அஜிதன் உரை, கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
அஜிதனின் உரையைக் கேட்டேன் மிகச்சிறப்பாக நிகழ்ந்த உரை. அதில் அவர் அளிக்கும் தத்துவம் சார்ந்த உதாரணங்கள் அழகான கதை போலவும் ,யோசிக்க யோசிக்க விரிவதாகவும் இருந்தன. உதாரணமாக சென்ற நூற்றாண்டில் ஒரு இனக்குழு சணடையில் தன் உயிரை பணயம் வைத்து போராடிய ஒருவனை இன்றைக்கு எப்படி மதிப்பிடுகிறோம்? அவருடைய தியாகம் நமக்கு முக்கியமாக தெரிகிறது .ஆனால் எதன் பொருட்டு அவர் தியாகம் செய்தார் என்பது இன்று நமக்கு முக்கியமல்ல. தமிழர் வீரம் என்று சொல்லும்போது பாண்டியரும் சோழர்களும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டதைத்தான் குறிப்பிடுகிறோம். ஆனால் அதை வீரம் என்ற விழுமியமாக மாற்றிக் கொள்கிறோம். அப்படிப்பட்ட பல நுணுக்கமான உதாரணங்களுடன் சென்ற உரை சிந்தனையில் பல திறப்புகளை அளிப்பதாக இருந்தது.
சாம் மனோகர்
இருப்பின் நெசவு – அஜிதன் நேர்காணல்
அன்புள்ள ஜெயமோகன் ,
அஜிதனின் உரை சிறப்பாக இருந்தது. அவர் கவிதைகள் இதழில் அளித்த பேட்டியில் அறம் பற்றி பேசுமிடத்துடன் இணைந்து மேலே செல்வதாக அந்த உரை அமைந்திருந்தது. கவிதையின் இடம் மாறாத இளமை அல்லது முதிர்ச்சியில்லாமை என்றும், உரைநடை என்பது கவிதையையும் உள்ளடக்கிக் கொண்ட ஒரு பெரிய முதிர்ந்த வடிவம் என்றும் சொல்லும் பார்வை தமிழுக்கு மிக முக்கியமானது .நீண்ட காலமாக கவிதையை மட்டுமே இலக்கியமாகக் கருதி வந்த நாம் இயல்பாகவே உரைநடையை இரண்டாம் பட்சமாக நினைக்கப் பழகியிருக்கிறோம். அந்த எண்ணத்தை நானும் கொண்டிருந்தேன். அதை மாற்றியது இந்த உரை. இந்த உரையையும் அறத்தை பற்றி பேசும் அந்த பேட்டியையும் இணைத்துப் படிக்கும் போது மிகுந்த தெளிவு உருவாகிறது.
எம்.பாஸ்கர்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 849 followers

