பெத்ரோவின் உலகம்.

மெக்சிகோவின் குடிசைப் பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற சிறார்களையும் அவர்களின் குற்றச் செயல்களையும் சித்தரிக்கிறது Los Olvidados. லூயி புனுவல் இயக்கிய இந்தத் திரைப்படமே பின்னாளில் உலகின் கவனத்தைப் பெற்ற City of God போன்ற படங்களுக்கான அடிப்படை. பதின் வயதுப் பையன்களின் உலகை மிகவும் அசலாகப் படமாக்கியிருக்கிறார் புனுவல்.

ஒளிரும் நகரவாழ்க்கையின் மறுபக்கமாக இது போன்ற இருண்ட உலகம் இயங்கிக் கொண்டிருப்பதைப் புனுவல் தான் உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

ஏழ்மையும் வறுமையும் கொண்ட வாழ்க்கையில் அவர்கள் குற்றத்தை ஒரு விளையாட்டைப் போலவே நிகழ்த்துகிறார்கள். அவர்களை இயக்குவது கண்ணுக்குத் தெரியாத வேட்கை.

உலகம் அவர்கள் விரும்பும்படியாக இல்லை. தங்களை மதிக்காத, புரிந்து கொள்ளாத, விரும்பியதை தர மறுக்கிற உலகுடன் அவர்கள் சண்டையிடுகிறார்கள். குற்றம் புரிகிறார்கள்.

குற்றவுலகின் இரண்டு பக்கங்களையும் இந்தப் படத்தில் புனுவல் விவரிக்கிறார். குறிப்பாக இவர்களின் குடும்பம் எப்படியானது. அவர்கள் ஏன் வீட்டில் உறங்குவதில்லை. சகவாசம் எப்படி ஒருவனை மாற்றுகிறது என்பதைத் துல்லியமாகச் சித்தரித்துள்ளார். கதை நடக்கும் களத்திலே உண்மையாகப் படப்பிடிப்புச் செய்திருக்கிறார் புனுவல். தொழில்முறை சாராத நடிகர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஜூலியன் என்ற பையனை தெருச்சண்டையில் அடித்துக் கொன்றுவிட்டுப் போலீஸில் அகப்படாமல் ஒளிந்து வாழும் எல் ஜிபோ, பெத்ரோ என்ற இரண்டு பதின்பருவத்தினரின் கதையிது. அவர்கள் ஜூலியன் வைத்திருந்த பணத்தைப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். தலைமறைவாக ஒளிந்து வாழும் போது சந்திக்கும் நெருக்கடிகள், போலீஸ் அவர்களின் மறைவிடத்தைக் கண்டறிவது. பெத்ரோவின் தாயுடன் எல் ஜிபோவிற்கு ஏற்படும் ரகசிய உறவு. பெத்ரோ கொல்லனிடம் வேலைக்குச் சேருவது. கத்தி திருடியதாகச் சந்தேகப்பட்டுத் துரத்தப்படுவது என நிகழ்வுகள் ஒன்றையொன்று பின்னி அழகாக முன்நகர்கின்றன.

ஒரு நாளிரவு அவர்கள் பார்வையற்ற இசைக்கலைஞரை வழிமறித்துத் தாக்கி அவரது பணத்தை அபகரித்துக் கொள்கிறார்கள். அவரது இசைக்கருவியை அழிக்கிறார்கள். அதில் தான் அவர்களின் கோபம் முழுமையாக வெளிப்படுகிறது.

பெட்ரோவின் தாய் தனது மகனின் குற்றச்செயல்களை வெறுக்கிறாள். அவனைக் கோவித்துக் கொள்கிறாள். வருத்தமடைந்த பெத்ரோ இனி ஒழுக்கமாக நடந்து கொள்வதாக அம்மாவிடம் வாக்குறுதி அளிக்கிறான். எல் ஜிபோ செய்த குற்றத்திற்கு அவன் சிறைக்குச் செல்கிறான். சிறை அதிகாரி பெத்ரோ மீது பரிவு கொள்கிறார். சிறையில் கோழிகளைப் பராமரிக்கும் வேலையில் பெத்ரோ ஈடுபடுகிறான்.

சிறையில் ஒரு நாள் தப்பிச் செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாகிறது. அதனைச் சிறை அதிகாரியே ஏற்படுத்தித் தருகிறார். பெத்ரோ என்ன செய்கிறான். குற்றத்தின் சுழிக்காற்று அவர்களை எவ்வாறு இழுத்துக் கொள்கிறது என்பதே படத்தின் இறுதிக்காட்சிகள்.

பெட்ரோ தனது வயதை விடப் பெரியவனாகவே எப்போதும் நடந்து கொள்கிறான். வீட்டில் அவன் சாப்பிடும் காட்சி. அம்மா சொல்லும் வேலைகளை அலட்சியமாகப் புறக்கணிக்கும் விதம், தன்னை விட மூத்த எல் ஜிபோவை சமவயதுக்காரனை போல நடத்தும் விதம் என இயல்பை மீறியே நடந்து கொள்கிறான். சிறை அதிகாரியால் நேசிக்கபடும் போது மட்டுமே அவன் குற்றவுணர்வு கொள்கிறான்

எல் ஜிபோவின் மறுபாதியைப் போலவே பெத்ரோ நடந்து கொள்கிறான். பார்வையற்ற இசைக்கலைஞரின் வாழ்க்கையும் அவர் பழி தீர்க்கும் விதமும் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன.

எல் ஜிபோவிடம் குற்றவுணர்வே கிடையாது. அவன் எந்தக் குற்றத்தையும் துணிந்து செய்கிறான். விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை. துரோகமும் வெறியும் மோதலும் கொண்டதாக அவனது வாழ்க்கை உள்ளது.

கேப்ரியல் ஃபிகுரோவாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு. பெத்ரோவாக நடித்துள்ள அல்போன்சோ மெஜியாவின் சிறப்பான நடிப்பு பாராட்டிற்குரியது. புனுவேலின் படைப்புகளில் லாஸ் ஒல்விடாடோஸ் மிகவும் தனித்துவமான படமாகும்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 13, 2025 00:40
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.