கற்பனையில் எழும் உலகம்
சிறார்களுக்கென பாடல்களை எழுதிவரும் இன்றைய தலைமுறையில் குறிப்பிடத்தக்ககவிஞராக குருங்குளம் முத்து ராஜாவைச் சொல்லலாம். இவருடைய பாடல்கள் பாடநூல்களில் இடம்பெறவில்லைஎன்றாலும் இணைய உலகில் வலம் வருகின்றன. அதன் வழியாக எப்போதும் சிறார்களுக்கு நெருக்கமானவராகவேஅவர் இருந்து வருகிறார்.
புதிதாக வந்திருக்கும் ‘பூ பூ பூசணி’ தொகுதியில் ஐம்பது பாடல்கள்உள்ளன. பெரும்பாலான பாடல்கள் சிறார்களின் விளையாட்டையும் கற்பனையையும் காட்சிப்படுத்துகின்றன.நம் கண் முன்னால் நிகழ்பவைபோல அப்பாடல்கள் எழுதப்பட்டிருப்பதால், அவற்றை வாசிக்கும்போதேநம்மால் எளிதாக மனத்திரையில் அக்காட்சியை விரித்துப் பார்க்கமுடிகிறது. அக்காட்சிகள்பல நேரங்களில் நம்மையும் குழந்தைகளாக மாற்றிவிடுகின்றன.
மாலை நேரத்தில் வீட்டுத் தோட்டத்தில் பறவைகள் கூடடையத் தொடங்கும்நேரத்தைப்பற்றிய ஒரு பாடல் இத்தொகுதியில் உள்ளது. காக்கை, குருவி, குயில், மரங்கொத்திஎன பல வகையான பறவைகள் அந்த மரத்தில் அமர்ந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் தமக்கே உரிய விதத்தில்ஓசையை எழுப்பி கிளைகளில் தாவிக் குதித்து விளையாடியபடி இருக்கின்றன. இக்காட்சியை சிறார்களின்கண்களால் பார்க்கும்போது, அந்தத் தோட்டத்தில் ஒரு பாட்டுப்போட்டி நடப்பதாகத் தோன்றுகிறது.அந்தக் கற்பனையே பாட்டுக்கு ஓர் அருமையான தொடக்கத்தை அளித்துவிடுகிறது.
ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு தாளத்தில் குரலெழுப்பி கவனத்தை ஈர்க்கிறது.அப்போது ஏதோ ஒரு பறவையின் சிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு மெல்ல மெல்ல அசைந்தாடிமண்ணை நோக்கி இறங்கி வருகிறது. அக்காட்சியை பறவைகளின் இசைக்கேற்ப நடனமாடிக்கொண்டே இறங்கிவரும்பெண்ணாக குறிப்பிடுகிறார் முத்து ராஜா.
இடைவிடாதுஇசை கூட்டும்
வண்டுகளின்சிறகு
இசையில்நடனமாடி இறங்கும்
உதிர்ந்தஒற்றை இறகு
இறகு தொடர்பாக எழுதப்படும் எந்த வரியைப் படித்தாலும் பிரமிள்எழுதிய ‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின்வாழ்வை எழுதிச் செல்கிறது’ என்னும் கவிதையை நினைக்காமல் இருக்கமுடியாது. முத்து ராஜாவின்பாடலைப் படிக்கும்போதும் அந்தக் கவிதை வரி நினைவுக்கு வருகிறது. ஆனால் இந்த இறகை, இசைக்கு மயங்கி நடனமாடிக்கொண்டே இறங்கும் இறகாகஇன்னொரு கோணத்தில் கற்பனை செய்திருக்கிறார் முத்து ராஜா. ஏற்கனவே பறவைகளில் பல்வேறுஅமைப்பிலான பாடல்களால் நிறைந்திருக்கும் அச்சூழலுக்கு அந்தக் கற்பனை கச்சிதமாகப் பொருந்திப்போகிறது. பாடல் இருக்கும் இடத்தில் ஆடலும் இருப்பது இயற்கை அல்லவா.
பாடல், ஆடலோடு அந்தக் கற்பனை முடியவில்லை. அதைக் கேட்டும் பார்த்தும்மகிழ்ச்சியடையும் தோட்டத்துப் பூக்களின் பக்கம் நகர்ந்து செல்கிறது. அப்பூக்கள் ஆடல்பாடலில் மயங்கி விழிமூடுவதுபோல தன் இதழ்களை மூடத் தொடங்குகின்றன. அதைப் பார்த்த பறவைகள்அவற்றின் துயிலுக்குத் தொல்லையாக இருக்கக்கூடாதென எண்ணி அனைத்தையும் நிறுத்தி அவையும்தம் கூட்டுக்குத் திரும்பி ஓய்வெடுக்கத் தொடங்குகின்றன. இப்படி ஒரு கவித்துவத்தோடுபாடல் நிறைவடைகிறது.
’மகிழ்ச்சி இருக்குது மனசுக்குள்ளே’ பாடலை கற்பனையின் உச்சம்என்றே சொல்லவேண்டும். மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கும் இப்பாடல் நல்ல தாளக்கட்டோடுஅமைந்துள்ளது.
சோப்புடப்பாவும் செல்போனாகும்
எங்ககையில – அதில்
செல்ஃபிஎடுத்து சிரிச்சிக்குவோம்
பிள்ளைங்கநாங்க
பாடலில் தொடக்கப்பகுதியிலே இப்படி தம்மைத்தாமே அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள் குழந்தைகள்.அப்போது தொடங்குகிற அவர்களுடைய கற்பனை சிறுகச்சிறுக வளர்ந்துகொண்டே போகிறது. வெறும்கையில் ஸ்டீரிங் பிடித்து கார் ஓட்டுவது, வீல் இல்லாத காருக்கு காலால் ப்ரேக் போடுவது,மழை பொழிந்தால் சேமை இலையைக் குடையாக விரித்துப் பிடித்துக்கொள்வது, அதன் வலிமை குறையத்தொடங்கியதும் துணியைப்போல அதைத் தலைமீது விரித்துவைத்துவிட்டு நனைந்தபடி வீட்டுக்குத்திரும்பிவருவது, சின்ன சொப்பில் சோறாக்குவது, இலை தழையைப் பிய்த்துப் போட்டு கூட்டுசமைப்பது, மணல்வீடு கட்டுவது என எல்லையற்று விரிகிறது அவர்களுடைய கற்பனை உலகம்.
இல்லேன்னுசோர்ந்துபோய்
உட்கார்ந்ததில்ல
மகிழ்ச்சிஎல்லாமே இருக்குது
எங்கமனசுக்குள்ள
என ஒரு தற்கூற்றோடு முடிவடைகிறது பாடல். மனத்தால் அடையவேண்டியமகிழ்ச்சியை வெளியே தேடித்தேடி சலித்துத் துன்பத்தில் மூழ்குவதுதான் மனிதகுலத்தின்மாபெரும் பிரச்சினை. குழந்தைகளின் உலகம் அதைத்தன் கற்பனை வழியாக அழகாக எதிர்கொண்டு வெற்றி பெற்றுவிடுகிறது. வளரும் பருவத்தில் அந்தக்கற்பனையை இழக்க இழக்க, அவர்களுடைய துன்பம் பெருகத் தொடங்கிவிடுகிறது. அதுதான் பெரியதுரதிருஷ்டம்.
’சவ்வுமிட்டாய்த் தாத்தா’ பற்றிய பாடல் நல்ல சித்தரிப்போடு அமைந்துள்ளது.தெருமுனையில் சவ்வுமிட்டாய்த் தாத்தா வருவதும் அவருடைய சத்தத்தைக் கேட்டு குழந்தைகள்ஓடோடிச் சென்று அவரைச் சூழ்ந்துகொள்வதும் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வியாபாரத்துக்குப்பிறகு இறுதியில் ‘சவ்வுமிட்டாய் கடைகளிலே கிடைக்காதுங்க, தெருவில் வந்தால் மகிழ்ச்சியாகவாங்கித் தின்னுங்க’ என்றொரு அறிவிப்புடன் பாடல் முடிவடைகிறது.
பூ பூபூசணிப்பூ
பூத்திருக்குகொடியிலே
பூவைஎவரும் பறிக்கவேண்டாம்
பிஞ்சுஇருக்கும் அடியிலே
குட்டிகுட்டிப் பிஞ்சுதான்
குண்டுபோல பெருத்தது
வெட்டிசாம்பார் வைக்கலாம்
வெப்பம்தணிக்க வல்லது
வீட்டுவாசலில் தொங்குது
வீதியில்ஏன் உடையுது?
வேண்டாதவேலையெல்லாம்
யாருசெய்யச் சொன்னது?
தொகுப்பின் தலைப்புப்பாடல் தாளத்தோடு பாடும் வகையில் அழகாக அமைந்துள்ளது.பூவைப் பறிக்கவேண்டாம் என பூவுக்காக மன்றாடும் குழந்தையின் குரலுக்கு மட்டுமே வீதியில்பூசணிக்காயை உடைக்கும் செயலைக் கண்டிக்கவும் உரிமை இருக்கிறது. பூவையும் காயையும் பூவாகவும்காயாகவும் மட்டுமே பார்க்கும் குழந்தையின் கண்களை ஏறத்தாழ இறைவனின் கண்கள் என்றே சொல்லவேண்டும்.
’மணி அடிக்கிறாங்க’ என்னும் பாடல் ஒரு கதைக்குரிய தன்மையோடுஅமைந்திருக்கிறது.
அழைப்புமணிஅடிக்கிறாங்க
கதவைத்திறங்க
ஐஸ் வண்டிமணி சத்தம்
காசைஎடுங்க
என்று தொடங்குகிற அப்பாடல் நம்மைச் சுற்றி தினந்தோறும் நாம்கேட்கும் ஒவ்வொரு மணி சத்தத்தையும் பட்டியலிட்டு, அக்கணத்தில் நாம் செய்யவேண்டியதையும்பட்டியலிட்டபடி நீண்டு போகிறது. இறுதியில்
நடுவர்ஒரு மணி அடிச்சா
பேச்சைநிறுத்துங்க – இது
கடகடன்னுகடைசி மணி
வீட்டுக்குப்போங்க
என்று குறிப்பிட்டு பாடல் நிறைவடைகிறது. தெரு, கொட்டகை, கோவில்,ஸ்டேஷன் என ஒரு சிறுவனின் கற்பனை எங்கெங்கோ அலைந்து சுழன்றாலும் அவன் மனம் எப்படியோதன்னையறியாமல் பள்ளிக்கூடத்தில் வந்து நின்றுவிடுகிறது. புரிந்துகொள்ளமுடியாத புதிர்இது.
’நானும் கூட பறக்கணும்’ நல்லதொரு கற்பனை நிறைந்த பாடல்.
சிறகுஇரண்டு எனக்கும் கூட முளைக்கணும்
நான்பறவைபோல சொய்ங்க்ன்னு பறக்கணும்
என்று புன்னகையோடு தன் விருப்பத்தைப் பட்டியலிடத் தொடங்குகிறாள்ஒரு சிறுமி. பறந்து சென்றால் பச்சைக்கிளியையும் குயிலையும் சந்தித்து உரையாடலாம் எனஅச்சிறுமி கற்பனை செய்துகொள்கிறாள். பிறகு’ பறந்து பறந்து ஊரின் அழகையெல்லாம் பார்க்கவேண்டுமென்றுநினைக்கிறாள். மலையுச்சிக்குச் செல்வதையும் மேகத்துக்குள் நுழைவதையும் நினைத்துக்கொள்கிறாள்.இப்படி அவளுடைய கற்பனை நீண்டுகொண்டே செல்கிறது. இறுதியில் ‘பழுத்த பழத்தை கொத்தாம பறிக்கணும்,அதை பசியோடு இருக்கும் குழந்தை மடியில் பத்திரமா போடணும்’ என்று கேட்டுக்கொள்கிறாள்.
’படித்தால் என்ன நடக்கும்?’ இன்னொரு நல்ல பாடல். ஒரு தோட்டத்தில்உட்கார்ந்து படித்த யாரோ ஒருவர் தன் புத்தகத்தை மறதியாக அங்கேயே விட்டுச் செல்கிறார்.அவரைத் தொடர்ந்து அவர் உட்கார்ந்திருந்த இடத்துக்கு கோழி, குரங்கு, நாய், எலி, வண்ணத்துப்பூச்சி எனஎல்லாமே ஒவ்வொன்றாக வருகிறது. ஒவ்வொன்றும் அப்புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்குகிறது.புத்தக வாசிப்பு அவருடைய சிந்திக்கும் திறனையே மாற்றியமைத்துவிடுகிறது.
நாய்ஒன்று புத்தகத்தை
மோப்பம்பிடித்து படித்தது – அது
வாலைக்குழைத்து ஆட்டாமல்
நன்றிநன்றி என்றது
எலி ஒன்றுபுத்தகத்தை
எடுத்துப்புரட்டிப் பார்த்தது
விரட்டிவந்த பூனையை
எதிர்த்துகேள்வி கேட்டது
இப்படி ஒவ்வொரு உயிரினத்தின் சிந்திக்கும் ஆற்றலையும் செயல்பாடுகளையும்புத்தக வாசிப்பு மாற்றி அமைத்துவிடுகிறது. ஒரு விளையாட்டுக்கதை போன்ற விவரணைகளோடு பாடல்இருந்தாலும், புத்தக வாசிப்பு எத்தகு மாற்றங்களை இம்மண்ணில் ஏற்படுத்தும் என்பதை உணர்த்தும்வகையில் அமைந்துள்ளது.
இரு டப்பாக்களை முன்வைத்து முத்து ராஜா எழுதியிருக்கும் பாடல்இத்தொகுதியின் மிகச்சிறந்த பாடல் என்று சொல்லலாம். எந்த விளக்கமும் தேவையற்ற விளையாட்டுப்பாடல் அது.
சின்னடப்பா பெரிய டப்பா
சேர்ந்துகடைக்குப் போனதாம்
சின்னடப்பா அது நிறைய
சீனிவாங்கி மூடுதாம்
பெரியடப்பா மாவு நிரப்பி
பின்னாலேயேஓடுதாம்
வீட்டுக்குப்போய் மாவு சீனி
சேர்த்துக்கொட்டிக் கலக்குதாம்
பலகாரம்செய்து தின்னு
டப்பாங்குத்துஆடுதாம்
குழந்தைகளின் உள்ளத்தில் இயற்கையாகவே நிறைந்திருக்கும் கற்பனையைஎளிதாகத் தொடும் அளவுக்கு குழந்தைகளின் உலகத்தைப்பற்றி நன்கு அறிந்தவராக இருக்கிறார்முத்து ராஜா. அந்த உலகத்தில் ஒருவராக தன்னையும் கரைத்துக்கொள்ளும் ஆர்வமும் அவருக்குஇருக்கிறது. தன் மனத்திலெழும் காட்சிக்கு உகந்த வகையில் தாளக்கட்டோடு கூடிய வரிகளைஅவரால் எழுதவும் முடிகிறது. அந்த அறிவும் அனுபமும் நம் சூழலில் அவரைச் சிறந்த பாடலாசிரியராகவடிவமைத்துள்ளன.
(பூ பூ பூசணி. சிறார் பாடல்கள். குருங்குளம்முத்து ராஜா. மேஜிக் லாம்ப், 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி -2. விலை. ரூ.140)
(புக் டே – இணையதளம் –31.10.2025)
Paavannan's Blog
- Paavannan's profile
- 4 followers

