கட்டுமரங்கள் [2024 ஆம் ஆண்டு]

சரியாக பத்துஆண்டுகளுக்கு முன் 2014 ஜனவரியில் கன்னியாகுமரிக்கு சென்றோம். உறவுகளில் ஒரு இருபது பேர் சேர்ந்த பயணம். அண்ணன் மகனிற்கு திருச்செந்தூரில் மொட்டை போடுவதாக வேண்டுதலை முடித்துக்கொண்டு நாகர்கோயில் நாகராஜா கோயில், கன்னியாகுமரி குமரியம்மன் கோயில் மற்றும் விவேகானந்தர் பாறை, காந்தி மண்டபம் காமராஜர் நினைவகம் காவிரி பூம்பட்டினம் போன்ற இடங்களுக்கு சென்றோம். சிறுவயதிலிருந்து பள்ளி கல்லூரி சுற்றுலாவில் ஐந்தாறு முறை இந்த இடங்களுக்கு சென்றுள்ளேன். கொற்றவை வாசித்தப்பின் காவிரி பூம்பட்டிணம் கடற்கரையில் செயற்கை அலைதடுப்பு கற்களில் அமர்ந்திருந்த போது மிகவும் உணர்ச்சி வயப்பட்டிருந்தேன். காலத்தின் மடியில் தன் செல்வங்களை ஒப்படைத்து அமர்ந்திருந்த கிழவி போல காவிரி பூம்பட்டிணம் அமர்ந்திருந்தது. நாலங்காடி அல்லங்காடி சதுக்க பூதம் எல்லாம் இங்கு தானே இருந்திருக்கும் என்று சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தேன். அதே போல திருச்சேந்தூர் தேரிகாட்டு செந்நிலம் மனதை வியாப்பித்திருந்தது. 


விவேகானந்தர் பாறைக்கு படகில் ஏறி லைஃப் ஜாக்கெட்டை மாட்டியதும் மனம் துறுதுறு என்று இருந்தது. வள்ளுவரையும் விவேகானந்தர் பாறையையும் கடலையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தேன்.

திருச்செந்தூர் கோயிலுக்குள் என்னை உள்ளே வரவேண்டாம் என்று குடும்பத்தில் சொல்லிவிட்டார்கள். [பெண்கள் இன்ன நாளில் வரலாம் வரக்கூடாது என்ற நம் நம்பிக்கை காரணமாக] அண்ணன் 'விடு.. நாளைக்கு நாகர்கோயில்,கன்னியாகுமரி, விவேகானந்தர் பாறைக்கெல்லாம் போகலாம்," என்றான். 

இவர்கள் கோயிலில் குமரனின் தரிசனதிற்காக நிற்கும் போது நான் கடற்கரையில் கொண்டாட்டமாக திரிந்தேன். வரிசையில் நிற்க முடியாத  அம்மாச்சி என்னுடன் இருந்தார்கள். 'உனக்கு நல்லா சௌகரியமா போச்சு' என்று சிரித்தபடி ஓரிடத்தில் நிழலில் அமர்ந்து என்னை பார்த்துக்கொண்டிருந்தார்கள். 'கடல் அலையில இருக்கான் குமரன்' என்று அம்மாச்சியிடம் சொன்னேன். சூரபதுமனுடன் போர் செய்யும் போது இந்த அலைகள் மாதிரியான சீற்றத்துடன் இருந்திருப்பான் என்று தோன்றியது. கோயிலிருந்து வள்ளி குகைக்கு செல்லும் பாதையில் இருந்து கைப்பிடி சுவருக்கு கீழே எட்டிப்பார்த்தால் கடலின் சீற்றத்தை நன்கு உணரமுடியும்.





விவேகானந்தர் பாறைக்கு சென்றதும் அங்கிருந்து வள்ளுவரை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆளாளுக்கு பிரிந்து அங்கங்கே இருந்தோம்.

அந்த ஆண்டு எழுத்தாளர் ஜெயமோகன் வலைதளத்தை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். எஸ்.ராவின் வழியே ஜெ. இவர்கள் இருவரையும் ஒரே சமயத்தில் வந்தடைந்தேன். பல கதவுகளில் மோதி திறந்த கதவுகள் இவை. வாசிப்பில் இவர்களிடமிருந்து  பல இலக்கியகர்த்தாக்களிடம் சென்று கொண்டிருக்கிறேன். 'எழுதனும்' என்பது பதின்வயதில் உண்டான கனவு. என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெரியவில்லை. 

விவேகானந்தர் பாறையில் நிற்கும் போது மனதில் அத்தனை அலைகள். கல்லூரி முடித்து உள்ளூர் பள்ளிக்கூடத்தில் தற்காலிக ஆசிரியராக இருந்தேன். ஊர் நூலகத்திலிருந்து காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட புதுமைப்பித்தனின் சிறுகதைகளின் முழுதொகுப்பும் வாசித்தப்பின் அசோகமித்திரன்,ஜெயகாந்தன்,நீல பத்மநாபன்,நாஞ்சில்நாடன்,வண்ணதாசன் ,கி.ராஜநாராயணன் என்று நூலகத்தில் இருந்த புத்தகங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். லௌகீகம் ஒரு பூதம் போல வாழ்க்கை முன்பு நின்றது. என்னை பார்த்த பெரியய்யா [பெரியதந்தை], "ஏம்மா...ஒரு மாதிரி இருக்க. அந்தப்பக்கம் நோட்டு புக்குலாம் இருக்கு. போய் வாங்கிக்க," என்றார்.

அவருடன் அந்த இடத்திற்கு சென்றேன். நாள்காட்டி ,புத்தகங்கள் ,நாள்குறிப்பு என்று அனைத்திலும் விவேகானந்தர் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தார். நான் ஒரு நாள்குறிப்பேடு வாங்கினேன்.


இன்றுவரை அதில் முக்கியமான நிகழ்வுகளை குறிப்பது வழக்கம். எனக்கு அன்றாடத்தில் முக்கியமான நிகழ்வுகள் என்பது வாசிப்பது, எழுதுவது. பின் புத்தகம் வெளியாவது.

அன்று அந்த டைரியுடன் கடலை  பார்த்துக்கொண்டு நின்றேன். விவேகானந்தரின் வரிகள் மனதில் ஓடின. சிறுவயதிலிருந்து இராமகிருஷ்ண மடத்தின் வெளியீடான மாணவர்களுக்கான  ராமகிருஷ்ணவிஜயம் புத்தகம் மாதமாதம் வீட்டிற்கு வரும். சின்னய்யா ஆயுள் சந்தா கட்டியிருந்தார். 

அதன் பின் இரண்டு ஆண்டுகள் கழித்து முதல் சிறுகதையை எழுதினேன். 

2024 லிலிருந்து அந்த நாளை, அலைகழிப்புகள் மிகுந்த என்னை திரும்பிப்பார்க்கிறேன். இன்றும் அதே அலைகழிப்புகள் உண்டு. ஆனால் இது வேறு. அன்று எனக்கான படகு இல்லை. ஆனால் இன்று எனக்கான கட்டுமரத்தை நான் செய்திருக்கிறேன்.

 [மீன்பிடிப்பதற்கான [என் அன்றாட வாழ்விற்கான] கட்டுமரம் அல்ல. அது வேறு. பொதுவாக மற்ற கிராமத்து பெண்களின் வாழ்க்கை பொன்ற சராசரியான வாழ்க்கை தான் என்னுடையதும். அது கண்ணீரும், மகிழ்ச்சியும்,கோபதாபங்களுமான மத்தியதர வாழ்க்கை. அங்கு நான் முழித்துக்கொண்டு நிற்கும் ஆள். ஆனால் என் அன்றாடத்தை ஈடுபாட்டுடன் முழுமனதுடன் நடத்திசெல்கிறேன். அன்றாடமும் நமக்கு பலவற்றை கற்று தருகிறது. ]

 முன்னோடிகளை எழுத்தின் வழியே அவதானித்து, அவர்களின் கட்டுமரங்களில் பயணித்து என்னுடையதை கடலில் செலுத்த பழகியிருக்கிறேன். 

என்னுடைய எட்டாவது நூலிற்கான லேஅவுட் முடிந்து இன்று கிடைக்கக்கூடும். அதற்கான புகைப்படங்கள் பற்றி நேற்று பதிப்பகத்தாருடன் பேசும் போது ," என்னுடைய பழைய புகைப்படங்கள் எதாச்சும் இருந்தால் பயன்படுத்திக்கோங்க," என்று சொன்னேன். அவர்களிடமிருந்து வழக்கம்போல மறுப்பு. ஒரு படம் எடுத்து அனுப்புங்க என்று சொல்லியிருக்கிறார்கள். எனக்கு புகைப்படத்திற்கு நிற்பது சங்கோஜமான விஷயம். [தற்செயல் புகைப்படங்களின் வழக்கத்தை கொண்டு வந்தவர்கள் மனிதாபிமானிகள்]

இந்த ஆண்டு வாசிப்பதும்,வாசித்த புத்தகங்கள் பற்றி தொடர்ந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். எழுத்தாளர் அம்பை பற்றிய கட்டுரை தொடர் முடிந்தது. சொல்வனம் இதழில் எழுதும் சங்கப்பெண் கவிகள் பற்றிய தொடர் ஜனவரி இதழுடன் நிறைவு பெறுகிறது. இன்னும் பல வாசிப்பனுபவக்கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.

இந்த ஆண்டு மூன்று சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். எழுதத்தொடங்கியதிலிருந்து இந்த ஆண்டு தான் மிகக்குறைவான கதைகள் எழுதியிருக்கிறேன்.

இந்த ஆண்டு எழுதிய வெளிச்சம் மற்றும் விக்ரமாதித்தனும் வேதாளமும் என்ற இரு கதைளும் நல்ல வாசிப்பை பெற்றன. கதைகள் பற்றி வாசித்தவர்கள் எழுதிய மின்னஞ்சல்கள் சில வந்தன. வாசிப்போம் நேசிப்போம் குழுவில் விக்ரமாதித்தனும் வேதாளமும் குறித்து ஒரு நாளுக்கு மேல் விவாதம் நடந்தது. அந்தக்குழுவிலிருந்து நிறைய பேர் அந்தக்கதை பற்றி பேசியிருந்தார்கள். 

வெளிச்சம் கதை கொஞ்சம் விவாதமாகி பின் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வாசகசாலை 2025 ஜனவரி இதழில்  'அழல்' என்ற கதை வெளியாகும்.

இந்த ஆண்டு அனைவரையும் போல எனக்கும் புறநெருக்கடிகள் மிகுந்த ஆண்டு. இந்த ஆண்டில் இத்தனை புத்தகங்களை வாசிக்க முடிந்ததும் அவற்றை பற்றி எழுத முடிந்ததும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பெருங்கனவின் வெளி' என்ற கட்டுரை தொகுப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும். எழுதத்தொடங்கியதில் இருந்து இன்று வரை எழுதிய கட்டுரைகளில் இருந்து சில கட்டுரைகளை எடுத்து தொகுத்த நூல். இந்த ஆண்டிற்கு பொருத்தமான நூல். ஒரு வாசகியாக இருந்து எழுதிய கட்டுரைகள். இந்த நூலில் எழுதத்தொடங்கியதில் இருந்து இன்று வரை கட்டுரை எழுதுவதில் என் வளர்ச்சியும்,மாறும் பார்வை கோணமும் இருக்கும்.


வரப்போகும் கட்டுரை தொகுப்பில் இந்தப்படத்தில் உள்ள எழுத்தாளர்களின் கவிகளின் நூல்களை பற்றிய கட்டுரைகள் உள்ளன. இந்தத் தொகுப்பை எழுத்தாளர் அம்பைக்கு  சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.


இந்த புகைப்படம் Budding writer விக்னேஷ்  ஹரிஹரன் எடுத்தது.  [Budding என்ற ஆங்கில வார்த்தை மீது ஒரு மையல்]. வாட்ஸ்ஆப் நிலைகளத்தில் பகிர்ந்திருந்தார்.  இந்தப்படத்தை அவரிடம் கேட்டு வாங்கினேன். புறாவின் முன் குளம். வாசகியும் எழுத்துப்பரப்பும். 

2014 ல் என்னுள் இருந்த அலைகழிப்புகளை, கொந்தளிப்புகளை என்னுடைய இயலாமை என்று நினைத்தேன். அன்றிருந்த நெருக்கமான உறவுகளில் சிலர் இன்றில்லை. ஆனால் என் கதைகளில் ஏதோ ஒரு வடிவத்தில் இருக்கிறார்கள். 

இன்று கொந்தளிப்புகளும் அலைகழிப்புகளும் இயலாமையல்ல என்று தோன்றுகிறது. அது எனக்கு அன்றிலிருந்து இன்றுவரை எழுத்திற்கான வாசிப்பிற்கான விசையாக இருக்கிறது. அன்று அதற்கு மிகவும் பயந்தேன். ஆனால் இன்று அந்த விசைகள் புரிந்து கொள்ளமுடிகிறது. அவைதான் நான்  எழுதுவதற்கு ஆதாரமாக இருக்கின்றன. 

2019 ஜனவரியில் முதல் புத்தகம் வெளியானது. எனக்கான கட்டுமரத்தை செலுத்தத் துவங்கிய சில ஆண்டுகளில் என்னை போன்ற 'கட்டுமரக்காரர்களை' தெரிகிறது. இவை கடலின் சாத்தியங்களை அறிவதற்கான கட்டுமரங்கள். இன்னும் பல கட்டுமரங்கள் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு கரைகளில் வெவ்வேறு அளவுகளில் கடலில் தத்துகின்றன.  அனைத்து கட்டுமரங்களும் இணைந்து காலத்தின் கையில் பெரிய கலமாகும். அந்தக்கலம் நோவாவின் கலம் போல படைப்பிற்கான கலம். எங்களுக்கு முன்பு கலம் செலுத்தியவர்களின் தொடர்ச்சியாக இந்தக்கலமும் புது எல்லைகளைத் தொடுவது இயல்பாகவே நடக்கும்.

அதற்கு நீரும், நீரை பிடித்திருக்கும் நிலமும், காற்றும்,அதை அசைக்கும் வெளியும் துணைநிற்கட்டும்.

எனக்கு இந்த ஆண்டு எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரின் நூல்களிலும் ஆய்வாளர் ஆ.இரா. வெங்கடாசலபதியின் திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908 என்ற நூலுடனும் தொடங்குகிறது. அன்றும் ஆய்வாளர் வெங்கடாசலபதி தொகுத்த புதுமைப்பித்தனின் முழுதொகுப்பிலிருந்து ஒரு புதுவாசிப்பை தொடங்கினேன்.  இது தற்செயலானது . இந்த ஆண்டும் அவர் நூலில் தொடங்குகிறது. எம்.டி. வாசுதேவனாரின் நூல்கள் விரைவில் வந்துவிடும்.


அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

         [ இன்று எடுத்தது...செல்ஃபி எடுத்து சில மாதங்களாகிவிட்டது. இந்தக் கட்டுரை போல என்னை நானே பார்த்துக்கொள்ள...ஒன்றும் பாதகமில்லை. சரியாகவே இருக்கிறது...தொடரலாம்]


எங்கள் ஊருக்கு பக்கத்தில் ஒரு அறிஞர் பிறந்திருக்கிறார் என்று தமிழ்விக்கி வழியே தெரிந்த போது மிகவும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தேன். அந்த ஊரிலிருந்த ஒருவர் கொடுத்த சங்க இலக்கிய புத்தகங்கள் சில அய்யாவிடமிருந்து எனக்கு கிடைத்தன.



பாலகிருஷ்ணப்பட்டியில் பிறந்த பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரி சமஸ்கிருத அறிஞர்.

https://tamil.wiki/wiki/%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%9A%E0%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF

சிலர் அன்றாடத்தை தாண்டிக்கொண்டு தங்களுக்கான கட்டுமரங்களுடன் கடல் நோக்கி செல்வது ஒன்றும் புதிதில்லை. அதுவும்  காலகாலமாக நடப்பது தான்.

மீண்டும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளும் அன்பும்.


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2024 01:21
No comments have been added yet.


கமலதேவி's Blog

கமலதேவி
கமலதேவி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow கமலதேவி's blog with rss.