இமயமலை : ஒரு பண்பாட்டுப்பயணம்

  

புதுச்சேரியில்நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்கள் தாத்தா வீட்டில் தங்கியிருந்தேன்.அப்போது எங்கள் தாத்தா வீட்டுக்கு அருகிலேயே ஒரு நூலகம் இருந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம்நான் அந்த நூலகத்துக்குச் சென்று படிப்பேன். அவ்விதமான வாசிப்பில் என் மனம் கவர்ந்தபுத்தகங்களில் ஒன்று ஜீவன்லீலா.  சாகித்தியஅகாதமி வெளியிட்ட அந்தப் புத்தகத்தை எழுதியவர் காகா காலேல்கர். ஆங்கிலம் வழியாக, பி.எம்.கிருஷ்ணசாமிஎன்பவர் தமிழில் மொழிபெயர்த்திருந்தார்.

முதல்அத்தியாயமே என் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. காந்தியடிகளைப் பின்பற்றி சுதந்திரப் போராட்டத்தில்ஈடுபட்டவர் என்றபோதும் அரசியலுக்கு அப்பால் காகா காலேல்கருக்கு பலவித ஆர்வங்கள் இருந்தன.அவர் எழுத்தாளர். பயணங்கள் மீது ஆர்வம் கொண்டவர். அதனால் அரசியல் பணிகளுக்கு இடையில்கிடைக்கும் ஓய்வு நேரத்தை, தான் தங்கியிருக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள முக்கியமானஊர்களைச் சென்று பார்ப்பதிலும் அதைப்பற்றி எழுதுவதிலும் செலவழித்து மகிழ்கிறார்.

ஆறுகள்,கடற்கரைகள், அருவிகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் அவருடைய மனத்தைக் கவர்கின்றன. பல ஆண்டுகால தொடர்பயணத்தில் விளைவாக இந்தியாவில் உள்ள எல்லா முக்கியமான அருவிகளையும் ஆறுகளையும்அவர் பார்த்துவிடுகிறார். அவை ஒவ்வொன்றைப்பற்றியும் விரிவான சுவாரசியமான தகவல்களோடுகட்டுரைகளாக எழுதி வெளியிடுகிறார்.

அவருடையபயணக்கட்டுரைகளுக்கு வாசகர்களிடையில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய பயணக்கட்டுரைகள்ஓர் இடத்துக்குச் சென்று திரும்பிய தகவல்குறிப்புகளாக மட்டும் இல்லாமல் அந்த இடத்தைச்சுற்றி வாழும் மக்களுடைய வாழ்க்கைமுறையைப்பற்றியும் அவர்களிடையில் புழங்கும் வாய்மொழிக்கதைகளைப் பற்றியுமானதாகவும் பின்னிப்பிணைந்து அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு இடத்திலும்தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் சந்திக்க நேர்ந்த மனிதர்களைப்பற்றிய குறிப்புகளையும்தம் கட்டுரைகளில் பொருத்தமான இடங்களில் காலேல்கர் இணைத்துக்கொள்கிறார். இடவிவரணைகளோடுஇடம்சார்ந்த தனி அனுபவங்களும் இணைந்திருப்பதே காகா காலேல்கரின் பயணக்கட்டுரைகளின் வலிமை.

முதல்வாசிப்பிலேயே ஜீவன் லீலா என்னைக் கவர்ந்துவிட்டது. கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, காவிரி,நர்மதை, கோதாவரி என இந்தியாவின் முக்கியமான எல்லா நதிகளையும் அவர் பார்த்திருக்கிறார்.அரபிக்கடலோரமாகவும் வங்காள விரிகுடாவின் ஓரத்திலும் அமைந்திருக்கும் முக்கியமான கடற்கரைகளில்கால் பதித்திருக்கிறார். அந்தத் தகவல்கள் அனைத்தும் என்னைப் பரவசத்தில் ஆழ்த்தின.

எங்கள்ஊருக்கு அருகில் ஓடும் சங்கராபரணி நதியையும் தென்பெண்ணை நதியையும் தவிர, வேறு எந்தநதியையும் பார்த்திராத எனக்கு அக்கட்டுரைகள் அளித்த அனுபவம் மகத்தானது. கங்கை, யமுனை,கோதாவரி ஆகியவை பாடப்புத்தகங்களில் படித்த பெயர்களாக மட்டுமே இருந்த காலம் அது. திரையரங்குகளில்திரைப்படம் தொடங்கும் முன்பாக காட்டப்படும் செய்திப்படங்களில்  ‘கங்கையில் வெள்ளம்’, ‘யமுனையில் வெள்ளம்’ என்றபின்னணிக்குரலோடு பெருக்கெடுத்தோடும் ஆற்றின் காட்சியை திகிலோடு பார்த்த அனுபவத்துக்குஅப்பால் நேரில் எதையும் பார்த்ததில்லை. அத்தகு சூழலில் வளர்ந்த எனக்குள் ஜீவன்லீலாபெரியதொரு கனவை விதைத்தது. பட்டப்படிப்பின் நடுவழியில் இருந்த நான் இந்தியாவின் எல்லாமுக்கிய நதிகளையும் அருவிகளையும் கடலோரங்களையும் என்றாவது ஒரு நாள் சென்று பார்க்கவேண்டும்என ஆழ்மனத்தில் கற்பனையை வளர்த்துக்கொண்டேன்.

பட்டம்பெற்று வேலையில் அமர்ந்ததும் என் கனவை நனவாக்கும் முயற்சியை மெல்ல மெல்லத் தொடங்கினேன்.ஒருசில ஆண்டுகளிலேயே துங்கபத்திரையின் கரையோரமாகவே பணிபுரிகிறவகையில் எனக்கு வாய்ப்புகிடைத்தது. அதை இயற்கை அளித்த வரம் என்றே சொல்லவேண்டும். ஒவ்வொரு நாளும் அதிகாலை நேரத்திலும்இரவு வேளையிலும் துங்கபத்திரையின் நதிக்கரையில் நின்றிருப்பேன். தொலைதூர வானமும் ஆற்றின்விரிந்த வெளியும் சந்தித்துக்கொள்ளும் கோட்டைப் பார்க்கப்பார்க்க மனம் துள்ளும். அத்தருணங்களைஇப்போது நினைத்தாலும் என் மனம் ததும்புகிறது. துங்கபத்திரையைத் தொடர்ந்து, இந்தியாவில்உள்ள ஒவ்வொரு ஆற்றையும் அருவிகளையும் தேடித்தேடிப் பார்க்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டுபயணம் செய்தேன். பயணத்தில் கழித்த ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் பொன்னான நாள்.  கடந்த நாற்பதாண்டுகளில் எந்த ஆற்றின் கரையில் நின்றாலும்காலேல்கரின் நினைவு தானாகவே புரண்டெழும்.

காகாகாலேல்கரின் வாழ்க்கை வரலாற்றை ‘இந்திய இலக்கியச்சிற்பிகள்’ வரிசையில் சாகித்திய அகாதமிவெளியிட்டுள்ளது. ஒருமுறை அதை வாங்கிப் படித்தபோது அவர் எழுதியிருக்கும் புத்தகங்களின்பட்டியல் பிரமிக்கவைத்தது. அருவிகளையும் ஆறுகளையும் தேடித்தேடிப் பார்த்து எழுதியதுபோலவே,இமயமலைக்கு நடந்துசென்று பார்த்துவிட்டுத் திரும்பிய அனுபவங்களையும் அவர் ’இமாயலனோப்ரவாஸ்’ என்னும் தலைப்பில் ஒரு  தனி நூலாகஎழுதியிருக்கிறார் என்னும் குறிப்பை அந்தப் புத்தகத்தில்தான் படித்துத் தெரிந்துகொண்டேன்.ஆனால் அதை அவர் குஜராத்தி மொழியில் எழுதியிருக்கிறார். அதை எப்படியாவது படிக்கவேண்டும்என்னும் ஆவல் எனக்குள் பிறந்தது.

சில ஆண்டுகளுக்குமுன்னர் பெங்களூரில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். சாகித்திய அகாதமிவெளியிட்ட நூல்களும் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. சில நூல்களை வாங்கினேன்.விற்பனைப்பிரிவில் இருந்த நண்பர் அப்புத்தகங்களோடு சாகித்திய அகாதமி வெளியிட்ட புத்தகப்பட்டியலையும்சேர்த்து ஒரு பையில் போட்டுக்கொடுத்தார். அடுத்தநாள் காலையில் வீட்டில் ஓய்வாக அமர்ந்திருந்தபோதுபுத்தகப்பட்டியலை எடுத்துப் புரட்டத் தொடங்கினேன். தில்லி அலுவலகம் வெளியிட்ட புத்தகப்பட்டியல்என்பதால் எல்லா மொழிகளிலும் வெளிவந்த நூல்களின் விவரங்களும் அதில் இருந்தன. நான் ஆங்கிலத்தில்வெளிவந்த புத்தகங்களைப்பற்றிய விவரங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கத் தொடங்கினேன்.

நீண்டகாலமாக நான் படிப்பதற்காகக் காத்திருந்த காகா காலேல்கரின் ’இமாயலனோ ப்ரவாஸ்’ புத்தகம்குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்திருக்கும் தகவலைப்பார்த்ததும் என் மனம் துள்ளியது. அக்கணமே தில்லி அலுவலகத்தின் விற்பனைப்பிரிவைத் தொடர்புகொண்டுஅப்புத்தகம் தொடர்பான விசாரித்தேன். தொலைபேசியில் அழைக்கும் ஒவ்வொரு முறையும் யாரோஒருவர் பேசினார்களே தவிர, விற்பனைப்பொறுப்பில் உள்ள நபரை என்னால் பிடிக்கவே முடியவில்லை.அதற்கிடையில் இரு வாரங்கள் ஓடிவிட்டன.

சாகித்தியஅகாதமியின் பெங்களூரு அலுவலகத்தில் விற்பனைப்பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஜெயந்திஎன்பவர் எங்களுடைய குடும்ப நண்பர். அவரிடம் அத்தகவலைச் சொல்லி அப்புத்தகத்தைப் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டேன். அவர் பத்தே நாட்களில் எனக்காக அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொடுத்துவிட்டார்.

அடுத்தஇரண்டு நாட்களில் அந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்துவிட்டேன். ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குமுன்னால்  காலேல்கர் இமயமலையைத் தேடி நடந்திருக்கிறார்என்னும் செய்தியே எனக்கு ஏதோ புராணக்கதையைப் படிப்பதுபோல இருந்தது. ஒவ்வொரு அத்தியாயமும்புதிய தகவல்களோடும் விசித்திரமான அனுபவக்குறிப்புகளோடும் அமைந்திருந்தது. சாலை வழியாககாகா காலேல்கர் நடந்துசெல்லும் காட்சியை நான் பலமுறை கற்பனை செய்து பார்த்ததுண்டு.

புத்தகத்தைப்படித்து முடித்ததும் அனுபவக்கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்திருந்த அப்புத்தகத்தைத் தமிழில்மொழிபெயர்க்கவேண்டும் என்னும் ஆசை எழுந்தது. உரிய அனுமதியுடன் ஓய்விருக்கும் நேரத்திலெல்லாம்ஒவ்வொரு அத்தியாயமாக மொழிபெயர்த்து முடித்தேன். இன்று ‘இமயமலை : ஒரு பண்பாட்டுப்பயணம்’என்னும் தலைப்பில் நூலாக வந்திருக்கும் அப்புத்தகத்தைப் பார்க்கும்போது மிகவும் மனநிறைவாகஉணர்கிறேன். இக்கணத்தில் காகா காலேல்கரை நன்றியுடன் நினைத்து வணங்குகிறேன்.

( இமயமலை : ஒரு பண்பாட்டுப் பயணம். தத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர். தமிழில் : பாவண்ணன்,  சாகித்திய அகாதமி வெளியீடு, சென்னை. விலை. ரூ.385)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2025 23:15
No comments have been added yet.


Paavannan's Blog

Paavannan
Paavannan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Paavannan's blog with rss.