல். எரிக் எங்கள் ஆரம்ப நாட்களில் இனிமையானவனாக இருந்தான். பிறகு வந்த நாட்களில், எனக்கு இக்காதல் பாடல்களை கேட்கும் சந்தர்ப்பங்கள் எல்லாமே இதயத்தை கிழிப்பதாக இருந்தது.

நான் எரிக்கின் மீது அவ்வளவு காதலுடன் இருந்த நாட்களில் அவன் மனநிலை உச்சங்களும், தன்னைத் தானே அழித்து கொள்வது போன்ற தாழ்நிலைகளுக்கு அவன் செல்வதும் என்னை அவனிடம் திரும்பத் திரும்ப மன்றாட வைத்தன. ஒரு கட்டத்தில் ஜார்ஜை பிரிந்தது தவறோ என்று கூட நினைத்தேன்.

இத்தாலிய மாடல் டெல் சாண்டொ, எரிக் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்ததை நான் அறிந்தபோது ’’நான் மன நலம் பாதிக்கப்படுமளவு நோயுற்றேன். என்னால் சரியாக மூச்சுவிட முடியாத அளவு என் நெஞ்சில் எடை ஏறியிருந்தது. தேவதைக் கதைகளை நம்பும் குழந்தைபோல அன்பு சாஸ்வதமானது என்று நினைக்கிறோம். அதன்மீது அடி விழும்போது எல்லாம் விளங்கிவிடுகிறது. ஆண்கள் உணர்ச்சியால் வீழ்வதில்லை. அவர்கள் பிடித்து நிற்கிறார்கள். பெண்கள் உணர்ச்சியால் அடித்துசெல்லப் படுகிறார்கள்” என்று எழுதினார் பேட்டி.

இருவரின் திருமண உறவின் போதே எரிக் வேறு ஒரு மணமான பெண்ணுடன் உறவில் இருந்தார். அவளுக்கு இவரில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதை பேட்டியிடம் மறைத்து விட்டார். பிறகு  இத்தாலிய மாடல் டெல் சாண்டோவுடன் சேர்ந்து வாழ்ந்ததில் அவர்களுக்கு 1986 ல் கானர் என்ற  ஆண் குழந்தை பிறந்தது.

மனம் வெறுத்த பின்னரே பேட்டி விவாகரத்து முடிவை எடுத்தார். லைலா ஆல்பத்தில் எவருக்காக எரிக் தீப்பற்றி எரிவதுபோல தன் தாபத்தையும் சமர்ப்பணத்தையும் வெளிப்படுத்தினாரோ அந்தப்பெண். அவருடைய லைலா. எது எரிக்கை அலைக்கழித்தது? வெறும் காமவெறியா? அடிப்படை இச்சைகள் மட்டும்தானா?  

கானர் க்ளாப்டன், எரிக் க்ளாப்டன்

1991ல் அமெரிக்க பயணம் ஒன்றில் நியூ யார்க் மன்ஹாட்டனின் அப்பார்ட்மெண்ட்டின் 53 வது மாடி ஜன்னலில் இருந்து எரிக்கின் ஐந்து வயது ஒரே ஆண் குழந்தை கானர் தவறி விழுந்து இறந்தான். அது எரிக்கை மிகக் கடுமையாக பாதித்தது. ஒருவருடம் இசைநிகழ்ச்சி எதுவுமே செய்யாமல் இருந்தார். பிறகு 1992 ல் அவர் மகன் நினைவாக அவர் எழுதிய பாடல் ’டியர்ஸ் இன் ஹெவன்’ [Tears in Heaven] மிகப் பெரும் புகழை அடைந்தது.

நிவர்த்தியேயில்லாமல் விதியின் கரங்களில் தலை வைத்து மன்றாடும், வேறு உலகத்தில் மகனை பார்க்க விழையும் ஒரு தந்தையின் வலி அப்பாடல் முழுவதும் தெரியும்.

நான் உன்ன சொர்க்கத்துல

பார்த்தா

என் பேரு உனக்கு

தெரிஞ்சிருக்குமா?

நான் உன்ன சொர்க்கத்துல

பார்த்தா

முன்ன போல இருக்குமா?

நான் திடமா இருக்கணும்.

உடையக் கூடாது

ஏன்னா எனக்குத் தெரியும்

எனக்கு சொர்க்கத்துல இடம்

இல்லன்னு. 

நான் உன்ன சொர்க்கத்துல

பார்த்தா

என் கைய பிடிச்சுக்குவியா?

நான் உன்ன சொர்க்கத்துல

பார்த்தா

எனக்கு எழுந்து நிக்க உதவி

பண்ணுவியா?

பகலோ, இரவோ

என் வழிய நான்

கண்டுபிடிச்சுகுறேன்.

ஏன்னா இங்க சொர்க்கத்துல

என்னால இருக்கமுடியாதுன்னு தெரியும்.

காலம் நம்மள வீழ்த்தும்.

காலம் நம்மள மண்டியிடச் செய்யும்.

காலம் இதயத்த நொறுக்கும்.

ப்ளீஸ்! ப்ளீஸ்! ன்னு கதற வைக்கும்.

கதவுக்கு அந்தப்பக்கம்

கண்டிப்பா சாந்தி இருக்கு.

எனக்குத் தெரியும்.

நான் உன்ன சொர்க்கத்துல

பார்த்தா

என் பேரு உனக்கு

தெரிஞ்சிருக்குமா?

நான் திடமா இருக்கணும்.

உடையக் கூடாது.

ஏன்னா எனக்குத் தெரியும்

எனக்கு சொர்க்கத்துல இடம்

இல்லன்னு.

எரிக் அலைந்துகொண்டே இருந்தார். அவருடைய ஐம்பத்தி மூன்றாவது வயதில் 22 வயது பெண்ணை மணந்தார். மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. மிக வசதியாகத் தான் வாழ்கிறார். இங்கிலாந்தில் இத்தாலிய முறையில் கட்டப் பட்ட பல மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள வில்லாவில் வாழ்கிறார். அவர் ஒரு கார் பிரியர். விலை உயர்ந்த ஃபெராரி கார்களே அவர் விருப்பம்.

வீழ்வதென்றால் கலைஞன் எந்த ஆழத்திலும் சென்றமைய முடியும். எரிக் லாப்டனின் அரசியல் கருத்துக்கள் 1976 ல் இங்கிலாந்தில் சர்ச்சையை கிளப்பின. அவர் ஒரு தீவிர வலதுசாரி. இனவெறிக் கொள்கை உள்ளவர். கறுப்பர்களையும் பிற இன மக்களையும் அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பவேண்டும் என்று குறிப்பிடுபவர். Keep Britain white என்று வெளிப்படையாக தெரிவிப்பவர்.

எரிக் ஒரு ஹாலில் இசை நிகழ்ச்சி நடத்தும்போது “இங்கு யாரெல்லாம் வெள்ளையர் அல்லாதோர் இருக்கிறீர்கள்? கையை உயர்த்துங்கள். நீங்கள் இங்கு வேண்டாம். ஹாலை விட்டு வெளியேறுங்கள். அப்படியே நாட்டை விட்டும் வெளியேறி விடுங்கள். நாம் நம்முடைய எனோச் பாவெல்லை ஆதரிப்போம். [எனோச் இனவெறி கொள்கை கொண்ட அப்போதைய வலதுசாரி அரசியல்வாதி]. அவர் சொல்வதுதான் சரி. எல்லா கறுப்பர்களையும் அனுப்பிவிட்டு நம் நாட்டை தூய வெள்ளையாக்குவோம். நம் நாடு கறுப்பர்களின் குடியேற்ற நாடாவதை தடுத்து நிறுத்த வேண்டும். நான் முன்பு போதையடிமையாக இருந்தேன். இப்போது இந்த இனவெறியென்னும் போதைக்குள் இருக்கிறேன். இது அதைவிட கடுமையானது. வீரியம் மிக்கது. நாம் இந்த கேடுகெட்ட ஜமாய்க்கர்களையும், அராபியர்களையும் , கறுப்பர்களையும் வெளியேற்றுவோம்’’ என்று வெளிப்படையாக அறிவித்தார்.

அக்கூற்று சர்ச்சையைக் கிளப்பி வெளிப்படையாக மன்னிப்பு கேட்டார் எரிக். ’’எனக்கு அரசியல் அவ்வளவாகத் தெரியாது. அந்த இரவில் நான் உளறியதாகவே அதை நீங்கள் கணக்கில் கொள்ளவேண்டும்’’ என்றார். தனிப்பட்ட முறையில் பி.பி.கிங் போன்ற ஆப்பிரிக்க- அமெரிக்க பாடகர் மேலும், அந்த இசைக்கலைஞர்கள் மேலும் மிகுந்த நட்பும் மரியாதையும் உள்ளவர்.  

எரிக் பல போதை மறுவாழ்வு நிலையங்களுக்கும், பல அமைப்புகளுக்கும் நிதியுதவி செய்திருக்கிறார். அவரது புகழ்பெற்ற ஆல்பங்கள் Sunshine of your love, While my guitar gently weep, Let it be, Can’t find my way home, Have you ever loved a woman?, Layla, Wonderful tonight, No reason to cry . சொல்லிக்கொண்டே போகலாம். அவர் அப்போதைய ரோலிங் ஸ்டோன் முதல் எல்லா பாண்ட்களின் புகழ்பெற்ற அனைத்து இசைக் கலைஞர்களுடனும் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். பாப் மார்லி, டுயூவன் ஆல்மன், ஜான் லெனான், பீ.பீ. கிங், பால் மெக்கார்தினி, பாப் டிலன் இன்னும் பலர். தற்போது இங்கிலாந்தில் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு வாழ்ந்துவருகிறார்.

’’நான் என்  மனம் என்னைக் கைவிடும் தருணங்களில் தற்கொலையைப் பற்றி யோசித்திருக்கிறேன். நான் அதைச் செய்யாததற்கு ஒரே காரணம் நான் இறந்துவிட்டால் என்னால் குடிக்கமுடியாது என்பது மட்டும்தான். நான் வாழ்வதற்கு ஒரே தகுதியான காரணமும் அதுதான். என்னை மீட்பதற்கு மக்கள் முயற்சிப்பது எனக்கு மிக கொடுமையாக இருக்கிறது. நான் குடித்து, குடித்து, குடித்து இருக்கும் ஒரு கட்டத்தில் என்னை அப்பிடியே தூக்கிசெல்கிறார்கள் மருத்துவமனைக்கு’’. இவ்வாறு தன் சுயசரிதையில் எழுதுகிறார் எரிக்.

தனக்கென ஒரு இலக்கோ பாதையோ அற்ற எடையே இல்லாத சருகு லாப்டன். இருண்ட உலகின் எல்லா காற்றுகளும் அவரை சுழற்றி அடித்தன. அவ்வப்போது உன்னதங்களிலும் சென்று நின்றிருந்தார். எவ்வளவு மேலே சென்றாரோ அவ்வளவு கீழேயும் சென்றார். உடலோ அறிவோ இல்லாத வெறும் உள்ளம் அவர் என்று தோன்றுவதுண்டு.

***

பின் இணைப்பு:

எரிக் தன் எழுபதாவது வயதில் ராயல் அல்பர்ட் ஹாலில் நடத்திய இசை நிகழ்ச்சி

***

பின் குறிப்பு

நண்பர்களுக்கு,

இந்த வலைப் பக்கத்தை நான் தொடங்கி சரியாக ஓராண்டாகிறது. இன்று முதல் பதிவுகள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வலையேற்றப்படும். மாத முதல் தேதியும், பதினைந்தாம் தேதியும். தொடர்ந்து வாசித்த, கருத்துக்கள் தெரிவித்த, கடிதங்கள் இட்ட அனைத்து வாசக நண்பர்களுக்கும் என் நன்றி.

***

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2022 11:31
No comments have been added yet.


அருண்மொழி நங்கை's Blog

அருண்மொழி நங்கை
அருண்மொழி நங்கை isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அருண்மொழி நங்கை's blog with rss.