குற்றமுகங்கள் 20 ஜுகூர்
1893ல் வட இந்திய கிராமங்களில் மணப்பெண் கடத்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமண வீட்டிற்குள் புகுந்து மணப்பெண்ணை யாரோ கடத்திப் போய்விடுகிறார்கள். யார் அவன் என்றோ, பெண்ணை எப்படிக் கடத்திக் கொண்டு போகிறான் என்றே கண்டறிய முடியவில்லை.

இந்தக் கடத்தலுக்குப் பயந்து மணப்பெண் யார், எங்கே திருமணம் நடக்கிறது என்ற தகவல்களை ரகசியமாக வைத்துக் கொண்டார்கள். மணப்பெண்ணை ஊர்வலமாக அழைத்து வருவதை நிறுத்திக் கொண்டார்கள். குடும்பத்தினர் தவிர வேறு எவரும் திருமணத்திற்கு அழைக்கபடவுமில்லை. இவ்வளவு எச்சரிக்கையாக நடந்தாலும் மணப்பெண் கடத்தல் தொடரவே செய்தது.
ரூபியா கௌர் என்ற பெண் தான் முதலில் கடத்தப்பட்டவள். அவளது திருமணம் சிக்ரா என்ற கிராமத்தில் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக முந்திய நாள் மாலையே மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார்கள்.
பின்னிரவில் வீட்டிற்குள் மாறுவேஷத்தில் வந்த ஒருவன் ரூபியாவைக் கடத்திக் கொண்டு போய்விட்டிருந்தான். மணமகள் காணாமல் போன விஷயம் காலையில் தெரிய வந்து கிராமமே அவளைத் தேடினார்கள். கண்டுபிடிக்க முடியவேயில்லை.
இதன் தொடர்ச்சியாகச் சில மாதங்களில் சிக்ராவை ஒட்டியே பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் திருமணத்திற்கு முன்பாகக் கடத்தப்பட்டார்கள். யார் இவர்களைக் கடத்திக் கொண்டு போவது. அந்தப் பெண்கள் என்ன ஆனார்கள் என்பதைக் கண்டறிவதற்காகக் காவல்அதிகாரி வில்லியம் டேவி தலைமையில் காவல்படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். அவர்கள் கண்டறிந்த தகவல்கள் வியப்பூட்டுவதாக இருந்தன
கன்னோஜ் பகுதியில் சொர்க்கத் திருமணம் என்றொரு சடங்கு நடைபெறுகிறது. மரணத்தருவாயில் இருக்கும் கிழவர்கள் இறந்தபின்பு சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்பதற்காக மணமேடையிலிருந்து ஒரு பெண்ணைக் கடத்தி வந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதற்காக வசதியான கிழவர்கள் பணம் கொடுத்துப் பெண்ணைக் கடத்தி வரச் செய்கிறார்கள்
இந்தக் கடத்தலில் ஈடுபடுகிறவன் பெயர் ஜுகூர். அது அவனது உண்மையான பெயரில்லை. அவன் தெற்கிலிருந்து வந்தவன். காதில் பெண்கள் அணிவது போலக் கம்மல் அணிந்திருப்பான். அவன் ஒரு கூட்டத்தை வைத்திருந்தான். அவர்கள் மாறுவேஷத்தில் கிராமங்களில் சுற்றியலைந்து எங்கே திருமணம் நடைபெற இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பார்கள்.

பின்பு மணமகன் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றோ, மேளம் வாசிப்பவர்களில் ஒருவரைப் போலவே மாறுவேஷம் புனைவார்கள். மணப்பெண் தங்கியுள்ள வீட்டில் தக்னம் என்றொரு வாசனைப்பொடியை காற்றில் தூவிவிடுவார்கள். அந்த வாசனையை நுகர்ந்தவுடன் எவராலும் விழிப்பு கொள்ளவே முடியாது. அப்படித்தான் மணப்பெண்ணைக் கடத்துகிறார்கள்.
கடத்தப்பட்ட பெண்ணை எப்படி எங்கே கொண்டு போகிறார்கள். இந்த விற்பனை யார் மூலமாக நடைபெறுகிறது என டேவியால் கண்டறிய முடியவில்லை. ஆகவே அவரே ஒரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்து மணப்பெண்ணைக் கடத்தவரும் ஜுகூரை பிடிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தார். அந்தத் திருமணத்தில் மணப்பெண் கடத்தப்படவில்லை.
கிராமம் தோறும் ஜுகூருக்கு தகவல் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள், அவர்களை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். சந்தேகத்தின் பெயரில் பலரையும் விசாரித்தார்கள். அவரால் ஜுகூரை கண்டறிய முடியவில்லை. பல்வேறு குற்ற கும்பல்களை விசாரித்த போது ஜுகூரை பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.
இதே நேரம் பிஜ்னோர் மாவட்டத்தில் மணப்பெண் கடத்தல் பரவியது. ஜுகூரைத் தேடி அங்கேயும் டேவி சுற்றியலைந்தார்.
சொர்க்கத் திருமணம் தடைசெய்யப்படுவதாகவும் அதில் ஈடுபட நினைப்பவர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்கபடும் எனக் காவல்துறை அறிவித்தது. கங்கை கரையோர கிராமங்கள் யாவும் கண்காணிக்கப்பட்டன. எங்கும் ஒரு சொர்க்கத் திருமணமும் நடைபெறவில்லை. மணப்பெண் கடத்தல் மெல்ல குறைந்து போனது. ஜுகூரை கைது செய்ய அவரால் முடியவில்லை.
தனது பணி ஒய்வுக்கு முன்பாக வில்லியம் டேவி ஒருமுறை சிக்ரா கிராமத்திற்கு வருகை தந்தார். அப்போது புனுகு விற்கும் ஒருவனிடமிருந்து தகவல் ஒன்றை கேள்விபட்டார். அதை அவரால் நம்ப முடியவில்லை.
மணமகள் கடத்தல் என்பதே பொய். அது ஒரு நாடகம். தான் காதலித்தவனுடன் ஒரு பெண் ஒடிப்போவதற்காக நடத்தப்பட்ட நாடகமது. இதை முதலில் வெற்றிகரமாகச் செய்தவள் ரூபியா. அவள் தனது காதலன் பாகலுடன் ஒடிப்போவதற்காக ஜுகூரை உருவாக்கினாள்.
இது போலக் காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போகும் பெண்கள் அந்தக் கதையை வளர்த்தெடுத்தார்கள். ஊரை நம்ப வைத்தார்கள். அதில் பிறந்தது தான் சொர்க்கத் திருமணம்.
இதைக் கேட்டு டேவி அதிர்ச்சி அடைந்தார். அவன் சொல்வதை எப்படி நம்புவது எனக் கேட்டார். ரூபியா இப்போது லதியா என்ற கிராமத்தில் வசிப்பதாகச் சொன்னான். டேவி அவளைத் தேடிச் சென்றார்.
ரூபியா உண்மையை ஒத்துக் கொண்டாள். அவளும் காதலனும் இணைந்து உருவாக்கிய நாடகமது என்பதை விளக்கினாள். இந்தக் கதையைப் பரவலாக்கியது கங்கை நதிப் படகோட்டிகள். அவர்களுக்கு விசித்திரமான கதைகளைச் சொல்வது பிடிக்கும். ஆகவே அக்கதை வட இந்தியா முழுவதும் பரவியது.
ஜுகூர் என்று ஒருவன் நிஜமாகயில்லை. அவனைப் பிடிப்பதற்காக இரண்டு ஆண்டுகள் பகலிரவாகத் தான் சுற்றியலைந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என டேவிக்குப் புரிந்தது.
ரூபியாவிடமிருந்து விடைபெறும் போது அவளது நான்கு வயது பையனைக் கண்டார். அவனுக்கு ஜுகூர் என ரூபியா பெயர் வைத்திருந்தாள்
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 675 followers

