Tharana- 18 Miles

படகொன்று அலைகளினூடே செல்லும் போது
நாளங்களை அடைத்து மூச்சு நடுங்குகின்றது.
பெருங்கடலின் பேரிரைச்சலில்
கண்கள் வெறிச்சோடி அச்சத்தில் அமிழ்கின்றன

மேலும் மேலும்

பிரபஞ்ச வெளியெங்கும்
புதைத்துக் கொள்ள போதுமானவரை
அவர்களிடம் சவங்கள்,
ஏனெனில்
அவர்களுக்கான நாடு அவர்களிடமில்லை.

எழுந்து ஆர்ப்பரிக்கும் அலைகளிடம்
கண்ணீர் விசும்பிக் கேட்கிறது
குழந்தை
இந்தக் கொடிய பயணம்
எப்போது முடியுமென?

தன்னை இரக்கப்பட இங்கு யாருமில்லையென

ஏதுமறியா இக்குழந்தை எப்படியறியும்?

முன்னர் படகொன்றில் புகலிடம் தேடி
காணாமல்போனவர்களின் குருதிகள் அலை அலையாய் எழுகின்றன.

மரண அறிவுப்புக்கள் படகுகளில் தொங்கும்
கடல்வெளியில் சவக்குழி மணம் நீந்த
அவலப் பாடலை தேம்பி தேம்பி பாடுகிறார்கள்
ஆதி மொழியில்.

 

சில தினங்களுக்கு முன்னர் வெளியான Tharana- 18 Miles என்ற பாடலை நீங்கள் கேட்டிருக்கவும் பார்த்திருக்கவும் வாய்ப்பு உண்டு. “பேச்சுலர் ” திரைப்படத்தின் இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இந்தப் பாடலை இயக்கியிருந்தார். Think music india நிறுவனம் இதனைத் தயாரித்து இருந்தது. இந்தப் பாடலோடு எனக்கு ஈடுபாடு தோன்றியதற்கான காரணங்கள் பலவுள்ளன. சப்த கலவைகள் எதுவும் செய்யப்படாதவொரு கட்டத்தில், தயாரிப்பு பணிகளில் இருக்கும் போதுதான் இந்தப் பாடலை இயக்குனர் காண்பித்தார். ஒரு முன்னோட்டத் திரையிடலை ஒருங்கிணைப்பு செய்யும் நிமித்தமாக அதனைப் பார்க்க நேர்ந்தது. தூரத்தே கேட்கும் இரைச்சலோடு திரை தோன்ற கொந்தளிக்கும் கடலில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். பொங்கிப் புரளும் அலைகளுக்கு குறுக்காக வெறித்தபடி நிற்கிற அந்தப் பெண் இந்தக் கடலிடம் வேண்டுவது என்ன? பிரார்த்திப்பது எதனை? என்ற யோசனைகள் ஓடத்தொடங்கின. அவளைக் கண்ட ஒரு இளைஞன் அலைகளை மிஞ்சி நெருங்குகிறான். கடலின் எல்லைகள் பெயரிடப்படுகின்றன. தனுஷ்கோடிக்கும் ஈழத்திற்கும் இடையில் 18 மைல்கள் என்ற தூர அளவுகள் திரையில் உணர்த்தப்படுகிறது. அந்தப் பெண்ணை நெருங்கியவன் “இவ்வளவு ஆழத்தில என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்பதில் இருந்து பாடலின் உரையாடல் தொடங்குகிறது.

இந்தப் பாடலின்  மிகப்பெரும் உன்னத தருணங்களாக அமைந்தவை எல்லாமும் உரையாடல்களே – ஒரு திரைப்படத்தின் மிகச் சுருக்கமான ஆதாரத்தன்மையை வெளிப்படுத்தும் பண்போடு எழுதப்பட்டிருக்கிறது. “உங்களுக்கு என்ன சத்தம் கேக்குது?” என்று அந்தப்பெண் கடலின் அலைகளில் உலாஞ்சியபடி கேட்கும் இடத்தில் கதை தீவிரம் கொள்ளுகிறது. அதற்கு இளைஞன் கூறும் சூழல் வர்ணனைகள் அந்தப் பெண்ணின் அடுத்த வசனத்தால் அடித்து சுக்குநூறாக்கப்படும் இடம் ஒரு மாபெரும் இனப்படுகொலையை நினைவுகூர வைக்கிறது. எறிகணைகளும், கொத்துக்குண்டுகளும், போர்விமானங்களும், பாலச்சந்திரன்களும், இசைப்பிரியாக்களும், வெள்ளைக்கொடிகளும் முள்ளிவாய்க்காலும் சடுதியாய் சீற்றம் கொண்டதொரு அலைமடிப்பை விடவும் அதிவிரைவாய் நினைவுக்குள் புரள்கிறது.

“பேச்சுலர்” திரைப்படம் இன்றைய தலைமுறையின் உறவுமுறைகளில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வையும் உணர்த்திய வகையில் சமகாலத்தன்மையை முன் நிறுத்திய படமெனக் கொள்ளலாம். அந்தப் படம் இன்னுமே வெற்றியை சென்று அடைந்திருக்க வேண்டியது. கலைத்தன்மை பிசகாத சிறந்த உருவாக்கமது. Tharana- 18 Miles பாடலைப் பார்ப்பதற்காக சதீஷ் என்னை அழைத்து விஷயத்தைச் சொன்னதும்  “நீங்கள் ஒரு சிறந்த படத்தை இயக்கியவர், ஏன் சுயதீனமான பாடலை உருவாக்கி நேரத்தை வீணாக்குகிறீர்கள்” என்று கேட்டேன். பதிலுக்கு “இல்லை முதல்வன் ஒன்று பண்ணியிருக்கிறேன். நீங்கள் வந்து பாருங்கள். உங்களுக்குப் பிடிக்குமென எண்ணுகிறேன்” என்றார்.

நான் அந்தப் பாடலை பார்த்து முடித்ததும் சதீஷிடம் சொன்ன வரிகள் இவை. “நீங்கள் செய்திருப்பது பெரிய காரியம். என்னளவில் இந்த பதினாறு நிமிடங்கள் ஓடும் பாடலில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் இதற்கு முன்பாக, இவ்வளவு நேரடித்தன்மையோடும் அழகியல் உணர்ச்சியோடும் முழு நேர்மையாக முன்வைக்கப்படவில்லை. இந்தப் பாடல் ஒரு முன்னுதாரணமற்ற கலைப்படைப்பு. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் கபிலன். நான் தாரணா என்றேன். உணர்ச்சி மேலிட என் கரங்களைப்பற்றி அணைத்துக் கொண்ட சதீஷ்க்கும் எனக்கும் இடையில் இருக்கும் தூரம் அதே கடல்தான்.”

இந்தியச் சூழலில் ஈழத்தமிழர் விவகாரம் முன்னெப்போதையும் விட இன்று கலைப்படைப்புக்களாக ஆகின்றன. கண்மூடித்தனமான வெறுப்புக்களையும், அவதூறுகளையும் முன்வைத்து திரைப்படங்கள் – வெப் – தொடர்கள் உருவாகின்றன. ஈழத்தமிழர்களின் நியாயமான  வாழும் உரிமைக்கான போராட்டத்தின் அடிப்படையை அறியாத – அறிய  விரும்பாத அறிவுஜீவிகளைப் போல, அரசியலாளர்களைப் போல படைப்பாளிகளும் உள்ளனர். இன்னொரு புறம் இன்றைக்கு உலகளாவிய சந்தை மதிப்புக் கொண்ட கதைகள் – ஈழத்திலிருந்து எழுதப்படுகின்றன. என்னுடைய கதைகளை திரைப்படங்களாகவும், வெப் தொடர்களாகவும் உருவாக்க பல முன்னணி இயக்குனர்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அவற்றுக்கு இங்கே தளங்களும், தயாரிப்பாளர்களும் முன் வருவதில் சுணக்கம் உண்டு.

இந்தச் சூழலில் Tharana- 18 Miles ஐ – சாத்தியமாக்குவது எவ்வளவு பெரிய வலிமையான விருப்பமும் ஈடுபாடுமென எனக்குத் தெரியும். இது என்னுடைய பின் சந்ததிக்காக சொல்லப்படும் கதை. புகையைப் போல் ஒழிந்த எங்கள் வாழ்வையும், நடுக்கடலில் மீன்களின் இரையாய் மிதந்த எங்களின் குழந்தைகளையும், ஒரு கொள்ளியைப் போல எரியுண்ட எங்களின் வாழும் ஆசைகளையும் தூக்கிச் சுமந்து வந்து நின்ற இயக்குனர் சதீஷ்க்கு அப்போது எனது முகம். அதன் நிமித்தம் நான் மகிழ்ந்தேன்.

இந்தப் பாடலை காதல் பாடலாக பொருள் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அடிப்படையில் இந்தப் பாடலில் உள்ளது அதுதான். ஆனால் அதனுடைய நிறைவு எல்லை அதுமட்டுமல்ல. “கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். ஆண்டவரே என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக” என்ற வேதாகமத்தின் வரிகளை நினைத்துக் கொள்கிறேன். அகதிகளாக கடலில் பயணிக்கும் ஒவ்வொருவரின் விண்ணப்பங்களையும் தொகுத்துக்கொண்டால் இந்த நூற்றாண்டின் குரூரம் தெரிந்துவிடும்.

எல்லா உயிர்களையும் காப்பாற்ற பாற்கடலில் கலந்த விஷத்தை உண்ட எம்பெருமான் சிரியச் சிறுவன் அயலான் குர்தியை பிணமாக கரை ஒதுக்கியதை மறக்க இயலுமோ உலகத்தீரே! – இந்த நூற்றாண்டை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கும் இரண்டு சிறுவர்களை எனக்குத் தெரியும். ஒருவர் அயலான் குர்தி, இன்னொன்று பாலச்சந்திரன். இருவரையும் கொன்றது அறமற்ற போரும் அதை வேடிக்கை பார்த்த இந்தக் காலமும்தான். இந்தப் பாடலில் கடலில் மூழ்கும் ஈழத்தமிழ் அகதியான தாரணாவை காப்பாற்றும் கபிலன் கடற்படை அதிகாரியாக இருக்கிறான். அலைகளில் தவிக்கும் ஒரு உயிர் காணும் வெளிமுழுதும் கொடிய தரிசனம். அந்தக் கணத்தில் கபிலன் தாரணாவை காண்கிறான். எப்புறமும் கடல் மோதும் ஒரு கணத்தில் நிலமற்ற ஒருத்தியை சுமந்து நிற்கும் கபிலன் தாரணாவுக்கு ஆலகாலம் அருந்திய சிவனை நினைவுக்கு கொண்டு வந்திருக்குமல்லவா! – ஒரு பெருமுரண் வழியாக உருவாகிறது தாரணாவுக்கும் – கபிலனுக்குமான சந்திப்பும் – நிகழ்தலும் – வழியனுப்புதலும் – உரையாடலும் – காதலுமென சமுத்திரம் சிறிதெனக் கொள்ளும் தருணங்கள் நிறையவே உள்ளன.

இந்தப் பாடல் பெரியளவில் சென்று சேர வேண்டுமென எண்ணியதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். அது கடலில் தத்தளிக்கும் அகதிகளை மட்டுமல்ல, தரையில் அகப்பட்டு பத்துக்கு பத்து கூடாரங்களில் காலங்காலமாய் அவஸ்தைப்படும் துன்பகரமான ஒரு வரலாற்றுச் சாட்சியையும் முன்வைத்திருக்கிறது. என்னளவில் கலைக்கு தேவையானது சத்தம் மட்டுமல்ல. ஆழமும். இந்தப் பாடலில் இடையிடையே வருகிற கபிலன் – தாரணா உரையாடல் மகத்துவமானவை. யாருக்கும் சொந்தமில்லாத பூமியின் கடலில் – நிலம் ஆக்கிரமிக்கப்பட்டவர்களை அலை விழுங்கும் கதையை சொன்னதுதான் Tharana- 18 Miles பாடலின் முதன்மை வெற்றி. அதனைக் கடந்து அந்தப் பாடல் இந்த உலகத்திற்கு சொல்ல விரும்பும் இன்னொரு கதையும் இருக்கிறது. விரைவில் திரைப்படமாக அதனைக் காண்பீர்கள்!

இயக்குனர் சதீஷ் செல்வகுமார் அவர்களுக்கும் அவரது குழுவிற்கும் என்னுடைய பாராட்டுக்களும் வணக்கமும். இதனை தயாரித்த Think music indiaவுக்கும் நன்றி. இந்த வாய்ப்பை எனக்களித்த டோரா திரைப்படத்தின் இயக்குனர் தாஸ் அவர்களுக்கும் நன்றி.

The post Tharana- 18 Miles first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2025 10:41
No comments have been added yet.


அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.