சா.கந்தசாமியின் படைப்புலகம்

 

தமிழ்நாவல் வரிசையில் செவ்வியல் படைப்பாக அனைவராலும் பாராட்டப்படும் சாயாவனம் நாவலை எழுதியவர்சா.கந்தசாமி.  அதைத் தொடர்ந்து அவர் எழுதியதொலைந்து போனவர்கள், அவன் ஆனது, சூரிய வம்சம், விசாரணைக்கமிஷன் ஆகிய நாவல்கள் அவரைதமிழின் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக நிலைநிறுத்தின. அவர் ஐந்தாண்டுகளுக்குமுன்பு 31.08.2020 அன்று கொரானா சமயத்தில் இயற்கையெய்தினார்.


சமீபத்தில்இலக்கியச்சிற்பிகள் வரிசையில் சாகித்திய அகாதெமி சா.கந்தசாமியைப்பற்றி ஒரு புத்தகத்தைவெளியிட்டிருக்கிறது.  எழுதியிருப்பவர் சந்தியாநடராஜன். அவர் நல்ல மொழிபெயர்ப்பாளர். கட்டுரையாளர். இன்றைய இணையகால இளம்தலைமுறையைச்சேர்ந்த வாசகர்களுக்கு சா.கந்தசாமியை அறிமுகப்படுத்தும் விதமாக சந்தியா நடராஜன் மிகச்சிறந்தமுறையில் இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

சா.கந்தசாமிமயிலாடுதுறையில் 23.07.1940 அன்று பிறந்தவர் . ஆயினும் பதினான்கு வயதுவரை மட்டுமே அவர்அங்கு வசித்தார். பிறகு சென்னையில் வசித்துவந்த தன் சகோதரர் வீட்டுக்கு வந்துவிட்டார்.வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை பள்ளிக்கூடத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதைத்தொடர்ந்து மத்திய பாலிடெக்னிக் நிறுவனத்தில் ஆட்டோமொபைல் பட்டயப்படிப்பை முடித்துவிட்டுகுரோம்பேட்டையில் எம்.ஐ.டி.யில் லேப் அசிஸ்டென்ட்டாக வேலைக்குச் சேர்ந்தார்.

அப்போது,ஏற்கனவே சிறுகதை முயற்சிகளில் ஈடுபட்டிருந்த ம.ராஜாராம் என்பவருடைய நட்பு அவருக்குக்கிடைத்தது. அவர் க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன், நா.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரு நண்பர்களையும்கந்தசாமிக்கு அறிமுகப்படுத்தினார். நால்வரும் சேர்ந்து இலக்கியச்சங்கம் என்னும் அமைப்பைஉருவாக்கி பல நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினர். அப்போது ஆளுமைகளாக விளங்கிய க.நா.சு.,அசோகமித்திரன், சி.சு.செல்லப்பா, நா.பார்த்தசாரதி போன்றோரையெல்லாம் அழைத்து உரையாற்றஏற்பாடுகளைச் செய்தனர். ஒரு கட்டத்தில் இலக்கிய வாசிப்பின்  தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதத் தொடங்கினார் கந்தசாமி.

நான்குநண்பர்களும் அவசரமில்லாமல், ஆளுக்கு மூன்று கதைகளை எழுதி ’கோணல்கள்’ என்னும் தலைப்பில்ஒரே தொகுப்பாக 1968இல் கொண்டுவந்தனர். இத்தொகுப்பில் சா.கந்தசாமி தேஜ்பூரிலிருந்து,தேடல், உயிர்கள் என மூன்று கதைகளை எழுதியிருந்தார். இப்படித்தான் அவருடைய இலக்கிய வாழ்க்கைதொடங்கியது. புதிய கட்டமைப்பிலும் புதிய களம் சார்ந்தும் வெளிவந்த இக்கதைகள் எல்லாஎழுத்தாளர்களுக்கும் தமிழ்ச்சூழலில் ஓர் உடனடி கவனம் உருவாகக் காரணமாக அமைந்தன. தம்எழுத்தாற்றலால் சா.கந்தசாமி தமிழ்ச்சூழலில் கூடுதல் கவனம் பெற்றார்.

சா.கந்தசாமியின்‘தேஜ்பூரிலிருந்து’ சிறுகதை மிகச்சிறந்த கதைகளில் ஒன்றாகச் சுட்டிக் காட்டுகிறார் நடராஜன்.அக்கதை வெளிவந்து ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் இன்று வாசிக்கும் ஓர் இளம்வாசகனுக்கும் சிறப்பானதொரு வாசிப்பு அனுபவத்தை வழங்கும் கதையாக உள்ளது. இருபத்தைந்துஆண்டுகளுக்கு முன்பாக, தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளை முன்வைத்து ‘எனக்குப் பிடித்தகதைகள்’ என்னும் தலைப்பில் ஒரு தொடரை எழுதியபோது, இதே ’தேஜ்பூரிலிருந்து’ சிறுகதையைமுன்வைத்து எழுதியது நினைவுக்கு வருகிறது.

தேஜ்பூரிலிருந்துஒரு ரயில் புறப்படுகிறது. ராணுவத்தினருக்கான பெட்டியொன்றில் தொடக்கத்தில் நான்கு பேர்  உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவனுக்குதிருமணம் நிகழவிருக்கிறது. அதற்காகத்தான் அவன் சென்றுகொண்டிருக்கிறான். எஞ்சிய மூன்றுபேரும் அவனுக்குத் துணையாக உரையாடியபடி செல்கிறார்கள். ரயில் ஒவ்வொரு நிலையத்திலும்நின்று நின்று செல்கிறது. ஒவ்வொரு நிலையத்திலும் சிலர் இறங்கிச் செல்கிறார்கள். சிலர்புதிதாக ஏறி பெட்டிக்குள் வருகிறார்கள்.

எதிர்பாராதவிதமாக ஒரு நிலையத்தில் ரயில் நீண்ட நேரம் நிற்கிறது. நான்கு பேரும் தம் வாழ்க்கையின்இளமைக்காலத்தைக் குறித்து உரையாடத் தொடங்குகிறார்கள். ஒவ்வொருவருக்கும் இறந்தகாலத்தில்சந்தித்துப் பழகிய பெண்களின் நினைவு வருகிறது. அதைப்பற்றியும் உரையாடுகிறார்கள். பிறகுஉரையாடல் பணிச்சூழலைப்பற்றியதாக மாறுகிறது. இப்படி உரையாடலின் கருப்பொருள் கணந்தோறும்மாறிக்கொண்டே இருக்கிறது. ஆயினும் உரையாடலின் சுவாரசியம் குறையவே இல்லை. அவர்களுடையஉரையாடல்கள் முடிவே இல்லாமல் நீண்டு செல்கிறது. நீண்ட நேர தாமதத்துக்குப் பிறகு நிலையத்திலிருந்துவண்டி புறப்படுவதற்குத் தயாராகிறது. அப்போது திருமணத்துக்குச் செல்லும் நண்பனுக்குபிற நண்பர்கள் ஒரு பரிசை அளித்து வாழ்த்திவிட்டு கீழே இறங்கிவிடுகிறார்கள். ரயில் இன்னும்சில புதியவர்களுடன் மீண்டும் ஓடத் தொடங்குகிறது.

இக்கதையின்கட்டமைப்பே இதன் சிறப்பம்சமாகும். கதையில் இடம்பெறும் மனிதர்களின் உரையாடல்கள் வழியாகவோ,நிகழ்ச்சிகள் வழியாகவோ கதை வெளிப்படவில்லை. மாறாக, ஒட்டுமொத்தமாக கதையில் பொதிந்திருக்கும்தொனி வழியாகவே கதை தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. கதையை வாசிக்கும்போது, ரயில் பயணம்மெல்ல மெல்ல வாழ்க்கைப்பயணமாக உருமாறும் விந்தையை வாசகர்கள் உணரமுடியும்.  ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் சிலரை இறக்கிவிட்டு,சிலரை ஏற்றிக்கொண்டு ரயில் தன் போக்கில் ஓடிக்கொண்டே இருக்கிறது. நாம் அனைவருமே வாழ்க்கைப்பயணத்தின்கண்ணிகள். நம் பயணத்திலும் சிலர் நம்மோடு சேர்ந்து சிறிது தொலைவு வருகிறார்கள். சிலர்விலகிச் செல்கிறார்கள். சில புதியவர்கள் இணைந்துகொள்கிறார்கள். இணைவதும் பிரிவதும்இயல்பாகவே நிகழ்கிறது. இப்பயணத்தில் வலி இருக்கலாம். வேதனை இருக்கலாம். நகைச்சுவையும்இருக்கலாம். இன்பமும் இருக்கலாம். ஆனால் காலம் செல்லச்செல்ல இவ்வுணர்வின் வடிவங்கள்மெல்லமெல்ல கரைந்து எல்லாமே ஓர் அனுபவமாக எஞ்சி நிலைக்கும். இந்த அனுபவத்துளியே வாழ்க்கைஅனுபவமாகும். தொடக்க காலத்திலேயே இப்படி ஒரு சிறப்பான சிறுகதை வழியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர்சா.கந்தசாமி.

சா.கந்தசாமிஏறத்தாழ நூறு சிறுகதைகள் எழுதியுள்ளார். அவை பதினேழு தொகுதிகளாக வெவ்வேறு கட்டங்களில் வெளிவந்துள்ளன. முதல் தொகுதி 1968லும் பதினெட்டாவதுதொகுதி 2018லுமாக வெளிவந்தன. அவர் எப்போதும் கட்டற்று எழுதுகிறவராக இருந்திருக்கிறார்.சில கதைகள் பத்து பக்க அளவில் உள்ளன. சில கதைகள் அறுபது, எழுபது பக்க அளவிலும் உள்ளன.தண்ணீர்ப்பூதம் என்னும் சிறுகதை ஏறக்குறைய அறுபது பக்கங்களுக்கும் மேலாக நீண்டு செல்கிறது.

சிறுகதைகளைப்போலவே,அவருடைய  நாவல்களும் அவருக்குப் புகழை ஈட்டிக்கொடுத்திருக்கின்றன. சாயாவனம் நாவலை அவர் தம் இருபத்தைந்து வயதிலேயே எழுதிமுடித்துவிட்டார்என்றும் பலமுறை தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொண்டே இருந்தார் என்றும் வாசகர் வட்டம்வெளியீடாக 1969இல் அந்த நாவல் வெளிவந்து தமிழ்ச்சூழலில் நல்ல கவனம் பெற்றது என்றும்குறிப்பிட்டிருக்கிறார் சந்தியா நடராஜன்.

சாயாவனம்நாவலை ஒன்றை அழித்து இன்னொன்றை உருவாக்கும் சமூக விதிக்கு இசைவான கதைக்களத்தைக் கொண்டநாவலென்று பலர் முன்வைத்திருக்கிறார்கள்.  சுற்றுச்சூழல்விழிப்புணர்ச்சியை உருவாக்கும் நாவலென்றும் சிலர் கூறியதுண்டு. ஒரு மனிதன் தனக்கானஇடத்தையும் மதிப்பையும் தானே உருவாக்கி நிலைநிறுத்தும் வாழ்க்கைப்போக்கைச் சித்தரிக்கும்நாவலென்று சொன்னவர்களும் உண்டு. முதல்முறையாக சாயாவனம் நாவலை புலம்பெயர் நாவலென அடையாளப்படுத்தலாம்என்னுமொரு கூற்றை இப்புத்தகத்தில் முன்வைத்திருக்கிறார் சந்தியா நடராஜன்.

அதற்குஇசைவாக பொருந்திப் போகும் வகையில் நாவலின் முதலிரண்டு அத்தியாயங்களில் இடம்பெற்றுள்ளசில காட்சிகளை எடுத்துக் காட்டியிருக்கிறார் அவர். இதுவரை விமர்சகர்களுக்கும் வாசகர்களுக்கும்தென்பட்டிராத ஒரு புள்ளியை அடையாளப்படுத்தியிருக்கிறார்.

மானுடவாழ்க்கையில் சிலருக்கு பிறந்த இடத்திலேயே வளர்ந்து, வாழ்ந்து, மறைகிற பேறு நல்லூழின்விளைவாக அமையக்கூடும். அத்தகு நல்லூழ் அமையாத பலர் வழி தேடி இடப்பெயர்வது தவிர்க்கமுடியாதஒன்று. வழி என ஒற்றைச்சொல்லால் அந்த மூலகாரணத்தைக் குறிப்பிட்டாலும் எதற்கான வழி என்றொருகேள்வியைக் கேட்டுக்கொண்டால் பல பதில்களைக் கண்டடையலாம். செல்வத்தைத் தேடி, அமைதியைத்தேடி, அன்பைத் தேடி, வெற்றியைத் தேடி, ஆபத்திலிருந்து பாதுகாப்பைத் தேடி என விரித்துக்கொண்டேசெல்லலாம்.  இவற்றையெல்லாம் கடந்து, அவமானத்திலிருந்தும்அவதூறிலிருந்தும் தப்பித்து கெளரவத்தைத் தேடிச் செல்வதையும் ஒரு வழியாக வகுத்துரைக்கிறார்நடராஜன். சாயாவனம் நாவலின் முதலிரு அத்தியாயங்களில் அந்தக் கருத்துக்குச் சாதகமாக உள்ளகதையம்சத்தைத் தனக்குத் துணையாக்கிக்கொள்கிறார் அவர்.

ஒரு விவசாயக்குடும்பத்தில்வாழ்க்கைப்பட்டுச் சென்றவள் காவேரி. இனிய இல்லறத்தின் அடையாளமாகப் பெற்றெடுத்த இரண்டரைவயதுள்ள குழந்தையின் தாய் அவள். அவளுடைய கணவன் ஏதோ பித்தின் வேகத்தில் துறவியாகி ஊரைவிட்டேபோய்விடுகிறான். ஊர் அவள் மீது பழி சுமத்துகிறது. அவளோடு பிறந்த சகோதரன் சொந்த ஊருக்குத்திரும்பி வந்து தம் குடும்பத்தோடு சேர்ந்து வாழ விடுக்கும் அழைப்பை அவள் ஏற்க மறுத்துவிடுகிறாள்.ஓடிப் போனவனின் மனைவி  என்கிற பட்டப்பேரோடுஅந்த ஊரில் வாழவே அவளுக்குப் பிடிக்கவில்லை அவளுக்கு. கெளரவமான ஒரு வாழ்க்கையைத் தேடிஅவள் தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு இலங்கைக்குச் செல்லும் கப்பலில் ஏறிப் புறப்படுகிறாள்.அவளுடைய புலம்பெயர்வு அப்படித்தான் நிகழ்கிறது.

சென்றுசேர்ந்த இடத்தில் சில ஆண்டுகள் பாடுபட்டு உழைத்து தன் மதிப்பை ஈட்டுகிறாள். எதிர்பாராதவிதமாக அம்மை நோய் கண்டு அவள் இறந்துவிட, தனித்துத் தவித்த சிறுவனான சிதம்பரத்தைக்கிறித்துவனாக மாற்றி வளர்க்கிறார் ஒரு பாதிரியார். வளர்ந்து பெரியவனானதும் பாதிரியாரின்பிடியிலிருந்து விடுபட்டு கொழும்புக்கு ஓடிச் செல்கிறான் சிதம்பரம். ஒரு பாத்திரக்கடைக்காரன்அவனை மீண்டும் இந்துவாக மாற்றி தன் கடையிலேயே வைத்திருக்கிறான். பாடுபட்டு உழைத்துபணத்தைச் சேமிக்கிறான் சிதம்பரம். ஒருநாள் சேர்த்துவைத்த செல்வத்தோடு சொந்த ஊருக்குத்திரும்பி வந்து வனத்தை அழித்து ஆலையை உருவாக்க நினைக்கிறான். சரிந்த குடும்பத்தின்புலம்பெயர்வினால் விளைந்த கதையாக சாயாவனம் நிலைபெற்றிருக்கிறது. நாவலின் முதலிரு காட்சிகளில்செறிவுற எழுதப்பட்டிருக்கும் பகுதியிலிருந்து இந்தப் பின்னணியை விரித்தெடுத்து நம்முன் வைத்திருக்கிறார் நடராஜன்.

சாயாவனம்போலவே பிற நாவல்களையும் தமக்கேயுரிய வகையில் வாசித்து பல புதிய  சிறப்பம்சங்களை இந்தப் புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார்நடராஜன்.

நாவல்கள்,சிறுகதைகள் மட்டுமன்றி, பிற ஆளுமைகள் பற்றிய தம் நினைவலைகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில்கந்தசாமி எழுதியிருக்கும் ‘என்றும் இருப்பவர்கள்’ நூலைப்பற்றியும் பயண நூல்கள் பற்றியும்குறிப்பிட்டிருக்கிறார் நடராஜன். இறுதியாக சா.கந்தசாமியின் படைப்புகளாக வெளிவந்த நாவல்கள்,சிறுகதைத்தொகுதிகள், கட்டுரைத்தொகுதிகள், தொகுப்புநூல்கள் என வெவ்வேறு பிரிவுகளில்எழுதிய 59 புத்தகங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. கந்தசாமியின் படைப்புகளைத்தேடிப் படிக்க விரும்பும் புதிய வாசகர்களுக்கு இப்பட்டியல் பெரிதும் உதவியாக இருக்கும்.கந்தசாமியின் படைப்புலகத்தையும் வாழ்க்கையையும் அடுத்தகட்ட  இலக்கியத்தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் விதமாகஎழுதியிருக்கும் நடராஜனுக்கும் வெளியிட்டிருக்கும் சாகித்திய அகாதெமிகும் வாழ்த்துகள்.

 

(சா.கந்தசாமி. இந்திய இலக்கியச்சிற்பிகள் வரிசை.சாகித்திய அகாதெமி வெளியீடு. சந்தியா நடராஜன். குணா வளாகம். 443, இரண்டாம் தளம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை -600018. விலை. ரூ.100)

 

(புக் டே – இணையதளம் – 12.11.2025)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2025 18:41
No comments have been added yet.


Paavannan's Blog

Paavannan
Paavannan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Paavannan's blog with rss.