Jeyamohan's Blog
January 7, 2026
நாளிதழ்களும் அறிவியக்கமும்
ஒரு செய்தியிதழின் ஐம்பதாண்டு வரலாற்றை ஒரே நூலில் வாசித்தபோது அதன் வழியாக ஒரு காலகட்டமே கடந்து சென்றிருப்பதைக் கண்டேன். வரலாற்றை கண்ணெதிரில் காண்பதுபோன்ற அனுபவம் அது. அத்தகைய அரியதொகுப்புகள் தமிழில் இல்லை.
இந்த நூலில் 1978 வரை அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு அடிப்படை வாக்குரிமைகூட இல்லை என்பதை , அதை அளிக்கக்கூடாது என அறிஞர்களே எழுதியுள்ளனர் என்பதை இந்நூலில் காண்பது 1952ல் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்ட வரலாறுகொண்ட எனக்கு திகைப்பூட்டுகிறது.
சொல்லுக்குள் சொல் அமைதல்- காவியம்.
ஒவ்வொரு சொல்லும் பிற சொற்களால் பொருள்கொள்கிறது என்று அவ்வப்போது தோன்றுவதுண்டு. ஒரு சொல்லுக்குள் இன்னொரு சொல் உறைந்திருக்கிறது. நமக்கு வாசிக்கக்கிடைக்கும் ஒவ்வொரு நூலுக்குள்ளும் நாமறியாத நூல்கள் உறைகின்றன. இந்தியாவில் இன்று கிடைக்கும் தொன்மையான நூல்களை விட பல மடங்கு நூல்கள் அழிந்துவிட்டன என்பவர்கள் உண்டு. நம் தொல்நூல்கள் ஒவ்வொன்றும் வேறுநூல்களைப் பற்றிய குறிப்புகளை அளிக்கின்றன. ‘என்ப‘ என்கிறது தொல்காப்பியம். ‘அதாதோ‘ என்று தொடங்குகின்றன பல சூத்திர நூல்கள். நாம் அறிந்த நூல்கள் நூல்களின் நீள்நிரையில் இருந்து நம்மை வந்து தொடும் புள்ளிகள் மட்டுமே. எனில் அழிந்த நூல்கள் எல்லாம் எங்குள்ளன? இங்கே நாம் அவற்றையும் சேர்த்துத்தான் வாசித்துக்கொண்டிருக்கிறோமா?
நாம் வாசிக்கும் நூல் என்பது நாம் வாழும் வாழ்க்கையின் இன்னொரு வடிவம் என்றால் இந்த வாழ்க்கை என்பது நாமறியாத எவரெவரோ வாழ்ந்த வாழ்க்கையின் எச்சம் மட்டுமே அல்லவா? இந்த வாழ்க்கையில் உறைந்துள்ள பிற வாழ்க்கைகளைத்தான் அவ்வப்போது பெருந்திகைப்புடன் உணர்ந்துகொண்டிருக்கிறோமா? ஒரு வாழ்க்கைப்புள்ளியில், ஓர் உறவுச்சந்தியில் நாம் எதையெல்லாம் கையாள்கிறோம், எவருடனெல்லாம் உறவாடுகிறோம்? ஒரு கணம் என்பது வரலாறேதான். ஒரு இடம் என்பது இப்புவியேதான்.
அந்தப் பிரம்மாண்டத்தைச் சொல்லமுயலும் நாவல் என இதைச் சொல்லலாம். ஒரு சிறுபுள்ளியில் இருந்து பலநூறு வாழ்க்கைச் சரடுகளாக விரிகிறது இது. ஒருவரோடொருவர் இணைந்துள்ள மானுடர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் இன்னொருவரின் இருப்பையும் வாழ்வையும் தீர்மானிக்கிறார்கள். அவர்களின் உணர்வுநிலைகளுக்குள், அவர்களை ஆட்டிவைக்கும் அரசியலுக்குள், சமூகவியலுக்குள் விரிந்தபடியே செல்லும் நாவல் மேலும் மேலுமென விரிந்து தொல்வரலாற்றுக்குள் செல்கிறது. அங்கிருந்து புராணங்களுக்குள், தொன்மங்களுக்குள் செல்கிறது. அந்த தொடர்விரிதலே இந்நாவலின் கதைக்களம். கதைகளை இதழ்களாகக் கொண்ட ஒரு மலர். சொல்லப்போனால் மலர்வு.

இந்நாவலை ஒரு கனவாக நீண்டகாலமாக என்னுள் வைத்திருந்தேன். துலங்கியும் மயங்கியும் என்னுடனேயே இருந்தது இது. பலமுறை எழுத எண்ணி கைவிட்டது. சொல்லப்போனால் நான் திட்டமிட்ட முதல் நாவல். இத்தனை ஆயிரம் பக்கங்களுக்குப் பின் இப்போதுதான் இதை எழுத முடிந்துள்ளது. ஒத்திசைவும் ஒழுக்கும் கொண்ட வடிவத்திற்குப் பதிலாக ஒன்றால் தொட்டு எழுப்பப்படும் இன்னொன்று என விரியும் வடிவம் கொண்டு இந்நாவல் தானாகவே நிகழ்ந்தது. இன்று இந்நாவலை வாசிக்கையில் இது நாம் வாழும் ஒவ்வொரு கணத்தையும் வெடித்துத் திறந்துகொள்ளச் செய்யும் அனுபவமாக ஆகக்கூடும் என்று படுகிறது. அதுவே இதன் இலக்கியத் தகுதி.
இந்தியா உருவாக்கிய மாபெரும் காவிய ஆசிரியர்களின் பெயர்களில் வால்மீகி, வியாசன் ஆகிய இருவருக்கும் நிகரானவராக குணாட்யர் குறிப்பிடப்படுகிறார். அவர் எழுதிய ‘பிரகத் கதை’ என்னும் பெருங்காவியம் மகாபாரதத்தை விட பலமடங்கு பெரியது எனப்படுகிறது. அதிலிருந்து கிளைத்த பல சம்ஸ்கிருத காவியங்கள் காலம்தோறும் உருவானபடியே இருந்தன. ஆனால் அந்த மூலக்காவியம் அழிந்துவிட்டது. அழிந்துவிட்ட ஒரு நூல் அழிந்தமையாலேயே அழிவின்மையை அடைந்தது என்னும் திகைப்பூட்டும் முரண்பாடே என்னை இந்நாவலை எழுதச்செய்தது.
ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னை காலத்தின் குழந்தை என உணர்கிறான். காலத்தில் அழிவின்மை கொள்வேன் என கற்பனை செய்கிறான். காலத்தை நோக்கிப் பேசுகிறான். குணாட்யர் தன் காவியத்தை தானே முழுமையாக அழித்துக்கொண்டார் என்கின்றன கதைகள். அது ஓர் அலை திரும்பிச் செல்வதுபோல. எனில், காவியத்தை இயற்றியது போலவே அதுவும் ஒரு படைப்புச்செயல்பாடுதானா? எழுதும்போது என்னை ஆட்கொண்ட வினா அது.
இணையான இன்னொரு கேள்வி, இந்தியாவின் பெருங்காவியங்கள் மூன்றிலும் உள்ள அடித்தள அம்சம். தலித் எழுதியது ராமாயணம். மீனவப்பெண்ணின் மகன் எழுதியது மகாபாரதம். பழங்குடி வாழ்வில் எழுந்தது பிருஹத் காவியம். மண்ணே பெருங்காவியங்களை உருவாக்குகிறது. தத்துவம், மதம் ஆகிய அனைத்துக்கும் அடியில் காவியங்கள் மண்ணின் அழிவின்மையைத்தான் முன்வைக்கின்றனவா? அனைத்தும் அதன்மேல்தான் அமர்ந்திருக்கின்றனவா?
என் கனவினூடாக அந்த வினாக்களை நோக்கிச் சென்றேன். தங்கள் கனவுகளை மீட்டிக்கொண்டு உடன்வரும் வாசகர்களுக்காக இந்நாவலை முன்வைக்கிறேன்.
இந்நாவலை என்றும் என் வழிபாட்டுக்குரிய இலக்கியநாயகரான சிவராம காரந்த் நினைவுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.
ஜெ
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வந்துள்ள காவியம் நாவலுக்கான முன்னுரை)
காவியம் வாங்கஆபிதீன்
மென்மையான அங்கதம் கொண்ட மொழியில் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதும் ஆபிதீன் தமிழ் இஸ்லாமிய வாழ்க்கையை நுணுக்கமாகச் சித்தரிக்கும் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர். ஆபிதீன் தமிழ் இஸ்லாமிய வாழ்க்கையிலுள்ள சூஃபி பண்பாட்டுக் கூறுகளையும், தமிழ் இஸ்லாமியர்களின் நீண்ட வரலாற்றுப்பின்னணியையும் கதைகளிலும் இணையக்குறிப்புகளிலும் தொடர்ச்சியாக முன்வைப்பவர். இந்தியாவிலுள்ள முதன்மையான இஸ்லாமியப் படைப்பாளிகளை தமிழுக்கு அறிமுகம் செய்யும் மொழியாக்கங்களையும் செய்துவருகிறார்
ஆபிதீன் – தமிழ் விக்கி
வைணவ இலக்கிய அறிமுக வகுப்புகள்
ராஜகோபாலன் நடத்தும் வைணவ இலக்கிய வகுப்புகள் வைணவ தத்துவம், வைணவ வரலாறு, தமிழிலக்கிய மரபு ஆகியவற்றுடன் இணைத்து வைணவ இலக்கியமாகிய நாலாயிர திவ்யபிரபந்தத்தை புரிந்துகொள்வதற்கான அறிமுகமாக அமைபவை. இவை மதக்கல்வி அல்ல. இலக்கியக் கல்வியே. மதக்கல்வியாக கொள்பவர்கள் அந்த கோணத்தில் தாங்களே விரித்துக்கொள்ள முடியும்.
வைணவ இலக்கியங்கள் இறுக்கமான மத நோக்கில் பயிலப்படும்போது அவற்றிலுள்ள இயல்பான கவித்துவம் இல்லாமலாகிறது. அவற்றிலுள்ள நீண்ட தமிழ்ப்பண்பாட்டுக்கூறுகள் கணக்கில்கொள்ளப்படுவதில்லை. ராஜகோபாலன் தமிழ்ச்செவ்வியல் மரபுடன், கம்பராமாயணம் போன்ற நூல்களுடன் இணைத்து வைணவ இலக்கியத்தை அறிமுகம் செய்கிறார்.
இவை பொதுவான ரசனைகொண்ட, அடிப்படை வாசிப்பு மட்டும் கொண்ட ஆர்வலர்களும் கலந்துகொள்ளத்தக்க வகுப்புகள். தமிழிலக்கியத்திலும், தமிழ் வரலாற்றிலும் ஆர்வமுள்ள எவருக்கும் அவசியமான அடிப்படைப் பயிற்சிகள்.
பலமுறை பல வாசகர்களின் தீவிர ஈடுபாட்டுடன் நிகழ்ந்த அப்பயிற்சிகள் மீண்டும் நிகழவுள்ளன.
நாள் ஜனவரி 23 ,24 மற்றும் 25
For contact programsvishnupuram@gmail.com
அறிவிக்கப்பட்ட வகுப்புகள்
முழுமையறிவு சார்பில் பறவைபார்த்தல் வகுப்புகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. திரளாகச் சிறுவர்கள் கலந்துகொள்கிறார்கள். இன்றைய குழந்தைகளை இணைய- செல்பேசி மோகத்தில் இருந்து வெளியே கொண்டு வர நேரடியான களம்சார்ந்த பயிற்சிகளால் மட்டுமே முடிகிறது. அத்துடன் இன்றைய சுமையான படிப்பில் இருந்து மெய்யான இடைவேளையையும் இளைப்பாறுதலையும் அதுவே அளிக்கிறது. ஆகவேதான் உலகம் முழுக்க இவை நிகழ்கின்றன. எங்கள் முயற்சிகளிலுள்ள பெரும் வெற்றியும் அதையே நிரூபிக்கிறது.பறவைபார்த்தல் என்பது இயற்கையுடன் ஓர் அறிமுகத்தை உருவாக்கிக் கொள்ளுதல். இயற்கையில் இணைந்து பொறுமையுடன் இருப்பதற்கான பயிற்சி. ஒன்றை நீண்டநேரம் கூர்ந்து கவனிப்பதற்கான பயிற்சியும்கூட. ஆகவே பெரியவர்களுக்கும் அது ஒருவகை தியானமே.நாள் ஜனவரி 16 17 மற்றும் 18
contact programsvishnupuram@gmail.com
வரவிருக்கும் வகுப்புகள்
தில்லை செந்தில்பிரபு நடத்தும் தியானம்– கவனக்குவிப்புப் பயிற்சி வகுப்புகள் இன்று மிகவும் புகழ்பெற்றுள்ளன. அவை மனஒருமை, அன்றாடவாழ்க்கையில் அமைதி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டவை
அவை தொடங்கப்பட்டபோது அவற்றின் நடைமுறைப் பயன் என்பது கவனக்குவிப்பாக இருக்கும் என எண்ணியிருக்கவில்லை. இன்றைய அன்றாடவாழ்க்கையில், கல்வியில் கவனச்சிதறல் மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில் இப்பயிற்சிகள் மிகச்சிறந்த தீர்வை அளிப்பதை பங்கேற்பாளர்களிடமிருந்தே கற்றுக்கொண்டு அதற்கேற்ப இப்பயிற்சிகள் மேம்படுத்தப்பட்டன.
கவனச்சிதறலின் உடனடி விளைவு சீரான துயிலின்மை. துயிலின்மை எதையும் ஒருங்கிணைந்த உள்ளத்துடன் செய்ய முடியாமலாக்குகிறது. இந்த தியானமுறைகள் அதற்கு மிக உகந்தவை.
ஒரு தியான வகுப்பு ஓரு நல்லாசிரியனால் நடத்தப்படவேண்டும். பயில்பவர் ஆசிரியருடன் தொடர்பில் இருக்கவேண்டும். ஆசிரியன் அந்த மாணவரை அறிந்திருக்கவேண்டும். ஆகவேதான் இவை தனிப்பட்ட முறையிலான பயிற்சிகளாக நடைபெறுகின்றன.
தில்லை செந்தில் பிரபு அவருடைய ஆனந்த சைதன்யா அறக்கட்டளை வழியாக இப்பயிற்சிகளை எளியநிலை கல்லூரி மாணவர்களிடையே மிகப்பெரிய அளவில் இப்போது கொண்டுசெல்கிறார்.
மீண்டும் வகுப்புகள்
நாட்கள் ஜனவரி 30 31 மற்றும் பெப்ருவரி 1For contact programsvishnupuram@gmail.com இந்திய தத்துவம் ஆறாவது வகுப்பு
இந்து தத்துவம் ஐந்தாம் வகுப்பு மீண்டும் நிகழவிருக்கிறது. பிப்ரவரி 6,7 மற்றும் 8 ஆம் தேதிகளில். இந்திய தத்துவ வகுப்பின் ஐந்தாம் நிலையை நிறைவுசெய்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.
(இது ஆறாவது வகுப்பு. முன்னர் பிழையாக ஐந்து என வந்துவிட்டது. ஆறாவது நிலை, அதாவது பிரம்மசூத்திரம் அறிமுகம் இந்த வகுப்பில் நிகழும். அதாவது ஏற்கனவே குறைவானபேருக்கு அல்மோராவில் நிகழ்ந்த வகுப்பு மீண்டும் நிகழகிறது. ஆறாவது வகுப்பின் இரண்டாம் பகுதி பிப்ரவரியில் மீண்டும் நிகழும்)
நாள் பிப்ரவரி 6,7 மற்றும் 8
For contact programsvishnupuram@gmail.com
வெய்யோன் ஆயினும்…
விஷ்ணுபுரம் பதிப்பகம் வெண்முரசு முழுநூல்களும்
‘ஏன் சிவதரே, என்னை விழையும் எவரும் இங்கில்லையா ?’ கர்ணன் சொல்லும் இந்த வரியைக் கொண்டே மொத்த நாவலையும் பார்த்தால் புரியும் , அது சொல்வது யாராலும் மறுக்கமுடியாமை ஒன்றை.
இந்த ஆண்டு வாசித்த வெண்முரசின் கடைசி நாவல் வெய்யோன். கர்ணனின் கதைகளை, அலைக்கழிப்புகளை , கைவிடப்படும் நிகழ்வுகளை என பலவற்றை சொல்லிச் செல்கிறது வெண்முரசு வரிசையில் ஒன்பதாவதாக அமைந்த இந்நூல். செந்தழல் வளையத்தில் இருந்து தொடங்குகிறது சம்பாபுரி அரண்மனையில் சூதர்மொழியில் தன்கதையை தானே கேட்டு அமர்ந்திருக்கிறான் கர்ணன். பரசுராமரால் கைவிடப்படும் கதை.
தாழொலிக்கதவுகளில் அங்கநாட்டின் சம்பாபுரி அரண்மனையில் அவைமுறைமைகள், சம்பிரதாய சடங்குகள் எவ்வண்ணம் உருவாகி வந்தது. அதோடு அங்கிருந்த அரசுக்கு மாற்றாய் ஒரு சூதன் மகன் அரசமைக்க அதை மக்களும் அவையும் ஏற்றுக்கொள்ள வைக்க அமைச்சர்களின் பங்களிப்பு என்ன என்ன என தொடங்குகிறது இந்த பகுதி. வெய்யோன் மகன் , அளித்துதீராதவன் என அடைமொழிகளுக்கு நிகராய் வசைச்சொற்களும் வந்து விழுகிறது கர்ணனின் மேல் . அரசு சூழ்தல் , ஆட்சி அதிகாரம் என இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டவனாய் வேறொரு உலகத்தில் வாழ்கிறான் கர்ணன். அவன் ஏங்குவதெல்லாம் எளிய அன்பிற்கு மட்டுமே. ஆனால் அது பெரும்பாலும் அவனுக்கு மறுக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. தந்தைக்காக ஒரு மணம், தன் மானம்காக்கும் தோழன் சொல்லி அரசுக்காக ஒரு மணம் என இரு துணைகள் பெற்றும் தனியனாய் இருக்க விதிக்கப்படுகிறான்.
எந்த அரசனின் அதிகாரமும் அந்தப்புரத்தில் செல்லுபடி ஆவதில்லை என்பதில் இருந்து கர்ணனுக்கு மட்டும் விதிவிலக்கல்ல. மனைவியரின் அரண்மனைச் சேடியரும் சுட்டுவிரல் கொண்டு ஆணையிட தயாராகவே இருக்கின்றனர். தருணங்கள் சிலவற்றில் அது நடத்திக்காண்பிக்கவும் படுகிறது. ஆனால் எந்த நிலையிலும் தன்னை தாழ்த்தி அவர்கள் தனக்கு அல்லாமல் வேறொருவருக்கு மனைவியாய் சென்றிருந்தால் அவர்கள் நல்லதோர் வாழ்க்கை வாழ்ந்திருப்பர் . ஆக, பிழை அவர்களுடையதல்ல என்னுடையதே என அந்தப் பழியையும் தன்மீதே போட்டுக்கொள்ள முடிகிறது அவனால். சூதப்பெண்ணை அரசியாய் ஆக்கியதும் தவறு. சத்ரிய குலத்தவளை சூதனுக்கு மனைவியாய் ஆக்கியதும் தவறு என நிலைகொள்ளாமையால் ஆட்டுவிக்கப்படுகிறான் ஆற்றில் விடப்பட்டவன்.
எவ்வளவு வல்லமை கொண்டவனென்றாலும் அவன் விரிகதிர் வாரிசாகவே இருந்தாலும் இல்லத்தில் அமைதியில்லை என்றால் அவன் உள்ளத்திலும் அது பிரதிபலிக்க எல்லா சாத்தியக் கூறுகளும் உள்ளன என்பதற்கு கர்ணனின் வாழ்வோர் சாட்சியம். தான் சூதனா அல்லது ஷத்ரியனா என்ற கேள்விக்கு பதில்தேடி அலைந்துகொண்டே இருக்கிறான். சமயங்களில் தான் எளிய தேரோட்டி என்பதையே மனமுவந்து முன்வைக்கிறான். ஆலோசனைகள் வழங்கி துணையாய் நிற்கும் அமைச்சர்களும் சில நேரங்களில் இந்த இரட்டை வேடங்களில் அந்தந்த நேரத்துக்கு ஏற்றவாறே அவனை கண்கொண்டு பார்க்கும், கைப்பாவையாய் வழிநடத்தும் செயல்களும் அரங்கேறுகின்றன. ஆனால் அவ்வளவுக்கு மேலாகவும் தான் கர்ணன் என்பதில் அவனுக்கு சந்தேகமல்ல . அவனின் உள்ளே ஒரு சரடாய் அது நெளிந்தோடிக்கொண்டுதான் இருக்கிறது.
சூதன் மகளை மணம் கொள்ள அஸ்தினபுரியின் அவையில் ஒப்புதல் கேட்பதாக இருக்கட்டும், கலிங்க இளவரசிகளை கவர்ந்துவர செல்லும் பயணமாக இருக்கட்டும் எதுவும் அவன் முடிவுசெய்வதேயில்லை. மணத்தன்னேற்பு அரங்கிலும் சூதன் மகனே என சிந்துநாட்டரசன் ஜயத்ரதன் கூவுகையிலும் . அவனை
முழந்தாளிட்டு அமர்க சிந்துநாட்டரசே என்றுதான் சொல்கிறான் . இந்த நாவலில் கர்ணன் தன்னை மீறி தருக்கி எழும் இடங்களில் ஒன்று இது. ஆயினும் எந்த இடத்திலும் அவர் எவ்வளவு பெரிய தீமை தனக்கு செய்தவராயினும் தன்னை தீச்சொல்லால் சுட்டவராகவே இருந்தாலும்கூட அவன் நெறி மீறி பேசிய இடங்கள் என ஒன்று கூட நினைவில் வரவில்லை.
கூற்றெனும் கேள் அங்கநாட்டு அவையமர்வில் இருந்து தொடங்குகிறது. கர்ணன் தனக்காக தன்னியல்பில் வாதாடக்கூடுபவன் அல்ல. தன் தரப்பை கழிவிரக்கத்துடன் தன் முதல் தோழர் மூத்த கௌவரவரிடம் சொல்வதுகூட அரிதுதான். ஆனால் அவர்கள் குறிப்புணர்ந்து கர்ணனுக்காக நிற்கும், சொல்லாடும் சமயங்களில்
நாம் கர்ணனாய் மாறி அந்த நிமிடத்தை அணுவணுவாய் சுவைப்பதை நம் அகம் உடனே அறியும். அது பீஷ்மர்முன்சொல்லாடி அரசு, முறைமைகள் அனைத்தும் என் நண்பனுக்கு பின்புதான் என சொல்லும் துரியனாய் இருந்தாலும் சரி . அங்கநாடு வந்து தன் மூத்தோனின் நிலையறிந்த இளைய கௌரவன் சுஜாதன் அனைத்து தளைகளையும் அறுத்து எறிந்து ‘ இழிமகளே, என் தமையன் முன் நின்று நீ இன்று சொன்ன சொற்களுக்காக உன் தலைகொய்து அஸ்தினபுரிக்கு மீளவேண்டியவன் நான்‘ என கலிங்க நாட்டு சேடியிடம் சூளுரைக்கும் இடமாக இருந்தாலும் சரி.
தன்னால் கலிங்கத்தில் அவமானப்படுத்தப்பட்ட ஜயத்ரதன், துச்சளையின் கணவனாய் குழந்தையுடன் நகர் நுழையும் நிகழ்வுக்கு மாமனாய் அங்கிருக்க வந்த துரியோதனனின் அழைப்பை ஏற்று பெரும் மனப்போராட்டத்துடன் ஆனால் அங்க நாட்டில் இருக்கும் மனைவியர் போரில் இருந்து ஒரு விடுதலை உணர்வுடன் அஸ்தினபுரி செல்கிறான் கர்ணன். அங்கு நடந்த நிகழ்வுகளும் ஜயத்ரதன் சகோதரனாய் கர்ணனை உணர்ந்து உரையாடுவதும் காவியத்தருணங்கள். அரசியல் தருணங்களும்தான். அரசியல் தருணமல்லாதது என்றால் சுஜாதன் தானும் சேர்ந்து கர்ணனுக்காக வாழ்த்தொலி எழுப்புவது, மதுவில் இருந்தாலும் தன்னுணர்வுடன் கர்ணன் காலைத்தொட்டு துரியோதனன் வணங்குவது என சிலவற்றை சொல்லலாம். சேராத இடம்தான் , சேரக்கூடாத இடம்தான் எப்படி வேண்டுமானாலும் தர்க்கத்தை கொண்டு அளக்கலாம்தான் . ஆனால் அங்கு அந்த தசைத்திரளில் இருக்கும்போது மட்டுமே பெரும் விடுதலையை உணர்கிறான் கர்ணன்.
பன்னிரண்டாவது பகடை உருளத் தொடங்குகிறது, கௌரவர்கள் கர்ணனுடன் வேட்டைக்கு செல்ல எத்தனித்து நின்றிருக்கும்போது புரவியில் தன்னந்தனியனாய் நகர் நுழையும் பீமனால். இந்திரப்பிரஸ்தத்தில் நடக்கவிருக்கும் சுடரேற்று விழாவிற்கு அவையமர்ந்து அரசமுறை அழைப்புவிடுக்கிறான். அந்த அழைப்பு சகுனியால் கணிகரால்
பிரித்து ஆராயப்படுகிறது. அதன்மூலம் அஸ்தினபுரியில் அரசரும் தம்பியரும் கனல்கொள்ள திரி ஆயத்தமாக அதை தனது உளவிரிவால் எதிர்கொண்டு நிற்கும் துரியோதனன் சொல்லும் இந்த
சொற்கள் உச்சம் என சொல்லலாம்.
“இளையோனே, இவ்வரியணை எந்தை எனக்களித்தது. இதற்கு அப்பால் இத்தருணத்தில் எதையும் நான் சொல்லவிரும்பவில்லை. நீ என் இளையோன். ஆனால் இங்கு என்னை மூத்தவர் என்று நீ அழைக்கவில்லை என்றாலும் அவ்வண்ணமே உணரக் கடமைப்பட்டவன் நான். நீ அழைக்கவில்லை என்பதன் பிழையும் என்னுடையதே என நாம் அறிவோம்” . பீமன் ஏதோ சொல்ல வாயெடுக்க துரியோதனன் கைகாட்டி “எவ்வண்ணமாயினும் அஸ்தினபுரியின் அரசனுக்கு அளிக்கப்பட்ட இவ்வழைப்பை பாண்டவர் ஐவரின் உடன்பிறந்தவனாக நின்று ஏற்கிறேன். நானும் என் தம்பியரும் யுதிஷ்டிரரின் இளையோராகச் சென்று இந்திரப்பிரஸ்தத்தின் ஒளிகோள் விழவை சிறப்பிப்போம்”
விழிநீரனலில், பீமனால் முறையான அழைப்புவிடுக்கப்படாமல் , ஆனால் சகுனி மற்றும் கணிகரால் வேண்டிக்கொள்ளப்பட்டு, தனது அமைச்சர் சிவதரால் கடுமையாக மறுக்கப்பட்டு இப்படி பல குழப்பங்களுக்கு மத்தியில் கௌரவர்களுடன் இந்திரப்பிரஸ்தம் செல்கிறான் கர்ணன். பயணத்தில் படகில் தேவயானியின் மணிமுடியை காண்பித்து துரியோதனன் உரைப்பதெல்லாம் பித்தன்றி வேறல்ல. ஆனால் களங்கமற்ற பித்தோ என்று நினைக்கவும் செய்யலாம் . அந்த தருணத்தையும் எளிதில் கடக்கமுடியாமல் பல நினைவலைகளுக்கு சென்று சிக்குவது கர்ணனே.
செல்லும் வழியில் மண்ணாழம் வாழும் உரகர்களை சந்திக்க நேரிடுகிறது. அவர்களின் மூதன்னை திரியை மூலம்
உரகர்களின் நாகர்களின் கதைகளை கர்ணன் அறிய நேரிடுகிறது. அவர்களுக்கு உரித்தான அந்த மண் எப்படி திரௌபதிக்கு இலக்கானது என உரைக்கும் புராணக்கதைகளும் நிகழ்கதைகளும் சொல்லப்படுகின்றன. முக்கியமாக தனது பயணத்தை கூட விட்டுவிட்டு உரகர்களை பின்தொடரும் கர்ணன் மீண்டும் அங்கிருந்து அகன்று வருவது திரியை, அவனின் உள்ளுறைந்த வஞ்சத்தை புறத்தே மறுத்தாலும் அவன் அகத்தை அவனுக்கே காண்பித்தபோதுதான்.
நச்சாடல் காண்பது , திரும்பிவரும் வழியில் மகதப்படகில் ஏறும் நிலையில் இருந்து ஆரம்பிக்கிறது கர்ணனுக்கு. அதன்மூலம் வெகுநாளைய எதிர்நாடுகளான மகதமும் அஸ்தினபுரியும் நட்புமுகம் கொள்ளத்தொடங்குகின்றனர் அப்போதிலிருந்து . அது உடலால் ஜராசந்தனும் துரியோதனனும் ஒருவரையொருவர் மற்போரில் அறிந்தபின்னர்தான்.ஆனால் அதன்பின்பு இவர்கள் பெருஞ்சுடரேற்று விழாவுக்கு ஒன்றாக நகர் நுழைவது பீமனால் இளையபாண்டவனால் வேறுவகையில் பொருள்கொள்ளப்படுகிறது. அஸ்தினபுரியில் பீமன் வருகையின்போது சகுனியால் வைக்கப்பட்ட ஒன்று இங்கு எரிகொள்ளத் தொடங்குகிறது என சொல்லலாம்.
நூரிதழ்நகரான இந்திரப்பிரஸ்தத்தில் எங்கும் தன்னை அரசன் என கர்ணன் முன்வைப்பதில்லை அல்லது அதற்கு அவனுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அரச முறை உடைகள் கூட இல்லாமல் , தான் அஸ்தினபுரி அரசரின் அணுக்கன், காவலன் என்கிற நிலையிலேயே வருகிறான்.அஸ்தினபுரியின் பரிசான தேவயானியின் மணிமுடி எந்த வகையில் திரௌபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறித்து கர்ணனும் இளைய கௌரவர்களும் கொந்தளிக்க அப்போதும் பாண்டவர்களின் செயல்களை பெருநிலை கொண்டே பார்க்கிறான் துரியோதனன்.
கனவிலும் நனவிலும் என அங்கிருக்கும் கர்ணன் உரகர் வாழ் ஆழுலகங்களுக்கு சென்று மீள்கிறான் .
மயனீர் மாளிகையில் அரங்கேற்றப்படும் நாடகம், சுயபகடியின் மூலம் துவங்கும் ஒரு அங்கத சுவை மிகுந்த நாடகம் அதன் இறுதியில் எப்படி திரௌபதியை இளைய யாதவனை என அவர்களின் நோக்கத்திற்கு ஏற்ப, பார்ப்போரின் உள்ளத்தில் நீக்கமுடியாத ஆளுமைகளாக பதியவைக்கப்படுகிறது என காட்டும்விதம் அருமை.நீர்மாளிகையா நிழல் மாளிகையா என அனைவரின் உருவங்களை அருவங்களாய் , அருவங்களை உருவங்களாய் , என்னவென்றே புரியாதவகையில் பல மாயங்களை காட்டிய மாளிகையில் அங்கு வந்திருக்கும் அனைத்து மன்னர்களும் பார்ப்பது அவரவர்க்கு ப்ரத்யேகமான காட்சிகளை. நிலையழிந்து நிற்கிறார்கள் அனைவரும்.
அதன் தொடர்ச்சியாய் உண்டாட்டு அறையில் தேவயானியின் மணிமுடி அணிந்திருக்கிறாள் திரௌபதி என பார்த்து கர்ணனின் சொல்லையும் மீறி , அவளை, குந்தியை நோக்கி பேச சென்று , பளிங்கென எண்ணி நீரில் விழும் அல்லது விழவைக்கப்படும் துரியோதனன் தூக்கப்படுவது கர்ணனால் மட்டுமே. அவன் வந்ததன் பயன் முழுதாய் அமைந்தது என அந்த நிகழ்வை சொல்லலாம்.
ஒரு நிகழ்வு ஏன் அப்படி நடக்கவில்லை என கேட்டுக்கொள்ள பல தருணங்கள் இந்த நாவலில். அது ஊழின் விளையாட்டு என கொள்ளலாமே தவிர எந்த மேலதிக விளக்கமும் அதன் அணிப்பூச்சு என்றே கொள்ளத்தோன்றுகிறது. அப்படியான தருணங்களில் சில * பீமனுடன் தோள் கோர்க்க , நீர்விளையாட்டுகளில் ஈடுபட என ஆர்வத்துடனே வருகின்றனர் துரியனும் மகதனும். ஆனால் அது நடக்கவே இல்லை.
*பீமன் தன்னிடம் வந்து பேசுவான் என மூத்த கௌரவன் எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறான்
ஆனால் எதையும் எதிர்பார்க்காமல் நிற்கிறான் கர்ணன். தன்னின் இருத்தல் ஒன்றே அங்கு செய்யக்கூடிய
ஒன்று என. அவன் இந்திரபிரஸ்தத்தில் இருக்கும்போது அவனின் இருப்பு அனைவராலும் உணரப்படும் தருணமென்றால் அது சுடராற்று நிகழ்வில் தலைமை வைதிகர் குந்தி சொல்படி நேரடியாக அவனிடம் வந்து ‘மலர் கொள்க அங்கரே‘ என சொல்லுமிடம்.
இந்திரபிரஸ்தத்தில் கௌரவர்களை மற்றும் ஏனைய அரசர்களை நிலையழிய செய்வது அந்நகரின் பிரம்மாண்டம். அது அவர்களை மட்டுமல்ல பாண்டவர்களையும் உருமாற்றியுள்ளது எனவும் சொல்லலாம்.
உண்டாட்டு அறையில் இருந்து வெளியேறி நோய்கொள்ளும் துரியன் மீண்டெழும்போது வேறொருவனாய் முழுமை கொண்டு காட்சிதருகிறான். ஒளியை நிழல் கவ்வ கிரகணத்துடன், அதோடு கூடிய புராணக்கதையுடன் முடிகிறது நாவல்.
இப்போதும் உடனே மறுவாசிப்பு கோரி நிற்கும் இடங்கள் என இவைகளை சொல்லலாம். அதாவது செவி நுகர் கனியாய் மீண்டும் சுவைக்க கோருவன .
கர்ணன் பானுமதி உரையாடல்கள்
கணிகரை கர்ணன் சந்திக்கும் இடங்கள். கணிகரின் விஷத்தன்மையை உய்த்தறிவது ,
சூதர்களும் மூலம் சொல்லப்படும் வரலாற்று , புராணக்கதைகள் ,
துரியோதனன் அப்பழுக்கற்று வெளிப்படும் தருணங்கள்
உரகர்கள் வரலாறு , மொத்தத்தில் முழுநாவலும் என்றும் சொல்லலாம்.
இந்த நாவலை வாசித்து சில நாட்கள் கடந்துவிட்டிருக்கின்றன.அடுத்த நாவலான பன்னிரு படைக்களம் கூர்மை கொள்ள தொடங்கியிருக்கிறது. ஆனால் இந்த நாவல் வாசிப்பை எழுத அமரும்முன் என்ன எழுதப்போகிறேன் என ஒரு தயக்கமிருந்தது . ஆனால் அமர்ந்து சில நிமிடங்களுக்குப்பிறகு அந்த நிகர்வாழ்வு மேலெழுந்து வந்தது.
எழுதாமல் விட்டிருந்தால் பேரிழப்பு கொண்டவன் கர்ணன் அல்ல நானே என்று அமைந்திருக்கும்.
தேவர்க்கரசே , பெருவிழைவு கொண்டவனை ஐயத்தால் வெல்க !
பெருஞ்சினம் கொண்டவனை எளிமையால் வெல்க !
இப்படி வெல்லற்கரியோர் என்று இப்புவியில் எவருமில்லை . விண்ணிழிந்து மண் நிறைத்த இறைவடிவங்கள் கூட . விரிகதிர் மைந்தா , தன்னால் மட்டுமே வெல்லப்படுபவன் நிகரற்றவன் . தெய்வங்கள் அவனை மட்டும் நோக்கி புன்னகைக்கின்றன . ஆம் . அவ்வாறே ஆகுக !
ஆற்றல் முதிர்ந்த ஆசிரியர்கள் பேராற்றல் முதிர்ந்த மாணவர்களைப் பெறுவதென்பது இப்புடவி வளரவேண்டும் என்று விழையும் அப்பிரம்மத்தின் ஆணை !
ஆக்கி அளிக்கும் எம் ஆசிரியராம் யதியின் மாணவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றியும் .
அன்பு , உடன் வாசித்து உந்துதலாய் இருக்கும் வாசிப்பை நேசிப்போம் நண்பர்களுக்கு .
– கே . எம் . ஆர் . விக்னேஸ்
குழந்தைகளும் தாவரங்களும் நானும்- லோகமாதேவி
ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்ட மூன்றாவது தாவரவியல் அறிமுக வகுப்பு சென்ற வாரம் நடந்து முடிந்தது. உணவுக்கூடம், தங்குமிடங்கள் மற்றும் வகுப்பு நடந்த அரங்கின் முன்பெல்லாம் விடப்பட்டிருந்த, ஜோடி மலர்களைப் போன்ற அழகிய வண்ணங்களிலான குட்டி குட்டிச் செருப்புகளைப் பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது.
The talk on modernity in Vedanta is a good one. I liked the way you presented the Vedanta tradition as a pure intuitive-intellectual methodology developed by the ancient rishis.
Vedanta- A LightJanuary 6, 2026
சென்னை புத்தக விழா- விஷ்ணுபுரம் கடை எண் 476 மற்றும் 477
சென்னை புத்தகவிழா வரும் ஜனவரி 8 முதல் தொடங்கவுள்ளது. விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் கடை எண். 476-477.
இந்த ஆண்டு நான் எழுதிய சில புதிய நூல்கள் வெளிவந்துள்ளன. பழைய நூல்களின் மறுபதிப்புகளும் வெளிவந்துள்ளன. நாஞ்சில்நாடன், இசை, அஜிதன், நிஷா மன்ஸூர், கல்பற்றா நாராயணன், எச்.எஸ்.சிவப்பிரகாஷ் என பலவகையான எழுத்தாளர்களின் புதிய படைப்புகளும் விஷ்ணுபுரம் வெளியீடாக வந்துள்ளன.
நல்வரவு.
ஜெயமோகன் எழுதிய காவியம் அவருடைய வழக்கமான நாவல்களில் இருந்து கட்டமைப்பு மொழிநடை அனைத்திலும் முற்றிலும் மாறுபட்டது. சமகால அவலங்களைச் சொல்லும் நாவல்களையும் ஜெயமோகன் எழுதியிருக்கிறார். வரலாறும் தொன்மமும் கலக்கும் நாவல்களையும் எழுதியுள்ளார். அவ்விரு உலகங்களும் ஒன்றோடொன்று ஊடறுக்கும் படைப்பு இது.
காவியம் விஷ்ணுபுரம் பதிப்பகம்
சென்னை புத்தகக் கண்காட்சியில் முதல்முறையாகக்கிடைக்கும் கடல் நாவல் ஜெயமோகனின் உத்வேகம் மிக்க நாவல்களில் ஒன்று. மாபெரும் மானுடநாடகம் என்றே சொல்லத்தக்க படைப்பு. தீவிரமான மொழியில் காவியத்தன்மையுடன் விரியும் இப்படைப்பு மகத்தான மேலைநாட்டு ஓவியங்களின் கனவை தன்னகத்தே கொண்டது.
கடல் விஷ்ணுபுரம் பதிப்பகம்
ஜெயமோகன் ஓஷோ பற்றி ஆற்றிய உரையின் எழுத்துவடிவம். அந்த உரை எத்தனை செறிவானது என இந்நூல் காட்டும். அதேசமயம் உரைக்குரிய விரைவான வாசிப்போட்டமும் கிடைக்கும். இது ஓஷோ என்ன சொன்னார் என்று சொல்லும் நூல் அல்ல. ஓஷோவை எங்குவைத்து எப்படிப் புரிந்துகொள்வது என்று விவாதிப்பது.
ஓஷோ மரபும் மீறலும் வாங்க
அஜிதனின் புதிய சிறுகதைத் தொகுதி. அஜிதனின் சிறுகதைகள் எந்த முயற்சியும் இல்லாதவைபோல மிக எளிதான ஓட்டத்துடன் எழுதப்படுபவை. அதேசமயம் கூர்ந்த வாசகனுக்குள் விரிந்துகொண்டே செல்லும் ஆழ்ந்த தத்துவ நோக்கு கொண்டவை. இத்தொகுதியில் அஜிதனின் அண்மைக்காலச் சிறுகதைகள் அடங்கியுள்ளன.
நீண்டகாலத்திற்கு பின் மறுபதிப்பாகியிருக்கும் ஜெயமோகனின் கட்டுரைத் தொகுதி இது. இருபதாண்டுகளுக்கு முன்பு இளம்படைப்பாளிகளாக அறிமுகமானவர்களைப் பற்றிய மதிப்பீடு. அவர்களில் பலர் இன்று அறியப்பட்ட படைப்பாளிகளாக ஆகியுள்ளனர். அவர்களின் இடம் என்னவாக ஆகியுள்ளது என ஒப்பிட்டு நோக்குவது ஆர்வமூட்டுவது.
புதிய காலம் வாங்க
தாடகை மலையடிவாரத்தில் ஒருவர் ஜெயமோகன் நாஞ்சில்நாடனைப் பற்றி எழுதிய சிறு நூல். மூத்த படைப்பாளி என்னும் வியப்புடனும் மூத்தவர் என்னும் உரிமையான பகடியுடனும் எழுதப்பட்ட படைப்பு.
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர்
மிகச்சிறந்த புனைவுகளுக்கு நிகரான வாசிப்பனுபவத்தை அளிக்கும் இந்தக் கட்டுரைகள் இங்கே வாழ்ந்த மனிதர்களைப் பற்றிய ஜெயமோகனின் நினைவுப்பதிவுகள்.
நான்காவது கொலை ஒரு பகடிநூல். துப்பறியும் கதைகளை பகடிசெய்யும்பொருட்டு எழுதப்பட்டது. துப்பறியும் கதைகளின் பாணிகளை அறிந்தவர்கள் சிரித்துக்கொண்டே படிக்கத்தக்க படைப்பு.
நான்காவது கொலை
மொழியை சுருக்கமாக, வேடிக்கையான திரிபுகளுடன், கையாண்டு ஆழ்ந்த பொருளை உருவாக்கும் கவிஞர் கல்பற்றா நாராயணன். அவருடைய கட்டுரைகள் கவித்துவம் திரண்ட அசல் சிந்தனைகளைக் கொண்டவை. அழகியல் கட்டுரைகளின் தொகுப்பை அதே மொழிநுட்பத்துடன் அழகிய மணவாளன் மொழியாக்கம் செய்துள்ளார்.
கருப்பு இருட்டல்ல வாங்க
இசை அண்மைக்காலமாக எழுதிவரும் மரபிலக்கிய வாசிப்புக் கட்டுரைகள் பெரும்புகழ்பெற்றவை. இன்றைய காலகட்டத்தில் வாழும் ஒரு நவீனக் கவிஞனுக்கு நம் தொல்மரபு வேடிக்கையும் நெகிழ்வும் தரிசனமுமாக எப்படியெல்லாம் பொருள்படுகிறது என்பது நம் சமகாலத்தையும் மரபையும் அறிவதற்கான ஒரு பெரிய வாசல்
நாஞ்சில்நாடன் கதைகளில் இருந்து கட்டுரைகளுக்குத் திரும்பியபோது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. கதைகளின் அகவயநடையும், சீற்றமும் எள்ளலும் கொண்ட சொல்லாட்சியும் அமைந்த இக்கட்டுரைகள் வழியாக அவர் மேலும் ஆழமான ஒரு புனைவுத்தளம் நோக்கிச் சென்றார்.
காவலன் காவான் எனின் வாங்கஎல்லைகளில் விரிந்தவர்கள்
தமிழ்ச் சிற்றிதழ் சார்ந்த இலக்கிய உலகத்தின் விந்தைகளில் ஒன்று அந்தச் சின்னஞ்சிறு உலகத்திற்குள் இருந்த வகைமாதிரிகள். சிற்றிதச்சூழலின் பொதுப்போக்கில் இருந்து முற்றிலும் விலகி தங்களுக்கான தனித்த புனைவுலகை உருவாக்கிக் கொண்ட படைப்பாளிகள் பலர் உண்டு. அவர்களை சிற்றிதழ்ச்சூழல் தங்கள் உலகுக்குள் இழுத்து இடமளித்து வைத்துக்கொண்டது.
உதாரணமாக ப.சிங்காரம். அவரை இலக்கியவாதியாகப் பொருட்படுத்திப் பேசியவர்கள் சிற்றிதழாளர்கள். இன்றும் அவரை அறிந்தவர்கள் சிற்றிதழாளர்கள் மட்டுமே. ஆனால் ப.சிங்காரம் சிற்றிதழ்களில் எதுவுமே எழுதவில்லை. அவர் முற்றிலும் ஒதுங்கியே வாழ்ந்தார். அவருடைய எழுத்துக்கள் தனியாக புத்தகமாகவே வெளிவந்தன. கடலுக்கு அப்பால் என்னும் நாவல் கலைமகள் நாவல் போட்டியில் பரிசு பெற்றது. மிகப்பிந்தித்தான் அவர் சிற்றிதழ்சார்ந்த இலக்கியத்தால் உள்ளிழுக்கப்பட்டார்.
சிற்றிதழ்ச் சூழலுக்கு முற்றிலும் அந்நியமானவர் நீல பத்மநாபன். அவர் பேரிதழ்களை நம்பிச் செயல்பட்டவர். தன் படைப்புகளை தானாகவே நூலாக வெளியிட்டார். ஆனால் தமிழ்த் தீவிர இலக்கியத்தின் கவனம் அவர் மேல் படிந்தது. அதற்கு பேரா.ஜேசுதாசன் போன்றவர்களின் விமர்சனமும் காரணம். தமிழின் யதார்த்தவாத இலக்கியத்தின் உச்சம் என்று சொல்லத்தக்க இயல்புவாதத்தை முன்வைத்த முக்கியமான முன்னோடிப் படைப்பாளியாக அவர் மதிப்பிடப்படுகிறார்.
தமிழ் இலக்கியத்தின் மையப் போக்கில் இருந்து முற்றிலும் விலகி, திராவிட இயக்க இதழ் வழியாக எழுத வந்தவர் ஆ.மாதவன். அந்த இலக்கிய சரடில் இருந்து நவீன இலக்கியத்திற்கு வந்தாலும் கூட, பெரும்பாலும் சிற்ற்றிதழ்களில் அவர் எழுதியதில்லை. ஆனால் அவருடைய எழுத்துக்கள் நவீனத்துவ எழுத்தின் சிறந்த மாதிரிகளில் ஒன்றாக வாசிக்கப்பட்டன.சுந்தர ராமசாமி முதலிய தமிழ் இலக்கிய முன்னோடிகளால் அவர் மதிப்புடன் அணுகப்பட்டார்.
இம்மூன்று படைப்பாளிகளையும் தமிழ் நவீன இலக்கியத்தின் விளிம்பில் முளைத்து விரிந்தவர்கள் என மதிப்பிடலாம். இவர்களிடம் செயல்படும் நவீன அம்சம் தமிழ் நவீன இலக்கியம் அளித்தது அல்ல. இவர்கள் தமிழ் நவீன இலக்கியத்தை எழுதவருவதற்கு முன்பு கற்றதே இல்லை. வாழ்க்கையில் இருந்தே அந்த நவீனக்கூறை அடைந்தனர், தங்கள் அனுபவத்தளம் வழியாகவும் கற்பனை விரிவு வழியாகவும் வளர்த்தெடுத்தனர்.
இந்த ‘விலகிய எழுத்து’ என்பதை அணுகுவது சற்றுச் சவாலானது. அவர்களின் விலகிய அம்சம் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது. கூடவே அது ஏன் சிற்றிதழ்ச்சூழலில் தீவிர இலக்கியமாகக் கணிக்கப்பட்டது என்பதை ஆராய்வதும் முக்கியமானது. அணுக்கமும் விலக்கமும் வெவ்வேறு வகையில் அவற்றின் இலக்கிய இடத்தை தீர்மானிக்கின்றன. உதாரணமாக நீல.பத்மநாபனிடம் சிற்றிதழ்ச்சூழலிலுள்ள தீவிரம் இல்லை. வாழ்க்கையை இயல்பான, சாதாரணமான ஓர் ஒழுக்காகவே அவர் அணுகுகிறார். சிற்றிதழ்ச்சூழலில் எவ்வகையிலும் பொருட்படுத்தப்படாத சாகச அம்சம் ப.சிங்காரத்தில் உள்ளது. ஆனால் நீல.பத்மநாபனின் வாழ்க்கை பற்றிய நிதானப்பார்வை, ப.சிங்காரத்தின் வரலாற்று அங்கதம் அவர்களின் எழுத்தை உயர் இலக்கியமாக ஆக்குகிறது.
இந்த மூன்று படைப்பாளிகள் பற்றிய இந்நூல் தமிழ் நவீன இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக அணுகியும் விலகியும் அறிவதற்கு மிக உதவிகரமானது என நினைக்கிறேன்.
ஜெ
கரிப்பும் சிரிப்பும் – இலக்கிய முன்னோடிகள் வரிசை வாங்கஅஜிதன் உரை, கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
அஜிதனின் உரையைக் கேட்டேன் மிகச்சிறப்பாக நிகழ்ந்த உரை. அதில் அவர் அளிக்கும் தத்துவம் சார்ந்த உதாரணங்கள் அழகான கதை போலவும் ,யோசிக்க யோசிக்க விரிவதாகவும் இருந்தன. உதாரணமாக சென்ற நூற்றாண்டில் ஒரு இனக்குழு சணடையில் தன் உயிரை பணயம் வைத்து போராடிய ஒருவனை இன்றைக்கு எப்படி மதிப்பிடுகிறோம்? அவருடைய தியாகம் நமக்கு முக்கியமாக தெரிகிறது .ஆனால் எதன் பொருட்டு அவர் தியாகம் செய்தார் என்பது இன்று நமக்கு முக்கியமல்ல. தமிழர் வீரம் என்று சொல்லும்போது பாண்டியரும் சோழர்களும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டதைத்தான் குறிப்பிடுகிறோம். ஆனால் அதை வீரம் என்ற விழுமியமாக மாற்றிக் கொள்கிறோம். அப்படிப்பட்ட பல நுணுக்கமான உதாரணங்களுடன் சென்ற உரை சிந்தனையில் பல திறப்புகளை அளிப்பதாக இருந்தது.
சாம் மனோகர்
இருப்பின் நெசவு – அஜிதன் நேர்காணல்
அன்புள்ள ஜெயமோகன் ,
அஜிதனின் உரை சிறப்பாக இருந்தது. அவர் கவிதைகள் இதழில் அளித்த பேட்டியில் அறம் பற்றி பேசுமிடத்துடன் இணைந்து மேலே செல்வதாக அந்த உரை அமைந்திருந்தது. கவிதையின் இடம் மாறாத இளமை அல்லது முதிர்ச்சியில்லாமை என்றும், உரைநடை என்பது கவிதையையும் உள்ளடக்கிக் கொண்ட ஒரு பெரிய முதிர்ந்த வடிவம் என்றும் சொல்லும் பார்வை தமிழுக்கு மிக முக்கியமானது .நீண்ட காலமாக கவிதையை மட்டுமே இலக்கியமாகக் கருதி வந்த நாம் இயல்பாகவே உரைநடையை இரண்டாம் பட்சமாக நினைக்கப் பழகியிருக்கிறோம். அந்த எண்ணத்தை நானும் கொண்டிருந்தேன். அதை மாற்றியது இந்த உரை. இந்த உரையையும் அறத்தை பற்றி பேசும் அந்த பேட்டியையும் இணைத்துப் படிக்கும் போது மிகுந்த தெளிவு உருவாகிறது.
எம்.பாஸ்கர்
ஆ.ப. சுவாமிநாத சர்மா
தமிழ்ப்புலவர். கணிதவியல் அறிஞர். நூற்றுக்கணக்கான சித்திரக்கவிகளை இயற்றினார். சிற்றிலக்கிய நூல்களை எழுதினார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். ‘மதுரவரகவி’ பட்டம் பெற்றார்.
ஆ.ப. சுவாமிநாத சர்மா – தமிழ் விக்கி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 865 followers

