அமைதிப் படை: அழிவின் நாட்களும்… அழியா ஞாபகமும்….
ஜெயமோகனுக்குச் சமர்ப்பணம்
இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அது நிகழ்ந்தது. இன்றுபோல உலகம் இவ்வளவு கிராமமாகச் சுருங்கியிருக்கவில்லை. இத்தனை நாடுகள் மூளைக்குள் குந்தியிருக்கவுமில்லை. அவற்றின் அரசியல் முகமோ நிறமோ அறியாதவளாக நானிருந்தேன். யாழ்.பல்கலைக்கழக விளையாட்டு மைதானத் திடலில் அந்த வானூர்தி ஒரு மாயப்பறவையின் வசீகரத்தோடு தரையிறங்கியது. அதன் விசிறி சடசடவென்று பேரோசை எழுப்பியபடி சுற்றித் தணிய, புற்கள் நளினமாக மடங்கித் தலைசாய்த்திருக்க, ‘நியாயத்தின் திருவுரு’க்களாக அவர்கள் இறங்கிவந்த அந்தக் காட்சியை மாணவர்களாகிய நாங்கள் முண்டியடித்துக்கொண்டு பார்த்தோம். ‘இதோ எமது பாதுகாவலர்கள்’என்று மனம் குதியிட்டது. அந்தப் பாதுகாவலர்களின் துப்பாக்கிகள், சில மாதங்களிலேயே எங்களுக்கு எதிராகத் திரும்பவிருக்கின்றன என்று, அப்போது யாராவது எதிர்வு கூறியிருந்தால் எள்ளி நகையாடியிருப்போம்.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானதைத் தொடர்ந்து, இந்திய இராணுவம் ஈழமண்ணில் கால்பதித்தது. ‘இனி இந்த மண்ணில் போர் இல்லை’என்ற நினைவு எத்தகைய ஆசுவாசம் தரக்கூடியது! ‘இனி எங்கள் தெருக்களில் விடுதலையடைந்தவர்களாக நாங்கள் உலவமுடியும்’என்ற நம்பிக்கை எத்தகைய புளகாங்கிதத்தைப் பரத்தக்கூடியது! தொடர்ந்து வந்த நாட்களில், ஒளிரும் விழிகளுடன் திருநெல்வேலியின் பரமேஸ்வராச் சந்தியிலும் அதனையொட்டிய வீதிகளிலும் நாங்கள் கூட்டம் கூட்டமாக நின்று கதைபேசினோம். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த போராளிகள் சாதாரண உடைகளில் இராணுவ பயமற்று உலவித் திரிந்தார்கள். துப்பாக்கி தாங்கிய இராணுவத்தினரும் (அது எந்த நாட்டு இராணுவமாக இருந்தபோதிலும்) போராளிகளும் ஒரே இடத்தில் உலவியதானது காட்சிப்பிழையாகவே எங்கள் கண்களுக்குத் தோன்றியது.
அவர்கள்தாம் (அமைதிப்படையினர்) எவ்வளவு அழகாகப் புன்னகைக்கவும், குழந்தைகளைப் பார்த்துக் கையசைக்கவும் செய்தார்கள்! இந்தியாவைப் பற்றி எங்கள் மூதாதையர்களால் அதுநாள்வரை கட்டியெழுப்பப்பட்டிருந்த புனித பிம்பங்கள் மேலும் கொஞ்சம் ஊதிப் பெருத்தன. ‘காந்தி தேசம்’, ‘கலாச்சாரத் திருநிலம்’, ‘புத்தரின் பூமி’, ‘இரண்டாவது தாய்நாடு’, ‘தொப்பூள் கொடி உறவு’ இன்னபிற அடைமொழிகள் உருவேற்ற உணர்ச்சிப் பெருக்கில் (நன்றி ஒரு துளி தூக்கலாக) மிதந்து திரிந்தோம்.
ஆகஸ்ட் 4ஆம் திகதியன்று (ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஆறு நாட்களின் பின்) சுதுமலையை நோக்கி பெருந் திரளாய் சனங்கள் போய்க்கொண்டிருந்தார்கள். அவ்வளவு சனத்திரளை என் வாழ்நாளில் கண்டதில்லை. (நான்கு இலட்சம் பேர் என்று பிறகு தெரிந்துகொண்டேன்.) எங்கெங்கோவிருந்தெல்லாம் மக்கள் வந்து குவிந்துகொண்டிருந்தனர். கூட்டம் நடக்கும் இடம்வரை செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. நாங்கள் வெகு தொலைவில் இறக்கிவிடப்பட்டு சுதுமலை அம்மன் கோயிலை நோக்கி நடந்து போனோம். கூட்டம் நடைபெறும் இடத்தை நெருங்க நெருங்க ஒருவரோடொருவர் தட்டுப்படாமல் நடக்கமுடியாத அளவிற்கு அடர்த்தியாயிற்று சனத்திரள். அவ்வளவு கூட்டத்தில் மேடையைச் சரிவரப் பார்க்க முடியாதென்பதனால் அருகிருந்த மரங்களிலும் வீடுகளின் கூரைகளிலும்கூட இளைஞர்கள் ஏறியிருக்கக் கண்டோம். அன்றுஇ இந்தியாவிடம் ஆயுதங்களை ஒப்படைத்து (முழுமையாக அல்ல) ‘நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்’என்ற தலைப்பில் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் உரையொன்றை ஆற்றினார். அந்த உரையில், “எமது மக்களைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பை எங்களிடமிருந்து (விடுதலைப் புலிகள்) இந்திய அரசு கையேற்றுக்கொள்கிறது”என்ற வாசகம் இடம்பெற்றது. மேலும், “மிகப் பெரிய வல்லரசொன்று எங்கள் மக்களின் அரசியல் விதியை முடிவுசெய்யத் தீர்மானித்துவிட்டிருக்கும்போது, அதை மீறி எதையும் செய்வதென்பது எமது இயலுமைக்கு அப்பாற்பட்டது.”எனவும் கூறியிருந்தார் (ஆனால், மிகப் பெரிய வல்லரசை அவர்களால் தோற்கடிக்க முடிந்தது என்பது வரலாறு.)
போர் அல்லது போராட்டம் நடைபெறும் நாடுகளில் வாழும் எவரும் அரசியல் கலவாத தன்வரலாறுகளையோ சம்பவங்களையோ எழுதுவதென்பது சாத்தியமேயில்லை. அமைதிப் படையின் அநீதிக் காலத்தில் நான் அங்கே இருந்தேன் என்பதனால் ‘என்’, ‘நான்’என்று பிரயோகிக்க வேண்டியுள்ளது. அரசியலில் நேரடியாகப் பங்கேற்காத ஒருவரது கண்களில் அமைதிப் படையினர் எங்ஙனம் தோன்றினார்கள் என்பதைப் பதியவேண்டிய அவசியம் உள்ளது.
ஈழத்தமிழர்கள்பால் ‘கருணை’கூர்ந்து இலங்கை சனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும்
1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்கள். இதில் நகைமுரண் என்னவென்றால், எந்த இனம் துடிக்கப் பதைக்க படுகொலை செய்யப்பட்டதோ, தமது வாழ்விடங்களிலிருந்து அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டதோ, பெரும்பான்மையாளர்கள் ஆட்சியாளர்களாக இருந்த காரணத்தால் கல்வி உள்ளடங்கலான உரிமைகளில் எவருக்குப் பாரபட்சம் காட்டப்பட்டதோ, அவர்களைக் கலந்தாராயாமல், ஒருதலைப்பட்சமாக அந்த ஒப்பந்தம் எழுதப்பட்டு, தமிழர்களது விருப்பத்திற்கு முரணாக அவர்கள்மீது திணிக்கப்பட்டது என்பதுதான்.
‘ஈழமுரசு’பத்திரிகைக் காரியாலயத்தின் அச்சகப் பகுதியும் அச்சியந்திரமும் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டதாக ஒரு நாள் (ஒக்டோபர் 10, 1987) காலையில் நாங்கள் அறிந்தோம். அன்றே ‘முரசொலி’பத்திரிகையின் அச்சியந்திரமும் சிதைக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன. இதனிடையில்- குமரப்பா, புலேந்திரன் ஆகிய தளபதிகள் உட்பட பதினேழு பேரை இலங்கைக் கடற்படை கைதுசெய்து, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் விதிகளை அடாவடித்தனமாக மீறினார்கள். இலங்கையின் அதிகாரத் தரப்பினைத் தட்டிக் கேட்க இந்தியத் தரப்பு தயங்கியது. விளைவு, சிறைப்பிடிக்கப்பட்ட பதினேழு பேரும் ‘சயனைட்’அருந்தினார்கள். பன்னிரு விடுதலைப் புலிகள் இந்திய-இலங்கை கூட்டுச்சதிக்குப் பலியாகப்பட்டார்கள். ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர்தப்பினார்கள். நிலைமை வரவர பதட்டமடைந்துகொண்டே சென்றது.
ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, நீரும் அருந்தாமல் திலீபன் உண்ணாவிரதமிருந்த நல்லூர்க் கோயிலுக்கு அண்மையிலேதான் நாங்கள் வாடகைக்குக் குடியிருந்தோம். ஆகவே ஒவ்வொரு நாட்களும் அங்கே போகக் கிடைத்தது. அந்த மெல்லிய உருவம் மேலும் உருக்குலைந்து ஈற்றில் சருகாக உதிர்ந்தபோது (செப்டெம்பர் 26, 1987) அங்கிருந்து பெரும் அழுகைச் சத்தம் கேட்டது. வீட்டிலிருந்து ஒரே பாய்ச்சலாக ஓடிச்சென்றேன். ‘காந்தி தேசம்’ எங்களைக் கைவிட்டுவிட்டது. ‘அஹிம்சைநெறியால் ஈழத்தை வென்றிருக்க முடியும்; ஆயுதப் போராட்டத்தால் மக்களைக் கொன்றுவிட்டார்கள்’என்று சொல்பவர்களின் மனச்சாட்சியை ‘திலீபன்’என்ற பெயரும் தொந்தரவு செய்வதில்லை என்பது வியப்பிற்குரியதே.
நல்லூர்க் கோயில் முன்றல் உணர்ச்சிக் கொந்தளிப்பில் கனன்றுகொண்டிருந்தது. கோபமும் கண்ணீரும் ஆற்றாமையும் ஆயாசப்பொருமலுமாய் மக்கள் அலைமோதிக்கொண்டிருந்தார்கள். ‘கண்கெட்டுப் போவார்’என்று, மண்ணை வாரியிறைத்து இந்திய அமைதிப் படையினரை பெண்கள் சபித்துக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் மேடையிலிருந்த திலீபனின் உயிரற்ற உடலை நோக்கிச் செல்ல முயன்றார்கள். தொண்டர்கள் சிலர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றார்கள்.
மீண்டும் மீண்டும் நாங்கள் ஏன் கைவிடப்படுகிறோம்? மீண்டும் மீண்டும் நாங்கள் ஏன் ஏமாற்றப்படுகிறோம்? என்ற கேள்விகள் எங்கள் மனங்களைக் குதறிக்கொண்டிருந்தன. இலங்கை இராணுவத்தின் இனவெறியாட்டத்திலிருந்து ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொண்டு உள்ளே வந்தவர்கள், இந்தியாவின் பிராந்திய நலனைப் பாதுகாக்க முற்பட்டனரேயன்றி, எளிய மக்களது உயிர்களையோ உரிமைகளையோ ஒரு பொருட்டாகக் கருதினார்களில்லை.
ஒக்டோபர் 21இ 1987 தீபாவளியன்று இந்தியப் படைகளால் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் நடத்தப்பட்ட நரவேட்டை இந்திய சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது! ‘இறுதிப் போர்’என்று சொல்லப்படுகிற முள்ளிவாய்க்கால் சண்டையின்போது இலங்கை இராணுவத்தினரும் வான்படையும் வைத்தியசாலைகளைக் குறிவைத்துத் தாக்குதல்களைத் தொடுத்தன. அந்தத் தாக்குதல்களுக்கெல்லாம் அடியெடுத்துக் கொடுத்ததாக, முன்னுதாரணமாக யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரி மீது இந்தியப் படைகளால் தொடுக்கப்பட்ட தாக்குதலைச் சொல்லலாம். வைத்தியசாலை வளவினுள் விடுதலைப் புலிகள் ஒளிந்திருப்பதாகக் கூறிக்கொண்டு உள்நுழைந்த ‘அமைதி’ப் படையினர்‘ வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள், நோயாளிகள் உள்ளடங்கலாக 70 பேரைச் சுட்டுக்கொன்றனர். பிணங்களோடு பிணங்கள் போலவே கிடந்து உயிர்தப்பிய சிலரது வாக்குமூலங்கள் நெஞ்சை அதிரவைத்தன.
‘இப்படியெல்லாம் நடக்கக்கூடுமா?’என்ற அதிர்ச்சியிலிருந்து எங்களால் மீள முடியவில்லை. ‘ஒரு தாய் தன் குழந்தைக்கு நஞ்சூட்டிக் கொன்றாள்’ என்ற செய்தி எவ்வளவுக்கெவ்வளவு அதிர்ச்சியூட்டுமோ அதனிலும் அதிகமதிகமான அதிர்ச்சியில் திகைத்துப்போனோம்.
விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் சண்டை தொடங்கிய பிற்பாடு, பொதுசனங்களெல்லாம் புலிகளானார்கள். பெரும்பான்மைச் சிங்களச் சிப்பாய்களுக்குப் பதிலாக, ‘இறையாண்மை’மிக்க இந்தியாவின் பன்மொழி பேசும் சிப்பாய்கள் இனவழிப்பைச் சிரமேற்கொண்டார்கள்.
நல்லூர்க் கோயில் ஞாபகத்திற்கு வரும்போதெல்லாம், பசியின் ஞாபகமும் கூடவே வந்துவிடுகிறது. இந்திய அமைதிப்படையின் அட்டூழியத்திற்கு அஞ்சி கோயிலுக்குள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்த பல்லாயிரக்கணக்கானோரில் நாங்களும் இருந்தோம். ஒரு துண்டு பாணுக்காக (தமிழகத்தில் ரொட்டி) ஏங்கிப் பசித்திருந்த அந்த நாட்கள் மறக்கப்படக்கூடியனவல்ல. ஓயாத பேச்சொலிகள், கைது செய்யப்படுவோம் என்ற பதட்டம், உயிர்ப்பயம், குழந்தைகளின் அழுகுரல், இரவுகளில் எப்போதாவது வெடித்தெழும் விசும்பல்கள், மூத்திர-மல நாற்றம் என்று கோயிலின் முகமே மாறிவிட்டது.
இது எங்கள் குடும்பத்தின் கதை மட்டுமன்று; அந்த மண்ணில் வாழ்ந்த ஒட்டுமொத்த சமூகத்தின் அவலம். அமைதிப்படை என்று வந்தவர்கள் சாதாரணர்களின் வாழ்வில் எத்தகைய கோரத்தாண்டவத்தை நிகழ்த்தினார்கள். அவர்களுடைய நம்பிக்கைகளின் மீது எப்படிக் காறியுமிழ்ந்தார்கள் என்பதைப் பேச விரும்புகிறேன். இந்தியா என்ற வல்லரசு எளிய மக்களின் வெறுப்புக்கு எவ்விதம் ஆளானது என்பதைப் பகிர விரும்புகிறேன். காரணமற்ற வெறுப்பை ஈழத்தமிழர்களோ தண்டகாரண்யவாசிகளோ நாகாலாந்து, அஸ்ஸாம், மணிப்பூர், காஷ்மீரைச் சேர்ந்தவர்களோ கொண்டிருக்கவில்லை என்பதை, இந்தியாவின் ‘தேசபக்தர்கள்’புரிந்துகொள்ள வேண்டும். முதலாளித்துவ சார்புடைய, மக்கள் விரோத அரசுகளன்று; மக்களே கரிசனைக்குரியவர்கள்.
பசி பொறுக்கமாட்டாத ஒருநாளில் எனது பெற்றோரும் நானும் நல்லூர்க் கோயிலை விட்டு வெளியேறி எங்கள் பெற்றோரின் கிராமத்துக்குப் போனோம். தெருவோரம் விழுந்து கிடந்த பிணமொன்றின் தலையை நாய் முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. எங்கெங்கோ எறிகணைகள் விழுந்து வெடிக்கும் ஓசை. துப்பாக்கி வேட்டுகளின் விடாத சத்தம். இந்தியப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுஞ்சமர் நடந்துகொண்டிருந்தது.
எனது பெற்றோரின் ஊரில் சில நாட்களே அமைதி நீடித்தது. ‘அமைதி’ப்படை நெருங்கி வந்த பிறகு அமைதி நிலவுதல் எங்ஙனம் சாத்தியம்? அவர்கள் ஊரை நோக்கி வருகிறார்கள் என்ற செய்தி அறிந்த அடுத்த நிமிடமே, புயலில் அலைக்கழியும் பறவைகள் போல தெருக்களில் அலைமோத ஆரம்பித்துவிட்டோம். உயிர்ப்பயம் எங்களை விரட்டியது. வீடுகளைப் பூட்டியும் பூட்டாமலும், ஓரிரு ஆடைகளுடனும் சொற்ப கையிருப்புகளோடும் வெளியேறி நடக்கத் தொடங்கினோம். எங்கே செல்வது என்ற சர்ச்சைகளின் பின் கோயில்களுக்குச் செல்வது என்று முடிவாயிற்று. சிலர் தேவாலயங்களை நோக்கிப் போனார்கள். வேறு சிலர் இந்துக் கோயில்களை நோக்கிப் போனார்கள். என் தாயார் ஒரு பானையில் அரிசியைப் போட்டுத் தலையில் சுமந்து வந்தார். அது எத்தகைய பெறுமதியானது என்பதை நாங்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.
வெளியில் குண்டுச் சத்தங்கள் தொடர்ந்துகொண்டேயிருந்தன. மூளாய் என்ற ஊர் வழியாக அமைதிப் படை உள்நுழைந்துகொண்டிருப்பதாகச் சிலர் சொன்னார்கள். நாங்கள் ‘கடவுளே… கடவுளே’என்று அரற்றியபடி தஞ்சம் புகுந்த இடங்களுள் தவித்தபடியிருந்தோம். ஈற்றில் இந்திய இராணுவம் பேராரவாரத்துடன் ஊர்மனைக்குள் நுழைந்தது.
கண்ணிமைத்து மூடும் நேரத்திற்குள் வானைக் கீறி மறையும் மிராஜ் விமானங்கள் பேரிடி போன்ற சத்தத்தோடு பறந்து அச்சுறுத்தின. கோயில் அர்ச்சகரது கழிப்பறையை இளம்பெண்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. மற்றவர்கள் கோயிலைச் சுற்றவர இருந்த வயல்களுக்குள் மலங்கழித்தார்கள். கழிப்பறைக்கு இருக்கும்போது அங்கேயே குண்டு வீழ்ந்து இறந்துவிடலாகாது என்பதே எங்களது பிரார்த்தனையாக இருந்தது. ஆரம்பத்தில் அவரவர் கொண்டு வந்திருந்த அரிசியில் உணவு சமைத்து உண்டோம். இராணுவத்தினரால் ‘ரேஷன்’கணக்கில் எப்போதாவது அரிசி வழங்கப்பட்டது. பெரும்பாலும் பீற்றூட் கறியும் பருப்பும்தான். நல்ல உணவு என்பதைக் கனவில் மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. வீடுகளில் தானியங்கள் இருந்தபோதிலும் அங்கு சென்று எடுத்துவர எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், அப்படிச் சென்றுவருவது ஆபத்து மிகுந்ததாக இருந்தது. ஆகவே, நாங்கள் எப்போதாவது அல்லது கிடைக்கும்போது உணவு உண்ண எங்கள் வயிறுகளைப் பழக்கப்படுத்திக்கொண்டோம்.
இருந்திருந்துவிட்டு எங்களை வரிசையாக கோயிலிலிருந்து வெளியே வரச் சொல்வார்கள். கைகளை உயர்த்திக்கொண்டு வெளிவரவேண்டும். அடையாள அணிவகுப்பு போல ஒன்று நடத்தப்படும். குற்றவாளிகளைப் போல நடத்தப்படுவது தாங்கமுடியாத அவமானத்தை அளித்தது. அப்போது ஒருவர் கண்களை மற்றவர்கள் பார்ப்பதைத் தவிர்த்துவிடுவோம். குறிப்பாக வயதானவர்களின் கண்களை நாங்கள் பார்ப்பதேயில்லை. மரியாதைக்குரிய அவர்கள் இழிவாக நடத்தப்படுவதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உள்ளுக்குள் கோபநெருப்பு கனன்றுகொண்டேயிருந்தது. அந்தக் காலகட்டத்தில் பல இளைஞர்களும் இளம்பெண்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்கள். இந்திய இராணுவத்திடம் பிடிபடுவதைக் காட்டிலும் அது பாதுகாப்பானது என்று நினைத்தது மட்டும் போராட்டத்தில் தம்மை இணைந்துகொள்ளக் காரணமாக இருக்கவில்லை. ‘இழிவுசெய்யப்பட்டோம்’ என்ற சுடுநினைவும் அவர்களை போராட்டம் நோக்கி உந்தித் தள்ளியது.
அன்று மட்டுமென்றில்லை; காலகாலங்களாக ‘நீங்கள் மனிதர்களல்ல… மனிதர்களல்ல…’என்று இடைவிடாது ஒலித்த இனவெறி, பிராந்திய வல்லாதிக்கக் கூச்சல்களே இளைஞர்களையும் பெண்களையும் களமாடத் தூண்டியது என்பதை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.
அமைதிப் படை பலத்த தாக்குதலுக்கு ஆளாகும் நாட்களில் அந்தத் தாக்குதல் அகதி முகாம்களில் எதிரொலிக்கும். இரவுகளில் சப்பாத்துக் கால்கள் பேரோசையெழுப்ப அகதி முகாம்களுக்குள் நுழையும் படையினர், ஒவ்வொரு முகங்களாக ‘டார்ச்’வெளிச்சத்தில் பார்ப்பார்கள். துணியால் முகம் மறைத்து அவர்களோடு வந்திருக்கும் முகமூடி (காட்டிக் கொடுப்பவர்) விடுதலைப் புலிகளோடு தொடர்புடையவர்களை அடையாளங் காட்டுவார். (அந்தப் புண்ணிய கைங்கரியத்தை பெரும்பாலும் ஈ.பி.ஆர்.எல்.எப். இனரே செய்துவந்தனர்.) அடையாளங் காட்டப்பட்டவரை கூட்டத்திலிருந்து வெளியில் இழுத்தெடுப்பார்கள். அவரை அழைத்துச் செல்லவிடாமல் உறவினர்கள் காலைப் பிடித்து இழுப்பார்கள். அல்லது அமைதிப் படையின் கால்களில் விழுவார்கள். காலில் விழும் உறவினரை மிலேச்சத்தனமாகத் தாக்கிவிட்டு ‘சந்தேக நபர்’களை இழுத்துச் செல்வார்கள்.
இளம்பெண்களை வைத்திருக்கும் தாய்மார்கள் படையினரைக் கண்டு அஞ்சி நடுங்கினார்கள். ‘அமைதி’ப்படையினரின் தலையாய பணிகளுள் ஒன்றாக பாலியல் வல்லுறவும் அமைந்திருந்ததே அந்த அச்சத்திற்குக் காரணம்.
உரிமைகளுக்காகப் போராடும் சிறுபான்மை இனத்துப் பெண்களை வல்லுறவு செய்வதன் மூலமாக, அந்த நிலத்தையே வெற்றிகொண்டதாக இறையாண்மையுள்ள அதிகாரங்கள் மமதை கொள்ளும் ‘போர்நெறி’களை நாமறிவோம். இந்திய அமைதிப் படை ஈழத்தில் நிலைகொண்டிருந்த காலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்கள். பயணங்களின்போதும் சுற்றிவளைத்துத் தேடுதல் போன்ற நடவடிக்கைகளின்போதும் பெண்கள் தங்கள் உடல்களையே தமக்கு எதிரிகளாகக் கருதவேண்டியிருந்தது. சோதனைச் சாவடிகளில் பேருந்துகளிலிருந்து ஆண்கள் இறக்கிவிடப்படுவர். அது பெண்கள் என்ற இரக்கத்தின்பாற்பட்டதன்று; இராணுவத்தின் பாலியல் தினவின்பாற்பட்டதே. மார்புகளை அழுத்தி, ‘குண்டு இருக்கிறதா?’என்று பற்களைக் காட்டும்போதும், பையைச் சோதனையிடும் சாக்கில் பெண்களது முழங்கால்களில் தங்களது ‘ஆண்மை’யை அழுத்திப் பரிசோதிக்கும்போதும் நாங்கள் கண்களில் நீர்முட்டச் சகித்துக்கொண்டோம். அருவருப்போடு அழுத்தி அழுத்தித் தேய்த்தாலும் போகாத அழுக்கைப் போல அந்த ஞாபகம் காலம் முழுவதும் இருக்கும். அமைதிப் படையினர் தமது உணவுத் தயாரிப்பின்போது கடலை எண்ணெயையே பயன்படுத்தினார்கள். பாம்புகளின் அருகாமையை உழுந்து வாசனை மூலம் அறிந்துகொள்வதுபோல, (பாம்புகளின் கொட்டாவி உழுந்து வாசனையுடையது என்பார்கள்) கடலை எண்ணெய் வாசனை இந்தியப் படையினரது பிரசன்னத்தை அறிவித்துவிடும்.
ஒருவழியாக, அகதி முகாம்களிலிருந்து வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டோம். ஊரின் முகமே மாறியிருந்தது. எறிகணை வீச்சினால் கட்டிடங்கள் சிதைந்திருந்தன. எங்களுக்குத் தெரிந்த பலர் கொல்லப்பட்டிருந்தார்கள். ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். எங்கெங்கு திரும்பினும் இந்திய இராணுவச் சிப்பாய்களே தென்பட்டார்கள். பல வீடுகள் அவர்களால் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டிருந்தன. தற்காலிகமாகத் தங்கவந்த இடத்திலிருந்து யாழ்ப்பாண நகருக்குத் திரும்பிவிட நாங்கள் தீர்மானித்தோம். அங்குதான் எங்களது உடமைகள் இருந்தன. மேலும், அந்தக் கடின காலத்தில் உறவினர்களது வீடுகளில் அவர்களுக்குச் சுமையாக நீண்ட நாட்கள் தங்கியிருப்பது உவப்பானதாகவோ நியாயமானதாகவோ இருக்கவில்லை.
ஏறக்குறைய பத்து மைல் தூரத்தை கால்நடையாகவே நாங்கள் கடக்கவேண்டியிருந்தது. பேருந்துகள் ஓடவில்லை. பத்திரிகைகள் கிடைக்கப் பெறவில்லை. அஞ்சலகங்கள் உள்ளிட்ட எந்தவொரு அலுவலகமும் இயங்காத காரணத்தால் தனித் தனித் தீவுகளில் தொடர்பறுந்தவர்களாக நாங்கள் வாழவேண்டியிருந்தது. யாழ்நகருக்குத் திரும்பும் வழியெங்கும் நாட்பட்ட பிணங்களை நாங்கள் பார்த்தோம். அவற்றிலிருந்து எழுந்த துர்நாற்றம் தாங்கமுடியாததாக இருந்தது. கட்டிடங்கள் உருக்குலைந்து கிடந்தன. இடிபாடுகள் நிறைந்த நகரமொன்றினூடாக காலமற்ற காலமொன்றினுள் நடப்பதைப் போல நாங்கள் நடந்துபோனோம். எந்நேரமும் கொல்லப்படலாம் என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. துப்பாக்கிச் சன்னங்களை நினைத்து முதுகு கூசியது. வழிவழியே அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டோம்.
யாழ் நகருக்கு அண்மையிலிருந்த (பெயர் மறந்துபோய்விட்டது) மயானத்திற்கு அருகிலிருந்த இராணுவ முகாமில் ஒரு சீக்கிய இராணுவத்தினன் முதுகைக் காட்டியபடி நின்றுகொண்டிருந்தான். அப்படியொரு உயரமும் பருமனுமான மனிதனை நான் இன்னமுந்தான் கண்டதில்லை. வேற்றுலகவாசியோவென்று ஐயுறும்படியான தோற்றம். திடீரெனத் திரும்பி கண்களைப் பார்த்தபோது உயிரே உறைந்துபோனாற்போலிருந்தது. கட்டளை இன்றியே நின்றுவிட்டிருந்த எங்களைப் பார்த்து அதிசயிக்கத்தக்க விதமாகச் சிரித்தபடி ‘போ’என்று கையசைத்தான். நாங்கள் ஏறத்தாழ ஓடி அவ்விடத்தை நீங்கினோம். அன்றைக்கு மட்டுமல்ல; வேறு சில சூழ்நிலைகளிலும் இந்திய அமைதிப்படையிலிருந்த சீக்கியப் படையினர் தமிழர்களிடம் ஒப்பீட்டளவில் கருணையோடு நடந்துகொண்டதை அவதானித்திருக்கிறேன்.
நாங்கள் வாழ்ந்திருந்த தெருவே வெறிச்சிட்டிருந்தது. அயலவர்களில் பலர் எங்கேயென்றே தெரியாதபடி காணாமல் போயிருந்தார்கள். பக்கத்து வீடு இந்திய அமைதிப் படையின் இருப்பிடமாகியிருந்தது. ஒரு இரவுகூட அங்கு நிம்மதியாக உறங்க முடியுமென்று தோன்றவில்லை. பாலைவனத்தில் தன்னந்தனியாக மாட்டிக்கொண்டதாக உணர்ந்தோம். இவை போதாதென்று பக்கத்து வீட்டிலிருந்து அடிக்கடி எழுந்த அழுகுரல்கள் எங்களை நிலைகுலைய வைத்தன. “ஐயோ… ஐயோ””என்று பெண்கள் அலறியழும் ஓசைகளைக் கேட்டோம். “என்னை ஒன்றும் செய்யாதையுங்கோ…”என்று மன்றாடும் குரல்களைச் செவியுற்றோம். பாலியல் வதைகூடமொன்றின் அருகில் நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம் என்ற நினைவு பதைபதைக்கச் செய்தது. என் தாயின் முகம் பித்துப் பிடித்தாற்போல மாறியிருக்கக் கண்டேன். தந்தையோ இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தார். அந்த இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்தோம். அதிகாலையில் பேருந்து நிலையத்தில் இருந்தோம். எங்கள் குடும்பம் வவுனியாவை நோக்கிப் பயணப்பட்டது. அங்கு எனது அண்ணா இருந்தார். யாழ்ப்பாணத்தோடு ஒப்பிடும்போது,வவுனியாவில் நிலைமை சகித்துக்கொள்ளத்தக்கதாக இருந்தது. அதன் பிறகு எங்கள் உடமைகளை எடுத்துக் கொள்வதற்காகக் கூட நாங்கள் யாழ்ப்பாண வீட்டிற்குத் திரும்பிச் செல்லவில்லை.
ஆனால், ஞாபகங்கள் தசாப்தங்களைத் தாண்டிப் பயணிக்கின்றன. ‘ஐயோ… ஐயோ’என்ற அலறல் இன்னமும் மனசுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. எங்காவது கடலை எண்ணெய் மணத்தை நுகர நேர்ந்தால், இரு தசாப்தங்களுக்கு முந்தைய அந்தக் கொடிய காலத்துள் சென்று விழுந்துவிடுகிறேன். தலை பிய்ந்து கிடந்த அந்தப் பெயரறியாப் பிணத்தையும், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கிணற்றில் வீசியெறியப்பட்டிருந்த பெண்ணின் நீரில் ஊறிச் சிதைந்த கண்களையும் எங்ஙனம் மறப்பது?
1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி ஈழத்திலிருந்து இந்திய ‘அமைதி’ப் படை வெளியேறிவிட்டதாக (அல்லது வெளியேற்றப்பட்டதாக) எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால்,அவர்கள் எப்போதும் வெளியேறவில்லை என்பதை நாமறிவோம்.
நன்றி: 'பறை' சஞ்சிகை, பொதியவெற்பன் ஐயா
25 நவம்பர், 2011
Published on May 17, 2012 08:50
No comments have been added yet.
தமிழ்நதி's Blog
- தமிழ்நதி's profile
- 9 followers
தமிழ்நதி isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

