மற்ற பாதி
புதிய சிறுகதை
கையில் மாத்திரைகளை வைத்துக் கொண்டு செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டார் ரத்னசபாபதி. மறதி வந்துவிட்டது. மாத்திரை சாப்பிட்டோமா இல்லையா என்று சில நாட்கள் குழப்பம் வந்துவிடுகிறது.
பெரும்பாலும் அந்தக் குழப்பம் இரவு நேரம் தான் ஏற்படுகிறது. இதனால் ஒரு நாள் இரண்டுமுறை மாத்திரை சாப்பிட்டு விட்டார். மறுநாள் முழுவதும் தலைசுற்றலாக இருந்தது. ஆகவே தேதி நேரத்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பழக்கத்தைத் துவங்கினார். மாத்திரை போட்டோமா எனச் சந்தேகம் வந்தால் இந்தப் புகைப்படத்தைப் பார்த்துக் கொள்வார்.
இதுவரை எவ்வளவு மாத்திரைகள் விழுங்கியிருப்போம் என்று அவரிடம் கணக்கில்லை. ஆனால் கல்லூரி படித்து முடிக்கும் வரை ஒன்றிரண்டு தடவைக்கு மேல் டாக்டரிமே போனதில்லை என்பது நினைவிருக்கிறது.
ஒய்வு பெற்றபிறகு அவர் சாப்பிடும் மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. தனது வயதிலுள்ள மருத்துவரும் இவ்வளவு மாத்திரைகள் சாப்பிடுவாரா எனத் தெரியவில்லை.
ரத்னசபாபதி பொதுவாக வயதான மருத்துவர்களிடம் போக மாட்டார். அவர்கள் எந்தச் சலுகையும் காட்டமாட்டார்கள். பெண் மருந்துவரைத் தேடியே செல்வார். அவர்கள் பேசும் போதும் அவர் சொல்லும் கஷ்டங்களைக் கேட்கும் போது கொஞ்சம் கனிவாக நடந்து கொள்வார்கள்.

வீட்டின் அருகிலுள்ள அருணா மெடிகல்ஸ் கடையில் தான் வழக்கமாக மாத்திரைகள் வாங்குவார். அந்தக் கடையில் வேலைக்கு வரும் பெண்கள் இரண்டு மாதங்களுக்கு மேல் வேலையில் இருப்பதில்லை. சிலர் ஒரு வாரத்தோடு நின்றுவிடுவதையும் கண்டிருக்கிறார். என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.
சென்றமுறை மருந்துக்கடைக்குப் போயிருந்த போது கடை மேஜையில் ஒரு சிவப்பு பலூன் பொருத்தப்பட்ட சிறிய மெஷின் ஒன்றை வைத்திருப்பதைக் கண்டார். அது சுவாச அளவை மேம்படுத்தும் பலூன் என்றார்கள். கடைப்பெண் அவரை ஊதிப்பார்க்க சொன்னாள். அவருக்குக் கூச்சமாக இருந்தது. அந்தப் பெண் தானே ஊதிக் காட்டினாள். பலூன் பெரியதாகியது. அவளைப் போலத் தன்னால் ஊத முடியாது என்பதால் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
“சும்மா ஊதுங்க தாத்தா“ என்றாள் கடைப்பெண்
அவளுக்காகப் பலூனை ஊதினார். அவரால் மூச்சை வேகமாக விடமுடியவில்லை. அந்தப் பெண் இன்னொரு முறை பலூனை ஊதச் சொன்னாள்.
அவர் வேண்டாம் என மறுத்துவிட்டதுடன் இடுப்பைப் பிடித்துக் கொண்டு முக்காலியில் உட்கார்ந்து கொண்டுவிட்டார். அந்தப் பெண் அவருக்கு டப்பாவைத் திறந்து ஒரு புதுவகை மிட்டாய் ஒன்றைக் கொடுத்தாள்
“ப்ரீ தான். சாப்பிட்டு பாருங்க“
“நான் இனிப்பு சாப்பிடுறதில்லை “என்றார்
“இது இனிப்பு இல்லை. மருந்து “
“என்ன மருந்து“
“சாப்பிட்டு பாருங்க. “. என்று சிரித்தாள்
அதைப்பிரித்து வாயிலிட்டார். ஆரஞ்சு மிட்டாய் போலிருந்தது. ஆனால் லேசான கசப்பும் இருந்தது.
“இது என்ன மருந்து“ எனத் திரும்பவும் கேட்டார்
“ விட்டமின் சி. மாத்திரை புதுசா வந்துருக்கு. ஒரு டப்பா ப்ரீயா குடுத்தாங்க. எப்படி இருக்குனு டெஸ்ட் பண்ணி சொல்லணுமாம்“
“அப்போ நீ என்ன வச்சு டெஸ்ட் பண்ணினயா“
“கோவிச்சிகிடாதீங்க தாத்தா.. உங்க பில்லுல எக்ஸ்ட்ரா பத்து ரூபா டிஸ்கவுண்ட் போடுறேன்“
வழக்கமாக ஐந்து சதவீதம் மட்டுமே தள்ளுபடி தருவார்கள். ஆனாலும் இந்தப் பெண் தன்னை ஏன் பரிசோதனை எலி போல நடத்தினாள் என்று கோபமாக வந்தது.
“உன் பேரு என்ன“ என்று கேட்டார்
“ரோஸ்மேரி.. உங்க வீட்டுக்கு பின்னாடி தான் இருக்கேன். திரௌபதியம்மன் கோவில் இருக்கே. அதை ஒட்டுன சந்து“
“என் வீடு உனக்கு எப்படித் தெரியும்“
“நான் உங்களைப் பாத்துருக்கேன். எங்க தெருவில இருக்கக் காய்கறிகடைக்கு வருவீங்க“
“நான் உன்னைப் பாத்தது கிடையாது“
“நீங்க தெருவுல யாரையும் பாக்க மாட்டீங்க. குனிஞ்சிகிட்டே வருவீங்க. தனியா இருக்கீங்களா“
“என் வொய்ப் அமெரிக்கா போயிருக்கா.. மக வீட்டுக்கு, பேரனைப் பாத்துகிட “
“நீங்க போகலையா“
“என்னாலே குளிர் தாங்க முடியாது“
“அமெரிக்கா போறதுக்குப் பிளைட் டிக்கெட் எவ்வளவு ரூபாய்“
“அது நீ எந்தப் பிளைட்ல போறே. எப்போ போறேங்கிறதைப் பொறுத்து“
“எனக்கு அமெரிக்காவில வேலை கிடைக்குமா“
“நீ என்ன படிச்சிருக்கே. “
“டிப்ளமோ.. பேஷன் டிசைன். ஆறு மாதம் படிச்சிருக்கேன்“
“அப்புறம் ஏன் இந்த வேலைக்கு வந்தே“
“அந்த வேலை பிடிக்கலை“
“பிறகு ஏன் படிச்சே“
“நானா படிக்கலை. எங்க மாமா படிக்கச் சொன்னார். படிச்சேன். “
அவர் கேட்டமாத்திரை ஸ்டாக் இல்லை. மாலை தான் வரும் என்றாள். மாலையில் வந்து வாங்கிக் கொள்கிறேன் என அவர் கிளம்பும் போது தானே வீட்டில் கொண்டு வந்து தருவதாகச் சொன்னாள்
“பில் போடு. இப்பவே பணம் குடுத்துருறேன்“ என்றார் ரத்தினசபாபதி.
அவள் கொடுத்த பில்லை வாங்கிப் பணம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது கடைமுதலாளி ரவி கண்ணன் பைக்கில் வந்து இறங்கினான். அவள் அவசரமாக எதையோ தேடுவது மாத்திரை டப்பா ஒன்றை எடுத்துக் கொண்டாள்.
அவர் கிளம்பும் போது ரவி கண்ணன் அவளை எதற்கோ திட்டும் சப்தம் கேட்டது. அடுத்த முறை வரும்போது அவள் வேலைக்கு இருக்க மாட்டாள் என்று தோன்றியது.

அன்று இரவு ரோஸ்மேரி அவரது அபார்ட்மெண்டிற்கு வந்திருந்தாள். கையில் காகித உறை ஒன்றில் மாத்திரைகள் இருந்தன. அவர் பாதிக் கதவை திறந்து கொண்டபடியே அவளிடமிருந்த மாத்திரைகளை வாங்கிக் கொள்ள முயன்றார்
“குடிக்கத் தண்ணீ வேணும்“ என்றாள் ரோஸ்மேரி
அவர் தண்ணீர் எடுக்கக் கிச்சனுக்குள் போன போது அவள் கதவை திறந்து ஹாலில் நின்றிருந்தாள். டிவி அருகே இருந்த அவரது பேரன் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உங்க பேரனா,.. வெள்ளைக்கார பையன் மாதிரி இருக்கு.. “
“என் மகள் ஒரு வெள்ளைக்காரனை தான் கல்யாணம் பண்ணி இருக்கா“
“லவ் மேரேஜா.. நீங்க சண்டை போட்டீங்களா“
“கல்யாணம் பண்ணிகிட போறேனு சொன்னா அவ்வளவு தான். அமெரிக்காவுல தான் கல்யாணம் நடந்துச்சி.. சர்ச்ல. “
“உங்களுக்கு அதுல கோபமா“
“அவ இஷ்டத்தை நாங்க எப்படித் தடுக்க முடியும்“
“உங்களுக்குக் கல்யாண செலவு மிச்சம். உங்க பேரன் பேரு என்ன“
“அமுதன்“
“நல்லவேளை வெள்ளைகார பேரு வைக்கலை “எனச் சிரித்தாள்
அவர் சிரிப்பது போல நடித்தார். பேரனுக்கு அமுதன் எனப் பெயர் வைத்தாலும் ஸ்டீவ் என்று தான் அழைக்கிறார்கள். தன்னைச் சமாதானம் செய்வதற்காக வைத்த பெயரது என நினைவில் வந்தது.
அவர் தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்டினார்
“ஜில்லு தண்ணி இல்லையா“ எனக்கேட்டாள்
“வைக்கிறதில்லே“ என்றார்
“அந்த போட்டோல தொப்பிப் போட்டு நீக்குறது நீங்க தானா“ எனக்கேட்டாள்
“ஆமா அமெரிக்காவுல எடுத்தது“ என்றார்
“இந்த தொப்பித் தானா“ எனச் சுவரில் மாட்டி வைக்கபட்டிருந்த பேஸ்பால் தொப்பியைக் காட்டி கேட்டாள். ஆமாம் எனத் தலையசை அசைந்தார். அவள் தண்ணீர் பாட்டிலை திறந்து கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தாள்.
“நீங்களே சமைப்பீங்களா“ எனக்கேட்டாள்
“ஹோட்டல் சாப்பாடு எனக்கு ஒத்துகிடாது“
“இன்னைக்கு என்ன சமைஞ்சீங்க“
“பருப்பு ரசம் எண்ணெய் கத்திரிக்காய்“
“எனக்கு கத்திரிக்காயே பிடிக்காது. உருளைகிழங்கு பிரை தான் பிடிக்கும். நான் பிரைடு ரைஸ் நல்லா செய்வேன் “
அவளுக்கு ஏதாவது பணம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தவர் போல உள்அறைக்குச் சென்று பத்து ரூபாய் எடுத்துக் கொண்டு வந்து நீட்டினார்
அவள் வேண்டாம் என மறுத்தபடி தண்ணீர் பாட்டிலை அவரிடம் நீட்டிவிட்டு கேட்டாள்
“அந்த தொப்பியை எனக்குக் குடுப்பீங்க“
“அது ஆம்பளைங்க போடுற தொப்பி, உனக்கு எதுக்கு “
“வேணும். அழகா இருக்கு“ என்றாள்
“எடுத்துக்கோ“ என்றார்
அவளாகச் சுவரில் மாட்டியிருந்த நீல வண்ண தொப்பியை எடுத்து தனது தலையில் வைத்துக் கொண்டு சிரித்தாள்.
என்ன பெண்ணிவள் என ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்
“இதை எங்க முதலாளி கிட்ட சொல்லிராதீங்க“ என்றபடியே தொப்பியோடு அவள் வெளியேறிச் சென்றாள். கடந்த ஐந்து மாதங்களாக அவரது வீட்டிற்கு வெளியாள் எவரும் வரவேயில்லை. ஆகவே அவளது வருகை அவரை மகிழ்ச்சிபடுத்தியது.
அதன் மறுநாள் காய்கறி கடைக்குப் போன போது ரோஸ்மேரியின் வீடு அந்தச் சந்திற்குள் எங்கே இருக்கிறது எனக் கண்களால் தேடினார். நீண்டு செல்லும் சந்தில் சாக்கடை வழிந்தோடிக் கொண்டிருந்தது.
அவர் காய்கறி வாங்கிவிட்டு வீடு திரும்பிய போது அவளைப் பற்றி நினைத்துக் கொண்டே வந்தார்.
அடுத்த முறை மருந்துக்கடைக்குப் போன போது ரோஸ்மேரியைக் காணவில்லை. கழுத்து எலும்பு தெரிய லூசான ஜாக்கெட் அணிந்த காட்டன் புடவை கட்டிய ஒரு பெண் நின்றிருந்தாள். நல்ல உயரம். இறுக்கமான முகம். அவர் தனது செல்போன் நம்பரைச் சொல்லி மருந்து கேட்டார்
“சீட்டு இல்லாம யாருக்கும் மருந்து தரக்கூடாதுனு ஒனர் சொல்லியிருக்கார்“
“நான் ரெகுலர் கஸ்டமர்மா“ என்றார்
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. மருந்து சீட்டு வேண்டும். “
“ரவி கண்ணன் நம்பர் சொல்லு. நான் அவர் கிட்ட பேசுறேன்“ என்றார்
“அவர் நம்பர் எனக்குத் தெரியாது. “. எனச் சிடுசிடுத்த குரலில் சொன்னார்
ரோஸ்மேரி விளையாட்டு காட்டிய அதே பலூன் இப்போதும் அதே இடத்தில் இருந்தது. ஏனோ ஊதிப்பார்க்க வேண்டும் போலிருந்தது. அதன் அருகில் சென்று பலூனை தொட முயன்றபோது கடைப்பெண் சப்தமாகச் சொன்னாள்
“அதெல்லாம் தொடாதீங்க. விக்குறதுக்கு வச்சிருக்கோம்“
“இல்லைம்மா.. இது டெமோ மிஷின்.. போன தடவை கூட ஊதி பாத்தேன்“
“சொன்னா கேட்கமாட்டீங்களா.. ஏன் சார் உயிரை வாங்குறீங்க “ என்றாள்
அவளது கோபமான குரலும் நடத்தையும் எரிச்சலை உருவாக்கியது. . மருந்து வாங்காமல் வீடு திரும்பினார்
மறுநாள் காலை பத்து மணிக்கு கடைக்குப் போன போது ரவி கண்ணன் இருந்தார். அந்தப் பெண்ணைக் காணவில்லை
ரத்தினசபாபதி நேற்று நடந்த எதையும் சொல்லவில்லை. ஆனால் ரவி கண்ணனே சொன்னார்
“வேலைக்குச் சேர்ந்து ரெண்டு நாள் கூட ஆகலே, அதுக்குள்ளே இந்தப் பொண்ணாலே எத்தனை பிரச்சனை. உங்க கூட ஏதாவது பிரச்சனை பண்ணுச்சா சார்“
“எந்தப் பொண்ணு“ எனக்கேட்டார்
“தெரியாத்தனமா ஒரு பொண்ணை வேலைக்கு வச்சிட்டேன். அது நம்ம ரெகுலர் கஸ்டமர்ஸ் கிட்ட தப்புத் தப்பா பேசி சண்டை போட்டு பெரிய பிரச்சனை ஆகிப்போச்சு“
“அது எப்போ“
“நேத்து மதியம் மூணு மணிக்கு. ஒரு கஸ்டமரை கெட்டவார்த்தைல திட்டி இருக்கு.. அவர் போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் குடுக்கப் போயிட்டார்“
“நிஜமாவா“
“ஆமாம் சார். அவர் ரிடயர்ட் தாசில்தார். நாலாவது செக்டார்ல வீடு. அவர் வொய்ப்புக்கு மெடிசன் வாங்கி இருக்கார். இந்தப் பொண்ணு தப்பான மருந்தை குடுத்துருச்சி. அதுக்கு ஏதோ திட்டி இருக்கார். இந்தப் பொண்ணும் பதிலுக்குத் திட்டியிருக்கு. பெரிய சண்டையாகி போச்சு“
“அந்த பொண்ணை என்ன செய்தீங்க“ எனக்கேட்டார்
“உடனே வேலையை விட்டு நிறுத்துட்டேன். கடைக்கு ஆள் கிடைக்குறது குதிரக் கொம்பாயிருச்சி சார். “
“ரோஸ்மேரினு ஒரு பொண்ணு இருந்துச்சே.. அது நல்ல பொண்ணு“ என்றார்
அதைக்கேட்டு ரவி கண்ணன் சொன்னார்
“நானும் அப்படித் தான் நம்பினேன். அது நிறையப் பணத்தைத் திருடிருச்சி சார். லவ் மேட்டர். அந்தப் பையன் வந்து கேட்கும் போதெல்லாம் கடை காசை எடுத்து கொடுத்துருக்கு. எனக்குச் சந்தேகம் வந்து ஒரு நாள் கையும் களவுமா பிடிச்சு விசாரிச்சா. உண்மையை ஒத்துகிடுச்சி. எவ்வளவு பணத்தை எடுத்துச்சினு தெரியலை. உனக்குச் சம்பளம் கிடையாதுனு விரட்டி அனுப்பிச்சேன்… அவங்க வீட்ல இருந்து வந்து என்கூடச் சண்டை போடுறாங்க. நான் என்ன செய்றது சொல்லுங்க“
“அந்த பொண்ணைப் பாத்தா அப்படித் தெரியலை“
“யாரையும் முகத்தைப் பார்த்து நம்ப முடியலை சார். “ என ரவி கண்ணன் அலுத்துக் கொண்டான்
ரோஸ்மேரி யாரைக் காதலித்தாள். அந்தப் பையனுக்காக ஏன் கடையில் இருந்த பணத்தை எடுத்து கொடுத்தாள். எந்த ஊருக்கு ஒடிப்போய்விட்டாள் என எதுவும் தெரியவில்லை. ஆனால் வீடு திரும்பிய பிறகும் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார்
ஒருவேளை அவரிடம் தொப்பி வாங்கியது கூட அவனுக்காகத் தானா எனச் சந்தேகம் வந்தது.
அதன் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் அவர் காய்கறி கடையில் கீரை வாங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு பைக்கில் இளைஞனுடன் ரோஸ்மேரி வந்து இறங்கினாள். அவர் கடையில் நிற்பதை பார்த்துவிட்டு நேராக அருகில் வந்து கேட்டாள்
“என்ன சார் எப்படி இருக்கீங்க. “
“வேலையை விட்டுட்டே போல“ என்று கேட்டார்
“கடைல என்னைப் பற்றி ஏதாவது சொன்னாங்களா. “.
“இல்லையே“ என்றார்
“இதான் என் ஹஸ்பெண்ட்.. பேரு கிரண்.. ரெண்டு மாசம் முன்னாடி கல்யாணம் பண்ணிகிட்டோம்““
“லவ்மேரேஜா“ எனக்கேட்டார்
“உங்களை மாதிரி மருந்து வாங்க வந்தாரு. பேசிகிட்டு இருந்தோம். அது லவ் ஆகிருச்சி“
“உன் ஹஸ்பெண்ட் என்ன வேலை செய்றார்“ எனக்கேட்டார்
“அவரு ஏசி மெக்கானிக்“ என்று சிரித்தாள். பின்பு அவர் கேட்காமலே சொன்னாள்
“எங்கம்மாவை பாக்க வந்தேன், நாங்க இப்போ ஏவி ஸ்கூல் பக்கம் குடியிருக்கோம்.. “
“அது எங்க இருக்கு“
“ஷாப்பிங் மால் இருக்குல்லே சார். அதுக்குப் பின்னாடி.. உங்க வொய்ப் அமெரிக்காவுல இருந்து வந்துட்டாங்களா“
“ஏப்ரல் தான் வருவா“
“அந்த கடைல மருந்து வாங்காதீங்க சார். நிறைய டூப்ளிகேட்“ என்றாள்
“நிஜமாவா“ எனக்கேட்டார்
“ஆமாம் சார். நானே குடுத்துருக்கேன். ரவி கண்ணன் பாக்க தான் அப்பாவி. கடைக்கு வேலைக்கு வர்ற எல்லாப் பொண்ணுகளையும் லவ் பண்ண ஆரம்பிச்சிருவாரு.. நானா கடைல இருந்து காசை எடுக்கலை. அந்த ஆளு தான் என்னைச் செட்டப் பண்ண அடிக்கடி பணம் குடுத்தாரு. நான் வாங்கி ஜாலியா செலவு பண்ணிட்டேன். கடைல ஒரு நாள் என்னைக் கிஸ் பண்ண டிரை பண்ணினாரு.. கன்னத்துல அடிச்சேன். அத்தோட வேலையை விட்டு நின்னுட்டேன். ரவி கண்ணன் வொய்பை பாத்து இருக்கீங்களா. செம ஸ்டைலா இருக்கும். அதைக் கிஸ் பண்ண வேண்டியது தானே. அலையுறான் “
சிறிய மருந்துக்கடைக்குள் எத்தனை உலகம் அறியாத நிகழ்வுகள். ரகசியங்கள்.
“ இப்போ எங்க வேலை பாக்குறே“
“சிட்டி சென்டர்ல “ என்றாள்
“நான் கிளம்புறேன்“ என அவர் பையை எடுத்துக் கொண்டு காய்கறி கடையை விட்டுப் புறப்பட்டார்
ரோஸ்மேரி கடைக்காரனைக் கேட்காமலே ஒரு கேரட்டை எடுத்து தின்றபடியே சொன்னாள்
“உங்களுக்கு நான் ஒரு பேரு வச்சிருகேன்“
“என்ன பேரு“
“தொப்பித் தாத்தா“ என்று சிரித்தாள்
அந்தச் சிரிப்பின் போது ரோஸ்மேரி அவ்வளவு அழகாக இருந்தாள். அவளைத் தன்னுடைய வீட்டிற்கு மறுபடி அழைக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் கூப்பிடவில்லை.
ரோஸ்மேரி தனது அம்மா வீட்டினை நோக்கி போய்க் கொண்டிருந்தாள். மருந்துக் கடையில் நடந்த நிகழ்வுகள் எதைப்பற்றியும் கவலையில்லாத அந்தச் சிரிப்பு. உற்சாகமான நடை ஆச்சரியமளித்தது. அவள் கணவனுடன் தோளில் கைபோட்டபடி நடந்து போவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி ஒரு முறை கூடத் தனது மனைவியோடு தெருவில் சென்றதில்லை என்று ரத்னசபாபதிக்கு ஆதங்கமாகவே இருந்தது
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers

