மகத்தான இயற்கை ஆர்வலர் : கொ.மா.கோதண்டம் அவர்களுக்கு அஞ்சலி

 

பள்ளிக்கூடத்தில் நான் படித்துவந்தபோது,காடு, விலங்குகள் தொடர்பான புத்தகங்களை விரும்பிப் படித்துவந்தேன். ஐம்பது, நூறு மரங்களைக்கொண்ட தோப்பைப் பார்த்தாலே பரவசமுறும் வயதிலிருந்த எனக்கு காட்டைப்பற்றிய சித்திரங்களைஅளித்த படைப்புகள் என் வாசிப்புக்கு உகந்தவையாக இருந்தன. அன்று முழுதும் கற்பனையில்திளைத்திருக்க அச்சித்திரங்களே போதுமானவையாக இருக்கும். 


தினமணி கதிரில்தான் எழுத்தாளர்கொ.மா.கோதண்டம் அவர்களுடைய பெயரை முதன்முதலாகப் பார்த்தேன். அவருடைய கதைகளின் மையமும்கட்டுரைகளின் மையமும் பெரும்பாலும் காட்டுவாழ்க்கை சார்ந்தவையாகவே இருந்தன.  அவர் படைப்புகளைப் படித்துவிட்டு அவருடைய பெயரை நினைவில்நிறுத்திக்கொண்டேன். பிறகு, எங்கள் நூலகத்திலேயே அவர் எழுதிய ‘ஆரண்ய காண்டம்’ என்னும்சிறுகதைத்தொகுதி இருப்பதைக் கண்டு, அதைப் படித்தேன். கோதண்டம் நூல்களும் பிலோ இருதயநாத்நூல்களும் காட்டுக்குள் நாமும் சேர்ந்து வசிப்பதுபோன்ற அனுபவத்தைக் கொடுத்தன. என்றாவதுஒரு நாள் காட்டுக்குள் செல்லவேண்டும் என்னும் கனவை விதைத்தன. 

நான் விரும்பியதுபோலவே படித்துவேலைக்குச் சேர்ந்து ஊர்களைப் பார்க்கத் தொடங்கிய பிறகு மலைத்தொடர்களையும் காடுகளையும்சென்று பார்க்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கிக்கொண்டேன். காடு பற்றிய விருப்பத்தை என்னுள்விதைத்த அந்த ஆசான்களை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன். அந்த ஆசான்களில் பிலோ இருதயநாத்  ஏற்கனவே மறைந்துவிட்டார். எஞ்சியிருந்த ஒருவரானகொ.மா.கோதண்டம் அவர்கள் இப்போது இயற்கையோடு கலந்துவிட்டார்.

சிறுவனாக இருந்த காலத்திலிருந்துநான் அவரைத் தொடர்ந்து படித்துவந்தேன். திக்குத் தெரியாத காட்டில், காக்கை குருவி எங்கள்ஜாதி, காட்டுக்குள்ளே திருவிழாக் கொண்டாட்டம், வானகத்தில் ஒரு கானகம் போன்ற புத்தகங்களைநான் விரும்பிப் படித்தேன். நான் வேலையில் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கிய காலத்தில்புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு புத்தகக்கண்காட்சியில் அவர் எழுதிய ஏலச்சிகரம் நாவலை வாங்கிச்சென்று வாசித்தது நினைவில் உள்ளது.  

வாசிப்பு வழியாக மட்டுமே அறிந்துவைத்திருந்தஅவரை, ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் நான் முதன்முதலாகச் சந்தித்தேன். எழுத்தாளரும்மொழிபெயர்ப்பாளருமான மதுமிதா அவர்களுடைய மகளுக்கு நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்பதற்காகராஜபாளையத்துக்குச் சென்றிருந்தேன். அப்போதுதான் அவருடைய வீட்டுக்குச் சென்று சந்திக்கும்வாய்ப்பு கிடைத்தது. நூலகராக தன் வாழ்க்கையைத் தொடங்கிய விதத்தையும் சொந்த முயற்சிவழியாகவே சிறந்த இலக்கியங்களைத் தேடித்தேடிப் படித்து சுவைத்ததாகவும் ஏதோ ஒரு புள்ளியில்சொந்தமாக எழுதத் தொடங்கியதாகவும் சொன்னார். பள்ளி வயதிலிருந்து அவரைத் தொடர்ந்து படித்துவருகிறேன்என்பதைத் தெரிவித்தபோது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவருடைய மனைவி இராஜேஸ்வரிஅவர்களும் மொழிபெயர்ப்பாளர் என்பது அப்போது தெரிந்தது.

கோதண்டம் எழுத்தாளராக மட்டுமன்றிசிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். அவர் தன் சொந்த முயற்சியால் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ச்சிபெற்றார்.  கிருஷ்ணதேவராயர் தெலுங்கு மொழியில்எழுதிய ’ஆமுத்ய மால்யதா’ படைப்பை ‘ஆண்டாள் காவியம்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தார்.  அப்பூரி சாயாதேவி என்பவரின் ‘அவளது பாதை’ என்னும்சிறுகதைத்தொகுதியையும் சாகித்திய அகாதமிக்காக மொழிபெயர்த்தார். அந்த மொழிபெயர்ப்புக்குசாகித்திய அகாதமி வழங்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது அவருக்குக் கிடைத்தது.  ‘கிளிகளின் கிராமம்’ என்னும் புத்தகத்தை மலையாளத்திலிருந்துமொழிபெயர்த்து வெளியிட்டார்.

ஒருமுறை அவருடைய நேர்காணல் ஒருபத்திரிகையில் வெளிவந்தது. மலைவாழ் மக்களுக்கு வீடு வழங்கும் தமிழக அரசு திட்டத்தின்பின்னால் அவருடைய பங்களிப்பு இருந்ததைப் பற்றிய ஒரு தகவல் அந்த நேர்காணலில் குறிப்பிடப்பட்டிருந்தது.அதைப் படித்ததும் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். மாவட்ட ஆட்சியரையும் முதலமைச்சரையும் பலமுறைசந்தித்து இத்திட்டம் நடைமுறைக்கு வர பெரிதும் பாடுபட்டிருக்கிறார் அவர். அன்றே நான்அவரைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். ‘நான் என் கடமையைத்தான் செய்தேன்’ என்றுஅன்றைய உரையாடலில் அமைதியாக அவர் சொன்ன சொல் இன்னும் என் காதில் ஒலித்தபடி உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கடலூர்வளவ.துரையன் நடத்திவரும் சங்கு காலாண்டிதழில் தமிழ்ச்சிறுகதைகளில் வெளிப்படும் வாழ்க்கைக்கோணத்தைநெருக்கமாகப் புரிந்துகொள்ளும் வகையில் சில சிறுகதைகளை முன்வைத்து ஓர் அனுபவத்தொடரைஎழுதிவருகிறேன். ஒவ்வொரு கட்டுரையும் வெளிவந்ததுமே அதைப் படித்துவிட்டு பல ஊர்களிலிருந்துபத்து பேர் தொலைபேசியில் அழைத்துப் பேசுவார்கள். நான் குறிப்பிட்ட கதைகளை அவர்கள் தம்வாழ்க்கையனுபவக் கோணத்திலிருந்து பேசுவார்கள். அந்தப் பத்து பேர்களில் ஒருவர் கொ.மா.கோதண்டம்.ஒரு கட்டுரையைக் கூட அவர் தவறவிட்டதில்லை. கதையனுபவம் சார்ந்து தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டபிறகு “நல்லா எழுதுங்கப்பா, வாழ்த்துகள்” என்று வாழ்த்திவிட்டு முடித்துக்கொள்வார். இனி, அவர் குரல் கேட்காது என நினைக்கும்போதுவருத்தமாக உள்ளது.

போன ஆண்டு நான் குடும்பத்தோடுராஜபாளையத்துக்குச் சென்றிருந்தேன். ராஜபாளையத்தில் வசிக்கும் ஆனந்தி அவர்கள் தம் சகோதரரின்நினைவாக ஆண்டுதோறும் வழங்கும் வாழ்நாள் சாதனை விருதை எனக்கு அளிக்கும் நோக்கத்துடன்ஓர் இலக்கியவிழாவை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவுக்கு கோதண்டம் அவர்களும் அவருடையதுணைவியாரும் ஒன்றாக வந்திருந்தனர். விழா தொடங்குவதற்கு முன்னரே அவர் என்னைச் சந்தித்துவாழ்த்துகளைத் தெரிவித்தார்.  மண்டபத்திலேயேஅமர்ந்து நாங்கள் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். மிக மகிழ்ச்சியான தருணம் அது.

04.10.2025 அன்று அவர் இந்த உலகைவிட்டுமறைந்தார். ஆயினும் தம் படைப்புகள் வழியாக அவர் என்றென்றும் நம்மிடையே வாழ்ந்திருப்பார்.அவருக்கு என் அஞ்சலிகள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2025 23:02
No comments have been added yet.


Paavannan's Blog

Paavannan
Paavannan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Paavannan's blog with rss.