வாசலைவிட்டு அகன்றுசென்ற யானை : ரமேஷ் பிரேதனுக்கு அஞ்சலி


1995ஆம் ஆண்டில் புதுச்சேரியில்நடைபெற்ற ஓர் இலக்கியக்கூட்டத்துக்குச் சென்றிருந்தபோது, கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தவளாகத்தில் ஒருவர் மேசையின் மீது புத்தகங்களையும் பத்திரிகைகளையும் அடுக்கிவைத்து விற்பனைசெய்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். வழக்கத்தில் இல்லாத ஒரு வடிவத்தில் ஒரு புத்தக அடுக்குஅங்கு இருந்தது. அதன் தோற்றத்தாலேயே ஈர்க்கப்பட்டு நான் அந்தப் புத்தகத்தை வாங்கினேன்.அதன் பெயர் ’புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும்’ பிரேமும் ரமேஷும் சேர்ந்துஎழுதிய புத்தகம். அந்தப் பெயர் அப்படித்தான் எனக்கு முதன்முதலாக அறிமுகமானது.




பெங்களூருக்குத் திரும்பிய ஒருசிலநாட்களிலேயே அப்புத்தகத்தைப் படித்துமுடித்தேன். அங்கொரு பாதியும் இங்கொரு பாதியுமாகபல துண்டுகளாக இறைந்துகிடக்கும் பொம்மைத்துணுக்குகளை கொண்டுகூட்டுப் பொருள்கோள் முறையில்இணைத்துப் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக அதன் கதையமைப்பு இருந்தது. தொடக்கத்தில் படிக்கும்போதுஒன்றோடு ஒன்று தொடர்பற்றதுபோல தோற்றம் தந்து, இறுதியில் அனைத்தும் இணைந்து ஏதோ ஒருவகையில்பொருள் தருவதுபோன்ற கட்டமைப்பில் எழுதப்பட்ட கதை. வாசிப்பவனை ஒரு விளையாட்டுத்துணையெனமாற்றி தம்முடன் இணைத்துக்கொள்ளும் வகைமையில் பொருந்துவதுபோன்ற அமைப்பில் இருந்தது.சற்றே மேடுபள்ளங்கள் நிறைந்த மண்ணைப்போல அதன் கதையமைப்பு காணப்பட்டாலும் படிப்பதற்குஈர்ப்பு மிக்கதாக அமைந்திருந்த அதன் மொழி அந்தப் படைப்புக்கு வலிமையூட்டுவதாக இருந்தது.அந்தப் பெயர் அன்றே மனத்தில் பதிந்தது.

அதைத் தொடர்ந்து சிற்றிதழ்களில்அப்பெயர்கள் மீண்டும் மீண்டும் இடம் பெற்றன. கவிதைகளும் சிறுகதைகளும் தொடர்ந்து வெளிவந்தன.அமீபா,  கிரணம் என்னும் சிற்றிதழில் அவர்கள்எழுதிய நீள்கவிதைகள் வெளிவந்தன. உதகையில் ஜெயமோகனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ஒருகவிதைமுகாமில் அவர்களைச் சந்தித்து உரையாடினேன். அதைத் தொடர்ந்து குற்றாலத்தில் நிகழ்ந்தபதிவுகள் கவிதைப்பட்டறையிலும் அவர்களைச் சந்திக்க முடிந்தது.

வெவ்வேறு இதழ்களில் அவர்கள் எழுதியசிறுகதைகள் ’முன்பு ஒரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன’ என்னும் தலைப்பில்புத்தகமாக வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றது. பரதேசி என்னும் தொகுதி நாட்டார் கதைகளின்அமைப்பில் வாசிப்பதற்கு சுவையான கதைகளைக் கொண்ட தொகுதியாகும். கி.ரா. ஆசிரியராக இருந்தகதைசொல்லி இதழ் அவர்களுடைய படைப்புகளுக்கு நல்லதொரு மேடையாக சிறிது காலம் இருந்தது.

தொடக்கத்தில் இணைந்து எழுதிய இருவரும்இரண்டாயிரத்துக்குப் பிறகான காலகட்டத்தில் ஏதோ ஒரு சமயத்திலிருந்து தனித்தனியாக எழுதத்தொடங்கினர். ரமேஷ் பிரேதன் என்னும் பெயரில் ரமேஷ் எழுதிய படைப்புகள் வெளிவந்தன. பொந்திஷேரி,அருகன்மேடு இரு நாவல்களும் அவருடைய பெயர் சொல்லும் படைப்புகள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கடுமையானபக்கவாதத்தின் விளைவாக அவர் படுத்த படுக்கையானார். சீரான மருத்துவத்துக்குப் பிறகுமெல்ல மெல்ல அவர் மீண்டு வந்தார். அதற்குப் பின்பு எழுதும் ஆவல் மட்டுமே அவரை இயக்கியசக்தியாக இருந்தது என்றே சொல்லவேண்டும்.  

ஒரு நேர்காணலில் அவர் தன்னைப்பற்றிஅவரே சொல்லிக்கொண்ட ஒரு வரி உண்டு. காட்டைப் பிரிந்துவந்து வாசலில் நிற்கும் யானை என்பதுதான்அவ்வரி. அதை அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். நீண்ட கால நோயின் விளைவாக27.09.2025 அன்று அவர் இயற்கையெய்தினார். இப்போது அவர் இல்லை. அவரைப்பற்றி நினைக்கும்போதுஎதிர்பாராத விதமாக நினைவுக்கு வரும் இவ்வரி ஒரு கணம் திகைக்கவைக்கிறது. அந்த யானை இப்போதுவாசலிலும் இல்லை. வெறுமை சூழ்ந்த வாசல் அவருடைய இருப்பை இன்னும் அதிகமாக உணர்த்துவதுபோலஉள்ளது. ரமேஷ் பிரேதனுக்கு அஞ்சலி.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2025 03:42
No comments have been added yet.


Paavannan's Blog

Paavannan
Paavannan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Paavannan's blog with rss.