Paavannan's Blog

November 30, 2025

எஸ்.எல்.பைரப்பா : உண்மையின் அழகு

 

இருபதாம்நூற்றாண்டின் தொடக்கத்தில் கர்நாடகத்தின் பல பகுதிகளில் பிளேக் என்னும் நோய் பரவிஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியது. ஓராண்டு காலம் நீண்ட தீவிரமான மருத்துவச் சிகிச்சையின் விளைவாக ஒரு வழியாக பிளேக்தடுக்கப்பட்டது. எனினும் நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும்  பிளேக் நோய் மீண்டும் பரவத் தொடங்கிகிராமங்களிலும் நகரங்களிலும் பல உயிர்களைப் பலி வாங்கத் தொடங்கியது.

ஹாசன்மாவட்டத்தைச் சேர்ந்த சந்தேஷிவர என்னும் சிற்றூரும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டகிராமங்களில் ஒன்று. அந்த ஊரில் அப்போதுதான் திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்குச்செல்வதற்காகக் காத்திருந்த ஓர் இளம்பெண்ணையும் தொடக்கப்பள்ளியில்படித்துக்கொண்டிருந்த இரு சிறுவர்களையும் கொண்ட ஒரு குடும்பத்தை பிளேக் தாக்கிநிலைகுலைய வைத்தது. அக்குடும்பத்தின் தலைவன் விவேகமில்லாத ஓர் உதவாக்கரை மனிதன்.பிறரைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் வேளாவேளைக்கு இருப்பதைச் சாப்பிட்டுவிட்டுஊர் சுற்றிப் பொழுது போக்குபவன். அக்குடும்பத்தின் தலைவி அன்பும் பாசமும் கொண்டவள்என்றபோதும் அவளால் பிளேக் நோய் தாக்கிய பிள்ளைகளுக்கு மருத்துவம் செய்ய முடியவில்லை.

மருமகளாகபுகுந்த வீட்டுக்குச் செல்லவேண்டிய மகளை அவள் முதலில் இழக்கிறாள். அடுத்துவிளையாட்டுப் புத்தி நீங்காத சின்ன மகன் இறக்கிறான். உயிருடன் பிழைத்திருக்கும்நடுப்பிள்ளையாவது பிழைத்திருக்க வேண்டும் என்று அந்தத் தாயின் உள்ளம் துடிக்கிறது.தன் பிறவியே பொருளற்றுப் போய்விடுமோ என அவள் மனம் நடுங்குகிறது. இப்படிஅடுத்தடுத்து மரணமடைவதைப் பார்க்கத்தானா இந்தப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தோம் எனகதறி அழுகிறாள்.

ஏதோ ஒருகணத்தில் ஆவேசத்துடன் உயிர்த்திருக்கும் பிள்ளையை அழைத்துச் சென்று, அவர்கள்வணங்கும் தெய்வத்தின் சந்நிதியில் தள்ளிவிடுகிறாள். ”இனிமேல் இவன் என் பிள்ளைஇல்லை. இவன் உன் பிள்ளை. இவனைப் பிழைக்கவைப்பதாக இருந்தாலும், உயிரைப் பறிப்பதாகஇருந்தாலும், அது உன் பொறுப்பு. எனக்கும் இவனுக்கும் இனிமேல் எந்தத் தொடர்பும்இல்லை. இது சத்தியம். சத்தியம். சத்தியம்” என்று முழங்குகிறாள். இரவு வரைக்கும்அங்கேயே அமர்ந்து மனம் ஆறும்வரை அழுதுவிட்டு தாயும் மகனும் வீட்டுக்குத்திரும்புகின்றனர். ஒருசில நாட்களில் அச்சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறிஉயிர்பிழைத்துவிடுகிறான். அக்கிராமத்துத் தெய்வத்தின் பெயரையே தன் பெயராகக் கொண்டிருந்தான்அச்சிறுவன்.  அச்சிறுவனே சந்தேஷிவரலிங்கண்ணையா பைரப்பா என்கிற எஸ்.எல்.பைரப்பா.

‘சுவர்’ என்னும்தலைப்பில் எஸ்.எல்.பைரப்பா எழுதிய தன்வரலாறு கன்னடத்தில் எழுதப்பட்ட முக்கியமானதன்வரலாறுகளில் ஒன்று. அவருடைய இளமைக்கால அனுபவங்களையும் பிளேகால் பாதிக்கப்பட்டதன் கிராமத்துச் சித்திரங்களையும் கல்வி கற்பதற்கு பட்ட பாடுகளையும் அவர் அந்தத்தன்வரலாற்றில் விரிவாகவே எழுதியிருக்கிறார்.

சிறுவயதுக்கேஉரிய குறும்புகளோடும் துடுக்குத்தனத்தோடும் வளர்ந்திருக்கிறார் பைரப்பா. சந்தேஷிவரவிவசாயத்தை நம்பியிருக்கும் கிராமம். திரும்பிய பக்கங்களிலெல்லாம் கிணறுகளும்,கால்வாய்களும் இருந்தன. ஊரின் எல்லையில் இருந்த ஏரி, அந்த ஊருக்கு மட்டுமன்றி,அக்கம்பக்கத்து கிராமங்களுக்கும் நீராதரமாக இருந்தது.

நீரைப்பார்த்ததுமே இறங்கி நீச்சலடிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட பைரப்பா பொழுதுமுழுதும்கிணறுகளையும் கால்வாய்களையும் வலம் வந்தார். அதற்குப் பொருத்தமான நண்பர்கள் அவரைச்சுற்றி இருந்தனர். நீச்சல் பித்து மட்டுமன்றி அவருக்கு நாடகம் பார்க்கும் பித்தும்இருந்தது. தன் கிராமத்தில் நடிக்கப்படும் நாடகத்தை மட்டுமன்றி சுற்றுவட்டார்த்தில்உள்ள கிராமங்களில் நடைபெறும் நாடகங்களுக்கும் நண்பர்கள் குழுவோடு தெரிந்தும்தெரியாமலும் புறப்பட்டுச் சென்று பார்க்கும் பழக்கமும் இருந்தது.

ஒருமுறைபன்னிரண்டு மைல்களுக்கு அப்பால் நடந்த ஒரு நாடகத்துக்கு, ஒருவரிடமும் சொல்லாமல்நண்பர்களோடு சேர்ந்து புறப்பட்டுப் போய்விட்டார். பகல் முழுதும் நடந்துசென்றுஇரவெல்லாம் நாடகம் பார்த்துவிட்டு விடிந்ததும் நடக்கத் தொடங்கி நண்பகல் வேளையில்வீட்டுக்கு வந்துசேர்ந்தார். அதற்கிடையில் விடிந்ததும் மகனைக் காணாத தாய்பதறியடித்துக்கொண்டு  ஊரெங்கும் தேடத் தொடங்கிவிட்டார்.ஊரிலுள்ள எல்லாக் கிணறுகளிலும் ஆட்களை இறக்கித் தேடவைத்தார். எங்கும்கிடைக்கவில்லை என்றதும் அவருடைய பதற்றம் அதிகரித்துவிட்டது. பித்துப் பிடித்ததுபோலவாசலில் உட்கார்ந்துவிட்டார். உச்சி வெயிலில் பசியோடு நடந்துவந்து வந்து வாசலில்நின்ற மகனைப் பார்த்த பிரகுதான் அவருடைய பீதி அகன்றது. ஆயினும் ஆத்திரம்பொங்கியது. சரமாரியாக அடித்துவிட்டார். இனி கட்டுப்பாடான ஓர் இடத்தில் மகன்இருப்பதுதான் அவன் வாழ்க்கைக்கு நல்லது என நினைத்து பாகூரு என்னும் சிற்றூரில்வாழ்ந்து வந்த தன் சகோதரரின் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். படிப்பதற்கும் அங்குஏற்பாடு செய்யப்பட்டது.

எதிர்பாராதவிதமாக அவருடைய தாயார் இயற்கையெய்தினார். அதற்குப் பிறகு தாய்மாமனின் குடும்பம்அவரிடம் பாரபட்சமாக நடக்கத் தொடங்கினர். வசைகளும் அடிகளும் பொறுக்கமுடியாதஎல்லைக்குச் சென்றன. அதனால் ஆசிரியரொருரின் உதவியோடு அங்கிருந்து வெளியேறி  சிறிது தொலைவில் உள்ள நுக்கேஹள்ளி என்னும்சிற்றூருக்குச் சென்று அங்கிருந்த பள்ளியில் சேர்ந்தார்.

புதியகிராமத்தில் தங்குவதற்கு இடமில்லை. அதனால் கோயில் மண்டபத்தில் படுத்துறங்கினார்.மண்டபத்தில் சீட்டுக்கட்டு விளையாட வந்த ஊர்க்காரர்கள் படிக்கிற பிள்ளைக்கு ஆதரவுகொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு வீட்டில் சாப்பாடுஅளித்து உதவினர். தொடக்கப்பள்ளியில் படித்துமுடித்ததும் அவர்மீது நல்ல மதிப்புகொண்டிருந்த ஆசிரியரொருவர் சென்னராயப்பட்டணத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில்சேர்வதற்கு உதவினார். அங்கும் கோயில் மண்டபத்தில் தங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவீட்டில் சாப்பாடு வாங்கி பசியைத் தணித்துக்கொண்டார். அவர் பிராமண மாணவர் என்பதால்அந்த ஊரைச் சேர்ந்த அக்கிரகாரத்துக் குடும்பங்கள் அவருக்கு உணவு வழங்கின.

அவர்அங்கிருப்பதை எப்படியோ அறிந்துகொண்ட அவருடைய தந்தையார் ஒருநாள் அவரைத் தேடிக்கொண்டுஅந்த ஊருக்கு வந்துவிட்டார். அவர் தங்கியிருந்த அதே கோயில் மண்டபத்திலேயே அவரும்தங்கிக்கொண்டு தனக்கும் சேர்த்து சாப்பாடு வாங்கிவந்து கொடுக்குமாறுகட்டளையிட்டார். வேறு வழியில்லாமல் நான்கு நாட்களுக்கு வாங்கிக்கொண்டு வந்துகொடுத்தார் பைரப்பா. ஐந்தாம் நாள் காலையில் பள்ளிக்கூடம் கிளம்புவதற்குமுன்பே  இனிமேல் தன்னால் அவருக்கும்சேர்த்து உணவு வாங்கிக்கொண்டு வரமுடியாது என்று திட்டவட்டமாகத்தெரிவித்துவிட்டார்.

அதைக் கேட்டுசீற்றம் கொண்ட அவருடைய அப்பா மகனைப் பழிவாங்க முடிவு செய்தார். அக்கிரகாரத்தில்அவருக்குச் சாப்பாடு வழங்கிய குடும்பத்தினரைச் சந்தித்து தன்னைஅறிமுகப்படுத்திக்கொண்டு “பைரப்பா அணிந்திருப்பது கள்ளப்பூணூல். அவனுக்குச்சாப்பாடு போடாதீர்கள்” என்று பிரச்சாரம் செய்துவிட்டு ஊரைவிட்டுச் சென்றுவிட்டார்.அன்று இரவு சாப்பாடு வாங்குவதற்குச் சென்ற பைரப்பாவின் தட்டில் ஒருவர் கூடசாப்பாடு போடவில்லை. எல்லா வீட்டிலும் அவரைத் தாழ்த்திப் பேசி அனுப்பினர்.ஏமாற்றத்தோடும் பட்டினியோடும் கோயில் மண்டத்துக்குத் திரும்பிய அவர் அன்றுசோர்வில் மூழ்கிவிட்டார். அப்போதும் அவருக்கு உதவியாக நின்றவர் ஓர் ஆசிரியரே.

இளமையில் அடுத்தடுத்துஅவர் சந்தித்த மரணங்களும் வறுமைச்சூழலும் அவரைப் பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்தின.விடைதெரியாத எண்ணற்ற கேள்விகள் அவர் நெஞ்சில் பொங்கிப்பொங்கி எழுந்தன.யமுனாச்சாரியார் என்னும் தத்துவப் பேராசிரியர் அவரைத் தத்துவப் பிரிவில் சேர்ந்துபடிக்கும்படி தூண்டினார். தர்க்கத்தின் அடிப்படையில் ஒரு செய்தியைப்புரிந்துகொள்ளவும் தெளிவு பெறவும் தத்துவம் உதவும் என்ற ஆசிரியரின் சொல்லை பைரப்பாஏற்றுக்கொண்டார். தத்துவப் பிரிவிலேயே இளநிலை, முதுநிலை பட்டங்களைப் பெற்றார்.முனைவர் பட்டமும் பெற்றார். படித்து முடித்ததும் அவர் கல்லூரிப் பேராசிரியராகவேலையில் சேர்ந்தார். படிக்கும் காலத்தில் அவர் தனக்குக் கிடைத்த சிறுசிறுவேலைகளையெல்லாம் செய்தார். தியேட்டரில் வாயில்காப்பாளனாக வேலை பார்த்தார். ஒருகடையில் கணக்கு எழுதினார். எல்லாத் துயரங்களிலிருந்தும் மீண்டு வர அவருக்குக்கல்வி அவருக்கு நற்றுணையாக விளங்கியது.

தத்துவ வாசிப்புஅவரை இலக்கியம் வாசிப்பவராகவும் மாற்றியது. சரத்சந்திரர், அநாக்ரு என அழைக்கப்பட்ட.கிருஷ்ணராவ்,தேவுடு, சிவராம காரந்த் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை விரும்பிப் படித்தார்.வாசிப்புப்பயிற்சி அவருக்குள் எழுத்தார்வத்தை உருவாக்கியது. மாணவப்பருவத்திலேயேஅவர் எழுதத் தொடங்கிவிட்டார்.

தன் நெஞ்சில்எப்போதும் நிறைந்திருக்கும் தன் தாயாரின் நினைவுகளைத் தொகுத்து ‘அம்மா’ என்னும்தலைப்பில் ஒரு சிறுகதையை முதன்முதலாக எழுதினார். ‘கஸ்தூரி’ என்னும் இதழில்அச்சிறுகதை வெளிவந்தது. அந்தக் கதை அவருக்கு எழுத்து சார்ந்து ஒரு நம்பிக்கையையும்தெளிவையும் அளித்தது. அதே சமயத்தில் சிறுகதைகளை அல்ல, நாவல்களை மட்டுமே தன்னால்எழுதமுடியும் என்பதையும் அவர் உணர்ந்துகொண்டார். தன் சிந்தனைகளுக்கும்அனுபவங்களுக்கும் நாவல் வடிவமே பொருத்தமாக இருக்கும் என அவர் நம்பினார். அதனால்அந்த ஒரே சிறுகதையோடு, சிறுகதைத்துறையை விட்டு விலகி நாவல் தொடர்பான சிந்தனையில்மூழ்கினார்.

தத்துவத்தில்முனைவர் பட்டம் பெற்ற பைரப்பாவுடைய ஆய்வேட்டின் தலைப்பு ‘உண்மையும் அழகும்’.இன்றளவும் அந்த ஆய்வேடு ஒரு முன்னோடி ஆய்வேடாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.இறுதி மூச்சு வரை தன்னை தத்துவத்தின் மாணவராகவே அவர் கருதி வந்தார். வெவ்வேறுபின்னணிகளில் தன் நாவல்கள் எழுதப்பட்டாலும் அந்தப் பின்னணியில் அமைந்திருக்கும்உண்மையையும் அழகையும், தத்துவத்தை ஒரு கருவியாகக் கொண்டு ஆய்ந்தறிவதே தன்படைப்புகளின் நோக்கம் என அவர் பல அரங்குகளில் சொல்லிவந்திருக்கிறார்.

அவருடைய பலபடைப்புகள், அவை எழுதி வெளிவந்த உடனேயே ஒரு விவாதப்பொருளாக மாறிவிடுவதுண்டு. அப்படி விவாதமெழும் ஒவ்வொரு முறையும் அவர்தன் நாவல் பேசும் உண்மை தான் கண்ட உண்மை என்றும் தன்னுடைய பார்வை என்றும்இன்னொருவர் அதே தளம் சார்ந்து இன்னொரு உண்மையைக் கண்டறிந்து சொல்வதற்கு எப்போதும்இடமுண்டு என்று விடாப்பிடியாக அவரும் சொல்லி வந்திருக்கிறார். ஆனால் அவரோடுவிவாதத்தில் இறங்கிய அனைவரும் அவரை எதிர்க்கும் மும்முரத்தில் அச்சொற்களை உரியகவனம் கொடுத்துக் கேட்க விரும்பாதவர்களாகவே இருந்ததுதான் துரதிருஷ்டம்.

பீமகாய என்பதுஅவருடைய முதல் நாவல். கல்லூரி மாணவராக இருந்தபோதே, அந்நாவலை எழுதி வெளியிட்டார்.அது ஒரு பயில்வானுடைய கதை. ஒரு மல்யுத்த வீரனின் வெற்றிக்குப் பின்னால் உள்ளஉழைப்பையும் தியாகத்தையும் அந்த நாவலில் சிறப்பாகவே பதிவு செய்திருந்தார் பைரப்பா.

1958 முதல் 2017 வரையில் ஏறக்குறைய அறுபதாண்டு காலத்தில் பைரப்பாஇருபத்தைந்து நாவல்களை எழுதியிருக்கிறார். அவரை ஒரு மரபான கதைசொல்லி என ஒருபோதும் சுருக்கிமதிப்பிட முடியாது. ஒவ்வொரு நாவலையும் அவர் ஒவ்வொரு பின்னணி சார்ந்து எழுதியிருக்கிறார்.பின்னணி சார்ந்த தகவல்களை மிகவும் பாடுபட்டுத் திரட்டுபவர் அவர். ஆனால் அத்தகவல்களைஅவர் தம் நாவலில் ஒருபோதும் நிறைத்துவைப்பதில்லை. ஒவ்வொரு பின்னணியிலும் அடிப்படையாகஉள்ள ஆன்மிகத்தளத்தைத் தொட்டுப் பார்ப்பதே அவருடைய நோக்கமாக இருக்கிறது. 

அவருக்கு மாபெரும் புகழைத் தேடிக் கொடுத்த ‘ஒரு குடும்பம் சிதைகிறது’கிட்டத்தட்ட அவருடைய தன்வரலாற்றின் ஒரு பகுதி என்றே சொல்லலாம். சூறாவளிக்காற்றில் சிக்கிஒரு மரம் வேரோடு சாய்வதுபோல வறுமையும் அறியாமையும்  பின்னிப்பிணைந்த சூழலில் சிக்கிய ஒரு குடும்பம்  கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்துவிழும் காட்சியை அந்தநாவலில் பார்க்கமுடியும். மற்றொரு தொடக்க கால நாவலான ‘வம்ச விருட்சம்’ மரபுக்கும் மரபுமீறலுக்கும் இடையிலான உரசலை முன்வைக்கும் படைப்பு. அவருக்கு சாகித்திய அகாதமி விருதைப்பெற்றுத் தந்த ‘தாட்டு’ நாவல் காதலையும் கலப்புத்திருமணத்தின் உளவியல் சிக்கல்களையும்முன்வைக்கும் படைப்பாகும். ‘மந்த்ர’ இசையைப் பின்னணியாகவும் ’யானா’ விண்வெளிப்பயணத்தைப்பின்னணியாகவும் கொண்டவை.

‘ஆவரண’ இருவேறு மதங்களின் முரண்பாடுகளைப் பேசுபொருளாகக் கொண்டது.தொன்ம அடையாளங்கள் எதுவுமின்றி, புராண பாத்திரங்களை எளிய மனிதர்களாக உலவவிட்டு அவர்களுடையமன ஓட்டங்களை உற்று நோக்கித் தொகுத்துக்கொள்வதை அவர் விரும்பிச் செய்தார். நம் நாட்டின்பழைய இதிகாசங்களான மகாபாரதத்தை ‘பருவம்’ என்னும் தலைப்பிலும் இராமாயணத்தை ‘உத்தரகாண்டம்’என்னும் தலைப்பிலும் மீட்டுருவாக்கம் செய்து எழுதினார். ஒரு படைப்பைப்போல இன்னொரு படைப்பைஎழுத அவர் மனம் விரும்புவதில்லை. புதியவற்றைத் தேடுவதும் புதியவற்றை எழுதுவதும் பைரப்பாவின்மனம் விரும்பும் செயல்களாக இருந்தன.

தன் எண்பதாம்வயது நிறைவையொட்டி தான் பிறந்துவளர்ந்த சந்தேஷிவர கிராமத்துக்கு ஏதாவதுசெய்யவேண்டும் என பைரப்பா விரும்பினார். மரபுவழியாக அவருக்குக் கிடைத்த பரம்பரைவீடு அந்த ஊரில் இருந்தது. பழுது பார்க்கும் வேலைகளைச் செய்து அந்தக் கட்டடத்தைஒழுங்குபடுத்தி, கிராமத்து மக்கள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் ஒரு நூலகத்தைஉருவாக்கினார். பொதுமக்களில் பலர் தொடக்கத்தில் நூலகத்துக்கு உற்சாகமாக வந்து  புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினர். ஆயினும்அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்தபடியே சென்றது. அது அவரைச் சற்றே நிராசையுறச்செய்தது என்றபோதும் அதைக் கண்டு பைரப்பா மனம் தளரவில்லை.

நாமாகவேகிராமத்துக்கு எதையேனும் செய்வதற்குத் திட்டமிடுவதற்குப் பதிலாக அவர்களுடைய தேவையைஅவர்களையே கேட்டுச் செய்துகொடுப்பதுதான் சரியானதாக இருக்கும் என்ற எண்ணத்தை பைரப்பாவந்தடைந்தார். அடுத்த கட்டமாக தன் ஊருக்குச் சென்று அங்கிருந்தவர்களைச் சந்தித்து அவர்களுடையதேவையைக் கேட்டார். அவருடைய  சிறுவயதுகாலத்தில் அந்தக் கிராமத்தினரிடம் நிறைந்திருந்த விவசாய நாட்டம் ஏறத்தாழ எண்பதுஆண்டுகளுக்குப் பிறகும் அப்படியே நீடித்திருக்கிறது என்பதையே அவர்களோடு நிகழத்தியஉரையாடல் வழியாக அவர் புரிந்துகொண்டார். “கிணத்தில தண்ணி இல்லை” “வாய்க்கால்லதண்ணி இல்லை” “ஏரி வத்திப் போச்சி” ”விவசாயம் செய்யமுடியலை” என்பதையே வெவ்வேறுவடிவங்களில் அனைவரும் எடுத்துரைத்தனர்.

பெருகியிருக்கும்விவசாய நிலத்தின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் வசதி இல்லை என்பது கண்கூடாகவே தெரிந்தது.நீர்த்தேவையை ஈடுகட்ட அந்தக் காலத்தில் கிடைத்ததுபோன்ற மழைநீர் மட்டுமே இப்போது போதுமானதாகஇல்லை. கூடுதல் நீர் தேவையாக உள்ளது. “உங்களால முடிஞ்சா கூடுதல் தண்ணிக்கு வழிசெய்ங்க” என்பதுதான் கிராமத்தினர் பைரப்பாவிடம் முன்வைத்த வேண்டுகோள்.

சந்தேஷிவரகிராமத்தின் கிணறுகளிலும் கால்வாய்களிலும் தண்ணீர் நிறைந்திருக்க வேண்டுமெனில்ஏரியில் தண்ணீர் நிறைந்திருக்க வேண்டும். ஏரியில் தண்ணீர் நிறைந்திருக்கவேண்டுமெனில் அது ஏதோ ஒரு வகையில் பத்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் ஹேமாவதிநதியிலிருந்து நேரிடையாகப் பிரிந்துசெல்லும் கால்வாயுடன் இணைக்கப்பட வேண்டும். அதுஒன்றுதான் வழி. ஓர் எழுத்தாளராக அதைச் சாத்தியப்படுத்தும் செயல் தன் சக்திக்குமீறிய விஷயம் என்பது பைரப்பாவுக்கு நன்றாகவே புரிந்தது. ஆயினும் ஒரு முயற்சியையும்தொடங்காமல் தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு அவர் மனம் இடம்கொடுக்கவில்லை. ”முடிந்தவரைமுயற்சி செய்கிறேன்” என்று கிராமத்தினரிடம் தெரிவித்துவிட்டு மைசூருக்குத்திரும்பிவிட்டார் பைரப்பா.

அப்போதுமுதல்வராக இருந்தவர் எடியூரப்பா. ஒருநாள் பெங்களூருக்கு வந்து அவரைச் சந்தித்தார்பைரப்பா. தன் கிராமத்தின் தேவையை முதல்வரிடம் முன்வைத்தார். ஓர் எழுத்தாளரின் கனவைஉறுதியாக நிறைவேற்றுவதாக வாக்களித்த முதல்வர் உரிய அதிகாரிகளிடம் அதைப்பற்றிப்பேசி உடனடியாக ஒரு திட்டத்தைத் தயாரிக்கும்படி தெரிவித்தார். திட்டம் தயாரானசமயத்தில் எதிர்பாராத விதமாக அரசியல் காரணங்களுக்காக முதல்வர் பொறுப்பிலிருந்துஎடியூரப்பா வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

சற்றும் மனம்தளராத பைரப்பா, புதிதாக முதல்வர் பொறுப்பை ஏற்றிருந்த பசவராஜ் பொம்மாயி அவர்களைச்சந்தித்து திட்டத்தைப்பற்றி நினைவூட்டினார். தன் அரசு அத்திட்டத்தைநடைமுறைப்படுத்தும் என வாக்களித்த முதல்வர் அதிகாரிகள் தயாரித்த திட்டத்துக்கு அனுமதிவழங்கி, உடனடியாக வேலையைத் தொடங்க நிதியையும் ஒதுக்கியளித்தார்.  பத்து கிலோமீட்டர் நீளத்துக்கு குழாய்களைப்பதிக்கும் வேலை தொடங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக அவருடைய ஆட்சிக்காலம்முடிவுக்கு வந்ததால் தொடங்கிய வேலை நின்றுவிட்டது.

தேர்தலில் புதியகட்சி பொறுப்பேற்றது. மனம் சலிக்காத பைரப்பா புதிய முதல்வரான சித்தராமையாவைப்பார்த்து எல்லா விஷயங்களையும் நினைவூட்டினார். அச்செயலை நிறைவேற்றித் தருவதாக புதியமுதல்வர் பைரப்பாவுக்கு வாக்களித்தார். உரிய அதிகாரிகளுக்கு உத்தரவும் தேவையானநிதியும் வழங்கப்பட்டன. இரண்டாண்டு காலம் தொடர்ச்சியாக நடைபெற்ற பணிகள் முடிந்துதிட்டம் நிறைவேறியது. இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு 25 கோடி ரூபாயைச் செலவுசெய்தது.

2025 ஆம்ஆண்டில் தொடக்கத்தில் அந்த இணைப்புக்கால்வாயின் திறப்புவிழா நடைபெற்றது.பைரப்பாவும் அவ்விழாவில் கலந்துகொண்டார். தான் பிறந்துவளர்ந்த சந்தேஷிவரகிராமத்தின் ஏரியும் கால்வாய்களும் கிணறுகளும் தன் பால்யகாலத்தில் நீர் நிறைந்துகாட்சியளித்ததுபோலவே அப்போது காட்சியளித்ததை ஆனந்தக் கண்ணீரோடு கண்டு மகிழ்ந்தார்.சந்தேஷிவர கிராமத்து மக்களும் தம் தேவை நிறைவேறியதை நினைத்து மகிழ்ந்தனர். பைரப்பாவைபகீரதன் என்று கொண்டாடினர்.

பைரப்பா 1966ஆம்ஆண்டில் தாட்டு என்னும் நாவலை எழுதியமைக்காக சாகித்திய அகாதமி விருதைப் பெற்றார்.2010 ஆம் ஆண்டில் சரஸ்வதி சம்மான் விருதைப் பெற்றார். 2016ஆம் ஆண்டில் அவருக்குபத்மஸ்ரீ விருதையும் 2023ஆம் ஆண்டில் பத்மபூஷண விருதையும் அரசு வழங்கியது.சந்தேஷிவர கிராமத்தில் வாழும் படித்த, படிக்காத மக்கள் அனைவரும் அன்று அவரை நெஞ்சில் ஏந்திய கணம், அவர் பெற்ற எல்லாவிருதுகளையும் விட உயர்வானது.

கடந்த அறுபதுஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்ட தம் படைப்புகளால் கன்னட மொழிக்குப்பெருமையைச் சேர்த்தவர் எஸ்.எல்.பைரப்பா. அவருடைய படைப்புகள் தமிழ் உட்பட பல்வேறுஇந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன. எல்லாமொழிகளிலும் பைரப்பாவுக்கு வாசகர்கள் இருக்கிறார்கள். தன் மங்காத படைப்புகள்வழியாக இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அவருடைய பெயரும் புகழும் நிலைத்திருக்கும்.அதற்கு இணையாக இலக்கிய வாசனையே இல்லாத பொதுமக்களும் அந்தத் தண்ணீர்த்திட்டத்தின்காரணமாக அவரை நன்றியுடன் நினைத்து பாராட்டுவார்கள்.

சந்தேஷிவரகிராமம் மட்டுமன்றி, பதினோரு கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்டிருக்கும் குழாய்வழிப்பாதையில் அமைந்திருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் ஏரிகளும் இனி நீர்நிறைந்து காணப்படும். நிரம்பி வழியும் ஏரியைப் பார்க்கும்போதெல்லாம் பைரப்பாவின்முகத்தை அவர்கள் பார்ப்பார்கள். நிரம்பி வழியும் ஏரி ஒருவகையில் அன்பு நிறைந்த அவருடையமனத்தின் படிமமாகவே நிலைத்திருக்கக்கூடும். 24.09.2025 அன்று தம் 94வது வயதில் இயற்கையோடுகலந்துவிட்ட வணக்கத்துக்குரிய எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பாவுக்கு அஞ்சலி.

 

(காலச்சுவடு – நவம்பர் 2025)

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2025 01:06

மின்மினிகளின் காலம்

 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் மலையகத்தோட்டங்களில்வேலை செய்வதற்காக தமிழ்நாட்டின் தென்பகுதியிலிருந்து பலர் குடியேற்றப்பட்டனர். தேயிலைத்தோட்டவேலை என்பது கிட்டத்தட்ட மரணக்குழியில் இறங்கிச் செல்வதற்கு இணையான ஒன்றாக இருந்த காலம்அது. ஆயினும் ஒவ்வொரு நாள் உழைப்புக்கும் கூலி கிடைக்கும் என்னும் உத்தரவாதத்தை மட்டுமேநம்பி பலர் அங்குக் குடியேறினர்.

அவர்கள் உழைப்பைச் சுரண்டிய சமூகம் கூலிக்காக உழைக்க வந்தவர்கள்என்ற கோணத்தில் மட்டுமே அவர்களை அணுகியது. எத்தனை தலைமுறைகள் மாறினாலும் அந்தக் கோணம்மாறவில்லை. அதே நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கிற, அதே மொழியைப் பேசிப் புழங்குகிறமக்களின் பார்வையிலும் அந்தக் கோணம் மாறவில்லை. காலமெல்லாம் ஓர் இரண்டாம் நிலை குடிமக்களாகவாழ நேர்வது மிகப்பெரிய வதை. அந்த அவலமும் இயலாமையும் பெருமூச்சுகளும் மலையகப் படைப்பாளிகளின்தொடர்ந்து வெளிப்பட்டபடி இருக்கின்றன. சமீப காலமாக கவிதைப்புலத்தில் தொடர்ந்து இயங்கிவரும்எஸ்தரின் கவிதைகளில் அதன் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது.

இத்தொகுப்பில் தேவி என்னும் தலைப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதைஇத்தொகுப்பின் செல்திசையை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது. அன்றாடம் காணத்தக்கஒரு காட்சியின் சித்திரத்தையே நாம் அக்கவிதையில் காண்கிறோம். இரண்டு நூற்றாண்டுகளாகமாறாத ஒன்றாக இந்த அன்றாடக்காட்சி தொடர்ந்து நிகழ்ந்தபடியே இருக்கிறது என்கிற கவனத்தோடுஇக்கவிதையை அணுகும்போது, அக்காட்சி எடைமிக்கதாக நம் நெஞ்சை அழுத்தத் தொடங்குகிறது.

அதிகாலையில் தோட்டத்தின் மேஸ்திரி எழுப்பும் தொழிலாளர்கள் புறப்பட்டுவருவதற்கான அடையாளமாக சங்கு சத்தம் ஒலிக்கிறது. உடனே தத்தம் குடியிருப்புகளிலிருந்துதலையில் கவிழ்த்த மூங்கில்கூடையுடன் வெளியேறிய பெண்கள் தேயிலை விளைந்திருக்கும் மலையைநோக்கி நடக்கத் தொடங்குகிறார்கள். பாலருந்தியபடி இருக்கும் கைக்குழந்தையோடு கூடையைச்சுமந்துகொண்டு தேவி என்பவள் ஓடிச் சென்று அக்கூட்டத்தில் இணைந்துகொள்கிறாள். ஒரு திருப்பத்தில்குழந்தைகள் காப்பகம் வருகிறது. மார்புக்காம்பைத் தம் உதடுகளால் பற்றிக்கொண்டிருக்கும்குழந்தையை இழுத்து விலக்கி அந்தக் காப்பகத்தில் விட்டுவிட்டுச் செல்கிறாள் அவள். ஒருவிதஇயலாமையுடன் குழந்தையின் கூக்குரலைக் கேட்டபடி அவள் மலையில் நடந்துகொண்டே இருக்கிறாள்.மார்பில் கசியும் பாலும் அவள் வியர்வையும் இணைந்து வழிய தோட்டத்துக்குள் செல்கிறாள்.இரண்டு நூற்றாண்டுகளில் மேஸ்திரிகள் மாறிவிட்டார்கள். தேவிகளும் மாறிவிட்டார்கள். ஆயினும்அந்தச் சூழலும் தவிப்பும் மாறாத ஒன்றாக தொடர்ந்தபடி இருக்கிறது. திகைக்கவைக்கும் அந்தஉண்மைதான் கவிதையின் வலிமை.

பசி என்னும் கவிதையில் அழகானதொரு காட்சியைச் சொல்லோவியமாகத்தீட்டியிருக்கிறார் எஸ்தர்.

 

தோட்டத்தில்நல்ல

கொய்யாப்பழங்கள்காய்த்திருக்கின்றன

அணில்களும்பறவைகளும் சதா வேட்டையாடினாலும்

பழங்களுக்கோபஞ்சமில்லை

தோட்டத்தின்லயத்துச் சிறுவர்கள்

கொய்யாப்பழங்களைப்பசிக்காகத் திருடுவார்கள்

பொழுதுபோக்கும்கூட

யாரோவைத்த மரம்

அதில்வரும் பழங்கள் பறவைக்கும்

எவரோஒருவரின் பசிக்கும்தானே

 

வாசலில்அமர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன்

தோட்டத்தில்சலசலப்பு கேட்கிறது

சிறுவர்கள்பழங்களைப் பறிப்பதும் கடிப்பதும்

மெல்லியகுரலில் உரையாடுவதும் கேட்கிறது

 

கொடியவள்தான்நான்

எழுந்துசென்றுஅவர்களை விரட்டியடிக்கும் அளவுக்கு

கொடியவளில்லை

 

எது அந்தச் சிறுவர்களை விரட்டியடிக்காமல் அவளைத் தடுத்தது என்றொருகேள்வி அனைவருக்கும் எழக்கூடும். பசி என்னும் உணர்வு எல்லா உயிர்களுக்கும் பொதுவானஒன்று என்னும் புரிதல் அவளைத் தடுத்திருக்குமா? பறவைகள் உண்டு செல்வதை சிறுவர்களும்உண்டு செல்லட்டுமே என்னும் எண்ணம் அவளைத் தடுத்திருக்குமா? அவளுக்குள் இயல்பாக ஊறியெழுந்ததாய்மையுணர்வு அவளை அமைதியாக இருக்கவைத்துவிட்டதா? பதில்களின் பட்டியல் நீளும்தோறும்கவிதையின் அழகு பெருகிக்கொண்டே செல்கிறது.

தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கையிலிருந்து பிரிக்கமுடியாத ஒருபொருள் மூங்கில் கூடை. காலமெல்லாம் அவர்கள் தலையில் அது ஒரு கவசத்தைப்போல அமர்ந்திருக்கிறது.நடக்கும்போது வெயிலிலிருந்தும் குளிரிலிருந்தும் காப்பாற்றும் கவசமாக இருக்கிறது. தேயிலையைப்பறிக்கத் தொடங்கியதும் கொள்கலனாக மாறிவிடுகிறது. ஒவ்வொருவருக்கும் உடலோடு ஒட்டியிருக்கும்புடவையைப்போல, அந்த மூங்கில் கூடையும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஒன்று மானம் காக்கிறது.இன்னொன்று வருமானம் அளிக்கிறது. மலையில் ஏறி இறங்கமுடிகிற காலம் வரைக்கும் அந்த வாழ்க்கைதொடர்கிறது.  வயது முதிர்ந்து தள்ளாமை வந்ததும்அவர்களுக்கு வீடு மட்டுமே புழங்குமிடமாக மாறிவிடுகிறது. அப்போதும் அவர்கள் அந்தக் கூடையைப்பிரிந்துவிடுவதில்லை. அந்தக் கூடையை அவர்கள் வீட்டிலேயே கோழிக்குஞ்சுகளை அடைத்து வளர்க்கப்பயன்படுத்துகிறார்கள். நிறமும் வலிமையும் இழந்துபோனாலும் காலமெல்லாம் அவர்களோடு அந்தக்கூடைகளும் அவர்களோடு வாழ்கின்றன.

 

நிறமிழந்தகூடையொன்று

மூலையில்கிடக்கின்றது

கோழியையும்குஞ்சுகளையும்

அதில்வைத்துக் காப்பாற்றுகிறாள் மூதாட்டி

 

கோழிகளையும்குஞ்சுகளையும் இரவில்  மூடிவைக்கிறாள்

அருகேயும்படுத்துக்கொள்கிறாள்

அவள்சுமந்து இறக்கிய காலமெல்லாம்

அவள்தலையோடு கிடந்த கூடை

அவளோடுஓய்ந்து கிடக்கிறது

 

சம்பளத்துக்குத்தாரேன் என்று கூடைக்காரனிடம் வாங்கும்

வீரியமிக்கமூங்கில் கூடைகள்

ஆசைதீரக்கொழுந்துகளை இறக்கி ஏற்றியது

 

ஓய்ந்துவிட்டதுகிழவியின் கூடை

அந்திமக்காலத்தில்அவள் வீட்டுக் கோழிகளைக் காப்பாற்றுகிறது

    

’மீனவனின் திசை’ இத்தொகுதியின் சிறந்த கவிதைகளில் ஒன்று. சரியானகோணத்தில் தீட்டப்பட்ட நெய்தல் நிலச் சித்திரம் என்றே இக்கவிதையைச் சொல்லவேண்டும்.

 

நள்ளிரவில்

தப்பிவந்தவனைப்போல்

கதவைத்தட்டுகிறது காற்று

மீனவன்போடும் வலையை

அங்குமிங்கும்பாடி

இழுத்துவிளையாடுகிறது

குழந்தைமனம்கொண்ட கடல்

இருக்கும்கடைசி சுண்டு அரிசியையும்

படக்படக்கென

சுளகில்புடைக்கிறாள் மீனவச்சி

மீன்வேட்டைக்குச் சென்றவனின் திசையையும்

தனக்குக்கொண்டுவரும்

மீன்களின்நித்திய ருசி பெருத்த

வழுவழுப்பானசொரசொரப்பான உடலங்களை

நினைத்துகண்ணை மூடிக்கொண்டு

வாலைஆட்டுகிறது

மீனவனின்மனதையும்

திசையையும்அறிந்த அவனது நாய்

 

மீனவன், அவன் மனைவி, அவர்களுடைய வளர்ப்பு நாய் என மூன்று உயிர்களின்காத்திருப்பையும் ஆவலையும் நாம் இக்கவிதையில் பார்க்கலாம். அதன் விளைவை ஒவ்வொரு வாசகரும்ஒவ்வொரு விதமாக தம் நெஞ்சில் விரித்தெடுத்துக்கொள்ளலாம். எண்ணங்கள் வளரும்தோறும் கவிதையும்வளர்ந்துகொண்டே செல்லும்.

’பாதை’ என்னும் தலைப்பில் இரு கவிதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.முதல் கவிதை பிண ஊர்வலம் தொடர்பானது. இறந்தவனின் உடலைச் சுமந்துகொண்டு உறவினர்களின்ஊர்வலம் வீட்டிலிருந்து புறப்படும் தருணத்திலிருந்து அக்காட்சி தொடங்குகிறது.  பட்டாசு வெடிக்கிறது. அமரர் ஊர்தியை மாலைகள் அலங்கரிக்கின்றன.ஊர்தி நகரத் தொடங்கியதும் துக்கம் விசாரிக்க வந்தவர்கள் அனைவரும் மெளனமாக தலைகுனிந்தபடிஊர்தியைப் பின்தொடர்ந்து நடந்துசெல்கிறார்கள். சில தெருக்கள் வழியாகச் சென்ற ஊர்திசிறிது நேரத்தில் மயானத்தை அடைகிறது. யாரோ ஒருவர் ‘ஆகவேண்டியதைப் பாருங்கள்’ என்றுபெருமூச்சோடு அறிவிக்கிறார். அடுத்த கட்டமாக மயானவேலைகள் தொடங்குகின்றன.

எல்லா ஊர்களிலும் நிகழும் வழக்கமான இறுதி ஊர்வலச் சித்திரத்தையேஎஸ்தர் கவிதையாகக் கட்டமைத்திருந்தாலும் கவிதையின் ஊடே ‘வாழ்வு இன்றுதான் சரியான பாதையில்சென்றுகொண்டிருக்கிறது’ என எழுதியிருக்கும் இரு வரிகள் கவிதையைக் கூர்மை கொள்ளவைக்கிறது.அப்படியென்றால், அதுவரை அவன் வாழ்ந்த வாழ்க்கை எப்படி இருந்தது என்கிற வினாவை நோக்கிநம்மைத் திருப்பிவிடுகின்றன அவ்வரிகள். எதையோ அடைய நினைத்து, அதை எப்படி அடைவது என்றுஅறியாமல் வாழ்நாள் முழுதும் திசைதோறும் முட்டிமுட்டி மோதி அலைபாய்ந்திருப்பானோ என்றுயோசிக்கவைக்கிறது. எது தான் செல்லவேண்டிய பாதை என்பதைக் கண்டறிய முடியாமலேயே அவன் வாழ்க்கைநிராசையுடன் முடிந்துவிட்டதோ என திகைக்கவைக்கிறது. வாழ்நாள் முழுதும் திசைதெரியாமல்அலைந்துகொண்டிருந்தவனைத்தான் அந்த இறுதி ஊர்வலம் மயானத்துக்குச் செல்லும் சரியான பாதையில்அழைத்துச் செல்கிறது.

பாதை தலைப்பில் அமைந்த மற்றொரு கவிதையும் மிகமுக்கியமானது. விளக்கம்எதுவும் தேவையில்லாத வகையில் வெளிப்படையாகவே எழுதப்பட்டிருக்கிறது அக்கவிதை.

 

அடர்இருளில்

நடந்துசெல்லும்

யானையின்பயணத்தை

வழிகாட்டுகிறது

ஒளிவண்ணமின்மினிகள்                           

 

யானையின் பயணத்துக்கு வழிகாட்டும் மின்மினிகள் என்னும் தொடர்எதிர்காலத்தில் எஸ்தரின் அடையாளமாக அமையக்கூடும். யானை மிகப்பெரிய விலங்கு. யாரும்வெல்ல முடியாத விலங்கு என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்தே இருக்கமுடியாது. ஆனால்அந்த யானை மிகமிகச்சிறிய மின்மினிப்பூச்சிகள் வழங்கும் வெளிச்சத்தின் துணையோடுதான்தன் பயணத்தைத் தொடர்கிறது. துரதிருஷ்டவசமாக, யானைகள் ஒருபோதும் அந்த மின்மினிகளைப்பொருட்டாகவே நினைப்பதில்லை. ஆயினும் மின்மினிகள் தம் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வதில்லை.தம் பாதையிலிருந்து விலகிச் செல்வதுமில்லை. இலங்கையில் வசிக்கும் கிஞ்சித்தும் பொருட்படுத்தாதமலையகத்தமிழர்களை அந்த மின்மினியாக உருவகித்துக்கொண்டால், எஸ்தரின் கவிதை மிக உயரத்துக்குச்சென்றுவிடுகிறது. 

 

(பெருவெடிப்பு மலைகள். கவிதைகள். எஸ்தர், பூபாளம்புத்தகப்பண்ணை, அண்ணா நகர் மேற்கு, சென்னை -600040. விலை. ரூ.100)

 

(புக் டே – இணையதளம் – 28.11.2025)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2025 00:52

மகத்தான அனுபவத்தை நோக்கி

 

ஒரு கவிதை என்பது பல நேரங்களில் உலகியல் சார்ந்த ஒரு கணத்திலிருந்துபீறிட்டு வெடித்தெழுவது என்றபோதும், அது அபூர்வமானதொரு அழகியலைத் தன் சருமமெனக் கொண்டுஒளிரும் ஆற்றலையும் தனக்குள்ளே கொண்டிருக்கிறது. அந்த அழகியல் வழியாகவே அக்கவிதை இம்மண்ணில்தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. அவ்வழகியலால் தூண்டப்பட்டு ஒரு வாசகனின் நெஞ்சில் எழும்எண்ணங்கள் வெவ்வேறு தளங்களைத் தொட்டுத்தொட்டு அலையும்தோறும் உருவாகும் மன எழுச்சி,கவிஞரின் மன எழுச்சிக்கு இணையானதொரு அனுபவம். கவிஞரும் கவிதை வாசகரும் இணைந்து நிற்கும்அபூர்வமான புள்ளி அது.

இருபதாண்டுகளுக்கு முன்பு வெளிவந்திருந்தபோதும்  லதாவின் ‘பாம்புக்காட்டில் ஒரு தாழை’ இப்போது வந்தபுதிய தொகுப்புக்கு நிகரான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறது. சமகாலத்திலிருந்தே அவருடைய கவிதைக்கணம் அமைந்திருந்தாலும், அக்கணம்என்றென்றைக்கும் உரிய கணமாக அமைந்திருப்பதுதான் அதற்குக் காரணம்

வாழ்க்கையில் நெருக்கடியை ஏற்படுத்தும் ஒவ்வொரு கணமும் வலியும்வேதனையும் நிறைந்தது என்பதில் ஐயமெதுவும் இல்லை. ஆனால் அந்தக் கணத்தில் எழும் வேதனையைமட்டுமே பெரிதென நினைத்துக் குமுறுவதிலோ அல்லது அந்த இழப்பையே பெரிதென நினைத்து வாடுவதிலோஒரு பொருளும் இல்லை. அந்த நெருக்கடி வழியாக நாம் உணரத்தக்க ஒரு பாடத்தின் துணையோடுநம்மை மேம்படுத்திக்கொள்வது மிகப்பெரிய ஞானம். நெருக்கடியின் துன்பத்தால் துவண்டு விழுபவர்களுக்குநடுவில் அதை ஒரு பாடமாகக் கொண்டு எழுந்து வருபவர்கள் மிகவும் குறைவு. இத்தொகுதியில்லதா எழுதியிருக்கும் ’பாடம்’ என்னும் கவிதையைப் படிக்கும்போது அந்த எண்ணம்தான் எழுகிறது.

 

வானத்தில்

பறந்துகொண்டிருந்த

பட்டங்களுக்குள்ஒரு போட்டி

விழுவதுயாரென்று

 

தற்செயலாய்

ஒரு பட்டம்வாலறுந்து

விழுந்தபோது

பறப்பதுபற்றித்

தெரிந்துகொண்டது

 

பட்டம்காற்றில் நீந்தி வரும் காட்சியோடு நெருக்கடி வழியாகப் பாடம் கற்கும் ஞானம் மிகச்சரியாகப்பொருந்திப் போகிறது.

தொகுப்பின் தலைப்புக்கவிதை இத்தொகுதியின் மிகமுக்கியமான கவிதை.எங்கெங்கும் தாழையின் மணம் கமழ விரிந்திருக்கும் ஒரு காட்டுப்பகுதியைக் களமாகக் கொண்டிருக்கிறதுகவிதை. திரும்பும் இடங்களிலெல்லாம் தாழை மடல் விரித்திருக்கிறது. மலராத மடல்களுக்கிடையில்பசபசப்பான பிசின் ஒட்டியிருக்கிறது. காட்டில் ஊர்ந்துவந்த பாம்பொன்று பிசினை ஊடுபாதையாகக்கொண்டு மடலுக்கிடையில் புகுந்து செல்கிறது. பிறகு அதையே தன் இருப்பிடமாகக் கொண்டுவிடுகிறது.ஒவ்வொரு மடலிலும் ஒவ்வொரு பாம்பு உறையத் தொடங்குகிறது. தாழைக்காடு மெல்ல மெல்ல பாம்புகள்உறையும் காடாக மாற்றமடைகிறது.

 

பச்சைஅழியாத பசும் தாழை

மலராதமடல்களிடையே

இன்னும்ஒட்டியிருக்கிறது

வாலைப்பிசின்

 

வாசனைதெரியாது

காற்றின்இசையும் அறியாது

ஒன்றேகுறியாய்

பார்வைமட்டும் பாய்ந்தோட

தோலைநிமிர்த்துகிறது

 

வாசம்விரியாத மடல் பிரித்து

தலை நுழைக்கிறது

அரையடிமடலுக்குள்

முழுஉடல் சுருக்கி

ஒவ்வோர்மடலிலும்

சுருண்டுகிடக்கிறதொரு பாம்பு

 

சுமைபெருகப்பெருக

ஓங்கிவளர்கிறது தாழை

வீங்கிவிளைகின்றன பாம்புகள்

 

கூடாரத்தில் தங்கியிருந்த மனிதனிடம் கூடாரத்துக்கு வெளியே கட்டப்பட்டிருந்தஒட்டகம் குளிரைக் காரணமாகக் காட்டி கால்களை மட்டும் வைத்துக்கொள்ளட்டுமா முகத்தை மட்டும்வைத்துக்கொள்ளட்டுமா என கெஞ்சிக் கேட்டு மனிதனின் இரக்கத்தைத் தூண்டி, கடைசியில் கூடாரத்தையேஆக்கிரமித்துக்கொண்டு மனிதனை வெளியேற்றிவிடும் கதையை நாம் அனைவரும் பள்ளிக்கூட வயதில்படித்திருப்போம். அதற்கு இணையான ஒரு சம்பவம்தான் தாழைமடலில் பாம்பு உறையத் தொடங்கும்கதை. சாமர்த்தியசாலிகளின் தந்திரங்கள் முன்னால் எளிய மனிதர்கள் காலம்காலமாகத் தோற்றபடியேஇருக்கிறார்கள். தோற்றவர்களின் வரலாற்றில் ஓர் அத்தியாயம்தான் தாழம்பூக் காடு பாம்புக்காடாக மாற்றமடையும் செயல். அழகானதொரு படிமம் நம்மைப்பல கோணங்களில் சிந்திக்கவைக்கிறது.

இராமாயணக்கதையை அறிந்தவர்கள் அனைவரும் இலங்கையையும் அசோகவனத்தையும்அறிந்திருப்பார்கள். அசோகவனத்தின் அழிவையும் இராமனுக்கும் இராவணனுக்கும் இடையில் நடைபெற்றபோரையும் சீதையின் மீட்சியையும் தெரிந்துவைத்திருப்பார்கள். சீதையின் மீட்சி ஒருபக்கம்யுத்தத்தினால் விளைந்த நன்மை எனக் கருதினால், பிள்ளை வளர்ப்பதையே தன் கடமையெனக் கொண்டபல்லாயிரக்கணக்கான தாய்மார்களின் மரணத்தை அடையாளப்படுத்துவதற்கு என்ன சொல் இருக்கிறது?தன்னைப்பற்றி நினைக்கக்கூட பொழுதின்றி இறந்துபோன மண்டோதரியின் மரணத்தை எடுத்துரைக்கச்சொல்லில்லை. அவளுக்குச் சூட்டப்பட்ட பத்தினிப்பட்டமே அவளை எரித்துச் சாம்பலாக்கிவிடுகிறது.ஏற்கனவே பாதி எரிந்த அசோகவனத்தின் எஞ்சிய பாதி அவளுடைய தீயின் எச்சத்தால்  எரிந்துகொண்டிருக்கிறது.

 

எரிந்ததுகாடு எரிந்தது நாடு

எரிந்தனமயில்கள்

எரிந்தனகோயில்கள்

ஏவல்பெண்கள் எரிந்தனர்

காவல்மரங்கள் கருகின

பிஞ்சுப்பாவலர்கள் வெந்துபோயினர்

நெஞ்சுபிளந்து அன்னையர் இறந்தனர்

ஆண்மைதுவள ஆண்கள் வீழ்ந்தனர்

எரிந்துகொண்டிருக்கிறதுஅசோகவனம்

 

தீ பரவும் வேகத்தையும் உச்சம் தொட்டு ஒலிக்கும் ஓலமிடும் குரலின்வேகத்தையும் கவிதையின் வரிகள் தம்மிடையே கொண்டிருப்பது இக்கவிதையின் சிறப்பம்சமாகும்.யுத்தத்தின் மூர்க்கத்திலும் வெற்றியின் கொண்டாட்டத்திலும் மூழ்கி ஆண்கள் எப்படியோதம் உலகத்தை நிறைத்துக்கொள்கிறார்கள். ஆனால் பிள்ளை வளர்ப்பைத் தவிர வேறெதையும் அறியாதஅப்பாவிப்பெண்கள் அசோகவனத்தோடு சேர்ந்து காலம்காலமாக எரிந்துகொண்டே இருக்கிறார்கள்.வரலாற்றை எழுத நினைப்பவர்கள் கவனம் கொள்ள மறுக்கிற ஒரு முக்கியமான புள்ளியை அசோகவனம்படிமத்தின் வழியாக வாசகர்களுக்குச் சுட்டிக் காட்டுகிறார் லதா.

லதாவின் கவிதைமொழி நுட்பம் பொருந்தியதாகவும் சிக்கலற்றதாகவும்உள்ளது. வாசகர்களைத் தம்மை நோக்கி ஈர்க்கிற ஓர் அன்றாடக்காட்சி அல்லது அனுபவச்சித்தரிப்புஅல்லது கவித்துவமான படிமம் அவருடைய பல கவிதைகளில் நிறைந்திருக்கின்றன. நம்மை அறியாமலேயேநமக்குள் நுழைந்துவிடும் அவ்வரிகள் நம்மை அசைபோடவைத்து மகத்தானதொரு அனுபவத்தை நோக்கிஅழைத்துச் செல்கின்றன.

 

(பாம்புக்காட்டில் ஒரு தாழை . கவிதைகள். லதா,காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் -629001. விலை. ரூ50)

 

(புக் டே – இணையதளம் –25.11.2025)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2025 00:47

November 22, 2025

இலக்கிய வாசிப்பைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்

 

 பாவண்ணன் நேர்காணல்

 கேள்விகள் : ஜி.மீனாட்சி

          

 

எழுத்தாளர் பாவன்னன் சிறுகதைகள்,கவிதைகள், நாவல்கள், கட்டுரைகல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்கி, தனி முத்திரைபதித்து வருபவர். ஆழமான, நுணுக்கமான விஷயங்களை, பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில்எழுதுவது அவரது வழக்கம்.

 

43 ஆண்டுகளுக்கும் மேலாகஇலக்கிய உலகில் கோலோச்சும் அவரது எழுத்துகள், அவருக்கான பல்வேறு அங்கீகாரங்களை விருதுகள்வடிவில் பெற்றுத் தந்திருக்கின்றன. இயல் விருது, சாகித்திய அகாதமி வழங்கிய சிறந்த மொழிபெயர்ப்பாளர்விருது, இலக்கியச்சிந்தனை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும்  பாவண்ணனின் புகழ் மகுடத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும்வகையில் எழுத்தாளர் சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளையின் சூரிய விருது வாழ்நாள் சாதனைக்காகஇந்த ஆண்டு அவருக்குக் கிடைத்திருக்கிறது.

 

தற்போது பெங்களூரில் வசித்துவரும் பாவண்ணன், விருது பெறுவதற்காக சென்னைக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்து சிலகேள்விகளை முன்வைத்தோம்.

 

கேள்வி: எழுத்தாளன் ஆக வேண்டும் என்று விரும்பித்தான் நீங்கள்   இத்துறைக்கு வந்தீர்களா ?

 

பதில்: தொடர்ச்சியாக எனக்கு அமைந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதலால்பள்ளிப்பருவத்திலிருந்தே எனக்கு வாசிப்பின் மீது ஆர்வமிருந்தது. நாடோடிக்கதைகள், பஞ்சதந்திரக்கதைகள்,புராணக்கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், படக்கதைகள் என தேடித்தேடிப் படித்தேன். எங்கள்வீட்டுக்கு அருகிலேயே இருந்த நூலகம் எனக்கு மிகவும் வசதியாக இருந்தது. பள்ளியிறுதிவகுப்பில் படித்த நேரத்தில் தற்செயலாக நான் கு.அழகிரிசாமியின் சிறுகதைகளையும் ஜெயகாந்தன்சிறுகதைகளையும் படிக்க நேர்ந்தது. அன்றுமுதல் என் ஆர்வம் இலக்கிய உலகத்தை நோக்கித்திரும்பியது. கல்லூரியில் படித்த காலத்தில் தமிழ்ச்சிறுகதைகளையும் இந்தியச்சிறுகதைகளையும்உலகச்சிறுகதைகளையும் தேடித் தேடிப் படித்தேன். அந்த வாசிப்பின் வழியாக எழுத்தின் மீதுஎனக்கு ஈடுபாடு ஏற்பட்டது.

 

எழுதி எழுதி துன்பத்தைக்கடப்பது பற்றி கார்க்கி தன் வாழ்க்கை வரலாற்றில் எழுதிய ஒரு குறிப்பு என்னை மிகவும்கவர்ந்தது. அந்த வரி என் ஆழ்மனத்தில் தங்கிவிட்டது. எனக்குப் பொறியாளர் பணி கிடைத்து,அதற்குரிய பயிற்சியில் இருந்த நேரத்தில் ஓர் இரவில் என் துன்பியல் அனுபவமொன்றை ஒருசிறுகதையாக முதன்முதலாக எழுதினேன். எழுத்து என்பது, துன்பத்தை இல்லாமலாக்கவில்லை, துன்பத்தின்பாரத்தை இல்லாமலாக்குகிறது என்பதை அக்கணத்தில் நேரிடையாக உணர்ந்தேன். இனி எழுத்தே என்வாழ்க்கையின் வழி என்பதை அத்தருணத்தில் தீர்மானித்துக்கொண்டேன். நானே வகுத்துக்கொண்டஅப்பாதையிலேயே இன்றுவரை சென்றுகொண்டே இருக்கிறேன்.

 

கேள்வி: உங்கள் எழுத்துக்கள் முதன்முதலில் அச்சானது எந்தப் பத்திரிகையில் ?

 

பதில்: நான் எழுதிய முதல் சிறுகதையை தீபம் பத்திரிகைக்குத்தான்அனுப்பிவைத்தேன். ஆனால் அது வெளிவரவில்லை. அதையடுத்து ‘பழுது’ என்றொரு சிறுகதையை எழுதிமீண்டும் தீபத்துக்கு அனுப்பிவைத்தேன். 1982ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இதழில் அச்சிறுகதைவெளியானது.

 

கேள்வி: சிறுகதை , கவிதை, நாவல் , கட்டுரை , மொழிபெயர்ப்பு ... இவற்றில் எந்த வடிவம் உங்களுக்கு மிகவும் பிடித்தமானது ?

 

பதில்: அனைத்து வடிவங்களிலும் எனக்கு ஆர்வம் உண்டு. மிகவும்பிடித்தமான ஒரே ஒரு வடிவத்தைக் குறிப்பிட வேண்டுமெனில் நான் சிறுகதையைத்தான் சொல்வேன்.

 

கேள்வி: சிறுகதை நாவல்களுக்கான களங்களை எப்படி கண்டடைகிறீர்கள் ?

 

பதில்: கதைக்கணங்களைக்கண்டடைவது என்பது ஒன்றைப்போல பிறிதொன்றமையாத அரிய நிகழ்வு. அது ஒரு கனவு போல. காத்திருந்துகனவு காணமுடியாது. தற்செயலாக தோன்றி மறையும் தன்மையை உடையது அது. அது தோன்றும் கணத்தில்அதை சட்டெனப் பற்றிக்கொள்ள வேண்டும். அது சிறுகதைக்குரியதா, நாவலுக்குரியதா என்பதைஅக்கணத்தை மீண்டும் மீண்டும் அசைபோடும்போது நமக்கே தெரிந்துவிடும். அக்கணத்துக்குரியபின்னணி, களம், மாந்தர்கள், சிக்கல், உரையாடல் என அனைத்துமே அடுத்தடுத்த காட்சிகளாகநம் மனத்தில் விரிந்தபடி செல்லும். அதைப் பின்பற்றிச் செல்லும் வகையிலே நம் மனத்தைசுதந்திரமாக அனுப்பிவைத்தால் போதும். அது தானாக தன் போக்கில் பயணம் செய்து தன் இலக்கைஅடைந்துவிடும்.  

 

கேள்வி: உங்கள் படைப்புகளில் மிகவும் சிறந்ததாக , நிறைவானதாக நீங்கள் கருதுவது எது ?

 

பதில்: சிறுகதைத்தொகுதிகளில் ஆனந்த நிலையம், நாவல்களில்பாய்மரக்கப்பல், கட்டுரைத்தொகுதிகளில் பன்னீர்ப்பூக்கள் ஆகியவற்றை மிகச்சிறந்த படைப்புகள்வரிசையில் வைக்கலாம். 

 

கேள்வி: யாருக்காக எழுதுகிறீர்கள் ? உங்கள் எழுத்து யாரைப் போய் சேரவேண்டும் என்று விரும்புகிறீர்கள் ?

 

பதில்: எழுத்து என்பது என் விடுதலைக்கான வழி. வாசகர்கள்அனைவரையும் அது சென்று சேரவேண்டும் என்பதுதான் என் விருப்பம். அது தன் போக்கில் பயணம்செய்து அவர்களைக் கண்டடைகிறது என்பதையும் நான் அறிவேன். சமீபத்தில் என் நண்பர் மின்சாரரயிலில் பயணம் செய்தபோது, அவருடைய இருக்கைக்கு எதிரில் இரு பெண்மணிகள் என்னுடைய சிறுகதைகளைமுன்வைத்து நீண்ட நேரம் உரையாடிக்கொண்டே வந்ததைக் காதுகொடுத்துக் கேட்டதாகவும் மாம்பலம்நிலையத்தில் இறங்கவேண்டியிருந்ததால் அவர்களிடம் உரையாடாமலே இறங்கிவிட்டதாகவும் மகிழ்ச்சியோடுதெரிவித்தார். நமக்குத் தெரியாமலேயே அந்த வாசக உலகம் இயங்கியபடி இருக்கிறது.

 

கேள்வி: உங்களுக்கு இதுவரை கிடைத்திருக்கும் அங்கீகாரம்   தொடர்பாகநீங்கள் நிறைவாக உணர்கிறீர்களா?

 

பதில்: எல்லா வகையிலும் நான் நிறைவாகவே உணர்கிறேன். குறையொன்றுமில்லை.

 

கேள்வி: நீங்கள் பெற்ற விருதுகளில் மறக்க முடியாத விருது எது ?

 

பதில்: 1982இல் என்னுடைய முதல் சிறுகதை வெளியானது. அதற்குப்பிறகு எல்லா இலக்கிய இதழ்களிலும் நான் எழுதினேன். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ஆறுமாதங்களுக்கு ஒருமுறை வரக்கூடிய இதழ்களில் கூட என்னுடைய சிறுகதை வெளிவந்துள்ளது.1986இல் கணையாழி இதழில் வெளிவந்த என்னுடைய முள் என்னும் சிறுகதையை அந்த ஆண்டின் மிகச்சிறந்தசிறுகதையாகத் தேர்வு செய்து 1987 ஏப்ரல் மாதத்தில் இலக்கியச்சிந்தனை அமைப்பு எனக்குமுதன்முதலாக விருதளித்தது. இருபத்தொன்பது வயதில் எனக்குக் கிடைத்த அவ்விருது என்னைமேன்மேலும் ஊக்கம் கொண்டவனாக எழுத வைத்தது. அது ஓர் இனிய தொடக்கம். அதை ஒருபோதும் மறக்கமுடியாது.

 

கேள்வி: இன்றையஇலக்கியப் போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

பதில்: உற்சாகம் அளிப்பதாகவே இருக்கிறது. எல்லா இளம் எழுத்தாளர்களின்படைப்புகளையும் படிக்கமுடிவதில்லை என்றபோதும் முக்கியமானவர்களின் படைப்புகளை நான் தவறவிடுவதில்லை.செந்தில் ஜெகந்நாதன், சுஷில்குமார், விஷால்ராஜா, ஜா.தீபா, திருச்செந்தாழை, கமலதேவி,சுரேஷ் ப்ரதீப், விஜய ராவணன், மயிலன் ஜி.சின்னப்பன், ஹேமி கிருஷ் என பலருடைய கதைத்தொகுதிகள்வெளிவந்ததும் வாங்கிப் படித்திருக்கிறேன். ஒவ்வொருவருடைய கதைகூறல் முறையும் புதுமையாகவும்வசீகரமாகவும் உள்ளது. 

 

கேள்வி: அடுத்து நீங்கள் எழுத விரும்பும் படைப்பு எது ?

 

பதில்: இரண்டு நாவல்களைத் தொடங்கி, நிறைவு செய்யாமல் அரைகுறையாகவேபல ஆண்டுகளாக வைத்திருக்கிறேன். அவற்றை நிறைவு செய்யவேண்டும்.

 

கேள்வி: உங்கள் நூல்களில் எந்த நூலுக்கு அதிக பாராட்டுக்கள் கிடைத்தது ?

 

பதில்: பாய்மரக்கப்பல் நாவலும் பன்னீர்ப்பூக்கள் கட்டுரைத்தொகுதியும்நான் மொழிபெயர்த்த பருவம் என்னும் நாவலும் அதிக பாராட்டுகளைப் பெற்றவை.

கேள்வி: சூர்ய விருது கிடைத்திருப்பது குறித்து...

பதில்: மிகவும் மகிழ்ச்சியாகஉணர்கிறேன். இன்றைய இளம் வாசகர்களின் கவனம் என் படைப்புகள் மீது குவிவதற்கு சூரிய விருதுஅறிவிப்பு உதவியிருக்கிறது.

 

கேள்வி: நீங்கள் சொல்ல விரும்புவது ஏதேனும் இருந்தால் ...

 

பதில்: இன்றைய சூழலில் இலக்கிய வாசிப்புப்பழக்கம் என்பதுபெற்றோர் வழியாக, ஆசிரியர் வழியாக, நண்பர்கள் வழியாக அல்லது தற்செயலாக உருவாகும் ஒன்றாகவேஅமைந்துள்ளது. அப்பழக்கத்தைத் தொடர்கிறவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது. இலக்கியவாசிப்பு என்பதை ஒரு கதையைப் படிப்பதாக நாம் சுருக்கிப் பார்க்கக்கூடாது. இலக்கியத்தின்வழியாக வெவ்வேறு நூற்றாண்டுகள் ஊடே வளர்ந்து வந்திருக்கும் வரலாற்றையும் சமூகத்தையும்மானுடப்பண்புகளையும் உளவியலையும் அறிவியலையும் உறவுச்சிக்கல்களையும் நாம் அறிந்துகொள்ளமுடியும். அதை ஓர் அறிவுத்துறையாக கட்டமைத்து, பள்ளிப்பருவத்திலிருந்தே பாடத்திட்டத்தில்ஒன்றாக மாற்றி, அதை கணிதப்பாடத்தைப்போலவும் அறிவியல் பாடத்தைப்போலவும் நாள்தோறும் பயிற்றுவிக்கும்வழிமுறை உருவாகவேண்டும். இளந்தலைமுறையினர் பட்டதாரிகளாக மட்டுமன்றி நல்ல மானுடப்பண்புள்ளவர்களாகவும்உருவாக அம்முயற்சி உதவக்கூடும் என்பது என் நம்பிக்கை.

 

(அமுதசுரபி – நவம்பர் 2025)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2025 18:57

சத்திரம்

  

புதுச்சேரிக்கும்விழுப்புரத்துக்கும் இடையில் ஓடும் எல்லாப் பேருந்துகளும் எங்கள் கிராமமான வளவனூரில்நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டும் இறக்கிவிட்டும் செல்லும். ஆனால் அந்த நிறுத்தத்தின்பெயரை ஒருவரும் வளவனூர் என்று சொல்வதில்லை. வளவனூர் சத்திரம் என்று சொல்வதுதான் வழக்கம்.அந்த அளவுக்கு சத்திரம் என்னும் பெயர் மக்களின் மனத்தில் இன்றளவும் ஆழமாக ஊடுருவி இருக்கிறது.

துரதிருஷ்டவசமாக,பெயர் மட்டும்தான் நிலைத்திருக்கிறதே தவிர, அந்த இடத்தில் நிலைபெற்றிருந்த சத்திரம்இப்போது இல்லை. கடந்த நூற்றாண்டில் தொண்ணூறுகளிலேயே அது மெல்ல மெல்ல மறைந்து கடைத்தொகுப்புகளின்கட்டடமாக மாறிவிட்டது.

நான்அறுபதுகளில் தொடக்கப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அந்தச் சத்திரம் அளித்தபிரமாண்டமான தோற்றம் இன்னும் என் நெஞ்சில் அழியாத சித்திரமாக உள்ளது. அப்போதே அது பழையகட்டடம். சுண்ணாம்புக்காரையால் கட்டப்பட்டது. நடுக்கூடத்தில் மழையும் வெளிச்சமும் தாராளமாகவிழும் வகையில் திறந்தவெளியாக இருந்தது அதன் கட்டுமானம். ஒரு கல்யாணமண்டபத்தைப்போலசுற்றியும் பல அறைகள். வாசலின் இரு புறங்களிலும் இருபது முப்பது பேர் தாராளமாகக் கால்நீட்டிப்படுக்கும் அளவுக்கு கல்திண்ணை இருக்கும். எப்போது தொட்டாலும் அது குளுமையாக இருக்கும்.இருபத்துநான்கு மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள இடம்.

சத்திரத்தின்முன்பக்கத்தில் ஒருபுறம் பெரிய அரசமரமும் நாவல்மரமும் இருந்தன. மறுபுறத்தில் பெரியமகிழமரம். இடைப்பட்ட இடத்தில் வட்டமான பெரிய கிணறு. நானும் பிற சிறுவர்களும் சிறுமிகளும்பள்ளிக்கூடம் போய்விட்டுத் திரும்பியதும் கூடி விளையாடுவதற்குச் செல்லும் இடங்களில்சத்திரமும் ஒன்று. முதலில் நாவல் மரத்தடியில் உதிர்ந்திருக்கும் பழங்களையெல்லாம் ஓடிஓடிச்சேகரிப்போம். பிறகு கிணற்றுத்தண்ணீரில் கழுவிவிட்டு நாக்கு நீலநிறத்தில் மாறும் அளவுக்குச்சப்பிச்சப்பிச் சாப்பிடுவோம். பிறகு மணக்கமணக்க மகிழமரத்தடியில் உதிர்ந்துகிடக்கும்பூக்களைச் சேகரித்துக்கொண்டு வீட்டுக்குச் செல்வோம்.

வளவனூருக்குக்கிழக்கில் மதகடிப்பட்டிலும் மேற்கில் கோலியனூரிலும் ஒவ்வொரு வாரமும் மாட்டுச்சந்தைகூடும். பிற ஊர்களில் வசிக்கும் குடியானவர்கள் மாடு வாங்கிக்கொண்டு நடந்தே தம் ஊர்களுக்குச்செல்வார்கள். வளவனூரைக் கடக்கும்போது பொழுது சாய்ந்துவிடும். அவர்கள் தங்கிச் செல்வதற்குஅந்தச் சத்திரம் பெரிதும் உதவியாக இருந்தது. பேருந்துப்பயணம் தொடங்குவதற்கு முன்புஊர்ப்பயணம் என்றாலே நடைப்பயணமாக அல்லது மாட்டுவண்டிப்பயணமாக அமைந்திருந்த காலத்திலும்அந்தச் சத்திரம் உதவியாக இருந்தது. குளிப்பதற்குக் கிணற்றடி, மாடுகள் ஓய்வெடுக்க மரத்தடி,படுத்துறங்க சத்திரத்துத் திண்ணை என்பதே அந்தக் காலத்தில் போதுமான வசதிகளாக இருந்தன.

தொடக்ககாலத்தில் சத்திரத்தில் தங்க வந்தவர்கள் அனைவருக்கும் எளிமையான அளவில் ஒருவேளை சாப்பாடுஊர்ப்பொதுச்செலவில் வழங்கப்பட்டுவந்தது. வாய்க்கு ருசியாகச் சாப்பிட சத்திரத்துக்குஅருகிலேயே கிராமணி ஓட்டலும் ரெட்டியார் ஓட்டலும் உடையார் ஓட்டலும் சத்திரத்துக்கு உள்ளேயேபிராமணாள் காப்பிக்கடையும் இயங்கத் தொடங்கியதும் பொது உணவு விநியோகம் வழக்கொழிந்துவிட்டது.வழிப்போக்கர்களுக்காக உருவான உணவகங்களில், ருசிக்கு மயங்கிய ஊர்க்காரர்களும் வேளை தவறாமல்வந்து சாப்பிடத் தொடங்கியதும் சத்திரம் பகுதி மக்கள் நெரிசல் மிக்க இடமாக மாறியது.’உனக்கென்னப்பா, ஓட்டல்ல சாப்பாடு, சத்திரத்தில தூக்கம்’ என்பது ஒருவரைக் கிண்டல் செய்யும்  பழமொழியானது.

எங்கள்வீட்டில் யாருக்கும் தேநீர் அருந்தும் பழக்கம் கிடையாது. ஆனால் ஏதேனும் ஒரு நேரத்தில்விருந்தினர் வந்துவிட்டால், அவர்களுக்குத் தேநீர் கொடுத்து உபசரிக்கும் பழக்கம் மட்டுமுண்டு.அப்போது ஒரு தேநீர் பத்து பைசா. ஒரு வெண்கலச் செம்பையும் சில்லறையையும் என்னிடம் கொடுத்து”வேகமா போய் கிராமணிக்கடையில டீ வாங்கிட்டு வா” என்று சொல்லி அனுப்புவார் என் அம்மா.ஏதோ மோட்டார் வண்டியே என் கைக்குக் கிடைத்துவிட்டது போன்ற கனவில் மிதந்தபடி ப்ரூம்ப்ரூம் என வாயாலேயே ஹார்ன் சத்தம் எழுப்பிக்கொண்டே ஓடுவேன்.

கடைக்குமுன்னால்தான் என் வண்டி நிற்கும். பாய்லர் முன்னால் நின்று டீ போடும் அண்ணனிடம் சில்லறையையும்செம்பையும் கொடுப்பேன். வெந்நீர் விட்டு அவரே செம்பைக் கழுவி ஊற்றிவிட்டு சுடச்சுடடீ நிரப்பிக் கொடுப்பார். ஒரு சின்ன மந்தாரை இலையால் அந்தச் செம்பை மூடி “பத்திரமாபுடிச்சிகிட்டு போடா. சூட்டுல கீழ விட்டுடாத” என்று சொல்லிக்கொண்டே என்னிடம் கொடுப்பார். 

சத்திரத்துக்குஅருகில் திரெளபதி அம்மன் கோவில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் நெருப்புத்திருவிழா நடக்கும். கோவில் திடலில் அமர்ந்து ஒரு பெரியவர் பாரதம் படிப்பார். ஊர் மக்கள்அனைவரும் கூடி அமர்ந்து கேட்பார்கள். திருவிழா இல்லாத நாட்களில் பொதுக்கூட்டங்கள் நடக்கும்.திருவிழாவுக்கு அக்கம்பக்கத்தில் உள்ள பாளையங்களிலிருந்து வந்தவர்கள் அனைவரும் சத்திரத்தில்தூங்குவார்கள்.

ஒருநாள்காலையில் ஊரிலிருந்து வந்திருந்த எங்கள் தாத்தாவுக்காக நான் கிராமணி கடைக்கு டீ வாங்கிவரச்சென்றிருந்தபோது சத்திரத்துக்கு முன்னால் கிணற்றைச் சுற்றி ஏராளமான கூட்டம் நின்றிருந்ததைப்பார்த்தேன். அருகில் சென்று பார்க்க ஆவலாக இருந்தாலும், என்னால் அந்தக் கூட்டத்தை ஊடுருவிச்செல்லமுடியவில்லை.

“யாரோநரையூருகாரப் பொண்ணு. ஏதோ புருஷன் பொண்டாட்டி சண்டையாம். ரோஷக்காரப்பொண்ணு நான் எங்கஅம்மா வீட்டுக்குப் போறேன்னு நடுராத்திரியிலயே வீட்டைவிட்டுக் கெளம்பிவந்து இந்தக்கிணத்துல குதிச்சிட்டா”

கடையைஒட்டி நின்றிருந்தவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டேன். எனக்கு உடம்பே நடுங்கியது. டீ நிறைத்தசெம்போடு திரும்பும் சமயத்தில் கயிறு கட்டி மேலே தூக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உடலைப்பார்த்தேன். என் நடுக்கம் கூடுதலாகிவிட்டது. திரும்பிக்கூடப் பார்க்காமல் வேகவேகமாகவீட்டுக்கு வந்துவிட்டேன்.

அந்தநிகழ்ச்சிக்குப் பிறகு மாலை வேளைகளில் சத்திரத்துக்குச் செல்ல வீட்டில் தடை விதித்துவிட்டார்என் அம்மா. அதுவரை நீரெடுப்பதற்காகப் பயன்பட்டு வந்த கிணற்றை ஒரே நாளில் எல்லோரும்ஒதுக்கிவிட்டனர். தற்கொலைக்காக இன்னொருவர் முயற்சி செய்துவிடாதபடி, இரும்புக்கம்பிகளால்ஆன ஒரு பெரிய வட்டமான மூடியைச் செய்து உடனடியாகக் கிணற்றை மூடினர். இறந்துபோன பெண்பேயாக கிணற்றைச் சுற்றி இரவெல்லாம் அலைகிறாள் என்று மீண்டும் மீண்டும் பரவிய செய்திஅனைவரையும் கலவரத்தில் ஆழ்த்தியதால் சில மாத இடைவெளியில் கிணறு இடித்து மூடப்பட்டது.

சத்திரத்தில்தங்குபவர்கள் எண்ணிக்கையும் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது. மாடுகள் வரத்து நின்றது.ஒரு பெரிய புயல் வீசியபோது மரங்கள் விழுந்து அந்த இடமே வெட்டவெளியாகி சைக்கிள் ஸ்டான்டாகமாறியது. கொஞ்சம்கொஞ்சமாக  பகல் நேரங்களில்மட்டும் இயங்கக்கூடிய இடமாக சத்திரம் சுருங்கியது.

பள்ளிப்பருவத்தில் நான் பார்த்த சத்திரம் ஒரு பெரிய பூந்தோட்டம் மாதிரியான இடம். ஒரு பட்டதாரியாகிவேலை கிடைத்து ஊரைவிட்டுப் புறப்படும்போது அது சிதைந்த கூடாக உருமாறியது. அடுத்து சிலஆண்டுகளிலேயே தரைமட்டமாகிவிட்டது.

கடந்தமாதம் ஒரு திருமணத்துக்காக ஊருக்குச் சென்றிருந்தேன். பேருந்து ஊரை நெருங்கியதும்  “சத்திரம்லாம் எறங்குங்க” என்று நடத்துநர் அறிவித்தார்.வண்டியைவிட்டு இறங்கியபோது, அங்கு இல்லாத  சத்திரத்தின்சித்திரம் ஒரு கணம் என் நினைவில் எழுந்து மறைந்தது.  

 

(அமுதசுரபி– தீபாவளி மலர் –அக்டோபர் 2025)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2025 18:52

சு.வேணுகோபால் : ஒளியும் இருளும்

 

எழுத்தாளர்கி.ராஜநாராயணன் நம்மிடையே வாழ்ந்து மறைந்த பன்முக ஆளுமை. கரிசல் காட்டு வாழ்க்கைக்குஓர் இலக்கிய முகத்தை அளித்தவர் அவர். கரிசல் மண்ணையும் அங்கு வாழ்ந்த மனிதர்களின் நம்பிக்கைகளையும்வாழ்க்கைப்போக்குகளையும் முன்வைத்து எண்ணற்ற சிறுகதைகளைப் படைத்தவர். முன்னொரு காலத்தில்தெலுங்கு பேசும் பிரதேசத்திலிருந்து வெளியேறி கரிசல் காட்டில் குடியேறி, நிலம் திருத்திஒரு சமூகமாக நிலைகொண்டு வாழத்தொடங்கிய ஒரு காலட்டத்தை கோபல்ல கிராமம் என்னும் நாவலாகஎழுதி ஒரு முக்கியமான வகைமைக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தவர்.

கரிசல்வட்டாரத்தில் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் எண்ணற்ற சொற்களைத் தொகுத்து கரிசல்வட்டார வழக்கு அகராதியை முதன்முதலாக அவரே உருவாக்கினார். அந்த அகராதி, தமிழகத்தின்பிற பகுதிகளில் வழங்கப்படும் வட்டாரவழக்குச் சொற்கள் தொகுக்கப்படுவதற்கு ஒரு தூண்டுதலாகஅமைந்தது. மேலும் குடியானவர்கள் தமக்குள் பேசிப்பேசி வாய்வழக்காகவே வழங்கிவந்த  எண்ணற்ற கதைகளைச் சேகரித்து அற்புதமானதொரு நாட்டுப்புறக்கதைக்களஞ்சியத்தைஅவர்  உருவாக்கினார். தன்னுடைய காலத்தில் வாழ்ந்தஎல்லா முக்கியமான ஆளுமைகளோடும் அவர் நெருங்கிப் பழகியவர். அவர்கள் அனைவரோடும் கடிதத்தொடர்பிலும் அவர் இருந்திருக்கிறார். அவர்கள் ஒருவருக்கொருவர் எழுதிக்கொண்ட கடிதங்களில்கூட இலக்கியச்சுவை மிளிர்கிறது. ’அன்புள்ள கி.ரா.வுக்கு’ என்ற தலைப்பில் அவருக்கு வந்தகடிதங்கள் தொகுக்கப்பட்டு நூல்வடிவம் பெற்றுள்ளது.

புதுச்சேரிபல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் புதுவை வட்டாரத்தைஒட்டிய பகுதிகளில் நிலவும் நாட்டுப்புறக்கதைகளையும் பாடல்களையும் தொகுப்பதற்கு கி.ரா.ஒரு முக்கியமான தூண்டுகோலாக இருந்தார். 17.05.2021 அன்று அவர் இம்மண்ணுலகைவிட்டு மறைந்தார்.

அவருடையநினைவைப் போற்றும் விதமாக அவரைப் போலவே தமிழிலக்கியத்துக்கு பல தளங்களில் தொடர்ச்சியாகபங்காற்றிவரும் எழுத்தாளர்களில் ஒருவரை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுத்து கி.ராஜநாராயணன்பெயரில் ஒரு விருது வழங்கும் விதமாக கோவையைச் சேர்ந்த விஜயா வாசகர் வட்டம் ஒரு முயற்சியைமுன்னெடுத்தது. விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்படும் எழுத்தாளருக்கு சக்தி மசாலாநிறுவனத்தின் உதவியோடு ஐந்து லட்ச ரூபாய் விருது வழங்கி கெளரவித்தது. இதுவரை எழுத்தாளர்கள்கண்மணி குணசேகரன், கோணங்கி,  அ.முத்துலிங்கம்,எஸ்.வி.ராஜதுரை, நாஞ்சில் நாடன் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்குரிய விருதாளராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் சு.வேணுகோபால்.

எழுத்தாளர்சுஜாதா, குமுதம் இதழோடு தொடர்புகொண்டிருந்த 1994-95 காலகட்டத்தில் ஒரு நாவல் போட்டியின்அறிவிப்பு வெளியானது. அப்போட்டியில் ‘நுண்வெளி கிரகணங்கள்’ என்னும் நாவல் முதல் பரிசைப்பெற்றது. விருதாளருக்கு ஏர் இந்தியா நிறுவனத்தோடு இணைந்து குமுதம் ஓர் அமெரிக்கப்பயணத்துக்கானபயணச்சீட்டை அளித்தது. தன் முதல் எழுத்தாக்கம் வழியாக வாசகர்களின் கவனத்தை ஈர்த்துவெற்றி பெற்ற அந்த  எழுத்தாளர் சு.வேணுகோபால்.அந்த நாவல் முயற்சியைத் தொடர்ந்து கடந்த முப்பதாண்டுகளில் பல்வேறு சிறப்பான படைப்புகளைஅவர் நம் தமிழுலகத்துக்குத் தொடர்ந்து அளித்து வருகிறார். எண்ணற்ற சிறுகதைகளும் விமர்சனக்கட்டுரைகளும்குறுநாவல்களும் அவருடைய முக்கியமான பங்களிப்பாகத் திகழ்கின்றன.

வேணுகோபாலின்தொடக்கம் நாவல் களத்தில் நிகழ்ந்தபோதும் அவருடைய ஆர்வம் சிறுகதை, நெடுங்கதை, குறுநாவல்,விமர்சனம் என பல கிளைகளாக விரிந்து சென்றன. ஒரு விவசாயியாகவும் ஆசிரியராகவும் மாறிமாறி வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் அவருடைய படைப்புகளுக்கு வற்றாத ஊற்றுக்கண்களாக அமைந்துள்ளன.அவருடைய சிறுகதைகள் மேல்தோற்றத்துக்கு ஒருவருடைய வாழ்வின் அன்றாடக் காட்சியைப்போலக்காட்சியளித்தாலும் அவையனைத்தும் ‘மனிதன் ஏன் இப்படி புரிந்துகொள்ளமுடியாத புதிராக இருக்கிறான்’என்று நினைத்துத் திகைக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. மண்ணை நோக்கி இறங்கும் ஒவ்வொருகடப்பாறைக் குத்தும் கொஞ்சம் கொஞ்சமாக ஆழத்தை நோக்கிச் செல்வதுபோல, வேணுகோபால் காட்சிப்படுத்தும்ஒவ்வொரு புதிர்த்தருணமும் மானுட ஆழத்தை நோக்கியே செல்கின்றன. அந்த ஆழத்தில் அடங்கியிருக்கும்இருளையும் ஒளியையும் வாசகர்களாகிய நாமும் பார்க்கவும் உணரவும் துணைசெய்கின்றன.

’பூமிக்குள்ஓடுகிறது நதி’ என்பது அவருடைய தொடக்கக்காலக் கதைகளில் ஒன்று. அவருடைய செல்திசையை அடையாளப்படுத்தும்விதமாக அக்கதை அமைந்திருப்பதை இப்போது உணரமுடிகிறது. இக்கதையில் இரு வெவ்வேறு காட்சிகள்அழகாக இணைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சாதி சங்கத்தின் கட்டிடத்திலிருந்து கதை தொடங்குகிறது.ஏதோ ஓர் அயலூரில் நடைபெற்ற சாதிக்கலவரத்தை அமைதியாக இருக்கும் அந்த ஊர் வரைக்கும் இழுத்துக்கொண்டுவந்து பற்றவைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். எதிர்விளைவுகளைப்பற்றி எண்ணிப் பார்க்கமனமில்லாத துடுக்கான இளைஞர்கள் தம்மால் முடிந்த அளவுக்குப் பதிலடி கொடுக்கவேண்டும்என்று துடிக்கின்றனர். சமரசத்தை நாடும் மனம் கொண்ட விருமாண்டி என்னும் நடுவயதுக்காரரைஏளனம் செய்து சிரிக்கின்றனர். அதனால் தொடர்ந்து அக்கூட்டத்தில் இருக்க விரும்பாத அவர்சங்கடத்துடன் வெளியேறிவிடுகிறார். மனிதர்கள் ஏன் இப்படி மாறிவிட்டார்கள் என அசைபோட்டபடிநடக்கிறார். இது ஒரு தளம்.

விருமாண்டியின்பேரக்குழந்தைக்கு தொட்டில் சடங்கு செய்யவேண்டும். அதற்காக மகள் பிறந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள்.தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்தான் அந்தச் சடங்கைச் செய்யவேண்டும். சாதிக்கலவரம்எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என ஊரே நடுங்கிக்கொண்டிருக்கிற தருணம் அது. ஒருவர்புழங்கும் தெருவிலோ வீட்டிலோ, இன்னொருவர் எளிதாக வந்து படியேறிவிட முடியாதபடி சூழல்மோசமாகிவிட்ட நேரம். எல்லா எதிர்ப்புகளையும் மீறி தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பிலிருந்துசுப்பம்மா இருளடர்ந்த நேரத்தில் அவருடைய வீட்டுக்கு வருகிறாள். குழந்தைக்குச் செய்யவேண்டியதொட்டில் சடங்கைச் செய்துமுடிக்கிறாள். அதற்குரிய பணத்தைக் கூட அவள் வாங்கிக்கொள்வதில்லை.“நல்ல பொழுதா விடிஞ்சா ஒரு பாலாடை பாலூத்த காலையில வரேன்” என்று சொல்லிவிட்டு பின்வாசல்வழியாகவே வெளியேறிவிடுகிறாள்.

ஒரு புறம்அர்த்தமற்ற மூர்க்கம். இன்னொருபுறம் கட்டற்ற அன்பு. எவ்விதமான மனச்சாய்வும் இல்லாமல்இருட்டையும் வெளிச்சத்தையும் ஒருசேரக் காட்சிப்படுத்திவிட்டு நிறைவடைகிறது வேணுகோபாலின்சிறுகதை. அதுதான் அவருடைய வலிமை.

‘ஒருதுளி துயரம்’ என்றொரு சிறுகதை. இக்கதையிலும் இரு வெவ்வேறு தளங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.ஆனால் அவை வேறுவேறானவை என உணரமுடியாதபடி அழகாக இணைக்கப்பட்டிருக்கின்றன. சூம்பிப் போனஒரு காலுடன் ஓர் இளம்பெண். ஆசிரியைக்கான பயிற்சியை முடித்துவிட்டு வேலைக்காகக் காத்திருப்பவள்.பலர் பல இடங்களிலிருந்து வந்து பெண் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். ஆனால் அவளுடையகால் ஊனம் அவளுடைய திருமணத்துக்குப் பெருந்தடையாக உள்ளது. அந்த நேரத்தில் அவளைப் பெண்பார்க்க வந்த ஒருவன் அவளைத் திருமணம் செய்துகொள்கிறான். ஊனத்தைப் பார்த்ததும் பிறர்போல முகம் சுருங்கிக் கசப்பைக் காட்டாமல் மலர்ந்த முகத்துடன் புன்னகை செய்கிறான். வாழ்நாளிலேயேஅவளைப் பார்த்து நிகழ்ந்த முதல் புன்னகை அது. அதுவே அவன் மீது அவளுக்கும் ஈர்ப்பு உருவாகக்காரணமாக அமைந்துவிடுகிறது. அவனும் அவளை விரும்பித் திருமணம் செய்துகொள்கிறான்.

வட்டிக்குக்கடன் கொடுத்து வாங்கும் தொழில் புரிபவன் அவனுக்கு உயிர்நண்பனாக இருக்கிறான். திருமணவேலைகளில் அவனுக்குப் பல வேலைகளில் ஒத்தாசையாக இருக்கிறான். மேடையில் மணமக்களுக்குஅருகிலேயே நின்று, அன்பளிப்பு உறைகளை அவன்தான் சேகரிக்கிறான். அடுத்தநாள் வந்து கணக்குசொல்வதாகத் தெரிவித்துவிட்டு தன் வீட்டுக்குச் சென்றுவிடுகிறான்.

முதல்இரவின்போது சூம்பிப் போன கால் மீது அவன் முத்தமிட்டு அவள் மீது தான் கொண்ட காதலை உணர்த்துகிறான்.அந்த முத்தம் அவன் மீது ஒரு நம்பிக்கையை அவளிடம் உருவாக்குகிறது.

அடுத்தநாள்பொழுது அவனுக்கு நல்ல பொழுதாக விடியவில்லை. அவன் தரவேண்டிய எண்பதாயிரம் ரூபாய் கடன்பாக்கிக்காக, வரிசைப்பணமாக வந்த எழுபதாயிரத்தை எடுத்துக்கொண்டதாக அவனுடைய வட்டிக்கடைநண்பன் அனுப்பிய தகவல் மட்டுமே அவனைத் தேடி வருகிறது. முதல் இரவு முடிந்த மகிழ்ச்சியோடுஎழுந்து வந்தவன்  அத்தகவலைப் பார்த்து மனம்உடைந்துவிடுகிறான். உயிருக்குயிரான நண்பன் இப்படிச் செய்துவிட்டானே என தவிக்கிறான்.அவனைச் சந்திப்பதற்காக நேரில் செல்கிறான்.

அந்தச்சந்திப்பினால் பெரிய பயனெதுவும் விளையவில்லை. அவர்களுக்கிடையில் நிகழ்ந்த உரையாடல்அவனை மேன்மேலும் வேதனையில் மூழ்கவைக்கிறது. கல்யாணத்துக்கென வாங்கிய பிற கடன்களை எப்படிஅடைப்பது என்று புரியாமல் தவிக்கிறான். முதலிரவின் போது நகை வாங்கிக் கொடுப்பதாக புதுமனைவிக்குஅளித்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்று புரியாமல் மனத்துக்குள் குமைகிறான்.சூழலை எதிர்கொள்ளத் தேவையான துணிச்சலின்றி தற்கொலை செய்துகொள்கிறான்.

ஆனந்தமாகத்தொடங்கிய மணவாழ்க்கை இப்படி குலைந்துபோனதை நினைத்து துயரத்தில் மூழ்குகிறாள் அவன் மனைவி.இறந்துபோன கணவன் தரவேண்டிய பாக்கிப்பணம் பத்தாயிரம் ரூபாயை ஆறுமாத இடைவெளியில் எப்படியோதிரட்டி எடுத்துச் சென்று நண்பன்  வேடத்தில்இருந்த வட்டிக்காரனிடம் கொடுக்கிறாள். அவள் மனம் அப்போதுதான் அடங்கி அமைதி கொள்கிறது.ஆனால் பணத்தைப் பெற்றதும் அவன் உயிர்துறந்த நண்பனை நினைத்துக் கண்ணீர் சிந்துவான் எனஅவள் நினைத்துவைத்திருந்த காட்சியைப்போல எதுவும் நிகழவில்லை. அது அவளைச் சற்றே ஏமாற்றத்துக்குஆளாக்குகிறது.

அமைதியும்ஏமாற்றமும் ஒருங்கே படிந்த மனத்துடன் அவள் வீடு திரும்புகிறாள்.  ஆனால் அதைப் புரிந்துகொள்ள முடியாத அவளுடைய அப்பாஅவள் உயிரோடு இருப்பதே வீண் என நினைத்து செத்துப்போ என   வசைமழையைப் பொழிகிறார். இந்தக் கதையிலும் ஒரு புறம்தந்திரமும் துரோகமும். இன்னொருபுறம் கட்டற்ற அன்பும் காதலும். இரண்டில் எது சரி, எதுதவறு என்ற எவ்விதமான விவாதத்திலும் வேணுகோபால் இறங்கவில்லை. அக்காட்சிகளை நம் முன்சித்தரிப்பதை மட்டுமே தன் பணியெனக் கொண்டவர் போல, அப்புள்ளியிலேயே நின்றுவிடுகிறார்.

’களவுபோகும் புரவிகள்’ தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ‘சப்பைக்கட்டு’ ஒரு முக்கியமான சிறுகதை.உலக வாழ்க்கையில் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பவனாக வலம் வருகிறான் ஒருவன். ஆனால்தன் மனைவியிடமும் நெருக்கமான தோழியிடமும் மிகவும் மோசமான வகையில் நடந்துகொள்கிறான்.இப்படி எது நடிப்பு என்பதே தெரியாமல் வாழ்ந்து வாழ்ந்து சொந்தமான முகமோ, குரலோ அற்றவர்களாகமறைபவர்களே இவ்வுலகில் நிறைந்திருக்கின்றனர். ‘வட்டத்திற்குள்ளே’ இன்னொரு முக்கியமானசிறுகதை. இல்லறவாழ்க்கையைப்பற்றிய விவரிப்பில் ‘காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவுப்பட்டதேஇன்பம்’ என்பது ஒளவையின் பாடல் வரி.  ஆனால்எதார்த்த வாழ்வில் பலருடைய குடும்ப வாழ்க்கை அப்படி அமைவதில்லை. பெரும்பாலும் எதிர்பார்ப்பில்தொடங்கி ஏமாற்றத்தில் முடிவடைவதாகவும் அல்லது ஒருவரை ஒருவர் வஞ்சிப்பதாகவும் அல்லதுஒருவரை இன்னொருவர் அடிமைப்படுத்தி ஆட்சி செய்ய நினைப்பதாகவும் அமைந்துவிடுகின்றன.  இவ்விதமாக நிலைகுலைந்துபோன ஒரு தம்பதியினரின் வாழ்க்கையை’வட்டத்திற்குள்ளே’ கதையில் சித்தரித்துக் காட்டுகிறார் வேணுகோபால்.

ஒரு  கணவன் குடும்பப்பொறுப்பைக் காரணமாகக் காட்டி முதலில்தன் மனைவியின் கனவுகளைக் கலைக்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் உள்ள படைப்பாற்றலையேஅழிக்கிறான். ஒவ்வொரு நாளையும் அமைதியற்றதாக நிலைகுலைய வைக்கிறான். கடைசியில் தன் விருப்பம்வெல்லவேண்டும் என்கிற மூர்க்கத்துடன் அவள் வயிற்றில் வளரும் கருவையே கலைக்கவைக்கிறான்.மனிதன் ஏன் இத்தனை வன்மம் நிறைந்தவனாக இருக்கிறான் என்பது புரியாத புதிர். 

’திசையெல்லாம்நெருஞ்சி’ கதையில் மனிதர்களிடம் வெளிப்படும் இருவித அணுகுமுறைகளை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்வேணுகோபால். எதிர்பாராமல் நடைபெற்ற நிகழ்ச்சியின் காரணமாக சகஜமான ஒன்றாக இருந்த அணுகுமுறைதிடீரென மாறிவிடுகிறது.  கிராமத்தில்  அனைவருக்கும் முடி திருத்தும் தொழிலைச் செய்பவன்பழநி. அதற்கும் அப்பால், கிராமத்தில் வசிக்கும் அனைவரும் சொல்லும் குற்றேவல்களையும்அவன் எவ்விதமான தயக்கமும் இன்றி செய்கிறான். அவர்களும் அவ்வப்போது  பதிலுக்கு காய்கறிகளென்றும் அரிசி, பருப்பு, புளிஎன்றும் கொடுத்திருக்கிறார்கள்.

எல்லாம்நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஒருநாள் அவனுக்கும் கிராமத்தைச் சேர்ந்த இன்னொருவனுக்கும்மோதல் வலுத்துவிடுகிறது. ஒரு வேகத்தில் அவன் கிராமத்தானை அடித்துவிடுகிறான். உடனே ஊரில்வசிக்கும் பலரும் அவனுக்கு எதிராகத் திரண்டு, சாதியைக் காரணமாகக் காட்டி, ‘ஒரு சம்சாரியைஇவன் எப்படி கைநீட்டி அடிக்கமுடியும்?’ என்று வசைபாடி பழநியின் குடும்பத்தை ஒதுக்கிவைக்கிறது.

அந்தநேரத்தில் எதிர்பாராத விதமாக அவனுடைய மகனுக்கு அம்மை போட்டுவிடுகிறது. வைத்தியர் அவனைவாழை இலை மீது படுக்கவைக்கும்படி சொல்லிவிட்டுச் செல்கிறான்.  ஆனால் ஊரில் வசிப்பவர்கள் ஒருவரும் அவனுக்கு வாழைஇலை கொடுப்பதில்லை. எல்லோருடைய வீடுகளிலும் வாழை மரங்கள் இருந்தபோதும், அவனுக்கு ஓர்இலையை அறுத்துக் கொடுக்க யாரும் தயாராக இல்லை. அந்த அளவுக்கு சாதிப்பற்று அவர்கள் விழிகளைமூடிவிடுகிறது. முதலில் திகைக்கிறான் அவன். பிறகு தவிக்கிறான். கழிவிரக்கத்தால் வேதனைகொள்கிறான். இறுதியில் அவனுடைய விழியும் மூடிவிடுகிறது. ஊரைவிட்டு வெளியேற முடிவெடுக்கும்அவன் புறப்படும் முன்பு ஊரைச் சுற்றியிருக்கும் நெருஞ்சிக்காட்டுக்குத் தீமூட்டிவிட்டுச்செல்கிறான். நெஞ்சம் ஈரம் அற்று உலர்ந்து போகும்போது நெருப்பு எளிதாகப் பற்றிக்கொள்கிறது. 

வேணுகோபாலின்மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்று ’புத்துயிர்ப்பு’. மழையின்மையின் காரணமாக ஊரே வறண்டுபோய்இருக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் கூட எங்குமில்லை. பிள்ளைத்தாய்ச்சியான மனைவியையும்கன்றீனும் நிலையில் உள்ள பசுவையும் வைத்துக்கொண்டு பிழைத்திருக்க வழியில்லாமல் தடுமாறுகிறான்ஒரு விவசாயி. மாடு வளர்த்த விவசாயிகள் அனைவரும் மாடுகளுக்குத் தீவனம் கொடுக்கமுடியாதநிலையில் வந்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள். ஆனால் கன்று போட்ட பிறகு பசு பால் கொடுக்கத்தொடங்கிவிடும், அந்தப் பாலை விற்பனை செய்து வருமானத்துக்கு வழி பார்க்கலாம் என நினைக்கிறான்அவன். அதனால் ஊர்க்காரர்கள் போல பசுவை விற்காமல் படாத பாடு பட்டு அதற்கு எங்கெங்கோஅலைந்து திரிந்து தீவனம் கொண்டுவந்து போடுகிறான். குறிப்பிட்ட ஒரு நாளில் அவனுக்குபசுவுக்குக் கொடுக்க புல்லோ வைக்கோலோ எங்கும் கிடைக்கவில்லை. வெறும் கையோடு திரும்பமனமில்லாமல் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு கவுண்டர் வீட்டுத் தோட்டத்தில்இருந்த வைக்கோல் போரில் திருடச் செல்கிறான். துரதிருஷ்டவசமாக பிடிபட்டு உதைபடுகிறான்.அந்த அவமானத்தில் அவன் தற்கொலை செய்துகொள்கிறான்.

அதே நேரத்தில்அவன் மனைவி ஒரு பெண்குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். பிறந்த குழந்தையின் மீது வெயில்படும்படி காட்டுகிறாள் ஒருத்தி. அது ஒரு சடங்கு. மனக்கசப்போடு சூரியனின் திசையில் பார்த்து“கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் மேலே போகிற சூரியனே, இந்தா இந்தக் குழந்தையைப் பாரு”என்று சொல்கிறாள்.  கையையும் காலையும் அசைக்கும்குழந்தையின் முகத்தில் சிரிப்பு படர்கிறது. கடவுளைப் பார்த்து கேலியுடன் சிரிக்கும்குழந்தையின் சிரிப்பு என்று அச்சிரிப்பைக் குறிப்பிடுகிறார் வேணுகோபால்.

வறட்சியின்சித்திரத்தை வேணுகோபாலின் ’உயிர்ச்சுனை’ என்னும் சிறுகதையிலும் நாம் பார்க்கமுடியும்.வயலையொட்டிய பாசனக்கிணற்றின் நீர்மட்டம் மிகமிகக் கிழே இறங்கிவிட்டது. கொஞ்சம் செலவுசெய்து கிணற்றை ஆழப்படுத்திவிட்டால் தண்ணீர் கிடைக்கும் என நம்புகிறான் விவசாயி. ஆனால்அவனிடம் பணம் இல்லை. புகுந்த வீட்டுக்குச் சென்றுவிட்ட மகளிடம் கடன் வாங்கிவந்து வேலையைத்தொடங்குகிறான். துரதிருஷ்டவசமாக அந்த முயற்சி ஏமாற்றத்தில் முடிந்துவிடுகிறது. பணம்கொடுத்த மகள் வாய்க்கு வந்தபடி பேசுகிறாள். அவனால் தன் மனச்சுமையை யாரிடமும் பகிர்ந்துகொள்ளமுடியவில்லை.

அந்தவயற்காட்டில் வேடிக்கை பார்க்கவந்த சிறுவயது பேரன் கதையின் ஆரம்பத்திலிருந்து இடம்பெறுகிறான்.கிணற்று வேலை ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும்போது, இன்னொரு பக்கம் அவன் விளையாடுகிறான்.அந்த விளையாட்டில் அவனுக்குக் காயம் ஏற்பட்டுவிடுகிறது. அவனுக்கு வலிக்கிறது. அழுகைவருகிறது. தன் வேதனையைச் சொல்லிப் பகிர்ந்துகொள்ள அவன் ஒவ்வொருவராக நாடிச் செல்கிறான்.இனிமேல் கிணற்றில் தண்ணீர் வர வாய்ப்பில்லை என்பது திட்டவட்டமாகத் தெரிந்த கணம் அது.ஒவ்வொருவரும் அவரவர் துயரத்தில் மூழ்கியிருக்கும்போது அச்சிறுவனின் துயரக்கதையைச் செவிமடுக்கஒருவரும் இல்லாமல் போகிறார்கள். ஒருபுறம் மனச்சுமையைப் பகிர்ந்துகொள்ள ஒருவருமில்லைஎன்பதை உணர்ந்து நாய்க்குட்டியிடம் பேசிவிட்டு வெளியேறும் சிறுவன். இன்னொருபுறம் தன்மனச்சுமையைப் பகிர்ந்துகொள்ள ஒருவருமில்லை என்பதை உணர்ந்து சூரியனிடம் பேசிவிட்டுத்திரும்பும் பெரியவர். மனிதர்கள் மீது இயற்கை பரிவு காட்டாத சூழலில் மனிதர்களும் பரிவற்றவர்களாகமாறிவிடுகிறார்கள்.

வேணுகோபாலின்சிறுகதைகளில் தொடர்ச்சியாக பலவகையான மனிதர்கள் வெளிப்படுவதை நாம் பார்க்கமுடிகிறது.ஒரு கோணத்தில் ஏராளமான வகைமாதிரிகளை அவர் இச்சமூகத்திலிருந்து கண்டெடுத்து தம் கதைகளில்பாத்திரங்களாக அமைத்திருக்கிறார் என்று சொல்லலாம். ஒரு கதையில் அண்ணன் என வாய்நிறையஅழைத்து உரையாடுகிற பக்கத்துவீட்டு இளம்பெண்ணை, தம் வேட்கைக்கு உணவாக அழைக்க ஒவ்வொருகணமும் திட்டமிட்டு, மனத்துக்குள்ளேயே அதற்கு ஒத்திகை பார்க்கிறான் ஒருவன்.  இன்னொரு கதையில் தங்கைகளை ஒவ்வொருவராக கரையேற்றுவதைதன் கடமையெனக் கொண்டு செயல்படும் ஒருவன், இரவு நேரத்தில் தன் பாலுணர்வுக்கு வடிகாலாகதன் சகோதரியைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறான். மற்றொரு சிறுகதையில் தன் இயலாமையைமதுவின் வழியாக மறைத்துக்கொண்டு வேலையற்றவனாகவும் யாருக்கும் பிடிக்காதவனாகவும் கணவன்திரிந்தலையும் சூழலில் தன் மீது சுமத்தப்பட்ட மலட்டுப்பட்டத்தைப் பொய்யாக்குவதற்குமாமனாரை நெருங்கிச் செல்கிறாள் ஒருத்தி. மனப்பிறழ்வின் காரணமாக யாரோலோ கருவுற்று, குழந்தையையும்பெற்றுவிட்டு, அக்குழந்தையை யாரையும் தொடவிடாமலும் குழந்தையின் பசியைத் தீர்க்கத் தெரியாமலும்குழந்தை இறந்துவிட்டது என்னும் உண்மையைக் கூட உணரமுடியாமல் இறந்த குழந்தையுடன் திரிந்தலைகிறாள்இன்னொருத்தி. இப்படி நாம்  அடுக்கிக்கொண்டேசெல்லலாம்.

சுடர்விட்டபடிஇருக்கும் வானத்துச் சந்திரனை திடீரென எங்கிருந்தோ வந்த இருள் மெல்ல மெல்ல ஆக்கிரமித்துதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த ஆக்கிரமிப்பிலிருந்துஎப்படியோ சந்திரன் தன்னை விடுவித்துக்கொண்டு மீண்டும் வானத்தில் காட்சியளிக்கத் தொடங்குகிறது.அதைத்தான் நாம் சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம். சந்திரனுக்கு ஏற்பட்ட நிலை சூரியனுக்குஏற்படும் போது அது சூரிய கிரகணமாகிறது. நம் புறக்கண்களால் இவற்றை நம்மால் நேரிடையாகப்பார்க்கவும் முடிகிறது.

இதைப்போன்றகிரகணங்கள் நம் அகத்திலும் சிற்சில நேரங்களில் நிகழக்கூடும். எங்கிருந்தோ வரும் ஒருபேரிருள் நம் அகத்தை எதிர்பாராத விதமாக ஆக்கிரமித்து நம்மைச் செயலிழக்கவைத்துவிடும்.சிற்சில நேரங்களில் எவ்விதமான திட்டமும் இல்லாமல் எதைஎதையோ செய்யவைக்கவும் கூடும்.கண்ணுக்குப் புலப்படாத அல்லது உணரவே முடியாத அத்தகு கரிய தருணங்களே உண்மையில் ‘நுண்வெளிக்கிரகணங்கள்’ குடும்ப வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் இத்தகு கிரகணத்தருணங்களால்ஏற்படக்கூடிய விளைவுகளை ஒரு சமூகத்தைச் சேர்ந்த நான்கு தலைமுறையினரின் வாழ்க்கையை முன்வைத்துநாவலாக எழுதியிருக்கிறார் வேணுகோபால். அதன் தனித்தன்மையின் காரணமாகவே, தமிழின் சிறந்தநாவல்கள் வரிசையில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.

இஸ்லாமியரின்தாக்குதலிலிருந்து தம் பெண்களைக் காப்பாற்றுதற்காக இரவோடு இரவாக இடம்பெயரும் ஒரு சமூகத்தின்கதையை கோபல்லபுரம் என்னும் தலைப்பில் கி.ராஜநாராயணன் ஒரு நாவலாக எழுதியிருக்கிறார்.இதற்கு நிகரான ஒரு தாக்குதலிலிருந்து தம் பெண்களைக் காப்பாற்றுவதற்காகவே வேணுகோபால்சுட்டிக் காட்டும் சமூகமும் குடிபெயர்ந்து முற்றிலும் புதியதொரு இடத்தில் வேரூன்றிவளர்கிறது.

அயலார்தாக்குதல் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அரும்பாடுபட்டு காப்பாற்றி அழைத்துவந்தவர்கள் தத்தம் மனைவிமார்கள் மீது செலுத்தும் வன்முறையின் சித்திரம், அந்த அயலாரின்கொடுமையைவிட மோசமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு அயலான் அமர்ந்திருக்கிறான்.பெண்கள் மீது அதிகாரம் செய்கிறான். அவர்களிடம் வன்முறையாக நடந்துகொள்கிறான். அவர்களுடையஅமைதியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அவர்களைக் கொடுமைப்படுத்துகிறான்.தன் ஆண்மையைப்பற்றி ஏதோ ஒரு சொல்லை கிண்டலாகச் சொன்ன காரணத்துக்காக,  கர்ப்பிணியாக இருக்கும் மனைவியின் பிறப்புறுப்பில்களைக்கொத்தைச் செருகி துன்புறுத்தி பிறந்த வீட்டுக்கு அனுப்பிவைக்கிறான் கணவன். மற்றொருகுடும்பத்தைச் சேர்ந்த கணவன் அவனைவிடக் கொடுமைக்காரனாக இருக்கிறான். தன் தொழில் வளர்ச்சிக்காகபிறந்த வீட்டிலிருந்து பண உதவியைக் கேட்டு வாங்கிக் கொடுக்க தன் மனைவி மறுத்துவிட்டாள்என்பதை மனத்தில் வைத்துக்கொண்டு, ஒருநாள் அவளுடன் உடலுறவு கொள்ளும் சமயத்தில் அவளுடையபிறப்புறுப்பில் மிளகாய்த்தூளை வன்மத்தோடு தூவிவிடுகிறான் அவன்.

ஆண்கள்மட்டுமல்ல, பெண்களும் பல இடங்களில் வன்மத்தோடு நடந்துகொள்கிறார்கள். குடும்பங்களில்அவர்கள் திட்டமிட்டு நிகழ்த்தும் குழப்பங்களுக்கு அளவே இல்லை.  சக்களத்தியிடமிருந்து கணவனை மீட்பதற்காகச் செய்கிறசடங்கில் தன் மகனையே நரபலியாகக் கொடுக்கத் தயாராக நிற்கிறாள் ஒரு பெண். ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மருமகள்களுக்கு இடையிலும் மருமகளுக்கும் மாமியாருக்கும் இடையிலும் நிலவும்உறவுகளில் பல நேரங்களில் வஞ்சமும் எரிச்சலும் வெளிப்பட்டபடியே இருக்கின்றன. கனிவும்அன்பும் வெளிப்படும் தருணங்களைவிட, எரிச்சலும் சீற்றமும் வெளிப்படும் தருணங்களே இவர்களுடையவாழ்வில் அதிகமாக இடம்பிடித்திருக்கின்றன. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் மனிதர்கள்நெஞ்சில் இப்படி திடீரென வந்து கவியும் நுண்மையான கிரகணத்தைத்தான் வேணுகோபாலின் நாவல்பேசுபொருளாக கொண்டுள்ளது.

நாவல்வளர்ந்து செல்லும் போக்கில், ஒக்கலிகர் சமூகத்தில் நிலவும் சடங்குமுறைகளையும் நம்பிக்கைகளையும்முன்வைத்திருக்கிறார் வேணுகோபால். அவை அனைத்தும் பண்பாட்டுக்குறிப்புகள் என்ற போதும்  எந்த இடத்திலும் நாவலின்  பாதையைவிட்டு விலகாமல் கதைப்போக்கோடு இணைத்திருக்கும்விதம் அவர் பின்பற்றும் கலை அமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

பெரும்பாலானஒக்கலிகர்கள் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள். ஒவ்வொருவரும் தம் வீட்டில் மாடு வளர்க்கிறார்கள்.பெற்ற குழந்தைகளை நேசிப்பதுபோல தம் மாடுகளையும் அவர்கள் நேசிக்கிறார்கள். மாட்டுப்பொங்கல்அன்று பிறந்து வளரும் மாட்டை ஒரு குடும்பம் ஒருபோதும் விற்பனை செய்யக்கூடாது என்பதுஒரு நம்பிக்கை. மாட்டைப்போலவே அவர்கள் வாழ்க்கையோடு இணைந்திருக்கும் இன்னொன்று கம்பளி.எல்லாக் கட்டங்களிலும் அவர்கள் வாழ்வில் கம்பளி மிகவும் முக்கியமானது. வீடாக இருந்தாலும்சரி, மேடையாக இருந்தாலும் சரி, விசேஷ தினங்களில் அவர்கள் கம்பளி விரித்து அதன் மீதுதான்உட்கார்ந்து பேசவேண்டும். ஆனால் அந்தக் கம்பளியின் மீது பெண்கள் அமரக்கூடாது. ஒரு விதவையைமணந்த ஆண்களும் அமரக்கூடாது. இப்படி ஒரு நம்பிக்கையும் இருக்கிறது.

திருமணங்களில்பெண்களுக்குத் தாலி கட்டும் பழக்கம் கிடையாது. ஆண்கள் தம் கால்களில் மெட்டி அணிந்துகொள்ளவேண்டும். பெண்கள் பூப்படைவதை  ஒட்டி நிகழும்சடங்குமுறை இன்னும் விரிவானது. அவர்கள் பதினேழு நாட்கள் தனிக்குடிசையில் வசிக்கவேண்டும்.அதற்குப் பிறகுதான் அவர்களை வீட்டுக்கு அழைத்துக்கொள்ளும் சடங்கு நடைபெறும். அப்போதுதுணிவெளுக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர் வெளுத்த உடைகளைக் கொண்டுவந்து கொடுப்பார். அதைத்தான்அந்தப் பெண் அணியவேண்டும். வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் நாய்க்குச்சோறு வைக்கவேண்டும். நாய் சோறு தின்னும் முறையை வைத்தே அந்தப் பெண்ணின் எதிர்காலத்தைக்கணித்துச் சொல்லும் முறையும் உண்டு. பெண்கள் மட்டுமே ஆடையின்றி நின்று சாமியை வணங்கும்ஒரு பண்டிகையும் அவர்களிடையில் உண்டு. மழை பொய்த்துவிடும் காலங்களில் மழை வேண்டி கழுதைகளுக்குத்திருமணம் செய்துவைக்கும் சடங்கும் உண்டு. எல்லாத் தகவல்களையும் கதைப்போக்கிலேயே பதிவுசெய்திருக்கிறார் வேணுகோபால்.

வேணுகோபாலின்மற்றொரு முக்கியமான நாவலான ’வலசை’ மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் நிகழும்மோதலைக் களமாகக் கொண்டிருக்கிறது. இந்த உலகம் இங்கு தோன்றிய எல்லா உயிரினங்களும் வாழ்வதற்காகவேஅமைந்திருக்கிறது. இந்த உலகில் ஓர் எறும்புக்கு உள்ள வாழும் உரிமையும் ஒரு யானைக்குஉள்ள வாழும் உரிமையும் ஒன்றே. எல்லா விலங்குகளுக்கிடையிலும் அந்தப் புரிதலும் ஓர் ஒத்திசைவும்உண்டு. எல்லா ஜீவராசிகளையும் போல மனித இனமும் இங்கு வாழக்கூடிய ஒரு ஜீவராசி. மனிதர்களுக்கெனதனி சட்டமென எதுவும் இயற்கையில் இல்லை. ஆனால் மனிதர்கள் அப்படி நினைப்பதில்லை. இயற்கையையும்இந்த பூமியையும் தன்னுடைய சொத்து போல சொந்தம் கொண்டாட நினைக்கிறார்கள். இந்த உலகத்தில்வாழும் உரிமை மனிதர்களுக்கு மட்டுமே இருப்பதாக நினைக்கிறார்கள்.

அந்தஎண்ணம் உருவானதும், தம்மைச் சுற்றி வாழ்கிற விலங்குகளை விரட்டவும் கொல்லவும் முனைகிறார்கள்.காடுகளின் நிலப்பரப்பு கொஞ்சம்கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஓடைகளும் ஏரிகளும் மறைந்துவருகின்றன. ஆற்றில் நீர்வரத்து குறைந்துவருகிறது. நீரில்லாத ஆறுகள் மணல்மேடாகக் காட்சியளிக்கின்றன.மீன்கள் அழிகின்றன. சுற்றுப்புறச்சூழல் மாசடைகிறது. ஆயினும் மனம் திருந்தா மனிதர்கள்உலகத்தைத் தம் வசமாக்கும் முயற்சியில் சற்றும் பின்வாங்காதவர்களாக இருக்கிறார்கள்.அவர்களால் வாழ்விடங்களை இழந்த வனவிலங்குகள் பல நேரங்களில் ஊருக்குள் நுழைந்துவிடுவதும்தம் குடியிருப்புப்பகுதிகளில் அவை நுழைந்துவிடாதபடி தடுக்க மின்வேலிகளை ஏற்படுத்திமனிதர்கள் அவற்றைக் கொல்வதும் தினந்தோறும் நடைபெற்றுவருகின்றன. வலசை வந்த மனிதர்களுக்கும்  காடு சுருங்கிவருவதன் காரணமாக வலசை போகமுடியாத யானைகளுக்கும்இடையில் நிகழும் மோதலை ஒரு களமாகக் கொண்டு இறந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் மாறிமாறிக்காட்டி அழகானதொரு நாவலாக எழுதியிருக்கிறார் வேணுகோபால்.

வேணுகோபாலின்‘நிலமென்னும் நல்லாள்’ இன்னொரு முக்கியமான நாவல். இன்றைய நவீன சமூகத்தின் சிக்கலை அதுஅழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. இடப்பெயர்ச்சி இல்லாமல் இன்றைய வாழ்க்கை இல்லைஎன்கிற நிலைக்கு நாம் வந்து நிற்கிறோம். பிறந்த இடத்திலேயே நமக்கு எல்லாம் கிடைத்துவிடுவதில்லை.கல்வி, திருமணம்,  வேலை என ஏதோ ஒரு காரணம் தொடர்பாகநகர்ந்துகொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. தன் சொந்தக் காரணங்களுக்காக நகர மறுப்பவன்வாய்ப்புகளை இழக்கவேண்டியிருக்கிறது.

வேலைகாரணமாகவும் இல்வாழ்க்கை காரணமாகவும் இடம்பெயர்ந்த ஒருவனுடைய வாழ்க்கையைக் களமாகக்கொண்டு ’நிலமென்னும் நல்லாள்’ நாவலை எழுதியிருக்கிறார் வேணுகோபால். கிராமத்தில் வாழ்ந்தநிலத்தைவிட்டு வந்துவிட்டோமே என்னும் எண்ணம் தொடக்கத்தில் ஒரு துன்பமாக அவனை அலைக்கழிக்கிறது.  காலம் மெல்லமெல்ல அவனை அந்த அலைக்கழிப்பிலிருந்துமீட்டெடுத்து வெளிச்சத்தைக் காட்டுகிறது. வந்து சேர்ந்திருக்கும் இடமும் ஒரு நிலமேஎன்பதையும் நகரம் என்பது நிலத்தின் இன்னொரு வடிவமே என்பதையும் அவன் போகப்போகப் புரிந்துகொள்கிறான்.நிலம் மனிதனை ஒருபோதும் கைவிடுவதில்லை என்னும் உண்மையை அவன் கண்டறிந்துகொள்கிறான்.அவன் கண்டறிந்த உண்மை, அவனுக்கானது மட்டுமல்ல, கிராமங்களைவிட்டு நகரத்துக்கு வந்துகுடியேறிய லட்சக்கணக்கான  மனிதர்களுக்கான உண்மை.அது ஒரு தரிசனமாக இந்த நாவலில் வெளிப்படுகிறது.

வேணுகோபாலின்நேரடிப் படைப்புகளைப்போலவே, தமிழின் பல முன்னோடிப் படைப்பாளிகளின் சிறுகதைகளை முன்வைத்துஆய்வு செய்து அவர் எழுதிய கட்டுரைகளும் மிகமுக்கியமானவை. அக்கட்டுரைகள் ‘தமிழ்ச்சிறுகதையின்பெருவெளி’, ‘தமிழ்ச்சிறுகதை ஒரு காலத்தின் செழுமை’ என இரு பெருந்தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுநூல்களாக வெளிவந்துள்ளன. புதுமைப்பித்தன், கு.ப.ரா., மெளனி, ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா,கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்ற மூத்ததலைமுறையைச் சேர்ந்த படைப்பாளிகளின் சிறுகதைகள் முதல் அறுபதுகளிலும் எழுபதுகளிலும்எழுதிய சூடாமணி, கந்தர்வன்,

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2025 18:45

சா.கந்தசாமியின் படைப்புலகம்

 

தமிழ்நாவல் வரிசையில் செவ்வியல் படைப்பாக அனைவராலும் பாராட்டப்படும் சாயாவனம் நாவலை எழுதியவர்சா.கந்தசாமி.  அதைத் தொடர்ந்து அவர் எழுதியதொலைந்து போனவர்கள், அவன் ஆனது, சூரிய வம்சம், விசாரணைக்கமிஷன் ஆகிய நாவல்கள் அவரைதமிழின் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக நிலைநிறுத்தின. அவர் ஐந்தாண்டுகளுக்குமுன்பு 31.08.2020 அன்று கொரானா சமயத்தில் இயற்கையெய்தினார்.


சமீபத்தில்இலக்கியச்சிற்பிகள் வரிசையில் சாகித்திய அகாதெமி சா.கந்தசாமியைப்பற்றி ஒரு புத்தகத்தைவெளியிட்டிருக்கிறது.  எழுதியிருப்பவர் சந்தியாநடராஜன். அவர் நல்ல மொழிபெயர்ப்பாளர். கட்டுரையாளர். இன்றைய இணையகால இளம்தலைமுறையைச்சேர்ந்த வாசகர்களுக்கு சா.கந்தசாமியை அறிமுகப்படுத்தும் விதமாக சந்தியா நடராஜன் மிகச்சிறந்தமுறையில் இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

சா.கந்தசாமிமயிலாடுதுறையில் 23.07.1940 அன்று பிறந்தவர் . ஆயினும் பதினான்கு வயதுவரை மட்டுமே அவர்அங்கு வசித்தார். பிறகு சென்னையில் வசித்துவந்த தன் சகோதரர் வீட்டுக்கு வந்துவிட்டார்.வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை பள்ளிக்கூடத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதைத்தொடர்ந்து மத்திய பாலிடெக்னிக் நிறுவனத்தில் ஆட்டோமொபைல் பட்டயப்படிப்பை முடித்துவிட்டுகுரோம்பேட்டையில் எம்.ஐ.டி.யில் லேப் அசிஸ்டென்ட்டாக வேலைக்குச் சேர்ந்தார்.

அப்போது,ஏற்கனவே சிறுகதை முயற்சிகளில் ஈடுபட்டிருந்த ம.ராஜாராம் என்பவருடைய நட்பு அவருக்குக்கிடைத்தது. அவர் க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன், நா.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரு நண்பர்களையும்கந்தசாமிக்கு அறிமுகப்படுத்தினார். நால்வரும் சேர்ந்து இலக்கியச்சங்கம் என்னும் அமைப்பைஉருவாக்கி பல நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினர். அப்போது ஆளுமைகளாக விளங்கிய க.நா.சு.,அசோகமித்திரன், சி.சு.செல்லப்பா, நா.பார்த்தசாரதி போன்றோரையெல்லாம் அழைத்து உரையாற்றஏற்பாடுகளைச் செய்தனர். ஒரு கட்டத்தில் இலக்கிய வாசிப்பின்  தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதத் தொடங்கினார் கந்தசாமி.

நான்குநண்பர்களும் அவசரமில்லாமல், ஆளுக்கு மூன்று கதைகளை எழுதி ’கோணல்கள்’ என்னும் தலைப்பில்ஒரே தொகுப்பாக 1968இல் கொண்டுவந்தனர். இத்தொகுப்பில் சா.கந்தசாமி தேஜ்பூரிலிருந்து,தேடல், உயிர்கள் என மூன்று கதைகளை எழுதியிருந்தார். இப்படித்தான் அவருடைய இலக்கிய வாழ்க்கைதொடங்கியது. புதிய கட்டமைப்பிலும் புதிய களம் சார்ந்தும் வெளிவந்த இக்கதைகள் எல்லாஎழுத்தாளர்களுக்கும் தமிழ்ச்சூழலில் ஓர் உடனடி கவனம் உருவாகக் காரணமாக அமைந்தன. தம்எழுத்தாற்றலால் சா.கந்தசாமி தமிழ்ச்சூழலில் கூடுதல் கவனம் பெற்றார்.

சா.கந்தசாமியின்‘தேஜ்பூரிலிருந்து’ சிறுகதை மிகச்சிறந்த கதைகளில் ஒன்றாகச் சுட்டிக் காட்டுகிறார் நடராஜன்.அக்கதை வெளிவந்து ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் இன்று வாசிக்கும் ஓர் இளம்வாசகனுக்கும் சிறப்பானதொரு வாசிப்பு அனுபவத்தை வழங்கும் கதையாக உள்ளது. இருபத்தைந்துஆண்டுகளுக்கு முன்பாக, தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளை முன்வைத்து ‘எனக்குப் பிடித்தகதைகள்’ என்னும் தலைப்பில் ஒரு தொடரை எழுதியபோது, இதே ’தேஜ்பூரிலிருந்து’ சிறுகதையைமுன்வைத்து எழுதியது நினைவுக்கு வருகிறது.

தேஜ்பூரிலிருந்துஒரு ரயில் புறப்படுகிறது. ராணுவத்தினருக்கான பெட்டியொன்றில் தொடக்கத்தில் நான்கு பேர்  உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவனுக்குதிருமணம் நிகழவிருக்கிறது. அதற்காகத்தான் அவன் சென்றுகொண்டிருக்கிறான். எஞ்சிய மூன்றுபேரும் அவனுக்குத் துணையாக உரையாடியபடி செல்கிறார்கள். ரயில் ஒவ்வொரு நிலையத்திலும்நின்று நின்று செல்கிறது. ஒவ்வொரு நிலையத்திலும் சிலர் இறங்கிச் செல்கிறார்கள். சிலர்புதிதாக ஏறி பெட்டிக்குள் வருகிறார்கள்.

எதிர்பாராதவிதமாக ஒரு நிலையத்தில் ரயில் நீண்ட நேரம் நிற்கிறது. நான்கு பேரும் தம் வாழ்க்கையின்இளமைக்காலத்தைக் குறித்து உரையாடத் தொடங்குகிறார்கள். ஒவ்வொருவருக்கும் இறந்தகாலத்தில்சந்தித்துப் பழகிய பெண்களின் நினைவு வருகிறது. அதைப்பற்றியும் உரையாடுகிறார்கள். பிறகுஉரையாடல் பணிச்சூழலைப்பற்றியதாக மாறுகிறது. இப்படி உரையாடலின் கருப்பொருள் கணந்தோறும்மாறிக்கொண்டே இருக்கிறது. ஆயினும் உரையாடலின் சுவாரசியம் குறையவே இல்லை. அவர்களுடையஉரையாடல்கள் முடிவே இல்லாமல் நீண்டு செல்கிறது. நீண்ட நேர தாமதத்துக்குப் பிறகு நிலையத்திலிருந்துவண்டி புறப்படுவதற்குத் தயாராகிறது. அப்போது திருமணத்துக்குச் செல்லும் நண்பனுக்குபிற நண்பர்கள் ஒரு பரிசை அளித்து வாழ்த்திவிட்டு கீழே இறங்கிவிடுகிறார்கள். ரயில் இன்னும்சில புதியவர்களுடன் மீண்டும் ஓடத் தொடங்குகிறது.

இக்கதையின்கட்டமைப்பே இதன் சிறப்பம்சமாகும். கதையில் இடம்பெறும் மனிதர்களின் உரையாடல்கள் வழியாகவோ,நிகழ்ச்சிகள் வழியாகவோ கதை வெளிப்படவில்லை. மாறாக, ஒட்டுமொத்தமாக கதையில் பொதிந்திருக்கும்தொனி வழியாகவே கதை தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. கதையை வாசிக்கும்போது, ரயில் பயணம்மெல்ல மெல்ல வாழ்க்கைப்பயணமாக உருமாறும் விந்தையை வாசகர்கள் உணரமுடியும்.  ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் சிலரை இறக்கிவிட்டு,சிலரை ஏற்றிக்கொண்டு ரயில் தன் போக்கில் ஓடிக்கொண்டே இருக்கிறது. நாம் அனைவருமே வாழ்க்கைப்பயணத்தின்கண்ணிகள். நம் பயணத்திலும் சிலர் நம்மோடு சேர்ந்து சிறிது தொலைவு வருகிறார்கள். சிலர்விலகிச் செல்கிறார்கள். சில புதியவர்கள் இணைந்துகொள்கிறார்கள். இணைவதும் பிரிவதும்இயல்பாகவே நிகழ்கிறது. இப்பயணத்தில் வலி இருக்கலாம். வேதனை இருக்கலாம். நகைச்சுவையும்இருக்கலாம். இன்பமும் இருக்கலாம். ஆனால் காலம் செல்லச்செல்ல இவ்வுணர்வின் வடிவங்கள்மெல்லமெல்ல கரைந்து எல்லாமே ஓர் அனுபவமாக எஞ்சி நிலைக்கும். இந்த அனுபவத்துளியே வாழ்க்கைஅனுபவமாகும். தொடக்க காலத்திலேயே இப்படி ஒரு சிறப்பான சிறுகதை வழியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர்சா.கந்தசாமி.

சா.கந்தசாமிஏறத்தாழ நூறு சிறுகதைகள் எழுதியுள்ளார். அவை பதினேழு தொகுதிகளாக வெவ்வேறு கட்டங்களில் வெளிவந்துள்ளன. முதல் தொகுதி 1968லும் பதினெட்டாவதுதொகுதி 2018லுமாக வெளிவந்தன. அவர் எப்போதும் கட்டற்று எழுதுகிறவராக இருந்திருக்கிறார்.சில கதைகள் பத்து பக்க அளவில் உள்ளன. சில கதைகள் அறுபது, எழுபது பக்க அளவிலும் உள்ளன.தண்ணீர்ப்பூதம் என்னும் சிறுகதை ஏறக்குறைய அறுபது பக்கங்களுக்கும் மேலாக நீண்டு செல்கிறது.

சிறுகதைகளைப்போலவே,அவருடைய  நாவல்களும் அவருக்குப் புகழை ஈட்டிக்கொடுத்திருக்கின்றன. சாயாவனம் நாவலை அவர் தம் இருபத்தைந்து வயதிலேயே எழுதிமுடித்துவிட்டார்என்றும் பலமுறை தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொண்டே இருந்தார் என்றும் வாசகர் வட்டம்வெளியீடாக 1969இல் அந்த நாவல் வெளிவந்து தமிழ்ச்சூழலில் நல்ல கவனம் பெற்றது என்றும்குறிப்பிட்டிருக்கிறார் சந்தியா நடராஜன்.

சாயாவனம்நாவலை ஒன்றை அழித்து இன்னொன்றை உருவாக்கும் சமூக விதிக்கு இசைவான கதைக்களத்தைக் கொண்டநாவலென்று பலர் முன்வைத்திருக்கிறார்கள்.  சுற்றுச்சூழல்விழிப்புணர்ச்சியை உருவாக்கும் நாவலென்றும் சிலர் கூறியதுண்டு. ஒரு மனிதன் தனக்கானஇடத்தையும் மதிப்பையும் தானே உருவாக்கி நிலைநிறுத்தும் வாழ்க்கைப்போக்கைச் சித்தரிக்கும்நாவலென்று சொன்னவர்களும் உண்டு. முதல்முறையாக சாயாவனம் நாவலை புலம்பெயர் நாவலென அடையாளப்படுத்தலாம்என்னுமொரு கூற்றை இப்புத்தகத்தில் முன்வைத்திருக்கிறார் சந்தியா நடராஜன்.

அதற்குஇசைவாக பொருந்திப் போகும் வகையில் நாவலின் முதலிரண்டு அத்தியாயங்களில் இடம்பெற்றுள்ளசில காட்சிகளை எடுத்துக் காட்டியிருக்கிறார் அவர். இதுவரை விமர்சகர்களுக்கும் வாசகர்களுக்கும்தென்பட்டிராத ஒரு புள்ளியை அடையாளப்படுத்தியிருக்கிறார்.

மானுடவாழ்க்கையில் சிலருக்கு பிறந்த இடத்திலேயே வளர்ந்து, வாழ்ந்து, மறைகிற பேறு நல்லூழின்விளைவாக அமையக்கூடும். அத்தகு நல்லூழ் அமையாத பலர் வழி தேடி இடப்பெயர்வது தவிர்க்கமுடியாதஒன்று. வழி என ஒற்றைச்சொல்லால் அந்த மூலகாரணத்தைக் குறிப்பிட்டாலும் எதற்கான வழி என்றொருகேள்வியைக் கேட்டுக்கொண்டால் பல பதில்களைக் கண்டடையலாம். செல்வத்தைத் தேடி, அமைதியைத்தேடி, அன்பைத் தேடி, வெற்றியைத் தேடி, ஆபத்திலிருந்து பாதுகாப்பைத் தேடி என விரித்துக்கொண்டேசெல்லலாம்.  இவற்றையெல்லாம் கடந்து, அவமானத்திலிருந்தும்அவதூறிலிருந்தும் தப்பித்து கெளரவத்தைத் தேடிச் செல்வதையும் ஒரு வழியாக வகுத்துரைக்கிறார்நடராஜன். சாயாவனம் நாவலின் முதலிரு அத்தியாயங்களில் அந்தக் கருத்துக்குச் சாதகமாக உள்ளகதையம்சத்தைத் தனக்குத் துணையாக்கிக்கொள்கிறார் அவர்.

ஒரு விவசாயக்குடும்பத்தில்வாழ்க்கைப்பட்டுச் சென்றவள் காவேரி. இனிய இல்லறத்தின் அடையாளமாகப் பெற்றெடுத்த இரண்டரைவயதுள்ள குழந்தையின் தாய் அவள். அவளுடைய கணவன் ஏதோ பித்தின் வேகத்தில் துறவியாகி ஊரைவிட்டேபோய்விடுகிறான். ஊர் அவள் மீது பழி சுமத்துகிறது. அவளோடு பிறந்த சகோதரன் சொந்த ஊருக்குத்திரும்பி வந்து தம் குடும்பத்தோடு சேர்ந்து வாழ விடுக்கும் அழைப்பை அவள் ஏற்க மறுத்துவிடுகிறாள்.ஓடிப் போனவனின் மனைவி  என்கிற பட்டப்பேரோடுஅந்த ஊரில் வாழவே அவளுக்குப் பிடிக்கவில்லை அவளுக்கு. கெளரவமான ஒரு வாழ்க்கையைத் தேடிஅவள் தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு இலங்கைக்குச் செல்லும் கப்பலில் ஏறிப் புறப்படுகிறாள்.அவளுடைய புலம்பெயர்வு அப்படித்தான் நிகழ்கிறது.

சென்றுசேர்ந்த இடத்தில் சில ஆண்டுகள் பாடுபட்டு உழைத்து தன் மதிப்பை ஈட்டுகிறாள். எதிர்பாராதவிதமாக அம்மை நோய் கண்டு அவள் இறந்துவிட, தனித்துத் தவித்த சிறுவனான சிதம்பரத்தைக்கிறித்துவனாக மாற்றி வளர்க்கிறார் ஒரு பாதிரியார். வளர்ந்து பெரியவனானதும் பாதிரியாரின்பிடியிலிருந்து விடுபட்டு கொழும்புக்கு ஓடிச் செல்கிறான் சிதம்பரம். ஒரு பாத்திரக்கடைக்காரன்அவனை மீண்டும் இந்துவாக மாற்றி தன் கடையிலேயே வைத்திருக்கிறான். பாடுபட்டு உழைத்துபணத்தைச் சேமிக்கிறான் சிதம்பரம். ஒருநாள் சேர்த்துவைத்த செல்வத்தோடு சொந்த ஊருக்குத்திரும்பி வந்து வனத்தை அழித்து ஆலையை உருவாக்க நினைக்கிறான். சரிந்த குடும்பத்தின்புலம்பெயர்வினால் விளைந்த கதையாக சாயாவனம் நிலைபெற்றிருக்கிறது. நாவலின் முதலிரு காட்சிகளில்செறிவுற எழுதப்பட்டிருக்கும் பகுதியிலிருந்து இந்தப் பின்னணியை விரித்தெடுத்து நம்முன் வைத்திருக்கிறார் நடராஜன்.

சாயாவனம்போலவே பிற நாவல்களையும் தமக்கேயுரிய வகையில் வாசித்து பல புதிய  சிறப்பம்சங்களை இந்தப் புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார்நடராஜன்.

நாவல்கள்,சிறுகதைகள் மட்டுமன்றி, பிற ஆளுமைகள் பற்றிய தம் நினைவலைகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில்கந்தசாமி எழுதியிருக்கும் ‘என்றும் இருப்பவர்கள்’ நூலைப்பற்றியும் பயண நூல்கள் பற்றியும்குறிப்பிட்டிருக்கிறார் நடராஜன். இறுதியாக சா.கந்தசாமியின் படைப்புகளாக வெளிவந்த நாவல்கள்,சிறுகதைத்தொகுதிகள், கட்டுரைத்தொகுதிகள், தொகுப்புநூல்கள் என வெவ்வேறு பிரிவுகளில்எழுதிய 59 புத்தகங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. கந்தசாமியின் படைப்புகளைத்தேடிப் படிக்க விரும்பும் புதிய வாசகர்களுக்கு இப்பட்டியல் பெரிதும் உதவியாக இருக்கும்.கந்தசாமியின் படைப்புலகத்தையும் வாழ்க்கையையும் அடுத்தகட்ட  இலக்கியத்தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் விதமாகஎழுதியிருக்கும் நடராஜனுக்கும் வெளியிட்டிருக்கும் சாகித்திய அகாதெமிகும் வாழ்த்துகள்.

 

(சா.கந்தசாமி. இந்திய இலக்கியச்சிற்பிகள் வரிசை.சாகித்திய அகாதெமி வெளியீடு. சந்தியா நடராஜன். குணா வளாகம். 443, இரண்டாம் தளம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை -600018. விலை. ரூ.100)

 

(புக் டே – இணையதளம் – 12.11.2025)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2025 18:41

November 8, 2025

ஒரே ஒரு சிறுகதை - விட்டல்ராவ் உரையாடல்கள் - புதிய புத்தகத்தின் முன்னுரை


ஒருநாள்நண்பரொருவரைச் சந்திப்பதற்காக வெளியே சென்றிருந்தேன். இருவரும் ஒரு பூங்காவில்உட்கார்ந்து இரண்டுமணி நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். பிறகு அவரைஅனுப்பிவைத்துவிட்டு,  வீட்டுக்குத் திரும்புவதற்காக பேருந்துநிறுத்தத்துக்கு வந்தேன். நீண்ட நேரமாகியும் எங்கள் குடியிருப்பு வழியாகச்செல்லக்கூடிய பேருந்து வரவில்லை. ஆனால் எதிர்பாராத விதமாக மழை வந்துவிட்டது.


தூறலாகத்தொடங்கிய மழை சட்டென வலுக்கத் தொடங்கியது. பேரோசையுடன் தரையை மோதித் துளைப்பதுபோலமழை பொழிந்தது. பேருக்குத்தான் அது பேருந்துநிறுத்தமே தவிர, அங்கு நிழற்குடைஎதுவும் இல்லை.. பக்கத்திலேயே ஒரு வணிகவளாகத்தின் முன்புறத்தில் மழையில்நனைந்துவிடாதபடி தற்காத்துக்கொள்ள ஒரு சிறிய இடம் இருந்தது. அடுத்த கணமே பேருந்துக்குக்காத்திருந்தவர்கள் அனைவரும் அங்கு ஓட்டமாக ஓடி நின்றோம்.

மழையாகஇருந்தபோதும் வெயில் வெளிச்சமும் விசித்திரமான வகையில் நீடித்திருந்தது.மழைக்குரிய இருளே இல்லை. ஆயினும் மழை கொட்டியது. மழையின் சத்தத்தைக் கேட்டபடி,கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து அருவி மாதிரி விழுந்து வழிந்தோடும் நீர்ப்பெருக்கைவேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தேன்.

எதிர்த்திசையில்ஒரு பெரிய பங்களா இருந்தது. கண்ணாடி மாளிகையைப்போல பளபளவெனக் காணப்பட்டது. புதிதாகக்கட்டப்பட்ட கட்டடம். முகப்பிலேயே அதன் பெயர் பெரிய எழுத்துகளில் விளக்குகளாலேயேவடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒருவர் கூட அந்தக் கட்டடத்தின் அருகில் ஒதுங்கிநிற்கமுடியாதபடி மதில் மறைத்து நின்றது..

“இந்தஇடத்துலதான் ஒரு காலத்துல பெரிய தோப்பு இருந்திச்சி. நான் சின்ன பிள்ளையா இருந்தசமயத்துல நானும் கூட்டாளிங்களும் இங்க வந்து சடுகுடு விளையாடுவோம். கொய்யா மரம்,பலாமரம்லாம் நிறைய இருக்கும்….” என்று ஒரு பெரியவர் தனக்கு அருகிலிருந்த ஓர்இளைஞனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

அவனுக்குஅந்த உரையாடலில் எவ்விதமான ஆர்வமும் இல்லை. ஆயினும் வெளியே மழைபொழிந்துகொண்டிருந்தபடியாமல் அவர் சொல்வதைக் கேட்டு தலையசைத்தபடி இருந்தான். நான்அப்படி ஒரு தோப்பை அந்த இடத்தில் பார்த்ததே இல்லை. நான் பார்க்காத செய்தி என்பதால்மிகுந்த ஆர்வத்துடன் அவர் சொல்வதைக் கேட்கத் தொடங்கினேன்.

”ஸ்கூல்விட்டதும் இங்க வந்துதான் நாங்க எல்லாரும் விளையாடுவோம். நான் படிச்சி முடிச்சிவேலைக்குப் போகறவரைக்கும் கூட அந்தத் தோப்பு இருந்தது. அதுக்கப்புறம் யாரோ ஒருபணக்காரன் அந்தத் தோப்பை வாங்கி தோப்புல இருந்த எல்லா மரங்களையும் வெட்டிட்டு, ஆதர்ஷான்னுஒரு பெரிய தியேட்டரு கட்டினான். தெலுங்கு, தமிழ், கன்னடம்னு எல்லா மொழிப் படங்களையும்காட்டி பணம் சம்பாதிச்சான். எல்லாப் பக்கத்துலேர்ந்தும் படம் பார்க்கறதுக்கு ஜனங்கவந்து கூட்டம் கூட்டமா நிப்பாங்க…..”

நான்அவர் குறிப்பிட்ட தியேட்டரைப் பார்த்திருக்கிறேன். அத்தியேட்டரில் திரைப்படங்களும்பார்த்திருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு இருந்த தோப்பைப்பற்றி எதுவும் தெரியாது. அதனால்அந்தப் பெரியவர் விவரிப்பதைக் கேட்க எனக்கு ஆர்வமாக இருந்தது. அவர்சொல்வதையெல்லாம் சின்னப்பிள்ளை மாதிரி வாயைப் பிளந்தபடி கேட்கத் தொடங்கினேன்.

“தனியார்சேனல் வந்து டிவியில படம் காட்ட ஆரம்பிச்சதும் தியேட்டர்ல நடமாட்டம் குறைஞ்சி போச்சி.எவ்ளோ காலத்துக்கு நஷ்டத்தைத் தாங்கிகிட்டு அவனும் தியேட்டர் நடத்துவான்? அதான்,வந்த விலைக்கு தியேட்டர வித்துட்டு போயிட்டான்.”

அவர்சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த இளைஞனின் முகத்தில் எவ்விதமான எதிர்வினையும்தெரியவில்லை. ஏதோ கதை கேட்பதுபோல ஒப்புக்கு ம் ம் என்று தலையை அசைத்தபடிஇருந்தான். “காலம் மாறமாற ஒன்னொன்னும் அப்படி மாறித்தானே ஆவணும். வேற என்ன வழிஇருக்குது?” என்று நானாகவே அவரைப் பார்த்துக் கூறிக்கொண்டே உரையாடலுக்குள் நுழையமுயற்சி செய்தேன்.

அவர்அப்போதுதான் என் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். நானும் அவர் சொன்னதையெல்லாம்கேட்டுக்கொண்டிருந்ததை அவர் உணர்ந்துகொண்டார். “நம்ம கையில எதுவும் இல்லைங்கறதுதான்உண்மை. நாம எதையும் நிறுத்தமுடியாது. எல்லாத்தயும் நாம வேடிக்கைதான்பார்க்கமுடியும்” என்றார்.

என்குறுக்கீட்டை அவர் விரும்பவில்லையோ என எனக்குச் சங்கடமாக இருந்தது. அவர்முகக்குறிப்பிலிருந்து எதையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. “இந்தக்கட்டடமும் இந்தத் தொழிலும் இன்னும் எத்தனை நாளுக்கு ஓடும்? அதிகபட்சமா அதுவும்இன்னும் ஒரு நாற்பது வருஷம் தாங்கும். அவ்வளவுதான். அதுக்கப்புறம் இதைமுழுங்கிட்டு இன்னொன்னு புதுசா வரும்” என்றார். பிறகு தன் பொக்கைவாயைத் திறந்துபுன்னகைத்தபடியே “நம்ம வாழ்க்கையே இங்க நிரந்தரமில்லை. இதுல கட்டடத்து ஆயுளைப்பத்தி சொல்ல என்ன இருக்குது?” என்றார்.

அந்தஉரையாடலின் நிறைவான வாசகத்தைப்போல அவர் அந்த வாக்கியத்தைச் சொன்னார். எதைச் சொல்லிஅடுத்த உரையாடலைத் தொடங்குவது என நான் நினைத்துக்கொண்டிருந்தபோதே எங்கள்குடியிருப்புக்குச் செல்லும் பேருந்து வந்துவிட்டது. எனக்கு வேறு வழி தெரியவில்லை.அந்தப் பெரியவரிடம் விடை பெற்றுக்கொண்டு, அங்கிருந்து வெளியேறி ஓடி பேருந்தில்ஏறிவிட்டேன். அவர் சொன்ன ஆயுள் என்ற சொல் என் மனத்தில் பசைபோல ஒட்டிக்கொண்டது.

பேருந்துப்பயணம்முடியும் வரையில் அந்தப் பெரியவரின் சொற்களே மனத்தில் சுழன்று சுழன்று வந்தன.மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பதுதானே வரலாறு. ஆனால் ஒரு சமூகத்தில்எழுதப்படும் வரலாற்றில் இந்த அம்சங்கள் இருப்பதில்லை. ஒரு நகரத்தில் மின்சாரநிலையம் எப்போது வந்தது, மின்சார ரயில் எப்போது வந்தது என்பதற்கெல்லாம் இடமிருக்கும்.ஆனால் அந்த நிலையங்களுக்காக தம் வசிப்பிடங்களைக் கொடுத்துவிட்டு வெளியேறியவர்களின்வாழ்க்கையைப்பற்றிய குறிப்புகளுக்கு அதில் இடம் இருப்பதில்லை. ஆனால் அத்தகு குறிப்புகளை,பேருந்துநிறுத்தத்தில் நின்றிருந்த பெரியவரைப்போல யாரோ ஒருவர் எங்கோ இன்னொருவரிடம்தம் உரையாடல் வழியாக எடுத்துரைத்தபடி இருப்பார். அச்சிட்ட எழுத்து வரலாறுக்குஇணையானதாக இந்த உரையாடல் வரலாறுக்கும் இச்சூழலில் இடமிருக்கிறது. ஒவ்வொருவிடுபடலும் இன்னொருவரால் நிரப்பப்பட்டபடியே இருக்கும்.

விட்டல்ராவின்உரையாடல்களிலும் வரலாற்றின் ஒழுக்கில் விடுபட்டுப்போனவர்களின் வரலாறு அடங்கியிருக்கிறதுஎன்பதை எப்படியோ நான் தொடக்கத்திலேயே உணர்ந்துகொண்டேன். ஒரு குறிப்பிட்ட காலம்வரைக்கும் நான் அவரோடு உரையாடி, அந்நினைவுகளை என் நெஞ்சில் சுமந்துகொண்டு திரும்பிவருபவனாகவே இருந்தேன். ஏதோ ஒரு நேரத்தில்தான் அவற்றையெல்லாம் பதிவுசெய்துவைக்கவேண்டும் என்று தோன்றியது. அந்த எண்ணத்தை இன்றுவரை நிறைவேற்றி வருகிறேன்.

அவருடையஉரையாடல்கள் ஒரு நூலகத்துக்குச் சென்று  புத்தகத்தைஎடுத்துப் படிக்கும் அனுபவத்துக்கு நிகரானது. அவர் உரையாடத் தொடங்கினால் எண்ணற்றதகவல்கள் வந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு நிகழ்ச்சியையும்  நம் கண்முன்னால் நிகழ்த்திக் காட்டும் ஆற்றல்அவருக்கு உண்டு. அவர் வழியாக நான் எண்ணற்ற மனிதர்களைப்பற்றித் தெரிந்துகொண்டேன்.இலக்கியம் சார்ந்தும் வாழ்க்கைப்போக்கு சார்ந்தும் ஏராளமான தகவல்களையும் தெரிந்துகொண்டேன்.பிறருடன் பகிர்ந்துகொள்ளும் தோறும் அந்த அனுபவம் விரிவடைந்தபடியே செல்லும். காலம்கடந்த பிறகும் நெஞ்சில் நிலைத்திருக்கும்.

விட்டல்ராவும் நானும் ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் உரையாடுவதுவழக்கம். அந்த உரையாடல் சிற்சில சமயங்களில் ஐந்து பத்து நிமிடங்களிலும் முடிந்ததுண்டு.சிற்சில சமயங்களில் ஒருமணி நேரம் வரைக்கும் நீண்டதுமுண்டு. அன்றன்றைக்கு அமைகிற சூழலைப்பொறுத்தது அது. அத்துடன் மாதத்தில் இரண்டு மூன்று முறையாவது விட்டல்ராவின் வீட்டுக்குச்சென்று அவரோடு உரையாடிக்கொண்டிருப்பதும் உண்டு. பல நேரங்களில் நானும் நண்பர் திருஞானசம்பந்தமும்சேர்ந்து செல்வோம். அவர் ஊரில் இல்லாத நேரங்களில் நான் மட்டும் சென்று பேசிக்கொண்டிருந்துவிட்டுத்திரும்புவேன்.

சமீபத்தில் ஓர் உரையாடலில் எங்கள் ஆரம்பப்பள்ளி நாட்களின்நினைவுகளை மாறிமாறிப் பேசிக்கொண்டோம். நான் படித்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில்மூன்றாம் வகுப்பு வரைக்கும் எனக்கு வகுப்பாசிரியையாக இருந்தவர் நவநீதம் டீச்சர். கண்டிப்பானவர்.அதே சமயத்தில் சிறார்கள் மீது பாசம் கொண்டவர். ஒருமுறை எனக்குக் காய்ச்சல் வந்து மூன்றுநாட்கள் பள்ளிக்கூடத்துக்குச் செல்லவில்லை. மூன்றாவது நாள் சாயங்காலம் பள்ளிக்கூடம்விட்டதும் பிற பிள்ளைகள் புடைசுழ எங்கள் வீட்டுக்கு வந்து என் நலம் பற்றி விசாரித்துவிட்டுச்சென்றார்.

நான் அந்த நிகழ்ச்சியை விட்டல்ராவிடம் சொன்னபோது, அவர் தன்னுடையபள்ளியில் ஓவிய ஆசிரியராக இருந்த யூசுப்கான் என்னும் ஆசிரியர் மீது பிள்ளைகள் கொண்டிருந்தபாசத்தையும் பிள்ளைகள் மீது அவருக்கு இருந்த பாசத்தைப்பற்றியும் பகிர்ந்துகொண்டார்.ஓவியப்பாடத்துக்கு மதிப்பெண் இல்லை என்பதால் ஓவிய வகுப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்தபிள்ளைகளுக்கு யூசுப்கான் சார் ஓவியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பிள்ளைகளின்கவனத்தைத் திசைதிருப்பப் பாடுபட்டதையும் யூசுப்கான் சார் ஒவ்வொரு நாளும் ஒட்டுப்போட்டுதைத்த கோட்டை அணிந்துகொண்டு வருவதைப் பார்த்து மனம் பொறுக்கமுடியாத பிள்ளைகள் ஆளுக்குக்கொஞ்சம் பணத்தைப் போட்டு அவருக்குப் புதிதாக ஒரு கோட்டு வாங்கிவந்து கொடுத்ததையும்சொன்னார்.

அவருடைய காலத்தில் யூசுப்கான் சார் போலவும் என்னுடைய காலத்தில்நவநீதம் டீச்சர் போலவும் இன்றைய காலத்திலும் யாரோ ஒருவர் எங்கோ இருக்கக்கூடும். நீண்டுசெல்லும் கனிவென்னும் ஒரு சரடு காலத்தை ஊடுருவிக்கொண்டு சென்றபடியே இருக்கிறது என்பதையேஅன்றைய உரையாடல் வழியாக நான் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி என்று புரிந்துகொண்டேன்.  

விட்டல்ராவின் உரையாடல்கள் வெறும் தகவல்கள் அல்ல. அக்காலத்துவாழ்வியல் சூழ்நிலைகளையும் மனிதர்களையும் புரிந்துகொள்ள அந்த உரையாடல்கள் ஒரு வாசலாகஅமைந்திருக்கின்றன. உரையாடி முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய பிறகு அல்லது ஏதோஓர் அனுபவத்தின் தொடர்ச்சியாக ஒரு மீள்நினைவாக அவருடைய உரையாடல்களை அசைபோட நேரும்போதுஉருவாகும் மனஎழுச்சி மகத்தானதொரு அனுபவம். அப்போது அனைத்தையும் தொகுத்து யோசிக்கும்தருணத்தில் திரண்டுவரும்  கேள்வி அல்லது விடைஒரு கவித்துவமான அனுபவம். அவற்றை உணர்த்தவேண்டும் என்பதற்காகவே அவருடன் நிகழ்த்திய  உரையாடல்களைத் தனித்தனி கட்டுரைகளாக எழுதவேண்டும்என்ற எண்ணம் எழுந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றிய அந்த எண்ணத்தின் விளைவாகஅத்தகு கட்டுரைகள் இரு தொகுதிகளாக வெளிவந்தன. இது மூன்றாவது தொகுதி. தன்னுடைய எண்பத்துநான்காவதுவயதில்  மின்னிதழில் ஒவ்வொரு வாரமும் ஒரு கட்டுரையைத்தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கும் அவருடைய உற்சாகத்தைக் கண்டு நானும் உற்சாகமடைகிறேன்.இத்தொகுதி அவருக்கு நான் அளிக்கும் அன்புப்பரிசு. இத்தொகுதியை மிகச்சிறந்த முறையில்நூலாக வெளிக்கொண்டு வந்திருப்பவர் நண்பர் நடராஜன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இத்தொகுதியில்அடங்கியுள்ள எல்லாக் கட்டுரைகளையும் ஒரு தொடர் போல ஒவ்வொரு மாதமும் அம்ருதா இதழ் வெளியிட்டுவாசகர்களிடையில் விரிவான வகையில் அறிமுகம் கிடைக்க உதவியது. எழுத்தாளர் திலகவதிக்கும்தளவாய் சுந்தரத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு கட்டுரையையும் எழுதி முடித்ததுமேவழக்கம்போல முதல் வாசகியாகப் படித்து வந்தவர் என் மனைவி அமுதா. விட்டல்ராவின் உரையாடல்கள்அவருக்குப் புதிதல்ல. விட்டல்ராவ் எங்கள் வீட்டுக்கு வரும் சமயங்களில் அவரும் உரையாடல்களில்பங்கெடுத்துக்கொண்டதுண்டு. அவர் விவரிக்கும் அனுபவங்களை அவரும் நேரிடையாகவே கேட்டிருக்கிறார்.என்னுடைய எல்லா முயற்சிகளிலும் எனக்கு உற்ற துணையாக இருக்கும் அமுதாவுக்கு என் இனியஅன்பு.

என் மனைவியைப்போலவே எல்லாக் கட்டுரைகளையும் தொடர்ச்சியாகவாசித்தவன் என் நெருங்கிய நண்பன் பழனி. பல கட்டுரைகளில் இடம்பெற்றிருக்கும் விட்டல்ராவின்இளமைக்காலத்துச் சித்தரிப்புகள் பல நேரங்களில் எங்கள் பள்ளிக்கால அனுபவங்களை அசைபோட்டுஉரையாட ஒரு தூண்டுகோலாக அமைந்திருக்கின்றன. பழைய நினைவுகளை அசைபோடும்போது நெஞ்சில்நிறையும் இனிமைக்கு அளவே இல்லை.  அவனுக்கும்என் அன்பு.

இந்த முன்னுரையை எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் ஒருகணம்என் மனத்தில் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனின் முகம் எனக்குள் திரண்டு வந்து நின்றது.அவர் உயிரோடு இருந்த காலத்தில் அவரைச் சந்தித்து பலமுறை உரையாடியிருக்கிறேன். அவையனைத்தும்என் வாழ்வில் இனிய கணங்கள். அவரோடு உரையாடிய அனுபவங்களின் அடிப்படையில், அவரும் விட்டல்ராவைப்போலவேதன் இளமைக்காலத்து அனுபவங்களையும் பழகியவர்களின் நினைவுகளையும் கூர்மையான அவதானிப்புடன்பேசுபவர் என்பதை இப்போது ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்துகொள்கிறேன். அந்தப் புரிதலின்அடிப்படையிலேயே அவரைப்பற்றிய நினைவு வந்துவிட்டது. அசோகமித்திரனின் நெஞ்சில் நடிகர்திலீப்குமார் பற்றிய நினைவுக்கும் இடமிருந்தது. எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி பற்றியநினைவுக்கும் இடமிருந்தது. அவரே பல தருணங்களில் ஏராளமான  அத்தகு நினைவுக்குறிப்புகளை சின்னச்சின்ன கட்டுரைகளாகஎழுதி வெளியிட்டார்.

விட்டல்ராவும் அசோகமித்திரனும் நெருங்கிய நண்பர்கள். இருவருமேமிதிவண்டிகளில் பயணம் செய்து பல திரைப்படங்களுக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் ஒன்றாகச்சென்று வந்தவர்கள். அதைப்பற்றி விட்டல்ராவே பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். அவருடையநெஞ்சில் அசோகமித்திரனுக்கென ஒரு தனியிடம் உண்டு என்பதை நான் அறிவேன். நண்பர் விட்டல்ராவும்நானும் நிகழ்த்திய உரையாடல்கள் இப்படி நூல்வடிவம் பெறுவதைப் பார்க்க நேர்ந்தால் அசோகமித்திரன்என்ன நினைப்பார் என்பது எனக்குள் சுவாரசியமான ஒரு கேள்வியாக இருக்கிறது. ஒரு சின்னபுன்முறுவலோடு “நல்லா செஞ்சிருக்கே, இவனே” என்று சொல்லியிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. அதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.இப்படியெல்லாம் நினைத்துக்கொள்வதை நான் விட்டல்ராவிடம் தெரிவித்தேன். ஒருகணம் கூட யோசிக்காமல்அவரும் “ஆமாமாம். அப்படித்தான் சொல்லியிருப்பார். அப்படி சொல்றதுதான் அவர் பாணி” என்றார்.விட்டல்ராவுக்கும் எனக்கும் நண்பரான மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களுக்கு இப்புத்தகத்தைச்சமர்ப்பணம் செய்வதில் மிகவும் மனநிறைவடைகிறேன்.

 


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2025 18:03

ஒரு போராட்டக்காரரின் நிகழ்ச்சிக்குறிப்புகள்

 

கடந்த நூற்றாண்டில் இருபதுகளின் தொடக்கத்திலேயே காந்தியக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காந்தியடிகள் தோற்றுவித்த எல்லா இயக்கங்களிலும் கலந்துகொண்டவர் ஆக்கூர் அனந்தாச்சாரி. நீல் சிலை அகற்றும் சத்தியாகிரகம் ,கள்ளுக்கடை மறியல், அந்நியத்துணி புறக்கணிப்பு, கதர்ப்பிரச்சாரம், உப்பு சத்தியாகிரகம், சைமன் குழு எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் என தமிழகத்தில் நடைபெற்ற எல்லாப் போராட்டங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்றார் அவர். அரசு வழங்கிய தண்டனையை ஏற்று இருபது முறைகளுக்கும் மேல் சிறைக்குச் சென்று திரும்பிய் அனுபவம் அவருக்கு உண்டு. 

தண்டனைக்கைதியை சிறையில் அனுமதிக்கும் முன்பாக தொற்றுநோய் தடுப்பு ஊசியும் அம்மை ஊசியும் போட்டு அனுப்பவேண்டும் என்பது அந்தக் கால சிறைவிதிகளில் ஒன்று. அனந்தாச்சாரின் உடலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊசித்தழும்புகள் இருந்தன. தேசத்தின் மீதான நேசமும் காந்தியக்கொள்கைகளின் மீதான பற்றும் தண்டனைக்கொடுமைகளைத் தாங்கிக்கொள்ளும் மன உறுதியை அவருக்கு அளித்தன.

இருபதுகளில் காந்தியடிகள் சென்னைக்கு வரத்தொடங்கிய காலகட்டத்திலேயே அவரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார் அனந்தாச்சாரி. அவரோடு சேர்ந்து தமிழ்நாட்டுப் பயணங்களிலும் கலந்துகொண்டிருக்கிறார். இறுதியாக 1946இல் இந்தி பிரச்சார சபை பட்டமளிப்பு நிகழ்ச்சிக்காக அவர் வந்தபொழுது காந்தியடிகளுடன் பத்து நாட்கள் தங்கியிருக்கிறார். அவரோடு பழகிய விதத்திலும் அவரைப்பற்றி படித்த விதத்திலும்  காந்தியடிகள்தொடர்பாக அவருக்குக் கிட்டிய அனுபவங்கள் எண்ணற்றவை. ஐம்பதுகளின் இறுதியில் தன் காந்திய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வானொலி நிலையம் அவருக்கு ஒரு வழியை ஏற்படுத்திக்கொடுத்தது. அதை முன்னிட்டு வாரம்தோறும் அனந்தாச்சாரி வானொலியில்  ஐந்தாண்டுகாலத்துக்கு தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் பிறகு 1962இல் அவ்வுரைகளைத் தொகுத்து ‘காந்திஜி காட்டியவழி’ என்னும் தலைப்பில் ஒரு நூலாக பாரதி பதிப்பகம் வெளியிட்டது.

இந்தி பிரச்சார சபையில் காந்தியடிகள் தங்கியிருந்த சமயத்தில் அங்கு கழிப்பறைகளைத் தூய்மை செய்துவந்த ஒரு பெண்மணி காந்தியடிகளை நெருங்கி நின்று பார்க்கவேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் சூழ்ந்திருந்தது. ஒரு கூட்டத்தினர் சந்தித்துவிட்டு வெளியேறியதும் மறுகணமே வேறொரு கூட்டத்தினர் உள்ளே நுழைந்து உரையாட வருவதுமாக இருந்தார்கள். பல நேரங்களில் காலையில் தொடங்கும் சந்திப்புகள் இரவு வரைக்கும் நீண்டுபோவது வழக்கமாகிவிட்டது. அதனால் அந்தப் பெண்மணி தன் விருப்பத்தை எப்படி நிறைவேற்றிக்கொள்வது என்று புரியாமல் தவித்தார். அவர் அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சிக்காகச் செல்லும் பழக்கம் உள்ளவர் என்பதை அறிந்துகொண்டு ஒருநாள் அவர் புறப்படும் முன்பே அங்கே வந்து நின்று அவருக்காகக் காத்திருந்தார். அறையைவிட்டு வெளியே வந்த காந்தியடிகள் கூடத்தைக் கடக்கும் முன்பாக அவருக்கு எதிரில் தன் துடைப்பத்தோடு வந்து நின்று வணங்கினார் அந்தப் பெண்மணி. காந்தியடிகளும் புன்னகையுடன் அவரைப் பார்த்து வணங்கினார். ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினார். உடனே அப்பெண்மணி மனம் கரைந்து சட்டென காந்தியடிகளின் காலில் விழுந்துவிட்டார். அவர் கையில் வைத்திருந்த துடைப்பத்தை வைத்து ஒரே கணத்தில் அனைத்தையும் ஊகித்துவிட்டார் காந்தியடிகள். உடனே ”போதும் போதும் எழுந்திருங்கள்” என்று தமிழிலேயே பேசி அந்தப் பெண்மணியை எழுந்து நிற்கவைத்து மேலும் சில நிமிடங்கள் அவருடன் நின்று பேசிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.

ஒருமுறை கண்பார்வை இல்லாத ஒரு இளைஞர் காந்தியடிகளைச் சந்திக்கவும் அவரைத் தொட்டுப் பேசவும் விரும்பினார். நண்பர் சந்திப்பின்போது இந்தச் செய்தியை ஒருவர் காந்தியடிகளுடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பு முடிந்து அவர்கள் திரும்பிச் செல்லும்போது தன்னை பார்வையற்ற இளைஞரிடம் அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். நண்பர்கள் அதைக் கேட்டு திகைத்து நின்றனர். அந்த இளைஞரை அவர் இருக்கும் இடத்துக்கு அழைத்து வருவதாகச் சொன்னார்கள். காந்தியடிகள் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. தாமே வருவதாகச் சொல்லி அவர்களோடு சென்று அந்த இளைஞரைச் சந்தித்து உரையாடிவிட்டுத் திரும்பினார்.

இந்தி பிரச்சார சபைக்குப் பக்கத்தில் இருந்த வீட்டில் எஸ்.கே.சுந்தரம் என்பவர் வசித்துவந்தார். அவர் பொதுமருத்துவ மனையில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தேசியவாதியான அவர்  மரணப்படுக்கையில்இருந்தார். காந்தியடிகளை அவர் ஒருமுறை கூட பார்த்ததில்லை. தன் வீட்டுக்குப் பக்கத்துக் கட்டடத்துக்கு அவர் வந்திருக்கும் சூழலில் அவரைச் சந்திக்க இயலாதபடி நேர்ந்துவிட்டதே  எனநண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டார். எப்படியோ அச்செய்தி காந்தியடிகளின் காதுக்குச் சென்றுவிட்டது. தம் ஓயாத அலுவல்களுக்கிடையில் எப்படியோ ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி, அவரைச் சந்திப்பதற்காக தன்னை அவருடைய வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டார். சுந்தரத்துக்கு அருகில் சில நிமிடங்கள் அமர்ந்து நலம் விசாரித்து ஆறுதல் சொற்களைச் சொல்லி தைரியமாக இருக்கும்படி சொல்லிவிட்டு திரும்பினார்.

தன் பயணத்துக்கு நடுவில் தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக நிதி திரட்டுவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார் காந்தியடிகள். மேடைகளில், கூட்டங்களில், சந்திப்புகளில் மட்டுமன்றி, பயணத்தின்போது வண்டி நிற்கும் ஸ்டேஷன்களில் கூட நிதி திரட்டத் தொடங்கிவிடுவார். நிதிக்காக கைநீட்ட அவர் ஒருநாளும் தயங்கியதே இல்லை. ஸ்டேஷனிலிருந்து வண்டி நகரும் வரைக்கும் அவருடைய கை நீண்டபடியே இருக்கும். பொருளாகக் கிடைத்தால் அங்கேயே அதை ஏலம்விட்டு பணமாக்கி நிதியுடன் சேர்த்துக்கொள்வார். வண்டி கிளம்பியதும் அடுத்த ஸ்டேஷன் வருவதற்குள் நிதியாகத் திரண்ட தொகையை எண்ணி கணக்கில் சேர்த்துவிடுவது அவர் வழக்கம்.

ஒருமுறை ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்றதும் வழக்கம் போல நிதி திரட்டும் வேலை நிகழ்ந்துகொண்டிருந்தது. அப்போது பார்வையற்ற முதியவர் ஒருவர் அவரை நெருங்கிவர முடியாமல் தடுமாறித் தவிப்பதை காந்தியடிகள் பார்த்துவிட்டார். உடனே அவரை தன்னருகில் வரவழைக்கச் செய்து உரையாடத் தொடங்கினார். காந்தியடிகளின் குரல் ஒலிக்கும் திசையில் தன் நடுங்கும் கைகளை நீட்டி அவரைத் தொட முயற்சி செய்தார் அவர். அதைப் புரிந்துகொண்ட காந்தியடிகள் அவர் கைகளைப் பற்றி அழுத்திக்கொடுத்ததோடு மட்டுமன்றி தன் முகத்தையும் அக்கைகளிடையில் பதித்தார். காந்தியடிகளின் முகத்தை கைகளால் வருடி, மூடிய கண்களில் ஒற்றிக்கொண்டார் முதியவர். அப்போது அவர் விழிகளில் கண்ணீர் பெருகியது. மகிழ்ச்சி பொங்க புன்னகைத்த அந்த முதியவர் காந்தியடிகளிடம் கொடுப்பதற்காக தன் மடியைத் துழாவி முடிச்சை அவிழ்க்கத் தொடங்கினார். முடிச்சின் இறுக்கத்தாலும் கை பதற்றத்தாலும் அதை அவிழ்க்க முடியாமல் தடுமாறினார். இறுதியாக எப்படியோ அவிழ்த்து அதில் முடிந்துவைத்திருந்த காலணா நாணயத்தை எடுத்து காந்தியடிகளிடம் நீட்டினார். அதை காந்தியடிகள் வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டார். அக்காட்சி அவர் உள்ளத்தைத் தொட்டது. பார்வையற்றவரின் பக்தியையும் சிரத்தையையும் கண்டு அவர் பரவசம் கொண்டார். மீண்டும் அவர் கைகளைப்பற்றி தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அந்தக் காலணாவை அங்கேயே ஏலத்துக்கு விட்டார் காந்தியடிகள். அதன் மூலம் அவருக்கு நாற்பது ரூபாய் கிடைத்தது. உடனே அந்தப் பணத்தை நிதியின் கணக்கில் சேர்த்துக்கொண்டார்.

ஒருமுறை காந்தியடிகளைச் சந்திக்க ஒரு விலைமகள் வந்திருந்தார். அவர் காந்தியடிகளை நெருங்கிச் சென்று உரையாடுவதை அங்கிருந்தவர்கள் அவ்வளவாக விரும்பவில்லை. அதனால் அவரை அங்கிருந்து எப்படியாவது வெளியேற்றிவிட முனைந்தனர். சலசலப்பின் மூலம் எதையோ உய்த்துணர்ந்த காந்தியடிகள் நடந்ததை விசாரித்து அந்தப் பெண்மணியை தன்னருகில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அவர் காந்தியடிகளை நெருங்கிவந்து கைகுவித்து வணங்கினார். காந்தியடிகளும் அவரை வணங்கி அவருடைய குறைகளை விசாரித்தார். அவர் தன்னைப்பற்றிய உண்மைகளை வெளிப்படையாகவே சொன்னார். அந்த வழியைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களையும் அவர் எடுத்துரைத்தார். அவர் மீது இரக்கம் கொண்டார் காந்தியடிகள். அவரிடம் உரையாடியதன் வழியாக அவர் மனம் திருந்தி வாழ விரும்புவதை உணர்ந்துகொண்டார். இராட்டையில் நூல் நூற்கவும் கதராடைகளை அணியவும் பழகுமாறு அவரைக் கேட்டுக்கொண்டார் காந்தியடிகள். தன் மனத்துக்குப் பிடித்த ஒருவரை தாமதம் செய்யாமல் தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்ளும்படி அறிவுரை சொன்னார். அந்த ஆலோசனை அந்தப் பெண்மணியிடம் நல்ல விளைவையே ஏற்படுத்தியது. அவரை மணம்புரிந்துகொள்ள விரும்பிய ஒருவரை உடனடியாகக் கண்டறிந்து மணம் செய்துகொண்டார். பிறகு கதர்ப்பிரச்சாரத்தில் இறங்கி தேசத்தொண்டிலும் ஈடுபட்டார்.

ஒருமுறை அதிகாலை நடைப்பயிற்சியின்போது வெகுதொலைவில் ஒரு தயிர்க்காரி வருவதையும் உடற்பயிற்சியை முடித்துவிட்டு அந்த வழியாகச் சென்ற காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அவள் மீது மோதி பானையை கிழே விழச் செய்து உடைத்ததையும்  காந்தியடிகள்தொலைவிலிருந்து பார்த்தார். அவள் அழுது புலம்பியபோதும் அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் சென்றுவிட்டனர். காந்தியடிகள் அவளை நோக்கிச் சென்றார். அவளுக்கு ஆறுதல் சொல்லி, தன் தங்குமிடத்துக்கு அழைத்துவந்தார். தான் பார்த்த நிகழ்ச்சிகளை கோர்வையாக எழுதி காவல்துறையினர் அவளிடம் நடந்துகொண்ட முறையை விரிவாக விளக்கி ஒரு கடிதமாக எழுதினார். இறுதியில் குற்றம் செய்தவர்கள் தயிர்க்காரியிடம் முறையாக மன்னிப்பு கேட்கவேண்டுமென்றும் இழப்பீடு தரவேண்டுமென்றும் குறிப்பிட்டார். முகாமில் தன்னுடன் தங்கியிருந்த ஒரு தொண்டர் வழியாக அக்கடிதத்தை காவல் நிலையத்தில் சேர்த்துவிடுமாறு சொல்லி கொடுத்தனுப்பினார். அந்த முயற்சி எதிர்பார்த்த பலனை அளித்தது. காவல்துறை அதிகாரி குற்றமிழைத்தவரோடு காந்தியடிகள் தங்கியிருந்த இடத்துக்கே வந்து வருத்தம் தெரிவித்தார். தயிர்க்காரியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு மட்டுமன்றி, உரிய இழப்பீட்டையும் அளித்துவிட்டுச் சென்றார்.

ஒருமுறை தாழ்த்தப்பட்டோர் நலனை முன்னிட்டு அவர் உண்ணாவிரதமிருந்தார். மறுநாள் காலையில் பழச்சாற்றை அருந்திவிட்டு உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தார். அவருக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த விடோபா என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறுவனை அருகில் அழைத்து அடுத்த நாள் காலையில் அவன் தனக்காக ஆரஞ்சுப்பழங்களைக் கொண்டுவர வேண்டுமென்றும் அந்தப் பழச்சாற்றை அருந்திய பிறகே  உண்ணாவிரதத்தைமுடிக்க திட்டமிட்டிருப்பதையும் தெரிவித்தார். அதைக் கேட்டு அச்சிறுவன் மிகவும் மகிழ்ந்தான்.

உடனே ஓடோடி அதைத் தன் தாயிடம் தெரிவித்தான். அவளோ அதை நம்பவில்லை. ஆயினும் மறுநாள் காலையில் அவனிடம் தான் வெகுநாட்களாகச் சேமித்துவைத்திருந்த நாலணாவை எடுத்துக் கொடுத்தாள். சிறுவன் அதை வாங்கிக்கொண்டு பழமண்டிக்கு ஓடினான். வழியில் சந்திக்க நேர்ந்தவர்களிடமெல்லாம் “காந்திஜி என்னிடம் ஆரஞ்சுப்பழங்கள் கேட்டார். அதை வாங்குவதற்காக கடைக்குச் செல்கிறேன்” என்று பெருமையாக சொல்லிக்கொண்டே போனான். கடைக்காரர்களிடமும் அதையே சொன்னான். அவர்கள் அவன் சொற்களை நம்ப மறுத்ததுமின்றி, கிண்டல் செய்து சிரிக்கவும் செய்தார்கள். சிறுவன் மிகவும் மனமுடைந்து போனான். அவன் வைத்திருந்த நாலணாவுக்கு எங்கும் பழங்கள் கிடைக்கவில்லை. கடைசியில் அந்த நாலணாவை வாங்கிக்கொண்டு வாடி வதங்கி எஞ்சியிருந்த நான்கு பழங்களை எடுத்து அவனிடம் கொடுத்தார் ஒரு கடைக்காரர். சிறுவன் அதை எடுத்துக்கொண்டு காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்த இடத்துக்குச் சென்றான். அங்கு கூட்டம் அலைமோதியது. அவனால் அதை ஊடுருவிக்கொண்டு செல்லவும் முடியவில்லை. காந்தியடிகள் குறிப்பிட்டிருந்த நேரமும் கடந்துவிட்டது. அதனால் வாசலிலேயே நின்றுவிட்டான்.

இதற்கிடையில் குறிப்பிட்ட நேரம் வந்ததும் பலர் காந்தியடிகளை நெருங்கிவந்து கூடைகூடையாக பழங்களை வைத்துவிட்டுச் சென்றார்கள். காந்தியடிகள் தனக்கு அருகிலிருந்தவரை அழைத்து “விட்டோபா இன்னும் வரவில்லையா?” என்று கேட்டார். அவருக்கு எதுவும் புரியவில்லை. அவன் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறுவனென்றும் அவன் கொண்டுவரும் பழத்தின் சாற்றை அருந்தி உண்ணாவிரதத்தை முடிப்பதாக அவனிடம் சொல்லியிருப்பதாகவும் தெரிவித்தார். அதற்குப் பிறகு அனைவரும் அவன் பெயரைச் சொல்லி அழைத்தபடி தேடத் தொடங்கினார். அந்த அரங்கிலேயே அவன் இல்லை. வெளியே நின்றிருக்கக் கூடும்  என்றஎண்ணத்தில் ஒருவர் வாசலைக் கடந்துவந்து “இங்கே விட்டோபா இருக்கிறானா? யார் அந்தச் சிறுவன்?” என்று கேட்டார். அதைக் கேட்டதும் பரபரப்புடன் எழுந்து வந்தான் சிறுவன். அவன் கையில் வைத்திருந்த பழங்களைப் பார்த்ததும் அந்தத் தொண்டருக்கு எல்லாம் புரிந்துவிட்டது. “வா, வா. காந்தி உனக்காகத்தான் காத்திருக்கிறார்” என்று சொன்னபடி அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

காந்தியடிகளின் முன்னால் நிற்கும்போது சிறுவனின் கண்கள் கலங்கின. அவனால் ஒன்றுமே பேசமுடியவில்லை. தன்னிடம் இருந்த பழங்களை அவரிடம் கொடுத்தான். அவர் அவற்றை மகிழ்ச்சியுடன் வாங்கி சாறு பிழிந்து பருகி அந்த உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டார்.

இப்படி தான் நேருக்குநேர் கண்ட நிகழ்ச்சிகளையும் மற்றவர்கள் வழியாக அறிந்துகொண்ட எண்ணற்ற நிகழ்ச்சிகளையும் சுவையாகத் தொகுத்தளித்திருக்கிறார் ஆக்கூர் அனந்தாச்சாரி. காகா காலேல்கர், ஹரிஹர சர்மா, ஆபா காந்தி, மனு காந்தி, மிலி போலக், நாராயண தேசாய், அவினாசிலிங்கம் என காந்தியடிகளுடன் நெருக்கமாக இருந்த பலர் காந்தியடிகள் பற்றிய செய்திகளை எழுதியிருக்கிறார்கள்.  அவ்வரிசையில்ஆக்கூர் அனந்தாச்சாரியின் புத்தகமும் மிகமுக்கியமானது. அது இப்போது அச்சில் கிடைக்கவில்லை என்பதுதான் பெரிய குறை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2025 17:48

அலகிலா விளையாட்டு

 

இமயமலையைஒட்டியிருக்கும் ஆலயங்களில் சார்தாம் என அழைக்கப்படுகிற நான்கு கோவில்கள் (கேதாரிநாத்,பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி) மிகமுக்கியமானவை. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பல்வேறுபகுதிகளிலிருந்து திரண்டுவரும் மக்கள் அந்த ஆலயங்களில் வழிபட்டுச் செல்கிறார்கள். இவையனைத்தும்கடுமையான குளிரும் பனியும் சூழ்ந்த இடங்கள் என்பதால் குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமேஅந்த ஆலயங்கள் திறந்துவைக்கப்படுகின்றன.

கங்கையின்கிளைநதிகளில் ஒன்றான மந்தாகினி ஆற்றங்கரையோரமாக கேதார்நாத் ஆலயம் அமைந்துள்ளது. பாண்டவர்கள்தம் பாவத்தைப் போக்க நடந்தே இந்த மலையுச்சிக்கு வந்து வழிபட்டதாக ஒரு நம்பிக்கை உண்டு.எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் இந்த இடத்துக்கு வந்து பாண்டவர்கள் வழிபட்ட இடத்துக்குஅருகிலேயே புதிதாக ஒரு கோயிலை உருவாக்கினார். பனி படர்ந்த மலைகளுக்கும் மந்தாகினிக்கும்இடையில் உள்ளதால் இந்தக் கோவில் ஒவ்வொரு ஆண்டிலும், ஏப்ரல் மாதம் அட்சயத்திருதியை நாள்முதல் தீபாவளித்திருநாள் வரை மட்டுமே திறந்திருக்கும். அதற்குப் பிறகு கோவிலில் உள்ளவிக்கிரகங்கள் மலையடிவாரத்தில் உள்ள குப்தகாசியின் உக்கி மடத்துக்கு எடுத்துவரப்பட்டுவழிபாடு தொடர்ந்து நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.

கேதார்நாத்துகுக்குச்செல்பவர்கள் கெளரிகுண்ட் என்னும் இடம் வரைக்கும் சாலை வழியாகச் செல்லமுடியும். அதற்குப்பிறகு பதினாலு கிலோமீட்டர் தொலைவு நடந்து செல்லவேண்டும். குதிரை, கழுதை வாகனத்திலும்செல்லலாம். வானிலை சரியாக இருந்தால் ஹெலிகாப்டர் வழியாகவும் செல்லலாம். வேறு வழி எதுவும்இல்லை.

கோவிலுக்குப்பின்னால் சோராபரி பனி ஏரி உள்ளது. அமைதியில் உறைந்திருப்பதுபோலத் தோற்றமளித்தாலும்ஏறத்தாழ அறுபதடி ஆழம் கொண்டது. அதே அளவுக்கு உயரமான தடித்ததொரு பனிச்சுவர் அந்த ஏரியின்அரணாக காலம் காலமாக விளங்குகிறது. பனியே சுவராகவும் பனியே நீராகவும் தோற்றம் கொண்டுமிளிர்கிறது அந்த அற்புத ஏரி.

புதுவையைச்சேர்ந்த மஞ்சுநாத் எழுதியிருக்கும் ’அப்பன் திருவடி’ நாவலை வாசிக்கத் தொடங்கும் முன்பாக,கடல்மட்டத்திலிருந்து ஏறத்தாழ மூவாயிரத்தைநூறு அடி உயரத்தில் அமைந்திருக்கும் அந்தஆலயத்தைச் சுற்றியுள்ள  நில அமைப்பைப் புரிந்துகொள்வதுமிகமுக்கியம். கேதார்நாத்துக்கும் கெளரிகுண்ட்டுக்கும் இடைப்பட்ட இடத்தில்தான் மொத்தநாவலின் கதையும் நிகழ்கிறது.

2013ஆம்ஆண்டில் கேதார்நாத் கோவிலுக்கு அருகில் இடிமுழக்கத்துடன் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டது.அதையொட்டி மந்தாகினி ஆறு பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. சோராபரி ஏரி வழிந்து எடைதாளாமல் பனிச்சுவர் உடைந்தது. வரலாறு காணாத வகையில் ஒரு வெள்ளப்பெருக்கு உருவாகி பெரியபெரிய பாறைகளை உருட்டிக்கொண்டு ஓடியது. எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் மிதந்துவந்தஒரு பெரிய பாறை கோவில் பின்புறம் சிக்கி நின்று இயற்கையாகவே ஒரு தடையை ஏற்படுத்தியது.வெள்ளம் அப்புள்ளியில் இரண்டாகப் பிளந்து கோவிலைச் சுற்றிக்கொண்டு ஓடியது. வழியில்தென்பட்ட மனிதர்களும் மரங்களும் விடுதிகளும் வீடுகளும் சாலைகளும் வெள்ளத்தோடு  அடித்துச் செல்லப்பட்டன.  உயிர்சேதத்துக்கு அளவே இல்லை. உடனடியாக மீட்புப்பணிகள்எதையும் தொடங்க இயலாத சூழலில் அரசு திணறியது. பல நாட்களுக்குப் பிறகுதான் மீட்புப்பணிகள்தொடங்கப்பட்டன. கோவிக்குள்ளேயே தஞ்சமடைந்த ஒருசிலர் மட்டுமே பல நாட்களுக்குப் பிறகுமீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டனர்.   துரதிருஷ்டவசமாகஅவர்களில் பாதிப் பேருக்கும் மேல் மனச்சிதைவுக்கு ஆளானார்கள். கோவிலையும் சாலைகளையும்சீரமைக்கும் பணிகள்  ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றன.அதற்குப் பிறகு பக்தர்கள் மறுபடியும் ஆலய வழிபாட்டுக்குச் செல்லத் தொடங்கினர்.

கேதார்நாத்பயணத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட தருணத்தில் சந்தித்துக்கொண்ட இருவர் அதிர்ஷ்டவசமாகவோ,துரதிருஷ்டவசமாகவோ அடுத்த பயணத்தில் தற்செயலாகச் சந்தித்துக்கொள்வதாக ஒரு தருணத்தைஇந்த நாவலில் நம் முன் நிகழ்த்திக்காட்டுகிறார் மஞ்சுநாத். ஒருவர் சுருளிச்சாமி எனஅழைக்கப்படுபவர்.  ராணுவ வீரர். இன்னொருவர்மாதவ். கெளரிகுண்ட்டிலிருந்து குதிரை மீது பக்தர்களை அழைத்துவந்து வாழ்க்கைக்கான பொருளையீட்டும்சாதாரண குதிரைக்காரன். நாவலின் கதைக்களம் அக்கணத்திலிருந்து விரிவடைந்தபடி செல்கிறது.

அந்தப்பருவத்திற்குரிய வழிபாட்டின் இறுதிநாளில் கதை தொடங்குகிறது. பிரசாதத்தை வாங்கிக்கொண்டுதனக்கு அருகிலில்லாத மனைவியோடும் மகளோடும் பேசியபடி மனம்போன போக்கில் படியிறங்கிச்செல்கிறார் சுருளிச்சாமி. அவருடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மனச்சமநிலையற்றவராகவே அவரைப்பார்க்கவைக்கிறது. குதிரைப்பாதையில் சண்டித்தனம் செய்து தன் மீது அமர்ந்திருந்தவரைக்கீழே விழவைத்ததால் குதிரைப்பயணத்தை ரத்து செய்துவிட்டு கீழே இறங்கிச் சென்றுவிடுகிறார்ஒரு பக்தர். வருமானத்துக்கான வழியைக் கெடுத்துவிட்டதே என்கிற ஆத்திரத்தில் குதிரையைஅடித்து விளாசுகிறான் மாதவ். குதிரை இறந்துவிடுகிறது.   அடுத்து என்ன செய்வது என்கிற குழப்பத்தோடு கோவில்பாதையில் நடந்தபடியே இருக்கிறான் அவன். அப்போதுதான் பித்தனைப்போல பேசியபடி செல்லும்சுருளிச்சாமி ஆபத்தான பள்ளத்தை நோக்கிச் செல்வதை உணர்ந்து பனிப்பள்ளத்தில் விழுந்துவிடாமல்காப்பாற்றி மேலேற்றி அழைத்துவந்து ஆசுவாசப்படுத்துகிறான்.

இருவருமேமூச்சு வாங்க ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும்போது, இருவருமே தாம் ஏற்கனவே அறிமுகமானவர்கள்என்பதைப் புரிந்துகொள்கிறார்கள்.  வெள்ளப்பெருக்குஏற்படுவதற்குச் சிற்சில நிமிடங்களுக்கு முன்பாக அந்த ராணுவவீரரும் மாதவும் குப்தகாசியில்சந்தித்துக்கொண்டவர்கள். குப்தகாசியிலிருந்து கேதார்நாத்துக்குச் செல்லவிருந்த ராணுவஉயர் அதிகாரிக்குத் துணையாக அந்த வீரர் ஹெலிகாப்டரில் செல்லவேண்டியிருந்தது. அதிகாரியின்ஆணையை அவரால் மீறமுடியவில்லை. அதனால் குதிரைக்காரனாக இருந்த மாதவ் வசம் தன் மனைவியையும்மகளையும் கேதார்நாத்துக்குப் பாதுகாப்பாக அழைத்துவரும் பொறுப்பை அளித்துவிட்டு அவர்அதிகாரியுடன் சென்றுவிடுகிறார்.

வானத்தில்பறந்துகொண்டிருந்தபோது பனிமூட்டத்தின் காரணமாக கருடச்சட்டி பாறையில் மோதி ஹெலிகாப்டர்வெடித்துச் சிதறிவிடுகிறது. அதிகாரியும் அதிகாரிக்குத் துணையாகச் சென்ற வீரரும் எங்குவிழுந்தார்கள் என்பதே தெரியவில்லை. தன் சகோதரர்களோடும் ராணுவவீரரின் குடும்பத்தாரோடும்கேதார்நாத்துக்குச் செல்கிறான் மாதவ். கேதார்நாத்தில் எதிர்பாராத விதமாக நிலச்சரிவும்வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு அந்தச் சூழலையே அலங்கோலமாக மாற்றிவிடுகின்றன. மாதவ் தான்வாக்களித்தபடி அபயமென ஏற்றுக்கொண்டவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் கடைசிவரை போராடுகிறான்.எனினும் அவன் முயற்சி தோல்வியிலேயே முடிவடைகின்றன. அனைவரும் மரணமடைகிறார்கள்.  அவன் மட்டும் எப்படியோ உயிர்பிழைக்கிறான்.

அனைவரையும்காப்பாற்றுவதற்குப் போராடித் தோற்ற கதையை அந்தச் சந்திப்பில் சுருளிச்சாமியிடம் சொல்கிறான்மாதவ். இத்தனை காலமும் அவர்கள் எங்கோ உயிருடன் இருக்கக்கூடும் என்ற எண்ணத்தோடு மனைவியோடும்மகளோடும் கற்பனையில் வாழ்ந்துவந்த அவருடைய  கனவு அக்கணத்தில் கலைந்துவிடுகிறது. எதார்த்த உண்மைசுருளிசாமியின் நெஞ்சில் அளவில்லாத பாரத்தை ஏற்றிவைத்துவிடுகிறது. அமைதியின்மை இருவரையுமேஅலைக்கழிய வைக்கிறது. இருவருமே ஆளுக்கொரு திசையில் பிரிந்துசென்று விடுகிறார்கள். மலையைவிட்டு இறங்காமல் மலைப்பாதையிலேயே புதியபுதிய இடங்களை நோக்கி நடந்துகொண்டே இருக்கிறார்சுருளிசாமி. மாதவ் மலையிலிருந்து விழுந்து உயிர்துறக்க நினைக்கிறான். ஆனால் ராணுவ முகாமைச்சேர்ந்தவர்கள் அவனைக் காப்பாற்றி உயிர் பிழைக்கவைக்கின்றனர்.

மரணம்வரைக்கும் சென்று மீண்டுவந்த இருவரும் மீண்டும் ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு வகையில் வாழத்தொடங்கக்கூடும் என்பதுதான், அதுவரை நாவலை வாசித்துவந்தவர்களின் எண்ணமாக இருக்கக்கூடும்.  ஆனால் அவர்கள் ஏன் அப்படி நினைக்கவில்லை என்பதுதான்வியப்பளிக்கிறது. வாழ்ந்தது போதும் என்கிற எண்ணம் அவர்களுக்கு எப்படியோ ஏற்பட்டுவிடுகிறது.அத்தகு முடிவை அவர்கள் இழப்பின் காரணமாகவோ வேதனையின் காரணமாகவோ எடுக்கவில்லை. மாறாக,மனம் விரும்பியே அந்த முடிவை எடுக்கிறார்கள். ஒருவர் இருப்பிடம் இன்னொருவருக்குத் தெரியாமல்இமயமலையின் முன் அலையத் தொடங்குகிறார்கள். அப்பன் திருவடி அவர்களை அங்கேயே வட்டமிடவைத்துவிடுகிறது.

சுருளிச்சாமி,மாதவ் மட்டுமல்ல, இமயமலையைச் சுற்றிச்சுற்றி இப்படி நிறைவுடன் வாழ்பவர்கள் பலர். அவர்களில்சிலருடைய சித்திரங்களும் நாவலின் போக்கில் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கின்றன. ராணுவ வீரர்உயிரிழந்த அதே ஹெலிகாப்டர் விபத்தில் ஒரு மருத்துவர் மட்டும் தப்பிப் பிழைக்கிறார்.ஆனால் ஊருக்குத் திரும்பாமல் அங்கேயே துறவியாகத் திரியத் தொடங்கிவிடுகிறார். அங்கேஅலைகிற யோகிகள், முனிவர்கள், ரிஷிகள், மகான்கள் அனைவரும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறுநிலப்பகுதிகளிலிருந்து இமயமலையை நோக்கி வந்தவர்கள். ஆனால் மீண்டும் நிலத்தை நோக்கிச்செல்லும் விருப்பத்தைத் துறந்து அங்கேயே நிலையாகத் தங்கிவிட்டவர்கள்.

இந்தநாவல் வழியாக மஞ்சுநாத் முன்வைத்திருக்கும் கேள்வி இதுதான். இமயமலை தன்னை நாடிவரும்மனிதர்களின் நெஞ்சில் உருவாக்கும் உணர்வலைகள் எத்தகையவை? ஒருசிலர் அதன் காட்சியைக்கண்டு களித்துவிட்டு ஆனந்த அனுபவத்தோடு மீண்டும் நிலத்தை நோக்கித் திரும்பிச் செல்கிறார்கள்.இன்னும் ஒருசிலர் ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஓர் இயற்கைப் பேரிடர்களில் சிக்கி உயிரிழக்கிறார்கள்.இன்னும் ஒரு சிலர் இமயமலையைத் தரிசித்த நிறைவோடு தன் வாழ்க்கையைத் தானே அந்தப் புள்ளியிலேயேமுடித்துக்கொள்கிறார்கள். இன்னும் ஒரு பகுதியினர் மட்டும் கீழே இறங்க மனமின்றி தாயின்இடுப்பிலேயே அமர்ந்திருக்க நினைக்கும் குழந்தையென இமயமலையையே சுற்றிச்சுற்றி வந்துகொண்டேஇருக்கிறார்கள். ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, மீண்டும் மீண்டும் இதுவே நிகழ்ந்தபடிஇருக்கிறது. காரணம் கண்டறிந்து சொல்லமுடியாத ஒரு புதிரான வாழ்க்கையை நமக்குக் காட்டுகிறார்மஞ்சுநாத். நம்மிடமும் அதற்கு விடையில்லை. அவரைப்போலவே நாமும் மலைப்போடு அவர்களை அண்ணாந்துபார்க்கவேண்டியவர்களாகவே இருக்கிறோம்.

இந்தநாவலை வாசிக்கும் போக்கில் ஏதேனும் ஒரு தருணத்தில் ‘உலகம் யாவையும் தாமுளவாக்கலும்நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார்’ என்னும் கம்பன் வரிகளைநினைத்துக்கொள்ளாமல் படிக்கவே முடியாது. அப்பன் திருவடியின் அலகிலா விளையாட்டை நாம்கண்ணால் பார்க்கலாம். ஆனால் அதற்கான காரணத்தை வகுத்துரைக்கும் ஆற்றல் நம் செயல் எல்லைக்குஅப்பாற்பட்டதாக இருக்கிறது.

 

(அப்பன் திருவடி. நாவல். மஞ்சுநாத். எதிர்வெளியீடு, 96, நியு ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி. விலை. ரூ375)

 

(புக் டே – இணைய இதழ் – 08.11.2025)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2025 17:43

Paavannan's Blog

Paavannan
Paavannan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Paavannan's blog with rss.