அஞ்சலி : போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸ் மறைவிற்கு எனது மனமார்ந்த அஞ்சலி.

போப்  பிரான்சிஸ் தனது வாழ்க்கை வரலாற்றை Hope என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார். பொதுவாக இது போன்ற வாழ்க்கை வரலாற்றைப் போப்பாண்டவரின் மறைவிற்குப் பின்பாகவே எழுதுவார்கள். வெளியிடுவார்கள். ஆனால் போப்  பிரான்சிஸ் தான் வாழும் காலத்திலே தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார். இதனை எழுத ஆறு ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார். இதில் அவரது குடும்ப வரலாறும் இளமைக்கால நினைவுகளும் எழுதப்பட்டிருக்கின்றன.

போப் பிரான்சிஸ் இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். இளம் ஜேசுட் பாதிரியாக இருந்த நாட்களில் லத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். நண்பராகப் பழகியிருக்கிறார்..

தனது இளமைக்காலத்தில் போப்  பிரான்சிஸ் இலக்கியம் மற்றும் உளவியல் கற்பிக்கும் ஆசிரியராக இருந்தார் அப்போது அவரது பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ.

பெர்கோக்லியோ அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் – 1936 இல் பிறந்தவர். இத்தாலிய குடும்பத்தைச் சார்ந்தவர். அவரது பெற்றோர் மரியோ மற்றும் ரெஜினா. ஐந்து குழந்தைகளில் பெர்கோக்லியோ மூத்தவர்.

சிறுவயது முதலே புத்தகம் படிப்பதில் அதிக விருப்பம் கொண்டிருந்தார். இத்தாலிய நாவல்கள் மற்றும் நாடகங்களை விரும்பி வாசித்திருக்கிறார்.

கால்பந்து விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். சிறந்த கால்பந்தாட்ட வீர்ராக வேண்டும் எனக் கனவு கண்டார், போப்பாக இருந்த போதும் தொலைக்காட்சி பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து வந்தார் என்பதால் முக்கியமான கால்பந்தாட்ட போட்டிகளின் போது எந்த அணி எவ்வளவு கோல் அடித்தது என்ற தகவலை உதவியாளர் சிறிய துண்டு சீட்டில் எழுதி அவரது மேஜையில் வைத்துவிடுவது உண்டு.

Sports typically unite rather than divide. They build bridges and not walls எனத் தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார்

அரசியல் மற்றும் வணிகத்தில் நிலவும் பேராசைக்கு எதிராகப் போப் பிரான்சிஸ் வெளிப்படையாகப் பேசினார். அரசியல் அதிகார போட்டிகள். பாலியல் வன்முறை. லஞ்சம் மற்றும் சுற்றுசூழல்சீர்கேடுகளைக் கடுமையாக விமர்சித்தார். வாடிகனில் தனக்கு வழங்கப்பட்ட பிரம்மாண்டமான அறையைத் தவிர்த்து எளிமையான சிறிய அறை ஒன்றில் வசித்து வந்தார். ஆர்ச்பிஷப்பாக இருந்த போது பேருந்து ரயில் எனப் பொதுப்போக்குவரத்தில் மட்டுமே பயணம் செய்து வந்திருக்கிறார்.

டுவிட்டர். ஃபேஸ்புக் மற்றும் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கைக் கொண்ட முதல் போப் இவர்தான். செல்ஃபி எடுத்துக் கொண்ட முதல் போப்பும் இவர் தான்.

பெர்கோக்லியோ 1965 ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில் அர்ஜென்டினாவின் சாண்டா ஃபேவிலுள்ள பள்ளி மாணவர்களிடம் கதைகள் குறித்துப் பேசுவதற்காக ஜோர்ஜ் லூயி போர்ஹெஸை அழைத்தார். அந்தச் சந்திப்பில் துவங்கிய நட்பு நீண்டகாலம் தொடர்ந்திருக்கிறது.

அப்போது போர்ஹெஸுக்கு வயது 66. முற்றிலும் பார்வையிழந்தவர். பெர்கோக்லியோவுக்கு 28 வயது. போர்ஹேஸ் அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற எழுத்தாளர். ஆனால் பெர்கோக்லியா இளம் பாதிரி. இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கியம் மற்றும் உளவியலைக் கற்பிக்கும் பணியைச் செய்து வந்தார்.

இளம் பெர்கோக்லியோவின் புத்திசாலித்தனமும் இலக்கிய ஆர்வமும் போர்ஹெஸை மிகவும் கவர்ந்திருக்கிறது. ஆகவே அந்த அழைப்பை ஏற்று எட்டு மணி நேரம் கோச் வண்டியில் பயணம் செய்து சாண்டா ஃபே பள்ளியில் உரையாற்றியிருக்கிறார்.

தன்னிடம் பயின்ற மாணவர்களின் பதினான்கு சிறுகதைகளைத் தொகுத்து பெர்கோக்லியோ சிறிய நூலாகக் கொண்டுவந்திருக்கிறார். அதற்குப் போர்ஹெஸ் முன்னுரை எழுதியிருக்கிறார். தனிச்சுற்றுக்கான அந்த நூல் குறைவான பிரதிகளே வெளியிடப்பட்டது

2013 இல் அவர் போப்  பிரான்சிஸாக ஆனபோது புதிய முன்னுரையுடன் அந்த நூல் மீண்டும் வெளியானது. அதில், போப் பிரான்சிஸ் தனது மாணவர்களின் கதை எழுதும் திறமை குறித்துத் தான் அடைந்த ஆச்சரியத்தையும், போர்ஹெஸ் அதனை வெளியிடுவதற்கு எவ்வளவு ஊக்கப்படுத்தினார் என்பதையும் நினைவு கூர்ந்திருக்கிறார்

போர்ஹெஸின் மரணத்திற்குப் பின்பு அவரது மனைவியான மரியா கோடாமா ரோமிற்குச் சென்று போர்ஹெஸ் வசமிருந்த கதைகளின் முதற்பதிப்பை போப்பிற்குப் பரிசாக வழங்கினார்.

போர்ஹெஸை தான் பணியாற்றிய பள்ளிக்கு உரையாற்ற அழைத்த போது அவரது படைப்புகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி ஐந்து நாட்கள் அந்தக் கதைகளை வாசிக்க வைத்திருக்கிறார்.

தனது படைப்புகளை மாணவர்கள் ஆழ்ந்து படித்திருப்பது போர்ஹெஸை மகிழ்ச்சிப்படுத்தியது. அன்று மாணவராக இருந்த மரியோ என்பவர் போர்ஹெஸின் உரை மறக்க முடியாத ஒன்றாக இருந்தாக பதிவு செய்திருக்கிறார்.

தனது அழைப்பை ஏற்றுப் போர்ஹெஸ் வருகை தந்த நிகழ்வை தனது சுயசரிதையில் போப் பிரான்சிஸ் பதிவு செய்திருக்கிறார்.

நன்றி

Who Is Pope Francis? Stephanie Spinner

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2025 02:32
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.