லாவண்யா சுந்தரராஜனின் கதைகள்

 எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜனின் கதைகள் பற்றி

ஆதியிலிருந்தே காட்டிற்கும் மனிதர்களுக்குமான  பிடிமானமும் விலகமுமான உறவே மனிதகுலத்தை இன்றுவரை நகர்த்தியுள்ளது. ஒரு உக்கிரமான விட்டுவிட முடியாத பிணைப்பும், தவிர்க்கவே முடியாத விலகலுமான உறவு என்று சொல்லலாம். காட்டிலும் இருக்க முடியாது, காட்டை தவிர்க்கவும் முடியாத வாழ்வு நம்முடையது. முற்றிலுமாக நகரமாகிவிட்ட இடத்தையும் ‘கான்க்ரீட் காடு’ என்று தான் சொல்வோம். எவ்வளவு இடப்பற்றாக்குறையிலும் சிறுதுளசி செடி அல்லது டேபிள் ரொஸ் தொட்டிக்காவது வீட்டில் இடம் தேடுவோம். இல்லாவிட்டாலும் நமக்கு சுவற்றிலாவது பச்சையாக வரைந்துவிட வேண்டும்.

கடுமையான போக்குவரத்து நெரிசல் மையம் கொள்ளும் இடங்களிலும், அதிவேகமெடுக்கும் சாலைகளின் நடுவிலும் பூச்செடிகளுக்கும் தீக்கொன்றை மரங்களுக்கும் இடம் கிடைக்கிறது. கொஞ்சம் முன்னால் சென்றால்  சாலைகளின் இருபக்களிலும் புளியமரங்கள் அணிவகுத்து நிழல் காத்து நின்றன. இன்று சாலைகளை அகலப்படுத்தி விரைவாக வளரும் மரங்கள், அழகாக பூக்கும் மரங்கள், கரும்புகையை அதிகமாக உறிஞ்சுவதாக நம்பப்படும் செடிகள் நடப்படுகின்றன. பெரும்பாலும் வண்ண வண்ண அரளிச்செடிகள். சாலைகளும் அதன் ஓரங்களும் தேவைக்கேற்ப மாற்றப்படுகின்றன. மனிதனுக்கு என்றில்லை யானைக்கென்றும், எறும்புக்கென்றும் அதனதன் பாதை. உண்மையில் எதிர்ப்படும் சவால்களை அழித்து செம்மைபடுத்தி நம் பயணத்தை துரிதப்படுத்தி, நம்மை ஒன்றிணைத்துக்கொண்டு இன று வரை வந்தது நம் வரலாறு. பறவைகளுக்கான சாலை அவற்றின் உள்ளுணர்வில் உள்ளது. அவை காட்டின் கிளைகளில் அமர்ந்து வானம் அளப்பவை. நாம் மண்ணில் அமர்ந்து வானம் பார்ப்பவர்கள்.


                       எழுத்தாளர் லாலண்யா சுந்தரராஜன்

மானுடனின் உள்ளுணர்வு என்பது அடுத்தடுத்த சாத்தியங்கள் விதைகொண்ட நிலம். இம்மண்ணில் அடுத்த புதிய சாத்தியம் என்ன என்பதே மானுடத்தின் சாலையில் அடுத்த அடி. என்றாலும் உள்ளுக்குள் விட்டுவந்த நீண்ட பாதையும், முன்னால் விரியும் பாதையும் இருக்க என்றுமே மானுடம் சந்தியில் அடுத்த சாத்தியம் நோக்கி நிற்கிறது.

 அன்றாடவாழ்வில்,அமைப்பு என்ற அதிகாரத்தில்,நவீன வாழ்க்கை உருவாக்கியுள்ள தகவல் தொழில்நுட்ப வாழ்வில்,பெண்வாழ்வில் இன்றைய சாத்தியங்களில் நிற்பவை லாவண்யா சுந்தரராஜரனின் படைப்புகள். 

உதாரணமாக இவரின் முரட்டு பச்சை என்ற தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழிலில் உள்ளவர்களின் கதைகள். இந்தத் தொழிலில் உள்ளவர்களின் உறவு நிலையில் உண்டாக்கியிருக்கும் அலைவுகள்,  அதுசார்ந்து உண்டாகியிருக்கும் தொழில்கள் அவற்றில் உள்ள மனிதர்களின் சிக்கல்கள் என்று இந்த தொகுப்பு விரிகிறது. குழுவாக இயங்க வேண்டிய இந்த தொழிலில் ஆண் பெண் உறவு சார்ந்து பேசும் கதைகள் உள்ளன. பெண் அதிகாரியாக இருக்கும் போது ஏற்படும் ஈகா,அலுவலகத்தில் உதவியாளர்களுக்குள் உள்ள மோதல்கள்,அந்த தொழிலில் உள்ள அடுத்தடுத்த எதிர்பாராத சிக்கல்கள்,அந்த தொழிலில் உள்ள மனித வளத்துறை என்று கதைகள் தகவல் நுட்ப களத்தை விரிக்கின்றன. 

மேலும் இந்தக் கதைகள் மேற்கொண்டிருக்கும் ஃபாவம் அல்லது உணர்வு நிலை முக்கியமானது. கதையின் களத்திற்கும் கதைக்கும் வலு சேர்க்கும் பதட்டமும் அவசரமும் அதனால் ஏற்படும் பிழைகளுமாக கதைகள் நகர்கின்றன. இன்றைய வாழ் சூழல் தரும் பதட்டத்தை கதை விவரிப்பு கொண்டுள்ளது. மேலும் ஒரு நிலத்தில் நிலைகொள்ளும் கதைகளும் இல்லை. மனிதர்களுக்குமே ஸ்திர மனநிலை இல்லை. வாழ்க்கை அடித்து செல்லும் வெள்ளமான ஓடிக்கொண்டிருக்க ஆழத்தில் அன்றன்றைய தொழில் நுட்ப சிக்கலுக்கு விடை தேடிக்கொண்டிருக்கும் இன்னொரு மனம் தனித்து இயங்குகிறது. சுவர்களால் ஆன சுழல் பாதை. 

லாவண்யாவின் முதல் சிறுகதை தொகுப்பு புறாக்களை எனக்கு பிடிப்பதில்லை. அதில் அனைத்து கதைகளும் பெண்களை மையமாக காண்டவை. இந்தக்கதைகள் பூடகமாக சொல்வதை தன் வெளிப்பாட்டு முறையாக கொண்டுள்ளன. உதாரணத்திற்கு முற்றத்து அணில்,சின்னலட்சுமி கதைகளை சொல்லலாம். முற்றத்து அணில் கதையில் வரும் அண்ணி என்ன நினைக்கிறார் என்றோ,சின்ன லட்சுமியில் வாழைமரம் ஏன் வெட்டப்படுகிறது பின் மறுபடி சிதைக்கப்படுகிறது என்பதோ பூடமாகவே உள்ளது. 

சப்தபர்னி மலர்கள், பூமரம்,விடு பூக்கள் போன்ற கதைகள் ஒரு முப்பட்டகத்தின் வெவ்வேறு கோணங்கள் என்று சொலல்லாம். இந்தக்கதைகளை நினைக்கும் போது மலைமறைவு பிரதேசம் என்ற சொல் மனதில் வருகிறது. சப்தபர்னி மலர்களில் ஒரு பெண் தாய்மையை உணரும் இடமும்,பூ மரத்தில் குழந்தை இல்லாத பெண்ணின் அகதத்தளிப்பும்,கவன ஈர்ப்பு மனநிலையும்,விடுபூக்களில் தாயின் சுயநலமுமாக தாய்மை என்ற கண்ணாடி முன் வெவ்வேறு உணர்வுகளுடன் நிற்கும் பெண்களின் கதைகளாக உள்ளன.

இதில் உள்ள செண்பாசித்தி என்ற கதை கி.ரா வின் கன்னிமை என்ற கதையின் இன்னொரு பரிமாணம். கி.ரா காதலனும் கணவனுமான ஆண் பார்வையில் அந்தக்கதையை எழுதியிருப்பார். இதில் ஒரு மகனின் பார்வையில் லாவண்யா எழுதியிருக்கிறார். தன் தாயின் தங்கையான சித்தியை தன் குழந்தை பருவத்திலிருந்து பார்க்கும் ஒருவனுக்கு அவளுக்கு திருமணமானப்பின் அவளில் ஏற்படும் மாற்றங்கள் அவனுக்கு அவள் மீது மெல்லிய வெறுப்பாக படர்கிறது. அவன் வளர்ந்து சிகரெட் புகைப்பது அவளுக்கு எப்படி தாளமுடியாத எரிச்சலை தருகிறதோ அதே போல தன் குடும்பத்திற்காக சிக்கமாக செலவு செய்யும் சித்தி அவனுக்கு எரிச்சலை தருகிறாள். உண்மையில் இருவருமே சேர்ந்து அவரவர் வாழ்வின் மாறுதல்களின் காலகட்டத்தில் இருக்கிறார்கள். சித்திக்கும் மகனுக்குமான வயது வித்தியாசம் குறைவாக இருக்கிறது. இவன் தாயை இழக்கிறான். அவள் குடும்பத்தை பெறுகிறாள். வேலை நிமித்தம் ஒன்றாக வசிக்கும் போது அவனுள் உறைந்துள்ள சித்தி என்ற ஓவியம் தன் வண்ணங்களை இழப்பதும், இவளுள் உள்ள மகன் அன்னியப்படுவதும் அன்றாட போராட்டமாக இருக்கிறது. குறிப்பிட்ட வயதிற்கு மேல் அப்பா பிள்ளைக்குமான விலகல் போன்ற ஒன்று இந்தக்கதையில் உள்ளது. இந்தக்கதையில் அவன் அம்மா போல நினைக்கும் சித்தி அப்பா போல நடந்து கொள்வதே அவனை தொந்தரவு செய்கிறது.

அவன் இனி காப்பி குடிக்க மாட்டான் என்ற கதையில், தைவானில் கைபேசி தயாரிப்பு நிறுவனம் ஒன்றில்  இந்தியாவிலிருந்து வேலைக்கு செல்லும் கதை சொல்லிக்கு கியான் ஹஷு என்பவர் பயிற்சியாளாகிறார். கியான் கொஞ்சம் முரட்டுத்தனமான தன்னிச்சையான இயல்பு கொண்ட கடின உழைப்பாளி. கியான் படிப்படியாக எப்படி அவன் இயல்புகளெல்லாம் மாறி இயந்திரம் போலாகிறான் என்பது கதை சொல்லியின் பார்வை வழி சொல்லப்படுகிறது.

ஊமை வெயில் என்ற கதையில் அர்ச்சனாவை வளர்த்த குழந்தை இல்லாத மாமா வயோதிகத்தில் தன் துணையை இழக்கிறார். அவளுடன் வந்து வசிக்கும் அவரை அவள் எப்போதும் கத்திரிப்பது போன்றே பேசுகிறாள். அவர் தணிந்து பேசுவது அவளுக்கு எரிச்சலாக இருக்கிறது. ஒருகட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறலாம் என்று நினைக்கும் அவருக்கு பேரனின் கைப்பிடிப்பும், சிரிப்பும், எங்க தாத்தா என்ற அவனின் சொல்லும் அவர் மனதை சாந்தபடுத்துகின்றன. இதே போல மருவூ என்ற கதையில் நடுவயதில் மனைவியை இழக்கும் ஒருவர் சந்திக்கும் மனப்போராட்டங்கள் கதையாகியிருக்கிறது. அவள் வீட்டிற்கு என்னென்ன செய்தாளோ அதை குறையில்லாமல் தானும் செய்ய நினைக்கிறார். சட்டென்று ஒரு முக்கியமான நாளில் மகன் தன் அப்பாவில் அம்மாவை காண்கிறான் . இந்தக்கதையில் உள்ளூர நான் உணர்ந்தது கிட்டத்தட்ட தாயை இழந்த வளர்ந்த ஆணின் இழப்பு போன்ற ஒன்றை. அதுவரை தன் வேலை விட்டு வந்து தெருவில் மகனுடன் விளையாடும் அந்த மனிதர் மனைவியின் இழப்பிற்கு பிறகு பொறுப்பாகிவிடுகிறார். மகன்கள் மீது கோபம் கொள்ளாமல் சாந்தமாக மாறும் போதும்,தன் அம்மாவுடன் சமையலறையில் வேலை செய்யும் போதும், அண்டை வீட்டாருடன் பழகும் போதும் மனைவியை ‘இமிட்டேட்’ செய்கிறார். ஒரு இழப்பின் கதையில் துயரில் வெளிப்படும் சிறுபிள்ளைத்தனம் இந்தக்கதையின் பேசுபொருளுக்கு வேறு நிறத்தை தருகிறது. வேப்பங்காய் பழுப்பதை  போன்று துயரம் இங்கு அவளாகவே மாறுவதில் வேறொரு சுவை பெறுகிறது.



சுயம்பாகி என்ற கதை தகவல் தொழில் நுட்பம் உருவாக்கும் உபதொழில் கதை பற்றிய கதை. தகவல் தொழில்நுட்ப அலுவலகம் ஒன்று தன் ஊழியர்களின் உணவிற்காக சமையல் வேலை சார்ந்த நபருடன் ஒப்பந்தம் செய்கிறார்கள். அலுவலகத்திற்கு  அருகில் உணவு கூடமும், விருந்தினர் அறையும் உள்ளது. நல்ல வருமானம், படித்த படிப்பிற்கு வேலை என்று ஒரு இளைஞன் அங்கு வேலையில் சேர்கிறான். ஆனால் அங்கு  சமையலை விட தனிநபரை கவனிக்கும் வேலையே அதிகமாக உள்ளது. நிறுவன ஊழியர்கள் தங்கும் இடத்தை, கழிவறையை தூய்மை செய்வது,அவர்களின் மனைவிகளுக்கு முடியாமலானால் வீட்டு வேலை செய்ய செல்வது,குழந்தைகளை கவனிப்பது என்று தகவல் தொழில் நுட்ப ஊழியர்களின் வேலை நேரம் பாதிக்கப்படாத வகையில் நிர்வாகமும் ஒப்பந்ததாரரும் செய்யும் ஏற்பாடு அது. தலைமுறை தலைமுறையாக சமையல்காரர்களாக இருந்த குடும்பத்திலிருந்து வரும் இளைஞனின் மனதில் இந்த வேலைக்காரவேலை நல்ல சம்பளம் என்பதை மீறி ஒரு வலியாக இருக்கிறது. ஒரு இக்கட்டான கட்டத்தில் அவனுடைய தாத்தா சொல்வது அவனுக்கு நினைவிற்கு வருகிறது. ‘விருந்தினர் விருந்துண்ட புண்ணியம் அவர் சாப்பிட்ட எச்சில் இடத்தை துடைக்கறப்ப தான் கிடக்கிறது’ என்று தாத்தா தொடங்கி வைத்த உண்டித்தொழிலில் இந்த காலத்தில் இதெல்லாமும் உண்டு என்று தாத்தா எப்போதோ சொன்னதை நினைத்தபடி இயந்திரத்தனமாக அடுத்த வேலைக்கு தயாராகிறான்.

இதுவே ‘லாவண்யாவின் சந்தி’ என்று சொல்லலாம். இது அந்த சமையல் வேலைக்கு வந்த பையனிடம் ஏற்படும் மாற்றம் மட்டுமல்ல தகவல் தொழில்நுட்ப உயரதிகாரி,மணமாகி வரும் பெண் வரை இது போன்ற ஒரு மாற்றம் ஏற்படுத்தும்  வலிகளால் ஆன தருணங்கள் கதையின் பேசுபொருளாக உள்ளது. உறவுகளில் கூட அந்தத்தருணத்தை,அந்த உணர்வுள்ள நிகழ்வுகளை லாவண்யா சென்று தொடுகிறார். உதாரணத்திற்கு அப்பா என்ற கதையை சொல்லலாம்.

மனிதன் இயந்திரத்தனமாகும் சமகாலம் லாவண்யாவை தொந்தரவு செய்கிறது. அவரின் சிறுமி கதைகளை தவிர்த்தால் மற்ற பெரும்பான்மை கதைகளில் இந்த அம்சம் உண்டு. 

இதன் நீட்சியாக காயாம்பூ நாவலிலும் உள்ளது. குழந்தையின்மை என்பது  நாவலின் மைய பேசுபொருள் என்றாலும் கூட இயந்திரதனமான ஒன்றே நாவலின் ஆன்மா. செயற்கை கருத்தரிப்பு மற்றும் அது சார்ந்த மருத்துவ செயல்பாடுகள் அதை மேற்கொள்பவரின் காதல் வாழ்வில் நுழையும் இயந்தரத்தனம் என்று அந்த நாவல் முழுதுமே மனம் சார்ந்த ஒரு கை நீண்டு இயந்திரதனம் கொள்ளும் இன்னொரு இயந்திர கையை பிடித்து வைத்துக்கொள்ள, அதற்கு உயிரூட்ட தவித்துக்கொண்டே இருக்கும். அது இயந்திரத்தின் தொடுகைக்கு சுரக்கும் பசுவின் மடி போன்ற ஒன்றை நம் மனதில் கொண்டு வந்து நம்மை தொந்தரவு செய்கிறது.

விஷ்ணுபுரம் விழாவிற்கு விருந்தினராக செல்லும் எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜனுக்கும் அன்பும் வாழ்த்துகளும்.






 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2024 16:13
No comments have been added yet.


கமலதேவி's Blog

கமலதேவி
கமலதேவி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow கமலதேவி's blog with rss.