இலக்கிய ஃபேக் ஐடிகளின் உளவியல்!?

சண்முக. விமல் குமார் / றாம் சந்தோஷ் வடார்க்காடு – கவிஞர், ஆய்வாளர்

C: Meta

ஃபேக் ஐடிகள் எனப்படும் போலி சமூக வலைதளக் கணக்குகளானவை உலகமெங்கும் பல மில்லியன் கணக்கில் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுவாக இவை, அடையாளத்தை மறைத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் இருப்பவற்றை மேம்போக்காகப் பார்வை இடுதல், மற்றும் தம்மை பிறிதொருவர் அடையாளம் கண்டு கொள்ளாத வகையில் ஒளிந்துகொண்டு அத்தளங்களில் தீவிரமாகச் செயல்படுதல் ஆகிய இரண்டு நிலைகளில் செயல்பட்டு வருகின்றன.

மேலும், அடையாளத்தை மறைத்துக் கொண்டு தங்களை வெளிப்படுத்திக் கொள்ளுதல் என்பதன் வழி, தன்னுடைய உண்மையான அடையாளத்தின் நற்பெயரைப் பாதுகாத்துக் கொள்ளுதல், அல்லது தனக்குக் கெட்டப் பெயர் வராமல் பாதுகாத்துக் கொள்ளுதல், அன்றி, தான் தாக்கப்படுவதிலிருந்துத் தன்னைத் தற்காத்துக் கொள்ளுதல் போன்றவையே இவற்றின் முதன்மை நோக்கங்களாக வெளிப்படுகின்றன.

இவற்றுள் முன்னதிற்கு உதாரணமாக, உலக அளவில் பாலியல் சார்ந்த இணைய வழி செயல்பாடுகளுக்காகவே உருவாக்கப்பட்டு அதிக அளவில் பயன்படுத்தப்படும் டேட்டிங் சார்ந்த செயலிகள், மற்றும் பார்ன் துணுக்குகள் மற்றும் அப்படங்களைப் பார்க்க உருவாக்கப்படும் கணக்குகள் ஆகியவற்றைச் சுட்ட முடியும்.

அடுத்த நிலையில் அரசியல் தாக்குதல்களைத் தொடுக்கவும், அதன் வழிப் பெறப்படும் கேளிக்கை உணர்விற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. (தங்களுடைய அரசியல் ஈடுபாட்டை எந்தப் பிரச்சனையுமின்றி எதிர்கொள்ள இவை பயன்படுவதாக நம்பப்படுகின்றன.)

இந்த இரண்டு வகையான போலிக் கணக்குகளுக்குமே எக்ஸ் (டிவிட்டர்) தளத்தில் உதாரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

இவற்றோடு ஒப்புநோக்கும் போது இவை அல்லாத பிற போலிக் கணக்குகள் – உதாரணமாக, ஒருவரின் கணக்கினைப் போன்று பிரதி எடுத்து பணம் வசூல் செய்ய முயற்சிப்பது போன்றவை – தனி நபர் உளவியல் செயல்பாடுகளோடு தொடர்புடையவை அன்று. மேலும், ஏனைய பிற வகையிலான போலிக் கணக்குகளும் முந்தைய இரு வகைகளுடன் ஒப்புநோக்க எண்ணிக்கையில் புறந்தள்ள வேண்டியவையே.

இவற்றுள், தமிழ்ச் சூழலில், அவ்வப்போது தலைகாட்டும் ‘இலக்கிய போலிக் கணக்குகள்’ குறித்து என்றால், அவை வெறும் இரண்டு இலக்கத்தோடு எஞ்சிவிடுபவையே ஆகும். ஆனால், இவற்றின் நோக்கம்? செயல்பாடுகள்? பயன்தான் என்ன?? 

இலக்கியப் போலிக் கணக்குகள் :

இலக்கியப் போலிக் கணக்குள் என்பவை கலை, இலக்கிய – முக்கியமாய் இலக்கியவாதிகளையும், இலக்கியத்தனங்களையும் தாக்குவதையும், கேலி செய்வதையும் தமது பிரதான செயல்பாடுகளாகக் கொண்டிருப்பவை. இவற்றிலும், நிரந்தரமான இலக்கிய போலிக் கணக்குகள், திடீர் இலக்கியப் போலிக் கணக்குகள் என்ற இரண்டு வகைப் போலிக் கணக்குகள் உள்ளன. இவற்றின் செயல்பாடுகளை அவதானித்த போது பின் வரும் முடிவுகளைப்  பெற முடிந்தது.

அவையாவன :

சொந்த அடையாளங்களை மறைத்துக்கொண்டு கணக்கினை உருவாக்குதல்.பிரபலமான அல்லது தனக்கு ஒவ்வாத இலக்கியவாதிகளைக் கடுமையாகத் தாக்குதல், கேலி செய்தல்.[அதன் வழி அல்லது அக்கணக்கின் வழி] தன்னை / தங்களை அல்லது தனக்கு விருப்பமான இலக்கியவாதிகளைப் பாராட்டுதல்.தன்னை அடையாளம் கண்டுகொள்ளாத வண்ணம் தனது ஆதரவு, வெறுப்பு நிலைப்பாடுகளைக் குழப்புதல்.தனது செயல்பாடுகள் வழி தனக்கேற்பட்டுள்ள வெறுப்போடு ஒத்த எண்ணமுள்ள இலக்கியவாதிகள் / வாசகர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் அவர்களை மகிழ்வித்தல்.கணக்குப் பிடிபடும்போது அதை முடக்கிவிட்டு, பிறிதொரு கணக்கினைத் தொடங்குதல்.

தமிழ் இலக்கியப் போலிக் கணக்குகள் :  

அடையாளத்தினை மறைத்தலே போலிக் கணக்குகளின் பிரதானமான நோக்கம் என்பதால், இக்கணக்குகள் பொதுவாக பெண்களில் பெயர்களிலேயே ஆரம்பிக்கப்படுகின்றன; எனவே, நிச்சயம் இவற்றைத் தொடங்கியவர்கள் ஆண்களாகவே இருக்க வாய்ப்புண்டு. வசிப்பிடம், பிறந்ததேதி, படிப்பு உள்ளிட்ட விவரங்கள் போலியாகத் தரப்படுவதோடு, சில சமயம் சுவாரசியமானதாகவும் இவற்றைத் தருகின்றன. நான் கண்ட ஒரு ஃபேக் ஐடி தன்னை ’இன்டலக்சுவல்’ என்று குறிப்பிட்டிருந்தது; ’அறிவுஜீவி என்றாலே போலிதான்’ என்பது அது உணர்த்த வந்த தத்துவமாக இருக்கலாம்.

பலரும் தொடர்வது ஏன் ??

ஆனால், இந்த வகைக் கணக்குகளின் நோக்கங்கள் முன்னர் சொன்னதைப் போல ஒன்றை முன்னிறுத்துவதாகவும் மற்றொன்றைத் தயவின்றித் தூற்றுவதாகவும் உள்ளன. வாஸ்தவத்தில் முன்னிறுத்துவதைவிடவும் தயவின்றித் தூற்றுவதே இவற்றின் பிரதான தொழிலாகையால், நேரடியாகவோ, ரகசியமாகவோ இத்தகைய கணக்குகளைத் தொடர்பவர்களாகப் பல இலக்கியவாதிகள், வாசகர்கள் உள்ளனர்.

பெறுவது என்ன ??

யதார்த்தத்தில் செய்ய முடியாத ஒன்றை நாம் திரையில் காணும் போது நம்மை நாம் அதில் அடையாளம் கண்டு மகிழ்வும் நிறைவும் அடைவதைப் போலவே, இந்த வகைப் போலிக் கணக்குகளுக்கு நமது இலக்கியவாதிகள் பலியாகின்றனர்.

உண்மையில், இத்தகைய கணக்குகளைத் தொடங்குபவர்களின் நோக்கமும் அதுவே ஆகும்; அதாவது, யதார்த்தத்தில் தன்னால் செய்ய முடியாத தூற்றுதலை இணையத்தில் மறைந்து செய்தல் என்பது அது. இவற்றின் வழி தங்களுடையக் காழ்புணர்வினை இவை தீர்த்துக் கொள்கின்றன.

உளவியல் நிலை :

அன்றி, இவை தங்களை வெளிப்படுத்திக் கொள்ள இயலாத, ஆதரவற்றத் தன்மையை, தன்னால் விமரிசிக்க / தூற்றப்படுபவரின் தயவு யதார்த்தத்தில் தனக்குத் தேவையாக இருக்கும் பட்சத்தில் அல்லது அவ்வாறு தயவு வேண்டியவர்களுக்குப் பதிலி மனோ நிலையைத் தர இவை வெளிப்படுகின்றன. அதாவது, ஒருவகையில் இவற்றிடம் வெளிப்படுவது தாழ்வு மனப்பான்மையே அன்றி வேறில்லை.  

இத்தகைய ஃபேக் ஐடிகளின் உளவியல் பற்றி [ய பொதுக்கூற்றாக], டாக்டர் நான்சி ஆன் சீவர் என்பவர் கூறும்போது, “பெரும்பாலான வலைதளத் போலியர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் ஏதோ குறை இருப்பதால் இப்படியான அசட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களுள் சிலர் கடுமையான தாழ்வு மனப்பான்மை கொண்டிருக்கும் நிலையில், தாங்களே மற்றொரு நபராக இணையத்தில் வாழ்கிறார்கள்” என்கிறார்.

இலக்கியவாதிகளைப் பொறுத்தமட்டில் இந்தக் குறையானது இலக்கியப் பிரபலம், விமரிசனத்தைத் துணிச்சலுடன் முன் வைக்க முடியாதச் சூழல் போன்றவையாக உள்ளன. இவையே அவர்களைத் தாழ்வு மனப்பான்மைக் கொண்டவர்களாகவும், இது போன்ற இலக்கியப் போலிக் கணக்குகள் வழி தைரிய வாழ்க்கையை வாழ்பவர்களாகவும், அவர்களைப் பின் தொடர்பவர்களின் உளவியல் தாழ்மைக்குத் தீணி போடுபவர்களாகவும் தொடர்ச் செய்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 18, 2025 02:03
No comments have been added yet.