வெய்யோன் ஆயினும்…
விஷ்ணுபுரம் பதிப்பகம் வெண்முரசு முழுநூல்களும்
‘ஏன் சிவதரே, என்னை விழையும் எவரும் இங்கில்லையா ?’ கர்ணன் சொல்லும் இந்த வரியைக் கொண்டே மொத்த நாவலையும் பார்த்தால் புரியும் , அது சொல்வது யாராலும் மறுக்கமுடியாமை ஒன்றை.
இந்த ஆண்டு வாசித்த வெண்முரசின் கடைசி நாவல் வெய்யோன். கர்ணனின் கதைகளை, அலைக்கழிப்புகளை , கைவிடப்படும் நிகழ்வுகளை என பலவற்றை சொல்லிச் செல்கிறது வெண்முரசு வரிசையில் ஒன்பதாவதாக அமைந்த இந்நூல். செந்தழல் வளையத்தில் இருந்து தொடங்குகிறது சம்பாபுரி அரண்மனையில் சூதர்மொழியில் தன்கதையை தானே கேட்டு அமர்ந்திருக்கிறான் கர்ணன். பரசுராமரால் கைவிடப்படும் கதை.
தாழொலிக்கதவுகளில் அங்கநாட்டின் சம்பாபுரி அரண்மனையில் அவைமுறைமைகள், சம்பிரதாய சடங்குகள் எவ்வண்ணம் உருவாகி வந்தது. அதோடு அங்கிருந்த அரசுக்கு மாற்றாய் ஒரு சூதன் மகன் அரசமைக்க அதை மக்களும் அவையும் ஏற்றுக்கொள்ள வைக்க அமைச்சர்களின் பங்களிப்பு என்ன என்ன என தொடங்குகிறது இந்த பகுதி. வெய்யோன் மகன் , அளித்துதீராதவன் என அடைமொழிகளுக்கு நிகராய் வசைச்சொற்களும் வந்து விழுகிறது கர்ணனின் மேல் . அரசு சூழ்தல் , ஆட்சி அதிகாரம் என இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டவனாய் வேறொரு உலகத்தில் வாழ்கிறான் கர்ணன். அவன் ஏங்குவதெல்லாம் எளிய அன்பிற்கு மட்டுமே. ஆனால் அது பெரும்பாலும் அவனுக்கு மறுக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. தந்தைக்காக ஒரு மணம், தன் மானம்காக்கும் தோழன் சொல்லி அரசுக்காக ஒரு மணம் என இரு துணைகள் பெற்றும் தனியனாய் இருக்க விதிக்கப்படுகிறான்.
எந்த அரசனின் அதிகாரமும் அந்தப்புரத்தில் செல்லுபடி ஆவதில்லை என்பதில் இருந்து கர்ணனுக்கு மட்டும் விதிவிலக்கல்ல. மனைவியரின் அரண்மனைச் சேடியரும் சுட்டுவிரல் கொண்டு ஆணையிட தயாராகவே இருக்கின்றனர். தருணங்கள் சிலவற்றில் அது நடத்திக்காண்பிக்கவும் படுகிறது. ஆனால் எந்த நிலையிலும் தன்னை தாழ்த்தி அவர்கள் தனக்கு அல்லாமல் வேறொருவருக்கு மனைவியாய் சென்றிருந்தால் அவர்கள் நல்லதோர் வாழ்க்கை வாழ்ந்திருப்பர் . ஆக, பிழை அவர்களுடையதல்ல என்னுடையதே என அந்தப் பழியையும் தன்மீதே போட்டுக்கொள்ள முடிகிறது அவனால். சூதப்பெண்ணை அரசியாய் ஆக்கியதும் தவறு. சத்ரிய குலத்தவளை சூதனுக்கு மனைவியாய் ஆக்கியதும் தவறு என நிலைகொள்ளாமையால் ஆட்டுவிக்கப்படுகிறான் ஆற்றில் விடப்பட்டவன்.
எவ்வளவு வல்லமை கொண்டவனென்றாலும் அவன் விரிகதிர் வாரிசாகவே இருந்தாலும் இல்லத்தில் அமைதியில்லை என்றால் அவன் உள்ளத்திலும் அது பிரதிபலிக்க எல்லா சாத்தியக் கூறுகளும் உள்ளன என்பதற்கு கர்ணனின் வாழ்வோர் சாட்சியம். தான் சூதனா அல்லது ஷத்ரியனா என்ற கேள்விக்கு பதில்தேடி அலைந்துகொண்டே இருக்கிறான். சமயங்களில் தான் எளிய தேரோட்டி என்பதையே மனமுவந்து முன்வைக்கிறான். ஆலோசனைகள் வழங்கி துணையாய் நிற்கும் அமைச்சர்களும் சில நேரங்களில் இந்த இரட்டை வேடங்களில் அந்தந்த நேரத்துக்கு ஏற்றவாறே அவனை கண்கொண்டு பார்க்கும், கைப்பாவையாய் வழிநடத்தும் செயல்களும் அரங்கேறுகின்றன. ஆனால் அவ்வளவுக்கு மேலாகவும் தான் கர்ணன் என்பதில் அவனுக்கு சந்தேகமல்ல . அவனின் உள்ளே ஒரு சரடாய் அது நெளிந்தோடிக்கொண்டுதான் இருக்கிறது.
சூதன் மகளை மணம் கொள்ள அஸ்தினபுரியின் அவையில் ஒப்புதல் கேட்பதாக இருக்கட்டும், கலிங்க இளவரசிகளை கவர்ந்துவர செல்லும் பயணமாக இருக்கட்டும் எதுவும் அவன் முடிவுசெய்வதேயில்லை. மணத்தன்னேற்பு அரங்கிலும் சூதன் மகனே என சிந்துநாட்டரசன் ஜயத்ரதன் கூவுகையிலும் . அவனை
முழந்தாளிட்டு அமர்க சிந்துநாட்டரசே என்றுதான் சொல்கிறான் . இந்த நாவலில் கர்ணன் தன்னை மீறி தருக்கி எழும் இடங்களில் ஒன்று இது. ஆயினும் எந்த இடத்திலும் அவர் எவ்வளவு பெரிய தீமை தனக்கு செய்தவராயினும் தன்னை தீச்சொல்லால் சுட்டவராகவே இருந்தாலும்கூட அவன் நெறி மீறி பேசிய இடங்கள் என ஒன்று கூட நினைவில் வரவில்லை.
கூற்றெனும் கேள் அங்கநாட்டு அவையமர்வில் இருந்து தொடங்குகிறது. கர்ணன் தனக்காக தன்னியல்பில் வாதாடக்கூடுபவன் அல்ல. தன் தரப்பை கழிவிரக்கத்துடன் தன் முதல் தோழர் மூத்த கௌவரவரிடம் சொல்வதுகூட அரிதுதான். ஆனால் அவர்கள் குறிப்புணர்ந்து கர்ணனுக்காக நிற்கும், சொல்லாடும் சமயங்களில்
நாம் கர்ணனாய் மாறி அந்த நிமிடத்தை அணுவணுவாய் சுவைப்பதை நம் அகம் உடனே அறியும். அது பீஷ்மர்முன்சொல்லாடி அரசு, முறைமைகள் அனைத்தும் என் நண்பனுக்கு பின்புதான் என சொல்லும் துரியனாய் இருந்தாலும் சரி . அங்கநாடு வந்து தன் மூத்தோனின் நிலையறிந்த இளைய கௌரவன் சுஜாதன் அனைத்து தளைகளையும் அறுத்து எறிந்து ‘ இழிமகளே, என் தமையன் முன் நின்று நீ இன்று சொன்ன சொற்களுக்காக உன் தலைகொய்து அஸ்தினபுரிக்கு மீளவேண்டியவன் நான்‘ என கலிங்க நாட்டு சேடியிடம் சூளுரைக்கும் இடமாக இருந்தாலும் சரி.
தன்னால் கலிங்கத்தில் அவமானப்படுத்தப்பட்ட ஜயத்ரதன், துச்சளையின் கணவனாய் குழந்தையுடன் நகர் நுழையும் நிகழ்வுக்கு மாமனாய் அங்கிருக்க வந்த துரியோதனனின் அழைப்பை ஏற்று பெரும் மனப்போராட்டத்துடன் ஆனால் அங்க நாட்டில் இருக்கும் மனைவியர் போரில் இருந்து ஒரு விடுதலை உணர்வுடன் அஸ்தினபுரி செல்கிறான் கர்ணன். அங்கு நடந்த நிகழ்வுகளும் ஜயத்ரதன் சகோதரனாய் கர்ணனை உணர்ந்து உரையாடுவதும் காவியத்தருணங்கள். அரசியல் தருணங்களும்தான். அரசியல் தருணமல்லாதது என்றால் சுஜாதன் தானும் சேர்ந்து கர்ணனுக்காக வாழ்த்தொலி எழுப்புவது, மதுவில் இருந்தாலும் தன்னுணர்வுடன் கர்ணன் காலைத்தொட்டு துரியோதனன் வணங்குவது என சிலவற்றை சொல்லலாம். சேராத இடம்தான் , சேரக்கூடாத இடம்தான் எப்படி வேண்டுமானாலும் தர்க்கத்தை கொண்டு அளக்கலாம்தான் . ஆனால் அங்கு அந்த தசைத்திரளில் இருக்கும்போது மட்டுமே பெரும் விடுதலையை உணர்கிறான் கர்ணன்.
பன்னிரண்டாவது பகடை உருளத் தொடங்குகிறது, கௌரவர்கள் கர்ணனுடன் வேட்டைக்கு செல்ல எத்தனித்து நின்றிருக்கும்போது புரவியில் தன்னந்தனியனாய் நகர் நுழையும் பீமனால். இந்திரப்பிரஸ்தத்தில் நடக்கவிருக்கும் சுடரேற்று விழாவிற்கு அவையமர்ந்து அரசமுறை அழைப்புவிடுக்கிறான். அந்த அழைப்பு சகுனியால் கணிகரால்
பிரித்து ஆராயப்படுகிறது. அதன்மூலம் அஸ்தினபுரியில் அரசரும் தம்பியரும் கனல்கொள்ள திரி ஆயத்தமாக அதை தனது உளவிரிவால் எதிர்கொண்டு நிற்கும் துரியோதனன் சொல்லும் இந்த
சொற்கள் உச்சம் என சொல்லலாம்.
“இளையோனே, இவ்வரியணை எந்தை எனக்களித்தது. இதற்கு அப்பால் இத்தருணத்தில் எதையும் நான் சொல்லவிரும்பவில்லை. நீ என் இளையோன். ஆனால் இங்கு என்னை மூத்தவர் என்று நீ அழைக்கவில்லை என்றாலும் அவ்வண்ணமே உணரக் கடமைப்பட்டவன் நான். நீ அழைக்கவில்லை என்பதன் பிழையும் என்னுடையதே என நாம் அறிவோம்” . பீமன் ஏதோ சொல்ல வாயெடுக்க துரியோதனன் கைகாட்டி “எவ்வண்ணமாயினும் அஸ்தினபுரியின் அரசனுக்கு அளிக்கப்பட்ட இவ்வழைப்பை பாண்டவர் ஐவரின் உடன்பிறந்தவனாக நின்று ஏற்கிறேன். நானும் என் தம்பியரும் யுதிஷ்டிரரின் இளையோராகச் சென்று இந்திரப்பிரஸ்தத்தின் ஒளிகோள் விழவை சிறப்பிப்போம்”
விழிநீரனலில், பீமனால் முறையான அழைப்புவிடுக்கப்படாமல் , ஆனால் சகுனி மற்றும் கணிகரால் வேண்டிக்கொள்ளப்பட்டு, தனது அமைச்சர் சிவதரால் கடுமையாக மறுக்கப்பட்டு இப்படி பல குழப்பங்களுக்கு மத்தியில் கௌரவர்களுடன் இந்திரப்பிரஸ்தம் செல்கிறான் கர்ணன். பயணத்தில் படகில் தேவயானியின் மணிமுடியை காண்பித்து துரியோதனன் உரைப்பதெல்லாம் பித்தன்றி வேறல்ல. ஆனால் களங்கமற்ற பித்தோ என்று நினைக்கவும் செய்யலாம் . அந்த தருணத்தையும் எளிதில் கடக்கமுடியாமல் பல நினைவலைகளுக்கு சென்று சிக்குவது கர்ணனே.
செல்லும் வழியில் மண்ணாழம் வாழும் உரகர்களை சந்திக்க நேரிடுகிறது. அவர்களின் மூதன்னை திரியை மூலம்
உரகர்களின் நாகர்களின் கதைகளை கர்ணன் அறிய நேரிடுகிறது. அவர்களுக்கு உரித்தான அந்த மண் எப்படி திரௌபதிக்கு இலக்கானது என உரைக்கும் புராணக்கதைகளும் நிகழ்கதைகளும் சொல்லப்படுகின்றன. முக்கியமாக தனது பயணத்தை கூட விட்டுவிட்டு உரகர்களை பின்தொடரும் கர்ணன் மீண்டும் அங்கிருந்து அகன்று வருவது திரியை, அவனின் உள்ளுறைந்த வஞ்சத்தை புறத்தே மறுத்தாலும் அவன் அகத்தை அவனுக்கே காண்பித்தபோதுதான்.
நச்சாடல் காண்பது , திரும்பிவரும் வழியில் மகதப்படகில் ஏறும் நிலையில் இருந்து ஆரம்பிக்கிறது கர்ணனுக்கு. அதன்மூலம் வெகுநாளைய எதிர்நாடுகளான மகதமும் அஸ்தினபுரியும் நட்புமுகம் கொள்ளத்தொடங்குகின்றனர் அப்போதிலிருந்து . அது உடலால் ஜராசந்தனும் துரியோதனனும் ஒருவரையொருவர் மற்போரில் அறிந்தபின்னர்தான்.ஆனால் அதன்பின்பு இவர்கள் பெருஞ்சுடரேற்று விழாவுக்கு ஒன்றாக நகர் நுழைவது பீமனால் இளையபாண்டவனால் வேறுவகையில் பொருள்கொள்ளப்படுகிறது. அஸ்தினபுரியில் பீமன் வருகையின்போது சகுனியால் வைக்கப்பட்ட ஒன்று இங்கு எரிகொள்ளத் தொடங்குகிறது என சொல்லலாம்.
நூரிதழ்நகரான இந்திரப்பிரஸ்தத்தில் எங்கும் தன்னை அரசன் என கர்ணன் முன்வைப்பதில்லை அல்லது அதற்கு அவனுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அரச முறை உடைகள் கூட இல்லாமல் , தான் அஸ்தினபுரி அரசரின் அணுக்கன், காவலன் என்கிற நிலையிலேயே வருகிறான்.அஸ்தினபுரியின் பரிசான தேவயானியின் மணிமுடி எந்த வகையில் திரௌபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறித்து கர்ணனும் இளைய கௌரவர்களும் கொந்தளிக்க அப்போதும் பாண்டவர்களின் செயல்களை பெருநிலை கொண்டே பார்க்கிறான் துரியோதனன்.
கனவிலும் நனவிலும் என அங்கிருக்கும் கர்ணன் உரகர் வாழ் ஆழுலகங்களுக்கு சென்று மீள்கிறான் .
மயனீர் மாளிகையில் அரங்கேற்றப்படும் நாடகம், சுயபகடியின் மூலம் துவங்கும் ஒரு அங்கத சுவை மிகுந்த நாடகம் அதன் இறுதியில் எப்படி திரௌபதியை இளைய யாதவனை என அவர்களின் நோக்கத்திற்கு ஏற்ப, பார்ப்போரின் உள்ளத்தில் நீக்கமுடியாத ஆளுமைகளாக பதியவைக்கப்படுகிறது என காட்டும்விதம் அருமை.நீர்மாளிகையா நிழல் மாளிகையா என அனைவரின் உருவங்களை அருவங்களாய் , அருவங்களை உருவங்களாய் , என்னவென்றே புரியாதவகையில் பல மாயங்களை காட்டிய மாளிகையில் அங்கு வந்திருக்கும் அனைத்து மன்னர்களும் பார்ப்பது அவரவர்க்கு ப்ரத்யேகமான காட்சிகளை. நிலையழிந்து நிற்கிறார்கள் அனைவரும்.
அதன் தொடர்ச்சியாய் உண்டாட்டு அறையில் தேவயானியின் மணிமுடி அணிந்திருக்கிறாள் திரௌபதி என பார்த்து கர்ணனின் சொல்லையும் மீறி , அவளை, குந்தியை நோக்கி பேச சென்று , பளிங்கென எண்ணி நீரில் விழும் அல்லது விழவைக்கப்படும் துரியோதனன் தூக்கப்படுவது கர்ணனால் மட்டுமே. அவன் வந்ததன் பயன் முழுதாய் அமைந்தது என அந்த நிகழ்வை சொல்லலாம்.
ஒரு நிகழ்வு ஏன் அப்படி நடக்கவில்லை என கேட்டுக்கொள்ள பல தருணங்கள் இந்த நாவலில். அது ஊழின் விளையாட்டு என கொள்ளலாமே தவிர எந்த மேலதிக விளக்கமும் அதன் அணிப்பூச்சு என்றே கொள்ளத்தோன்றுகிறது. அப்படியான தருணங்களில் சில * பீமனுடன் தோள் கோர்க்க , நீர்விளையாட்டுகளில் ஈடுபட என ஆர்வத்துடனே வருகின்றனர் துரியனும் மகதனும். ஆனால் அது நடக்கவே இல்லை.
*பீமன் தன்னிடம் வந்து பேசுவான் என மூத்த கௌரவன் எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறான்
ஆனால் எதையும் எதிர்பார்க்காமல் நிற்கிறான் கர்ணன். தன்னின் இருத்தல் ஒன்றே அங்கு செய்யக்கூடிய
ஒன்று என. அவன் இந்திரபிரஸ்தத்தில் இருக்கும்போது அவனின் இருப்பு அனைவராலும் உணரப்படும் தருணமென்றால் அது சுடராற்று நிகழ்வில் தலைமை வைதிகர் குந்தி சொல்படி நேரடியாக அவனிடம் வந்து ‘மலர் கொள்க அங்கரே‘ என சொல்லுமிடம்.
இந்திரபிரஸ்தத்தில் கௌரவர்களை மற்றும் ஏனைய அரசர்களை நிலையழிய செய்வது அந்நகரின் பிரம்மாண்டம். அது அவர்களை மட்டுமல்ல பாண்டவர்களையும் உருமாற்றியுள்ளது எனவும் சொல்லலாம்.
உண்டாட்டு அறையில் இருந்து வெளியேறி நோய்கொள்ளும் துரியன் மீண்டெழும்போது வேறொருவனாய் முழுமை கொண்டு காட்சிதருகிறான். ஒளியை நிழல் கவ்வ கிரகணத்துடன், அதோடு கூடிய புராணக்கதையுடன் முடிகிறது நாவல்.
இப்போதும் உடனே மறுவாசிப்பு கோரி நிற்கும் இடங்கள் என இவைகளை சொல்லலாம். அதாவது செவி நுகர் கனியாய் மீண்டும் சுவைக்க கோருவன .
கர்ணன் பானுமதி உரையாடல்கள்
கணிகரை கர்ணன் சந்திக்கும் இடங்கள். கணிகரின் விஷத்தன்மையை உய்த்தறிவது ,
சூதர்களும் மூலம் சொல்லப்படும் வரலாற்று , புராணக்கதைகள் ,
துரியோதனன் அப்பழுக்கற்று வெளிப்படும் தருணங்கள்
உரகர்கள் வரலாறு , மொத்தத்தில் முழுநாவலும் என்றும் சொல்லலாம்.
இந்த நாவலை வாசித்து சில நாட்கள் கடந்துவிட்டிருக்கின்றன.அடுத்த நாவலான பன்னிரு படைக்களம் கூர்மை கொள்ள தொடங்கியிருக்கிறது. ஆனால் இந்த நாவல் வாசிப்பை எழுத அமரும்முன் என்ன எழுதப்போகிறேன் என ஒரு தயக்கமிருந்தது . ஆனால் அமர்ந்து சில நிமிடங்களுக்குப்பிறகு அந்த நிகர்வாழ்வு மேலெழுந்து வந்தது.
எழுதாமல் விட்டிருந்தால் பேரிழப்பு கொண்டவன் கர்ணன் அல்ல நானே என்று அமைந்திருக்கும்.
தேவர்க்கரசே , பெருவிழைவு கொண்டவனை ஐயத்தால் வெல்க !
பெருஞ்சினம் கொண்டவனை எளிமையால் வெல்க !
இப்படி வெல்லற்கரியோர் என்று இப்புவியில் எவருமில்லை . விண்ணிழிந்து மண் நிறைத்த இறைவடிவங்கள் கூட . விரிகதிர் மைந்தா , தன்னால் மட்டுமே வெல்லப்படுபவன் நிகரற்றவன் . தெய்வங்கள் அவனை மட்டும் நோக்கி புன்னகைக்கின்றன . ஆம் . அவ்வாறே ஆகுக !
ஆற்றல் முதிர்ந்த ஆசிரியர்கள் பேராற்றல் முதிர்ந்த மாணவர்களைப் பெறுவதென்பது இப்புடவி வளரவேண்டும் என்று விழையும் அப்பிரம்மத்தின் ஆணை !
ஆக்கி அளிக்கும் எம் ஆசிரியராம் யதியின் மாணவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றியும் .
அன்பு , உடன் வாசித்து உந்துதலாய் இருக்கும் வாசிப்பை நேசிப்போம் நண்பர்களுக்கு .
– கே . எம் . ஆர் . விக்னேஸ்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 848 followers

