இயற்கையும் நம் குழந்தைகளும்

அன்புள்ள ஜெ,

நான் ஓர் ஆசிரியை. இலக்கியவாசிப்பும் உண்டு. ஒரு முறை என்னுடைய மாணவிகளை ஒரு கானுறை முகாமுக்கு அழைத்துச்சென்றேன். எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம். அவர்கள் மிக ரசிப்பார்கள் என நினைத்தேன். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு செல்போன் சிக்னல் இல்லை என்ற மனக்குறை. பலருக்கு சாப்பாடு பிடிக்கவில்லை. அவர்கள் விரும்பும் சாப்பாடு விரும்பியபடி கிடைக்கவேண்டும் என்று மட்டும்தான் நினைத்தார்கள். திரும்பத் திரும்ப அதையே பேசிக்கொண்டிருந்தார்கள்.  ஒருநாள் கூட சிக்கன் இல்லாமல் சாப்பிடமாட்டேன் என்று ஒரு 16 வயதுப்பெண் முழுநாளும் பட்டினியாகவே அழுதுகொண்டிருந்தாள். கூடாரத்திலே தங்கமாட்டேன், தனி அறையும் தனி படுக்கையும் வேண்டும் என்று பல பெண்கள் அடம்பிடித்தார்கள்.

உண்மையைச் சொன்னால் 36 பெண்களுமே வசதிகளைப் பற்றி மட்டுமே பேசினார்கள். அந்த அற்புதமான காட்டையும் இயற்கையையும் ஒரே ஒரு பெண் கூட ரசிக்கவில்லை. சாப்பாடும் அந்த மலவாழ் மக்கள் அற்புதமாகச் சமைத்து தந்தார்கள். அந்த சாப்பாட்டை குறைகூறி அப்படியே தூக்கி கொட்டினார்கள். இந்த மக்கள் எல்லாம் குளிக்காமல் இருக்கிறார்கள், நாற்றமடிக்கிறது என்று ஒரு பெண் சொன்னாள். அந்தப் பெண்கள் வசதி போதவில்லை என்று பெற்றோரிடம் புகார் சொன்னார்கள். பெற்றோர் வந்து என்னைப்பற்றி புகார் சொல்லி திட்டினார்கள். இதுதான் இந்தியக்குழந்தைகள் இன்றைக்கு இருக்கும் நிலை.

இப்போது என் பள்ளியில் கானுறைப்பயணம் நிகழ்கிறது. எல்லா வசதிகளுடனும் நிகழ்கிறது. பிள்ளைகள் சாப்பாடு கொண்டுவரலாம். உயர்தர உணவு அங்கே நேரிலும் கொண்டுவந்து பரிமாறப்படும். செல்பேசி சிக்னல் உள்ள இடம் மட்டுமே தேர்வுசெய்யப்படுகிறது. அங்கே போய் தீமூட்டி, சிக்கன் சாப்பிட்டு, பாட்டு போட்டு நடனமாடுகிறார்கள். அதைத்தான் ரசிக்கிறார்கள்.

என் பெயர் வேண்டாம்

எஸ்

அன்புள்ள எஸ்,

எங்கள் முகாமுக்கு வந்து, இரண்டு நாட்கள் அசைவம் இல்லாமல் இருக்க முடியாது என்று சொல்லி அடம்பிடித்துக் கிளம்பிச்சென்ற குழந்தைகள் உண்டு. ஒரு 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தை வசதிகளுக்காக அடம்பிடிக்கிறது என்றால், தன் வசதியான இடத்திற்கு வெளியே செல்ல மறுக்கிறது என்றால் அதற்கு அடிப்படையில் ஏதோ சிக்கல் உள்ளது, அது சீரமைக்கப்படவேண்டும். ஒரு குழந்தையின் இயல்பான உள்ளம் புதியவற்றை நோக்கி (அந்தப்புதுமை எதுவாக இருந்தாலும்) பாய்ந்து சென்றுகொண்டேதான் இருக்கும். ஆரோக்கியமான குழந்தை வசதியான படுக்கைக்குப் பதில் இன்றைக்கு வெறுந்தரையில் படுப்போம் என்று சொன்னால் அதை செய்துபார்க்கவே விரும்பும்.

மேலைநாடுகளில் பள்ளிகளிலேயே பிள்ளைகளை இப்படித்தான் வளர்க்கிறார்கள். காட்டுக்குள் சென்று தாங்களே குடிலமைத்துக்கொண்டு, தாங்களே சமைத்துச் சாப்பிட்டு வாழ பயிற்சி அளிக்கிறார்கள். இப்போது ஆரம்பப்பள்ளியிலேயே அந்தப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களின்  கல்லூரிக் கல்வியிலேயே தன்னந்தனியாக அறியாத நாட்டுக்குக் கிளம்பிச்சென்று அங்கே வாழ்வது, அங்கே மக்களை திரட்டி ஆய்வு செய்வது என்பவை கற்பிக்கப்படுகின்றன. ஆப்ரிக்காவுக்கு, போரும் இனக்கலவரமும் நிகழும் நாட்டுக்கு கிளம்பிச்செல்கிறார்கள் 20 வயது பெண்குழந்தைகள். அங்கே அந்த உணவை சாப்பிட்டு, வெறுந்தரையில் படுக்கிறார்கள். நாம் நமது பிள்ளைகளை இளவரசிகளாக, இளவரசர்களாக வளர்க்கிறோம்.

காரணம், நம்முடைய நடுத்தரவர்க்க வாழ்க்கை. இங்கே வசதியானவர்களில் இரண்டுவகையான மக்களே உள்ளனர். நடுத்தர, கீழ்மட்டத்தில் இருந்து உயர்நடுத்தர வாழ்க்கைக்கோ அல்லது அடுத்த கட்ட வாழ்க்கைக்கோ வந்தவர்கள். அல்லது பரம்பரையாக பணம் வைத்திருப்பவர்கள். இங்கே உள்ள பரம்பரைப் பணக்காரர்கள் பழைய மன்னர்கால மிதப்பில் இருப்பவர்கள். சுகபோகம் என்பது மட்டுமே வாழ்க்கை. அடிப்படை அறிவுத்தேடல், அடிப்படை நாகரீகம் இரண்டுமே பெரும்பாலும் இருப்பதில்லை. ஒருசாரார் பணவெறிக்குள் செல்வார்கள். எஞ்சியோர் போதையில் அழிவார்கள். மேலே வந்த வசதியானவர்கள் இந்த பிறவிச்செல்வந்தர்களை நகல்செய்வதிலேயே பெரும்பாலும் குறியாக இருப்பார்கள். அறிவுத்தேடல் என்பதற்கு அவர்கள் வாழ்க்கையில் இடமில்லை. தாங்கள் கஷ்டப்பட்டமையால் தங்கள் பிள்ளைகள் இளவரசர்கள், இளவரசிகளாக வளரவேண்டும் என நினைப்பார்கள். அப்படி வளர்க்கிறார்கள்.

பெரும்பாலும் இப்படித்தானிருக்கிறார்கள். இவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது. இந்தக் காலம் மாறும் என நாம் எதிர்பார்க்கவேண்டியதுதான். நம் அக்கறை மிகச்சிறுபான்மையினரான பெற்றோருக்காவது தங்கள் குழந்தைகளுக்கு அறிவுலகை, இயற்கையை அறிமுகம் செய்யவேண்டும் என்னும் ஆர்வமிருக்கவேண்டும் என்பதில்தான். அவர்களின் குழந்தைகளில் ஒரு சிறுபகுதியினருக்கும் அந்த ஆர்வம் கடத்தப்பட்டிருக்கும். அவர்களை மட்டுமே நாம் கருத்தில் கொள்கிறோம், அவர்களுக்கான ஓர் இடத்தை உருவாக்குவது பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். இந்தியச் சூழலில் நாம் காலத்தில் கொஞ்சம் முன்னால் நகர்ந்திருக்கிறோம். ஆகவே நாம் ஒரு சிறு குழு மட்டுமே.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 18, 2025 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.