இருக்கை

 சிறுவயதில் பெரும்பாலும் நீண்ட விடுமுறைகளில் நாவல்கள் வாசிப்பது வழக்கம். நீள்கதைகள் என்று சொன்னாலும் கூட மனதளவில் அவை நாவல்கள். வாசிப்பே விடுமுறையின் இனிமை. அப்போதிருந்து தற்போது வாசிக்கும் நாவல் வரை இந்த இனிப்பு மனதில் இருக்கிறது. மனதின் மாறாத சுவை. அல்லது வாழ்வில் எஞ்சி நிற்கும் மதுரம். முதன் முதலாக கல்கியின் அலையோசை வாசித்தேன். வர்தமானன் பதிப்பகத்தில் அப்போது மலிவு பதிப்பாக கல்கியின் நாவல்கள் வெளியாயிற்று. எங்களுக்காக அய்யா அலையோசை,சிவகாமின் சபதம்,பொன்னியின் செல்வன்,பார்த்திபன் கனவை தபாலில் [VPP யில் ] வாங்கினார். பொன்னியின் செல்வன் ஆறு புத்தகங்கள்,அலையோசையும் சிவகாமியின் சபதமும் நான்கு,பார்த்திபன் கனவு ஒரு புத்தகம்.

அலையோசைக்கு பச்சை கலந்த ஊதா நிறத்தில் கடல் போன்ற அட்டை. எனக்கு ஏனோ அலைஓசை என்ற தலைப்பு பிடித்ததால் முதலில் அதை வாசிக்கத் தொடங்கினேன்.


இந்தக்கல்லில் அமர்ந்து தென்னையில் சாய்ந்து கொண்டு நிறைய நாவல்கள், புத்தகங்கள் வாசித்தேன். நானாக தேர்ந்தெடுத்த இடம்.  பெரியவர்களுக்கு பெண்பிள்ளைகள் கண்முன்னே இருக்க வேண்டும். எனக்கு தனிப்பட்ட இடம் மீது விருப்பம். அம்மாச்சிவீட்டிற்கு முன்பு இருந்த களத்தின் முன்னால் இருக்கும் தோப்பு இது. அம்மாச்சி இந்த இடத்தை எனக்காக அடர்ந்து போகாமல் சீர் செய்து வைத்திருப்பார். கால்களை நீட்டினால் வயலிற்கு தண்ணீர் பாயும் வாய்க்கால். நேரடியாக குடிக்கக்கூடிய தூய தண்ணீர். கண் முன்னால் பச்சை மலை குன்று.

இந்த இடத்தில் எழுத்தாளர் நீலபத்மநாபனின் தேரோடும் வீதி,பள்ளிகொண்டபுரம் வாசித்தேன். பள்ளிகொண்டபுரம் இன்று வரை மனதிற்கு பிடித்த நாவல். அலையோசையிலிருந்து விஷ்ணுபுரம்,துயில் நாவல்கள் வரை நிறைய நாவல்களை இங்கு வாசித்தேன். லா.சா.ராவின் அபிதா என்று பல நாவல்கள். பதிமூன்று வயதிலிருந்து,என் முதல் புத்தகமான சக்யை சிறுகதை தொகுப்பு வெளியாவதற்கு சில மாதங்கள் முன்பு வரை இங்கு அமர்ந்து வாசித்திருக்கிறேன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக.

இன்று அதிகாலையில் இந்த இடம் கனவில் வந்தது. மனதிற்குள் அத்தனை பரவசம். இந்த இடம் எனக்கான இடம். இதை யாரும் பயன்படுத்தியதில்லை. வாய்க்கால் ஓரத்தில் தென்னை அடியில் எப்போதோ போடப்பட்ட கல். நான் வாசிக்கும் போது மதிய உணவிற்காக அம்மாச்சி களத்தில் நின்று அழைப்பார்.

அந்த கல்லில் புத்தகத்தை வைத்துவிட்டு ஓடி வந்து சாப்பிட்டப்பின் களத்தில் குதித்து ஓடி வாய்க்காலை தாண்டி கல்லில் அமரும்போது அம்மாச்சி சிரிப்பார். 

" இந்த பிள்ளைக்கு சோறு தண்ணிக்கு மேல ருசிப்பட்டது," என்பார். அங்கங்கே நான் போட்டு வைக்கும் புத்தகங்களை அத்தனை பவ்யமாக எடுத்து வைப்பார். ஒரு விடுமுறையில் மறந்து விட்டு வந்த புத்தகத்தை எடுத்து அவருடைய இரும்பு பெட்டிக்குள் வைத்திருந்தார்.


         [பச்சைமலையின் மம்மலை குன்று]

என்னுடன் வாசிக்கத் தொடங்கியவர்கள் முதல் ,கல்லூரி வயதில் என்னுடன் போட்டிப்போட்டு வாசித்த மூவர் வரை யாரும் இன்று வாசிப்பதில்லை. அனைவருமே பொருளாதாரத்தில், இடவசதியில்,நேர வசதியில் என்னை விட மேம்பட்டு இருக்கிறார்கள். ஆனால் எதுவோ அவர்களை விட்டு போய் விட்டது. இசையரசிக்கு வெளிநாட்டு வாழ்க்கை,கலைக்கு அரசியல் சார்ந்த வீட்டு சூழல்,சுகுணாவிற்கு நம்பிக்கை இழப்பு என்று காரணங்கள்.

வாசிப்பதில் இன்றுவரை அந்த சுவை குறையவில்லை என்பது காலம் எனக்கு அளித்த ஆசி என்று தோன்றுகிறது.

இலக்கியம் என்பது எந்த வயதிலும் மாறாத ருசி கொண்டது இல்லையா...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 26, 2025 18:44
No comments have been added yet.


கமலதேவி's Blog

கமலதேவி
கமலதேவி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow கமலதேவி's blog with rss.