குற்றமுகங்கள் 9 மகரன் காண்டீபன்

புகையால் எழுதப்படும் பெயர்கள் நிலைப்பதில்லை. ஆனால் அதன் வசீகரம் அபூர்வமானது. அப்படிச் சிகரெட் புகையைக் கொண்டு தனது பெயரை எழுதிக் காட்டத் தெரிந்தவன் மகரன் காண்டீபன். ஐந்தரை அடி உயரம். வயது முப்பதுக்குள்ளிருக்கும். கட்டை மீசை. மஞ்சள் படிந்த கண்கள். உரிந்த தோல் கொண்ட உதடுகள். தன்னை எரித்துக் கொள்ளும் போதும் சிகரெட் மௌனமாக இருக்கிறது என்பதாலே அதை மகரனுக்குப் பிடித்துப் போனது.  

இங்கிலீஷ் கிளப்பில் நடக்கும் குத்துசண்டை போட்டிகளின் போது சிகரெட் விற்பனை செய்வது மகரனின் வேலை. இதற்கான உரிமையை அவன் கர்னல் மார்டினிடமிருந்து பெற்றிருந்தான். அந்த நாட்களில் இங்கிலீஷ் கிளப்பிற்குள் இந்தியர்கள் அனுமதிக்கபடவில்லை.

கிளப்பின் பந்தாட்ட மைதானத்தையும் சூதாட்ட அரங்கினையும் சுத்தம் செய்வதற்காகத் தினமும் வரும் பணியாளர்கள் கூடப் பின்வாசல் வழியாகக் காலில் துணிகளைக் கட்டிக் கொண்டே உள்ளே வர வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.

மகரன் காண்டீபன் சிகரெட் விற்பனை செய்யும் உரிமையைப் பெறுவதற்கு முன்பாகப் புகைக் கலைஞனாக வேலை செய்தான்.

மதராஸின் எழும்பூரில் 1854ல் புதிதாகத் துவங்கப்பட்ட அருங்காட்சியகத்தினைக் காண மக்களைக் குறைவாக வந்தார்கள். கூட்டத்தை ஈர்க்கும் விதமாக அதன் இயக்குநராக இருந்த எட்வர்ட் கிரீன் பல்பர் பல புதுமைகளை மேற்கொண்டார். அதன்படி ஒட்டகம், சிறுத்தை கரடி. வரிக்குதிரை போன்ற உயிருள்ள விலங்குகளைக் கொண்டு வந்து காட்சிப்படுத்தினார். அவற்றை மக்கள் நெருங்கிப் பார்வையிடவும் அனுமதித்தார்.

அப்படியும் கூட்டம் திரளாத போது தனிநபர் வேடிக்கை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். மணலைக் கயிறாகத் திரித்துக் காட்டும் நிகழ்ச்சி. ஆறடி நீளமுள்ள வாளை விழுங்கி காட்டும் நிகழ்ச்சி. பாம்பு மனிதன் ஷோ எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் ஒன்றாக மகரன் காண்டீபனின் புகைவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது

மரமேஜை ஒன்றின் மீது ஏறிக் கொண்டு மகரன் காண்டீபன் ஒரே நேரத்தில் வாயில் ஆறு சிகரெட்டுகளைப் பற்ற வைத்துப் புகைவிடுவான். வளைய வளையமாக அந்தப் புகை வெளியேறுவதைக் கண்டு மக்கள் ரசித்துக் கைதட்டுவார்கள். அது போலவே புகையால் தனது பெயரை எழுதிக் காட்டுவான். இது மட்டுமின்றிக் காது வழியாகச் சிகரெட் புகையைவிடுவது, எரியும் சிகரெட்டினை வாயினுள் விழுங்கிக்காட்டுவது போன்ற வேடிக்கைகளையும் செய்து வந்தான்.

எட்வர்ட் கிரீன் பல்பர் அவனது உடையே சிகரெட் போல இருந்தால் நன்றாக இருக்கக் கூடும் என நினைத்து பொன்னிற மேல் சட்டையும் வெள்ளை பேண்டும் பரிசாக வழங்கினார். அத்தோடு அவன் ஒரு நடமாடும் சிகரெட் என்ற பட்டத்தையும் வழங்கினார்.

மகரன் காண்டீபன் விசேச உடையினை அணிந்து கொண்டு தனது புகைவிடும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி புகழ்பெற்றான். அதிலும் ஒருமுறை இரண்டு குரங்குகளைச் சிகரெட் புகைக்க வைத்துக் காட்டியது பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதன் தொடர்ச்சியாக மார்க் அண்ட் கோ வழியாக இங்கிலாந்திலிருந்து பல்வேறு விதமான சிகரெட் ரகங்களை வரவழைத்து விற்பனை செய்ய ஆரம்பித்த மகரன் சிப்பாய்களுக்குள் சிகரெட் பிடிக்கும் போட்டி ஒன்றையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டினான்.

இந்தப் புகழின் காரணமாகவே அவன் இங்கிலிஷ் கிளப்பில் சிகரெட் விற்பனை செய்வதற்கான அனுமதி கிடைத்தது. அங்கே வாரம் சனிக்கிழமை மாலை குத்துசண்டை நடப்பது வழக்கம்.

ராணுவ அதிகாரிகளும் கப்பல் மாலுமிகளும் கம்பெனி வணிகர்களும் அதைக் காண ஒன்று கூடுவார்கள். அந்தக் குத்துசண்டையில் பெரும்பாலும் ஆங்கிலேயர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள். குத்துசண்டை அரங்கிலே மதுவும் சிகரெட்டும் விற்கபடும்.

இங்கிலிஷ் கிளப்பில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் பெண்பித்துக் கொண்ட வெள்ளைக்கார அதிகாரிகளை மகிழ்ச்சிப்படுத்த ஆண் உடையில் பெண்களை அழைத்து வந்து அவர்களுடன் சரசமாடச் செய்தான் . இதனால் கம்பெனி அதிகாரிகளிடம் நிறையச் சலுகைகளைப் பெற முடிந்தது.

குத்துசண்டை வீரனான சார்லஸ் பிராங்க் ஒரு நாள் மகரக் கண்டியனை அழைத்துக் கப்பலின் மேற்தளத்தில் ஒரு குத்துசண்டை போட்டியினை ஏற்பாடு செய்தால் நிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்ற யோசனையைச் சொன்னான். கிடைக்கும் வருவாயில் பாதிப்பாதியாகப் பிரித்துக் கொள்வோம் என மகரக் கண்டியன் அன்றே ஒப்பந்தம் செய்து கொண்டான்.

கோல்டன் டவர் கப்பலில் முதன்முறையாகக் குத்துசண்டை ஏற்பாடானது. இதனைக் காணுவதற்காக ஐந்து ஸ்டார் பகோடா நாணயங்கள் கட்டணமாக வைக்கப்பட்டிருந்தது.

கப்பலின் மேற்தளத்தில் நடைபெற்ற போட்டியினைக் காண ஆங்கிலேயர்கள் திரளாக வந்திருந்தார்கள். போட்டியின் போது மதுவும் சிற்றுண்டிகளும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன. அந்தப் போட்டி மகரன் காண்டீபனின் வாழ்க்கையைத் திசைமாற்றியது. இவ்வளவு பணத்தை எளிதாக சம்பாதிக்க முடியும் என்பது வியப்பளித்தது

தனது போட்டிகளுக்காகவே அவன் ஒரு பழைய கப்பலை விலைக்கு வாங்கினான். அதில் குத்துச்சண்டை போட்டிகளைத் தொடர்ந்து நடத்த ஆரம்பித்தான். அவனிடம் பணம் குவிய ஆரம்பித்தது.

குத்துசண்டையில் வெள்ளைக்காரர்களுடன் இந்தியர்களும் மோதுவதற்கு ஏற்பாடு செய்தான். அந்தப் போட்டியில் வெள்ளைக்கார வீரன் தோற்றால் கூட ஐம்பது பொற்காசுகள் வழங்கப்படுமென அறிவித்தான். தனது கப்பலில் குத்துசண்டையிடுவதற்காக அவனே வீர்ர்களைத் தயார் செய்யவும் ஆரம்பித்தான்.

குத்துச் சண்டை போட்டிகளின் போது தானே சொந்தமாகத் தயாரித்த சிகரெட்டுகளை நேவி கட் சிகரெட் டின்னில் அடைத்து 88 பிராண்ட் சிகரெட் என விற்பனை செய்ய ஆரம்பித்தான். புதிய சிகரெட்டின் வாசனை வெள்ளைக்காரர்களுக்குப் பிடித்துப் போனது.  

கப்பலில் நடக்கும் குத்துச்சண்டை போட்டியும் புகையும் மதுவும் ஆங்கிலேயர்களை மிகவும் உற்சாகம் கொள்ள வைத்தது.

அதன்பிறகு மதராஸின் முக்கிய நபராக மகரன் காண்டீபன் உருமாறினான்.

ராணுவ அதிகாரிகள் தரும் விருந்தில் அவனும் கையில் ஒயின் கோப்பையை ஏந்தினான். நடனம் ஆடினான். ஆறு குதிரைகள் கொண்ட சாரட் ஒன்றை சொந்தமாக வைத்துக் கொண்டான். கப்பலிலே வசிக்கத் துவங்கிய காண்டீபன் தனது பணியாளர்களாக வெள்ளைக்கார பெண்களை மட்டுமே வைத்துக் கொண்டிருந்தான்

போலி சிகரெட்டுகளைத் தயாரிப்பதற்காக வேப்பேரியில் இருந்த பழைய நாடக கொட்டகை ஒன்றை விலைக்கு வாங்கினான். அதனுள் ரகசியமாகச் சிகரெட் தயாரிக்கும் பணி நடந்தது. கம்பெனி ராணுவ அதிகாரிகளில் சிலர் இங்கிலாந்து செல்லும் போது 88 சிகரெட் டின்களைக் கையோடு கொண்டு சென்றார்கள்.

லண்டனிலும் மகரன் காண்டீபனின் சிகரெட்டிற்கு வரவேற்பு அதிகமானது. கம்பெனி அதிகாரிகளில் ஒருவரான சார்லஸ் எட்வர்ட் இந்தச் சிகரெட்டுகளை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யும் உரிமையைப் பெற்றுக் கொண்டார். இப்படியாக மகரனிற்குப் பல்வேறு வழிகளிலும் பணம் கொட்ட ஆரம்பித்தது

குத்துச்சண்டை போட்டிகளை மட்டும் கப்பலில் நடத்தாமல் சூதாட்டம், நிர்வாண நடனம். துப்பாக்கி சுடும் போட்டி எனப் பல்வேறு கேளிக்கைகளையும் ஏற்பாடு செய்தான். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் அவனது கப்பலில் இசை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அன்று கரையில் இருந்தபடியே ஒளிரும் கப்பலையும் அதில் இசைக்கப்படும் சங்கீதத்தையும் மக்கள் ரசித்தார்கள்.

மதராஸின் புதிய கவர்னராக ஜார்ஜ் ஹாரிஸ் நியமிக்கப்பட்டார். அதைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் அவரது கையைக் குலுக்கி தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டான் காண்டீபன். முதற்சந்திப்பிலே அவன் ஒரு ஏமாற்றுக்காரன் என ஜார்ஜ் ஹாரிஸ் உணர்ந்து கொண்டுவிட்டார். அதன் சில நாட்களில் அவர் கப்பலில் நடைபெறும் குத்துசண்டை போட்டிகளுக்குத் தடைவிதித்ததோடு கம்பெனி அதிகாரிகள் எவரும் அதில் கலந்து கொள்ளக்கூடாது என உத்தரவும் பிறப்பித்தார்.

மகரன் காண்டீபனின் செல்வாக்கு இங்கிலாந்து வரை இருந்த்து. அவன் இங்கிலாந்திற்குச் சென்று விக்டோரியா ராணியை நேரில் சந்தித்து விசேச அனுமதிக் கடிதம் பெற்றுவந்தான். அதனை கவர்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தங்களுக்குள் இருந்த நட்பை உறவாக்கிக் கொள்ளவும் காண்டீபனை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்காகவும் குத்துசண்டை வீரனான சார்லஸ் பிராங்க் தனது சகோதரி கிளாராவை மகரன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினான்.

காண்டீபனால் அதை மறுக்க முடியவில்லை. அடுத்தச் சில நாட்களில் அவன் மதம் மாறி கிளாரன்ஸ் ஆஷ்லேயாக மாறினான். மதராஸ் தேவாலயத்தில் கிளாராவைத் திருமணம் செய்து கொண்டான்.

திருமணம் நடந்த மூன்றாம் நாளிரவு கிளாரா படுக்கையில் இறந்துகிடந்தாள். அவளைக் கொன்றது கிளாரன்ஸ் எனக் கைது செய்தார்கள். தான் அப்போது கப்பலில் இருந்ததாக அவன் கூச்சலிட்டான். ஆனால் பிராங்க் நம்பவில்லை.

போலி சிகரெட் தயாரித்தது. கம்பெனி அதிகாரிகளை மதுவால் மயக்கி காரியம் சாதித்துக் கொண்டது, மனைவியைத் தாக்கி கொன்றது என மகரன் காண்டீபன் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன.

கவர்னர் அவன் தூக்கிலிடப்பட வேண்டும் என விரும்பினார். அவனுக்கு இருந்த செல்வாக்கின் காரணமாக குற்ற விசாரணை ஒன்றரை ஆண்டுகள் நடந்தது. அதன் தீர்ப்பு வருவதற்குள் மகரன் மதராஸை விட்டு தலைமறைவாகி விட்டான். எங்கே சென்றான் என்று யாருக்கும் தெரியவில்லை.

1879ல் ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ் தீவில் ஒரு வசித்த ஒரு கிழவன் ஒரே நேரத்தில் ஆறு சிகரெட்டுகளைப் பிடிப்பதையும் அவன் காற்றில் தனது பெயரை புகையால் எழுதிக் காட்டுவதையும் கண்டதாக ஜெர்மன் பயணி ஃபிரடெரிக் ஷாஃபர் எழுதியிருக்கிறார். ஒருவேளை அது மகரன் காண்டீபனாக இருக்கவும் கூடும். அவனது மனைவி கிளாராவை யார் கொன்றார்கள் என்ற புதிர் மட்டும் கடைசிவரை தீர்க்கப்படவேயில்லை

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2025 04:14
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.