இற்றைத்திங்கள் அந்நிலவில் :18

 

பெருமழைகாலத்துக்குன்றம்

ஔவையார் நற்றிணையில் ஏழு பாடல்கள் பாடியுள்ளார். 

தலைவியை பிரிந்து சென்ற தலைவன் தேரில் திரும்பிவிருகிறான். அவன் கண்களுக்கு தலைவி காத்திருக்கும் குன்று புலனாகிறது. காயாம்பூ பூத்து நிறைந்திருக்கும் குன்றில் அப்போது தான் பூக்கும்  கொன்றை  போல நீலமலையை பொன்மின்னலின் வெளிச்சம் வெட்டிச்செல்கிறது. அந்த வெளிச்சத்தில் குன்றின் பிளவுகளும் கூட கண்களுக்கு துலக்கமாகிறது. தலைவியின் மாமை நிறத்தை ஒத்த நிறமுடைய மேகங்கள் குன்றை சூழ்ந்து கொள்ள மழை பெய்கிறது. அன் தன் பாகனிடம் மழை காலத்தில் திரும்பி வருவேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். என்னை நினைத்து இந்த அந்தியில் தலைவி கோபம் கொள்ளத் தொடங்கியிருப்பாள். ஆநிரைகளை ஒன்று சேர்த்து இல்லம் திரும்புவதற்காக கோவலர்கள் குழல் ஊதத்தொடங்கிவிட்டனர். இரவு முற்றி செறிவதற்கு முன் நாம் இல்லம் சேர வேண்டும்  சொல்கிறான். மின்னலை காயாங் குன்றத்து கொன்றை என்று ஔவை சொல்கிறாள். மின்னலை பொன் பூவாக மாற்றக்கூடிய அழகிய காதல் இந்தப்பாடலில் உள்ளது.

பெயல்தொடங் கினவே பொய்யா வானம்

நிழல்திகழ் சுடர்த்தொடி ஞெகிழ ஏங்கி

அழல்தொடங் கினளே ஆயிழை

                            நற்றிணை : 371


தலைவி தந்தையால் வீட்டில் கடும்காவலில் வைக்கப்படுகிறாள்.  பிரிவால் உடல் நலியும் தலைவி தன்னை கண்டு தானே உள்ளம் குன்றிப்போகிறாள். அவள் தன் பிம்பத்தை நீரிலோ, ஆடியிலோ கண்டிருக்கக்கூடும். அது கார்காலம். மழையும் காற்றும் வீசுகிறது.  மரங்கள் முறிந்து விழுந்திருக்கின்றன. நெருங்கி வளர்ந்துள்ள வள்ளிக்கொடிகள் சீர்குழைந்து கிடக்கிறன. அது போல நானும், என் கூந்தலும் நலம் கெட்டு கிடப்பதை கண்ட சுற்றத்தார் ஐயம் கொள்கின்றனர். பல நாட்டு நாவாய்கள் நிற்கும் கடற்கரை துறையில் பொதுவில் வைக்கப்பட்ட சாடி போன்று ஆயிற்று என் நிலை என்கிறாள். ஊரார் தூற்றலால் அவளைப் பற்றிய புறணிகள் பலவாராக பெறுகி அவள் மனதை அலைகழிக்கிறது. இப்படியே என் அகத்துக்குள் இருந்து மாய்வேனோ என்று தலைவி கேட்கிறாள்.

பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறை

கலிமடைக் கள்ளின் சாடி அன்னஅம்

இளநலம் இற்கடை ஒழியச்

சேறும் வாழியோ முதிர்கம் யாமே

நற்றிணை: 295

இன்னாரு தலைவி தலைவனை பிரிந்து இன்னும் நான் சாகாமல் இருக்கறேனே என்கிறாள். ஆனாலும் வாழ்கிறேன் என்றும்  சொல்லுவதற்கில்லை. யானை மீதமர்ந்து தன் இருகையால் அளிக்கும் கொடை போல அளவிலாமல் மழை பெய்யும் மாரிக்காலம் இது. மழை வெள்ளம் அரித்து செல்லும் காட்டாற்றின் விளிம்பில் வேரடி மண்ணும் கரைய நிற்கும் மராமரத்தின் தளிர் நான் என்கிறாள்.

வேர்கிளர்  மராஅத்து அம்தளிர் போல

 நற்றிணை : 381

இன்னொரு பாடலில் பொருள் தேடியோ ,போருக்கோ தலைவன் பிரிந்து செல்வதை ஊரார் இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள். தலைவி அமைதியாக இருக்கிறாள். அவளை கண்டு மனம் தாளாத தோழி தலைவியை ‘அழகிய கூந்தலை உடையவளே’ என்று அழைக்கிறாள். தலைவன் திரும்பி வரும் வரை நாம் இந்த இல்லத்தை காத்து வாழ வேண்டுமாம். மழை பெய்து குன்றே நனைந்து கிடக்கும் இரவில் நாம் தனித்தருப்பது ஒரு நாள் கூட முடியாது. ஆனால் இந்த ஊர் எத்தனை காலமானாலும் காத்திரு என்று சொல்வதை கேட்டால் சிரிப்பு வருகிறது என்கிறாள். 

பெருநகை கேளாய் தோழி காதலர்

ஒருநாள் கழியினும் உயிர்வேறு படூஉம்

பொம்மல் ஓதி நம்இவண் ஒழியச்

செல்ப என்பதாமே சென்று

நம்வினை முற்றி வரூஉம்வரை நம்மனை

வாழ்தும் என்ப

நற்றிணை : 129

அந்த நாளின் அந்திப்பொழுது அது. நெய்தல் மலர் கூம்பிவிட்டது. நெடுவான் கடக்கும் சூரியன் குன்றின் பின்னால் மறைகிறது.  அதன் ஔியால் வானம் சிவந்து தணியும் அந்தியில் மணிகள் ஒலிக்க தலைவனின் தேர் சென்ற பாதையும் பார்வையிலிருந்து மறைகிறது. தேர் சென்ற பாதை மறைந்து ஊரும் மறைகிற இரவு வந்துவிட்டது. அங்கே நானும் தலைவனும் மகிழ்ந்திருந்த பொழில் இனி என்னாகும்? என்று தலைவி தோழியிடம் கேட்கிறாள்.

யாங்கு ஆவதுகொல் தானே தேம்பட

ஊதுவண்டு இமிரும் கோதை மார்பின்

மின்இவர் கொடும்பூண் கொண்கனோடு

இன்நகை மேவிநாம் ஆடிய பொழிலே

நற்றிணை : 187

பரத்தை கூற்றாக வரும் ஒரு பாடலில் பரத்தை தலைவியை கேலி செய்கிறாள். தலைவனை தன்னிடம் இருத்திக்கொள்ள முடியாத தலைவியின் உறக்கத்தை, கவனமின்மையை நீர்நாயின் உறக்கத்திற்கு ஒப்பாக கூறுகிறாள். புதுவருவாயை உடைய வளமான மருத நிலத்தின் பொய்கை நிறைந்திருக்கிறது. அங்கு வாளை மீன்கள் தீட்டிய வாள் போல மின்னி விளையாடி நீருக்குள் மறைகிறது. அவற்றை கவனிக்காமல் அதன் கரையில் பசியோடு நீர்நாய் உறங்குகிறது என்று தலைவனை நீருக்குள் விளையாடி மறையும் வாளை மீனிற்கு ஒப்பாக பரத்தை கூறுகிறாள்.

வாளை வாளின் பிறழ நாளும்

பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும்

நற்றிணை : 390

மரங்களெல்லாம் செழித்து அடர்ந்த காட்டில் ஞெமை மரம் மட்டும் வாடி நிற்கிறது. அதில் அமர்ந்துள்ள கோட்டான் குழறுகிறது. பொன் உருக்கி நகை செய்யும் பொற்கொல்லரின் பொற்பட்டறையில் கேட்கும் இனிய மென்மையான தட்டல் ஒலி போல கோட்டான் குரல் எழுப்பும் பனிகாலத்தில் மணிகள் சத்தமிடும் தேரில் அவன் பிரி்ந்து செல்கிறான். செல்லும் வழியில் மழை வருமோ? மழை வந்தால் குளிரில் அவன் என்ன செய்வான்? என்று தலைவி வருந்துகிறாள். 

பொன்செய் கொல்லனின் இனிய தெளிர்ப்பப்

பெய்ம்மணி ஆர்க்கும் இழைகிளர் நெடுந்தேர்

நற்றிணை : 394

பிரிவு என்ற ஆடி காதலை பலபிம்பங்களாக பெருக்கிக்காட்டுவதை இந்தப்பாடல்களில் உணர முடிகிறது. 

காடு செழிக்கும் மழையில் வாடி நிற்கும் ஞமை மரம் யார்?

காயாங் குன்றத்து பொன்கொன்றையாக மலர்வது எது?

வேர் மண் நீங்க பிடிப்பின்றி நிற்கும் மராமரத்தின் தளிராவும் வேராகவும் இருப்பது எது?

இந்தப்பாடல்களில் தலைவி தன் மனதை திருப்பி திருப்பி தன் பரிவின் ரூபங்களை காட்டுகிறாள்.

கார்காலத்தின் துவக்கத்தில் மின்னல் போல பூக்கும் பொன்மலர் போன்றது அவள் காதல்.  தலைவனின் பிரிவால் பெருமழை குன்றை நனைப்பதை போல பிரிவு துயரின் கண்ணீரால் அவள் நனைகிறாள்.

 மழையால் சீர்குழைந்த குன்றம் என்பது அவளே தான். விடாத பெருமழை போல பிரிவுத்துயர் அவளை குழைத்துப் போடுகிறது. அவளின் மனதை காட்டாற்று வெள்ளம் மண்ணை அரித்து செல்வதைப்போல அவள் மனதை பிடிமானம் இழக்கச் செய்கிறது. அவளின் துயரம் குன்றே நனைய பெய்யும் மழை போன்றது.

இந்த பாடல்களில் ஔவை காட்டும் குன்றின் சித்திரங்கள் அனைத்தும் சேர்ந்து பிரிவின் புற வடிவமாக நம் மனதில் விரிகிறது. இப்போது புயலால் பெய்த தொடர்மழையில் கொல்லி மலையின் குன்றுகளில் புதுப்புது நீர்கால்கள் வழிந்து செல்வதை பார்க்கும் போது அது தலைவியின் கண்ணீரோ என்று தோன்றியது.



 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2024 16:20
No comments have been added yet.


கமலதேவி's Blog

கமலதேவி
கமலதேவி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow கமலதேவி's blog with rss.