ஔியை மறந்து விட்ட பயிர்

 காலையில் சூரியனை பார்ப்பதற்காக மாடிக்கு சென்றேன். உதிக்க நேரமிருந்தது. கீழே வந்து தி.ஜாவின் 'சிலிர்ப்பு' சிறுகதை வாசித்தேன். தி.ஜா வை தேடுவது என்பது ஒரு கன்றின் தவிப்பு போல. 


ஒரு மாதத்திற்கு முன்பு துளசி செடியை வாடிவிட்டது. ஆழஊன்றிய வேரால் பிடுங்கும் போது மண் புரண்டு குலைந்தது. அடிமண் மேலே வந்தது. நல்லது தான். 

புரண்ட மண் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் பக்குவமாகியிருந்தது. தம்பி கொடுத்த குட்டி துளசி செடிகளை நடுவதற்காக மீண்டும் மாடிக்கு சென்றேன். வேர் பிடித்த சின்னஞ்சிறு செடிகள். குட்டி காக்கை இறகு ஒன்று, செடிகளுடன் காற்றில் சிலிப்பிக்கொண்டு கூடவே வந்தது.

நேற்று தோழி ஒருத்தியுடன் பேசும்போது அவள் Invitro fertilization சரிவராமல் உடலும் மனமும் சோர்வுற்றிருப்பது தெரிந்தது. பதினொன்றாம் வகுப்பில் pure science group எடுத்து படிக்கத் தொடங்கும் போதே உடல் ஒரு பேசுபொருளாக இயல்பாக ஆகிவிட்டது. உடல் சார்ந்த பேச்சு வீட்டில் வந்த போது நான் அவசரக்குடுக்கை தனமாக பேச முயன்றபோது அய்யா நாசுக்காக தடுத்தார்.

 பின்னர் 'இதை பத்தியெல்லாம் நீ படிக்கற இடத்துல பேசினா போதும்...' என்றார்.  இலக்கியம் பற்றி நான் ஆர்வக்கோளாறாக அடிக்கடி பேசும் போதும் இதே போல தடுப்பார். 'எங்கிட்ட பேசறப்ப புத்தகம் பத்தி பேசு 'என்பார். எங்கள் வீட்டில் பத்து ஆட்கள். அப்படியும் இலக்கியம் பற்றி எதாவது தவறி பேச நேர்ந்து விடுகிறது. இருந்தாலும் தவறிவரும் போதே சுதாரித்துவிடுவேன்.

 இப்படி IVF பற்றி தோழி சொல்லும் போது கேட்டுக்கொண்டேன். நடைமுறை சார்ந்து இதுபற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. புத்தகமாக படிப்பதற்கும், நடைமுறையிலும் இது மாதிரி விஷயங்களில் பாரதூரம் உண்டு. அப்படித்தான் எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜனின் காயாம்பூ நாவலை வாசிக்கும் போது ஒரு நடுக்கம் இருந்தது.

'வசுதேவர் தேவகிக்கு கண்ணனா வந்தான்ல்ல. கைவிட்டு போனதெல்லாம் கண்ணனா வரதுக்கு தானே..ஏழும் சேர்ந்து ஒன்னா வரப்ப சமாளிக்கனுல்ல...உடம்ப பாத்துக்க ' என்று சொன்னேன். இப்படி சொல்லும் போது சிரித்தாள். என்னால் அவளின் கண்ணீர் நிறைந்த அகல கண்களை கண்முன்னே காணமுடிந்தது. IVF பற்றி பரிட்சையில் கேள்வி வந்தால் 5mark ஒன்று உறுதி என்று பேசிய நாட்கள் உண்டு. முதல் புள்ளியிலிருந்து கோலத்தை கணிப்பதைப்போல, பொதுவாக சில நாட்கள் அனைத்து பெண்களுக்கும் உள்ள கால் உளைச்சலில் இருந்து என்னால் அவளை உணரமுடிந்தது. அவளுக்கும் நுண்ணுயிரியல் சார்ந்து ஒரு கனவு இருந்தது. இப்போது ஆண்டுகள் கணக்காக நோயில்லாமல் மருத்துமனைக்கு செல்கிறாள்.

ஏனோ அந்த சோர்வு காலையிலும் இருந்தது. இது மட்டுமல்ல சில சமயங்களில் விட்டு போன தந்தைகள் மனதில் வந்து கொண்டே இருப்பார்கள். ஒரு வாரம் இரண்டு வாரம் போல. இதெல்லாம் காரணங்கள் என்றாலும் ஆழத்தில் ஒன்று அசையாமல் நிற்பது. ஆதி காரணம்.எழுதுவதும் ஒரு வகையில் அப்படித்தானே.

 மனத்திற்குள் சூழ்ந்து கரைந்து போவதெல்லாம் பெருமழைக்காகக்கூட இருக்கலாம். கண்ணன் வர ஏழு படிகள் தாண்ட வேண்டுமில்லையா..

எங்கள் தெருவில் மாதா கோவில் என்ற பெண்தெய்வக் கோவில் உண்டு. ஒரு வகையறாவின் குலதெய்வம். இந்த புரட்டாசியில் அங்கு ஒரு அலாரம் வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கூலிவேலை செய்பவர்கள் என்று அனைவரும் சேர்ந்து வாங்கியது.

 காலை ஐந்து மணிக்கு வேங்கடேச சுப்ரபாதம் தொடங்கி இரவு பத்து மணிக்கு கீதை வாசகத்துடன் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மணி சொல்லும். மிக அமைதியான பொழுதுகளை இந்த அலாரம் குலைத்து விட்டது என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. இருந்தாலும் நினைத்தது போல அதிக தொந்தரவில்லை. காலை மாலை பொழுது சந்திகளில் ஒரு பாடல். மற்றபடி மணிக்கு ஒரு முறை ஒரு நிமிடம் தொட்டியகருப்பும், கன்னிமார்களும், நாராயணரும் வந்து போவார்கள். புரட்டாசி ஐப்பசி மாதங்களில் ஊர் மிக அமைதியாக இருக்கும். அறுப்பு,நாற்றுவிடுதல்,நடவு,மழை,வெயில் என்று வயலே கதி என்று ஆகிவிடும். காலை ஆறு மணிக்கே தெரு அரவம் குறைந்து அமைதியாகத்தொடங்கும். வயல்காட்டு பாதைகளும் வயல்களும் கலகலப்பாகிவிடும்.

 பாரதியின் 'ஆசை முகம் ' என்ற கவிதை காலை ஆறு மணி அமைதியில் ஒலிக்கத்தொடங்கியது. மாடியின் குளுமையில் மெல்லிய மயிலிறகு போல முதல் வரி தொட்டதுமே உடலும் மனமும் சிலிர்த்தது. யார் தினமும் வெவ்வேறு பாடல்களை தேர்வு செய்து பதிந்து  வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. செடிகளை நட்டுவிட்டு தொட்டியை வெளிச்சம் குறைவாக விழும் மறைவில் வைத்தேன். 

அனுமனின் சிவந்த கனி பச்சை மலை விளிம்புகளில் தோன்றியது. வானத்தை  பார்த்து கொண்டே நின்றேன். கையில் மிச்சமாக சின்னஞ்சிறு காக்கை இறகு. ..பாரதி..

வானை மறந்திருக்கும் பயிரும் 

வானை மறந்திருக்கும் பயிரும்

என்று உள்ளுக்குள் ஒடியது. 

ஆசை முகம் மறந்து போச்சே -இதை

யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
(ஆசை)

கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
(ஆசை)

தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வையம் முழுதுமில்லை தோழி
(ஆசை)

கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த
கண்களிருந்து பயனுண்டோ
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி

                                             _ சி.சுப்ரமணிய பாரதி

கண்ணனில்,காதலில் தொடங்கும் பாரதி வானை மறந்துவிட்ட பயிர் என்று பிரபஞ்சத்திற்கு தாவிவிடுவார். காதலில் இருந்து பிரபஞ்சத்திற்கு. முதலில் இது காதல் பாடலாக தன்னை காட்டியது. இன்று கண்ணன் சொல்லாக கேட்கிறது.

இதில் வரும் கண்ணன்... கண்ணன் மட்டுமா?. காதல் என்பது காதல் மட்டுமா? இந்தக்கவிதையை காதல் பாடலாக புரிந்து கொள்வது வைரத்தின் ஒருபக்கம் மட்டும் தான்.  பெண்களின் தன்னறம் என்று எடுத்துக்கொண்டால் அதிக வீச்சை கொண்டதாக இந்தப்பாடல் மாறும். கண்ணனை தன்னறமாக, காதலை செயலாக மாற்றிப்பார்த்தால் ...?

வானை மறந்திருக்கும் பயிரும் இந்த வையம் முழுதுமில்லை என்று சொல்லுவதன் மூலம் உயிர்கள் தன்னறத்தை இயல்பாக கொண்டுள்ளன என்கிறார் பாரதி.

உண்மை தான் . ஔியை மறந்துவிட்ட பயிர் இங்கு இல்லை. கண் எதிரே நாற்று நட்ட வயல்கள். மெல்லிய காற்றில் நாற்றுகள் அசைவது காலை ஔியில் துல்லியமாகத் தெரிகிறது. நீர்தேக்க தொட்டியின் மறைவில் வைத்த செடியை நகர்த்தி வைத்தேன். சூரியவெளிச்சத்தில் குளிர் காற்றில் இலைகள் சிலிர்த்து அசைந்தன. விரல் இடுக்கில் இருந்த இறகும்.







 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2025 22:46
No comments have been added yet.


கமலதேவி's Blog

கமலதேவி
கமலதேவி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow கமலதேவி's blog with rss.