அலைபேசி இல்லாத நாட்கள்

 கிட்டதட்ட இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு என்னுடைய அலைபேசி கீழே விழுந்து செயலிழந்து விட்டது. அதை சரி செய்வது விரயம். அதை ஆறு ஆண்டுகளாக பயன்படுத்துகிறேன். அதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. இந்த அலைபேசியில் தான் நான்கு புத்தகங்கள் எழுதி, தொகுத்து, பிழைபார்த்து வெளியாகின.



கூடுதலான நினைவகம் உள்ள அலைபேசி வாங்க வேண்டும் என்ற எச்சரிக்கை எனக்கு.  நிறைய கோப்புகள் காணாமல் போய்விட்டன. பட்ஜெட்டிற்குள் அலைபேசி,கிராமத்திற்கு கொரியர் சிக்கல், அதனால் திருப்பிவிடுதல் விடுதல்,என்னுடைய சின்ன கவனக்குறைவு,கொரியர் பாயின் சிறு ஈகோ என்று தாமதமாகி ஒருவழியாக நேற்று வந்து சேர்ந்தது.

இந்த இருபத்தைந்து நாட்களில் கடைசி பத்து நாட்கள் அம்மாவின் அலைபேசியை பயன்படுத்தினேன். திருவிழா வாரத்தில் காலையில் கொஞ்ச நேரம் வைத்திருந்தப்பின் அலைபேசி அம்மாவிடம் சென்றுவிடும். தாயும் பிள்ளையும் என்றாலும் அலைபேசியும் வாட்ஸ்ஆப்பும் வேறுவேறு அல்லவா...

நான் அலைபேசியில் எழுதி பழகி வழக்கமாகிவிட்டதால் காகிதமும் பேனாவும் மனமும் இணைந்து வரவில்லை. தினமும்  எதையாவது எழுதுவது வழக்கம். பிரசுரமாவதற்காக அல்ல. எழுதத் தோன்றுவதை எழுதிப் பார்ப்பது. எழுது அதுவே எழுத்தின் ரகசியம் என்ற சு.ராவின் வார்த்தைகளை மனம் கெட்டியாக பிடித்துக்கொண்டுவிட்டது. அந்த வார்த்தை விதையின் மீது விழுந்த முதல் துளி தண்ணீர். 

அம்மாவின் அலைபேசியில் காவியம் நாவலை தொடர்ந்து வாசித்தேன். வம்சவிருட்சம் புத்தம்வீடு,பதேர் பாஞ்சாலி நாலல்களை வாசித்துக்கொண்டிருந்தேன்.

திருவிழா நாட்களில் காவியமும் ,ஸ்டேட்டஸ் போடுவதும் முடிந்ததும் அலைபேசி அடுத்த நாள் காலை தான் கைகளுக்குக் கிடைக்கும்.

திருவிழா நாட்களின் சுவாரசியமாக கமல்ஹாசனின் Thug life இருந்தது. கோவிலிற்கு சென்ற போது தம்பி ஒருவன் முத்தமழை பாடல் வைரல் ஆவதை பற்றி சொன்னான். 

என்னா பாட்டுக்கா? என்றான். அவனை நம்பி அலைபேசி கடன் வாங்கி பாட்டை கேட்டேன். அவ்வப்போது பின்வீட்டிலிருந்து தெருவிலிருந்து அந்தப்பாடல் காற்றில் மிதந்து வந்தது.

மறுநாள் பாட்டு எப்டி என்றான். 

இந்த பாட்டு பசங்களுக்கு பிடிக்குமாயிருக்கும் என்றேன்.

இல்லக்கா செம வைரல் என்றான்.

பசங்களுக்குள்ள வைரலாகும் என்றேன்.

இல்லக்கா பொதுவாவே வைரல் தான் என்றான்.

இல்லல்ல...பசங்க வைரலாக்கறது பொண்ணுங்களுக்கு பிடிக்கனுமா என்ன? என்று கேட்டேன்.

அவனுக்கு புரியவில்லை. நல்ல வேளை பூமர் என்று சொல்லவில்லை. வீட்டிற்குள் நுழையும் போதே அந்தப்பாடல் சத்தமாகவைத்து கேட்கப்பட்டுக் கொண்டிருந்தது. பெருமூச்சு விட்டபடி மாடியேறினேன். திரைப்படத்தில் அந்தப்பாடல் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கலாம். 

முதல் ஒரு வாரம் எழுதாமல் இயல்பாக இருந்தேன். ஊரில் திருவிழா ஆயத்தங்கள் கலகலப்புகள் இருந்தன. பின்பு அன்றாடத்தில் ஒரு தத்தளிப்பு. சட்டென்று கோபம் வருவதை உணர்ந்தப்பின் எச்சரிக்கையாக அமைதியாக ஆனேன். உள்ளுக்குள் கடுப்பான மனநிலை. அப்படி ஒன்றும் முக்கியமாக நாவலோ சிறுகதையோ எழுதி இடையில் நிற்கவில்லை. ஆனாலும் எழுது என்று எதுவுவோ உந்துகிறது.

இனி அன்றாடம் இயல்பாகும்...







 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2025 00:45
No comments have been added yet.


கமலதேவி's Blog

கமலதேவி
கமலதேவி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow கமலதேவி's blog with rss.