ஈராயிரமாண்டு மனநிலை

 எழுத்தாளர் ஜெயன் கோபாலகிருஷ்ணனின் 'அப்பாவின் குரல்' கதையை சென்ற ஞாயிறு காலையில் வாசித்தேன். அம்மா விடியற்காலையில் துறையூரில் ஒரு திருமணத்திற்கு சென்றுவிட்டார். சமையல் அறை பேச்சரவம் இன்றி அமைதியாக இருந்தது.

பத்து நாட்களாக தினமும் அந்தியில் பெய்யும் மழை காலை நேரத்தை இதமாக்கிக் கொண்டிருக்கிறது. நேற்றும் அதற்கு முன்தினமும் நல்ல மழை. சமைக்கும் போது 'அப்பாவின் குரல்' கதை மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. பின் வீட்டு நந்தினி குரூப் 4 தேர்விற்கு கிளம்பி அவள் அம்மாவிடம் சொல்லிக்கொள்ள வந்திருந்தாள். அடுத்தத்தெருவில் அவளின் கணவன் வீடு.

எத்தனைப் பெண்கள் அடுப்படியில் தன் கணவனிடம் கேட்ட தகாத சொல்லை நினைத்து நினைத்து வெதும்பியிருப்பார்கள் என்ற எண்ணம் வந்தது. பெண்ணை நடத்தை சார்ந்து கீழ்மை படுத்த,காயப்படுத்த சொல்லப்படும் இரண்டுசொற்களை இந்தக்கதையின் நாயகன் தன் மனைவியை பார்த்து தான் சொல்லிவிடக்கூடாது என்று நினைக்கிறான். அப்பா அம்மாவை திட்ட பயன்படுத்தும் அந்த சொற்கள்  அம்மாவின் ஆழத்தை எந்த அளவுக்கு பாதித்தது என்று புரிந்திருப்பவன்.

 அவன் தன் மனைவியை திட்டுவதற்கு அந்த சொற்களை பயன்படுத்தாமலிருக்க அத்தனை முயற்சி செய்கிறான். இருந்தும் முதல் சொல் அவனை மீறி வந்துவிடுகிறது. இரண்டாவது சொல்லை சொல்லாமலிருக்க தன்னையே காயப்படுத்திக் கொள்கிறான். கதை முழுவதும் அந்த மனத்திணறல் இருக்கிறது.


எழுத்தாளர் ஜெயன் கோபாலகிருஷ்ணன்


இந்தக்கதையில் அப்பாவின் குரல் என்பது இரண்டாயிரமாண்டு வயது உடையது. காலகாலமாக சொல்லி சொல்லி கூர்தீட்டிய வாள் போன்றது. உண்மையில் அந்த சொற்களில் சொல்பவரின் ஆயிரக்கணக்கான ஆண்டு மனோபாவம் உள்ளது. பெரும்பாலும் பெண்கள் ஆண்களை நோக்கி அரிதாகவே இந்த சொற்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த சொற்களுக்குரியவர்களை உருவாக்கி பயன்படுத்திக்கொண்டவர்கள் ஆண்கள். வரலாற்றில் வன்முறைகளும், மனிதனை மனிதன் நடத்தும் விதங்களும்,குரூரங்களும், வாழ்க்கை மதிப்பீடுகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. ஈராயிரம் ஆண்டிற்கு முன் இப்படி இருந்தது என்று மட்டுமே இன்று நம்மால் சொல்லமுடியும். 

அதிலிருந்து காலத்தில் இவ்வளவு தொலைவு வந்துவிட்ட பிறகும்  அந்த சொற்களை எங்கு, யார் மீது, எதன் பொருட்டு பயன்படுத்துகிறோம் என்பதை இந்தக்கதை விசாரிக்கிறது. இது ஏதோ அந்தக்கதையில் வரும் ஆணின் இயல்பு மட்டுமல்ல என்பதை அனைவரும் அறிவோம். படித்து நாகரீகமாக தோற்றமளிப்பவர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. ஏன் தன் மனைவியை நோக்கி இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்பது உளவியல் சிக்கல் சார்ந்தது என்று நினைக்கிறேன். இந்தக்கதையை வாசித்ததும் எனக்கு ஜெயகாந்தன் நினைவிற்கு வந்தார்.

 கதாநாயகன் ஈராயிரம் ஆண்டு பழமையான அந்த ஆழத்தை கையாள நினைக்கிறான். தன் தாயின் மனசங்கடத்தை உணர்ந்து தன் ஆழ்மனதின் குரலை தவிர்க்க போராடுகிறான். கோபாலகிருஷ்ணனின் முதல் கதை. எத்தனை நுண்ணிய விஷயத்தை கதையாக்கியிருக்கிறார்! 

கணவன் இறந்த வீடுகளில் மனைவி அழுது புலம்பும் போது அது வரை காத்து வந்த சில விஷயங்கள் மனம் தாண்டி சிதறி விழும். சிறுவயதில் இருந்து அப்படி ஒருவிஷயமாக இந்த வார்த்தைகள் இருப்பதை கவனிக்கிறேன்.

"ஒருவாட்டியாச்சும் தகாத சொல்லு சொல்லியிருப்பாரா மனுஷன்..."என்று கதறி அழும் வெகுசில பெண்களை பார்த்திருக்கிறேன். வெகுசிலர் தான். திரும்பத்திரும்ப சொல்வார்கள். தொடக்கத்தில் எனக்கு என்ன என்று புரியவில்லை. எப்பொழுதும் சண்டை போட்டுக்கொண்டும், ஆங்காரமாக பேசிக்கொண்டும் இருந்தவர்கள் இறந்ததும் இப்படி சொல்கிறார்களே என்று. பின்பு தான் தன் நடத்தை பற்றி பேசும் சொற்களை சொல்லாத கணவனை ஒரு பெண் ஆத்மார்த்தமாக மதிக்கிறாள். நூறு வயதாகும் அவ்வா இப்பொழுதும் தாத்தாவை பற்றி பேசும் போது முதலில் சொல்வது ஒரு தகாத வார்த்தை சொன்னது இல்லை என்பது தான். பின்பு தான் சாம்பாத்திக்க தெரியாத மனுஷன் என்ற குறைகள் எல்லாம் வரிசையாக வரும்.

இன்று சொற்களை அழுகிய முட்டைகளை பயன்படுத்துவதைப் போல பயன்படுத்துறோம். குரல் மாறத் தொடங்கும் வயதிலேயே பையன்கள் பள்ளிக்கூட சுவரில் இந்த வார்த்தைகளை கிறுக்கி வைக்கிறார்கள். பள்ளிக்கூடத்திலேயே பேசுகிறார்கள். இவனுங்களுக்கா பாடம் எடுக்கிறோம் என்று பெண்ஆசிரியர்கள் கசப்பு கொள்கிறார்கள்.

ஒருபோதும் சொற்கள் தங்கள் வலிமையை இழப்பதில்லை. மென்மையை தண்மையை கம்பிரத்தை இழப்பதில்லை. அதே போல அருவருப்பை இழப்பதில்லை. பழகிப் பழகி தேய்ந்தாலும் அன்போ, காதலோ, வன்மமோ அப்படியே தான் இருக்கின்றன.

இந்தக்கதையில் வரும் அப்பாவும் பையனும் தங்கள் மனைவிகளை பார்த்து தான் தகாத சொற்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெரும்பாலும் மற்ற பெண்கள் மீதும் அதே எண்ணமும் வார்த்தையும் தானே மனதில் இருப்பதற்கான வாய்ப்புண்டு. மனிதன் நாகரீக மனிதனாக அடுத்தடுத்து செல்லும் படிநிலைகளில் ஒன்று இது. ஒரு சமூகமாக இந்த விஷயத்தில் மிகவும் கீழிறங்கிக் கொண்டிருக்கிறோம். சிந்தனையிலும் வெளிப்பாட்டிலும் உள்ள நாகரீகத்தில், மனஉயர்வில்  சொற்களுக்கு முக்கிய பங்குண்டு.


ஆழ்மனதில் சொற்கள் நம் இயல்பாக உறைந்திருக்கின்றன. குறைந்தபட்சம் அவற்றை இன்னும் ஆழத்திற்கு தள்ளி மறக்க முயற்சி செய்கிறான் இந்தக்கதையின் நாயகன். ஆனால் அது அவ்வளவு எளிதானது இல்லை. தன் மனதில் உள்ள ஒரு பகுதியை வெட்டி எடுக்காமல் அது இயல்வதல்ல என்றே கதை உணர்த்துகிறது. 

கதையாசிரியர் சொல்வது ஆணில் உறையும் இயல்பை. அந்த இயல்பின் வலிமையை. அதை மீறத்துணியும் ஒரு எளிய ஆணின் ஈரமனதை. 

மனமும் சொற்களும் கொண்டுள்ள வலுவான உறவை கதை தொடுகிறது. சொல்லே தான் மனம் அல்லது மனமே தான் சொல் என்பதை கதாசிரியர் கதையில் கையாண்டுள்ளார். 

கதையை வாசிக்க :

https://www.jeyamohan.in/40431/



 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 13, 2024 17:35
No comments have been added yet.


கமலதேவி's Blog

கமலதேவி
கமலதேவி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow கமலதேவி's blog with rss.