இடுக்கேரி

இந்த வருட நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டவுடன் யோன் ஃபோஸ்ஸெவின் இந்த சிறிய நாவலை வாசித்தேன். சிறிய நாவல் என்பதே ஊக்கப்படுத்தியது. இடுக்கேரி எனப்படும் மலையிடைக் கடல்பகுதி நார்வேஜிய நிலப்பகுதியை யோசிக்கும்போதே மனதில் தோன்றுவது. கார்ல் ஓவ் நாஸ்கார்ட் உள்ளிட்ட பிற நார்வேஜிய எழுத்தாளர்களை வாசிக்கும்போது தோன்றிய அதே அடர்த்தி இப்போதும் தோன்றியது. ஒரு நார்வேஜியப் பெண் முன் காணாமல் போன தன் கணவனைப் பற்றி யோசிப்பதிலிருந்து நூறாண்டுகளுக்கு மேலாக அந்தக் குடும்பம் வாழ்ந்து வரும் அந்த வீட்டின் நினைவுகள், அவர்கள் இருவரின் நினைவுகளோடு கலந்து நிகழ்கிறது.

இரண்டு விசயங்கள் உடனடியாக ஈர்த்தன. இந்நாவலில் சிந்தனையோட்டத்தில் நிறைந்திருக்கும் கேள்விகள். நாம் யோசிக்கும்போதும் மனதில் எவ்வளவு கேள்விகள் நிறைந்திருக்கின்றன என்பதைக் குறித்து மீண்டும் யோசிக்கவைத்தது. இரண்டாவது வசனங்கள், நாடக ஆசிரியருமான யோன் ஃபோஸ்ஸெவின் வசனங்கள் தனித்துவமான நாடகத்தன்மையுடன் அமைந்திருக்கின்றன. திரும்பத் திரும்ப வரும் வரிகள் அடர்த்தியைக் கூட்டிக்கொண்டே செல்கின்றன.

எனவே வாசித்த நாவலின் முதல் சில பக்கங்களை, விரைவாக மொழிபெயர்த்த ஒரு முயற்சி.

தீயில் ஆலிஸ்

நாவல் பகுதி

அறையில் இருக்கும் பெஞ்ச்சில் சிக்னே படுத்திருப்பதைப் பார்க்கிறேன், அவள் பழைய மேசை அடுப்பு மரப்பெட்டி சுவரின் பழைய மரப் பலகைகள் இடுக்கேரியை நோக்கியிருக்கும் பெரிய ஜன்னல் என பழகிய விசயங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள், எல்லாவற்றையும் பார்க்காமலேயே பார்த்துக்கொண்டிருக்கிறாள், எல்லாம் மாறாமல் எப்படியிருந்ததோ அப்படியே இருந்தாலும் எல்லாம் மாறிவிட்டது என்று நினைக்கிறாள் ஏனென்றால் அவன் காணாமல் போய் காணாமலேயே இருப்பதிலிருந்து எதுவுமே மாறாமல் இல்லை, அவள் அங்கு இல்லாமலே இருக்கிறாள், பகல்கள் வருகின்றன, பகல்கள் போகின்றன, இரவுகள் வருகின்றன, இரவுகள் போகின்றன, அவளும் அவற்றுடன் மெல்ல நகர்ந்தபடி போகிறாள், எதையும் பெரிதாக மாற்றிவிடாமல் எதுவும் எந்தத் தடயங்களும் விட்டுச் செல்லாமல், இன்று என்ன நாளென்று அவளுக்குத் தெரியுமா? இன்று வியாழனாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள், இன்று மார்ச், வருடம் 2002, ஆம் அவளுக்கு அவ்வளவு தெரியும் ஆனால் தேதி அப்புறம் இன்னபிறவெல்லாம், அவளால் அவ்வளவு முடியாது, அவள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? என்ன பயம்? என்று நினைக்கிறாள், என்ன இருந்தாலும் அவளால் தன்னில் பாதுகாப்பாக உறுதியாக இருக்கமுடியும், அவன் காணாமல் போவதற்கு முன் அவள் இருந்தது மாதிரியே, ஆனால் அது அவளுக்கு இப்போது நினைவில் எழுகிறது, அவன் எப்படி காணாமல் போனானென்று, 1979இல் நவம்பர் பிற்பகுதியில் அந்த செவ்வாய்க்கிழமையில் யோசித்தவுடனே அவள் மீண்டும் அந்த வெறுமையில் இருக்கிறாள் என்று நினைத்தாள், வாசற்கதவைப் பார்த்தால் அது திறப்பதையும் அதன் வழியாக அவள் உள்ளே வந்து கதவை சாத்திவிட்டு அறைக்குள் நடந்துபோவதையும் பார்க்கிறாள், நின்று ஜன்னலைப் பார்க்கிறாள் ஜன்னலின் முன் அவள் நிற்பதைப் பார்க்கிறாள் அந்த அறையில் நின்றபடி அவன் நீண்ட கருப்பு முடியும் இருளைப் பார்த்துக்கொண்டு நிற்பதைப் பார்க்கிறாள், அவன் தன் கருப்பு ஸ்வெட்டர் அணிந்திருக்கிறான், அவள் பின்னிய அந்த ஸ்வெட்டரைத்தான் குளிராக இருக்கும்போதெல்லாம் அணிந்திருப்பான், அங்கே நிற்கிறான், வெளியிலிருக்கும் இருளுடன் ஒன்றாகிவிட்டான் என்று நினைக்கிறாள், அவன் இருளோடு அப்படி ஒன்றிணைந்திருக்கிறான் அவள் கதவைத் திறந்து பார்த்தபோது அவன் நிற்பதையே அவள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறாள் என்றாலும் யோசிக்காமலேயே அவளுக்குத் தெரியும், சொல்லாமலேயே அவளுக்குத் தெரியும், அவன் அங்கே அப்படி நிற்பான் என்றும் அவன் கருப்பு ஸ்வெட்டரும் ஜன்னலுக்கு வெளியிலிருக்கும் இருளும் ஒன்றாக இருக்குமென்றும் அவள் நினைக்கிறாள், அவனே இருள், இருள்தான் அவன் ஆனாலும் அப்படித்தான் அது என்று அவள் நினைக்கிறாள், அவள் வந்து அவன் அங்கே நிற்பதைப் பார்த்தபோது எதிர்பாரா எதையோ பார்த்ததுபோல அதுதான் வினோதமானது ஏனென்றால் அவன் எல்லா நேரமும் ஜன்னலுக்கு எதிரே அப்படியேதான் நிற்பான், ஆனால் என்ன அவள் வழக்கமாக அதைப் பார்க்கமாட்டாள் என்று நினைக்கிறாள், இல்லை அதை எப்படியோ கவனிக்கமாட்டாள் ஏனென்றால் அவன் அப்படி நிற்பதும் ஒரு பழக்கமாகிவிட்டது எல்லாவற்றையும் போல அவளைச் சுற்றி அப்படியே இருக்கும் ஒரு விசயமாகிவிட்டது ஆனாலும் இம்முறை அவள் அறைக்கு வந்து அவன் அங்கே நிற்பதையும் அவன் கருப்பு முடியையும் கருப்பு ஸ்வெட்டரையும் பார்த்தபோது, அவன் அப்படியே நின்று இருளைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே ஏன் அப்படிச் செய்கிறான்? என்று நினைக்கிறாள், அவன் ஏன் அப்படி நின்றுகொண்டிருக்கிறான்? ஜன்னலுக்கு வெளியே பார்க்க எதுவும் இருக்கிறதென்றாலும் சரி, எதுவுமில்லை, வெறும் இருள், இந்த கனத்த கிட்டத்தட்ட முழுமையான இருள், எப்போதாவது கார் ஒன்று வந்தால் வரும் காரின் முன்விளக்கு தெருவின் ஒரு பகுதியை வெளிச்சத்தால் நிரப்பும் என்றாலும் அங்கே நிறைய கார்கள் வருவதில்லை, அதுதான் அவளுக்கும் பிடிக்கும், அவள் யாரும் இல்லாத இடத்தில் வாழ விரும்பினாள், சிக்னேவும் அஸ்லேவும், அவனும் அவளும், முடிந்தவரை தனியாக இருக்கும் இடத்தில் எல்லாரும் போய்விட்ட இடத்தில் வசந்தம் வசந்தமாக இலையுதிர் இலையுதிராக குளிர்காலம் குளிர்காலமாக வெய்யில் வெய்யிலாக இருக்கும் இடத்தில் அப்படியொரு இடத்தில்தான் வாழ விரும்பியதாக அவள் நினைத்தால் ஆனால் இப்போது பார்க்க இருள் மட்டும்தான் இருக்கிறது, அவன் ஏன் அப்படி நின்று இருளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்? அவன் ஏன் அப்படிச் செய்கிறான்? பார்க்க எதுவுமே இல்லாதபோது, ஏன் அங்கேயே எல்லா நேரமும் நின்றுகொண்டிருக்கிறான்? என்று நினைக்கிறாள், இப்போது மட்ட்டும் வசந்தகாலமாக இருந்தால், அவள் நினைக்கிறாள், இப்போது மட்டும் வசந்தம் தன் ஒளியுடனும் வெதுவெதுப்பான நாட்களுடனும் புல்வெளி முழுக்க மலர்களுடனும் மரங்களில் மொட்டுகளும் புது இலைகளும் உருவாகவும் வந்தால் ஏனென்றால் இந்த இருள் எப்போதும் முடிவற்று நீளும் இந்த இருள், இதை அவளால் பொறுக்கமுடியவில்லை என்று நினைக்கிறாள், அவனிடம் அவள் ஏதாவது சொல்லவேண்டும், ஏதாவது என்று நினைக்கிறாள், எதுவுமே அவையாக இல்லாதிருப்பது போல அவள் அறையைச் சுற்றிப் பார்த்து நினைக்கிறாள், ஆம் எல்லாம் அவையாகவே இருக்கின்றன, எதுவும் மாறவில்லை, ஏன் அப்படி ஏதோ மாறிவிட்டதாக நினைக்கிறாள்? ஏதாவது ஏன் மாறியிருக்கவேண்டுமென நினைக்கிறாள், ஏதாவது எப்படி மாறியிருக்க முடியும்? ஏனென்றாள் அவன் ஜன்னலுக்கு முன் நிற்கிறான், வெளியிலிருக்கும் இருளிலிருந்து பிரித்துப் பார்க்கமுடியாதபடி என்று நினைக்கிறாள், ஆனால் அவனிடம் கொஞ்ச நாளாக என்ன சரியில்லை? ஏதாவது நடந்ததா? அவன் மாறிவிட்டானா? அவன் ஏன் அமைதியாகிவிட்டான்? ஆமாம், அமைதியாகிவிட்டான், ஆனால், ஆம் அவன் எப்போதுமே அமைதியாகத்தான் இருப்பான் என்று அவள் நினைக்கிறாள், அவனைப் பற்றி வேறு ஏதாவது வேண்டுமானால் சொல்லலாம் ஆனால் அவன் எப்போதுமே அமைதியான ஆள்தான், எனவே வழக்கத்துக்கு மாறாக ஒன்றுமில்லை, அவன் அப்படித்தான், அவ்வளவுதான், அவன் அப்படித்தான் இருப்பான் என்று நினைக்கிறாள், அவன் இப்போது திரும்பி அவளைப் பார்த்து அவளிடம் ஏதாவது பேசலாம் என்று நினைக்கிறாள், ஏதாவது, சும்மா ஏதாவது சொல்லலாம், ஆனால் அவள் வந்ததையே கவனிக்காதது போல அவன் நின்றுகொண்டிருக்கிறான்

இதோ இருக்கிறாயா, சிக்னே சொல்கிறாள்

அவன் திரும்பி அவளைப் பார்க்க, அவள் அவன் கண்களிலும் இருக்கும் இருளைப் பார்க்கிறாள்

ஆமாம், இங்கதான் இருக்கேன்னு நினைக்கிறேன் அஸ்லே சொல்கிறான்

அங்க பார்க்க என்ன பெருசா எதுவும் இல்லையே சிக்னே சொல்கிறாள்

இல்ல எதுவுமில்ல அஸ்லே சொல்கிறான்

அவளைப் பார்த்து சிரிக்கிறான்

இல்ல வெறும் இருள்தான் சிக்னே சொல்கிறாள்

வெறும் இருள் ஆமாம் அஸ்லே சொல்கிறான்

ஆனா நீ அந்த ஜன்னல் முன்ன நின்னுகிட்டு இருக்க சிக்னே சொல்கிறாள்

ஆமாம் அஸ்லே சொல்கிறான்

ஆனா நீ எதையும் பார்க்கல சிக்னே சொல்கிறாள்

இல்ல அஸ்லே சொல்கிறான்

அப்புறம் ஏன் அங்க நிக்கிற சிக்னே சொல்கிறாள்

ஆமாம் அதாவது அவள் சொல்கிறாள்

ஆமாம் நீ எதையோ யோசிச்சுகிட்டு இருக்க அவள் சொல்கிறாள்

நான் எதையும் யோசிக்கல அவன் சொல்கிறான்

ஆனா நீ எதைப் பார்த்துகிட்டு இருந்த சிக்னே சொல்கிறாள்

நான் எதையும் பார்க்கல அஸ்லே சொல்கிறான்

உனக்குத் தெரியாதா சிக்னே சொல்கிறாள்

இல்ல அஸ்லே சொல்கிறான்

நீ சும்மா நின்னுகிட்டு இருந்த சிக்னே சொல்கிறாள்

ஆமா சும்மா இங்க நின்னுகிட்டு இருக்கேன் அஸ்லே சொல்கிறான்

நின்னுக்கிட்டு இருக்க சிக்னே சொல்கிறாள்

நான் நிக்கிறது உன்ன தொந்தரவு பண்ணுதா அஸ்லே சொல்கிறான்

இல்ல அதில்ல சிக்னே சொல்கிறாள்

ஆனா நீ ஏன் கேட்ட அஸ்லே சொல்கிறான்

நான் சும்மா கேட்டேன் சிக்னே சொல்கிறாள்

அப்படியா அஸ்லே சொல்கிறான்

நான் எதையும் நினைச்சு கேட்கல, சும்மா கேட்டேன் சிக்னே சொல்கிறாள்

சரி அஸ்லே சொல்கிறான்

நான் சும்மாதான் இங்க நிக்கிறேன், ஆமா அவன் சொல்கிறான்

பல சமயம் யாராவது எதையாவது சொல்லும்போது அவங்க எந்த அர்த்தமும் இல்லாம சும்மாதான் சொல்வாங்களா இருக்கலாம் அவன் சொல்கிறான்

இருக்காது, அப்படி எப்பவும் இருக்காது அவன் சொல்கிறான்

அவங்க எதையாவது சொல்லும்போது, சும்மா எதையோ சொல்லத்தான் சொல்வாங்க, உண்மைதான் சிக்னே சொல்கிறாள்

அப்படித்தான் ஆமாம் அஸ்லே சொல்கிறான்

அவங்க எதையாவது சொல்லனுமே சிக்னே சொல்கிறாள்

ஆமா சொல்லணும் அஸ்லே சொல்கிறான்

அப்படித்தான் அவன் சொல்கிறான்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 11, 2023 09:09
No comments have been added yet.


வயலட்'s Blog

வயலட்
வயலட் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow வயலட்'s blog with rss.