விஜயை எதிர்ப்பது ஆளும் கட்சி ஆதரவாகுமா?
தமிழ் இலக்கியவாதிகள் ரொம்பவே விநோதமானவர்கள். இவர்கள் தங்களைச் சமூகத்தின் மேல்தட்டில் வைத்து மதிக்க வேண்டும் அல்லது பூசை பண்ண வேண்டும் என்று விழைபவர்கள். ஆனால், அந்தச் சமூகத்தின் முக்கிய அங்கமான அரசியலைக் குறித்துப் பேசாமல் மூலையில் குந்தியிருப்பதே இலக்கியவாதியின் மேன்மை என்று காட்டிக் கொள்வார்கள். கொஞ்சம் பேர் உள்ளூர் அரசியல் சாக்கடை வெளியூர் அரசியல் சந்தனம் என்ற கொள்கை உடையவர்கள். அரசியல் சார்பு கூடாது, கட்சி சார்பு கூடாது (இதில் எனக்கு ஓரளவு ஏற்பு உண்டு), அதிகார சாய்வு கூடாது என்பார்கள். ஆனால், தான் இலக்கியவாதி என்பதால் எனக்கு அரசு எல்லா சொகுசையும் உண்டாக்கித் தரவேண்டும் அது அதன் கடைமை என்று பிலாக்கணம் பேசுவார்கள். கொஞ்சம் பேர் அரசியலா வேண்டாம், ஆனால், அதிகாரிகளா பலே பலே என்று அவர்களை அணைத்துக்கொள்ளும் மறு ரகத்தின் உறுப்பினர்கள். அதிகாரி எழுத்தாளர்களை அவர்களின் தகுதிக்கும் மீறி பாராட்டித் தள்ளிப் பலன் பெற்று தங்களைத் தாங்களே கீழ்மை படுத்திக் கொண்டவர்கள் பலருளர். அரசியல் வேண்டாம்; ஆனால், ஜாதி வேண்டும், அரசியல் வேண்டாம்; ஆனால், வர்க்க பேதம் வேண்டும், அரசியல் வேண்டாம்; ஆனால், ஊர்ப்பாசம் வேண்டும், அரசியல் வேண்டாம்; ஆனால், அரச விருது, பாராட்டு, வீடு வேண்டும் என்பார்கள், அரசியல் வேண்டாம்; ஆனால், இலக்கிய அரசியலில் தான் மேலெழவும், மற்றொருவரைக் கீழ்த் தள்ளவும் தன்னால் இயன்ற யாதொன்றையும் செய்யும் மலினர்கள். தமிழில் தூய இலக்கியப் போக்குத் தமிழில் அரசியல் பேச முடியாமல் பண்ணி திராவிட இயக்கங்களால் ஓரங்கட்டப்பட்ட பிராமண எழுத்தாளர்களால் கட்டி எழுப்பட்டது. அதன் தொடர்ச்சியான இன்றைய எழுத்தாளர்கள், அவர்களுள் பெருன்பான்மையினர் பிராமணரல்லாத போதும் இந்த தூய்மை அரசியலையே இன்னும் உரிய பாவனையாகச் சுமப்பவர்கள். மேலும், திராவிட வெறுப்பு அரசியலை முன்வைப்பதின் வழி தங்களை உயர்ச்சமூக தன்னிலையாக அடையாளம் காட்டக்கொள்ளக் கூடியவர்கள். அதன்பொருட்டே, இவர்கள் இன்னமும் தலித் எழுத்தாளர்களை, பெண்களை எழுத்தாளர்களாக அங்கீகரிக்கும் பழக்கம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். விஜயின் கொ))லை புரிதலுக்கு எதிரான (மோலோட்டமானதாக இருப்பினும்) அறிக்கையில் கையொப்பம் இட்டவர்களை ஆளும் கட்சிக்கு சார்பானவர்களாகக் கட்டமைக்கும் இவர்கள், ஏன் ’ஆழமான, விரிவான, அரசியல் சார்பற்ற’ ஓர் தூய அறிவுஜீவி – அல்ல அல்ல – இலக்கிய ஜீவ அறிக்கையை வெளியிடவில்லை. உண்மையில் விஜயின் எழுச்சி திராவிடக் கட்சிகளால் முறையாக அரசியல் மையப்படுப்படாத உதிரியான இளைய தலைமுறையினராலும், திராவிடக் கட்சிகளின் பிராமண துவேசத்தால் பலன் பெற்று சொகுசடையும் வரை அரசியல் பேசிவிட்டு, அது நிகழ்ந்தபின் மெல்லத் திரும்பத் தன் இடைசாதி உணர்ச்சியை மீட்டெடுத்துக்கொண்டு ஆணவக் கொலைபுரியும் சமூகங்களாலும், சினிமாக்காரனே தம்மை மீட்கும் மீட்பன் என்று தொடர்ந்து நம்பி பழக்கப்பட்ட மந்தைகளாலும் நேர்ந்திருக்கிறது. அரசியல் வேண்டாம் என்ற ஒருவரால் இதை முறையாக உள்வாங்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. விரும்பியோ, விரும்பாமலோ நாம் இந்த அரசியலின் விளைவுகள்தான். அரசியல் வேண்டாம் என்று பேசும் இலக்கியவாதிகளால் ஏன் திராவிட கட்சியை எதிர்க்க முடிகிறது, கேள்வி கேட்க முடிகிறது; ஆனால், மாற்றை உற்பத்தியே செய்ய முடியவில்லை??? அரசியலில் மாற்று இல்லாத நிராகரிப்பு வெற்று சலம்பல். சார்பே அரசியல்; நடுநிலை என்பதோர் போலி வாதம். ஒப்பு நோக்கும் போது மேலானது என்பதே அரசியல் அரிச்சுவடி. இப்போதைய தேவை விஜய் அரசியல் எழுச்சியை மதிப்பிடுவதே; கீழறுப்பதே. அதைத்தான் ’நோய் நாடி’ச் செய்ய வேண்டும் என்பது என் கோரிக்கை.
#விமல் #றாம்
றாம் சந்தோஷ் வடார்க்காடு's Blog
- றாம் சந்தோஷ் வடார்க்காடு's profile
- 2 followers

