விடமுண்ட கண்டம்

கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா எழுதிய வம்ச விருட்சம் [வம்சவிருட்சா. தமிழில் மொழிஆக்கம் கே. நல்ல தம்பி]என்ற நாவலையும், மலையாள எழுத்தாளர் ஹெப்சிபா ஜெசுதாசன் எழுதிய புத்தம் வீடு நாவலையும் சமீபத்தில் வாசித்தேன்.



வம்சவிருட்சம் நாவல் சீனிவாச பண்டிதர் தன் மகன் நஞ்சுண்ட பண்டிதரை கபிலை ஆற்று வெள்ளத்தில் இழப்பதிலிருந்து தொடங்குகிறது. நஞ்சுசுண்ட பண்டிதரின் மனைவி காத்தியாயினி கைக்குழந்தையுடன்  கணவனை இழந்து நிற்கிறாள். தன் பொறுப்புகளை மகனின் தோளுக்கு மாற்றிவிட நினைத்திருக்கும் சீனிவாச பண்டிதர் மறுபடியும் குடும்ப பொறுப்புகளை ஏற்க நேர்கிறது.

 காத்தியாயினியின் அப்பாவும் மாமியாரும் கணவனை இழந்த காத்தியாயினியிக்கு முடி மழித்து மடியுடுத்தி விதவைக்கான நோன்புகளை ஏற்க வைக்க நினைக்கிறார்கள். ஆனால் சீனிவாச பண்டிதர் 'நோன்புகளை ஒருவர் மனம் உவந்து ஏற்க வேண்டும்...நாம் கட்டயப்படுத்தக்கூடாது' என்று மறுத்துவிடுகிறார். 

காத்தியாயனி கல்லூரிக்கு செல்ல விரும்பும் போது சீனிவாசபண்டிதர் அவளுக்கு ஆதரவு தந்து தன் மனைவி பாகிரதி அம்மாவை சம்மதிக்க வைக்கிறார். தினமும் ரயிலில் பத்து மைல் தொலைவி்ல் உள்ள மைசூர் கல்லூரிக்கு சென்று வருகிறாள். மூன்று ஆண்டுகால கல்லூரி நட்பில் கல்லூரி ஆசிரியர் ராஜாராயரும், காத்தியாயனியும் தங்களுள் காதலை உணர்கிறார்கள். 


                எழுத்தாளர் : எஸ்.எல்.பைரப்பா


காத்தியாயினி நேரில் பேசுவதற்கு தயங்கி தன்னுடைய விருப்பத்தை மாமனாருக்கு எழுதி தெரிவிக்கிறாள். அவர் அவளை தனியே அழைத்து பேசுகிறார். 

மகன் நஞ்சுண்டபண்டிதன் பிறந்த பிறகு பாகிரதி அம்மா மீண்டும் கருதரித்தால் அவர் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் . அதிலிருந்து பண்டிதர் புலனடக்கத்தை கடைபிடிக்கிறார்.

காத்தியாயினி இரவு முழுவதும் தூங்காமல் தன் மாமனாரின் உள்ளஉறுதியை நினைத்து தானும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டு காலையில் மாமனாரிடம் பேசுகிறாள். மீண்டும் ராஜாராயரை நினைக்கும் போது அவள் மனம் தடுமாறுகிறது. அவள் வீட்டிற்கு சொல்லாமல் மைசூருக்கு சென்று ராஜா ராயரை மணந்து கொள்கிறாள்.

மருமகளிடம் பொறுப்புகளை ஒப்படைக்க நினைக்கும் சீனிவாசபண்டிதர் மீண்டும் பொறுப்புகளை ஏற்கும்படி ஆகிறது. மனைவி இறந்த பிறகு அவருடைய சமையல் பொறுப்பும் சேர்ந்துகொள்கிறது.

ராஜாராயரின் அண்ணனும் பேராசிரியருமான சதாசிவராயர் தொன்மையான இந்திய அரசறிவியலில் தர்மத்தின் அடிப்படை என்ற தலைப்பில் பலபாகங்களாக இந்திய அரசியல் மற்றும் வரலற்றை எழுத வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார். பல பத்தாண்டுகள் தேவைப்படும் வேலை அது. அதற்கு உதவியாக வேதங்கள் பற்றி தனக்குள்ள சந்தேகங்கள் பற்றி சீனிவாசபண்டிதரிடம் பாடம் கேட்கிறார். எப்போதாவது வீட்டிற்கு வரும் நண்பராக இருக்கிறார். எப்போதும் தன் புத்தக ஆய்விற்காக புத்தகங்களுக்குள் மூழ்கிகிடந்து அதற்காக பயணம் மேற்கொள்ளும் அவருக்கு தம்பியின் திருமணம் நடந்து முடிந்த பிறகு தான் தெரிகிறது. இவரும் தன் ஆய்விற்கு உதவும் கருணா என்ற வரலாற்று முனைவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். 

இந்த சிக்கல்கள் அனைத்தும் நாவலின் இடையில் விழும் முடிச்சுகள். நாவலின் கதை மெதுவாக சீராக தொடங்கி இடையில் முறுக்கி நிற்கிறது.

காத்தியாயினியின் மகன் சீனிவாசனுக்கு இப்போது தாயும் இல்லை தந்தையும் இல்லை. சதாசிவராயரின் மகனான ப்ருத்விக்கு தந்தை இல்லை. சித்தாப்பா சித்தி அம்மாவுடன் இருக்கிறான். 

ராஜாராயருக்கும் காத்தியாயிக்கும் குழந்தை இல்லை. இவர்களின் முற்பகுதி திருமண வாழ்க்கை காலம் செல்லச்செல்ல குழந்தையின்மையால் வெறுமையாகிறது.  இருவருக்குமுள்ள காதல் மாறுவதில்லை என்றாலும் அந்த அன்பு வாழ்வில் மகிழ்ச்சியை தராமல் ராஜாராயருக்கு துயரையும் ,காத்தியாயினிக்கு குற்றஉணர்வையும் தருகிறது.

சதாசிவராயர் தன் லட்சித்திற்காக இரண்டாம் திருமணம் செய்தாலும் மனைவியான நாகலட்சுமி பற்றிய எண்ணம் அவரின் ஆழத்தை தைக்கிறது. நாகலட்மிக்கு தன் கணவர் ஏன் பிரிந்தார் என்பதே சரிவர புரிவதில்லை.

சீனிவாசனுக்கும் ப்ருத்விக்கும் தாய் தந்தையரை பற்றிய குழப்பங்கள். 

இதில் சீனிவாசபண்டிதர் மட்டும் எந்த திடுக்கடலும் இல்லாமல் வருவதை எதிர்கொள்பவராக இருக்கிறார். 

காத்தியாயினி , நாகலட்சுமி ,பாகிரதி அம்மாள், ராஜாராயர் என்று அனைவரும் உணர்ச்சி வயப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

சீனிவாசபண்டிதர் லட்சுமி கருணா சதாசிவராயர் போன்றவர்கள் நிதானமானவர்களாக இருக்கிறார்கள்.

இதில் சீனிவாசபண்டிதர் மரபான வேதக்கல்வி பயின்றவர். கருணாவும், சதாசிவ ராயர் இருவரும் நவீன கல்வியில் ஆழஅகலம் காண்பவர்கள்.

 பண்டிதரின் வீட்டு வேலை செய்யும் லட்சுமி பண்டிதரின் சொல் வழியே தனக்கான மனமுதிர்ச்சியை பெறுகிறார். 

பண்டிதருக்கும் லட்சுமிக்குமான அன்பு நடைமுறை பந்தங்களை தாண்டி சென்று சகமனித ஃபாவத்தை தொடுவது .இத்தனை உறவுகளில் , உறவு சிக்கல்களில் நகரும் நாவலில் லட்சுமிக்கும் பண்டிதருக்குமான  அன்பு ஒரு உறவுக்குள் சிக்காமல் சகமனித அன்பாகவே இருக்கிறது. 

பண்டிதரும் லட்சுமியும் சிறுபிள்ளையிலிருந்தே ஒன்றாக வளர்கிறார்கள். பண்டிதரின் வீட்டு எல்லைக்குள்ளேயே லட்சுமியின் தந்தையின் குடிசையும் உள்ளது. சீனப்பா...என்று லட்சுமி பண்டிதரை ஒருமையில் அழைக்கிறாள்.

குடிகார கணவனை இழந்து, தந்தையையும் இழக்கும் லட்சுமி திரும்பவும் பண்டிதரிடமே வருகிறார். இந்த வீட்டில் உனக்கு ஒரு இடம் இல்லையா..உன் தாய்வீடு போல என்று இயல்பாக பண்டிதர் அரவணைக்கிறார். முதல்குழந்தை பிறந்தபின் பாகிரதி அம்மாள் தனக்குள்ள பலகீனத்தால் தன் கணவருக்கு தன் தங்கையை மணம் செய்து வைப்பதற்காக தன்னுடைய அப்பாவை அழைக்கிறார். அவருக்குமே இரண்டு மனைவிகளும் அதற்கு மேற்பட்ட உறவுகளும் உள்ளன. சீனிவாசபண்டிதர் மறுக்கிறார். ஊர் உலகத்திற்காக தன் நற்பெெயருக்காக மறுக்கிறார் என்று நினைத்து வீட்டு வேலை செய்யும் லட்சுமியுடன் பண்டிதரை மணம் செய்யாத உறவில் 'வாழ' செய்யும்படி மகளிடம் சொல்லிவிட்டு தந்தை சென்றுவிடுகிறார்.

 இதை லட்சுமி மறுக்கிறார். லட்மியின் மனதை மெதுவாக மாற்றிய பாகிரதி அம்மா தன் கணவனிடம் ஒருநாள் இனி நீங்கள் மாடியில் வாழலாம் என்று சொல்லிவிட்டு கீழே மகனுடன் இருக்கிறார். 


     மொழிபெயர்ப்பாளர் : கே.நல்லதம்பி


இந்த நாவலில் யாரும் துவக்கத்திலேயே திடசித்ததுடன் இருப்பது போல காட்டப்படவில்லை. படிப்படியான மாற்றம் நிகழ்கிறது. அன்று பாகிரதி அம்மாவும், பண்டிதரும், லட்சுமியும் மனதிற்குள் அல்லாடுகிறார்கள். பண்டிதர் சஞ்சலப்படும் மனதை திடமாக விலக்கி செல்கிறார். அதிகாலையில் கபிலையில் குளித்துவிட்டு பூஜையில் அமரும் பண்டிதரின் திடசித்தமே வெல்கிறது. இரண்டு மூன்று திருமணங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை உள்ள காலகட்டத்தில் பண்டிதர் தன்கென்ற நிலைப்பாடு உள்ளவராக இருக்கிறார். ஆனால் பின் அவர் லட்சுமியுடன் பழைய எதார்த்தத்தோடு பழக முடியாது போகிறது.

அதற்குபின் பண்டிதர் நினைவாகவே இருக்கும் லட்சுமி உடல் நலம் சரியில்லாமல் படுக்கையில் விழுகிறாள். சிலநாட்கள் பண்டிதர் அவள் அருகிலேயே இருந்து கவனித்துக்கொள்கிறார். இனி எனக்கு யாருண்டு என்று படுக்கையில் லட்சுமி  உலறுகிறாள். அவள் நலமாகி கண்விழிக்கும் போது கைகளை பிடித்துக்கொண்டு பண்டிதர் லட்சுமியிடம்' நீ எப்போதும் போல இரு. உன் வாழ்க்கைக்காக இரண்டு ஏக்கர் நிலம் எழுதி வைக்கிறேன். நாம் எப்போதும் போல அன்பாக மட்டுமே இருப்பதற்கு என்ன? குழந்தையிலிருந்து ஒன்றாக இருக்கிறோம். இப்போது உனக்கு என்ன வந்தது' என்று கேட்கிறார். லட்சுமி மனம் தெளிகிறார். இந்த நாவலில் சீன்னப்பா என்று லட்சுமி மட்டுமே பண்டிதரை ஒருமையில் அழைப்பார். இந்த நாவலில் சீனிவாசபண்டிதரால் மனம் மாறி அவரின் சாயலுடன் இருப்பவர் லட்சுமி மட்டுமே.

நாவலில் வம்சாவளி பற்றிய பிடிப்புடன் சீனிவாச பண்டிதர் இருக்கிறார். அதனால் தான் 'இவன் இந்த குடும்ப வாரிசு இன்னொரு குடும்பத்திற்கு செல்லும் உனக்கு இவன் எதற்கு?  பெயரன் இந்த வீட்டின் வாரிசல்லவா' என்று மருமகளிடம் கேட்கிறார்.. இருந்தாலும் உனக்கு தோன்றினால் அவனை அழைத்து செல் என்று சொல்கிறார். காத்தியாயினி மகனை விட்டு பிரிந்து செல்கிறாள். 

பண்டிதருக்கு ஒருகட்டத்தில் தானே இந்த குடும்பத்தின் நேரடி வாரிசில்லை என்று தெரியவரும் இடம் முக்கியமானது. அதன் பின் அவர் சொத்து சார்ந்த முடிவுகளை எடுக்கிறார். பெயரனுக்கு திருமணம் செய்தப்பின் துறவு மேற்கொள்ள காசிக்கு கிளம்புகிறார்.

புத்தம் வீடு நாவல்.. நலிந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய குடும்பத்தின் கதையை சொல்கிறது. அந்த குடும்பத்தின் வாரிசான லிஸி என்ற பெண் குழந்தையை மையப்படுத்தி தொடங்குகிறது நாவல். அவளின் தந்தையும் மற்றும் சிறிய தந்தையின் குடிப்பழக்கத்தாலும், பொறுப்பின்மையாலும் குடும்பம் படிப்படியாக சரிகிறது. பனைகளால் சூழப்பட்ட நிலமும் வாழ்க்கையும் இந்த நாவலில் உள்ளது. பொருளாதாரத்தால் லிஸியின் திருமணம் தடைபடுகிறது. அவள் அன்பாக இருக்கும் சித்தப்பா மகள் லில்லிக்கு லிஸிக்கு முன்பே திருமணம் முடிகிறது. லில்லி லிஸியை விட அழகாகவும் நிறமாகவும் தோற்றமளிப்பதால் அந்தத்திருமணம் நடக்கிறது. 


         எழுத்தாளர்: ஹெப்சிபா ஜேசுதாசன்


லிஸிவீட்டிற்கு சொந்தமாக உள்ள பனைமரங்களில் அக்கானி எடுக்கும் பனையேறியாக வந்து, வீட்டிற்கு பின்னால் நிலம் வாங்கி குடிசை போட்டு  குடும்பத்துடன் வாழும் அன்பய்யனின் மகன்  லிஸியின் பள்ளித்தோழன். அவன் லிசியை காதலிக்கிறான். அது சிக்கலாகி வேலைக்காக தமிழ்நாட்டிற்கு அனுப்படுகிறான். அவன் திரும்பி வரும் போது லில்லிக்கு திருமணம் நடக்கிறது. லில்லியின் அப்பாவும் சித்தப்பாவை கொலை செய்கிறார். அவரும் இறக்கிறார்.

லிஸியின் அம்மாவும் தாத்தாவும் அவள் காதலை ஏற்கமறுக்கிறார்கள். முன்பு போல இப்போது வலுவான எதிர்ப்பு இல்லாத போதும் லிசி அவனுடன் செல்ல மறுக்கிறாள். தன் மீது அன்பும் நம்பிக்கையும் வைத்துள்ள பாட்டனாரை அவரின் அந்திம காலத்தில் கைவிட அவள் மனசான்று ஒப்புக்கொள்ளவிலலை. ஒருகட்டத்தில் தாத்தாவிற்கு மருத்துவரான லில்லியின் கணவரும் பனையேறி வம்சம் என்று தெரிகிறது. லில்லியின் கணவர் திருமணத்திற்கு பொறுப்பேற்கிறார்.

இந்த இருநாவல்களின் காலமும் இந்திய விடுதலை காலகட்டம். அதிலிருந்து தன் பழைய காலகட்டத்தில் வேரூன்றிய கிராம வாழ்க்கையும் கிராமங்களுமே கதை களம். புத்தம்வீடு நாவலில் பனைகள் சூழ்ந்த கிராமமும்,வம்சவிருட்சத்தில் கபிலை சூழ்ந்த நஞ்சனக்கூடும் முக்கியமான கதை களங்கள். 

நாடு விடுதலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்ப மக்களின் எண்ணங்களில், பழக்கவழக்கங்களில் மறுபாடு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. சமூகத்தின் பொருளாதாரம், நம்பிக்கைள்,கல்வியால் ஏற்படும் மாற்றங்கள் என்ற சுழிப்பில் மாறாது நிற்கும் தீவு போல இந்த கிராமங்கள் 'சிவனே' என்று இருக்கின்றன. இந்த கிராமங்களை ஒரு வெள்ளம் வந்து குழைப்பது போல காலமாற்றங்கள் சிலரின் மூலம் நடக்கிறது. 

புத்தம்வீட்டில் லில்லியின் கணவர், லிஸியின் திருமணத்திற்கு ஆதரவு தெரிவிப்பதும், அதை புத்தம்வீட்டின் மூத்தபாட்டனார் ஏற்றுக்கொள்வதும் இயல்பாக ஏற்படும் சமூகமாற்றத்தை காட்டுகிறது. வம்சவிருட்சத்தில் காத்தியாயினியின் கணவர் இறப்பிலிருந்தே மாற்றம் படிப்படியாக நடக்கிறது.  அவள் பழைய பெண்கள் போல முக்காடு போட்டுக்கொண்டு மடி உடுப்பதில்லை. அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறாள். ஆனால் அவள் ஏன் குற்றவுணர்வு அடைய வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது. இரண்டாம் திருமணத்தில் தனக்கு தொடர்ந்து குழந்தைகள் கலைந்து போவதை உடலியல் ரீதியான மாற்றமாகவோ இயல்பாகவோ எடுக்காமல் அதை மரபான சிந்தனையில் பண்டிதர்கூறிய சொற்களுடன் இணைத்துக்கொண்டு மனம் தளர்ந்து உடல் நலிகிறாள்.

மரபான சிந்தனை உடைய பண்டிதரே இவர்களை புரிந்து கொள்ளும் போது இவளால் ஏன் தான் விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்வில் மனநிறைவை காணமுடியவில்லை? தாய்மை தான் நிறைவு என்றால் ஏன் முதல் வாழ்க்கையிலையே மகன் சினீவாசனுடன் இருக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது...அல்லது 'வேண்டுமானால் குழந்தையை நீ  தாராளமாக அழைத்து செல்லலாம் என்று கூறும் பண்டிதர் வீட்டிலேயே ஏன்  குழந்தையை விட்டுவிட்டு வருகிறாள்?' 

ஆனால் எத்தனை சங்கடங்கள் வந்த போதும் ராஜாராயர் தன்னுடைய இயல்பான ஈர்ப்பால் வந்த காதலால் சங்கடங்களை மீறி சமாதான வாழ்க்கையை வாழ்கிறான். அண்ணன் மகனான ப்ருத்வியை மகனாக நினைக்கிறான். காத்தியாயினுக்கு அதே அன்பு இருந்த போதும் அதை மீறிய அலைகழிப்பு அவள் உடல்நிலையை குழைய செய்கிறது. 

தன் வம்சம் என்ற மரபான பிடிப்புள்ள சீனிவாச பண்டிதர் தன் பிறப்பு குறித்து அறியும் போது உடைகிறார். பின் மெல்ல அதற்காக தீர்வாக தான் நினைப்பவற்றை பேரன் அனுமதியுடன் நிலங்களை விவசாயிகளுக்கு கொடுத்துவிட்டு துறவிற்காக கிளம்புகிறார். கடைசியாக காத்தியாயினியிடம் விடைபெற விரும்புகிறார். அவள் மரணபடுக்கையில் இருக்கிறாள். பேரனை வரச்சொல்லி காரியங்களை ஒப்படைத்துவிட்டே காசி நோக்கி செல்கிறார்.

நம் மரபு துறவு பூணுதலை பெரும்நிலையாக கொண்டது. இல்லறத்தில் தன் கடைமைகளை முடித்தப்பின் துறவு பூணுவதை அனுமதிக்கிறது. அது பற்றற்ற நிலை என்று சொல்லப்படுகிறது. இந்த நாவலில் சீனிவாச பண்டிதர் எதையும் எதிர்பாராத அன்பையும், புரிதலையும் தன்னவர்கள் மீது கொண்டிருக்கிறார். அவர் மாசு என்று நினைப்பவற்றை மனதிலிருந்தும் உடலிலிருந்தும் விலக்குகிறார். அதை எப்படி விலக்குகிறார் என்பது முக்கியமானது?

அவரை வழிநடத்துவது தர்மசிந்தனை என்று நினைக்கிறார். ஆனால் அதை செயல்படுத்துவது அவருள் ஊறிப்பெருகும் அன்பே. வெள்ளத்தில் மகன் இறந்ததை அறிந்ததும் மயங்கிவிழும் மருமகளை மடியில் கிடத்தி அவர் சமாதனம் சொல்வது குறித்து கார்த்தியாயினி 'அவரைப் போல தைரியமான திடசித்தம் நமக்கு வராது' என்கிறாள். உண்மையில் அவர் மகனை போல மருமகளிடமும் மனைவியிடமும் லட்சுமியிடமும் அனைவரிடமும் அதே அன்புடன்தான் இருக்கிறார். லட்சுமியின் கையை பிடித்தபடி அவர் பேசும் இடத்தில் வாசகர் உணரும் தரிசனம் முக்கியமானது. 

அவர் தனது மரபார்ந்த மனதை வெட்டும் நடைமுறைகளை ஒரு சாதகனுக்கான சோதனையாகவே நினைக்கிறார். எதிர் நிற்பவர் பேச செயல்பட அனுமதிக்கும் பண்டிதர் போன்றவர்களே மாற்றத்திற்கான வாய்ப்பை தருகிறார்கள். புலனடக்கம் காக்கும் பண்டிதரே காத்தியாயினிக்கு கல்வி,திருமணத்தில் அவள் விருப்பம் என்று சொல்கிறார். இரண்டு மனைவியும் வேறு உறவுகளும் உள்ள தந்தை காத்தியாயினி என்ன சொல்கிறாள் என்று கேட்பது கூட இல்லை. மரபில் உள்ள ஆரோக்கியமான விதையின் கூறே அடுத்த வளர்ச்சிக்கு தெரிந்தோ தெரியாமலோ அடித்தளமாகிறது.

 தர்மத்தின் முனையில் தன்னை நிறுத்தி அன்பால் தன் ஆன்மாவை துலக்கிக்கொண்டே செல்லும் மனிதரை காணும் பரவசத்தை வம்சவிருட்சத்தில் நாம் உணர்கிறோம். 

அதே போல புத்தம்வீட்டில் காதலனன தங்கராஜூடன் வீட்டிலிருந்து கிளம்பி செல்ல வாய்ப்பு இருந்த போதும் லிஸி தங்கராஜிடம் கேட்கும் கேள்வி முக்கியமானது.

'அன்புக்கு துரோகம் செய்யப்பிடாது..செய்தால் பின்ன அன்பு என்னை கைவிட்டிரும் ..இல்லையா?'என்று லிஸி தங்கராஜிடம் வாயோதிக பாட்டனாராகிய கண்ணப்பச்சியையும்,அம்மையையும் விட்டுவிட முடியாது என்கிறாள்.

முன்பே கூறியது போல இரண்டு நாவல்களும் விடுதலை காலகட்டத்தை காலமாக கொண்டவை. அது மாற்றங்களின் காலகட்டம். இந்த நாவல்களில் முக்கியமாக வம்சவிருடசத்தில் மாற்றம் ஏற்படுத்தும் நிலைகுழைவை அனைவருமே உணர்கிறார்கள். தடுமாறுகிறார்கள். குறிப்பாக பெண்கள் நட்டாற்றில் விடப்பட்ட உணர்வை அடைகிறார்கள். வம்சவிருட்சத்தில் மிகுந்த அலைகழிப்பிற்கு ஆளாகும் காத்தியாயினியும், இயல்பான மாற்றத்தை ஏற்படுத்தும் புத்தம்வீட்டு லிஸியும் முக்கியமானவர்கள். இருவரின் சிக்கல்கள் வேறுவேறு என்றாலும் இரண்டும் நம் பண்பாட்டில் ஊறிய சிக்கல்கள். ஒன்று சாதி, இன்னொன்று பழமையில் ஊறிய சமூகத்தில் பிறந்து கணவனை இழந்த பெண் தன் வாழ்வில் எடுக்கும் முடிவுகள்.

சாமுண்டி மலையில் சிரமப்பட்டு ஏறி நிற்கும் காத்தியாயினியும்,புத்தம்வீட்டின் பின்புற வாசலில் காதலனிடம் உறுதியாக பேசும் லிஸியும் நவீன பெண்ணின் ஆதிரூபங்கள்.

அந்த சாமூண்டி மலையில் காத்தியாயினி அடிவாரத்தில் எரியும் சிதையில் மனதளவில் தானும் எரிந்து புதிதாக  பிறக்கிறாள். சாமுண்டி இறப்பின் தெய்வம். அங்கிருந்து மீண்டுவந்து ராஜாராயரின் காதலை முழு மனதுடன் ஏற்கிறாள். புத்தம்வீட்டு பின்வாசலில் லிஸி கைவிடாத அன்பிற்கான சிறுவிளக்காக அந்த அந்தியில் சுடர்கிறாள்.

வம்சவிருட்சாவில் சரிக்கும் மிகச்சரிக்கும் இடையில் சங்கடப்படுவது காத்தியாயினியே. பண்டிதருக்கு தன் தர்மத்தை அடிப்படையாக வைத்து முடிவெடுக்க முடிகிறது. கார்த்தியாயினி உணர்வுகளால் ஆளப்படுபவள். காலமாற்றத்து ஏற்ப இயற்கை வாடுவதும் செழிப்பதையும் போல தானும் செழிப்பது பிழையில்லை என்று நினைப்பவள்.

காலமாற்றங்கள் மனிதர்களில் நிகழும் போது அவர்கள் காலத்தின் கருவிகளாக இருந்தாலும் தனிமனித பலகீனங்களும் தடுமாற்றங்களும் நிலைகுழைவுகளும் இழப்புகளும் நடக்கவே செய்கின்றன. 

 இந்த நாவல்கள் அந்த காலகட்டததிற்குறியவை மட்டுமல்ல. சீனிவாச பண்டிதரின் முழுவாழ்வில் அவர் அடையும் காம குரோத மோகங்களும், அதை அவர் கடக்கும் விதமும் என்றுமுள்ள சிக்கல்கள். மனிதரின் அடிப்படை இயல்பான காம குரோத மோகங்கள் மீது மனிதர்கள் நடத்தும் யுத்தமும் , அனாயசமாக கடந்து செல்லும் மனித இயல்பும் வம்சவிருட்சத்தில் உள்ளது.

புத்தம்வீட்டில் மாற்றத்தின் குறியீடாக நிற்கும் லிஸி கையிலிருப்பது அன்பின் தீபம். தன்னை கேடுகெட்ட வார்த்தைகளில் பெற்றவர்கள் ஏசும் போதும் ,அவள் தேவதை போலவே பொறுமை காக்கிறாள்.

சீனிவாசபண்டிதரின் குலதெய்வம் நஞ்சுண்டேஸ்வரர். ஊர் நஞ்சனக்கூடு. வாசிக்கும் போது இது ஒரு குறீயீடாகிறது. கண்டத்தில் நஞ்சுடன் நிற்பவர்களா நாமெல்லாம்? என்று இந்த நாவல்களை வாசித்தப்பின் தோன்றியது. நஞ்சை, கசப்பை கண்டத்தில் நிறுத்தி வைக்க அம்மையின் காரம் போல அன்பு நம் வாழ்வில் செயல்படுகிறதா? தர்மம் கடமை அறம் அனைத்தும் நடுநிலை தவறாமல் நிற்கும் அச்சு என்பது அன்பா? என்ற கேள்வி எழுகிறது. லிஸியும் சீனிவாசபண்டிதரும் நிற்பது அதில் தான்.

மழை பெய்து கொண்டிருக்கிறது...

சில சமயம் மெதுவான தூரலாக

சில சமயம் சாரல் மட்டுமாக

சில சமயம் பெருமழையாக.

அந்த பெருவிருட்சம்...

சிலசமயம்

சலசலக்கிறது,

சிலசமயம்

உழைகிறது,

சிலசமயம்

நனைகிறது,

சிலசமயம்

கிளை உடைகிறது,

சிலசமயம்

வேருடன் சாய்கிறது..

எப்போதும் பழைய விதைகள் எஞ்சுகின்றன

புதுதளிருக்கான உத்திரவாத்துடன்..





 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2025 23:59
No comments have been added yet.


கமலதேவி's Blog

கமலதேவி
கமலதேவி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow கமலதேவி's blog with rss.