இதோ நம் தாய்
எனது முதல் நாவலான இதோ நம் தாய் சால்ட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. 70 பக்கங்களில் மிகச்சிறிய நாவலாக இருந்தாலும் இந்த ஆண்டின் பெரும்பாலான நாட்களில் இதை எழுதுவதில் கொஞ்ச நேரமாவது செலவிட்டிருக்கிறேன். ப. ராமஸ்வாமியின் தம்மபத மொழிபெயர்ப்பை வாசிக்கும்போது நெடுங்கதையாக எழுதத் தொடங்கிய இது நரன் உடனான உரையாடலால் நாவலாக உருப்பெற்றது.

நாவல் என் தோழி கீர்த்திக்கு சமர்ப்பிக்கப்பட்டது. கீர்த்தி சமீபத்தில் எழுதிய இது போன்ற பல உரையாடல்கள் வழி உருவாகி வந்த கருத்துகள் இந்த நாவலின் பகுதிகள் ஆகியிருக்கின்றன.
நாவலில் நண்பர்களுக்கு நன்றி சொல்லவில்லை என்பதால் விஷால் ராஜாவுக்கு தனியாக நன்றிகள் சொல்லவுமில்லை. விஷாலும் நானும் ஒரே காலகட்டத்தில் எழுதத் தொடங்கினோம். பெரும்பாலும் பொதுவான கருத்துகள் எதுவுமில்லை என்ற நிலையிலிருந்த நட்பு, இப்போது நிறைய விசயங்களில் ஒத்துப்போகும் ஒன்றாக மாறியிருப்பது எங்கள் இருவருக்குமே கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. எனது எழுத்துநடை சற்றே செழுமைப்பட்டிருக்கிறது என்றால் விஷாலின் தொடர் விமர்சனங்கள் முக்கியமான காரணம். நாவலின் முதல் வாசகர்களில் ஒருவனான அவனது இந்தச் சிறிய குறிப்பு மனதுக்கு மிகவும் நெருக்கமானது. இந்நாவலின் மீதான என் நம்பிக்கைக்கு இதுவே அடிப்படையும்.
முன்பில்லாத ஒரு முதிர்ச்சி கதை சொல்வதில், கதாபாத்திரங்களை அணுகுவதில் கைக் கூடியிருக்கிறது. “எல்லாமே மாறுகிறது; தினமும் இந்த பூமி கொஞ்சம் உறுமாறுவது போல” – இந்த உவமையை தோற்றுவிக்கும் முதிர்ச்சியையே குறிப்பிடுகிறேன். போலவே போராட்டத்தை பிரார்த்தனை என்று சொல்லும் இடம். புத்தர் மயிர்பிளக்கும் விவாதங்களில் ஆர்வம் இல்லாதவர் என்பது. இதுவரை உன் ஆக்கங்களில் எல்லாம் vulnerabilityஐ அங்கீகரிப்பதில் ஒரு தயக்கம் இருக்கும். அதனாலேயே மொழியில் வடிவத்தில் கவனம் கூடியிருக்காது. தயக்கத்தில் பாதி மட்டும் பேசி முகத்தை திருப்பி கொள்வது போல. ஆனால் இது uninihibited ஆக இருக்கிறது. அதனாலேயே மொழியில் கட்டுப்பாடு இருக்கிறது.
“இதோ நம் தாய்” – ரொம்ப அழகிய தீவிரமான கவித்துவ படிமமாய் உருபெற்றிருக்கிறது. மொத்த குறுநாவலும் தாய்மையை -ஒரு கருத்துருவமாக இல்லாமல்- மனிதர்கள் வாழ்வோடும் நீதியோடும் சக மனிதர்களோடும் வேறு ஜீவராசிகளோடும் கொள்ளும் உறவாக அழுத்தமான முறையில் முன்வைத்திருக்கிறது.
சமூகம் இயல்பாய் ஏற்றுக் கொண்ட வாழ்க்கையை வாழும்போது, “காதலிப்பது, வீட்டில் தனியாக இருப்பது, புத்தகம் வாசிப்பது” இவை எல்லாமே எவ்வளவு மர்மமான விஷயங்கள் என்பது எளிதில் தெரியாமல் போய்விடுகிறது. “மற்றமை”யாகும்போது ஒவ்வொரு அனுபவமும் எவ்வளவு பெரிய தவிப்பின் மேல் உருவாகிறது என்பது புரிய வருகிறது. இந்த குறுநாவல் அதை கைப்பற்றிவிடுகிறது.
இந்து மதம் ஆனந்தியை வெளித்தள்ளும் இடத்தைக்கூட என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால் நானும் அதை உணர்ந்திருக்கிறேன். எங்கேயோ தனிமை அங்கு நிராகரிக்கப்படுகிறது. அது சார்பானது என்றும் இந்து மதம் மேல் பொதுவாக கட்டமைக்கப்பட்டிருக்கும் கருத்துக்களை பிரதிபலிப்பது என்றும் யாராவது சொல்லலாம். அதனாலேயே உன் குறுநாவலும் விமர்சிக்கப்படலாம். அந்த சார்பு இந்த ஆக்கத்தில் பரிசீலிக்கப்படாமல் இருக்கிறது என்பதும் உண்மையே.
சில கதாபாத்திரங்கள் விரிக்கப்பட்டிருக்கலாம். தோழர் சிவா போல. உறவுகளும் பிரிவுகளும் இன்னும் மேலதிகமாக பேசப்பட்டிருக்கலாம். ஆனால் சொல்லப்பட்ட அளவில் அழகான இடங்கள் நாவலில் உள்ளன. மினிமலிஸ்ட்டிக்காக இருக்கும்போதும் ஆரம்பத்து முன் கதையில் ஒரு அபாரமான நம்பகத்தன்மையும் கலையமைதியும் உணர்ச்சிகரமும் அமைந்திருக்கிறது. சென்னையும் அழகாக சுட்டப்பட்டிருக்கிறது. காதலியோடு சென்னையில் சுற்றுவதும்.
எல்லா தாய்களையும் ஏமாற்றியதாக உணர்பவள், இதோ நம் தாய் என்று மீண்டும் ஒரு தாயை கண்டடைகிறாள். அது அவள்தான். நவீனமான முதிர்ச்சியான அசலான ஒரு கதை.
இந்த வருடம் இதல்லாது ஊர்சுற்றிகள் என்ற அறிவியல் புனைவை ஆழி பதிப்பகத்துக்காக மொழிபெயர்த்திருக்கிறேன்.

எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான நட்சத்திரங்களுக்குச் செல்லும் வழி நீலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

ஆழியின் காதலைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது என்ற தொகுப்பில் ஒரு மொழிபெயர்ப்புச் சிறுகதையும், நீலம் சிறுகதைகள்-2 தொகுப்பில் ஒரு சிறுகதையும் இடம்பெற்றிருக்கின்றன. என் மொழிபெயர்ப்புகளைத் திருத்தும்போது முன்பை விட கொஞ்சம் செழுமை கூடியதாக சிறிய பெருமையை உணர்ந்தேன். இனி புத்தகமாக வாசிக்கும்போது எல்லா தவறுகளும் தட்டுப்படும்.
ஆண்டு நிறைவு பெறும் இந்தத் தருணத்தில் விஷாலின் சொற்களையே மீண்டும் நினைத்துக் கொள்கிறேன். Vulnerabilityஐ அங்கீகரிப்பது வாழ்க்கையில் சாதகங்கள் பாதகங்கள் இரண்டையுமே கொண்டுவந்திருக்கிறது. பல சரியான, தவறான முடிவுகளை எடுக்கவைத்திருக்கிறது. எனதும் பிறரதும் இதயங்களை உடைத்து ஒட்ட வைத்திருக்கிறது. ஆனால் தனிப்பட்ட செயல்களையோ முடிவுகளையோ எண்ணி எந்தக் கிலேசமும் இல்லை. எல்லாவற்றையும் தாண்டி இந்த உலகின் நன்மைகளையும் தீமைகளையும் பெரிய மனத்தடங்கல்கள் இல்லாமல் எதிர்கொள்ளும் விழைவை அருளியதற்காக கடவுளை மன்னிக்கவே விரும்புகிறேன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
வயலட்'s Blog
- வயலட்'s profile
- 6 followers
