விஜய் என்னும் டெஸ்ட் டியூப் தலைவன்!

பத்து நிமிடங்கள் கூட பேசுவதில்லை. பிட்டு பிட்டாய் பேசுகிறார். கோர்வையுமில்லை. விளக்கமுமில்லை.அரசியல் தலைவராக இல்லாமல் இன்னும் நடிகராகவே இருக்கிறார். பாதி இங்கிலிஷும் பாதி தமிழுமாகப் பேசுகிறார். ’காமன் மேன்’ ஆக தரை இறங்காமல் தன்னை ‘ஸ்டார்’ ஆகவே தக்க வைத்துக் கொள்கிறார். இந்த லட்சணங்கள் விஜய்க்கு தானாக வந்ததில்லை.
கண் மூடித்தனமாக விஜய்யை கொண்டாடுகிறார்கள். பகுத்தறியும்தன்மையே இல்லை. தறிகெட்டவர்களாய் நடந்து கொள்கிறார்கள். எதையும் இழக்கும் சித்தம் கொண்டிருக்கிறார்கள்.இந்த வெறி பிடித்த ரசிகக் கூட்டமும் தானாக சேர்ந்ததில்லை.
எதிர்கால சமூகம் குறித்த கவலைப்படுகிற சிலர் ,மாணவர்களையும், இளைஞர்களையும் அரசியல்படுத்த தவறிவிட்டோம் என்று ஆதங்கப்படுகிறார்கள்.நியாயமான அக்கறை. அந்தப் புள்ளியிலிருந்து யோசிக்க ஆரம்பிக்கும்போது நமக்கு சில அடிப்படையானவிஷயங்கள் தென்படுகின்றன.
அதிகார பீடங்களும் ஆதிக்க சக்திகளும் உருவாகி மக்களைஒடுக்க ஆரம்பித்த காலத்திலிருந்து, அந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுபட மக்களை விழிப்படையவைக்கும் முயற்சிகளும் துவங்கின. அந்த விழிப்புணர்வுதான் மக்களை ‘அரசியல் படுத்துதல்’என்பதாகும். அந்த காரியங்களில் மிகுந்த அர்ப்பணிப்போடு ஈடுபட்டவர்கள் இலட்சியவாதிகளாக கருதப்பட்டனர். அவர்கள்மக்களை அரசியல்படுத்தி, அணி திரட்டி அதிகாரத்துக்கு எதிராக கிளர்ச்சிகளை உருவாக்கினர்.அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அந்த கிளர்ச்சிகள் பெரும் சவாலாக இருந்தன. மக்கள் அரசியல்படுத்தப்படுவது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. எனவேமக்கள் அரசியல் படுத்தப்படாமல் அவர்களது கவனங்களை சிதறடிக்க, மழுங்கடிக்க, திசை திருப்பபல சூழ்ச்சிகள் சாணக்கியத்தனமாய் அதிகார பீடங்களால்யோசிக்கப்பட்டன. அரங்கேற்றப் பட்டன. மதம்,சாதியிலிருந்து துவங்கி மக்களுக்குள் விதம் விதமாய் வேற்றுமைகள் விதைக்கப்பட்டன. தனிநபர்வழிபாடு என்னும் பண்புக்கு நீர்வார்த்து மக்களிடம்அரூபமான ஒரு அடிமை மனப்பான்மையை வேரூன்றச் செய்கின்றனர். அவைகளுக்கு எதிரான பிரச்சாரமும்,இயக்கமும் மக்களிடமிருந்து தோன்றிக்கொண்டே இருக்கின்றன.
இப்படி மக்களை அரசியல்படுத்துவது ஒரு புறமும்,மக்கள் அரசியல் படுத்த விடாமல் செய்வது இன்னொரு புறமும் மனிதகுல வரலாற்றின் பக்கங்களில்நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஆதிக்க சக்திக்கும், அடக்கப்படும்மக்கள் சக்திக்கும் இடையிலான இந்த போராட்டம் பல வடிவங்கள் எடுத்து தொடர்ந்து கொண்டேஇருக்கின்றன.
அதன் முக்கிய அத்தியாயத்தை இந்திய நிலப்பரப்பில்1992க்குப் பிறகு பார்க்கலாம் . தாராள மயமாக்கலுக்குப் பிறகு பிறந்தவர்கள் சந்தைப்பொருளாதாரத்தின் முதல் தலைமுறையாக உருவாக ஆரம்பித்தார்கள். சந்தைப் பொருளாதாரம் அறம்,நேர்மை, நியாயம் என்பதை எல்லாம் பின்னுக்குத் தள்ளி லாபம் என்பதை பிரதானமாக முன்வைத்தது.பொதுநலம் என்பதிலிருந்து வழுவி சுயநலம் நோக்கி மக்கள் தள்ளப்பட்டனர். அந்த தலைமுறையினர் முதன் முதலாக வாக்களிக்கும் தேர்தலாக2014 பாராளுமன்ற தேர்தல் வந்தது.
ஆதிக்க சக்திகள் தங்களின் பரிசோதனையை நிகழ்த்த2014ஐ உகந்த தருணமாகக் கருதினர். சந்தையின் ’விதிகளை’ அரசியல் களத்திலும் நிகழ்த்த தயாரானார்கள். இரக்கமற்ற,நேர்மையற்ற, உபயோகித்துத் தூக்கி எறிபவரான, சுயமோகியான மோடியை தங்களுக்கானவராய் கார்ப்பரேட்கள் அடையாளம் கண்டார்கள். ’இனப்படுகொலை செய்தவன்’, ‘கொடூரமானவன்’ என வில்லனாய்அறியப்பட்ட மோடி ‘வளர்ச்சியின் நாயகனாகவும்’, ’புதிய இந்தியாவுக்கான தலைவனாகவும்’ சித்தரிக்கப்பட்டார்.சந்தையின் விளம்பர யுத்திகளும், வியாபார உத்திகளும் திட்டமிட்டு வகுக்கப்பட்டன. மும்பையைச் சேர்ந்தஜெயினின் தலைமையில் ஒரு குழுவும், பிரசாந்த் கிஷோர் தலைமையில் ஒரு குழுவும், ஹிரேன்ஜோஷி தலைமையில் ஒரு குழுவும், அரவிந்த் குப்தா தலைமையில் ஒரு குழுவுமாக மொத்தம் நான்குகுழுக்கள் இணைந்து மோடியின் ஒவ்வொரு அசைவையும், வார்த்தையையும் அளந்து அளந்து செதுக்கிசெதுக்கினர். வடிவமைத்தனர், விமானங்களில் பறக்கச் செய்து, சிலந்தி வலை போல இந்தியாவின்குறுக்கும் நெடுக்குமாக மேடைகளில் தோன்றச் செய்தனர். ’மோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால்என்ன’ என அரசியல் அறியாதவர்களாய் பொதுமக்களை யோசிக்க வைத்தனர். அதில் வெற்றியும் கண்டனர்.
அரசியலமைப்புச் சட்டம், தேர்தல், ஜனநாயகம், வாக்குரிமை,மக்களின் பிரச்சினைகள் என்று நாளும் பொழுதும் அக்கறையோடு அலசி ஆராயப்படும் அனைத்தையும்அர்த்தமில்லாமல் நாசம் செய்யப்படுவதை கடந்த பனிரெண்டு ஆண்டுகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.இந்தியக் குடிமக்கள் அனைவரையும் தங்களின் ‘சந்தை’யாக கார்ப்பரேட் உலகம் உள்ளங்கையில்எடுத்து வைத்துக்கொண்டு உற்றுப்பார்த்துக் கொண்டு இருக்கிறது.
இந்த பத்தாண்டுகளில் ’மோடி’ பிராண்டு மெல்ல மங்கஆரம்பித்தது. முதலாளித்துவ உலகம் தனது அடுத்தக் கட்ட வேலையைத் துவக்கியது.
2000க்குப் பிறகு பிறந்தவர்கள் சந்தைப் பொருளாதாரத்தின்அடுத்தக் கட்ட மனிதர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் பிரச்சினைகளை எதிர்கொள்ளவிரும்பாத, கவலைகளிலிருந்து தப்பிக்க முனைகிற, ஆழ்ந்து ஒன்றை அறியத் தோன்றாமல் அரையும்குறையுமாய் தெரிந்து கொண்டு ஆட்டம் போடுகிற, பொறுப்புகள் மீது எந்த மரியாதையுமற்ற,ரீல்களுக்குள் மூழ்கிக் கிடக்கிற, மயக்கத்திலிருக்கிறவர்களாய், வெறித்தனம் மிக்கவர்களாய்இருக்கிறார்கள்.
கார்ப்பரேட்கள் இந்த புதிய மனிதர்களின் இயல்புகளைஒவ்வொரு கணமும் அறிந்து கொண்டிருக்கிறது. மொபைல், டி.வி, சினிமா, மால், கல்வி என ஆன்லைனில்அவர்கள் சஞ்சரிக்கும் யாவற்றிலும் ’2 கே கிட்ஸ்’க்கென பிரத்யேக பிரிவு வைத்து அவர்களின் இயல்புகளை அலசிஆராய்கிறார்கள். தாங்கள் படைத்து, ஆண்டு கொண்டிருக்கும் முதலாளித்துவ உலகில், புதிய தலைமுறையின் பொதுவானஅல்லது பெரும்பான்மையான ரசனை, விருப்பு, வெறுப்புகளை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.முதலாளித்துவ உலகிடம் நம்மைப் பற்றி எல்லா தகவல்களும் இருக்கின்றன. அதற்கேற்ப அரசியல்களத்தை தகவமைக்கிறார்கள்.
நாடு முழுவதும் தங்கள் புதிய பிராண்டினை வடிவமைக்கபார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் அதற்கு பொருத்தமானவராய் விஜய் தெரிகிறார். கார்ப்பரேட்களின் டெஸ்ட் டியூபில் ஒரு தலைவராக உருவாக்கப்படுகிறார்.கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அவரைத் தயார் செய்து இறக்கி இருக்கிறார்கள். இன்புளூன்சியர்கள், மீடியாக்கள் மூலம் இளைய மக்களின்மூளைகளையும், மனங்களையும் ஆக்கிரமிக்கிறார்கள். இப்போது ஆட்டுவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.சாலையில் உறுமலோடு விரைவாய் வந்து சட்டென்று முன்னால் கட் அடித்து வளைந்து நெளிந்துகண் இமைக்கும் நேரத்தில் மறைந்து விடும் பைக்கின் போக்கை பார்த்து திக்பிரமை கொள்வதைப்போல ஒரு பயமும் பதற்றமும் தொற்றுகிறது.
புதிய தலைமுறை முன்னைப் போல நீண்ட பேச்சையெல்லாம்கேட்காது. பத்து நிமிடங்களுக்கு மேல் பேச வேண்டாம். தகவல்கள் மட்டுமே போதும். தகவல்களைசேகரித்து அதிலிருந்து அறியும் உண்மைகள் தேவையில்லை. மக்களின் பிரச்சினைகள், கொள்கைகள்எதுவும் தேவையில்லை பிட்டு பிட்டாய், பஞ்ச் டயலாக்குகள், ரீல்களைப் போல பேசினால் போதும். விஜய் அதற்கேற்ப அசைகிறார். ’ திரண்ட கூட்டம்கீழே இருக்க உயரத்தில் நின்று செல்பி எடு, போடு’ என்கிறார்கள். செய்கிறார். அந்த செல்பியில்புள்ளியாய் கூட தங்கள் முகங்கள் தெரியாவிட்டாலும், தாங்களும் விஜய்யின் முகத்தோடு அந்தகாட்சியில் இருப்பதாய் உணர்ந்து சிலிர்த்துப் போகிறது ஒரு பெருங் கூட்டம். ஆம், முகம் மட்டுமே போதும்.
அரசியல் புரிதல் இல்லாத தலைவன், அரசியல் புரிதல்இல்லாத மக்கள் என்னும் உலகை முதலாளித்துவம் உருவாக்கத் தலைப்படுகிறது. அது முழுக்கதங்களின் அடிமைகளின் உலகமாய் இருக்கும் என கனவு காண்கிறது. ஆனால், அரசியலற்ற சமூகம்காட்டு மிராண்டித்தனமாய் இருக்கும். அதனிடம் நிதானம் இருக்காது. அதன் தாக்கங்கள் அந்தந்தநேரம் சார்ந்ததாக மாறும். விஜய்யை தலையில் வைத்துக் கொண்டாடியவர்களே, சட்டென்று கீழேபோட்டு மிதித்து துவம்சம் செய்யவும் தயங்காது. அதுபோன்ற காட்சிகள் மாறி மாறி நிகழும்.மக்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்கள். சிவில் சமூகம் அழிவை நோக்கி நகரும்.
மக்களை அரசியல் படுத்தும் சிந்தனைகளும் செயல்பாடுகளுமேஇந்த நேரத்தின் மிக முக்கியமான காரியம். அதுகுறித்த உரையாடல்கள் தொடர வேண்டும். விடைகளும்,வழிகளும் அங்கு இருந்துதான் தோன்றும், கிடைக்கும்.