மருந்தாகும் பாடல்கள்
கறுப்பு வெள்ளைப் பாடல்களின் மீதான பித்து என்பது வெறும் ஏக்கம் மட்டுமில்லை. அது ஒரு நினைவுமீட்சி. யூடியூப்பில் உள்ள பழைய பாடல்களுக்குக் கீழே பின்னூட்டம் எழுதியவர்களைத் தேடிப் படிப்பது சுவாரஸ்யமானது.

பலரும் உணர்ச்சிப் பெருக்குடன் கண்ணீர் மல்கப் பாடலை ரசித்திருக்கிறார்கள். சிலர் அந்தப் பாடல் இடம்பெற்ற படம் வெளியான நாள் யாருடன் எங்கே பார்த்தோம் என்பதைத் துல்லியமாக எழுதியிருக்கிறார்கள். வியப்பூட்டும் சில பதிவுகளும் உண்டு. இந்தப் பாடல்கள் லட்சக்கணக்கான முறை கேட்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நபர் பல்வேறு பழைய பாடல்களில் தனது கருத்தை தொடர்ந்து பதிவு செய்வதையும் பார்த்திருக்கிறேன். இறந்து போன நண்பர்கள் இந்தப் பாடலின் நினைவுகளுடன் இணைந்துவிடுவதைப் பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
காதல் பாடல்களுக்கு அடியில் உள்ள பின்னூட்டங்களில் எழுதப்படாத காதல்கதைகள் மறைந்திருக்கின்றன. 70களின் இறுதியில் இலங்கை வானொலியில் இந்தப் பாடல்கள் ஒலிபரப்பட்டதையும் நினைவு கொள்கிறார்கள்.
பூங்காவில் நடைபயிற்சி செய்யும் போது இப்படி பழைய பாடல்களை செல்போனில் ஒலிக்கவிட்டபடி நடப்பவர்களை கண்டிருக்கிறேன். அடுத்தவர்களும் கேட்டு ரசிக்கட்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். சில முதியவர்கள் நடைபயிற்சி முடிந்தபின்பு ஒன்றாக அமர்ந்து பழைய பாடல்களை சேர்ந்து கேட்பதையும் பார்த்திருக்கிறேன். ஒரு கோப்பை தேநீரைப் பகிர்ந்து கொள்வது போல ஆசையாகப் பாடலைக் கேட்கிறார்கள்.
சமீபத்தில் எனது சித்தப்பா மறைந்து போனார். சாத்தூரில் அவரது உடலைத் தகனம் செய்வதற்காக கொண்டு சென்றிருந்தோம். மயான ஊழியர் தனது செல்போனின் காலர் டியூனாக `அன்பிலார் எல்லாம் தமக்குரியர்` என்ற பல்லாண்டு வாழ்க திரைப்படப் பாடலை வைத்திருந்தார். திடீரென அந்த பாடல் ஒலித்த போது தகனமேடையைச் சுற்றி நின்றிருந்த பலரும் கலங்கிப் போய் விட்டார்கள்.
பழைய பாடல்களை ரசிப்பவர்களின் நினைவாற்றல் ஆச்சரிமளிக்கிறது. அது போலவே அவர்கள் பாராட்டுவதற்குப் பயன்படுத்தும் அழகான சொற்கள். அதில் வெளிப்படும் அவர்களின் மனது. மிக உண்மையாக, உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார்கள்.
இந்தப் பின்னூட்டங்களில் வெளிப்படும் அந்தக் காலத் திரையரங்குகளைப் பற்றிய தகவல்கள். இசையமைப்பாளர், . பாடகர்கள் நடிகர்கள் மீது காட்டும் மரியாதை, சக ரசிகரை பாராட்டும் விதம், தங்கள் வயதை மறைத்துக் கொள்ளும் விளையாட்டு ரசிக்கும்படியாக உள்ளது.
இவர்கள் அனைவரும் கடந்து போன காலத்தை நினைத்து ஏங்குகிறார்கள். இந்த விருப்பத்தைப் பொதுவெளியும், வீடும். இன்றைய தலைமுறையும் புரிந்து கொள்ளவில்லை என்பதுடன் கேலி கிண்டலும் செய்கிறார்கள்
பழைய பாடல்கள் அவர்களின் இளமை நினைவை மீட்டுவதையும், இன்றைய நெருக்கடிகளிலிருந்து அவர்களை ஆற்றுப்படுத்துவதையும் நன்றாக உணர முடிகிறது. மருந்தாகும் இந்தப் பாடல்களுக்கு அவர்கள் தெரிவிக்கும் நன்றி சொல்லில் அடங்காதது.
“ஞாயிறு என்பது கண்ணாக“ பாடலின் கிழே SubramaniSR5612 என்பவர் பதிந்துள்ள ஒரு கருத்து முக்கியமானது
“கணவன் மனைவி சரசம் பொதுவாக யாருக்கும் காணக் கிடைக்காது. ஆனால் தமிழ்த் திரையில் மட்டும்தான் காண முடியும். அந்த வகையில் தமிழ் சினிமா தனித்தன்மை வாய்ந்தது.“
இவரைப் போல் மாறுபட்ட எண்ணங்களை கொண்ட பதிவுகளை மட்டுமே தொகுத்து சிறுநூலாக வெளியிடலாம். அதுவும் அந்த பாடலின் வரிகளுடன் இணைத்து வெளியிட்டால் நிச்சயம் பலரையும் மகிழ்ச்சி அடையச் செய்யும்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers

