எல்லைகளில் விரிந்தவர்கள்
தமிழ்ச் சிற்றிதழ் சார்ந்த இலக்கிய உலகத்தின் விந்தைகளில் ஒன்று அந்தச் சின்னஞ்சிறு உலகத்திற்குள் இருந்த வகைமாதிரிகள். சிற்றிதச்சூழலின் பொதுப்போக்கில் இருந்து முற்றிலும் விலகி தங்களுக்கான தனித்த புனைவுலகை உருவாக்கிக் கொண்ட படைப்பாளிகள் பலர் உண்டு. அவர்களை சிற்றிதழ்ச்சூழல் தங்கள் உலகுக்குள் இழுத்து இடமளித்து வைத்துக்கொண்டது.
உதாரணமாக ப.சிங்காரம். அவரை இலக்கியவாதியாகப் பொருட்படுத்திப் பேசியவர்கள் சிற்றிதழாளர்கள். இன்றும் அவரை அறிந்தவர்கள் சிற்றிதழாளர்கள் மட்டுமே. ஆனால் ப.சிங்காரம் சிற்றிதழ்களில் எதுவுமே எழுதவில்லை. அவர் முற்றிலும் ஒதுங்கியே வாழ்ந்தார். அவருடைய எழுத்துக்கள் தனியாக புத்தகமாகவே வெளிவந்தன. கடலுக்கு அப்பால் என்னும் நாவல் கலைமகள் நாவல் போட்டியில் பரிசு பெற்றது. மிகப்பிந்தித்தான் அவர் சிற்றிதழ்சார்ந்த இலக்கியத்தால் உள்ளிழுக்கப்பட்டார்.
சிற்றிதழ்ச் சூழலுக்கு முற்றிலும் அந்நியமானவர் நீல பத்மநாபன். அவர் பேரிதழ்களை நம்பிச் செயல்பட்டவர். தன் படைப்புகளை தானாகவே நூலாக வெளியிட்டார். ஆனால் தமிழ்த் தீவிர இலக்கியத்தின் கவனம் அவர் மேல் படிந்தது. அதற்கு பேரா.ஜேசுதாசன் போன்றவர்களின் விமர்சனமும் காரணம். தமிழின் யதார்த்தவாத இலக்கியத்தின் உச்சம் என்று சொல்லத்தக்க இயல்புவாதத்தை முன்வைத்த முக்கியமான முன்னோடிப் படைப்பாளியாக அவர் மதிப்பிடப்படுகிறார்.
தமிழ் இலக்கியத்தின் மையப் போக்கில் இருந்து முற்றிலும் விலகி, திராவிட இயக்க இதழ் வழியாக எழுத வந்தவர் ஆ.மாதவன். அந்த இலக்கிய சரடில் இருந்து நவீன இலக்கியத்திற்கு வந்தாலும் கூட, பெரும்பாலும் சிற்ற்றிதழ்களில் அவர் எழுதியதில்லை. ஆனால் அவருடைய எழுத்துக்கள் நவீனத்துவ எழுத்தின் சிறந்த மாதிரிகளில் ஒன்றாக வாசிக்கப்பட்டன.சுந்தர ராமசாமி முதலிய தமிழ் இலக்கிய முன்னோடிகளால் அவர் மதிப்புடன் அணுகப்பட்டார்.
இம்மூன்று படைப்பாளிகளையும் தமிழ் நவீன இலக்கியத்தின் விளிம்பில் முளைத்து விரிந்தவர்கள் என மதிப்பிடலாம். இவர்களிடம் செயல்படும் நவீன அம்சம் தமிழ் நவீன இலக்கியம் அளித்தது அல்ல. இவர்கள் தமிழ் நவீன இலக்கியத்தை எழுதவருவதற்கு முன்பு கற்றதே இல்லை. வாழ்க்கையில் இருந்தே அந்த நவீனக்கூறை அடைந்தனர், தங்கள் அனுபவத்தளம் வழியாகவும் கற்பனை விரிவு வழியாகவும் வளர்த்தெடுத்தனர்.
இந்த ‘விலகிய எழுத்து’ என்பதை அணுகுவது சற்றுச் சவாலானது. அவர்களின் விலகிய அம்சம் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது. கூடவே அது ஏன் சிற்றிதழ்ச்சூழலில் தீவிர இலக்கியமாகக் கணிக்கப்பட்டது என்பதை ஆராய்வதும் முக்கியமானது. அணுக்கமும் விலக்கமும் வெவ்வேறு வகையில் அவற்றின் இலக்கிய இடத்தை தீர்மானிக்கின்றன. உதாரணமாக நீல.பத்மநாபனிடம் சிற்றிதழ்ச்சூழலிலுள்ள தீவிரம் இல்லை. வாழ்க்கையை இயல்பான, சாதாரணமான ஓர் ஒழுக்காகவே அவர் அணுகுகிறார். சிற்றிதழ்ச்சூழலில் எவ்வகையிலும் பொருட்படுத்தப்படாத சாகச அம்சம் ப.சிங்காரத்தில் உள்ளது. ஆனால் நீல.பத்மநாபனின் வாழ்க்கை பற்றிய நிதானப்பார்வை, ப.சிங்காரத்தின் வரலாற்று அங்கதம் அவர்களின் எழுத்தை உயர் இலக்கியமாக ஆக்குகிறது.
இந்த மூன்று படைப்பாளிகள் பற்றிய இந்நூல் தமிழ் நவீன இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக அணுகியும் விலகியும் அறிவதற்கு மிக உதவிகரமானது என நினைக்கிறேன்.
ஜெ
கரிப்பும் சிரிப்பும் – இலக்கிய முன்னோடிகள் வரிசை வாங்கJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 849 followers

