அம்மாவின் 60

 அம்மாவிற்கு இந்த ஆண்டு ஜூன் 26 ம் தேதி அறுபதாவது வயது தொடங்கியது. ஆனால் அன்று மறந்துவிட்டது. வீட்டில் யாருக்கும் பிறந்தநாள் கொண்டாடுதல் வழக்கம் இல்லை. பிறந்த நாளன்று  நாங்கள் கோயில், வழிபாடு என்று எதுவும் செய்வதில்லை. நினைவிருந்தால் இன்று பிறந்த நாள் தானே என்று சிரித்துக்கொள்வோம். மற்றபடி அனைத்து விரதங்களும் கடைபிடிக்கப்படும். அனைத்து பண்டிகைகளும் உண்டு. பிறப்பு, திருமணம், இறப்பு சார்ந்த சடங்குகள் செய்வதில் குறைவில்லை. வீட்டில்  உள்ள புத்தகஅடுக்குகளை எடுத்துவிட்டால் பெரும்பாலான நடுத்தர குடும்பங்களின் அனைத்து அம்சங்கள் கொண்ட வீடு.


சாயுங்காலம் சட்டென்று அம்மாவிற்கு அறுபது வயது தொடங்கிவிட்டது என்று நினைவிற்கு வந்ததும் சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்து, "ம்மா...பிறந்த நாள் முடிஞ்சிருச்சே....அறுபது பிறந்துருச்சுல்ல," என்று சிரித்தேன். வெங்காயம் உரித்துக்கொண்டிருந்த அம்மாவும் தலையாட்டி சிரித்தார்.

பிறகு வயது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அய்யாவிற்கு அறுபதாவது வயது பிறந்த அன்று இருவரையும் கோவிலிற்காவது செல்ல சொன்னோம். அய்யா எப்பொழுதும் போல "காலையிலயே ஆத்துல குளிக்கும் போது  பச்சைமலைக்கு மேல சூரியன்  உதிக்கறப்பவே கும்பிட்டாச்சு," என்றார். அம்மாவிற்கு பணம் கொடுத்து விரும்பியதை வாங்கிக்கொள்ள சொன்னார். அம்மா அய்யாவின்  காலிலெல்லாம் எப்போதும் விழுந்து கும்பிட்டதில்லை. அய்யா அதை விரும்ப மாட்டார். அம்மாவிற்கும் அந்த வழக்கம் இல்லை.

கூட்டுக்குடும்ப சமரசங்கள் சிக்கல்கள் கடந்து இருவரிடமும்  எனக்கு பிடித்த விஷயம் பரஸ்பர நம்பிக்கை. பணவிஷயத்திலிருந்து அனைத்திலும். நிறைய வீடுகளில் கணக்கு கேட்கும் தந்தைகளை பார்த்திருக்கிறேன். அம்மா மீதமிருக்கிறது என்று கொடுத்தால் அய்யா வாங்கிக்கொள்வார். 

அம்மா என்றால் அய்யாவிற்கு பிறகு தனியாக நினைவிற்கு வருவது தாத்தா. பெரும்பாலான பெண்களைப் போல அய்யாப்ரியை.

இலங்கையில் தேயிலை தோட்டத்தில் பிறந்து நான்கு வயதில் தமிழகம் வந்து பச்சைமலையடிவாரத்தில் வயல்வீட்டில் வளர்ந்தவர். எட்டாம் வகுப்பு வரை பள்ளிக்கூடத்திற்கும், மற்றபடி விஷேசங்களுக்கு,தேர் திருவிழாக்களுக்கு ஊருக்குள் சென்று வந்த வாழ்க்கை அவருடையது.

எங்கள் ஊரும் கிராமம். அம்மாவிற்கு அதிக உலக விவரங்கள் தெரியாது. மற்ற அம்மாக்களை போல இடி,பேய் பயம் உண்டு. ஆனால் அம்மாவிடம் மற்றவர்களிமிருந்து தனித்த இயல்புகள் சில உண்டு.

பெண்குழந்தைகள் திருமணத்திற்காக மட்டும் பிறந்தவர்கள் இல்லை என்ற எண்ணத்தை இயல்பாகவே கொண்டவர். திருமணம் முக்கியமான விஷயம் தான் ஆனால் அது மட்டும் தானா? என்பார். தங்கைக்கு  திருமணம் தாமதமான போது

 'கோயிலுக்கு போற பழக்கம் இருந்தா தானே நல்லது நடக்கும்..'

'பரிகாரமெல்லாம் செய்யனும்'

'வேண்டுதல் வைக்கனும்' என்று உறவுகள் சொன்ன போது அம்மா அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அதற்காக எதிர்த்தும் எதுவும் சொல்லமாட்டார். உறவுகளுடன் திருப்பட்டூர்,திருநாகேஸ்வரம்,திருமணஞ்சேரி, திருக்கருகாவூர்,திருக்கடையூர் போன்ற கோயில்களுக்கு சென்றோம். ஆனால் இதையெல்லாம் அம்மா தீவிரமாக எடுத்துக் கொள்ளமாட்டார். 

அவர் மனம் கசிந்து நின்றது திருவெள்ளறை தாமரைக்கண்ணனிடம் மட்டுமே. ஏன் என்று தெரியவில்லை.அந்த கோவிலில் எந்த பரிகாரபூஜைகளும் இல்லை. யூனெஸ்கோ பாதுகாப்பில் இருக்கும் கோவில். 

அம்மாவிற்கு பெண்பிள்ளைகளை பரிகாரங்களுக்காக நிற்க வைப்பது கடும்எரிச்சலை உண்டாக்கும். எங்களை அப்படி நிற்க வைத்ததே இல்லை.  எங்களின் சிறுவயதிலிருந்தே அம்மா எந்த பெண்ணிற்கு என்றாலும் பரிகாரங்களை கண்டு எரிச்சலடைவார். அம்மா இப்போதைய அம்மா இல்லை. எண்பதுகளின் அம்மா. அய்யாவும் அம்மாவும் கோவில்களுக்கு செல்வார்கள். வணங்குவார்கள். ஆனால் இந்த நாள், இதற்காக செல்லவேண்டும் என்ற எந்த கட்டாயமும் அவர்களுக்கு இல்லை. அம்மாவின் இந்த தன்மை குடும்பத்தில்,பெரியவர்களின் இழப்புகளில்,நோய்க்காலங்களில் எங்கள் மனதிற்கு உறுதுணையாக இருக்கிறது. நிறைய அழக்கூடிய அம்மா தான். என்றாலும் இதெல்லாம் 'இயற்கையா நடக்கறது தானே..' என்பார்.

திருஷ்டி கழித்தல் என்பதை அம்மா என் தங்கையின் குழந்தைகளுக்கு கூட செய்ததில்லை. சடங்கு முறைக்காக பெயர் சூட்டும் போது ஒரு முறை செய்தார். 'அதென்ன மனுசனுக்கு மனுசன் நம்பாம. குழந்தையை போய் யாராச்சும் ஏதாச்சும் நினைப்பாங்களா' என்பார். இது போன்ற அர்த்தமில்லாத பழக்க வழக்கங்கள் என்று தோன்றுவதை அம்மா செய்வதில்லை. சாமியார்கள், குடுகுடுப்பைக்காரர்கள்,குறிசொல்பவர்கள் பக்கம் செல்லவே மாட்டார். அவர்களை நம்புவதும் இல்லை.

நேற்று கூட பக்கத்துவீட்டு அக்கா கை நிறைய உரைமஞ்சள்களை கொண்டு வந்து அம்மாவிடம் தந்து 'முகத்துக்கு மஞ்சள் போடுங்க அண்ணி. அண்ணன் நல்லா தானே இருக்காரு' என்றார். அம்மா  வயதை ஒத்த பக்கத்துவீட்டு அம்மா 'பூ வைங்க...மாமன் ஆளா இருக்காருல்ல' என்பார். இதிலெல்லாம் அம்மாவிற்கு ஈடுபாடு குறைந்துவிட்டது.  கண்ணாடி பார்த்து கண்களுக்கு மை தீட்டும் இளம் அம்மா மனதில் வந்து போகிறார். அம்மா துரத்திப்பிடித்தாலும் நான் ஒரு நாளும் என் கண்களை கண்மைக்கு ஒப்புக்கொடுத்ததில்லை.

குறைந்தபட்ச எதிர்பார்ப்புள்ள பெண்ணான அம்மா அய்யாவிற்கு நல்வரம். ஆனால் அய்யாவிற்கு மறதி வருவதற்கு முன்பு வரை இருவருக்கும் வாரம் ஒரு சச்சரவாவது வரும். அம்மா அய்யாவுடன் வாதிடுவார். அய்யா 'உனக்கு ஒன்னும் தெரியாது' என்று அதட்டி பேசவிடாமல் செய்வார். அடுத்த நாளே அம்மாவிம் தானாக பேசிவிடுவார். சச்சரவுகளை யாரிடமும் மறைக்கவும் மாட்டார்கள். இயல்பாக இருப்பார்கள். ஆழமான கசப்பு இருவருகுள்ளும் வந்ததில்லை. ஒரு மாதம் முன்பு கூட அய்யாவுக்கு மதியஉணவு தரும்போது 'நல்ல மனுஷன்...ஆனா சின்னவயசுலெல்லாம் பயங்கர ஸ்டைலா இருப்பாரு. அதான் விவரம் தெரிஞ்சவருன்னு ஏமாந்துட்டேன்' என்று சிரித்தார்.

அம்மா இந்த அறுபது வயதில் வந்து நிற்கும் இடம் அழகானது. அய்யாவின் அல்சைமர் நோய் அவரிடம் நிறைய கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 


'நல்லது செஞ்சா நல்லது நடக்குங்கறது பொய். வாழ்க்கையில என்ன வேணுன்னாலும் நடக்கும்.

நம்ம பக்கமும் எல்லாமே சரியா இருக்காது

எவ்வளவு கஸ்ட்டம் வந்தாலும் நம்ம நிம்மதியா இருக்கனுன்னா நமக்கு தெரிஞ்சபடி நல்லதுபக்கம் நிக்கனும்...'

இந்த வரிகளை வாரம் ஒரு முறையாவது சொல்வார். வயல்காட்டில் பிறந்து வளர்ந்த இந்தப்பெண்ணில் வெளிப்படுவது அவளின் கணவன் தான். இதற்கு பெயர்  தான் அர்த்தநாரி தன்மையா? என்று தோன்றுகிறது. அம்மாவிடம் உள்ள வெளிப்படைத்தன்மை அவரின் பலமும் பலவீனமுமாக இருக்கிறது.

ருத்ர ப்ரவாகமாக தொடங்கிய ஆறு ஓட்டத்தின் போக்கில் விழுந்து எழுந்து நிதானமாகி நடக்கிற சித்திரம் மனதில் வந்து போகிறது.

இந்த அறுபது வயதில் வாழ்வின் எதார்த்தங்களை கேள்வி இன்றி ஏற்றுக்கொள்கிறார். அதே சமயம் பயமும் பதட்டமும் கோபமும் கொண்ட அம்மாவாகவும் இருக்கிறார். வாழ்வின் நிலையாமை அவரில் உருவாக்கிய சிறிய தெளிவு உண்டு. ஒரு பொட்டு ஔி அது. அது ஔிர வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன். 



அம்மா பேசும் போது இயல்பாக பழமொழிகள் கலந்து பேசுவார். இன்று பேசிக்கொண்டிருக்கும் போது 'ஒட்டை சுரைக்குடுக்கை...காத்தடிச்சா ஒன்னுமில்லை' என்றார். இதை மனதில் வைத்திருந்தால் எப்போதாவது சட்டென்று நமக்கு ஏற்பது மாதிரி ஏதாவது தோன்றும்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 06, 2024 11:18
No comments have been added yet.


கமலதேவி's Blog

கமலதேவி
கமலதேவி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow கமலதேவி's blog with rss.