ஒரு போராட்டக்காரரின் நிகழ்ச்சிக்குறிப்புகள்

 

கடந்த நூற்றாண்டில் இருபதுகளின் தொடக்கத்திலேயே காந்தியக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காந்தியடிகள் தோற்றுவித்த எல்லா இயக்கங்களிலும் கலந்துகொண்டவர் ஆக்கூர் அனந்தாச்சாரி. நீல் சிலை அகற்றும் சத்தியாகிரகம் ,கள்ளுக்கடை மறியல், அந்நியத்துணி புறக்கணிப்பு, கதர்ப்பிரச்சாரம், உப்பு சத்தியாகிரகம், சைமன் குழு எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் என தமிழகத்தில் நடைபெற்ற எல்லாப் போராட்டங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்றார் அவர். அரசு வழங்கிய தண்டனையை ஏற்று இருபது முறைகளுக்கும் மேல் சிறைக்குச் சென்று திரும்பிய் அனுபவம் அவருக்கு உண்டு. 

தண்டனைக்கைதியை சிறையில் அனுமதிக்கும் முன்பாக தொற்றுநோய் தடுப்பு ஊசியும் அம்மை ஊசியும் போட்டு அனுப்பவேண்டும் என்பது அந்தக் கால சிறைவிதிகளில் ஒன்று. அனந்தாச்சாரின் உடலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊசித்தழும்புகள் இருந்தன. தேசத்தின் மீதான நேசமும் காந்தியக்கொள்கைகளின் மீதான பற்றும் தண்டனைக்கொடுமைகளைத் தாங்கிக்கொள்ளும் மன உறுதியை அவருக்கு அளித்தன.

இருபதுகளில் காந்தியடிகள் சென்னைக்கு வரத்தொடங்கிய காலகட்டத்திலேயே அவரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார் அனந்தாச்சாரி. அவரோடு சேர்ந்து தமிழ்நாட்டுப் பயணங்களிலும் கலந்துகொண்டிருக்கிறார். இறுதியாக 1946இல் இந்தி பிரச்சார சபை பட்டமளிப்பு நிகழ்ச்சிக்காக அவர் வந்தபொழுது காந்தியடிகளுடன் பத்து நாட்கள் தங்கியிருக்கிறார். அவரோடு பழகிய விதத்திலும் அவரைப்பற்றி படித்த விதத்திலும்  காந்தியடிகள்தொடர்பாக அவருக்குக் கிட்டிய அனுபவங்கள் எண்ணற்றவை. ஐம்பதுகளின் இறுதியில் தன் காந்திய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வானொலி நிலையம் அவருக்கு ஒரு வழியை ஏற்படுத்திக்கொடுத்தது. அதை முன்னிட்டு வாரம்தோறும் அனந்தாச்சாரி வானொலியில்  ஐந்தாண்டுகாலத்துக்கு தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் பிறகு 1962இல் அவ்வுரைகளைத் தொகுத்து ‘காந்திஜி காட்டியவழி’ என்னும் தலைப்பில் ஒரு நூலாக பாரதி பதிப்பகம் வெளியிட்டது.

இந்தி பிரச்சார சபையில் காந்தியடிகள் தங்கியிருந்த சமயத்தில் அங்கு கழிப்பறைகளைத் தூய்மை செய்துவந்த ஒரு பெண்மணி காந்தியடிகளை நெருங்கி நின்று பார்க்கவேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் சூழ்ந்திருந்தது. ஒரு கூட்டத்தினர் சந்தித்துவிட்டு வெளியேறியதும் மறுகணமே வேறொரு கூட்டத்தினர் உள்ளே நுழைந்து உரையாட வருவதுமாக இருந்தார்கள். பல நேரங்களில் காலையில் தொடங்கும் சந்திப்புகள் இரவு வரைக்கும் நீண்டுபோவது வழக்கமாகிவிட்டது. அதனால் அந்தப் பெண்மணி தன் விருப்பத்தை எப்படி நிறைவேற்றிக்கொள்வது என்று புரியாமல் தவித்தார். அவர் அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சிக்காகச் செல்லும் பழக்கம் உள்ளவர் என்பதை அறிந்துகொண்டு ஒருநாள் அவர் புறப்படும் முன்பே அங்கே வந்து நின்று அவருக்காகக் காத்திருந்தார். அறையைவிட்டு வெளியே வந்த காந்தியடிகள் கூடத்தைக் கடக்கும் முன்பாக அவருக்கு எதிரில் தன் துடைப்பத்தோடு வந்து நின்று வணங்கினார் அந்தப் பெண்மணி. காந்தியடிகளும் புன்னகையுடன் அவரைப் பார்த்து வணங்கினார். ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினார். உடனே அப்பெண்மணி மனம் கரைந்து சட்டென காந்தியடிகளின் காலில் விழுந்துவிட்டார். அவர் கையில் வைத்திருந்த துடைப்பத்தை வைத்து ஒரே கணத்தில் அனைத்தையும் ஊகித்துவிட்டார் காந்தியடிகள். உடனே ”போதும் போதும் எழுந்திருங்கள்” என்று தமிழிலேயே பேசி அந்தப் பெண்மணியை எழுந்து நிற்கவைத்து மேலும் சில நிமிடங்கள் அவருடன் நின்று பேசிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.

ஒருமுறை கண்பார்வை இல்லாத ஒரு இளைஞர் காந்தியடிகளைச் சந்திக்கவும் அவரைத் தொட்டுப் பேசவும் விரும்பினார். நண்பர் சந்திப்பின்போது இந்தச் செய்தியை ஒருவர் காந்தியடிகளுடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பு முடிந்து அவர்கள் திரும்பிச் செல்லும்போது தன்னை பார்வையற்ற இளைஞரிடம் அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். நண்பர்கள் அதைக் கேட்டு திகைத்து நின்றனர். அந்த இளைஞரை அவர் இருக்கும் இடத்துக்கு அழைத்து வருவதாகச் சொன்னார்கள். காந்தியடிகள் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. தாமே வருவதாகச் சொல்லி அவர்களோடு சென்று அந்த இளைஞரைச் சந்தித்து உரையாடிவிட்டுத் திரும்பினார்.

இந்தி பிரச்சார சபைக்குப் பக்கத்தில் இருந்த வீட்டில் எஸ்.கே.சுந்தரம் என்பவர் வசித்துவந்தார். அவர் பொதுமருத்துவ மனையில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தேசியவாதியான அவர்  மரணப்படுக்கையில்இருந்தார். காந்தியடிகளை அவர் ஒருமுறை கூட பார்த்ததில்லை. தன் வீட்டுக்குப் பக்கத்துக் கட்டடத்துக்கு அவர் வந்திருக்கும் சூழலில் அவரைச் சந்திக்க இயலாதபடி நேர்ந்துவிட்டதே  எனநண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டார். எப்படியோ அச்செய்தி காந்தியடிகளின் காதுக்குச் சென்றுவிட்டது. தம் ஓயாத அலுவல்களுக்கிடையில் எப்படியோ ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி, அவரைச் சந்திப்பதற்காக தன்னை அவருடைய வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டார். சுந்தரத்துக்கு அருகில் சில நிமிடங்கள் அமர்ந்து நலம் விசாரித்து ஆறுதல் சொற்களைச் சொல்லி தைரியமாக இருக்கும்படி சொல்லிவிட்டு திரும்பினார்.

தன் பயணத்துக்கு நடுவில் தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக நிதி திரட்டுவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார் காந்தியடிகள். மேடைகளில், கூட்டங்களில், சந்திப்புகளில் மட்டுமன்றி, பயணத்தின்போது வண்டி நிற்கும் ஸ்டேஷன்களில் கூட நிதி திரட்டத் தொடங்கிவிடுவார். நிதிக்காக கைநீட்ட அவர் ஒருநாளும் தயங்கியதே இல்லை. ஸ்டேஷனிலிருந்து வண்டி நகரும் வரைக்கும் அவருடைய கை நீண்டபடியே இருக்கும். பொருளாகக் கிடைத்தால் அங்கேயே அதை ஏலம்விட்டு பணமாக்கி நிதியுடன் சேர்த்துக்கொள்வார். வண்டி கிளம்பியதும் அடுத்த ஸ்டேஷன் வருவதற்குள் நிதியாகத் திரண்ட தொகையை எண்ணி கணக்கில் சேர்த்துவிடுவது அவர் வழக்கம்.

ஒருமுறை ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்றதும் வழக்கம் போல நிதி திரட்டும் வேலை நிகழ்ந்துகொண்டிருந்தது. அப்போது பார்வையற்ற முதியவர் ஒருவர் அவரை நெருங்கிவர முடியாமல் தடுமாறித் தவிப்பதை காந்தியடிகள் பார்த்துவிட்டார். உடனே அவரை தன்னருகில் வரவழைக்கச் செய்து உரையாடத் தொடங்கினார். காந்தியடிகளின் குரல் ஒலிக்கும் திசையில் தன் நடுங்கும் கைகளை நீட்டி அவரைத் தொட முயற்சி செய்தார் அவர். அதைப் புரிந்துகொண்ட காந்தியடிகள் அவர் கைகளைப் பற்றி அழுத்திக்கொடுத்ததோடு மட்டுமன்றி தன் முகத்தையும் அக்கைகளிடையில் பதித்தார். காந்தியடிகளின் முகத்தை கைகளால் வருடி, மூடிய கண்களில் ஒற்றிக்கொண்டார் முதியவர். அப்போது அவர் விழிகளில் கண்ணீர் பெருகியது. மகிழ்ச்சி பொங்க புன்னகைத்த அந்த முதியவர் காந்தியடிகளிடம் கொடுப்பதற்காக தன் மடியைத் துழாவி முடிச்சை அவிழ்க்கத் தொடங்கினார். முடிச்சின் இறுக்கத்தாலும் கை பதற்றத்தாலும் அதை அவிழ்க்க முடியாமல் தடுமாறினார். இறுதியாக எப்படியோ அவிழ்த்து அதில் முடிந்துவைத்திருந்த காலணா நாணயத்தை எடுத்து காந்தியடிகளிடம் நீட்டினார். அதை காந்தியடிகள் வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டார். அக்காட்சி அவர் உள்ளத்தைத் தொட்டது. பார்வையற்றவரின் பக்தியையும் சிரத்தையையும் கண்டு அவர் பரவசம் கொண்டார். மீண்டும் அவர் கைகளைப்பற்றி தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அந்தக் காலணாவை அங்கேயே ஏலத்துக்கு விட்டார் காந்தியடிகள். அதன் மூலம் அவருக்கு நாற்பது ரூபாய் கிடைத்தது. உடனே அந்தப் பணத்தை நிதியின் கணக்கில் சேர்த்துக்கொண்டார்.

ஒருமுறை காந்தியடிகளைச் சந்திக்க ஒரு விலைமகள் வந்திருந்தார். அவர் காந்தியடிகளை நெருங்கிச் சென்று உரையாடுவதை அங்கிருந்தவர்கள் அவ்வளவாக விரும்பவில்லை. அதனால் அவரை அங்கிருந்து எப்படியாவது வெளியேற்றிவிட முனைந்தனர். சலசலப்பின் மூலம் எதையோ உய்த்துணர்ந்த காந்தியடிகள் நடந்ததை விசாரித்து அந்தப் பெண்மணியை தன்னருகில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அவர் காந்தியடிகளை நெருங்கிவந்து கைகுவித்து வணங்கினார். காந்தியடிகளும் அவரை வணங்கி அவருடைய குறைகளை விசாரித்தார். அவர் தன்னைப்பற்றிய உண்மைகளை வெளிப்படையாகவே சொன்னார். அந்த வழியைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களையும் அவர் எடுத்துரைத்தார். அவர் மீது இரக்கம் கொண்டார் காந்தியடிகள். அவரிடம் உரையாடியதன் வழியாக அவர் மனம் திருந்தி வாழ விரும்புவதை உணர்ந்துகொண்டார். இராட்டையில் நூல் நூற்கவும் கதராடைகளை அணியவும் பழகுமாறு அவரைக் கேட்டுக்கொண்டார் காந்தியடிகள். தன் மனத்துக்குப் பிடித்த ஒருவரை தாமதம் செய்யாமல் தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்ளும்படி அறிவுரை சொன்னார். அந்த ஆலோசனை அந்தப் பெண்மணியிடம் நல்ல விளைவையே ஏற்படுத்தியது. அவரை மணம்புரிந்துகொள்ள விரும்பிய ஒருவரை உடனடியாகக் கண்டறிந்து மணம் செய்துகொண்டார். பிறகு கதர்ப்பிரச்சாரத்தில் இறங்கி தேசத்தொண்டிலும் ஈடுபட்டார்.

ஒருமுறை அதிகாலை நடைப்பயிற்சியின்போது வெகுதொலைவில் ஒரு தயிர்க்காரி வருவதையும் உடற்பயிற்சியை முடித்துவிட்டு அந்த வழியாகச் சென்ற காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அவள் மீது மோதி பானையை கிழே விழச் செய்து உடைத்ததையும்  காந்தியடிகள்தொலைவிலிருந்து பார்த்தார். அவள் அழுது புலம்பியபோதும் அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் சென்றுவிட்டனர். காந்தியடிகள் அவளை நோக்கிச் சென்றார். அவளுக்கு ஆறுதல் சொல்லி, தன் தங்குமிடத்துக்கு அழைத்துவந்தார். தான் பார்த்த நிகழ்ச்சிகளை கோர்வையாக எழுதி காவல்துறையினர் அவளிடம் நடந்துகொண்ட முறையை விரிவாக விளக்கி ஒரு கடிதமாக எழுதினார். இறுதியில் குற்றம் செய்தவர்கள் தயிர்க்காரியிடம் முறையாக மன்னிப்பு கேட்கவேண்டுமென்றும் இழப்பீடு தரவேண்டுமென்றும் குறிப்பிட்டார். முகாமில் தன்னுடன் தங்கியிருந்த ஒரு தொண்டர் வழியாக அக்கடிதத்தை காவல் நிலையத்தில் சேர்த்துவிடுமாறு சொல்லி கொடுத்தனுப்பினார். அந்த முயற்சி எதிர்பார்த்த பலனை அளித்தது. காவல்துறை அதிகாரி குற்றமிழைத்தவரோடு காந்தியடிகள் தங்கியிருந்த இடத்துக்கே வந்து வருத்தம் தெரிவித்தார். தயிர்க்காரியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு மட்டுமன்றி, உரிய இழப்பீட்டையும் அளித்துவிட்டுச் சென்றார்.

ஒருமுறை தாழ்த்தப்பட்டோர் நலனை முன்னிட்டு அவர் உண்ணாவிரதமிருந்தார். மறுநாள் காலையில் பழச்சாற்றை அருந்திவிட்டு உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தார். அவருக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த விடோபா என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறுவனை அருகில் அழைத்து அடுத்த நாள் காலையில் அவன் தனக்காக ஆரஞ்சுப்பழங்களைக் கொண்டுவர வேண்டுமென்றும் அந்தப் பழச்சாற்றை அருந்திய பிறகே  உண்ணாவிரதத்தைமுடிக்க திட்டமிட்டிருப்பதையும் தெரிவித்தார். அதைக் கேட்டு அச்சிறுவன் மிகவும் மகிழ்ந்தான்.

உடனே ஓடோடி அதைத் தன் தாயிடம் தெரிவித்தான். அவளோ அதை நம்பவில்லை. ஆயினும் மறுநாள் காலையில் அவனிடம் தான் வெகுநாட்களாகச் சேமித்துவைத்திருந்த நாலணாவை எடுத்துக் கொடுத்தாள். சிறுவன் அதை வாங்கிக்கொண்டு பழமண்டிக்கு ஓடினான். வழியில் சந்திக்க நேர்ந்தவர்களிடமெல்லாம் “காந்திஜி என்னிடம் ஆரஞ்சுப்பழங்கள் கேட்டார். அதை வாங்குவதற்காக கடைக்குச் செல்கிறேன்” என்று பெருமையாக சொல்லிக்கொண்டே போனான். கடைக்காரர்களிடமும் அதையே சொன்னான். அவர்கள் அவன் சொற்களை நம்ப மறுத்ததுமின்றி, கிண்டல் செய்து சிரிக்கவும் செய்தார்கள். சிறுவன் மிகவும் மனமுடைந்து போனான். அவன் வைத்திருந்த நாலணாவுக்கு எங்கும் பழங்கள் கிடைக்கவில்லை. கடைசியில் அந்த நாலணாவை வாங்கிக்கொண்டு வாடி வதங்கி எஞ்சியிருந்த நான்கு பழங்களை எடுத்து அவனிடம் கொடுத்தார் ஒரு கடைக்காரர். சிறுவன் அதை எடுத்துக்கொண்டு காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்த இடத்துக்குச் சென்றான். அங்கு கூட்டம் அலைமோதியது. அவனால் அதை ஊடுருவிக்கொண்டு செல்லவும் முடியவில்லை. காந்தியடிகள் குறிப்பிட்டிருந்த நேரமும் கடந்துவிட்டது. அதனால் வாசலிலேயே நின்றுவிட்டான்.

இதற்கிடையில் குறிப்பிட்ட நேரம் வந்ததும் பலர் காந்தியடிகளை நெருங்கிவந்து கூடைகூடையாக பழங்களை வைத்துவிட்டுச் சென்றார்கள். காந்தியடிகள் தனக்கு அருகிலிருந்தவரை அழைத்து “விட்டோபா இன்னும் வரவில்லையா?” என்று கேட்டார். அவருக்கு எதுவும் புரியவில்லை. அவன் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறுவனென்றும் அவன் கொண்டுவரும் பழத்தின் சாற்றை அருந்தி உண்ணாவிரதத்தை முடிப்பதாக அவனிடம் சொல்லியிருப்பதாகவும் தெரிவித்தார். அதற்குப் பிறகு அனைவரும் அவன் பெயரைச் சொல்லி அழைத்தபடி தேடத் தொடங்கினார். அந்த அரங்கிலேயே அவன் இல்லை. வெளியே நின்றிருக்கக் கூடும்  என்றஎண்ணத்தில் ஒருவர் வாசலைக் கடந்துவந்து “இங்கே விட்டோபா இருக்கிறானா? யார் அந்தச் சிறுவன்?” என்று கேட்டார். அதைக் கேட்டதும் பரபரப்புடன் எழுந்து வந்தான் சிறுவன். அவன் கையில் வைத்திருந்த பழங்களைப் பார்த்ததும் அந்தத் தொண்டருக்கு எல்லாம் புரிந்துவிட்டது. “வா, வா. காந்தி உனக்காகத்தான் காத்திருக்கிறார்” என்று சொன்னபடி அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

காந்தியடிகளின் முன்னால் நிற்கும்போது சிறுவனின் கண்கள் கலங்கின. அவனால் ஒன்றுமே பேசமுடியவில்லை. தன்னிடம் இருந்த பழங்களை அவரிடம் கொடுத்தான். அவர் அவற்றை மகிழ்ச்சியுடன் வாங்கி சாறு பிழிந்து பருகி அந்த உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டார்.

இப்படி தான் நேருக்குநேர் கண்ட நிகழ்ச்சிகளையும் மற்றவர்கள் வழியாக அறிந்துகொண்ட எண்ணற்ற நிகழ்ச்சிகளையும் சுவையாகத் தொகுத்தளித்திருக்கிறார் ஆக்கூர் அனந்தாச்சாரி. காகா காலேல்கர், ஹரிஹர சர்மா, ஆபா காந்தி, மனு காந்தி, மிலி போலக், நாராயண தேசாய், அவினாசிலிங்கம் என காந்தியடிகளுடன் நெருக்கமாக இருந்த பலர் காந்தியடிகள் பற்றிய செய்திகளை எழுதியிருக்கிறார்கள்.  அவ்வரிசையில்ஆக்கூர் அனந்தாச்சாரியின் புத்தகமும் மிகமுக்கியமானது. அது இப்போது அச்சில் கிடைக்கவில்லை என்பதுதான் பெரிய குறை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2025 17:48
No comments have been added yet.


Paavannan's Blog

Paavannan
Paavannan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Paavannan's blog with rss.