எஸ்.எல்.பைரப்பா : உண்மையின் அழகு

 

இருபதாம்நூற்றாண்டின் தொடக்கத்தில் கர்நாடகத்தின் பல பகுதிகளில் பிளேக் என்னும் நோய் பரவிஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியது. ஓராண்டு காலம் நீண்ட தீவிரமான மருத்துவச் சிகிச்சையின் விளைவாக ஒரு வழியாக பிளேக்தடுக்கப்பட்டது. எனினும் நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும்  பிளேக் நோய் மீண்டும் பரவத் தொடங்கிகிராமங்களிலும் நகரங்களிலும் பல உயிர்களைப் பலி வாங்கத் தொடங்கியது.

ஹாசன்மாவட்டத்தைச் சேர்ந்த சந்தேஷிவர என்னும் சிற்றூரும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டகிராமங்களில் ஒன்று. அந்த ஊரில் அப்போதுதான் திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்குச்செல்வதற்காகக் காத்திருந்த ஓர் இளம்பெண்ணையும் தொடக்கப்பள்ளியில்படித்துக்கொண்டிருந்த இரு சிறுவர்களையும் கொண்ட ஒரு குடும்பத்தை பிளேக் தாக்கிநிலைகுலைய வைத்தது. அக்குடும்பத்தின் தலைவன் விவேகமில்லாத ஓர் உதவாக்கரை மனிதன்.பிறரைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் வேளாவேளைக்கு இருப்பதைச் சாப்பிட்டுவிட்டுஊர் சுற்றிப் பொழுது போக்குபவன். அக்குடும்பத்தின் தலைவி அன்பும் பாசமும் கொண்டவள்என்றபோதும் அவளால் பிளேக் நோய் தாக்கிய பிள்ளைகளுக்கு மருத்துவம் செய்ய முடியவில்லை.

மருமகளாகபுகுந்த வீட்டுக்குச் செல்லவேண்டிய மகளை அவள் முதலில் இழக்கிறாள். அடுத்துவிளையாட்டுப் புத்தி நீங்காத சின்ன மகன் இறக்கிறான். உயிருடன் பிழைத்திருக்கும்நடுப்பிள்ளையாவது பிழைத்திருக்க வேண்டும் என்று அந்தத் தாயின் உள்ளம் துடிக்கிறது.தன் பிறவியே பொருளற்றுப் போய்விடுமோ என அவள் மனம் நடுங்குகிறது. இப்படிஅடுத்தடுத்து மரணமடைவதைப் பார்க்கத்தானா இந்தப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தோம் எனகதறி அழுகிறாள்.

ஏதோ ஒருகணத்தில் ஆவேசத்துடன் உயிர்த்திருக்கும் பிள்ளையை அழைத்துச் சென்று, அவர்கள்வணங்கும் தெய்வத்தின் சந்நிதியில் தள்ளிவிடுகிறாள். ”இனிமேல் இவன் என் பிள்ளைஇல்லை. இவன் உன் பிள்ளை. இவனைப் பிழைக்கவைப்பதாக இருந்தாலும், உயிரைப் பறிப்பதாகஇருந்தாலும், அது உன் பொறுப்பு. எனக்கும் இவனுக்கும் இனிமேல் எந்தத் தொடர்பும்இல்லை. இது சத்தியம். சத்தியம். சத்தியம்” என்று முழங்குகிறாள். இரவு வரைக்கும்அங்கேயே அமர்ந்து மனம் ஆறும்வரை அழுதுவிட்டு தாயும் மகனும் வீட்டுக்குத்திரும்புகின்றனர். ஒருசில நாட்களில் அச்சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறிஉயிர்பிழைத்துவிடுகிறான். அக்கிராமத்துத் தெய்வத்தின் பெயரையே தன் பெயராகக் கொண்டிருந்தான்அச்சிறுவன்.  அச்சிறுவனே சந்தேஷிவரலிங்கண்ணையா பைரப்பா என்கிற எஸ்.எல்.பைரப்பா.

‘சுவர்’ என்னும்தலைப்பில் எஸ்.எல்.பைரப்பா எழுதிய தன்வரலாறு கன்னடத்தில் எழுதப்பட்ட முக்கியமானதன்வரலாறுகளில் ஒன்று. அவருடைய இளமைக்கால அனுபவங்களையும் பிளேகால் பாதிக்கப்பட்டதன் கிராமத்துச் சித்திரங்களையும் கல்வி கற்பதற்கு பட்ட பாடுகளையும் அவர் அந்தத்தன்வரலாற்றில் விரிவாகவே எழுதியிருக்கிறார்.

சிறுவயதுக்கேஉரிய குறும்புகளோடும் துடுக்குத்தனத்தோடும் வளர்ந்திருக்கிறார் பைரப்பா. சந்தேஷிவரவிவசாயத்தை நம்பியிருக்கும் கிராமம். திரும்பிய பக்கங்களிலெல்லாம் கிணறுகளும்,கால்வாய்களும் இருந்தன. ஊரின் எல்லையில் இருந்த ஏரி, அந்த ஊருக்கு மட்டுமன்றி,அக்கம்பக்கத்து கிராமங்களுக்கும் நீராதரமாக இருந்தது.

நீரைப்பார்த்ததுமே இறங்கி நீச்சலடிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட பைரப்பா பொழுதுமுழுதும்கிணறுகளையும் கால்வாய்களையும் வலம் வந்தார். அதற்குப் பொருத்தமான நண்பர்கள் அவரைச்சுற்றி இருந்தனர். நீச்சல் பித்து மட்டுமன்றி அவருக்கு நாடகம் பார்க்கும் பித்தும்இருந்தது. தன் கிராமத்தில் நடிக்கப்படும் நாடகத்தை மட்டுமன்றி சுற்றுவட்டார்த்தில்உள்ள கிராமங்களில் நடைபெறும் நாடகங்களுக்கும் நண்பர்கள் குழுவோடு தெரிந்தும்தெரியாமலும் புறப்பட்டுச் சென்று பார்க்கும் பழக்கமும் இருந்தது.

ஒருமுறைபன்னிரண்டு மைல்களுக்கு அப்பால் நடந்த ஒரு நாடகத்துக்கு, ஒருவரிடமும் சொல்லாமல்நண்பர்களோடு சேர்ந்து புறப்பட்டுப் போய்விட்டார். பகல் முழுதும் நடந்துசென்றுஇரவெல்லாம் நாடகம் பார்த்துவிட்டு விடிந்ததும் நடக்கத் தொடங்கி நண்பகல் வேளையில்வீட்டுக்கு வந்துசேர்ந்தார். அதற்கிடையில் விடிந்ததும் மகனைக் காணாத தாய்பதறியடித்துக்கொண்டு  ஊரெங்கும் தேடத் தொடங்கிவிட்டார்.ஊரிலுள்ள எல்லாக் கிணறுகளிலும் ஆட்களை இறக்கித் தேடவைத்தார். எங்கும்கிடைக்கவில்லை என்றதும் அவருடைய பதற்றம் அதிகரித்துவிட்டது. பித்துப் பிடித்ததுபோலவாசலில் உட்கார்ந்துவிட்டார். உச்சி வெயிலில் பசியோடு நடந்துவந்து வந்து வாசலில்நின்ற மகனைப் பார்த்த பிரகுதான் அவருடைய பீதி அகன்றது. ஆயினும் ஆத்திரம்பொங்கியது. சரமாரியாக அடித்துவிட்டார். இனி கட்டுப்பாடான ஓர் இடத்தில் மகன்இருப்பதுதான் அவன் வாழ்க்கைக்கு நல்லது என நினைத்து பாகூரு என்னும் சிற்றூரில்வாழ்ந்து வந்த தன் சகோதரரின் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். படிப்பதற்கும் அங்குஏற்பாடு செய்யப்பட்டது.

எதிர்பாராதவிதமாக அவருடைய தாயார் இயற்கையெய்தினார். அதற்குப் பிறகு தாய்மாமனின் குடும்பம்அவரிடம் பாரபட்சமாக நடக்கத் தொடங்கினர். வசைகளும் அடிகளும் பொறுக்கமுடியாதஎல்லைக்குச் சென்றன. அதனால் ஆசிரியரொருரின் உதவியோடு அங்கிருந்து வெளியேறி  சிறிது தொலைவில் உள்ள நுக்கேஹள்ளி என்னும்சிற்றூருக்குச் சென்று அங்கிருந்த பள்ளியில் சேர்ந்தார்.

புதியகிராமத்தில் தங்குவதற்கு இடமில்லை. அதனால் கோயில் மண்டபத்தில் படுத்துறங்கினார்.மண்டபத்தில் சீட்டுக்கட்டு விளையாட வந்த ஊர்க்காரர்கள் படிக்கிற பிள்ளைக்கு ஆதரவுகொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு வீட்டில் சாப்பாடுஅளித்து உதவினர். தொடக்கப்பள்ளியில் படித்துமுடித்ததும் அவர்மீது நல்ல மதிப்புகொண்டிருந்த ஆசிரியரொருவர் சென்னராயப்பட்டணத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில்சேர்வதற்கு உதவினார். அங்கும் கோயில் மண்டபத்தில் தங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவீட்டில் சாப்பாடு வாங்கி பசியைத் தணித்துக்கொண்டார். அவர் பிராமண மாணவர் என்பதால்அந்த ஊரைச் சேர்ந்த அக்கிரகாரத்துக் குடும்பங்கள் அவருக்கு உணவு வழங்கின.

அவர்அங்கிருப்பதை எப்படியோ அறிந்துகொண்ட அவருடைய தந்தையார் ஒருநாள் அவரைத் தேடிக்கொண்டுஅந்த ஊருக்கு வந்துவிட்டார். அவர் தங்கியிருந்த அதே கோயில் மண்டபத்திலேயே அவரும்தங்கிக்கொண்டு தனக்கும் சேர்த்து சாப்பாடு வாங்கிவந்து கொடுக்குமாறுகட்டளையிட்டார். வேறு வழியில்லாமல் நான்கு நாட்களுக்கு வாங்கிக்கொண்டு வந்துகொடுத்தார் பைரப்பா. ஐந்தாம் நாள் காலையில் பள்ளிக்கூடம் கிளம்புவதற்குமுன்பே  இனிமேல் தன்னால் அவருக்கும்சேர்த்து உணவு வாங்கிக்கொண்டு வரமுடியாது என்று திட்டவட்டமாகத்தெரிவித்துவிட்டார்.

அதைக் கேட்டுசீற்றம் கொண்ட அவருடைய அப்பா மகனைப் பழிவாங்க முடிவு செய்தார். அக்கிரகாரத்தில்அவருக்குச் சாப்பாடு வழங்கிய குடும்பத்தினரைச் சந்தித்து தன்னைஅறிமுகப்படுத்திக்கொண்டு “பைரப்பா அணிந்திருப்பது கள்ளப்பூணூல். அவனுக்குச்சாப்பாடு போடாதீர்கள்” என்று பிரச்சாரம் செய்துவிட்டு ஊரைவிட்டுச் சென்றுவிட்டார்.அன்று இரவு சாப்பாடு வாங்குவதற்குச் சென்ற பைரப்பாவின் தட்டில் ஒருவர் கூடசாப்பாடு போடவில்லை. எல்லா வீட்டிலும் அவரைத் தாழ்த்திப் பேசி அனுப்பினர்.ஏமாற்றத்தோடும் பட்டினியோடும் கோயில் மண்டத்துக்குத் திரும்பிய அவர் அன்றுசோர்வில் மூழ்கிவிட்டார். அப்போதும் அவருக்கு உதவியாக நின்றவர் ஓர் ஆசிரியரே.

இளமையில் அடுத்தடுத்துஅவர் சந்தித்த மரணங்களும் வறுமைச்சூழலும் அவரைப் பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்தின.விடைதெரியாத எண்ணற்ற கேள்விகள் அவர் நெஞ்சில் பொங்கிப்பொங்கி எழுந்தன.யமுனாச்சாரியார் என்னும் தத்துவப் பேராசிரியர் அவரைத் தத்துவப் பிரிவில் சேர்ந்துபடிக்கும்படி தூண்டினார். தர்க்கத்தின் அடிப்படையில் ஒரு செய்தியைப்புரிந்துகொள்ளவும் தெளிவு பெறவும் தத்துவம் உதவும் என்ற ஆசிரியரின் சொல்லை பைரப்பாஏற்றுக்கொண்டார். தத்துவப் பிரிவிலேயே இளநிலை, முதுநிலை பட்டங்களைப் பெற்றார்.முனைவர் பட்டமும் பெற்றார். படித்து முடித்ததும் அவர் கல்லூரிப் பேராசிரியராகவேலையில் சேர்ந்தார். படிக்கும் காலத்தில் அவர் தனக்குக் கிடைத்த சிறுசிறுவேலைகளையெல்லாம் செய்தார். தியேட்டரில் வாயில்காப்பாளனாக வேலை பார்த்தார். ஒருகடையில் கணக்கு எழுதினார். எல்லாத் துயரங்களிலிருந்தும் மீண்டு வர அவருக்குக்கல்வி அவருக்கு நற்றுணையாக விளங்கியது.

தத்துவ வாசிப்புஅவரை இலக்கியம் வாசிப்பவராகவும் மாற்றியது. சரத்சந்திரர், அநாக்ரு என அழைக்கப்பட்ட.கிருஷ்ணராவ்,தேவுடு, சிவராம காரந்த் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை விரும்பிப் படித்தார்.வாசிப்புப்பயிற்சி அவருக்குள் எழுத்தார்வத்தை உருவாக்கியது. மாணவப்பருவத்திலேயேஅவர் எழுதத் தொடங்கிவிட்டார்.

தன் நெஞ்சில்எப்போதும் நிறைந்திருக்கும் தன் தாயாரின் நினைவுகளைத் தொகுத்து ‘அம்மா’ என்னும்தலைப்பில் ஒரு சிறுகதையை முதன்முதலாக எழுதினார். ‘கஸ்தூரி’ என்னும் இதழில்அச்சிறுகதை வெளிவந்தது. அந்தக் கதை அவருக்கு எழுத்து சார்ந்து ஒரு நம்பிக்கையையும்தெளிவையும் அளித்தது. அதே சமயத்தில் சிறுகதைகளை அல்ல, நாவல்களை மட்டுமே தன்னால்எழுதமுடியும் என்பதையும் அவர் உணர்ந்துகொண்டார். தன் சிந்தனைகளுக்கும்அனுபவங்களுக்கும் நாவல் வடிவமே பொருத்தமாக இருக்கும் என அவர் நம்பினார். அதனால்அந்த ஒரே சிறுகதையோடு, சிறுகதைத்துறையை விட்டு விலகி நாவல் தொடர்பான சிந்தனையில்மூழ்கினார்.

தத்துவத்தில்முனைவர் பட்டம் பெற்ற பைரப்பாவுடைய ஆய்வேட்டின் தலைப்பு ‘உண்மையும் அழகும்’.இன்றளவும் அந்த ஆய்வேடு ஒரு முன்னோடி ஆய்வேடாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.இறுதி மூச்சு வரை தன்னை தத்துவத்தின் மாணவராகவே அவர் கருதி வந்தார். வெவ்வேறுபின்னணிகளில் தன் நாவல்கள் எழுதப்பட்டாலும் அந்தப் பின்னணியில் அமைந்திருக்கும்உண்மையையும் அழகையும், தத்துவத்தை ஒரு கருவியாகக் கொண்டு ஆய்ந்தறிவதே தன்படைப்புகளின் நோக்கம் என அவர் பல அரங்குகளில் சொல்லிவந்திருக்கிறார்.

அவருடைய பலபடைப்புகள், அவை எழுதி வெளிவந்த உடனேயே ஒரு விவாதப்பொருளாக மாறிவிடுவதுண்டு. அப்படி விவாதமெழும் ஒவ்வொரு முறையும் அவர்தன் நாவல் பேசும் உண்மை தான் கண்ட உண்மை என்றும் தன்னுடைய பார்வை என்றும்இன்னொருவர் அதே தளம் சார்ந்து இன்னொரு உண்மையைக் கண்டறிந்து சொல்வதற்கு எப்போதும்இடமுண்டு என்று விடாப்பிடியாக அவரும் சொல்லி வந்திருக்கிறார். ஆனால் அவரோடுவிவாதத்தில் இறங்கிய அனைவரும் அவரை எதிர்க்கும் மும்முரத்தில் அச்சொற்களை உரியகவனம் கொடுத்துக் கேட்க விரும்பாதவர்களாகவே இருந்ததுதான் துரதிருஷ்டம்.

பீமகாய என்பதுஅவருடைய முதல் நாவல். கல்லூரி மாணவராக இருந்தபோதே, அந்நாவலை எழுதி வெளியிட்டார்.அது ஒரு பயில்வானுடைய கதை. ஒரு மல்யுத்த வீரனின் வெற்றிக்குப் பின்னால் உள்ளஉழைப்பையும் தியாகத்தையும் அந்த நாவலில் சிறப்பாகவே பதிவு செய்திருந்தார் பைரப்பா.

1958 முதல் 2017 வரையில் ஏறக்குறைய அறுபதாண்டு காலத்தில் பைரப்பாஇருபத்தைந்து நாவல்களை எழுதியிருக்கிறார். அவரை ஒரு மரபான கதைசொல்லி என ஒருபோதும் சுருக்கிமதிப்பிட முடியாது. ஒவ்வொரு நாவலையும் அவர் ஒவ்வொரு பின்னணி சார்ந்து எழுதியிருக்கிறார்.பின்னணி சார்ந்த தகவல்களை மிகவும் பாடுபட்டுத் திரட்டுபவர் அவர். ஆனால் அத்தகவல்களைஅவர் தம் நாவலில் ஒருபோதும் நிறைத்துவைப்பதில்லை. ஒவ்வொரு பின்னணியிலும் அடிப்படையாகஉள்ள ஆன்மிகத்தளத்தைத் தொட்டுப் பார்ப்பதே அவருடைய நோக்கமாக இருக்கிறது. 

அவருக்கு மாபெரும் புகழைத் தேடிக் கொடுத்த ‘ஒரு குடும்பம் சிதைகிறது’கிட்டத்தட்ட அவருடைய தன்வரலாற்றின் ஒரு பகுதி என்றே சொல்லலாம். சூறாவளிக்காற்றில் சிக்கிஒரு மரம் வேரோடு சாய்வதுபோல வறுமையும் அறியாமையும்  பின்னிப்பிணைந்த சூழலில் சிக்கிய ஒரு குடும்பம்  கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்துவிழும் காட்சியை அந்தநாவலில் பார்க்கமுடியும். மற்றொரு தொடக்க கால நாவலான ‘வம்ச விருட்சம்’ மரபுக்கும் மரபுமீறலுக்கும் இடையிலான உரசலை முன்வைக்கும் படைப்பு. அவருக்கு சாகித்திய அகாதமி விருதைப்பெற்றுத் தந்த ‘தாட்டு’ நாவல் காதலையும் கலப்புத்திருமணத்தின் உளவியல் சிக்கல்களையும்முன்வைக்கும் படைப்பாகும். ‘மந்த்ர’ இசையைப் பின்னணியாகவும் ’யானா’ விண்வெளிப்பயணத்தைப்பின்னணியாகவும் கொண்டவை.

‘ஆவரண’ இருவேறு மதங்களின் முரண்பாடுகளைப் பேசுபொருளாகக் கொண்டது.தொன்ம அடையாளங்கள் எதுவுமின்றி, புராண பாத்திரங்களை எளிய மனிதர்களாக உலவவிட்டு அவர்களுடையமன ஓட்டங்களை உற்று நோக்கித் தொகுத்துக்கொள்வதை அவர் விரும்பிச் செய்தார். நம் நாட்டின்பழைய இதிகாசங்களான மகாபாரதத்தை ‘பருவம்’ என்னும் தலைப்பிலும் இராமாயணத்தை ‘உத்தரகாண்டம்’என்னும் தலைப்பிலும் மீட்டுருவாக்கம் செய்து எழுதினார். ஒரு படைப்பைப்போல இன்னொரு படைப்பைஎழுத அவர் மனம் விரும்புவதில்லை. புதியவற்றைத் தேடுவதும் புதியவற்றை எழுதுவதும் பைரப்பாவின்மனம் விரும்பும் செயல்களாக இருந்தன.

தன் எண்பதாம்வயது நிறைவையொட்டி தான் பிறந்துவளர்ந்த சந்தேஷிவர கிராமத்துக்கு ஏதாவதுசெய்யவேண்டும் என பைரப்பா விரும்பினார். மரபுவழியாக அவருக்குக் கிடைத்த பரம்பரைவீடு அந்த ஊரில் இருந்தது. பழுது பார்க்கும் வேலைகளைச் செய்து அந்தக் கட்டடத்தைஒழுங்குபடுத்தி, கிராமத்து மக்கள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் ஒரு நூலகத்தைஉருவாக்கினார். பொதுமக்களில் பலர் தொடக்கத்தில் நூலகத்துக்கு உற்சாகமாக வந்து  புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினர். ஆயினும்அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்தபடியே சென்றது. அது அவரைச் சற்றே நிராசையுறச்செய்தது என்றபோதும் அதைக் கண்டு பைரப்பா மனம் தளரவில்லை.

நாமாகவேகிராமத்துக்கு எதையேனும் செய்வதற்குத் திட்டமிடுவதற்குப் பதிலாக அவர்களுடைய தேவையைஅவர்களையே கேட்டுச் செய்துகொடுப்பதுதான் சரியானதாக இருக்கும் என்ற எண்ணத்தை பைரப்பாவந்தடைந்தார். அடுத்த கட்டமாக தன் ஊருக்குச் சென்று அங்கிருந்தவர்களைச் சந்தித்து அவர்களுடையதேவையைக் கேட்டார். அவருடைய  சிறுவயதுகாலத்தில் அந்தக் கிராமத்தினரிடம் நிறைந்திருந்த விவசாய நாட்டம் ஏறத்தாழ எண்பதுஆண்டுகளுக்குப் பிறகும் அப்படியே நீடித்திருக்கிறது என்பதையே அவர்களோடு நிகழத்தியஉரையாடல் வழியாக அவர் புரிந்துகொண்டார். “கிணத்தில தண்ணி இல்லை” “வாய்க்கால்லதண்ணி இல்லை” “ஏரி வத்திப் போச்சி” ”விவசாயம் செய்யமுடியலை” என்பதையே வெவ்வேறுவடிவங்களில் அனைவரும் எடுத்துரைத்தனர்.

பெருகியிருக்கும்விவசாய நிலத்தின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் வசதி இல்லை என்பது கண்கூடாகவே தெரிந்தது.நீர்த்தேவையை ஈடுகட்ட அந்தக் காலத்தில் கிடைத்ததுபோன்ற மழைநீர் மட்டுமே இப்போது போதுமானதாகஇல்லை. கூடுதல் நீர் தேவையாக உள்ளது. “உங்களால முடிஞ்சா கூடுதல் தண்ணிக்கு வழிசெய்ங்க” என்பதுதான் கிராமத்தினர் பைரப்பாவிடம் முன்வைத்த வேண்டுகோள்.

சந்தேஷிவரகிராமத்தின் கிணறுகளிலும் கால்வாய்களிலும் தண்ணீர் நிறைந்திருக்க வேண்டுமெனில்ஏரியில் தண்ணீர் நிறைந்திருக்க வேண்டும். ஏரியில் தண்ணீர் நிறைந்திருக்கவேண்டுமெனில் அது ஏதோ ஒரு வகையில் பத்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் ஹேமாவதிநதியிலிருந்து நேரிடையாகப் பிரிந்துசெல்லும் கால்வாயுடன் இணைக்கப்பட வேண்டும். அதுஒன்றுதான் வழி. ஓர் எழுத்தாளராக அதைச் சாத்தியப்படுத்தும் செயல் தன் சக்திக்குமீறிய விஷயம் என்பது பைரப்பாவுக்கு நன்றாகவே புரிந்தது. ஆயினும் ஒரு முயற்சியையும்தொடங்காமல் தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு அவர் மனம் இடம்கொடுக்கவில்லை. ”முடிந்தவரைமுயற்சி செய்கிறேன்” என்று கிராமத்தினரிடம் தெரிவித்துவிட்டு மைசூருக்குத்திரும்பிவிட்டார் பைரப்பா.

அப்போதுமுதல்வராக இருந்தவர் எடியூரப்பா. ஒருநாள் பெங்களூருக்கு வந்து அவரைச் சந்தித்தார்பைரப்பா. தன் கிராமத்தின் தேவையை முதல்வரிடம் முன்வைத்தார். ஓர் எழுத்தாளரின் கனவைஉறுதியாக நிறைவேற்றுவதாக வாக்களித்த முதல்வர் உரிய அதிகாரிகளிடம் அதைப்பற்றிப்பேசி உடனடியாக ஒரு திட்டத்தைத் தயாரிக்கும்படி தெரிவித்தார். திட்டம் தயாரானசமயத்தில் எதிர்பாராத விதமாக அரசியல் காரணங்களுக்காக முதல்வர் பொறுப்பிலிருந்துஎடியூரப்பா வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

சற்றும் மனம்தளராத பைரப்பா, புதிதாக முதல்வர் பொறுப்பை ஏற்றிருந்த பசவராஜ் பொம்மாயி அவர்களைச்சந்தித்து திட்டத்தைப்பற்றி நினைவூட்டினார். தன் அரசு அத்திட்டத்தைநடைமுறைப்படுத்தும் என வாக்களித்த முதல்வர் அதிகாரிகள் தயாரித்த திட்டத்துக்கு அனுமதிவழங்கி, உடனடியாக வேலையைத் தொடங்க நிதியையும் ஒதுக்கியளித்தார்.  பத்து கிலோமீட்டர் நீளத்துக்கு குழாய்களைப்பதிக்கும் வேலை தொடங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக அவருடைய ஆட்சிக்காலம்முடிவுக்கு வந்ததால் தொடங்கிய வேலை நின்றுவிட்டது.

தேர்தலில் புதியகட்சி பொறுப்பேற்றது. மனம் சலிக்காத பைரப்பா புதிய முதல்வரான சித்தராமையாவைப்பார்த்து எல்லா விஷயங்களையும் நினைவூட்டினார். அச்செயலை நிறைவேற்றித் தருவதாக புதியமுதல்வர் பைரப்பாவுக்கு வாக்களித்தார். உரிய அதிகாரிகளுக்கு உத்தரவும் தேவையானநிதியும் வழங்கப்பட்டன. இரண்டாண்டு காலம் தொடர்ச்சியாக நடைபெற்ற பணிகள் முடிந்துதிட்டம் நிறைவேறியது. இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு 25 கோடி ரூபாயைச் செலவுசெய்தது.

2025 ஆம்ஆண்டில் தொடக்கத்தில் அந்த இணைப்புக்கால்வாயின் திறப்புவிழா நடைபெற்றது.பைரப்பாவும் அவ்விழாவில் கலந்துகொண்டார். தான் பிறந்துவளர்ந்த சந்தேஷிவரகிராமத்தின் ஏரியும் கால்வாய்களும் கிணறுகளும் தன் பால்யகாலத்தில் நீர் நிறைந்துகாட்சியளித்ததுபோலவே அப்போது காட்சியளித்ததை ஆனந்தக் கண்ணீரோடு கண்டு மகிழ்ந்தார்.சந்தேஷிவர கிராமத்து மக்களும் தம் தேவை நிறைவேறியதை நினைத்து மகிழ்ந்தனர். பைரப்பாவைபகீரதன் என்று கொண்டாடினர்.

பைரப்பா 1966ஆம்ஆண்டில் தாட்டு என்னும் நாவலை எழுதியமைக்காக சாகித்திய அகாதமி விருதைப் பெற்றார்.2010 ஆம் ஆண்டில் சரஸ்வதி சம்மான் விருதைப் பெற்றார். 2016ஆம் ஆண்டில் அவருக்குபத்மஸ்ரீ விருதையும் 2023ஆம் ஆண்டில் பத்மபூஷண விருதையும் அரசு வழங்கியது.சந்தேஷிவர கிராமத்தில் வாழும் படித்த, படிக்காத மக்கள் அனைவரும் அன்று அவரை நெஞ்சில் ஏந்திய கணம், அவர் பெற்ற எல்லாவிருதுகளையும் விட உயர்வானது.

கடந்த அறுபதுஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்ட தம் படைப்புகளால் கன்னட மொழிக்குப்பெருமையைச் சேர்த்தவர் எஸ்.எல்.பைரப்பா. அவருடைய படைப்புகள் தமிழ் உட்பட பல்வேறுஇந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன. எல்லாமொழிகளிலும் பைரப்பாவுக்கு வாசகர்கள் இருக்கிறார்கள். தன் மங்காத படைப்புகள்வழியாக இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அவருடைய பெயரும் புகழும் நிலைத்திருக்கும்.அதற்கு இணையாக இலக்கிய வாசனையே இல்லாத பொதுமக்களும் அந்தத் தண்ணீர்த்திட்டத்தின்காரணமாக அவரை நன்றியுடன் நினைத்து பாராட்டுவார்கள்.

சந்தேஷிவரகிராமம் மட்டுமன்றி, பதினோரு கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்டிருக்கும் குழாய்வழிப்பாதையில் அமைந்திருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் ஏரிகளும் இனி நீர்நிறைந்து காணப்படும். நிரம்பி வழியும் ஏரியைப் பார்க்கும்போதெல்லாம் பைரப்பாவின்முகத்தை அவர்கள் பார்ப்பார்கள். நிரம்பி வழியும் ஏரி ஒருவகையில் அன்பு நிறைந்த அவருடையமனத்தின் படிமமாகவே நிலைத்திருக்கக்கூடும். 24.09.2025 அன்று தம் 94வது வயதில் இயற்கையோடுகலந்துவிட்ட வணக்கத்துக்குரிய எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பாவுக்கு அஞ்சலி.

 

(காலச்சுவடு – நவம்பர் 2025)

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2025 01:06
No comments have been added yet.


Paavannan's Blog

Paavannan
Paavannan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Paavannan's blog with rss.