இலக்கணம் பற்றிய கருத்தரங்கம் –
தமிழ் இலக்கண மரபுகள் என்கிற தலைப்பில் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், அறிவியல் மற்றும் கலையியல் புலம், தமிழ்த் துறை ஒருங்கிணைத்த ஆறு நாள் (02.09.2024 – 07.09.2024) – இணைய வழி – ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கில் பங்கேற்றேன்.
பொதுவான இலக்கண மரபுகள் பற்றிய பேரா. இரா. சீனிவாசன் அவர்களின் விரிவான முதல் நாள் உரையுடன் தொடங்கிய நாட்கள்; எழுத்து, சொல், அகத்திணை, யாப்பு, அணி ஆகிய இலக்கணங்களின் வளர்ச்சி குறித்து அருமையான அறிமுகம், மற்றும் விரிவான ஆய்வுரைகளாக நிகழ்த்தப்பட்ட உரைகள்.
முனைவர்கள் ஹெப்சி ரோஸ் மேரி, சீ. சரவணஜோதி, க. சுந்தரபாணியன், கி. காவேரி, அ. சதீஷ் என இத்துறைகளில் ஆய்வு மேற்கொண்டு முனைவர்பட்டம் பெற்று, தற்போது தென்னிந்தியாவின் வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் ஆசிரியராக, உதிவி, இணைப் பேராசிரியர்களாக இருப்பவர்கள் உரையாற்றுநர்களாக வந்திருந்தார்கள்.
எனக்கு எழுத்திலக்கணம் பிடிக்காது; அதில் சுவாரசியம் குறைவு. யாப்பிலக்கணம் என்றால் கசக்கும்; காரணம், அது கடினம் – போதாக்குறைக்கு நான் நவீனக் கவிஞன் வேறு – என்றபோதும் இவ்விரு துறைகள் உட்பட ஆர்வத்தினை ஏற்படுத்தி இருக்கும் அமர்வுகள்.
சொல்லிணக்கன மரபுகள் குறித்த உரை மட்டும் தொல்காப்பியம் – வீரசோழியமாக என்பதாக இருந்துவிட்டது; பொருளிலக்கண மரபு குறித்த விரிவான தலைப்பு பேச்சின் போது அக இலக்கண மரபான நேரங்கருதி சுருக்கிக் கொள்ளப்பட்டது. உரை எல்லையைப் பொருத்து இரண்டும் செறிவான உரைகளே.
யாப்பிலக்கணம் பற்றிய முனைவர் சதீஷ் பேசிய உரையைக் கண்டு ஆச்சரியம் தாளவில்லை; எவ்வளவு பெரிய வரலாறு எத்தனை எத்தனை மாற்றங்கள். இதனால்தான் இதைக் கடினம் என்றேன். அன்றி, எனக்கு இதற்குத் தான் இந்தப்பக்கம் வருவதில்லை என்று நினைப்பு மீண்டும் வந்துபோன போதும் நல்ல அனுபவமாக அமைந்தது.
உரை அளவில் சிறப்பாகப் பேசியவர்கள் உண்டு. உரையாடலில் தங்களுடைய முழுப் பரிமாணத்தையும் வெளிப்படுத்தியவர்கள் உண்டு. இருநிலைகளிலும் சிறப்பாகப் பேசியவர்களும் உண்டு.
எனக்குத் தனிப்பட்ட வகையில், காவேரி அவர்கள் பேச்சு எனக்கு மிகவும் நெருக்கமாக அமைந்திருந்தது; அதற்குக் காரணம் அவர் பேசிய அணியியல் என்பது சமகால கவிதையியலுக்கும் அணுக்கமாக வருவது என்பதால் ஏற்பட்ட உணர்வு அது.
என்னுடைய எதிர்ப்பார்ப்பு பெரும்பாலும், இவ்வித வளர்ச்சியில் உரையாசிரியர்களின் பங்கு என்னவாக இருந்தது என்பதைப் பற்றிய எனது சொந்த ஆய்வுத் தொடர்பான ஆர்வமாக அமைந்தது. அது இயல்புதானே?? எனது கேள்விகளின் போது கிடைத்த பதில்கள் உதவியாக இருந்தன. அதுவன்றி, மொழியியல் நோக்கில் இவ்வளர்ச்சி எத்தகையது என்பது பற்றியும் நான் அறிந்துகொள்ள முற்பட்டேன்; அது பிறிதொரு தளம் என்பதையும் நான் அறிவேன்.
நிகழ்வினை ஒருங்கிணைத்த அன்பின் அண்ணன் முனைவர் ஜெய்கணேஷ் (பா. இளமாறன்), இரஞ்சன் (அறிமுகமில்லை) ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இவர்களுக்கு உதவியாக இருந்த ஏனைய எஸ். ஆர். எம். தமிழ்த் துறையின் தலைவர் முதலானோருக்கும் எனது அன்பு.
நிச்சயம் எனது வருங்கால ஆய்வுகளில் இத்துறைகள் பற்றியப் புரிதல்கள் பாதிப்பினைச் செலுத்தும் என்று நினைக்கிறேன்.
விரைவில் நூலாகக் கொண்டு வாருங்கள்; காத்திருக்கிறேன் 
நன்றி அண்ணா பா. ஜெய்கணேஷ்
சண்முக. விமல் குமார்
றாம் சந்தோஷ் வடார்க்காடு's Blog
- றாம் சந்தோஷ் வடார்க்காடு's profile
- 2 followers

