வசீகர அரசு இயந்திரத்தின் வருகை!

எவ்வாறு தேசியம், கடவுள் போன்றவை கற்பிதங்களோ அதே போல, மிகத் தூய அதிகாரம் அல்லது வசீகர அரசு என்பதும் கற்பிதம்.  பளபளப்பான இயந்திரத்தைப் போல, அது கவர்ச்சிகரமானது.  ஆயுத பூஜையின் போது சாற்றப்படும் சந்தன குங்கும மாலைகள் சூடிய இயந்திரம் என்று சொன்னால் விளங்கும்.  





அரசு இயந்திரத்திற்கு கவர்ச்சியேற்றும் போது என்ன நடக்கிறது?   இயந்திரங்களுக்குப் பொருந்தாத மனிதத்தன்மையை ஏற்றுகிறோம் என்று அர்த்தம்.  இந்தப் பொருந்தாமையே கவர்ச்சியாக வெளிப்படுகிறது. 


இதற்கொரு எதிர் உதாரணமும் உண்டு -  மனிதர்கள் இயந்திரத்தைப் போல செயல்படும் பொழுதும் கவர்ச்சி ஏற்படுகிறது.  இதன், வெகுஜன உதாரணம், போர்னோகிராபி உடல்கள், சர்வாதிகாரிகள்.  தமிழ் உதாரணங்களும் உண்டு - எம்ஜியாரும் ஜெயலலிதாவும். சினிமா கவர்ச்சி மிகுந்தவர்கள்; ஆனால், இறுதி வரை  இயந்திரந்தைப் போலவே வாழ்ந்தனர் - ரத்த பந்தங்கள் எதுவுமின்றி.  எம்ஜியாரின் ‘ரத்தத்தின் ரத்தங்களே’ என்ற வாக்கியம் இதன் ஆழ்மன நீட்சி.  கலைஞரும், கவர்ச்சியானவர்; அவரது எழுத்தும் பேச்சும் கவர்ச்சியானவை.  அவரும் நிர்வாகத்தில் தன்னை இயந்திரமாகவே காட்டிக் கொண்டார் - ராஜ தந்திரி / சாணக்கியர். 


மனிதர்கள் இயந்திரமாகுதல் போல, இயந்திரங்களும் மனிதராக முடியும்.  அறிவியல் புனைகதைகள் இதைக் கொஞ்சம் பேசியிருக்கின்றன.  ‘மனித உணர்வுகள் ஊற்றெடுக்கும் இயந்திரங்கள்’ என்பது இவற்றின் அடிநாதம்.  காதலே இக்கதைகளின் பிரதான உணர்வு.  


நிஜத்தில், அரசு இயந்திரம் தன்னை மனிதத்தன்மையோடு வெளிப்படுத்த முனையும் போது, காதல் பெரிதும் உதவுவது இல்லை. நேர்மை, தூய்மை, ஒழுங்கு என்று மீமனித குணங்களை வரிந்து கொள்ளத் தொடங்குகிறது. இன்றைக்கு தமிழக அரசு நடந்து கொள்வதைப் போல.


இதன் காரணமாகவே, அரசு இயந்திரம் மனிதத்தன்மையோடு நடந்து கொள்ள ஆரம்பிக்கும் பொழுது, யாரும் அறியாமல் அதற்கொரு மாமனிதத் தன்மை வந்து சேர்கிறது.  இப்படி நடப்பதில் ஆச்சரியமும் இல்லை.  


மனிதத்தன்மை என்பது ஏராளமான தவறுகளுடன் கூடிய உணர்வுகள் என்பதை மறந்து விடக்கூடாது.  சர்வசாதாரணமாய் தவறுகள் நிகழவும், மன்னிக்கவும் கூடுகிற காதலை, அறிவியல் கதைகள் பயன்படுத்திக் கொள்வது இதனால் மட்டுமே.  அப்படி இல்லாதபட்சத்தில், இரக்கம், நியாயம் போன்ற மனிதவுணர்வுகளை எய்துகிற இயந்திரம் அறிவியல் கதைகளில் கடவுளாகவே பார்க்கப்படுகிறது.  


முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் அரசு இயந்திரத்தை மீவியல்புடையதாகக் கட்டமைக்கத் தொடங்கியிருக்கின்றன.  பளபளப்பான ராணுவ தளவாடங்களின் ஊர்வலம் போல.  ஆனால், இயந்திரங்கள் கொண்டாடப்படுவது ஆபத்தையே விளைவிக்கும் என்று தோன்றுகிறது.  ஏனெனில் அவற்றிற்கு உருவாக்கப்படும் வசீகரம், உள்ளீடற்ற வசீகரம்.  சர்வாதிகாரிகள் உள்ளீடற்ற வசீகரத்தையே விரும்புகிறார்கள்.  அப்படி உருவான உள்ளீடற்ற வசீகரத்திற்காகவே அவர்கள் காத்திருக்கவும் செய்கிறார்கள்.  


திராவிட முன்னேற்ற கழக ஆட்சி உருவாக்கி வரும் ‘வசீகர அரசு இயந்திரம்’ என்ற யோசனையை நிறைய பேர் விரும்புகிறோம்.  ஆண் குழந்தைகள் இரும்பு பொம்மைகளில் மயங்குவது போல.  ஆனால், அப்படியொன்று திரள்வது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.       


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 11, 2021 20:36
No comments have been added yet.


T. Dharmaraj's Blog

T. Dharmaraj
T. Dharmaraj isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow T. Dharmaraj's blog with rss.