பாதரசத்துளி : சம்யுக்தா மாயா கவிதைகள்

 மறுதலிப்பு


காட்டின் ஒற்றையடிப் பாதையில்

வாகனமொன்றின் ஒளி வெள்ளத்தில்

செய்வதறியாது மருண்டு நிற்கும்

கள்ளமற்ற மானைப் போல

உன் விழிகளின் இயல்பான வெளிச்சத்தில்

ஸ்தம்பித்து நிற்கிறேன்

உண்மையில் எதிரே இருக்கையில் கூட

உன் கண்கள் என்னை

சந்திப்பதே இல்லை

நீ என்னிடம் பேசும் சொற்கள்

வேறு எவரையோ நோக்கியபடி தான்

சொல்லப் படுகின்றன

காற்றின் திசை மாறும் வேகத்தில்

சிதறி விழும் ஒரு துளி மழைக்காக

வாய் விரிக்கும் சாதகப் பட்சியென

மிகுந்த பொறுமையுடன் காத்திருக்கிறேன்

நீ கவனமின்றி தவற விடும்

சிறு பார்வைக்காக

எனினும் அந்த மாயக்கணம்

தொடக்கூடிய தூரத்தில் முடிவின்றி

நகர்ந்தபடி இருக்கிறது

மீன்களற்ற நதியின் மடியில்

சிறு தீண்டல் வேண்டி

நெடுங்காலமாய் பசும்பாசி

அடர்ந்திருக்கும் கூழாங்கல் நான்

                               


                  கவிஞர் சம்யுக்தா மாயா

  

சம்யுக்தாவின் கவிதைகளில் உள்ள அன்பிற்கான ஏக்கம் தரையில் விழுந்த பாதரச துளி போன்றது. எதிலும் ஒட்டாது, தரையிலும் படராது, தரையிலிருந்தும் எழும்பாது திரண்டு தத்தளிக்குக்கும் ஒன்றை இவர் கவிதைகளில் உணரமுடிகிறது. 

'கடல் ஆழத்தில் சயனித்திருக்கும்

கற்சிற்பமொன்று...'



'சிற்றெறும்பு தூக்கிச் செல்லும்

அதன் ஆயுளுக்கான

வெல்லத்துண்டு

அதன் முதுகை

ஒடித்துக்கொண்டிருக்கிறது  '


இந்தக் கவிதைகளில் மறுதலிப்பு என்பது  தனிமையான ஒரு இருப்பாக,தனித்த பயணமாக உள்ளது. இந்த வெல்லக்கட்டிக்கு தன் இனிப்பளவே கனம் அதிகம். தன்னை விடவும் கூட கனம் அதிகம்.

தன் கனத்தாலேயே அது ஆழ்கடல் அடியில் அமர்கிறது. மீன்களற்ற நதியில் பாசிபடிந்து கிடக்கிறது. 

ஆனால் இந்தக்கவிதைகள் கனத்தை உதறும் இடங்களில் தான் நாம் இந்த கவிதைகளில் கனத்தை உண்மையாக உணரமுடிகிறது. நீ உதறினாலும் உன்னுடன் இருப்பது நானே என்று சொல்ல ஒரு மனம் தன்னையே உதற வேண்டும் இல்லையா...கனமில்லாத ஒன்றால் தழும்பவும் இயலும் இல்லையா.

தான் தங்கும் இடமெல்லாம்

விளக்கேற்ற வேண்டி சிம்டாவை

கையோடு தூக்கிச் செல்லுமொரு

நாக சன்யாசியைப் போல

உன் பாதைகளில் ஒளி கூட்ட

என் காதலின் வெளிச்சத்தோடு

உன்னைப் பின் தொடர்வது

உனக்கு உறுத்தலாகிறது

வருந்தத் தேவையில்லை நீ

தன் கடன் பணி செய்து கிடப்பதே

என்பது – எல்லோருக்கும்

பொருந்தும் தானே..!

இன்னும் கவலை எதற்கு…?

இதோ பார்..

தன் நெறி தவறாது ஒழுக முயலும்

காபாலிகன் ஒருவன்

கையிலேந்தும் திருவோடு என்பது

மாண்டு விட்ட எவனோ ஒருவனின்

மயானத்து மண்டையோடு தானே.

இந்த பூமியில் பாதரசம் கனமான உலோகம். . வழிந்தோடும் உலோகம். ஔிரும் உலோகம். பெண் மனதிற்குள் உள்ள அகங்காரத்திற்கு இதை உவமையாக சொல்லலாம்.

. தன் கனத்தையெல்லாம் உதறி துளியாகி தத்தளிக்கும் பெண்தன்மை சம்யுக்தாவின் கவிதைகளில் ஔிர்கிறது.

கரைந்து கொண்டே இருந்தாலும்

உனதிந்த தேன் மெழுகு

எனக்காக உருகுவது இல்லை 

என்று தன் தன்மையில் உருகி வேறொன்றாக மாறுகிறது திடமான ஒன்று.  துளியாக்கினாலும் அதே ஔியுள்ள பாதரசம்.


பின்குறிப்பு

இந்தப்பதிவை வெளியிட்ட பின் பாதரசம் நஞ்சல்லவா என்ற புன்னகையுடன் நினைத்துக்கொண்டேன். நஞ்சே கனிய கனிய மாமருந்து. அமுதே அடர அடர மாநஞ்சு. தன்னை இழந்து கனியும் ஒன்று இந்தக்கவிதைகளில் உள்ளது.















 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 21, 2024 21:34
No comments have been added yet.


கமலதேவி's Blog

கமலதேவி
கமலதேவி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow கமலதேவி's blog with rss.