வயலட்'s Blog
September 25, 2025
குட்டிக் காகம்

இருபது வருடங்களுக்கு முன் நான் நிறைய கதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் எனக்கு கதை எழுதும் ஆர்வமே வருவதில்லை. எப்போதாவது எழுத முயன்றாலும் என் மொழிநடை துருபிடித்துக் கிடப்பதை உணர்ந்து உடனடியாகக் கைவிட்டுவிடுவேன். இருபது வருடங்களுக்கு முன் நான் கதை எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் திடீரென்று பிரபலமாகின, அவ்வளவுதான், இவைதான் இனிமேல் கதை எழுதப் போகின்றன, மனிதர்களுக்கு வேலை இல்லை என்றெல்லாம் பலரும் ஜோசியம் சொன்னார்கள். ஆனால், அப்படியெல்லாம் நடக்க...
July 30, 2025
கடவுள் கொடுக்க முடியாத தண்டனை
நன்றி: அகழ்
ஒரு கலைப்படைப்பு நம் காலத்தில் என்ன செய்யமுடியும் என்பது இதுவரை எனக்கு தெளிவில்லாத கேள்வியாகவே இருந்து வருகிறது. என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியும். எனவே இதற்கு இமயத்தின் உப்புவண்டிக்காரன் நாவல் என்ன செய்கிறது என்பதிலிருந்து பதில் கிடைக்குமா என்று தேடுகிறேன்.
உப்புவண்டிக்காரன் நாவல் கவர்னர் என்ற கதாபாத்திரத்தைப் பற்றியது. கவர்னர் அவன் வீட்டிலிருப்பவர்கள் சொல்வதைக் கேட்காமல் கொரோனாவில் செத்த ஒருவரின் சாவு வீட்டுக்கு போய் வருகிறான். அதனால் அவனும் பின் அவன் பெற்றோரும் அரசால் தனி...
July 27, 2025
மூடுண்ட சமூகங்கள் அடைக்கப்பட்ட கண்ணாடிப் பெட்டிகள்
பத்மபாரதியின் திருநங்கையர் சமூக வரைவியல் என்ற நூல் முதல் பதிப்பாக 2013இல் வெளியாகியிருக்கிறது. 2005இல் எழுதிய சிறிய ஆய்வேட்டின் விரிவாக்கப்பட்ட வடிவம் இது என்கிறார். 2007ஆம் ஆண்டு லிவிங் ஸ்மைல் வித்யாவின் ‘நான் வித்யா’ என்ற சுயசரிதை நூல் வெளியானது. தமிழ் இலக்கிய/சமூக பரப்பில் ஸ்மைலியின் இந்த நூல் பெருமளவு முக்கியமானது. அடையாளம் சார்ந்த பிரச்சினைகள், அனுபவங்கள் என்பதைக் கடந்து தமிழில் முதல்முறையாக ஒரு திருநங்கையின் குரல் தனிநபராக ஒலித்தது ஸ்மைலியின் நூலில் என்றே சொல்லலாம். எனவ...
நகரம் – சி. பி. கவாஃபி
நகரம்
சி. பி. கவாஃபி
நீ சொல்கிறாய், “நான் வேறோர் நாட்டுக்குப் போவேன், வேறோர் கரைக்கு
இதைவிட நல்ல நகரமொன்றைக் கண்டுபிடிப்பேன்.
இங்கே நான் செய்யும் எல்லாம் தவறாய்ப் போக விதிக்கப்பட்டிருக்கிறது
என் இதயம் செத்து புதைக்கப்பட்டதுபோலக் கிடக்கிறது.
இப்படி ஒரு இடத்தில், இன்னும் எவ்வளவு நாள் என் மனதைப் பூஞ்சை பிடிக்கவிடுவது?
எங்கு திரும்பினாலும், எங்கு பார்த்தாலும்,
என் வாழ்வின் பாழடைந்த சிதைவுகள், இங்கே
நான் பல ஆண்டுகளைக் கழித்தேன், வீணடித்தேன், முழுக்க நாசமாக்கினேன்.”
நீ ஒரு புதிய நாட்டைக் கண்டடையப் ப...
July 24, 2025
பொருள் நீக்கிப் பொருள்கொள்ளுதல்
நன்றி: போதி முரசு, ஜூலை இதழ்
பாலினம் என்றால் என்ன? இந்தக் கேள்விக்கான சில பதில்களை பரிசீலித்துப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். முதலாவதாக, நான் அறிந்த வரை சமகால சூழலில் இந்தக் கேள்விக்கு கிடைக்கக் கூடிய சில பதில்களை யோசித்துப் பார்க்கலாம். ஆண், பெண் ஆகியவை பாலினங்கள். உங்கள் பாலுறுப்புகள் என்னவோ அதுவே உங்கள் பாலினம். நீங்கள் எந்த பாலினமாக உணர்கிறீர்களோ அதுவே உங்கள் பாலினம். ஆண், பெண், திருநங்கை, திருநம்பி என ஒருவர் அறிந்திருக்கும் பாலினங்களின் எண்ணிக்கை பட்டியலிடப்படலாம். பாலினம் சமூக ...
March 15, 2025
பறவை
ஜான் பெர்கரின் கிங் – எ ஸ்ட்ரீட் ஸ்டோரி நாவலைப் படித்துக் கொண்டிருக்கும்போது இரண்டாவது அத்தியாயத்தில் இந்தப் பத்தி வந்தது. கிங் என்ற நாய் சில வீடற்றவர்களோடு வசிக்கிறது. தன் தோழியான விக்கோ டயர்களுக்குப் பின்னால் காலைக்கடன்களைக் கழித்துக் கொண்டிருக்க “ஒரு பெண்ணுக்கு மிகச்சிறிய அந்தரங்கமே கிடைக்கும்போது, சில சமயங்களில் சொற்களைக் கொண்டொரு திரைச்சீலை உருவாக்கினால் நல்லது” என்றெண்ணி ஒரு தகைவிலான் குருவியின் கதையைச் சொல்கிறது. நூற்றைம்பது சொற்களுக்குச் சிறிய இந்த பத்தி அத்தனை உணர்வுகளை ஏற்படுத்தியது. ஜ...
December 31, 2024
இதோ நம் தாய்
எனது முதல் நாவலான இதோ நம் தாய் சால்ட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. 70 பக்கங்களில் மிகச்சிறிய நாவலாக இருந்தாலும் இந்த ஆண்டின் பெரும்பாலான நாட்களில் இதை எழுதுவதில் கொஞ்ச நேரமாவது செலவிட்டிருக்கிறேன். ப. ராமஸ்வாமியின் தம்மபத மொழிபெயர்ப்பை வாசிக்கும்போது நெடுங்கதையாக எழுதத் தொடங்கிய இது நரன் உடனான உரையாடலால் நாவலாக உருப்பெற்றது.

நாவல் என் தோழி கீர்த்திக்கு சமர்ப்பிக்கப்பட்டது. கீர்த்தி சமீபத்தில் எழுதிய இது போன்ற பல உரையாடல்கள் வழி உருவாகி வந்த கருத்துகள் இந்த நாவலின் பகுதிகள் ஆகியிருக்கின்றன.
நாவலில் நண்பர்களுக்கு நன்றி சொல்லவில்லை என்பதால் விஷால் ராஜாவுக்கு தனியாக நன்றிகள் சொல்லவுமில்லை. விஷாலும் நானும் ஒரே காலகட்டத்தில் எழுதத் தொடங்கினோம். பெரும்பாலும் பொதுவான கருத்துகள் எதுவுமில்லை என்ற நிலையிலிருந்த நட்பு, இப்போது நிறைய விசயங்களில் ஒத்துப்போகும் ஒன்றாக மாறியிருப்பது எங்கள் இருவருக்குமே கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. எனது எழுத்துநடை சற்றே செழுமைப்பட்டிருக்கிறது என்றால் விஷாலின் தொடர் விமர்சனங்கள் முக்கியமான காரணம். நாவலின் முதல் வாசகர்களில் ஒருவனான அவனது இந்தச் சிறிய குறிப்பு மனதுக்கு மிகவும் நெருக்கமானது. இந்நாவலின் மீதான என் நம்பிக்கைக்கு இதுவே அடிப்படையும்.
முன்பில்லாத ஒரு முதிர்ச்சி கதை சொல்வதில், கதாபாத்திரங்களை அணுகுவதில் கைக் கூடியிருக்கிறது. “எல்லாமே மாறுகிறது; தினமும் இந்த பூமி கொஞ்சம் உறுமாறுவது போல” – இந்த உவமையை தோற்றுவிக்கும் முதிர்ச்சியையே குறிப்பிடுகிறேன். போலவே போராட்டத்தை பிரார்த்தனை என்று சொல்லும் இடம். புத்தர் மயிர்பிளக்கும் விவாதங்களில் ஆர்வம் இல்லாதவர் என்பது. இதுவரை உன் ஆக்கங்களில் எல்லாம் vulnerabilityஐ அங்கீகரிப்பதில் ஒரு தயக்கம் இருக்கும். அதனாலேயே மொழியில் வடிவத்தில் கவனம் கூடியிருக்காது. தயக்கத்தில் பாதி மட்டும் பேசி முகத்தை திருப்பி கொள்வது போல. ஆனால் இது uninihibited ஆக இருக்கிறது. அதனாலேயே மொழியில் கட்டுப்பாடு இருக்கிறது.
“இதோ நம் தாய்” – ரொம்ப அழகிய தீவிரமான கவித்துவ படிமமாய் உருபெற்றிருக்கிறது. மொத்த குறுநாவலும் தாய்மையை -ஒரு கருத்துருவமாக இல்லாமல்- மனிதர்கள் வாழ்வோடும் நீதியோடும் சக மனிதர்களோடும் வேறு ஜீவராசிகளோடும் கொள்ளும் உறவாக அழுத்தமான முறையில் முன்வைத்திருக்கிறது.
சமூகம் இயல்பாய் ஏற்றுக் கொண்ட வாழ்க்கையை வாழும்போது, “காதலிப்பது, வீட்டில் தனியாக இருப்பது, புத்தகம் வாசிப்பது” இவை எல்லாமே எவ்வளவு மர்மமான விஷயங்கள் என்பது எளிதில் தெரியாமல் போய்விடுகிறது. “மற்றமை”யாகும்போது ஒவ்வொரு அனுபவமும் எவ்வளவு பெரிய தவிப்பின் மேல் உருவாகிறது என்பது புரிய வருகிறது. இந்த குறுநாவல் அதை கைப்பற்றிவிடுகிறது.
இந்து மதம் ஆனந்தியை வெளித்தள்ளும் இடத்தைக்கூட என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால் நானும் அதை உணர்ந்திருக்கிறேன். எங்கேயோ தனிமை அங்கு நிராகரிக்கப்படுகிறது. அது சார்பானது என்றும் இந்து மதம் மேல் பொதுவாக கட்டமைக்கப்பட்டிருக்கும் கருத்துக்களை பிரதிபலிப்பது என்றும் யாராவது சொல்லலாம். அதனாலேயே உன் குறுநாவலும் விமர்சிக்கப்படலாம். அந்த சார்பு இந்த ஆக்கத்தில் பரிசீலிக்கப்படாமல் இருக்கிறது என்பதும் உண்மையே.
சில கதாபாத்திரங்கள் விரிக்கப்பட்டிருக்கலாம். தோழர் சிவா போல. உறவுகளும் பிரிவுகளும் இன்னும் மேலதிகமாக பேசப்பட்டிருக்கலாம். ஆனால் சொல்லப்பட்ட அளவில் அழகான இடங்கள் நாவலில் உள்ளன. மினிமலிஸ்ட்டிக்காக இருக்கும்போதும் ஆரம்பத்து முன் கதையில் ஒரு அபாரமான நம்பகத்தன்மையும் கலையமைதியும் உணர்ச்சிகரமும் அமைந்திருக்கிறது. சென்னையும் அழகாக சுட்டப்பட்டிருக்கிறது. காதலியோடு சென்னையில் சுற்றுவதும்.
எல்லா தாய்களையும் ஏமாற்றியதாக உணர்பவள், இதோ நம் தாய் என்று மீண்டும் ஒரு தாயை கண்டடைகிறாள். அது அவள்தான். நவீனமான முதிர்ச்சியான அசலான ஒரு கதை.
இந்த வருடம் இதல்லாது ஊர்சுற்றிகள் என்ற அறிவியல் புனைவை ஆழி பதிப்பகத்துக்காக மொழிபெயர்த்திருக்கிறேன்.

எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான நட்சத்திரங்களுக்குச் செல்லும் வழி நீலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

ஆழியின் காதலைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது என்ற தொகுப்பில் ஒரு மொழிபெயர்ப்புச் சிறுகதையும், நீலம் சிறுகதைகள்-2 தொகுப்பில் ஒரு சிறுகதையும் இடம்பெற்றிருக்கின்றன. என் மொழிபெயர்ப்புகளைத் திருத்தும்போது முன்பை விட கொஞ்சம் செழுமை கூடியதாக சிறிய பெருமையை உணர்ந்தேன். இனி புத்தகமாக வாசிக்கும்போது எல்லா தவறுகளும் தட்டுப்படும்.
ஆண்டு நிறைவு பெறும் இந்தத் தருணத்தில் விஷாலின் சொற்களையே மீண்டும் நினைத்துக் கொள்கிறேன். Vulnerabilityஐ அங்கீகரிப்பது வாழ்க்கையில் சாதகங்கள் பாதகங்கள் இரண்டையுமே கொண்டுவந்திருக்கிறது. பல சரியான, தவறான முடிவுகளை எடுக்கவைத்திருக்கிறது. எனதும் பிறரதும் இதயங்களை உடைத்து ஒட்ட வைத்திருக்கிறது. ஆனால் தனிப்பட்ட செயல்களையோ முடிவுகளையோ எண்ணி எந்தக் கிலேசமும் இல்லை. எல்லாவற்றையும் தாண்டி இந்த உலகின் நன்மைகளையும் தீமைகளையும் பெரிய மனத்தடங்கல்கள் இல்லாமல் எதிர்கொள்ளும் விழைவை அருளியதற்காக கடவுளை மன்னிக்கவே விரும்புகிறேன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
September 16, 2024
கடவுளை மன்னித்தல் – க்ளாரிஸ் லிஸ்பெக்டர்
[க்ளாரிஸ் லிஸ்பெக்டர் (1920-1977) பிரேசிலைச் சேர்ந்த எழுத்தாளர். ஜியோவானி பொண்டியாராவின் ஆங்கில மொழிபெயர்ப்பு வழி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. செய்தித்தாளில் வாராவாரம் க்ரோனிக்கிள்ஸ் என அவர் எழுதிய குறிப்புகள், நினைவோடைகள், கதைகள், கட்டுரைகள் என பலதரப்பட்ட எழுத்துகளின் தொகுப்பில் இடம்பெற்ற ஒன்று Forgiving God. இதைக் கதையாகவோ, நினைவுக் குறிப்பாகவோ வாசிக்கலாம்.]
கோப்பகாபனா நிழற் சாலையில் கட்டடங்களை, கடலை, நடைபாதையிலிருக்கும் மக்களைப் பார்த்தபடி குறிப்பாக எதையும் என்றில்லாமல் எதையோ யோசித்தபடி உலாவிக்கொண்டிருந்தேன். என் கவனம் சிதறியிருக்கவில்லை, இலகுவாக எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை நான் இன்னும் உணர்ந்திருக்கவில்லை. மிக அரிதான ஒரு நிலையில் இருந்தேன்: சுதந்திரமாக. எல்லாவற்றையும் ஓய்வான மனநிலையில் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் எல்லாவற்றையும் காண்கிறேன் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தேன். என் சுதந்திரம் சுதந்திரத்தை இழக்காமலேயே இன்னும் காத்திரமானது. முதலாளி தன் பொருட்களைப் பார்ப்பது போலல்ல, நான் கண்ட எதுவும் என்னுடையதல்ல, நான் அவற்றை என்னுடையதாக்கிக்கொள்ள விழையவுமில்லை. ஆனால் நான் பார்த்தவற்றால் மிக திருப்தியடைந்ததாக உணர்ந்தேன்.
நான் அதுவரை அறிந்திராத ஒரு உணர்வை அப்போதுதான் உணர்ந்தேன். வெறும் பாசத்தினால், பூமியாகவும் உலகமாகவும் இருக்கும் கடவுளின் தாயாக உணர்ந்தேன். வெறும் பாசத்தினால், துளியும் அகங்காரமோ பெருமையோ இல்லை, துளியும் மேன்மையுணர்வோ சமத்துவமோ இல்லை, நான் மொத்த இருப்பின் தாயாகிவிட்டேன். இவையெல்லாம் நான் உண்மையிலேயே உணர்வது, ஒரு போலி உணர்வெழுச்சி இல்லை, எனும்போது கடவுள் என்னால் நேசிக்கப்பட தன்னை அளிப்பார், எந்த பெருமையும் சிறுமையும் இல்லாமல், எந்த சமரசங்களும் தேவைப்படாமல், என்று எனக்குத் தெரியும். நான் அவரை நேசிக்க எடுத்துக்கொள்ளும் நெருக்கத்தை அவர் ஏற்றுக்கொள்வார். இந்த உணர்வு எனக்குப் புதிது, ஆனால் எனக்கு அதில் சந்தேகங்கள் இல்லை, அதற்கு முன் எனக்கு இந்த உணர்வு தோன்றவில்லை என்றால், அது தோன்றியிருக்க முடியாது என்பதால்தான். நான் கடவுள் என்றழைப்பதை ஆழ்ந்த அமைதியான அன்புடன், மரியாதையும், பயத்துடன், பணிவுடன் நேசிக்கவேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அவரை தாயைப் போல் நேசிப்பது குறித்து எனக்கு யாரும் சொல்லியிருக்கவில்லை. இந்த தாய்ப்பாசம் கடவுளைக் குறைத்துவிடவில்லை, அவரை இன்னும் மேன்மையானவர் ஆக்கியது, உலகத்தின் தாயாக இருப்பது என் அன்புக்கு சுதந்திரம் அளித்தது.
அப்போதுதான் நான் ஒரு செத்த எலியை மிதித்தேன். உயிரோடிருப்பதன் பயங்கரத்தில் மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டன; ஒரு நொடியில் பயத்தாலும் பதட்டத்தாலும் சிதறிப்போனேன், என்னுள் துளைத்தெழும் அலறலை அடக்கப் போராடினேன். என்னைச் சுற்றியுள்ள யாரையும் கவனிக்காமல், கிட்டத்தட்ட ஓடிச்சென்று ஒரு விளக்குக் கம்பத்தில் சாய்ந்து நின்றேன். கண்களை இறுகமூடி இதற்கு மேல் எதையும் பார்க்க மறுத்தேன். ஆனால் அந்த செத்த எலி காட்சி என் மனதில் பதிந்துவிட்டிருந்தது: பெரிய வாலுடன் ஒரு செம்பழுப்பு நிற எலி, அதன் நகங்கள் நசுங்கியிருந்தன, அமைதியாக செத்துப்போய் கிடந்தது, செம்பழுப்பாக. எனது அடக்கமுடியாத எலிப் பயம்.
தலையிலிருந்து கால் வரை நடுங்க, எப்படியோ நான் வாழ்க்கையைத் தொடர்ந்தேன். முழுக்க குழப்பமும் பயமும் நிறைந்திருக்க தொடர்ந்து நடந்தேன். என் முகபாவம் குழந்தைத்தனமாக இருந்தது, என் ஆச்சரியம் அப்படிப்பட்டது. இரண்டு உண்மைகளுக்கு இடையிலான தொடர்பை அறுக்க முயன்றேன்: நான் சில கணங்கள் முன் உணர்ந்ததும், இந்த எலியும். ஆனால் பயனில்லை. காலத்தால் சமீபத்திருந்ததாலாவது அவை தொடர்பு கொண்டிருந்தன. தர்க்கங்களிலின்றி அவை தொடர்புகொண்டிருந்தன. ஒரு எலிக்கும் எனக்கும் ஒத்திசைவு இருக்கலாம் என்பதை யோசித்து மருண்டேன். என்னில் அருவருப்பு நிரம்பி வழிந்தது: திடீரென்று தோன்றிய அன்பிடம் என்னால் என்னை ஒப்புக்கொடுக்க முடியவில்லையா? கடவுள் என்ன சொல்ல முயல்கிறார்? எல்லாவற்றிலும் ரத்தம் உள்ளது என்று நினைவூட்டப்பட வேண்டிய ஆள் இல்லை நான்! அந்த ரத்தத்தை கண்டுகொள்ளாமல் செல்பவள் அல்ல, அதை ஒப்புக்கொள்பவள், நேசிப்பவள். ரத்தத்தை மறக்க அனுமதிக்காதபடி என்னுள் நிறைய ரத்தம் இருக்கிறது. ஆன்மீகம், லௌகீகம் போன்ற சொற்களுக்கு என்னைப் பொருத்த வரை எந்த பொருளும் இல்லை. அப்படி ஒரு எலியால் என்னை பயங்கரமாக எதிர்கொள்ள வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அதுவும் நான் மறைவுகளின்றி எளிதாய் பாதிக்கப்படும் நிலையில் இருந்த ஒரு கணத்தில்! என்னை சிறு வயதில் இருந்து துரத்தி வரும் பயங்கரத்தை நீங்கள் யோசித்திருக்க வேண்டும்; இந்த எலிகள் என்னை ஏற்கனவே கேலி செய்திருக்கின்றன, துன்புறுத்தியிருக்கின்றன. பழங்காலங்களில் இருந்து இந்த எலிகள் என்னை வெறுப்புடன் பொறுமையின்று தின்று வருகின்றன! எனவே, இது இப்படித்தான் இருந்திருக்க வேண்டுமா? நான் எதையும் கேட்காமல், எதையும் வேண்டாமல், தூய அப்பாவித்தனமான அன்புடன் நேசித்தபடி வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்க, கடவுள் தன் எலியால் என்னை எதிர்கொள்கிறார். கடவுளின் கொடூரம் என்னை காயப்படுத்தியது, ஆங்காரமூட்டியது. கடவுள் ஒரு கொடூரன். கனத்த இதயத்துடன் நடந்தேன். நான் சிறுவயதில் அனுபவித்த ஏமாற்றங்களைப் போல இந்த ஏமாற்றமும் ஆற்றுப்படுத்த முடியாததாக இருந்தது. குழந்தைமையின் அநீதிகளிலிருந்து தப்பிக்க முடியாமல் சீக்கிரமே வளர்ந்துவிட்ட குழந்தை நான். நான் தொடர்ந்து நடந்தபடி மறக்க முயன்றேன். என் மனம் முழுக்க பழிவாங்கல்தான் இருந்தது. ஆனால் எல்லாம்வல்ல இறைவனை நான் என்ன பழிவாங்கிவிட முடியும், என்னை நசுக்க ஒரு எலியை நசுக்க வேண்டியிருக்கும் கடவுளை? சாவுள்ள ஒரு மனிதனாக என்னிடமிருந்ததெல்லாம் என் பாதுகாப்பின்மைதான். பழிவாங்கும் வெறியில் என்னால் அவரை எதிர்கொள்ளவும் முடியவில்லை. அவர் எங்கு ஒளிந்திருப்பார், அவரை எங்கே காண்பது என்றும் எனக்குத் தெரியவில்லை. ஏதாவதொன்றை வெறுப்புடன் பார்த்தால், நான் அவரைக் கண்டுகொள்வேனா? அந்த எலியில்?… அந்த சாளரத்தில்?… அந்த சாலையோரக் கற்களில்? என்னைப் பொறுத்தவரை, அவர் இனிமேல் இல்லை! என்னுள், அவரைக் காணவில்லை!
அப்போதுதான் எனக்கு பலவீனர்களின் பழிவாங்கல் நினைவு வந்தது: இதுதானா அது? சரிதான், நான் என் மௌனத்தைக் களைந்து எல்லாவற்றையும் வெளிப்படுத்துவேன். ஒருவரின் நம்பிக்கையைப் பெற்று பின் அவரது ரகசியங்களை வெளிப்படுத்துவது கண்ணியமற்ற செயல் என்று தெரியும், ஆனால் நான் பேசப் போகிறேன். எதையும் சொல்லாதே, அன்பிற்காக, எதையும் சொல்லாதே! அவரது வெட்ககரமான ரகசியங்களை உனக்குள்ளே வைத்துக்கொள்! – ஆனால் நான் பேசுவதென்று முடிவெடுத்துவிட்டேன்… எனக்கு நடந்ததை விளக்கப் போகிறேன். இந்த முறை நான் அமைதியாயிருக்க மாட்டேன், அவர் எனக்குச் செய்ததை வெளிக்காட்டுவேன். அவரது பெயரைக் கெடுப்பேன்.
… யாருக்குத் தெரியும்… ஒருவேளை உலகமும் ஒரு எலிதானோ, நான் தயாராக இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன்… நான் பலமானவள் என்றெண்ணியதால், நான் அன்பை ஒரு கணிதக் கணக்காக்கிவிட்டேன். கணக்கு தவறாகிவிட்டது. புள்ளி புள்ளியாக புரிந்ததை அடுக்குவதை, முட்டாள்தனமாக, நேசித்தல் என்று நம்பினேன். தவறான புரிதல்களை சேர்ப்பதன் வழியாகவே ஒருவர் அன்பை அடைய முடியுமென்பதை காணத் தவறிவிட்டேன். பாசத்தை உணர்ந்ததால், அன்பு எளிதென்று நினைத்துவிட்டேன். சிரத்தையான அன்பின் மேல் எனக்கு விழைவு தோன்றவில்லை, சிரத்தை என்பது தவறான புரிதலை ஒரு சடங்காக்கி, அதை காணிக்கையாக்கும் என்பதை புரிந்துகொள்ள தவறிவிட்டேன். ஆனால் முரண்டு பிடிப்பது என் சுபாவம், எப்போதும் சண்டை போடத் தயாராக இருப்பேன். எப்போதும் என் வழியில் போகத்தான் முயல்வேன், நான் இன்னும் விட்டுக்கொடுக்க கற்கவில்லை. மனதின் ஆழத்தில் எனக்கு நான் எதை நேசிக்கத் தேர்ந்தெடுக்கிறேனோ அதைத்தான் நேசிக்க வேண்டும், நேசிக்கவென்று இருப்பதை நேசிக்க வேண்டாம். ஏனெனில் நான் இன்னும் நானில்லை, எனது தண்டனை இன்னும் தானாக இல்லாத ஒரு உலகத்தை நேசிப்பது. நான் எளிதில் காயப்பட்டுவிடுவேன். நான் அடம்பிடிப்பவள் என்பதால், இந்த விசயங்களை எனக்கு நேரடியாகச் சொல்லவேண்டுமோ. நான் எனக்கு சொந்தமானவற்றை விட்டுக்கொடுக்க மாட்டேன், அதனால்தான் ஒரு நகைமுரணோடு அந்த எலி எனக்கே வேண்டுமா என கேட்கப்பட்டது போல. ஒரு செத்த எலியை என் கையில் எடுக்க முடிந்தால்தான் என்னால் எல்லாவற்றின் தாயாக முடியும். சாவான சாவில் சாகாமல் என்னால் அந்த செத்த எலியை எடுக்கவும் முடியாது. எனவே தான் அறியாத, காணாதவற்றைக் கண்மூடித்தனமாக போற்றும் ‘எனது ஆவி கடவுளை பெருக்கிக் காட்டுவதாக’ எனும் பிரார்த்தனையை மனதில் கொள்கிறேன். என்னை தூரமாக்கி வைக்கும் சம்பிரதாயங்களைக் கைக்கொள்கிறேன், ஏனெனில் சம்பிரதாயங்கள் என் எளிமையைக் காயப்படுத்தவில்லை என் பெருமையை காயப்படுத்துகின்றன. பிறந்ததில் நான் கொள்ளும் பெருமையே உலகோடு என்னை நெருக்கமாக உணரச் செய்கிறது – என் இதயத்திலிருந்து வெளியே கேட்காத அலறல்களை உண்டாக்கும் இந்த உலகோடு. நான் இருப்பதைப் போலவே எலியும் இருக்கிறது, ஆனால் என்னாலோ எலியாலோ எங்களை நாங்களே பார்த்துக்கொள்ள முடியாதோ, தூரம் எங்களை சமமாக ஆக்குகின்றது. ஒரு எலியின் மரணத்தைக் கோரும் என் இயல்பை நான் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் எந்த குற்றங்களும் புரியவில்லை என்பதாலேயே என்னை நான் மிக மென்மையானவளாக கருதிக்கொள்கிறேன். அவற்றை அடக்கிக் கொள்வதால், என் அன்பை அப்பாவித்தனமானதாக கருதுகிறேன். முதலில் எனதிந்த கட்டுக்கடங்காத ஆன்மாவை பீதியின்றி பார்க்க முடிந்தால்தான் என்னால் அந்த எலியையும் எதிர்கொள்ளமுடியுமோ. எல்லாவற்றிலும் எனது சுயம் கொஞ்சமாக இருக்கும் இந்த பழக்கத்தை உலகிடம் பகிர வேண்டுமோ. எனது சொந்த இயல்பின் பரிமாணங்களையே நேசிக்க முடியாவிட்டால் நான் எப்படி உலகின் பிரம்மாண்டத்தை நேசிப்பேன்? நான் தீயவள் என்பதால் கடவுள் நல்லவர் என்று கற்பனை செய்யும் வரை, நான் எதையுமே நேசிக்க மாட்டேன்: அது வெறுமனே என்னை குற்றஞ்சாட்டிக்கொள்ளும் வழி. என்னை முழுதாக ஆராயாமல், நான் என் எதிர்மறையை நேசிக்கத் தேர்ந்தெடுத்துவிட்டேன், அதை கடவுள் என்றும் அழைக்கிறேன். என்னோடு வாழப் பழகிக்கொள்ளாத நான், எனக்கு எந்தத் துன்பங்களும் அளிக்காதே என்று உலகைக் கேட்கிறேன். என்னை எனக்கு சமர்ப்பிப்பதில் மட்டுமே வெற்றி பெற்ற நான், (நான் என்னைவிட மிக மிக பிடிவாதக்காரி), எனக்கு என்னைவிட வன்முறை குறைவான பூமியை வழங்கிக்கொள்ள முடியுமென நம்பினேன்.
நான் என்னை நேசிக்கவில்லை என்பதால் மட்டும் கடவுளை நேசிக்கும்வரை, நான் வெறும் தாயக்கட்டைதான், என் பெருவாழ்க்கையெனும் ஆட்டம் ஆடப்படாது. நான் கடவுளை உருவாக்கிக்கொண்டே இருக்கும்வரை, கடவுள் இருக்க மாட்டார்.
September 9, 2024
இல்யா ரெபின்
நன்றி: நீலம்
சமீபத்தில் நடந்த வரைகோடுகள் ஓவியக் கண்காட்சி வெளியிட்ட காணொளியில் ஓவியர் நடராஜன் கலையின் முக்கியமான பணி ஒடுக்கப்பட்டவர்கள் பின்னால் நிற்பது என்பதைக் குறிப்பிடுகிறார். இதுவொரு முக்கியமான கருத்து. எந்த ஒரு மனிதனைப் போல கலைஞனுக்கும் தன் வாழும் சமூகத்திடம் கடப்பாடு இருக்கிறது. ஆனால் அதேநேரம் கலைஞன் என்ற அடையாளமும் ஒடுக்கப்பட்டவர் என்ற அடையாளமும் ஒரே நபரிடம் இருந்தாலும் கூட, அவை ஒரே நபருக்குள்ளும் தனித்தனியாகவும் இருக்கின்றன. அதனால்தான் கலைஞன் மக்களின் ‘பின்னால்’ நிற்கவேண்டியுள்ளது. இந்த இருமை நிலையை கடப்பது பல ஓவியர்களுக்கு சாத்தியமாகியிருக்கிறது. நடராஜின் ஓவியங்களிலேயே அது நிகழ்வதைக் காணலாம். ஞானமடைந்த புத்தரிடம் ஞானத்திற்கான சாட்சி கேட்கப்படும்போது, அவர் விரலை பூமி நோக்கி நீட்டி பூமியை சாட்சி ஆக்குகிறார். அவ்வாறு நம்மைச் சுற்றி உள்ள முழு உலகையும் தேர்ந்துகொள்ளும், மீளுருவாக்கும் கலைஞர்களால் இதை எளிதாகக் கடந்துவிட முடிகிறது.
ஆனால் பல ஓவியர்களிடம் அது நிகழ்வதில்லை. அவர்கள் மிக நல்ல ஓவியர்களாக இருந்தாலும்கூட. அவர்கள் உழைப்பையோ, சுரண்டலையோ காட்சிப்படுத்தும்போது வெளிப்படும் புரிந்துணர்வோ கோபமோ சுரண்டப்படும் அடையாளத்தை வெளியில் இருந்து புரிந்துகொள்வதாக இருக்கலாம். இல்யா ரெபினின் ஓவியங்கள் அத்தகையவை. ரெபின் மரபார்ந்த பயிற்சி பெற்ற, மனிதர்களின் உயர்வை வரையப் பயின்ற ஒரு ஓவியன். மனிதர்களின் பிரம்மாண்டம் அலங்காரங்களிலும், அதிகாரங்களிலும் காணப்படுவதை வரைந்து, அதிலிருந்து முகங்களுக்கு நகர்ந்தவர் என்று சொல்லலாம்.
1844இல் முதலாம் நிக்கோலஸ் மன்னனுடைய படையில் வேலைபார்த்த ஒருவருக்கு பிறந்து 1929இல் ரஷியப் புரட்சிக்கு பின் இறந்தவர் இல்யா ரெபின். தன் காலத்தின் மிகத் திறன்வாய்ந்த ஓவியர்களுள் ஒருவர். தாஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்தாய் என இருவரையும் வரைந்தவர். ஓவியங்களின் சமூகப் பொறுப்பு, நோக்கம் போன்றவை குறித்து தொடர்ந்து யோசித்தவர். ஒருவகையில் தன்னை நாட்டுப்புறத்தின் குரலாகக் கருதி, கலையுலகு மீதான அதன் விமர்சனங்களைக் கொண்டு வரைந்தவர் இல்யா ரெபின். இம்ப்ரஷனிஸ்டுகள் போன்று ஐரோப்பாவின் அக்காலத்திய பிற நவீன ஓவிய மரபுகளை அறிந்திருந்தாலும், இல்யா யதார்த்தவாதத்தையே பின்பற்ற விரும்பினார். பின்னர் நாம் சோஷலிச யதார்த்தவாதம் என்றறியும் கலைப்படைப்புகளுக்கு ரெபினின் ஓவியங்களும் முன்னோடி.

யதார்த்தவாதம் என்பது பெரும்பாலும் வெறுமனே ‘இருப்பதை எழுதுவது / வரைவது’ என்பதாக சுருக்கப்படுகிறது. விமர்சன யதார்த்தவாதம் என்பதற்கும் ஒரு மரபு இருக்கிறதென்றாலும் அக்கால ஐரோப்பிய ஓவியக்கலையில் இது ரெபினிடம்தான் மிகத்தெளிவாக வெளிப்படுகிறது எனலாம். கிட்டத்தட்ட நாடகீயத்தை ஒட்டிய ஓவியங்கள் ரெபினுடையவை. மனித முகங்களை வரைவதில் ரெபின் மிகவும் திறமை வாய்ந்தவர். அதேநேரம் ரெபின் தன் ஓவியங்கள் வழியாக உழைப்புச் சுரண்டல், சமூக ஏற்றத்தாழ்வுகள், அதிகாரத்தின் அசிங்கங்களை காட்சிப்படுத்த முயன்றார். இதைவைத்து நாம் சில விசயங்களை யோசித்துப் பார்க்கலாம்.

ரெம்ப்ராண்ட்டின் ஊதாரி மகனின் மறுவருகை எனும் பைபிள் கதை ஓவியத்தையும், ரெபினின் அவனை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை ஓவியத்தை ஒப்பிட்டுப் பார்க்கலாம். ரெம்ப்ராண்டின் ஓவியம் மிகுந்த அமைதி நிறைந்தது. கருணை, மன்னிப்பு குறித்து யோசிக்கத் தூண்டுவது. என்றாலும் நாம் இப்போது திருப்பி நோக்கும்போது, எது கருணை, எது மன்னிப்பு, செல்வத்துக்குத் திரும்புதல் என்பதையெல்லாமும் யோசிக்கத் தூண்டுவது. லேசான பொன் பளபளப்பும் இருளும் நிறைந்தது. நேரெதிராக ரெபினின் ஓவியம் ஒளி நிறைந்த பகல்பொழுதில் நிகழ்கிறது. சைபீரியாவுக்கு அரசியல் காரணங்களால் நாடுகடத்தப்பட்ட போராளி மகன் வீட்டுக்குத் திரும்புகிறான். சமையல்காரர்களும், செல்வமும் இருக்கும் தன் வீட்டுக்கு. வீட்டில் அவன் பொருந்தாதவனாய் நிற்கிறான். அவன் இல்லாமலேயே கடந்து போயிருக்கும் வாழ்க்கையில் இருக்கும் குடும்பத்தினரும் வேலைக்காரர்களும் அதிர்ச்சியோடு உறைந்திருக்கின்றனர்.
Procesión de Pascua en la región de Kursk, por Iliá Repin – Religious Procession in Kursk Governorate – Wikipediaரெபினின் குர்ஸ்க் மாவட்டத்தில் ஈஸ்டர் ஊர்வலம் ஓவியம் எனக்கு மிகப்பிடித்த ஒன்று. ஒரு சமூக விமர்சனமாக யதார்த்தவாத முறையில் வரையப்பட்ட இந்த ஓவியத்தின் கற்பனை ஒரு கதைசொல்லலையும், ஒரு தத்துவக் கேள்வியையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்த ஓவியத்தைப் பற்றி ரெபின் “எனது யோசனைகளுக்கு உண்மையான வடிவம் கொடுக்க என் எளிய ஆற்றல் முழுதையும் பயன்படுத்துகிறேன்; என்னைச் சுற்றியுள்ள வாழ்க்கை என்ன பெருமளவு தொந்தரவு செய்கிறது, எனக்கு நிம்மதி அளிப்பதை – கான்வாசில் காட்சிப்படுத்தப்பட வேண்டுமென கெஞ்சுகிறது…” என்றிருக்கிறார். ஓவியத்தில் மேரி சொரூபத்தை சுமந்தபடி நம்மை நோக்கி வரும், நம்மைக் கடந்துசெல்லும் பெரும் கூட்டத்தில் செயல்படும் ஏற்றத்தாழ்வுகளை நாம் பார்க்கும்படி காட்சி அமைத்திருக்கிறார் ரெபின். முகங்களையும் உணர்வுகளையும் காட்சிப்படுத்துவதில் ரெபின் அபார திறமைசாலி. முந்தைய ஓவியத்தில் ஒரு சிறிய அறைக்குள் செயல்படும் இதே திறன், பெரிய கூட்டத்தைக் காட்சிப்படுத்தும்போதும் தெரிகிறது. அவர்கள் சோர்ந்திருக்கிறார்கள். அதிகார வெறியுடன் இருக்கிறார்கள்.
அதேநேரம் இத்தனை ஒடுக்குமுறைகள் சுமந்தபடி நாம் ஏன் மாதா சொரூபத்தையும் சுமக்கிறோம் என்ற கேள்வியும் வருகிறது. ரெபின் இதில் சமூக ஏற்றத்தாழ்வுகளை காட்சிப்படுத்தும் அதே வேளை, அத்தனை மனிதர்களின் ஆன்மாவை தட்டையாக்கிவிடாமல் அவர்களை உணர்வுகளோடு காட்சிப்படுத்தியிருப்பதில் நாம் நமது சொந்த மத, ஆன்மீக உணர்வுகளைக் குறித்து யோசிக்கவும் உதவுகிறது இந்த ஓவியம்.

வோல்கா நதிக்கரையில் படகிழுப்பவர்கள் ஓவியம் தாஸ்தாயெவ்ஸ்கி உள்ளிட்ட பலரால் புகழப்பட்ட, ரெபினின் ஓவிய வாழ்வை துவங்கிவைத்த ஓவியம். சில நிஜ மனிதர்களைக் கொண்டு வரையப்பட்ட இந்த ஓவியத்திலும், தன்னைச் சுற்றி இருக்கும் உலகின் கஷ்டங்கள் தன்னைத் தொந்தரவு செய்வதே ரெபினை வரையத் தூண்டுகிறது. தான் வரைவோர் மீது ரெபினுக்கு சற்றே கற்பனாவாத பார்வை இருக்கிறது எனலாம். அதில் முன்னாலிருக்கும், முன்னாள் பாதிரியான கானின் ஒரு புனிதரைப் போலிருந்தார் என்று ரெபின் குறிப்பிட்டிருக்கிறார். தாஸ்தாயெவ்ஸ்கி இந்த ஓவியம் நாம் மக்களுக்கு எவ்வளவு கடன்பட்டிருக்கோம் என்று காட்டுவதாக, அவர்கள் வெறுமனே பாருங்கள் எங்கள் வலியை என்று கதறாமல் நேர்மையாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக புகழ்கிறார். இதிலும் வெறுமனே தட்டையான உடலுழைப்பு மீதான பரிதாபம், புனிதத்தன்மை ஏற்றுதல் என்பதிலிருந்து முன்னகர்த்துவது அவர்களது முகங்களே. நேரடியாக பார்வையாளனை எதிர்கொள்ளும், பார்வையாளனை மதிப்பிடும் பார்வை ஒன்றே நடுவிலிருக்கிறது.
ரெபின் போன்றவொரு ஓவியர் தன்னைச் சுற்றியுள்ள உலகை, உழைப்பை, ஏற்றத்தாழ்வை வரைய முற்படும்போது எழும் கேள்விகளும் ரசவாதங்களும் முக்கியமானவை. அவற்றை நாம் அறிந்துகொள்ள ரெபினின் ஓவியங்கள் முக்கியமானவை. கலைஞன் என்ற அடையாளம் உலகிடம், சமூகத்திடம் இருந்து எப்படி விலகுகிறது என்பதை இதில் காணலாம். இதில் காணாத ஒருங்கிணைவையும் நாம் புரிந்துகொள்ளலாம்.
June 14, 2024
அறிதல்
ஓரிரவு
எனக்கு உன்ன விட ரெண்டு வயசு கம்மி, ஆனா ஏதோ நான் உனக்கு அக்கா மாதிரி தோணுது. வெளிச்சத்தில் ஒருவரையொருவர் பார்க்க வேண்டுமென தோன்றினாலும் அவர்களால் திரைச்சீலைகளைத் திறக்க முடியாது. அந்த ரிசார்ட்டுடைய அறைகளின் பின்பக்க பால்கனிகள் எல்லாம் ஒரு வட்ட தோட்டத்தைச் சுற்றி அமைந்திருந்தன. திரைச்சீலைகளைத் திறந்தால் பிற பால்கனிகளில் அமர்ந்திருக்கக் கூடிய அவர்களது சகபணியாளர்கள் இங்கே பார்க்கலாம். இன்னும் சற்று நேரத்தில் அன்றைய நாளின் மீட்டிங்குகள் தொடங்கிவிடும். அந்த திரைச்சீலைகளுக்குப் பின்னே மெல்லிய பகல் ஒளி தெரிந்தது. அதில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருவராலும் சிரிப்பதை நிறுத்த முடியவில்லை. அவ்வப்போது என்ன என்று கேட்கும்போதெல்லாம் நீ ஏன் சிரிக்கிற என்பதே பதிலாக இருந்தது. இருவருக்குமே மற்றவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டுமென தோன்றியது, அதே நேரம் பார்க்கும்போதெல்லாம் சிரிப்பதை நிறுத்தவும் முடியவில்லை.
இருவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவர்கள் உலகத்திடமிருந்து தனிமைப்பட்டுப் போய் விடுகிறார்கள். சிலர் உலகமே தங்களுக்கு எதிராக இருப்பதாக அச்சமயங்களில் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் சிலர் உலகை இன்னும் சற்றே முதிர்ச்சியுடன் எதிர்கொள்கிறார்கள். தனக்கு அந்த முதிர்ச்சி இருப்பதாக எண்ணியதால்தான் அவர் தன்னை அக்கா என்று அழைத்துக்கொண்டார் போலும்.
“அய்யோ! நா ஏன் உன் ரூமுக்கு வந்தேன். தெரிஞ்சா ஆஃபீஸ் முழுக்க நம்மள பத்திதான் பேசுவாங்க…”
“ம்ம்ம்”
“உனக்கு அதப் பத்தியெல்லாம் கவலை இல்லையா?”
“அப்படி இல்ல. என் டீம்ல கொஞ்சம் நல்லவங்க, பின்னாடிதான் பேசுவாங்க. மூஞ்சிக்கு நேரா வந்து கேக்க மாட்டாங்க. அதனால அவ்வளவு யோசிக்கத் தோணல.”
“நா இன்னும் ரூமுக்கு வரலியான்னு ஏஞ்சல் கால் பண்ணிருக்காங்க. நாளைக்கு அவங்க எல்லார்கிட்டையும் சொல்லிடுவா. நா உன்கிட்ட காமிச்ச மெசேஜ் எல்லாம் பார்த்தீல்ல.”
“ஏஞ்சல் கால் பண்ணப்போ என்ன சொன்ன?”
“ஒண்ணும் சொல்லல, மெசேஜ் மட்டும் பண்ணி பதில் சொல்லிட்டேன். ஒரு ஃபிரண்ட் ரூம்ல இருக்கேன். பேசிகிட்டு இருந்ததில நேரம் போனதே தெரியல. சாரின்னு
ம்ம்ம். ஒரு வேள ப்ரனீத் மட்டும் இன்னிக்கு வந்திருந்தா. நா ரூம்ல தனியா இருந்திருக்க மாட்டேன். உன்ன கூப்டிருக்க மாட்டேன்…”
“ஆமா, எவ்வளவு பேர் நமக்கு உதவி பண்ணிருக்காங்க.”
மீண்டும் இருவரும் சிரித்துக்கொண்டனர். சிரிப்பு ஒரு சிறிய நீச்சல் குளத்தில் ஏற்பட்ட அலைகளைப் போல அவர்களின் ஒவ்வொரு எல்லைப் புள்ளியிலும் எதிரொலித்து எதிர்ப் புள்ளியைத் தொட்டு, அங்குமிங்கும் அலைகிறது.
நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா என்று சொல்லியபின் வரும் பெருமூச்சுக்கு எத்தனை அர்த்தங்களை எழுதமுடியும். இருந்தாலும் இருவரும் அதையே சொல்லி பெருமூச்சு விட்டுக்கொண்டார்கள். அப்படி என்ன அழகப் பார்த்துட்ட? என்று கேட்கப்படும்போது சட்டென்று கண்களில் இருந்துதான் ஆரம்பிக்கத் தோன்றுகிறது. அதே நாளில் முதன்முறையாக ஒருவர் இன்னொருவரை (இன்னொருவர் ஒருவரை அதற்கு முன்னே கவனிக்கப்படாமல் கவனித்திருக்கிறார் என்றாலும்) பார்த்து சிரித்த போது அந்த கண்களில் இருந்து தொடங்கியவற்றுக்கு, அந்த இரவின் தொடக்கத்தில் எனக்கு அவ்ளோ தைரியம் கிடையாது உனக்கு? என்று கேட்டபோது உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த அந்தக் கண்களில் இருந்துதானே பதில் தேட முடியும். இந்த சின்ன கண்ணுலயா? யப்பா, சீ போ! எஷ்ட்டு சுல்லு ஹேலித்திதீரியப்பா! எவ்வளவு எவ்வளவு பொய்கள்!
சட்டென்று ஒருவரையொருவர் அணைத்தபடி நடனமாட வேண்டும் என்று தோன்றுகிறது. முன்னெல்லாம் அவர்களுக்கு நடனமாட வேண்டும் என்று தோன்றியதேயில்லை. ஆனால் அப்போது உடலில் தோன்றும் சிறிய குறுகுறுப்புணர்வு அதன் போக்கில் மெட்டமைத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் நடனமாடவில்லை என்றாலும் ஒருவரது விரல்கள் மற்றவரது உடலில் தாளமிட்டபடியே இருக்கின்றன.
“ஆமா, என் மேல பாலியல் தொந்தரவுன்னு கம்ப்ளெயிண்ட் கொடுத்துட மாட்டியே.”
” ம்ம்ம்ம், சொல்லப்போனா நாந்தான உன் ரூம்ல இருக்கேன். நா வேணா குடுக்கலாம்.”
“ம்ம்ம், நீ கொடுக்கலாம்தான். ஆனா நம்புவாங்களா? நா எவ்ளோ அப்பாவின்னு எல்லோருக்கும் தெரியும்.”
“நீயா அப்பாவி?”
“ஆமா”
“சொல்லிக்கோ”
“என்ன இருந்தாலும் நீ பையன், நா பொண்ணு, அந்த அட்வாண்டேஜ் இருக்குல்ல”
இந்த இடத்தில் இருவரும் ஒருவரையொருவர் சற்றே தள்ளி நின்று பார்க்கிறார்கள். நான் பையனில்லை என்று சொல்லிவிட ஒருவரும், அந்தச் சொல்லை எதிர்பார்த்து இன்னொருவரும். இன்னொருவரின் தோழி ஒருத்தி என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் என்று சொல்லி சில கதைகளைச் சொல்லியிருக்கிறாள், அந்தக் கதைகள் இவரைப் பற்றியதுதானோ என்ற சந்தேகம் இருந்தாலும் அது நிவர்த்திக்கப்படவில்லை. நாம் ஆணென்றும் பெண்ணென்றும் அப்படி சட்டென்று அறிந்துவிட முடியுமா? முடியாதா? மனதிலிருந்த சொற்கள் சொல்லப்படவில்லை.
மொழி இரு உடல்களுக்குமிடையே தொடுதலைப் போல செயல்படுகிறது. பல விசயங்கள் வெறும் சொற்களற்ற தொடுதலிலேயே சொல்லப்பட்டுவிட்டன. மொழி அவற்றைத் திரும்பத் தொட்டுவிட விரும்பவில்லை. அந்த நாளின் பேச்சுகளுக்கு அது விதிக்கப்படவில்லை. ஆண், பெண் என்பவற்றுக்கு ஆழமான அர்த்தங்களோ, காயப்படுத்தும் ஆற்றலோ அந்த நாளில் கிட்டவில்லை. எனவே அவர்கள் தொடர்ந்து சிரித்தபடி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்னொரு நாளைப் பற்றி பலமுறை பேசிவிட்டார்கள். பல விசயங்களுக்கு ஒருவருக்கொருவர் இன்னொரு நாள் என்று வெட்கத்துடனும் உறுதியாகவும் பதிலளித்து விட்டார்கள். எனவே இன்னொரு நாள் ஒரு சிறிய மழைக்கால காற்றைப் போல அங்கே வீசிக் கொண்டிருக்கிறது.
“நா கூப்பிட்டா நீ உடனே வந்துடுவியா. நீ ரெஸ்ட்ரூம் போகணும்னு சொன்னதால மேல வான்னு சொன்னேன். அப்போ கூட நா திரும்ப ஒரு நடை போகலாம்னுதான் சொன்னேன்.”
“யாரு நீயா? ஆமா எப்போ முடிவு பண்ண இதெல்லாம்!”
“நா முடிவு பண்ணேனா? நீ எப்போ முடிவு பண்ண? மதியம் என்ன பாத்தவுடனேவா,
நா ஒண்ணும் உன்ன இன்னிக்குதான் முதல்முறையா பாக்கல. உனக்குதான் நா ஒரு ஆள் இருக்கதே இதுக்கு முன்ன தெரியாது.”
“ஹே, நெஜமா இன்னும் இதுக்கு முன்னாடி நீயும் நானும் ஒரே ஆஃபீஸ்ல ஒரே ரூம்ல இருந்திருக்கோம்னு என்னால நம்ப முடியல!”
மகிழ்ச்சி ஒரு வினோதமான உணர்வு. நேற்று தொடங்கிய நாள் முடிந்து சில மணிநேரங்கள் ஆகிறது. ஆனால் அவர்கள் இன்னும் அதிலேயே நடை பயின்று கொண்டிருக்கிறார்கள். நாளை வார இறுதி. உங்களுக்கு ஒரு இரகசியம் சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் இந்த வார இறுதியில் அவ்வளவாக பேசிக் கொள்ளப் போவதில்லை. இருவருக்குமே மறுநாளே சந்திக்க வேண்டுமென்று ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் இப்போது அவர்கள் இருவரும் தனித்தனியாக யோசிக்கிறார்கள்.
ஒருவர் என்ன சொல்வார் என்று மற்றொருவர் யோசிக்கும்போது அவர்கள் சிறிய ஸ்மைலிகளில் தங்கள் உணர்வுகளை மறைத்துக் கொள்கிறார்கள். கவலைப் படாதீர்கள், அவர்கள் இருவரும் இந்த வாரம் முழுவதும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களைப் பார்க்கும் எல்லோரும் என்ன என்ன என்று கேட்கும்போது ஒண்ணுமில்ல என்று தலையாட்டிக் கொள்வார்கள். அதன்பின் என்ன நடக்கும் என்பது நமக்குத் தேவையில்லாதது. நமது கதை அல்லது இக்குறிப்பு நேற்றில் தொடங்கி இன்னும் நடந்துகொண்டிருக்கும் இன்றோடு முடிகிறது.
“ஏன் சிரிக்கிற?”
“சொல்லமாட்டேன்”
“ப்ளீஸ்”
“சரி அப்போ நீ பசங்க பொண்ணுங்க எல்லாரையும் டேட் பண்ணிருக்க?”
“ஆமா”
“ம்ம்ம்ம். சரி. அப்போ இத காமிக்கிறேன்”
அவர் காண்பித்த மெசேஜை இவர் சரியாக பார்க்கவே இல்லை. அதில் கே என்ற சொல் மட்டும் ஆங்கிலத்தில் மின்னியது. அதில் அவர்களது சகபணியாளரான ஏஞ்சல், அவர் இவரையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அன்று மத்தியம், இவருக்கு பெண்களில் விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை. ரொம்ப முயற்சி செய்யாதே என்று செய்தி அனுப்பியிருந்தாள். அந்த கணத்தில் இருவரையும் அளவுக்கு அதிகமாக சிரிக்க வைத்ததை தவிர அந்த செய்தி பெரிதாக அர்த்தம் பெறவில்லை. நம்மைப் பற்றி நாம் அறியாமலேயே பலர் கவனித்தும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள் என்பது அந்த கணத்தில் அவ்வளவு அச்சுறுத்தக் கூடியதாக இல்லை. ஏனெனில் இருவருக்குமே அடுத்து என்ன நடக்குமென்று தெரிந்திருந்தது. இருவருக்குமே அது புதிதுமில்லை. ஆனாலும் இருவருக்குமே அன்று புதிதாயிருந்தது. எனவே இன்னும் கொஞ்சம் சுற்றி வளைத்து, இருவரின் தைரியங்களைப் பற்றியும் கேள்வி எழுப்பிக்கொண்டு கடைசியாகத்தான் நான் உன்னை முத்தமிடலாமா? என்று இருவரில் ஒருவர் கேட்டார்.
வழக்கமாக இருவரில் ஒருவருக்கு இதுபோன்ற சமயங்களில் இதயம் படபடவென்று அடித்துக்கொள்ளும், மற்றவருக்கு உள்ளங்கைகள் வியர்த்து நீரோடும். ஆனால் அன்று இருவருமே மிக அமைதியாக இருந்தார்கள்.
“நமக்கு வயதாகிவிட்டதல்லவா?”
“ஆமா, எனக்கு ஆகிடுச்சு.”
“எனக்கும்தான். இது தெரிஞ்சா என்ன யார் மதிப்பாங்க?”
“யப்பா…”
“அதுசரி! அவங்க என்ன பேசினாலும், என் வேலைய யாராலும் செய்ய முடியாது. அதனால எனக்கு பிரச்சினை இல்லை.”
“நா பெருசா வேலையே செய்றது இல்ல”
முதல் முத்தத்தில் நாம் ஏன் கண்களை மூடிக்கொள்கிறோம் என்று இருவரும் யோசித்தார்கள். இரண்டாவது முத்தத்திலும் இருவரும் கண்களை மூடிப் பின் திறந்தார்கள். விரல் நுனிகள் தயங்கித் தயங்கிப் பயணித்தன. அவர்களது முத்தங்களின் வேகத்துக்கும் அதற்கும் தொடர்பே இல்லாதது போலிருந்தது.
“சரி மணி என்ன?”
“இரண்டு”
“இப்படியே போனா தூங்க மாட்டோம்”
இருவரும் ஒருவர் மீதொருவர் ஆடைகளை எறிந்தும், பிடித்தும், ஆடைகள் அணியவேண்டும் வேண்டாம் என்ற விருப்பங்களிடையே குழம்பினர். சில தலைகாணிகளை எடுத்து இருவருக்கும் இடையே வைத்துக்கொண்டனர். கைகள் தலைகாணிகளைத் தாண்டி நீண்டு, பின்வாங்கி, உதடுகளைத் தொட்டு மீண்டன. மூடிய கண்களின் புருவங்களை விரல் நுனிகள் தீண்டி புதிதாய் வரைந்தன.
பரவாயில்லையா, உனக்கு இன்னும்
இன்னிக்கு வேண்டாம்
நீ எது பண்ணாலும்… அப்படி இருக்கு
என்ன மாயாஜாலம் வெச்சிருக்க நீ
மேல
கண்ண பார்க்காத
போ
யக்ஷி
அழகி
இந்தக் கதையை அல்லது சிறுகுறிப்பை முடிக்க சற்றே காலத்தில் பின்னோக்கிச் சென்று வர வேண்டும். சற்றே ஒரு சிறிய துயரம் கிடைத்தால் அதைப் பற்றிக் கொள்ளலாம். உலகோடு சேர்ந்துகொள்ளலாம். ஆனால் பல பங்களாக்களும் ஒரு ரெசார்ட்டும் கொண்டிருந்த அந்த வளாகத்தில் தென்னைகளும் வேறு பல மரங்களும் சூழ்ந்திருந்த ஒரு ஆட்களற்ற சாலையில் அதே நாள், சற்று நேரம் முன்பு மாலை வேளையில் நடந்துகொண்டிருந்த இருவருக்கும் எதுவுமே கிடைக்கவில்லை. அவர்கள் மகிழ்ந்திருந்தனர். எனவே அவர்கள் தனித்திருந்தனர். ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொள்ள விரும்பினாலும் தயங்கங்களால் ஒட்டியும் விலகியும் நடந்தனர். பெரிதாக குடித்திராவிட்டாலும் அவர்கள் நடையில் தடுமாற்றம் நிரம்பியிருந்தது, அவ்வப்போது தோள்பட்டைகள் இடித்துக்கொண்டபோது விரல்கள் விரிந்து மூடின. ஒருவர் இன்னொருவருக்கு நிலவைக் காட்டினார். இன்னொருவர் ஒருவருக்கு காலையில் புல்புல்கள் ஒரு பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தெழுந்து பறந்து விளையாடிக்கொண்டிருந்ததைச் சொன்னார். இருவரும் ஒரே நேரத்தில் நின்று தூரத்தில் கேட்ட பறவைச் சத்தத்தை கவனித்தனர், கவனிப்பதுபோல ஒருவரையொருவர் கவனித்துக்கொண்டிருந்தனர். இருவரில் ஒருவர் பங்களாக்களுக்கும் சென்று பார்க்கலாமா என்று தைரியம் காட்டி அடுத்தவரின் பதட்டத்தை இரசித்தார். இருந்தாலும் அந்தச் சாலை அவ்வளவு சீக்கிரமாக முடிந்திருக்க வேண்டாம். அல்லது அந்தச் சாலை மிகச்சரியான நீளத்தில் முடிந்துவிட்டது.
“என் ரூமுக்கு வாயேன், இன்னும் கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருக்கலாம். தூக்கம் வருதா?”
“இல்ல. எப்படியும் ரெஸ்ட் ரூம் போகணும். அவசரம்! வரேன்”
“போய்ட்டு இன்னொரு ரவுண்ட் நடக்குறதுன்னாலும் நடக்கலாம்.”
“ஏஞ்சல் நா வருவேன்னு பார்த்துகிட்டு இருப்பாங்க”
“ம்ம்ம்”
அந்த சிறிய, அழகிய, செடிகள் நிறைந்திருந்த பாத்ரூமுக்குள் ஒருவர் வெளியே இன்னொருவர் வெளியே என அமர்ந்திருந்தபோதும் அவர்கள் சிரித்துக்கொண்டே இருந்தனர்.
மறுநாள் காலை மீண்டும் அதே பாத்ரூமில் தனித்தனியாக தங்கள் கனவுகளைக் கொண்டு இந்தக் கதையை இரு கதைகளாக பிரித்து எடுத்துச் சென்றனர்.
லாப்பிஸ் லசூலி
அவர்கள் இருவரும் ஒரு டேட்டிங் செயலியில்தான் சந்தித்துக் கொண்டார்கள். ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள வேண்டுமெனத் தோன்றினாலும் அதற்கென சம்பிரதாயங்கள் இருக்கின்றன. பேசிக் கொள்ள வேண்டும். புரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொண்டதாய் நினைத்துக்கொள்ள வேண்டும். மட்டுமல்லாமல் ஒருவர் இன்னொருவரை பெங்களூருவில் இருக்கும்போது ஸ்வைப் செய்துவிட்டு அப்போது அஜந்தா ஓவியங்களைப் பார்க்க பயணித்துக்கொண்டிருந்தார். எதற்காக ஸ்வைப் செய்தோம் என்பதற்கு காரணங்கள் எல்லாம் இல்லை. படுவேகத்தில் சென்றுகொண்டிருக்கும் ஒரு கார் சட்டென்று இடமோ வலமோ திரும்ப அந்த நேரத்தில் காரணங்கள் இருக்கும். ஆனால் காரோட்டி அவை எல்லாவற்றையும் நினைவில் வைத்திருப்பாரா என்ன அதுபோலத்தான். அவ்வாறு ஒருவர் அஜந்தா ஓவியங்களைப் பார்த்துவந்து ஹோட்டல் அறையிலும், இன்னொருவர் பெங்களூருவில் பணி முடித்துவிட்டு வீட்டில் அமர்ந்தபடி தன் நண்பர்களோடு படத்துக்குக் கிளம்புவதற்கு முன்னதான இடைவேளையிலும் பேசிக்கொண்டனர்.
“ஹலோ”
“ஹலோ, வீக்கெண்ட் எப்படிப் போச்சு?” (அதுவொரு திங்கள் கிழமை)
“போச்சு. பெரிசா எதுவும் நடக்கல. ஆனா அதுவே நல்ல விசயம் அப்படின்ற மாதிரி ஆகிடுச்சே வாழ்க்கை.”
“உங்க திங்கள் எப்படிப் போகுது? வேலையா?”
“இல்ல. ஒரு வாரம் லீவ். பயணம். அஜந்தா ரொம்ப நாள் ஆசை”
“தனியாவா”
“இல்ல. நண்பர்கள் கூட”
“நானும் இதுவரை அஜந்தா போனது இல்ல. எப்படி இருக்கு? உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”
“ரொம்ப அழகா இருக்கு. நா எதிர்பார்க்கவே இல்ல. ஒரு சில இடத்துல மேற்கூரையில வரைஞ்சிருக்க ஓவியத்துல எல்லா வண்ணமும் மங்கிப் போய் ஒரு நீலம் மட்டும் பளிச்சின்னு மிச்சமிருக்கு. அப்படியே!”
“லாப்பிஸ் லசூலி!”
“ஓ! இப்போதான் கூகிள் பண்ணிப் பார்க்கிறேன். அந்த நீலம் அப்படியே கண்ணுல பதிஞ்சா மாதிரி இருக்கு.”
“இந்த நேரம் கூட்டமா இருக்கும்ல?”
“ஆமா. ஆயிரக்கணக்குல. எல்லாரும் வர்றாங்க. ஃபோட்டோ எடுக்குறாங்க. போய்கிட்டே இருக்காங்க. இந்த ஃபோட்டோ எல்லாம் திரும்பி பார்ப்பாங்களா கூட தெரியல.”
“ம்ம்ம்ம். டிஜிட்டல் நினைவுகள்.”
“நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”
“படத்துக்குப் போகணும். ஃப்ரண்ட்ஸ் வர்றேன் சொன்னாங்க. வெய்ட் பண்ணிகிட்டு இருக்கேன். ஆமா. நீங்க சந்தோஷமா இருக்கீங்களா?”
இதுவரை அப்படியொரு கேள்வி அவரிடம் கேட்கப்பட்டதில்லை. அல்லது இத்தகையதொரு கேள்வியை முழுமனதாக எதிர்கொள்ள வேண்டுமெனத் தோன்றியதில்லை. இப்போதும் கூட மனம் சடசடவென்று இதிலிருந்து நழுவுவதெப்படியென்றே யோசிக்கிறது. சில நல்ல பதில்கள், நகைச்சுவையானவை, உரையாடலை வளர்ப்பவை…
“இப்போதைக்கு லாப்பிஸ் லசூலிதான் மனசுலயும் கண்ணுலயும் இருக்கு. சந்தோஷமா இருக்கேனா தெரியல. நீங்க?”
“நிம்மதியா இருக்கேன்.”
“இதுக்கு அது பதிலில்லையே”
“நீங்க தமிழா?”
“ஆமா ”
“இதுவரைக்கும் இந்த டேட்டிங் ஆப்ல நான் தமிழர்கள் யாரையும் சந்திச்சதே இல்ல. சென்னையில இருக்கும்போது டேட்டிங் ஆப் எல்லாம் யூஸ் பண்ணதே இல்ல.”
“நா ஒரு ரெண்டு மூணு தமிழர்கள சந்திச்சிருக்கேன்னு நினைக்கிறேன். சரி நா கிளம்பறேன். பார்க்கலாம்.”
“பார்க்கலாம் ”
“பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு எங்க ஊர்ல சொல்வாங்க”
“புதன் கிடைச்சிருச்சு. இப்போ பொண்ணு வேணுமா ”
“ஹாஹாஹா. கிடைச்சா நல்லாதான் இருக்கும்.”
“உனக்கு ரொம்பதான் ஆசை பொண்ணே! என்ன பண்ணிட்டிருக்க?”
“ஆஃபீஸ்ல வேலை பார்க்காம சும்மா அதையும் இதையும் பண்ணிகிட்டு இருக்கேன். நீங்க?”
“அதேதான். ஆனா ஆஃபீஸ் இல்ல. வொர்க் ஃப்ரம் ஹோம்.”
“இன்னிக்கு காலையில ஒரு குட்டிப் பறவை பார்த்தேன். என் வீட்டு பக்கத்தில இருக்க ஒரு மரத்துல. அந்த நீல கலர்ல, லாப்பிஸ் லசூலி கலர்ல.”
“உனக்கு பறவை பார்க்கறதெல்லாம் பிடிக்குமா
அவ்வளவெல்லாம் பொறுமையும் கிடையாது. பறவைய பார்த்து அடையாளம் சொல்லவும் தெரியாது. ஆனா சும்மா கவனிச்சேன். அந்த கலர், இந்த தூசி படிஞ்ச மரத்துல அப்படியே சீரியல் லைட் போட்ட மாதிரி பளிச்சுன்னு தெரிஞ்சுது.”
“ஒரே ஒரு பல்ப் மட்டும் எரியுற சீரியல் லைட்டா ”
“ஹாஹஹா. ஆமா. திருவிழா முடிஞ்சு மறுநாள் காலையில அணையாம எரிஞ்சுகிட்டிருக்க ஒத்த பல்ப்.”
“ஆமா. நீங்க என்ன வேலை பார்க்குற?”
“கண்டெண்ட் ரைட்டர்.”
“ம்ம்ம்ம் கண்டெண்ட். கண்டெண்ட். கண்டெண்ட்.”
“நீங்க?”
“கிராஃபிக் டிசைனர்.”
“ம்ம்ம்ம். நீங்க ஆர்ட்டிஸ்ட்டா அப்போ? அதனாலதான் கலர் பத்தியெல்லாம் அப்படி தெரிஞ்சு வெச்சிருக்கீங்க…”
“ஆர்ட்டிஸ்ட்டா எல்லாம் தெரியல. ஆனா அதுக்குதான் படிச்சேன்.”
“அப்போ என் ஃப்ரொஃபைல்ல செசான் ஓவியங்கள் பிடிக்கும்னு சொன்னதாலதான் ஸ்வைப் பண்ணீங்களா?”
“அப்படியெல்லாம் இல்ல. அழகா இருந்த ஸ்வைப் பண்ணேன். ப்ரொஃபைல் எல்லாம் நம்ம மேட்ச் ஆனப்புறம்தான் படிச்சேன்.”
“இவ்வளவு உண்மை நல்லதுக்கு இல்லீங்க”
“அப்போ நீ எதுக்கு ஸ்வைப் பண்ண? என் ஃபோட்டோஸ் பாத்து இல்லியா?”
“ஃபோட்டோஸும் பாத்துதான்.”
“பொய் சொல்லாத”
“நீங்க க்யூட்டாதான் இருக்கீங்க. ஆனா ப்ரொஃபைலும் இண்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு. எதுவுமே இல்லாம ஃபோட்டோ மட்டும் இருந்திருந்தா?”
“இருந்திருந்தா?”
“ஸ்வைப் பண்ணிருப்பேன்னுதான் நினைக்கிறேன். அவ்வளவு அழகா இருக்கீங்களே”
“உன் அளவுல்லாம் இல்லப்பா. அழகி!”
“நா ஆல்ரெடி கரெக்ட் ஆகிட்டேங்க. ஏன் இவ்வளவு கஷ்டப்படுறீங்க இன்னும்.”
“ஹாஹாஹா. சரி வா அப்போ மீட் பண்ணலாம்.”
“எப்போ? எங்க?”
“நீ சொல்லு”
“காஃபி? உங்க வீடு எங்க? அங்க பக்கத்தில?”
“ம்ம்ம்ம் வெள்ளிக்கிழமை ஃப்ரீயா நீ?”
“ஃப்ரீதான். வேலை முடிஞ்சிடும் 5 மணிக்கு.”
“சரி. அப்போ பார்க்கலாம்.”
“இன்னிக்கு மீட் பண்ணலாமா?”
“ஆமா. ஆனா… நீ தப்பா நினைச்சுக்கலன்னா வீட்டுக்கே வர்றியா. சுத்தமா வெளியில எங்கயும் போக மனசில்ல. இல்ல, நாம ஞாயிற்றுக்கிழமை கூட பார்க்கலாம்.”
“நா வர்றேன். உங்களுக்கு ஓகேவா? டயர்டா இருக்குன்னா ஞாயிறு பார்க்கலாம்”
“இல்லல்ல. நீ வா. நூடுல்ஸ் செஞ்சு தர்றேன் ”
“சூப்பர். என் நம்பர் இது. லொக்கேஷன் அனுப்புங்க”
“நா வெளியில இருக்கேன்… ஹலோ…”
“சாரி சாரி. குளிச்சிட்டு இருந்தேன். மூணாவது மாடி. ஃப்ளாட் நம்பர் டி2”
“ஹலோ… ஹலோ…”
“நா இவ்வளவு சீக்கிரமா யாரையும் மீட் பண்ணதே இல்ல.”
“நானும்தான். எதோ நீ மட்டும் பத்தினி மாதிரி சொல்ற”
“நா ஒன்னும் பத்தினியெல்லாம் இல்ல”
“காஃபி?”
“ம்ம்ம்ம்”
“இல்ல பியர்?”
“ஆமான்னு சொன்னா அடுத்த ஆப்ஷன் சொல்வீங்களா”
“ஹாஹாஹா சரி பியர்”
“நேத்து நா ரொம்பவே சந்தோஷமா இருந்தேன்.”
“நானும்தான்.”
“ஒண்ணு சொல்றேன் தப்பா நினைச்சுக்காத. எனக்கு உன்ன ரொம்பவே பிடிச்சிருந்தது. நீ அவ்ளோ. அவ்ளோ… ஆனா அதே நேரம் உன் முகம், உன் முதுகுல இருக்க அந்த மச்சம் எல்லாமே என் தங்கச்சிய மாதிரியே இருக்கு. எனக்கு அத எப்படி ஹாண்டில் பண்றதுன்னு தெரியல. அதனால திரும்ப நாம மீட் பண்ணுவோமா தெரியல. ஒருவேளை எங்கயாவது வெளில போகலாம். ஆர்ட் கேலரி போகலாம். ஆனா அதுக்கும் எனக்கு கொஞ்ச நாள் ஆகும்.”
“ம்ம்ம் புரியுது. உங்கள திரும்ப பார்த்தா சந்தோஷப்படுவேன். இல்லன்னாலும் டேக் கேர் பார்க்கலாம்.”
அருள்
அவர்கள் இப்போதைக்கு பேசிக்கொள்ள வேண்டாமென நினைக்கிறார்கள். ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள வேண்டுமென நினைத்தாலும், நேரில் பார்த்தால் சட்டென்று கண்களைப் பார்க்கவும் தயக்கமாக இருக்கிறது. இத்தனை காலத்தில் ஒருவரையொருவர் நன்றாகவேப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவே எதையும் மறைப்பது சாத்தியமில்லை என்ற உணர்வு கண்களைத் திருப்பிக்கொள்ளச் செய்கிறது. கடைசி முறை அவர்கள் சண்டை போட்டுக்கொண்டார்கள். கற்பனையில் ஒருவர் மேல் ஒருவர் கண்ணாடிக் கோப்பைகளை எறிந்துகொண்டார்கள். அவை மேலே படாமல் விலகிக் கொண்டார்கள். பின் தங்களுக்குத் தாங்களே வயதாகிவிட்டது என்று சொல்லிக்கொண்டார்கள். இனி சிறுபிள்ளைத்தனமாக சண்டை போட முடியாது. பெரியவர்கள் பேசித்தான் முடிவெடுக்க வேண்டும். சமயத்தில் இருவருக்குமே தோன்றும், ஒரு அறை கொடுத்து, ஒரு அறை வாங்கிக்கொண்டால் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் முடிந்துவிடும் என்று. ஆனால் இதற்குமுன் அவர்களது இருவேறு வாழ்க்கைகளில் சிலவேறு நபர்களுடன் அப்படி நடந்தபோதெல்லாம் பிரச்சினைகள் வெறுமனே ஒத்திமட்டும்தான் போனது என்பதால்தான் அவர்கள் வேறு வழியில்லாமல் பெரியவர்களாக வளர்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் இப்படிப் பிரிந்துபோவதாக பேசிக்கொள்வது மூன்றாவது முறை. எனக்குக் கொஞ்சம் ஸ்பேஸ் வேண்டும். எனக்குக் கொஞ்சம் நேரம் வேண்டும். எனக்குக் கொஞ்சம் வேறெதேதோ வேண்டும். எனக்கு என்ன வேண்டுமென்று கண்டுபிடிக்க வேண்டும்.
அவர்களுக்கு பழையவை எல்லாம் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. நினைவுகளின் பாரம் பதட்டம் உண்டாக்குகிறது. ஒருமுறை ஒருவர் இன்னொருவரிடம் சொன்னார் என் கையில் இருக்கும் இந்தக் கோடுகளைக் கண்டு முகம் சுழிக்காத, பதட்டம் அடையாத முதல் ஆள் நீதான் என்று. அவர் அந்தக் கோடுகளை மெல்ல வருடிக் கொண்டிருந்தார். இந்தக் கோடுகள் உன்னை பயமுறுத்தவில்லையா. நீ கூடிக்கொண்டிருக்கும் இந்நபர் ஒரு காலத்தில் தன் உடலை சிதைத்துக்கொண்டார் என்பது உனக்கு மோசமாக, அறுவறுப்பூட்டுவதாக, அச்சுறுத்துவதாக இல்லையா. அந்தக் கோடுகள் வரைதான், அதற்கு கீழிருக்கும் இந்தக் கோடுகள் நான் உண்டாக்கியதில்லை. இதோ இவன் என அவர் தன் பூனையைக் கைகாட்டினார். பூனை உண்டாக்கிய கோடுகளின் மேலும் சில முத்தங்கள். காதலரே, உடல்கள் சிதைந்துகொண்டேதான் இருக்கின்றன.
“ஞாபகம் இருக்கா?”
“எனக்கு எல்லாமே ஞாபகம் இருக்கு. ஆனா, எதைப் பத்தியும் பேசணுமா தெரியல”
“பேசாமலே போய்டலாமா”
“போகமுடிஞ்சா போய்டலாம்”
“ஒருமுறை ஒருவர் வேறொருவருடன் உறவில் இருந்தார். அவர்கள் ஒரே வீட்டில் இருந்தார்கள். இது இந்தக் கதையில் வரும் இருவருக்கும் முதல் முறை பிரேக் அப் ஆகி பின் கூடுவதற்கு இடையிலான ஒரு வருடத்தில் நடந்தது. இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அறிந்த நான்கு வருடங்களில் அதுவே மிக நீண்ட பிரிவு. அப்போது ஒருவரும் வேறொருவரும் பிரிந்தாலும் ஒரே அப்பார்ட்மெண்டில் வெவ்வேறு தளங்களில் வசித்துவந்தார்கள். அது கொரோனாவுக்குப் பின்னான சமயம். தடைகள், தயக்கங்கள் நிறைந்திருந்த சூழல். அப்போது இவர்களிருவரும் அவரது வீட்டு மொட்டை மாடியில் சந்தித்துக்கொள்ள முடிவுசெய்திருந்தனர். அந்த சமயத்தில் வேறொருவரும் அதே மொட்டை மாடியில் இருந்த ஒரு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தார். இவர்களுக்கு இடையிலான நெருக்கத்தை அது கூட்டியதா, குறைத்ததா என்று இப்போது யோசிக்கிறார்கள். படபடவென ஓடும் நினைவுகளை அர்த்தமாக்கிக் கொள்ளக் கஷ்டமாயிருக்கிறது.”
“நாலு வருஷம்?”
“ம்ம்ம்ம் எவ்வளவு நாள் உயிரோடிருக்கப் போறோம் அப்டின்றத பொருத்து, ரொம்ப நீண்ட காலம். இல்ல ரொம்ப கம்மி”
இருவருமே இந்தக் கதையை இத்தோடு முடித்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள். முடிந்தவுடன் அவர்களுக்கு உடனடியாக ஒரு விடுதலையுணர்வு கிடைக்கும். மூச்சுவிட முடியாமல் அழுத்திக்கொண்டிருக்கும் எதுவோ விட்டுப்போனது போல. ஆனால் அது நிலையாக இருக்குமா என்பதில் இருவருக்குமே நம்பிக்கை இல்லை.
“நான் உன்ன மிஸ் பண்ணலன்னு இல்ல. ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன். ஆனா நீ கூட இல்லாதப்போ உன்ன எவ்ளோ மிஸ் பண்ணேனோ, நீ கூட இருக்கும்போதும் உன்ன அவ்வளவு மிஸ் பண்றேன். அதனாலதான் என்னால இத தொடர்ந்து செய்யமுடியும்னு தோணல”
“இது வொர்க் அவுட் ஆகல. சரிவரல அப்டின்றது என்னால இன்னமும் முழுசா ஏத்துக்க முடியலன்னு நினைக்கிறேன்”
அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை இடையூறு செய்வதுபோல அவர்கள் அமர்ந்திருந்த உணவகத்தின் அருகே சிறு கோளாறு. ஒரு பள்ளிப் பேருந்து ஓட்டுநர் தன் பேருந்தை ரோட்டோரம் நிறுத்திவிட்டு இறங்கிவந்து கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவர்களிடம் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார். பேருந்தில் மாணவர்களுக்குப் பொறுப்பாக வந்திருக்கும் ஆசிரியர் இறங்கிப் போய் அவரை சமாதானப்படுத்துவதா, மாணவர்களை விட்டு இறங்கலாமா என்று குழம்பிப்போயிருக்கிறார். தெருவில் சென்றுகொண்டிருந்த நற்குடிமக்கள் சிலர் ஓட்டுநரை சமாதானம் செய்ய முயல்கிறார்கள். சிறுவர்கள்தானே. ஏன்ப்பா இப்படிச் சொல்லலாமா. ஒட்டுநருக்கு லேசாக கண்ணீர் முட்டுவது போலிருக்கிறது. ஒரு நிமிடம் யாரோ கொடுத்த தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு, ப்ளாட்ஃபார்மில் அமர்ந்து எழுபவர் மீண்டும் பேருந்தை எடுத்துவிடுவார் என்றுதான் தோன்றுகிறது.
“நான்தான் நம்ம உறவ கைவிட்டுட்டேன்னு நீ நினைச்சுடக் கூடாது. அப்படி நீ நினைப்ப. ஏதாவது ஒருநாள் ஏன்டா இந்த அஞ்சு வருஷம்னு நீ நினைச்சுடுவ. வெறுத்துடுவ, இதெயெல்லாம் யோசிச்சாலே எனக்கு…”
“நா உன்ன வெறுத்துட மாட்டேன். யோசிச்சிருக்கேன். எல்லாத்தையும். பலவிதமா. ஆனா, எப்பவுமே உன்மேல வெறுப்பு வரல”
“ம்ம்ம் இத இத்தனை கிரேஸோட செய்யமுடியும்னு நினைக்கல”
“ம்ம்ம் கிரேஸ்க்கு தமிழ்ல என்ன?”
“யோசிக்கணும்”
“மொழிபெயர்ப்பாளர்தான நீ?”
“கருணை அல்லது கிருபை இரண்டுமே சொல்லலாம். முதல்ல கிரேஸ்க்கு ஆங்கில அகராதியில என்ன போட்டிருக்குன்னு கூகிள் பண்ணு”
“மனிதர்கள் மீண்டெழவும் விமோசனமடையவும் அளிக்கப்படும் அவர்கள் தகுதியடையாத இறை…’
“…அருள்!”
“ம்ம்ம் அருள்! ஆனா நாம தேடிக்கிட்டிருந்த வார்த்தை அது இல்ல, இல்லயா?”
“இல்ல. அது வேற என்னவோ. கிட்டும்போது கிட்டும்.”
வயலட்'s Blog
- வயலட்'s profile
- 6 followers
